16 மே 2013

தமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்!



நடப்பு கல்வியாண்டில் மேலும் சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை   அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று தமிழக கல்வியமைச்சர் அறிவித்ததிலிருந்து இதை சார்ந்தும் எதிர்த்தும் எழுதாத பத்திரிகைகளே இல்லை எனலாம். முகநூல் மற்றும் வலைப்பூக்களிலும் இதை பலரும் தங்கள் மனம் போனபோக்கில் கிழித்தெறிந்துள்ளனர்.

இன்றைய தீப்பொறி பேச்சாளர் வை.கோ அவர்களும் 'தமிழினி மெல்லச் சாகும் மேலை மொழிகள் இனி இங்கு வாழும்' என கவித்துமாக கிண்டலடித்துள்ளார். அவருக்கே உச்ச நீதிமன்றத்திலும் அனைத்திந்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முன்பும் வாதாட அவருடைய ஆங்கில புலமைதான் கைகொடுக்கிறது என்பதை அவர் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கலைஞரும் தாய் மொழியில் பயில்வதைப் போன்றதொரு இன்பம் வேறில்லை என்று கவிதை நயத்துடன் அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவருடைய பேரக் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

இதைப்பற்றி நேற்றைய முகநூலில் நண்பர் மருத்துவர் புரூனோவும் செல்வா என்ற வினையூக்கியும் இதைப் பற்றியதான விவாதத்தை முன்னின்று நடத்தினர். அதில் என்னையும் கருத்து கூறுமாறு அழைக்க நான் துவக்கத்திலேயே என்னுடைய கருத்து இங்கு தெரிவித்துள்ள பலருடைய கருத்துக்கும் எதிராக இருக்குமோ என்ற அச்சத்துடனேயே எழுதுகிறேன் என்று கூறிவிட்டுத்தான் என் மனதில் அப்போது பட்ட சிலவற்றை எழுதினேன். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பல கருத்துக்களையும் படித்தபோது ஏன் என்னுடைய கருத்துக்களை ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

இதில் முன்வைக்கப்படும் வாதங்கள் இரண்டு:

1. தாய்மொழியில் பயில்வதைப் போல் எளிதானது வேறில்லை அல்லது வாழ்க்கையில் வெற்றியடைய ஆங்கில வழி கல்வி தேவையில்லை என்பன போன்ற வாதங்கள்.

2. வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா என்பது போன்ற வாதங்கள்.

இவற்றை தனித்தனியாக விவாதிப்போம்.

முதலிலேயே கூறிவிடுகிறேன். நானும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவன்தான். கத்தோலிக்க குருமார்களால் நடத்தப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் (Govt aided
private school). ஒன்பதாம் வகுப்பிலிருந்து என் தாய் மாமனின் தூண்டுதலின்பேரில் (வற்புறுத்தலால் என்றும் கூறலாம்) ஆங்கில வழி கல்வி. நானோ அல்லது என்னுடன் தமிழ்வழி கல்வியில் படித்த என்னுடைய சக மாணவர்களோ வாழ்க்கையில் சோடை போய்விடவில்லை என்பதும் உண்மை. இது அந்தக் காலம். அதை விட்டுவிடுவோம்.

இது சம்பந்தமாக என்னுடைய முப்பதாண்டு அலுவலக அனுபவத்தில் நான் கற்றதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராகஅமர்த்தப்பட்டபோது அதை என்னுடைய வங்கியில் பலரும் மறைமுகமாக எதிர்த்தனர். ஏனெனில் பயிற்சிக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துபவர்களாக (faculty member)தெரிவு செய்யப்படுவதற்கே குறைந்தபட்ச தகுதி முதுகலை பட்டம். ஆனால் நான் வெறும் இளநிலை பட்டதாரிதான். ஆனால் முதுகலைப் பட்டதாரி வகுப்பாளர்களை விடவும் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், சொற்பொழிவாற்றவும் கூடிய திறன் என்னுள் இருந்ததை அறிந்த என்னுடைய வங்கி தலைவர் இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னை அதில் அமர்த்தினார். 'இவன வேற எங்கவும் போடமுடியாதுன்னுதான் இங்க கொண்டு போட்டுட்டாங்க' என்று கேலி செய்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அதாவது கல்லூரி முதல்வராக தேவையான அடிப்படை கல்வித் தகுதி எனக்கு இல்லாதிருந்தும் எனக்கு அந்த பதவியை பெற்றுத் தந்தது என்னுடைய ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

