24 மே 2013

மன்மோகன் நல்லவரா, கெட்டவரா?

மாலை நேரம். திண்ணையில் அமர்ந்திருக்கும் ரஹீம் வீட்டினுள் திரும்பி: 'எலேய், அந்த டிவி சவுண்டு கொஞ்சம் குறையேன். '

ரஹீம்: இந்த ஐபிஎல் என்னைக்கி முடியும் கணேஷ்?

கணேஷ்: (சிரிக்கிறார்) ஏன் டார்ச்சரா இருக்கோ?

ரஹீம்: (எரிச்சலுடன்) ஆமாய்யா. போன ஒரு மாசமா ராத்திரியானா இதே டார்ச்சர்தான். ஒரு சேனலையும் பாக்க விடாம பையன் இந்த சானலையே புடிச்சிக்கிறான். என்னமோ சூதாட்டங்கறான், ஃபிக்ஸ்ங்கரான் அப்பவும் இத பாக்கறத மட்டும் வுடமாட்டேங்கறான்களே?

கணேஷ்: ஆமா பாய். நம்ம வீட்லயும் இதே தொல்லைதான்.  WWW wrestlingனு போடுவானே? நா அடிக்கறா மாதிரி அடிக்கறேன் நீ விழுறா மாதிரி விழுன்னு அதே மாதிரிதான் போல இதுவும். டீம் ஓனருங்க குடுக்கற காச வாங்கிக்கிட்டு விளையாடுங்கடான்னா அதுக்கும் மேல யாராச்சும் குடுத்தா அதையும் வாங்கிக்கிட்டு.... தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?

ஜோசப்: (சிரிக்கிறார்) இதுல என்ன தப்பு கணேஷ்? நம்ம ரிட்டையர்ட் ஜட்ஜ் கட்ஜுவே சொல்லிட்டாரே சிறீசாந்த வுட்றுங்கன்னு. ஒரு உழைப்பும் இல்லாம எவன் எவனோ கோடி கணக்குல சம்பாதிக்கிறான். மைதானத்துலயும் அது நடக்கட்டுமேன்னு கிண்டலடிச்சாரே. அவர் சொல்றதுதான் சரின்னு நினைக்கறேன். டெல்லி போலீஸ் என்னமோ உலகமகா சாதனைய பண்ணிட்டா மாதிரி ஒவ்வொரு சானலுக்கும் கமிஷனரே பேட்டி குடுத்துக்கிட்டு... ரெண்டு நாளா இதே நியூச கேட்டு, கேட்டு சலிச்சி போயிருச்சி பாய். 

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்க ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராச்சே ஜோசப். அதனால இப்படித்தான் சொல்வீங்க. அப்போ அந்த மூனு பசங்களும் செஞ்சது தப்பே இல்லேன்னு சொல்றீங்களா?

ஜோசப்: அப்படி சொல்ல வரல பாய். ஆனா இது என்னமோ இதுவரைக்கும் எங்கயும் நடக்காத மாதிரி மணிக்கணக்கா இதையே பேசிக்கிட்டு.. சரி புடிச்சிட்டீங்க. கேஸ் போடுங்க. என்ன தண்டனையோ வாங்கி குடுங்க. அத வுட்டுபோட்டு எத்தனையோ சீரியசான விஷயங்க இருக்கறப்போ எல்லா நியூஸ் சானல்லையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கறது ரொம்ப ஓவர் பாய். நீங்க என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: (சலிப்புடன்) இப்ப நாமளும் இதத்தானே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்? விடுங்க, வேற எதையாவது பேசுவோம்.

ஜோசப்: இந்த பாக்கிஸ்தான் எலெக்‌ஷன் இப்படி ஆயிருச்சே பாய்? யாருக்குமே மெஜாரிட்டி வராது அப்படீன்னு பிபிசிகாரன் சொன்னா மாதிரி நடக்கலையே?

ரஹீம்: ஏன், இப்பவும் அதான் நடக்கப் போவுது? நவாப் ஷெரீஃப் கட்சி பெரும்பான்மை கட்சியாத்தான் இருக்கு. தனி மெஜாரிட்டி கிடைக்கலையே. சில்லறை பார்ட்டிகளோட சேர்ந்துதான ஆட்சி அமைக்கப் போறாரு? சர்தாரி கட்சிக்குத்தான் எதிர்பார்க்காத அடி. அவரோட கட்சிக்கு வந்துருக்க வேண்டிய ஓட்டுங்க இம்ரான் கட்சிக்கு போயிருச்சி போலருக்கு. 

