03 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை 5ஆ

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏகாம்பரத்தை சென்னை அடையாறு கடற்கரையில் வைத்து தற்செயலாக சந்தித்தேன்..

அவர் மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு தளர்ந்து போயிருந்தார். அவராக என்னை அடையாளம் தெரிந்துக்கொண்டு, ‘சூசை.. என்னை தெரியுதாடா?’ என்று என்னை நெருங்கியபோது இவரை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று நினைக்கத் தோன்றியதே தவிர ஏகாம்பரத்தின் நினைவு வரவே இல்லை..

யார் நீங்க என்று வாயெடுக்க நினைத்தபோதுதான் அவரே ‘நாந்தான் சூசை.. ஏகாம்பரம் அண்ணன்..’ என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. அந்த அளவுக்கு மனிதர் மாறிப்போயிருந்தார்.

சுத்தமான உடுப்பு என்றாலும், தேய்க்கப்படாமல், சுருக்கங்களுடன் இருந்தது.. முழுவதுமாய் வழுக்கையாகிப்போன தலை.. காலில் சாதாரண ரப்பர் செருப்பு.. கையில் ஒரு பழைய துணிப்பை.. முகத்தில் அளவில்லா சோகம்..

‘என்னண்ணே ஆளே மாறிப் போய்ட்டீங்க?’ என்றதும் கண்கள் கலங்கிப் போய் சற்று நேரம் தூரத்தில் தொடுவானத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

பிறகு கடந்த ஆண்டுகளில் நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.

ஏகாம்பரம் குமாஸ்தாகவிருந்து செக்ஷன் அதிகாரியாக (Section Officer.. சுருக்கமாக SO என்பார்கள் அவருடைய அலுவலகத்தில்) பதவி உயர்வு பெற்று பின்னர் அரசு அலுவலகங்களில் தணிக்கை செய்யும் அதிகாரியாக பரீட்சை எழுதி தேர்வு செய்யப்பட்டார்..

அரசு தணிக்கை அதிகாரி என்ற பதவி பணத்தை பலவகையிலும் அள்ளித்தரும் பதவி என்பது தெரிந்ததுதான்..

ஒரேயொரு தொல்லை.. ஊர் ஊராக சுற்ற வேண்டும்..

அவருக்கு எப்படியோ அண்ணிக்கு பணம் என்றால் கொள்ளைப் பிரியம். யார் கொடுத்தாலும் கையை நீட்ட தயங்க மாட்டார்.

‘அவங்க அப்படித்தான்.. எதையும் கேக்க மாட்டாங்க.. குடுத்தா வாங்கிப்பாங்க.. நீங்க ஏன் அவர போய் பாக்கீங்க.. நேரா வீட்டுக்கு வந்திட வேண்டியதுதானே..’ஏன்பார் அண்ணி..

இப்படியாக அண்ணன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க.. அண்ணி பணம் வசூலிப்பதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

பிள்ளைகள் நால்வருமே கேட்பாரின்றி பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா, டிராமா,  என்பதில் நாட்டம் செலுத்த மூத்த மகனைத் தவிர மற்ற மூன்றுமே பள்ளி இறுதி பரீட்சையில் தோற்றுப் போய்..

மகள்களில் மூத்தவள் மெட் ரிக்குலேஷன் பரீட்சையில் இரண்டு பாடங்களில் தோற்றுப் போக டுட்டோரியலில் சேர்த்துவிட்டு ஏகாம்பரம் பாண்டிச்சேரியில் ஆடிட்டுக்காக போயிருக்கிறார். வீட்டில் அவர் இல்லாவிட்டால் பிள்ளைகள் தாய்க்கு பயப்படவே பயப்படாது..

அண்ணிக்கு டிவியிலயும், டெக்குலயும் மாறி, மாறி சினிமா பார்க்கவும் அக்கம்பக்கத்து தோழிகளுடன் அரட்டையடிக்கவுமே நேரம் போதாது..