அங்கு நான் பணியாற்றிய மூன்று வருடங்களும் பல மறக்க முடியாத அனுபவங்களை தந்தது என்றுதான் கூற வேண்டும். அங்குதான் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று வெளிவரும் மாணவர்கள் திறமை இருந்தும் அதை பிறருக்கு வெளிப்படுத்த முடியாமல் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு புழுங்குகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டேன். எனக்கு கீழே வகுப்பாளர்களாக (faculty members என்னும் வார்த்தைக்கு நிகரான தமிழ்
வார்த்தையை கண்டுபிடிக்கவே பல மணித்துளிகள் எனக்கு தேவைப் பட்டது. பயிற்சியாளர் என்றால் trainer என்றுதான் வருகிறது!)  பணியாற்றிய ஒருவர் முதுகலை பட்டதாரி என்பது மட்டுமல்ல அவர் பயின்ற யூனிவர்சிட்டியில்
முதலாக வந்தவர். தங்க பதக்கங்களுக்கு சொந்தமானவர். ஆனால் ஆங்கிலத்தில் சுத்தமாக பேச முடியாமல் தவிப்பார். அவர் வகுப்புகள் முழுவதுமே மலையாளத்தில்தான். கேட்டால் 'நா எடுக்கற பாடம் வகுப்புல இருக்கறவங்களுக்கு புரியுதாங்கறதுதான் முக்கியம்.' என்பார். ஆனால் என்னுடைய வகுப்புகள் முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதற்கு இன்னுமொரு காரணம் எனக்கு பேச்சுவழி (conversational) மலையாளம்தான் தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் வேகமாக பேசுகிறீர்கள் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று புகார்கள் வந்தபோது நான்
வகுப்பில் கூறுவதை அப்படியே பேச்சுவழி ஆங்கிலத்தில் பிரின்ட் செய்து வகுப்பு துவங்குவதற்கு முன்பே வகுப்பிலுள்ள அனைவருக்கும் (participant என்பதற்கு என்ன தமிழில், பங்குகொள்பவரா?) வினியோகிக்க துவங்கினேன்.

என்னுடைய மூன்றாண்டு கல்லூரி அனுபவத்தில் அதன் பிறகு என்னுடைய வகுப்புகளைக் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை. அத்துடன் பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஊழியரும் ஐந்து நிமிடம் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஒரு நியதியை அறிமுகப் படுத்தினேன். அதில் பலருக்கும் துவக்கத்தில் விருப்பமில்லை. ஆனால் நாளடைவில் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு முதலில் எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது பிறகு தட்டுத்தடுமாறி தப்பும் தவறுமாக பேசுவது என்று துவங்கி இறுதியில் தன்னம்பிக்கையோடு  சரளமாக பேசிய பலரையும் கண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து என்னுடைய வகுப்புகளில் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தினேன். அதையும் துவக்கத்தில் எதிர்த்து பிறகு பழகிப்போனார்கள்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் தாய்மொழிக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அலுவலகங்களில் தங்களுடைய திறனை பிறருக்கு காட்ட (to expose) கொள்ள தாய்மொழி மட்டுமே போறாது என்பது தான் உண்மை. இருபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் எழுபத்தைந்து விழுக்காடு பேச்சுத்திறனும் உள்ள சிலர் அதிகார ஏணியில் மளமளவென்று ஏறிச் சென்றுவிடுவதைக் கண்டு எழுபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் இருபத்தைந்து விழுக்காடு ஆங்கில பேச்சுத் திறனும் உள்ள பலர் அதை கண்டு மனம் புழுங்குவது அனைத்து அலுவலகங்களிலும் காணக்கூடிய ஒன்று.