கணேஷ்: இந்த நவாப் பேசறத பாத்தா முன்னால இந்தி-சீனி பாய், பாய்னு சொன்னா மாதிரி இனி இந்தி-பாக்கி பாய், பாய்னு சொல்வாங்க போலருக்கு?

ரஹீம்:(எரிச்சலுடன்) ஏன், அப்படி நடக்கறது ஒங்களுக்கு புடிக்காதே. பாக்கிஸ்தான் விஷயத்தையே ஊதி, ஊதி பார்லிமென்ட் ஒழுங்கா நடக்க விடாம இனி தடுக்க முடியாதுன்னு நினைப்பு, என்ன?

கணேஷ்:(சிரிக்கிறார்) நீங்க வேற பாய். அடுத்த எலெக்‌ஷன்ல நாங்கதான டிரெஷரி பெஞ்சில ஒக்காந்திருப்போம்? நாங்களே எப்படி கூட்டத்த நடக்க விடாம தடுக்கறது? அது இனி கடுப்புலருக்கற காங்கிரஸ் வேலையாயிருக்கும்.

ரஹீம்: ஒங்க நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குத்துய்யா. அப்படியொரு டவுட் இருந்தா ஏன் மன்மோகன் மறுபடியும் ராஜ்யசாபுவுக்கு போட்டி போடப்போறார், என்ன ஜோசப்?

ஜோசப்: அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல பாய். எப்படியும் பார்லி எலக்‌ஷனுக்கு இன்னும் முழுசா ஒரு வருசம் இருக்கே. அதுவரைக்கும் அவர்தான பிஎம்? இருக்கற ப்ராப்ளம் போறாதுன்னு இது வேற புதுசா ஒரு ப்ராப்ளமா? அதுக்குத்தான் மறுபடியும் நாமினேஷன் ஃபைல் பண்ணிட்டார்.

கணேஷ்: ஏதோ பண்ணட்டும். இதுலயும் ஒரு தமாஷ் நடந்துருக்கே. சிங் ஃபைல் பண்ண அவரோட ஃபைனான்ஷியல் ரிப்போர்ட்ட பாத்தீங்களா, பேப்பர்ல போட்டுருந்தானே?

ஜோசப்: பாத்தேன், பாத்தேன். அதப் பத்தி ஃபேஸ்புக்ல கூட ஒரு ரவுண்டு ஜோக்ஸ் வந்துதே. எனக்கு ஒரு காமடி எஸ்.எம்.எஸ் கூட வந்துது. அடுத்த எலக்‌ஷன்ல தோத்துட்டா நம்ம பிஎம் நா ஒரு முன்னாள் பிஎம்னு அவரோட ப்ரொஃபைல்ல போட்டுக்கிட்டு எங்கயாச்சும் வேலை தேடி அலைய வேண்டியதுதான்னு. ஏன்னா அவருக்கு இருக்கற சொத்துக்கு அடுத்த வேளை சோத்துக்கே மறுபடியும் வேலைக்கி போவணும் போலருக்குதாம். ஆனா இவங்க எல்லாருமே விவரம் இல்லாதவங்கன்னு நினைக்கறேன். அவர் ஒன்னும் எங்கிட்ட சொத்தே இல்லைன்னு சொல்லலை. நம்மள மாதிரி அவர்கிட்டயும் குடியிருக்கறதுக்கு ஒரு வீடு இருக்கு, வாடகைக்கு குடுக்கறதுக்கு இன்னொரு ஃப்ளாட்டும் இருக்கு. இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னால சில லட்சங்களுக்கு வாங்குனது இன்னைக்கி கோடியில மதிப்பு. அப்புறம் மீதி இருக்கற அவருடைய சேமிப்பையெல்லாம் பாங்க் டெப்பாசிட்டாவே வச்சிருக்காரு. அதுவே ரூ.4.00 கோடியாம். அவர் பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவராச்சே தெண்டத்துக்குன்னா எதுக்கு சொத்துல போயி பணத்த முடக்கணும்னு பேங்க்ல டெப்பாசிட்டா வச்சிருக்காரு. அதுவும் எங்கே ஸ்டேட் பாங்க்ல! ஒரு மனுசனுக்கு தேவைக்கு அதிகமா சொத்து இல்லைன்னாலும் ஆளுங்க நம்பலைன்னா அப்புறம் என்னதான் பண்றது? இல்லாத சொத்த இருக்குன்னா சொல்ல முடியும்? கேக்கறதுக்கே காமடியா இருக்கு.

கணேஷ்: காமடிய வுடுங்க ஜோசப். உண்மையிலேயே அவருக்கு இவ்வளவுதான் சொத்தா?