மூத்த மகள் டுட்டோரியிலில் படித்துக் கொண்டிருந்த ஒரு சக வயது மாணவனிடம் தன் கற்பைப் பறிகொடுத்துவிட்டு வயிற்றில் குழந்தையுடன் வந்து நின்றபோதுதான் அண்ணி  விழித்திருக்கிறார்.ஏகாம்பரம் ஊரிலிருந்து பதறியடித்துக்கொண்டு வந்து காதும், காதும் வைத்ததுபோல் அந்த பையனுடைய வீட்டுக்கும் தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்துவைக்கப்போக விஷயம் அறிந்து  வந்த பையனுடைய குடும்பம் போலீஸ் வரை போக.. ஒருவழியாக சமாதானம் செய்து வைத்து..

அதன் கதை அப்படியானதும் அண்ணன் அடுத்த மகளை பதினெட்டு வயதிலேயே அண்ணியுடைய நெருங்கிய குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்து வைத்திருக்கிறார்..

மூத்தவன் குடும்பத்தில் நடந்த எதையும் காண சகியாமல் துபாய் பக்கம் வேலை தேடிப் போய் திரும்பி பல ஆண்டுகளாயும் திரும்பி வரவில்லை..

கடைசி மகன் மோகன் பள்ளி இறுதி பரீட்சையில் பெற்ற தோல்விக்குப் பிறகு வேலை தேடி அலுத்துப்போய் தகாத நண்பர்களுடைய சகவாசத்தால் கெட்டு சீரழிந்து.. குடியும்.. வேறென்னவோ சொல்வார்களே அதில் சிக்கி.. ஏற்கனவே திருமான ஒரு தகாத பெண்ணிடம் மீளமுடியாத பந்தத்தில் அகப்பட்டுக்கொண்டு..

ஆக குடும்பம் சின்னாபின்னாமாகி..

என்னுடைய செவிகளையே நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்..

‘என்னண்ணே சொல்றீங்க.. குமார் அண்ணனும் மத்த எல்லாரும் கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்காங்கன்னுல்ல அம்மா எழுதியிருந்தாங்க.. நீங்க அவங்கக் கிட்ட போய் ஹெல்ப் கேட்டிருக்கலாமேண்ணே.. இவ்வளவு நடந்திருக்கு.. அதெப்படி யாருமே கண்டுக்காம இருந்துட்டாங்க..?’

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு.. ‘குமாரப் பத்தியும் தம்பிங்கள பத்தியுந்தான் ஒனக்கு தெரியுமே சூசை.. இன்னைக்கி வரைக்கும் அவனுங்க மூனு பேருமே என்னெ மன்னிக்கவே இல்லடா.. இல்லன்னா இப்ப நானும் அண்ணியும் இருக்கற நிலமையுலயும் வீட்டு பக்கம் வராதீங்கன்னு சொல்வானுங்களா நீயே சொல்லு?’ என்று கண் கலங்கியபோது எனக்கு பார்க்க பாவமாக இருந்தது.

‘அப்புறம் சொல்லுங்க.. மூத்தவன் எங்கருக்கான் இப்ப?’

‘இருக்கான்யா.. .இங்கதான் இருக்கான்.. அவனாவே பாத்து ஒரு நல்ல குடும்பத்து பொண்ண கட்டிக்கிட்டான். கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால வந்து பேருக்கு கூப்ட்டான்.. அண்ணி வரமாட்டேன்னுட்டா.. நா மட்டும் போயிருந்தேன்.. நல்ல பொண்ணு.. பாசமா நடந்துக்கறா.. ரெண்டு பிள்ளைங்க.. போனா.. தாத்தான்னு ஒட்டிக்கிதுங்க..’

‘அப்புறம் என்னண்ணே.. அவங்கூட போய் இருக்க வேண்டியதுதானே?’

அவர் என்ன நினைத்தாரோ கையிலிருந்த துணிப்பையால் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

நான் என்ன செய்வதென தெரியாமல் அவர் அழுது ஓயும் மட்டும் காத்திருந்தேன்..

‘சாரிடா சூசை.. இத்தன வருசம் கழிச்சி ஒன்னைய பார்த்துட்டு ஒன்னெ பத்தி கேக்காம நான் பாட்டுக்கு என் சோக கதைய சொல்லிக்கிட்டிருக்கேன்.. நீ எப்படி இருக்கே..’ என்று அவர் பேச வந்ததை சொல்வதா வேண்டாமா என்று நினைத்து பேச்சை திசை மாற்ற முயல்கிறார் என்பது தெரிந்தது..