என்னுடைய இன்னுமொரு அனுபவம்.

நான் அடுத்ததாக பொறுப்பேற்றுக்கொண்டது எங்கள் வங்கியுடைய கணினி மையம். அதை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய வங்கி தலைவருக்கு எழுந்தபோது அதற்கென அனுபவமுள்ள கணினி பொறியாளர்களை பணிக்கு அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி மென்பொருளாக்கத்தில் (software development) இரண்டுமுதல் நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்ற நாற்பது கணினி மென்பொருள் பொறியாளர்களையும் அவர்களை தலைமையேற்று வழிநடத்த அதே துறையில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ள ஒருவரையும் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு வந்த பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு எங்களுக்கு தேவையான பொறியாளர்களை பணிக்கு அமர்த்தினோம். இவர்களை தேர்வு செய்யும் முயற்சியில் எனக்கு எவ்வித பங்கும் இருக்கவில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

இவர்களுள் கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்களுள் சிலர் மிகச் சரளமாகவும் வேறு சிலர் சுமாரான ஆங்கிலத்திலும் பேசும் திறனைப் பெற்றிருந்தனர். திருச்சூர்,கொல்லம் போன்ற கிராம அல்லது நடுத்தர நகர்ப்புறங்களில் பயின்ற மாணவர்கள் ஏறத்தாழ அனைவருமே மலையாளத்தில் மட்டுமே பேசக் கூடியவர்களாக இருந்தனர். அதில் சிலருக்கு ஆங்கிலத்தில் சுமாராகக் கூட எழுதவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் ஒரு மென்பொருளாளருக்கு தேவையான கணினி மொழிகள் (C, C+, Java, Vb) பலவற்றில் தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அர்களை தலைமையேற்று நடத்த வேண்டிய தலைவருக்கோ ஒரு மென்பொரு-ளாளருக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கவில்லை.அவருக்கு ஒரு கணினி இணைப்பாளராக (Networking) மட்டுமே பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறனால்  கவரப்பட்டு ஒரு மென்பொருளாளர் குழுவை தலைமையேற்று நடத்த அனுபவமில்லாதிருந்தும் தெரிவு செய்யப்பட்டார். அதாவது நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு மென்பொருள் பொறியாளர்குழுவிற்கு தலைவராக பணியாற்ற தேவையான அடிப்படை தகுதி இல்லாதிருந்தும் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனே அவருக்கு இந்த பதவியை பெற்றுத் தந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குழுவில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும். ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டிய தலைவருக்கு மலையாளம் தாய் மொழி இல்லை. இவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் மலையாளத்தில் பேசுவார்கள். இவருக்கு அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு புரிந்ததோ. பலமுறை இங்கு ஏன் வந்தோம்னு தெரியல சார் என்று என்னிடம் வந்து புலம்புவார். ஏனெனில் அவர் முன்பு பணியாற்றிய நிறுவனம் இந்தியாவின் முதல்தரநிறுவனங்களுள் ஒன்று. அங்கு வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று வந்தவர். இவரைத் தவிர அந்த குழுவில் இருந்த  பலர் மிகச் சிறிய நிறுவனங்களில் ரூ.5000/-த்திற்கும் குறைவாகவே ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களுள் பலரும் தங்களுடைய துறையில் பிரகாசிக்க திறனும் இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அனுபவமும் இருந்தும் சிறிய நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பத்து மணி நேரத்திற்கும் கூடுதலாக சிரமப்பட்டுக் கொண்டிருக்க மிக முக்கிய காரணமாக நான் கண்டது அவர்களுடைய ஆங்கில பேச்சு திறன் இன்மையே. வேறு சிலருக்கு  கேரளத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம். இதற்கும் தாய்மொழியை தவிர்த்து வேறெந்த மொழிகளிலும் பேச இயலாமையே மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் எங்கள் வங்கிக்கு தேவையான மென்பொருளை தனியாக உருவாக்கும் திறன் இந்த குழுவினருக்கு இல்லை என்பது இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது. ஆகவே  வங்கி மென்பொருள் துறையில் அனுபவம் மிக்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என்று முடிவெடுத்தோம். அதற்கென விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுள் சென்னையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தை தெரிவு செய்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வங்கியின் மென்பொருளாளர்கள் குழுவும் சென்னையில் இருப்பதுதான் உசிதம் என கருதி இதற்கென பிரத்தியேகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட எங்களுடைய மென்பொருள் குழுவும் சென்னைக்கு மாற்றப்பட்டது. குழுவின் தலைவருக்கு நிம்மதி. ஏனெனில் அவர் சென்னையைச் சார்ந்தவர். மேலும் எங்களுடைய வங்கியிலிருந்து வெளியேறுவதென தீர்மானித்துவிட்டிருந்த அவருக்கு சென்னைதான் அதற்கு ஏற்ற இடம் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