ஜோசப்:(சிரிக்கிறார்) என்னெ கேட்டா? அப்போ அவர் பொய் சொல்றார்னு சொல்றீங்களா? 

கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப் நீங்கக் கூட.... பொய்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது? எல்லாம் ஏதாச்சும் பினாமி பேர்ல வச்சிருப்பார்.. இல்லன்னா இருக்கவே இருக்குது ஸ்விஸ் பாங்க்....

ஜோசப்: சேச்சே... அப்படியெல்லாம் இருக்காது... அவர் அப்படிப்பட்டவர் இல்லைங்க.

கணேஷ்: நீங்கதான் மெச்சிக்கணும். நாங்க மட்டும் ஆட்சிக்கு வரட்டும்...

ரஹீம்:(குறுக்கிட்டு) வந்தாத்தான?

கணேஷ்: அதுல என்ன சந்தேகம் பாய்? நாங்க வர்றது வர்றதுதான். வந்ததுக்கப்புறம் முதல்ல இவரோட ஃபைனான்ஷியல் மேட்டர்ஸ பத்தி ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் வச்சிட்டுத்தான் மறுவேலை... நீங்க வேணா பாருங்க.

ரஹீம்: (எரிச்சலுடன்) அட நீங்க என்னமோ கேபினட்ல இருக்க போறா மாதிரியில்ல பேசறீங்க? அதான் டெய்லி ஒரு ஊழல் ரிப்போர்ட் வருதே அதையெல்லாம் வுட்டுப்போட்டு சிங் விஷயத்த குடைஞ்சி என்ன பெரிசா கிடைக்கப் போவுது?

கணேஷ்: இருந்தாலும் இப்படி முழு பூசணிய சோத்துல மறைக்கறா மாதிரி.... அக்கிரமம்.. இவர் அப்படி ஒரு யோக்கியரா இருந்தா... இந்த coalgate விஷயத்துல கோடி, கோடியா கைமாறியிருக்குன்னு சொல்றதெல்லாம்? 

ரஹீம்: எல்லாம் அந்த சிஏஜி ரிப்போர்ட்ல இருக்கறதத்தான சொல்றாங்க? இன்டிப்பென்டன்டா வேற யாரும் இன்வெஸ்ட்டிகேட் பண்ணலை இல்ல? 

கணேஷ்: அப்ப சிபிஐ ரிப்போர்ட்டும் பொய்யா?

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் சிபிஐ எத சொன்னாலும் நம்பமாட்டீங்களேய்யா, இத மட்டும் எப்படி நம்புறீங்க? அதாவது ஒங்களுக்கு சாதகமா வந்தா அதுல உண்மை இருக்குதுன்னு சொல்வீங்க. இல்லன்னா சிபிஐ ஒரு ஆளுங்கட்சியோட கைப்பாவைம்பீங்க. நல்ல நியாயம்யா.

ஜோசப்: சரி, சரி, மறுபடியும் சண்டை வேணாம். 

கணேஷ்: இல்ல ஜோசப். சிபிஐ ரிப்போர்ட்ல் பிஎம் பத்தி என்னமோ இருந்துதுன்னுதான சென்ட்ரல் லா மினிஸ்ட்ரியில அத கரெக்ட் பண்ணியிருக்காங்க? 

ஜோசப்: ஆனா இதுவரைக்கும் ஒரிஜினல் ரிப்போர்ட்ல என்ன இருந்துது அதுல யார் என்ன கரெக்‌ஷன் பண்ணாங்கன்னு வெளியில வரலையே. அதுக்குள்ள எப்படி அது பிஎம் பத்தி எழுதியிருந்ததுன்னு சொல்ல முடியும்?

கணேஷ்: ஆனா சிபிஐ ரிப்போர்ட்டோட மெய்ன் பாய்ன்ட்லயே லா மினிஸ்ட்ரி ஆளுங்க கை வச்சி அதனோட சீரியஸ்னசையே மாத்திட்டாங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லுதே.