நானும் என்னுடைய கடந்த இருபதாண்டு கால வாழ்க்கையை சுருக்கமாக சொல்லிவிட்டு, ‘போன மாசம்தான் மூத்தவளோட கல்யாணம் நடந்ததுண்ணே.. மாப்பிள்ளை மலேசியாவில பிறந்து வளர்ந்தவர்.. கோலாலம்பூர்ல இருக்காங்க..’ என்று சொல்லி முடித்தேன்..

‘இப்ப சொல்லுங்க.. ஏன் மூத்தவனோட போயி இருக்க மாட்டேங்கறீங்க?’

‘எல்லாம் இந்த மோகனாலத்தான் சூசை.. இப்பவும் மாசம் ஒன்னாந் தேதியான என் பென்ஷன் பணத்துல பாதிய குடுன்னு வந்து நிக்கான்.. குடிச்சிப் போட்டு வந்து பாத்திரத்தையெல்லாம் தூக்கி வீசறான்.. அண்ணிய அடிச்சி போட்டுடறான்.. ஏண்டா இப்படி அநியாயம் பண்றேன்னு கேட்டா என்னையவே அடிக்க வரான் சூசை.. இவனெ நினைச்சித்தான் மூத்தவனோட போய் இருக்க யோசிக்கேன்..’

நான் அதிர்ந்து போய் அவரையே பார்த்தேன்.. ‘ஏன் அவன் வேலைக்கு போறான் இல்லே?’

அவர் சோகத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டார்.. ‘ஆட்டோ ஓட்டறான் சூசை.. அவனெ எப்படி வளர்த்தேன்.. எவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சேன்.. இப்ப அவன் ஆட்டோ ஓட்டறாண்டா.. எங்க போய் சொல்லிக்கறது? நீங்க இங்க வந்து இருக்கறதுல எனக்கு ஆட்சேபணையில்லப்பா ஆனா அவன் இங்க வந்து கலாட்டா பண்ணக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டான் மூத்தவன்.. அவனெ போலீஸ்ல புடிச்சி குடுங்கன்னு சொல்றான்.. எப்படிறா சூசை.. என் பையன நானே எப்படி போலீஸ்ல..’ மீண்டும் அடக்க மாட்டாமல் அழ.. எனக்கு அவரை பார்க்கவே பாவமாயிருந்தது..

எப்படியிருந்த மனுஷன்? ஹும்.. எல்லாம் தலையெழுத்து..

அன்று பார்த்ததுதான்.. பின்னர் அவரை நினைத்தாலே மனசு கனத்துப்போகிறது..

அன்று இளம் வயதில் தன்னுடைய மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு தன்னுடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் நிராதரவாக விட்டுவிட்டுச் சென்றபோது சபித்த தாயின் சாபனையா இதெல்லாம்?

ஒரு தாய் சபித்து இப்படி ஆகியிருக்குமா?

பெத்த வயிறு பித்து பிள்ள மனம் கல்லும்பாங்களே..

3 கருத்துகள்:

  1. இதன் முதல் பாகத்தைப் படிக்க விரும்புவோருக்கு:

    http://ennulagam.blogspot.com/2006/09/5.html

    பதிலளிநீக்கு
  2. அப்பப்பா! படிக்கவே மனம் துன்பப்படுகிறது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் பேராசை பெருநட்டம் என்பதையும் உணர வேண்டும். அடுத்தவரை வீணில் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் நாம் ஒரு நால் ஒதுக்கப்பட்டு விடுவோம். அதுதான் இவர் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஆண்டவா! வயதான காலத்தில் அவருக்குக் கொஞ்சம் மன அமைதியைக் கொடு.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    இன்றைய ஏகாம்பரத்தின் பதிவிற்கும் தம்மை மறந்தவர்கள் பதிவிற்கும் தொடர்பு இருப்பதை கவனிக்க வேண்டுகிறேன்..

    பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் மறந்து தன் மனைவி, தன் மக்கள், தன் குடும்பம் என்ற எண்ணத்தோடு வாழ்வோருக்கு இப்படியும் நிகழலாம் என்பதை எடுத்துக்காட்டவே ஏகாம்பரத்தின் வாழ்க்கையில் நடந்ததை எழுதினேன்..

    நம்மில் பலரும் இந்த பாதையில்தான் சென்றுக்கொண்டிருக்கிறோம்.. நான் அப்படியில்லையென்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்..

    பதிலளிநீக்கு