சென்னைக்கு மாற்றலாகி வந்த இரண்டே மாதங்களில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலையை தேடிக்கொண்டு சென்றுவிட்டார். ஓர் ஆண்டு முடிவதற்குள் அங்கிருந்து இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் எனக் கருதப்படும் Infosysல் வேலை கிடைத்து இப்போது சகல வசதிகளுடன் USல் இருக்கிறார். எங்களுடைய வங்கியின் மென்பொருள் குழுவின் தலைவராக ஆறு மாதங்கள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் அவருக்கு உதவியிருந்தாலும் அவருடைய வானத்தையே வில்லாக வளைப்பேன்  என்பது போன்ற பேச்சுத் திறந்தான் இதற்கு முக்கிய காரணம் என்பேன். அவரைத் தொடர்ந்து அந்த குழுவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் கொண்டவர்களும் அவர்களைத் தொடர்ந்து சுமாராக பேசும் திறன் கொண்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். சென்னை மாற்றத்தை முதலில் எதிர்த்த பலருக்கும் அதுவே
ஒரு blessing in disguise ஆக மாறியது. இன்று அவர்களுள் பலர் TCS, WIPRO போன்ற இந்திய-பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

அந்த குழுவில் ஆங்கிலத்தில் பேச வராத சுமார் பதினைந்து பேர் இன்றும் சென்னையிலுள்ள எங்கள் வங்கி கணினி இலாக்காவில் பணியாற்றுகின்றனர். சொல்லப் போனால் தெரிவு செய்யப்பட்ட குழுவினரில் மென்பொருள் துறையில் நல்ல திறன் படைத்தவர்கள் இவர்கள்தான். இவர்களும் வெளியேறினால் வங்கியின் கணினி மையமே ஸ்தம்பித்துவிடும் என்று கூறக் கூடிய அளவுக்கு திறன் படைத்தவர்கள். இவர்களுக்குள்ள மென்பொருள் திறனும்  வங்கி துறையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமும் இப்போது அவர்கள் பெறும் ஊதியத்தை விட இரு மடங்குக்கும் கூடுதலாக பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்று சால்ஜாப்பு கூறிக்கொண்டு.....

என்னுடைய அனுபவத்தில் நான் கற்றறிந்தது இதுதான். எனக்கு எல்லா திறமையும் இருந்தாலும் என்னை நானே மற்றவர்களுக்கு விற்றால்தான் அதன் முழுப் பயனையும் நான் அடைய முடியும். ஒரு பொருளை விற்பதற்கு அதன் அனைத்து நற்குணங்களையும் பிறருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துரைக்கும் திறன் வேண்டும். அதற்கு தாய் மொழி மட்டுமே போதாது. ஆக, நான் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றறிந்தவற்றை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தி என்னுடைய வாழ்க்கையில் சகல வசதிகளுடனும் வாழவேண்டுமென்றால் எனக்கு ஆங்கிலம் நிச்சயம் தேவை. என்னுடைய ஆங்கில திறன் அதிகரிக்க நான் சிறு வயது முதலே ஆங்கிலத்திலேயே பேச, எழுத மட்டுமல்லாமல் சிந்திக்கவும் பயிற்சி தேவை. இதை முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில வழி கல்வி இருந்தால் மட்டுமே அளிக்க முடியும். இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.