ஜோசப்: ஒரு கேஸ் நடக்கறப்போ இந்த மாதிரி கமென்ட்ஸ் கோர்ட் ஜட்ஜஸ் அடிக்கறது சகஜம்தான் கணேஷ்? நம்ம சிஎம் மேல டான்சி கேஸ் நடக்கறப்பவும் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கேஸ் நடக்கறப்பவும் கூட இந்த மாதிரி நிறைய கமென்ட்ஸ் வந்துதுன்னு சொல்வாங்க.. ஆனா கேஸ் எப்படி முடிஞ்சது?  இந்த மாதிரி பல கேஸ்ல நடந்துருக்கு. ஆனா இந்த தடவ கொஞ்சம் ஜாஸ்தியாவே டேமேஜிங் கமென்ட்ஸ் வந்ததென்னவோ உண்மைதான். அதுல சிலது லூஸ் கமென்ட்ஸ்சுன்னும் கூட சொல்லலாம். ஒரு உச்ச நீதிமன்றத்துல வரக்கூடிய கமென்ட்ஸ் மாதிரி இல்லேங்கறத நிறைய நியூஸ் பேப்பர்ஸ்ல கட்டுரை எழுதறவங்க இந்த மாதிரி judicial overdriveனு நம்ம நாட்டுக்கு தேவையான்னு கேட்டாங்களே, படிக்கலையா? பார்லிமென்ட் உண்டாக்கற சட்டத்த இன்டர்ப்ரெட் பண்றதுதான் கோர்ட்டுங்களோட வேலை. அதுக்கு மேல போயி அவங்களுக்கு மேல இருக்கற பார்லிமென்ட பத்தியோ இல்ல அதோட மேற்பார்வையில ஃபங்ஷன் பண்ற சில அதிகார வட்டங்களையோ அல்லது ஏஜென்சிகளைப் பத்தியோ விமர்சிக்கிறது அவங்க வேலை இல்லேன்னு பல பழைய ஜட்ஜஸே நினைக்கறாங்க. சுப்ரீம் கோர்ட் சொல்றா மாதிரி எந்த ஒரு சூழல்நிலையிலயும் சிபிஐக்கு எலெக்‌ஷன் கமிஷனுக்கு சமமான சுய அதிகாரம் வழங்கறதுக்கு சான்ஸே இல்ல. அது ஒரு டேஞ்சரா முடியக் கூடிய விஷயமும் கூட. 

ரஹீம்: நீங்க சொல்றதும் சரிதான் ஜோசப். சிபிஐயோட ரிப்போர்ட்ல ஏதோ ஒரு மினிஸ்டர் அவசரப்பட்டு கைய வச்சிட்டார்னு சிபிஐ ஒரு கூண்டுக்கிளிங்கறா மாதிரி கமென்ட் அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். 

கணேஷ்: யார் என்ன சொன்னாலும் எனக்கென்னவோ சுப்ரீம் கோர்ட்ல சொன்னா மாதிரிதான் சிபிஐ இப்ப நடந்துக்குது. அதனால அவங்க சொன்னது ரொம்பவும் சரின்னு நா நினைக்கேன்.

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் நினைப்பீங்களே. எனக்கு நீங்க ஜெயிச்சி ஆட்சிக்கு வரணும். அப்ப சிபிஐ பேரட்டா, கழுகான்னு பாக்கணும். 

கணேஷ்: பாக்கத்தான போறீங்க பாய்? இந்த ஆட்சியில நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சிபிஐயை வச்சி விசாரிச்சிருவோம்லே?

ஜோசப்: அப்படி செஞ்சீங்கன்னா அப்ப சிபிஐ நீங்க சொல்ற படி ஆடுதுன்னு காங்கிரஸ் சொல்வாங்க, அப்படித்தானே பாய்?

ரஹீம்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். அதுதான் நடக்கப்போவுது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிபிஐ இப்படித்தான் இருக்கும். ஏன்னா அவங்களா எந்த கேசையும் எடுத்து நடத்த முடியாதே? யாராச்சும் ரெஃபர் பண்ணாத்தான? ஒன்னு ஸ்டேட் கவர்ன்மென்ட்ஸ் கேக்கணும்.. இல்லன்னா சென்ட்ரல் கவர்ன்மென்ட் கேக்கணும்... என்னதான் சுய அதிகாரம் வழங்கினாலும் அத்தோட ஹெட்ட (Head) ஜனங்களா எலெக்ட் பண்ண முடியும். அவங்களையும் சென்ட்ரல் கவர்ன்மென்ட்தான அப்பாய்ன்ட் பண்ணனும்? அப்படி இருக்கறப்போ அவங்க ப்ரிப்பேர் பண்ற எந்த ரிப்போர்ட்டையும்  எனக்கு கொஞ்சம் காமின்னு ஏதாவது ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் கேக்கறப்போ எந்த சிபிஐ ஹெட்டுக்கும் முடியாதுங்கற சொல்ற அதிகாரம் இருக்கோ இல்லையோ தைரியம் இருக்காதுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க?

ஜோசப்: கரெக்ட்.

