31 அக்டோபர் 2011

சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல்!




சென்னை மாநகராட்சியின் ஆட்சி பொறுப்பு கைமாறியபின் எடுக்கப்பட்ட முதல் அதிரடி முடிவு இது.



இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சுமார் 61 கடைகளுக்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ற செய்தி சென்னைவாசிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும்.



தியாகராய நகரில் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் அதை சுற்றிலுமுள்ள துணை, இணை நகரங்களில் இத்தகைய முறையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதும் சென்னைவாசிகளின் கோரிக்கை.



தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இத்தகைய நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி இயங்கி வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களை மட்டும் குறை கூறி பயனில்லை. அவர்களை ஆட்டிப்படைக்கின்ற வார்டு உறுப்பினர்களும், நகரமன்ற தலைவருமே முக்கிய காரணம்.



சென்னையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பலவற்றில் அடிப்படை தேவைகளான பார்க்கிங், விபத்து சமயங்களில் பயன்படுத்தக் கூடிய மாற்று வாயில்கள், லிஃப்ட் மற்றும் விசாலமான படிகட்டுகள் என எதுவுமே இல்லாதது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தியாகராய நகர், பாண்டிபஜார், பனகல்பார்க் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் பிரம்மாண்ட முகப்புகளுடன் துவக்கப்பட்ட பல கடைகளில் முகப்பிலுள்ள ஒரேயொரு குறுகிய வாயிலைத் தவிர விபத்து சமயங்களில் வெளியேற வேறு வழிகளே இல்லை என்பதுதான் உண்மை. மூன்று மாடிகளுக்கு மேல் கடை அமையும் பட்சத்தில் லிஃப்ட் வசதியுடன் விசாலமான படிகட்டுகளும் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த பகுதியில் சமீபத்தில் துவக்கப்பட்ட ஒரு நான்கு மாடி துணிக்கடையில் ஐந்து நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஒரு லிஃப்ட். படிகட்டும் மூன்றடிக்கும் குறைவான விசாலம்தான். கடந்த தீபாவளி விற்பனையின் போது கூட்டமிகுதியால் மூச்சுவிடக் கூட முடியாமல் படிகட்டில் மயங்கிவிழுந்த பெண்கள் பலரை என் கண்ணால் காண முடிந்தது. மயங்கி விழுந்த பெண்களை எழுந்திருக்கக் கூட விடாமல் முட்டி மோதி சென்ற வாடிக்கையாளர்களைப் பார்த்தபோது இப்படியெல்லாம் அவதிப்பட்டு பண்டிகைக்கு ஆடைகளை எடுக்க வேண்டுமா என்று தோன்றியது!



இதே பகுதியில் ஒரு சில வாடிக்கையாளர்களுடைய வாகனங்களைக் கூட கடைகளுக்கு முன்பு நிறுத்த வசதியில்லாத கடைகள்தான் அதிகம். மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை கபளீகரம் செய்து அடாவடியாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வாகனங்களை நிறுத்த வளைத்துப்போட்ட கடைகளும் உண்டு. இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் அடிப்பகுதியை முழுவதுமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வசதிக்கென அடைப்புகளை ஏற்படுத்தி அவ்வழியில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த ஒரு மிகப்பெரிய கடையும் இன்றைய சீல் வைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.



ஆனால் இதில் சென்னை மாநகராட்சி உறுதியாக நிற்குமா அல்லது கடந்த பதினைந்தாண்டுகளைப் போன்று சம்பந்தப்பட்ட வணிகர்களிடமிருந்து 'வசூலைப்' பெற்றுக்கொண்டு நடவடிக்கையை பின்வாங்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



1 கருத்து:

  1. இந்தக் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான கழிவரையைக் கூட கட்டி வைப்பதில்லை, சென்னை சில்க் மூன்றாம் மாடியில் தான் கழிவறை உண்டு, வெஸ்டர்ன் டாய்லெட் ஒண்ணே ஒண்ணு தான் அதிலும் உட்கார சீட் கிடையாது. ரொம்ப மோசம்

    பதிலளிநீக்கு