2.வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா?

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் ஏன்?

அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு பிரிவு (section) சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இயங்கி வந்த அரசு பள்ளிகளில்  ஏறத்தாழ இருபதாண்டுகளாகவே இருக்கத்தான் செய்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி பயில வசதியில்லாத நடுத்தர மக்கள் பலருடைய குழந்தைகள் இந்த பிரிவின் மூலம் ஆங்கிலத்தில் பயிலும் பயனை ஓரளவுக்கு பெற்று வந்துள்ளனர். ஏன் ஓரளவுக்கு என்று கூறுகிறேன் என்றால் இந்த பிரிவுகளிலும் பாடங்கள் அனைத்துமே தமிழில்தான் போதிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த பிரிவுகளில் பயின்ற மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, படிக்க மட்டுமே  முடிந்ததே தவிர சரளமாக பேசுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.

ஆகவே பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கும் சற்று கீழிருக்கும் பெற்றோர்கள் கூட தற்போது அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை கண்கூடாக கண்டபிறகுதான் அரசு நகர்ப்புற மற்றும் கிராமங்களில் இயங்கிவரும் அரசு பள்ளிகளிலும் இத்தகைய பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குப்பனும் சுப்பனும் அறிவாற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்று கூப்பாடு போட்ட சுயநலம் பிடித்த அரசியல் தலைவர்கள் அதே குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்கவிருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தடுத்த நிறுத்த மீண்டும் கூப்பாடு போட துவங்கியுள்ளனர். அவர்களுக்கு கூப்பாடு போடுவதேதான் அனுதின அலுவல். அவர்களை விட்டுவிடுவோம்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் எழுதும் இன்றைய படித்த தலைமுறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் வேடிக்கை.

அவர்களுடைய வாதம் வசதி படைத்தவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி அது இல்லாதவனுக்கு தமிழ் வழி கல்வியா?

வசதி படைத்தவனுக்குத்தான் வசதியான வாழ்க்கை என்பது நடைமுறை நிதர்சனம்! வசதி படைத்தவனால்தான் மாதம் இருபதாயிரம் வரை வாடகை கொடுத்து சொகுசு குடியிருப்புகளில் வசிக்க முடியும், குளிர்சாதன வாகனங்களில் பயணிக்க முடியும், பல ஆயிரங்கள் செலவழித்து மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும், பகட்டான ஆடை அணிகலங்களைஅணிந்து வலம் வர முடியும் ஏன் பிட்சா சாப்பிட முடியும் காஃபி ஹவுஸ் சென்று வர முடியும், இன்டர்நெட் சாட் செய்ய முடியும்... இவ்வளவு ஏன், உங்களை போல் முகநூல் கணக்கு வைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில்காரசாரமாக இணைய தளங்களில் விவாதிக்க முடியும். எந்த சுப்பன் குப்பனால் இது முடியும்?

வசதிகள் இல்லை என்பது ஒரு விசித்திர வாதம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு vicious cycle! அடிப்படை வசதிகளான தரமான கல்வியை ஆரம்ப காலத்திலிருந்தே அனைவருக்கும் வழங்கியிருந்தால் அனைவருக்கும் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும். இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் அதை செய்யவில்லை. அதை இப்போதிலிருந்தாவது படிப்படியாக செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவதில் என்ன தவறு?

தமிழகத்தில் மட்டுமே பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுள்ளோர் தமிழிலேயே தொடர்ந்து படிக்கட்டும். அவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கட்டும். தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்படட்டும். ஏன் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐஏஸ் போன்ற தேர்வுகளுமே தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள். அதனால் தமிழ் மொழி செழித்து வளரும்!!