ரஹீம்: சரி அத விடுங்க. சிபிஐ மாதிரியே  சென்ட்ரல் கவர்ன்மென்ட் அதிகாரத்துக்கு கீழ ஃபங்ஷன் பண்ற இன்னொரு அமைப்பு மத்திய தணிக்கை அதிகாரி அலுவலகம் (CAG). போன நாலஞ்சு வருசத்துல புயல கிளப்புன பல ஊழல் விஷயங்கள கண்டுபிடிச்சி வெளியில கொண்டு வந்தவர் ரிட்டையர் ஆவப்போறாராமே? அதுக்கப்புறம் வர்றவரும் அதுமாதிரியே இருப்பாரா?

கணேஷ்: பின்னே? முன்னால எலெக்‌ஷன் கமிஷனரா சேஷன் இருந்தப்போ அந்த அமைப்போட  ஸ்டைலையே மாத்தி காமிச்சாரே அது மாதிரியில்ல இவரும் CAGன்னா எப்படி ஃபங்ஷன் பண்ணனும்னு காமிச்சவராச்சே. அதுக்கப்புறம் அவர மாதிரியே ஒரு ஆள் வந்தாத்தான ஊழல் பண்ற மினிஸ்டருங்களோட வண்டவாளம்லாம் வெளியில வரும்?

ஜோசப்: நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான், ஒப்புக்குறேன். ஆனா ஒரு தணிக்கை அதிகாரியோட வேலைய மட்டும் அவர் செஞ்சிட்டு போயிருந்தா நீங்க சொல்றது சரின்னு ஏத்துக்கலாம். ஆனா ஒரு அவர் மூனாந்தர அரசியல்வாதி மாதிரியில்ல நடந்துக்கிட்டாரு? அவரோட ரிப்போர்ட்ட பத்திரிகைகாரங்களுக்கு லீக் பண்ணி பப்ளிசிட்டி சம்பாதிச்சிக்கிறதுலதான குறியாயிருந்துருக்காரு? அதுமட்டுமில்லீங்க, அவருக்கு எதையுமே பிரச்சினையாக்கி அதன் மூலமா ஏற்படற சர்ச்சையில தன்னெ முன் நிறுத்திக்கிறதுல தீவிரமா இருந்தத பாக்கறப்போ தன்னோட சர்வீஸ் முடிஞ்சதுக்கப்புறம் அரசியல்ல என்ட்ரி பண்ற ஐடியா இருக்குறா மாதிரியில்ல தெரியுது? அத்தோட 2ஜி விஷயத்துலயும் சரி நிலக்கரி ஒதுக்கீடு விஷயத்துலயும் சரி அவர் சொல்றா மாதிரியெல்லாம் லட்சம் கோடி கணக்குல எல்லாம் நஷ்டம் வர்றதுக்கு சான்சே இல்ல கணேஷ். எனக்கென்னமோ அவருக்கு எதையுமே மிகைப்படுத்தி சொல்ற வியாதி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. எங்க பேங்க்ல கூட இந்த மாதிரி இன்ஸ்பெக்டர்ங்கள பாத்துருக்கேன். பிராஞ்ச் இன்ஸ்பெக்‌ஷனுக்கு போனா ஒரு சின்ன மடுவையே பெரிய மலையா கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு பெரிய ரகளையே பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம CAG மாதிரியே அவங்க ரிப்போர்ட்ட எங்க HOவுக்கு அனுப்பறதுக்கு முன்னாலயே போன் மூலமா அக்கம்பக்கத்துலருக்கற எல்லா பிராஞ்சுக்கும் சொல்லி ஏதோ கோடி கணக்குல மோசடி நடந்துருக்கறா மாதிரி ஒரு பிரம்மைய ஏற்படுத்திருவாங்க. நிச்சயமா ஒரு CAGயோட வேலை அது இல்ல. அரசு இலாக்கா மற்றும் அலுவலகங்களை தணிக்கை செஞ்சி அதுல ஏதும் எல்லை மீறல்கள் இருந்தா அத மத்திய, மாநில அரசுகளோட கவனத்துக்கு கொண்டு வர்றது மட்டும்தான் அவங்க வேலை. அத வுட்டுட்டு பிரஸ்சுக்கு குடுக்கறேன் மீடியாவுக்கு குடுக்கறேன்னு சொல்றது, இத நாந்தான் கண்டுபுடிச்சேன், நாந்தான் கண்டுபுடிச்சேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறது எல்லாம் அவரோட பதவிக்கு அழகே இல்லை. அதத்தான் அன்னைக்கி சேஷனும் செஞ்சார், ஏதோ இவர்தான் லோகத்தையே மாத்த வந்துருக்கற பரமாத்மா மாதிரி. இவர விட்ட இந்த நாட்ட அரசியல்வாதிகள்லருந்து காப்பத்த ஆளே இல்லேங்கறா மாதிரி ஆடுனவரு பதவியிலருந்து எறங்குனதும் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக யார், யார் கால்லல்லாம் விழுந்தாருன்னு ஒங்களுக்கு தெரியாதா கணேஷ்?  இதெல்லாம் ஒரு வேஷம் கணேஷ். உண்மைய வெளியில கொண்டு வரணும்கற வேகத்த விட தன்னை பெரிய சூரப்புலின்னு காமிச்சிக்கிற வேகம்தான் அதிகமா தெரியுது.