தமிழன் தமிழகத்தில் மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கரைத்துவிடாமல் பாரெங்கும் போய் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் தமிழைக் கட்டிக்கொண்டு சாகாமல் இருப்போம்.

அதனால் தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே? வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.

*********






8 கருத்துகள்:

  1. போன நாலஞ்சி பதிவுகள்ல பின்னூட்டம் போட்டவங்க யாருக்கும் என்னால பதில் போட முடியாம போச்சி. அதுக்கு காரணம் நான் கூகுள் ப்ளஸ் கமென்ட்ட எனேபிள் பண்ணதுதான். பின்னூட்டம் இருக்குன்னுதான் காமிக்கிதே தவிர அத படிக்கவோ பதில் போடவோ முடியமாட்டேங்குது. ஒரே ஒரு முறை இந்த பதிவுல வந்திர்ந்த ஐந்து பின்னூட்டங்களுக்கு பதில் போட்டேன். அதுக்கப்புறம் அந்த லிங்க் காணாம போயிருச்சி. அதனால கூகுள் ப்ளஸ் பின்னூட்டத்த டிசேபிள் பண்ணிட்டேன். இனி ப்ளாகர் பின்னூட்டம் மட்டும்தான். இதுவரை பின்னூட்டம் இட்டவர்கள் ஏன் பதிலே போடவில்லை என்று நினைக்காதீர்கள். என்னால் முடியவில்லை என்பதே சரி. இப்படி சரியாக வேலை செய்யாத மென்பொருளை ஏந்தான் பப்ளிக் பயன்பாட்டுக்கு விடுகிறார்களோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1:39 AM

    உங்கள் பக்கத்தை பார்த்தால், உண்ணதமான விஷயங்களில் தணியாத ஆர்வம் கொண்டவர் போல் தோன்றுகிறது.

    பின்வரும் கருத்தில் நியாயம் இருப்பதாக கருதினால், நீங்களும் ஏற்று உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்…

    மொழி மீதான எனது புரிதலில் தவறு இருப்பதாக தாங்கள்
    கருதினால், தயவுசெய்து தங்கள் கருத்தினை பதிவு செய்யவும்.

    மொழி என்பது மனதில் உள்ளதை சொல்ல பயன்படும் ஒலி மற்றும் வரி வடிவம் அவ்வளவுதான்! அஃறிணை வடிவமான ஒலி மற்றும் எழுத்துகளை உயர்திணை வர்க்கமான தாய்க்கும் மேலாக கருதுவதும், அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்பதும் ஒரு மனமுதிர்ந்த செயல் அல்ல.

    சொல்லப்போனால் உலக மக்கள் அணைவரும், UNESCO நிறுவனம் பரிந்துரைக்கும் ஒரு-மொழி(unilingualism) கொள்கையை ஏற்று பரந்த மனப்பான்மையுடன் தமது மொழிகளை கைவிட்டு அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசவேண்டும்.

    உலகம் முழுவதும் ஒரே மொழி மட்டுமே பயன்படுத்துவது என்பது உடனடியாக நடக்க கூடியது அல்ல என்றாலும், அதற்காக ஒத்துழைப்பு தருவது உலக மக்கள் அணைவரின் கடமையாகும்.

    எப்படி உலக மக்கள் ஒன்றிணைத்து ஒரேவிதமான எண்களையும்(அரபு எண்கள் 1,2,3..), அளவீட்டு முறைகளையும் (metric measurement system) பின்பற்றி பயன் பெறுகிறோமோ, அதேபோல் உலகம் முழுவதும் ஒரே மொழியை மட்டுமே பயன்படுத்தினால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும்…

    தாய்-மொழியை கைவிடமாட்டேன் என நம் முன்னோர்கள் எண்ணியிருந்தால், இன்னமும் நாம் செய்கை மொழியில்தான் பேசிக்கொண்டிருப்போம்.
    ஏனெனில் செய்கை மொழிதான் நமது முதல் தாய்மொழி

    அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசினால்....