கணேஷ்: நீங்க என்ன சொன்னாலும்  நா ஒத்துக்க மாட்டேங்க. இந்த மாதிரி ஆளுங்க ஒன்னு ரெண்டு பேர் இருக்கணும் அப்பத்தான் எங்க ஊழல் நடந்தாலும் அது வெளியில வரும்.

ரஹீம்: ஜோசப் சொன்னத முழுசா புரிஞ்சிக்காம பேசாதய்யா. ஊழல் வெளியில வரட்டும். ஆனா அத நாந்தான் கண்டுபுடிச்சேன் சொல்லிக்கிட்டு இவர் சுயவிளம்பரம் செஞ்சிக்கிட்டு அலையறது சரியில்லன்னுதான் சொல்ல வர்றார். என்ன ஜோசப்.

ஜோசப்: கரெக்ட். 

கணேஷ். சரி பாய். ஆள வுடுங்க. இப்ப பரபரப்பா இருக்கற இன்னொரு விஷயம் இந்தியா-சீனா ரிலேஷன்ஷிப். பார்டர் விஷயம் ஒருவழியா முடியறதுக்குள்ளவே புது சீன பிரதமர் இந்தியா வர்றதும், அஞ்சாறு முக்கியமான அக்ரிமென்ட்ஸ் சைன் பண்றதும்.... இதெல்லாம் ஏதோ செட்டப் மாதிரி தெரியுதே ஜோசப்.

ரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க, ஒங்களுக்கு எதையுமே நேரா பாக்க தெரியாதா? இந்தியாவும் பாக்கிஸ்தானும் சுமுகமா எதையாவது பேசி தீர்த்துக்கிட்டாலும் குத்தம் சொல்வீங்க. சரி, அது முஸ்லீம் நாடு. உங்களுக்கும் முஸ்லீம்கன்னால்ல புடிக்காது. அதனால சொல்றீங்கன்னு நினைக்கலாம். ஆனா சீனாவோட நாம பகையா இருக்கணுமா? 

ஜோசப்: பாய் சொல்றது சரிதான் கணேஷ். இந்த அக்ரிமென்ட்ஸ் எல்லாம் ஏற்கனவே மினிஸ்ட்ரி லெவல்ல டிஸ்கஸ் பண்ணி ப்ரிப்பேர் செஞ்சி வச்சிருப்பாங்கன்னுதான் நானும் நினைக்கேன். இதுக்கிடையில சீனாவுலயும் அதிகார மாற்றம் வந்துருச்சி. சரி அது முடியட்டும்னு பாத்தா அதுக்குள்ள நம்ம பார்டர தாண்டி வந்து காம்ப் அடிச்சி அத பேசி தீர்க்கறதுக்குள்ள இங்கருக்கற உங்க மாதிரி ஆளுங்க அவனெ அடிச்சி விரட்டாம அவன் கூட என்னைய்யா பேச்சுங்கறா மாதிரி எல்லாம் வீர வசனம் பேசினீங்க. ஒருவழியா யாரோட தலையீட்டாலயோ சீனா மனசு மாறி திரும்பி போய்ட்டாங்க. சரி இத இப்படியே விட்டுறக்கூடாதுன்னு நினைச்சித்தான் நம்ம ஃபாரின் அஃபைர்ஸ் மினிஸ்டர் சல்மான் அங்க போய்ட்டு வந்தாரு. ஒருவேளை அவரோட ட்ரிப்ல கூட இந்த அக்ரிமென்ட்ஸ பத்தி பேசி முடிவு செஞ்சிருக்கலாம். அதுக்கப்புறம் இப்ப சீன பிரதமரே வந்து இந்த ரீஜியன்ல இருக்கற நாம ரெண்டு பேரும் அடிச்சிக்காம சேர்ந்து வர்த்தகம் வியாபாரம்னு செஞ்சா ரெண்டு பேருக்குமே நல்லதுங்கறா மாதிரி பேசுனாரு. பென்டிங்ல இருந்த ஏழு அக்ரிமென்டையும் ஃபைனைலைஸ் பண்ணி கையெழுத்தும் போட்டுட்டாங்க. சீனா மாதிரி நிறைய கன்ஸ்யூமர்ஸ் இருக்கற மார்க்கெட்டுக்குள்ள நம்ம கம்பெனிங்கள ஈசியா விடறோம்னு சொல்றதே ஒரு நல்ல விஷயம்தானேங்க. இது ஏதோ டவுன்லருக்கற நம்ம பிஎம்மோட இமேஜ தூக்கிவிடற செட்டப்னு ஏன் நினைக்கறீங்க? நிச்சயமா அதுவா இருக்க சான்ஸே இல்ல. 

கணேஷ்: (சிரிக்கிறார்) என்னவோ சொல்றீங்க, என்னால நம்ப முடியலைங்க. ஏற்கனவே பார்லிமென்ட தொடர்ந்து நடத்த முடியாம திணறிக்கிட்டிருந்த காங்கிரசுக்கு ஒர் ப்ரீதர் கிடைச்சா மாதிரி இருக்கு சீன பிரதமரோட விசிட்டும் அவரோட நாம போட்ட அக்ரிமென்ட்சும்... பார்ப்போம் இது எத்தனை நாளைக்கின்னு....

ரஹீம்: அது சரி.. இவ்வளவு பேசறீங்களே.. சீன பிரதமர் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திச்சி பேசினார்னு சொல்றாங்களே... அது ஒங்க சுஷ்மா ஸ்வராஜ்தானேய்யா? அவர் மேலதான் ஒங்க கட்சிக்கு வெறுப்பாச்சே... அவர சந்திக்க முடியாதுன்னு சொல்லிற வேண்டியதுதானே... சேர்ல கூட சாஞ்சி ஒக்காராம ஒங்க லீடர் பயபக்தியோட சீன பிரதமர் கூட பேசினதத்தான் டிவியில காமிச்சானே... 

கணேஷ்: பாய், அதெல்லாம் ஒரு ரெஸ்பெக்ட்டுக்காக.. அதுக்காக அவர பாத்து பயந்துட்டாங்கன்னு சொல்ல முடியுமா?

ரஹீம்: (கேலியுடன்) கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைங்கற மாதிரிதான் இருக்கு நீங்க சொல்றது.

ஜோசப்: (சிரிக்கிறார்) சரி வுடுங்க பாய். இந்தோ சீனா வார் (war) போல இருக்கு நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கறது.

ரஹீம்: எனக்கு ஒரு சந்தேகம் ஜோசப்.

ஜோசப்: சொல்லுங்க

ரஹீம்: நம்ம சட்டசபைல மேடம் அடிக்கடி, ஏன் டெய்லின்னு கூட சொல்லலாம், விதி 110ன் கீழ்னு சொல்லி ஒரு அயுறிக்கை விடறாங்களே அப்படீன்னா என்ன? என்ன அந்த விதி 110?

ஜோசப்: தமிழக சட்டசைபியில யார், யாருக்கு என்ன அதிகாரம் இருக்கு, கூட்டத்தை எப்படி நடத்தறது, சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், எப்படி கூட்டத்துல நடந்துக்கணும்னுல்லாம்  தமிழக சட்டமன்ற விதிமுறைகள்ல எழுதி வச்சிருக்காங்க. அதுலருக்கற விதி எண் 110ல சொல்லியிருக்கறது என்னன்னா நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய முக்கியமான அறிக்கைகளை இந்த விதியின்படி படிக்கறப்போ அத  மன்றத்துல இருக்கற யாருக்கும் எதிர்த்து பேசவோ விவாதிக்கணும்னு கேக்கவோ அதிகாரம் இல்லை. அதாவது உதாரணத்திற்கு சட்டசபையில பிற்படுத்தப்பட்டோர்களுக்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கப்படும்னு ஒரு அறிக்கைய இந்த விதிக்கு கீழ் இல்லாம ஒரு அமைச்சரோ இல்ல முதலமைச்சரோ வாசிக்கிறாங்கன்னு வச்சிக்குவோம். உடனே எதிர்க்கட்சி அணியிலருந்து யாராவது எழுந்து அதெப்படி, அவங்கள்ல கூட மிகவும் ஏழை எளியவங்களுக்குத்தான் அதுல கூட ஏற்கனவே சொந்த வீடு இல்லாதவங்களுக்குத்தான் கொடுக்கணும்னு பேசலாம். ஆனா அதுவே விதி எண் 110 படி வாசிச்சா வாய மூடிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியதுதான். 

ரஹீம்: ஓ! அதான் சங்கதியா? அதாவது நான் வச்சதுதான் சட்டம்னு சொல்லாம சொல்றா மாதிரின்னு சொல்லுங்க.