    1. உலகம் முழுவதும் ஒரே ஒரு மொழிதான் பயன்பாட்டில் இருக்கும்

    2. மொழி வெறி, மொழிச்சண்டைகள் தவிர்க்கப்படும்.

    3. அறிவு பகிர்வு ஈஸியா நடக்கும்.

    4. ஒரு சாதாரண வியாபாரி கூட ஈசியா ஏற்றுமதி இறக்குமதி செய்வார்.

    5. அடிப்படைகல்வி ஒரு மொழியில் (தமிழ்) படிச்சிட்டு பட்டப்படிப்பு இன்னொரு மொழியில் (இங்கிலீஷ்) படிக்கமுடியாமல் நிகழும் தற்கொலைகளை தவிர்க்கலாம்

    அப்படி ஒரேமொழியை ஏற்பது எனில்,ஒவ்வொரு மொழியினரும் தமது மொழிதான் ஏற்கப்பட வேண்டும் என விரும்பலாம். புதிதாக ஓர் மொழியை ஏற்பதைவிட தெரிந்தோ தெரியாமலோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ பல நாடுகளில் பரவிவிட்ட இங்கிலிஷை மட்டுமே படித்து, எழுதி பேச பயன்படுத்தலாம்.

    மொழி போதையிலிருந்து விடுபடுவோம் உலகோடு இணைந்து அடுத்த
    தலைமுறையையாவது இனி முன்னேற விடுவோம்

    // கவனிக்க... நமது பண்பாட்டையோ, கலை கலாச்சாரத்தையோ, பண்டைய மருத்துவ முறைகளையோ, கட்டிட மற்றும் சிற்பகலை நுட்பங்களையோ கைவிட சொல்லவில்லை, உலகோடு இணைந்து செயல்பட மொழியை மட்டுமே.... //

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:44 AM

    //தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே? வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.//

    சரியா சொன்னீக பாஸ் .........

    பதிலளிநீக்கு
  4. மொழி என்பது மனதில் உள்ளதை சொல்ல பயன்படும் ஒலி மற்றும் வரி வடிவம் அவ்வளவுதான்! அஃறிணை வடிவமான ஒலி மற்றும் எழுத்துகளை உயர்திணை வர்க்கமான தாய்க்கும் மேலாக கருதுவதும், அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்பதும் ஒரு மனமுதிர்ந்த செயல் அல்ல.//

    மொழி போதையிலிருந்து விடுபடுவோம் உலகோடு இணைந்து அடுத்த
    தலைமுறையையாவது இனி முன்னேற விடுவோம்//

    நீங்க சொன்ன கருத்துக்கள் எல்லாமே நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதை உங்கள் பெயரிலேயே சொல்லியிருக்கலாம். எந்த கருத்தையும் தன்னுடைய கருத்தாக சொல்ல துணிவு வேண்டும். அப்போதுதான் அந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

    பதிலளிநீக்கு
  5. பரந்த மனப்பான்மையுடன் தாய்-மொழியை கைவிட்டு அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசலாமா ?

    உலகம் முழுவதும் ஒரே மொழி மட்டுமே பயன்படுத்துவது என்பது உடனடியாக நடக்க கூடியது அல்ல என்றாலும், அதற்கான ஒத்துழைப்பை நாம் கொடுக்கவேண்டும் என்பது தங்களின் பார்வையில் சரியா //

    உலகம் முழுவதும் ஒரே மொழி என்பது சாத்தியமல்லவே? அதற்கு முன்பு இப்போதும் உலக மொழி எனக் கருதப்படும் ஆங்கிலத்தை நம்முடையவர்கள் ஏற்றுக்கொள்ள நாம் ஒத்துழைப்பை கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா5:20 PM

    தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே? வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.
    neeyum serndhu savu. appayavathu tamil vazhattum.

    பதிலளிநீக்கு
  7. நல்ல ஆய்வு.அரசு ஏன் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வந்தது என்பது பற்றி ஒரு பதிவு ஏற்கனவே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியையும் எழுத இருக்கிறேன்.
    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா?

    பதிலளிநீக்கு