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் வச்சிக்கலாம். ஆனா ஒரு கூட்டத் தொடர்ல ஒன்னு ரெண்டு அறிக்கைகள் இந்த மாதிரி வந்தா பரவாயில்லை. ஆனா ஏறக்குறைய தினமும் இப்படியொரு அறிக்கை வர்றதுன்னா அது எந்த வகையில நியாயம்னுதான் மு.கவும் ஸ்டாலினும் கேட்டாங்க.

கணேஷ்: அது மட்டுமில்லீங்க. மேடம் இதுவரைக்கும் அறிவிச்சிருக்கற திட்டங்களோட மதிப்பீடே ஏறக்குறையை தமிழக பட்ஜெட்ல அறிவிச்ச திட்டங்களோட மதிப்பீடு அளவுக்கு இருக்கும் போலருக்கே, இதுக்கெல்லாம் பட்ஜெட்ல நிதி ஏதும் ஒதுக்கலையேங்கற மாதிரியும் ஸ்டாலின் கேட்டுருக்காரே கவனிச்சீங்களா?

ஜோசப்: ஆமா, அதுவும் ஒருவகையில சரிதான். அதோட கூட மினிஸ்ட்ரியில இருக்கற எல்லா இலாக்கா சம்பந்தப்பட்ட திட்ட அறிக்கைகளையும் முதலமைச்சரே இந்த விதி கீழ படிக்கறதாருந்தா ஒவ்வொரு இலாக்காவுக்கும் எதுக்கு தனியா அமைச்சர்னும் கேட்டார் பாத்தீங்களா?

ரஹீம்: ஆமா ஜோசப். நானும் கவனிச்சேன். முன்னாலெல்லாம் இப்படி நாம கேட்டதேயில்லையேன்னுதான் எனக்கும் தோனிச்சி அதான் ஒங்கள கேட்டேன். 

ஜோசப்: கலைஞர் இத பத்தி கேக்கறதுக்கு முன்னாலயே நான் கூகுள் சேர்ச்ல போயி இந்த விதி என்ன சொல்லுதுன்னு பாத்து வச்சிருந்தேன். போன வாரமே இதப்பத்தி பேசனும்னு நினைச்சிக்கிட்டு வந்தேன் மறந்துபோயிருச்சி. அத சுருக்கமா ஆங்கிலத்திலேயே சொல்றேன், கேளுங்க.

TNSA Rule:110. (1) A statement may be made by a Minister on a matter of public importance with the consent of the Speaker.
(2) There shall be no debate on such statement at the time it is made.
(3) A Minister desiring to make a statement under sub-rule (1) shall intimate in advance the date on which the statement is proposed to be made and also send a copy of the statement in advance to the Secretary for being placed before the Speaker.

கணேஷ்: ரொம்ப க்ளியராத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா இந்த மாதிரி டெய்லி ஒரு திட்டம்னு அறிக்கை வற்றதுக்கெல்லாம் காரணம் இன்னைக்கி வரும், நாளைக்கி வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கற பார்லி எலக்‌ஷன்தான்னு நினைக்கேன், என்ன சொல்றீங்க?

ரஹீம்: இருக்கும், யார் கண்டா? ஆனா ஒன்னு. இந்த அம்மா கேன்டீன் சொல்லிட்டு தமிழ்நாடு முழுசும் திறக்கறாங்களே அது நல்ல விஷயம்தான். 

கணேஷ்: கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆரம்பத்துல இருக்கற வேகம் போகப் போக இருக்குமான்னுதான் பாக்கணும்.

ரஹீம்; எதுக்கு அப்படி சொல்றீங்க? கெட்டத கெட்டதுன்னு சொல்றா மாதிரி நல்லதையும் நல்லதுன்னு சொல்ற மனசு வேணும்யா. அதா ஒங்க கட்சிகாரங்களுக்கு கிடையவே கிடையாதே.

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், சும்மா எதையாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதீங்க. எங்களுக்கும் பாராட்ட தெரியும். இன்னும் ஒரு வருசத்துக்கு இதே வேகத்துல நடத்தட்டும் அப்புறம் பாராட்டறோம். 

ஜோசப்: சரி விடுங்க கணேஷ். நீங்க என்னதான் சொன்னாலும் இது ஒரு நல்ல ஐடியாதான். ஆனா நீங்க சொல்றா மாதிரி இடையில நின்னு போயிறாம தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லா செஞ்சாங்கன்னா நல்லது. சரி அடுத்த வாரம் பாக்கலாம்.

**********
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக