ப்ரேம் எப்போதுமே எளிதில் உணர்ச்சிவசப்படாதவர். நான் அப்படியல்ல. அதற்கு நேர் எதிர்.
அவர் எந்த அளவுக்கு தன்னுடைய மனைவியின் மேல் உயிராயிருந்தார் என்பது எனக்கு தெரியும்.
அப்படிப்பட்ட பெண் தன்னைவிட்டு பிரிந்துபோனார் என்று சர்வ சாதாரணமாக, எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில்...
‘என்னடா சொல்றே?’ என்ற என்னுடைய சற்றே உரத்த குரல் கான்டீனில் சிற்றுண்டியருந்திக் கொண்டிருந்த சிலரை என்னை திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு மேலும் அங்கு அமர்ந்து உரையாட முடியும் எனக்கு தோன்றாததால், ‘டேய் ப்ரேம் ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வாயேன்.. நாம முந்தி போவோமே அந்த பார்க்ல போய் ஒக்காந்து பேசலாம்.. வா’ என்று அவனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் மாலை நேரங்களில் சில நாட்கள் அங்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ப்ரேம் பெற்றோருக்கு ஒரே மகன் என்றாலும் அவனுடைய தந்தையின் குடும்பம் பெரியது. இந்துக் கூட்டுக் குடும்பம் (HUF) என்பார்களே அந்த ரகம். பிரச்சினைகளுக்கு கேட்கவா வேண்டும்..
ஊரைவிட்டு வந்து தனி அறை பிடித்து பணியாற்றிக் கொண்டிருந்தவனை சில நூறு கி.மீ. துரத்திலிருந்த குடும்பப் பிரச்சினை அவ்வப்போது வரும் கடிதங்கள் மூலம் காதில் விழும். அப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவற்றை என்னுடன் பகிர்ந்துக்கொள்வான். அதே பார்க் இப்போதும் அவனுடைய பிரச்சினையை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள உதவியதை வேதனையுடன் நினைத்துப் பார்த்தேன்.
‘டேய்..ப்ரேம்.. அப்போ ஒங்கப்பா அனுப்புன கடிதங்கள இங்கன வச்சி படிச்சிக் காட்டி.. இதுக்கு ஏதாச்சும் ஐடியா சொல்லுறான்னு கேப்பியே ஞாபகம் இருக்கா..’ என்றபோது அவனால் லேசாக புன்னகை மட்டுமே செய்ய முடிந்தது.
நாங்களிருவரும் எப்போதும் அமரும் அந்த சிமெண்ட் பெஞ்ச் அதே கோலத்தில் காலியாய் இருக்க எங்களையுமறியாமல் அதிலேயே அமர்ந்தோம்..
அடுத்த சுமார் இரண்டு மணி நேரத்தில் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மீண்டும் நினைவுக்கு வர என்னையுமறியாமல் கண்கலங்கிப் போகிறேன்.
அவனுடைய குரலில் பெரிதாய் எந்த வருத்தமும் தெரியவில்லையென்றாலும் என் மனம் வலித்தது. அந்த வேதனையை என்னால் எழுத்தில் வடித்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே..
***
லதா திருமணமான புதிதில் ஒரு சராசரி மனைவிக்குண்டான கோபம், தாபம், பொறாமையுடன் இருந்தாள். சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து சட்டென்று சென்னையைப் போன்ற ஒரு பெரு நகரத்தில் வாழ வந்த ஒரு பெண்ணின் சுபாவத்தைத் தவிர வேறெந்த விசித்திர குணத்தையும் வெளிக்காட்டவில்லை..
ஆனால் நாளடைவில் ப்ரேமுடன் வெளியில் செல்லும்போதெல்லாம் அவள் தன்னை மறைமுகமாக கண்கானிப்பதை அவன் உணர்ந்தான். ஆரம்பத்தில் தன்னுடைய கணவன் பார்க்க கவர்ச்சியானவன் என்று அவள் கொண்டிருந்த கர்வம் மெள்ள, மெள்ள சந்தேகமாக மாறத் துவங்கியதை அவனால் உணர முடிந்தது.
‘இங்க பாருங்க.. இனிமே நா ஒங்கக் கூட வெளியில வரமாட்டேன்.. இந்த பட்டணத்துல இருக்கறவளுங்களுக்கு வெவஸ்த்தையே இல்ல போலருக்கே.. இப்படி விளுங்கறா மாதிரி பாக்கறாளுங்க.. அதுவும் கட்டுன பொண்டாட்டி கூட போறப்ப?’ என்பாள் வீட்டுக்கு திரும்பியதும்.
ஆரம்பத்தில் ப்ரேம் அதை மனைவியருக்கே உரிய பொறாமை என்று நினைத்து சிரிப்புடன், ‘ஏய் லதா.. என்ன ஒன்னையுந்தான் ஆம்பளைங்க விழுங்கறாமாதிரி பாக்கானுங்க.. நா ஏதாச்சும் சொல்றேனா என்ன? பாக்கறவன் பாக்கத்தான் செய்வான்.. நம்ம மனசுதான் சுத்தமாருக்கணும்..’ என்பான்..
ஆனால் லதா ஒத்துக்கொள்ள மாட்டாள்.. ‘அதெப்படிங்க.. ஆம்பளைங்க பொண்ணுங்க அழகாருந்தாத்தான்னு இல்ல.. எல்லா பொண்ணுங்களையுந்தான் பாப்பாங்க.. எங்க ஊர்லயும் அப்படித்தான்.. சின்ன வயசுலருந்தே எங்க வீட்ல, ‘ரோட்ல போகும்போது தரைய பாத்துத்தான் நடக்கணும்.. ரோட்ல போற வர ஆம்பளைங்க பாக்கத்தான் செய்வாங்க.. அத நீங்க பாத்தீங்கன்னாதான் பிரச்சினை.. பின்னாலயே வருவாங்க’ன்னு சொல்லித்தான் எங்கள வளர்த்தாங்க. அதனால அது ஒரு பெரிய பிரச்சினையில்ல.. ஆனா இது அப்படியில்ல..’ என்பாள்..
சில நேரங்களில் ப்ரேம் சலிப்புடன், ‘சரி இப்ப என்ன பண்ணலாம் சொல்லு.. என் மூஞ்சில ஆசிட ஊத்திக்கவா?’ என்பான்..
‘ஆன்னா, ஊன்னா.. இதையே சொல்லி சமாளிங்க..’ என்று அத்துடன் அந்த விஷயத்தை முடித்துவிடும் லதா நாளடைவில் அவனுடன் வெளியில் வருவதையே நிறுத்திவிட ப்ரேம் இவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் என்று சிந்திக்கலானான்..
திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே ஒரு பெண்குழந்தை, இருவரையும் தூக்கி சாப்பிட்டுவிடக் கூடிய கலருடனும் அழகுடனும் பிறக்க லதா தன் கவலையை மறந்து அந்த குழந்தையுடனேயே ஐக்கியமாகிப் போக ப்ரேம் அவளை மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்து சமாதானமடைந்தான்.
குழந்தை பிறந்து ஒரு வருடம் பூர்த்தியாகவிருந்த சமயத்தில், ‘மாப்பிள்ளை, பிள்ளைக்கு மொட்ட போட்டு காது குத்தணும். நம்ம குலதெய்வத்துக்கு குடும்பத்தோட வர்றதா லதா அம்மா நேந்திருக்காளாம். அதனால ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு லதாவ கூட்டிக்கிட்டு வந்தீங்கன்னா..’ என்று ஊரிலிருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும் தன் நண்பனுடைய நாற்சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்துக்கொண்டு கிளம்பினான்..
ஆறேழு மணி நேர பயணத்தில் அடைந்துவிடக்கூடிய தூரம் என்பதால் உச்சி வெயிலுக்கு முன்பு ஊர் சேர்ந்து போய்விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையிலிருந்து விடியற்காலை நான்கு மணிக்கு புறப்பட்டான்..
குழந்தை உறக்கத்திலிருந்ததால் லதாவும் குழந்தையும் காரின் பின் சீட்டில் அமர ப்ரேம் தன் நண்பனுடைய ஓட்டுனரின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.
மார்கழி மாத விடியற்காலை நேரம்.. பனிமூட்டம்.. ஹெட்லைட்டை முழு வீச்சில் இட்டுக்கொண்டு வாகனங்கள் சர், சர்ரென்று தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்த ப்ரேம்.. ‘கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க டிரைவர்.. அவசரம் ஒன்னுமில்ல..’ என்று எச்சரித்து வாய் மூடுவதற்குள் எதிரில் கண்மூடித்தனமாக வந்த லாரியொன்றிலிருந்து தப்பிக்க ஓட்டுனர் தன் முழு பலத்தையும் உபயோகித்து வாகனத்தைத் திருப்ப சாலையோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
பின் சீட்டிலிருந்த லதாவும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக லேசான சிறாய்ப்புகளுடன் தப்பினர்.
ஓட்டுனர் படுகாயமடைய அவருக்கருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரேமுக்கு முன் கண்ணாடி சுக்குள் நூறாக உடைந்து தெறித்ததில் முகத்தில் ஐந்தாறு இடங்களில் கீறல்.. சில சற்று ஆழமாகவே..
நல்லவேளையாக விபத்து சென்னைக்கு மிக அருகிலேயே ஏற்பட்டதால் இருவரையும் உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனையொன்றில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிந்தது.
செய்தியறிந்து ப்ரேமுடைய பெற்றோரும்.. லதாவின் பெற்றோரும் ஊரிலிருந்து ஓடி வர ப்ரேம் இரு வார மருத்துவமனை வாசத்திற்கு பிறகு வீடு திரும்பினான். ஓட்டுனரோ சிகிச்சை பலனளிக்காமல் மரித்துப் போனார்.
‘நானும் அந்த விபத்துலயே செத்துப் போயிருக்கலாம்டா.. பொழச்சி வந்து இந்தமாதிரி அவஸ்த பட வேண்டியிருக்காதுல்லே..’ என்ற என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..
‘அந்த ஆக்சிடெண்டுலயா ஒன் மொகம் இப்படியாயிருச்சி?’ என்றேன்.
‘இல்லடா.. ஒரு அஞ்சாறு வடு மட்டுந்தான் இருந்தது. அதுல ரெண்டு மூஞ்சிக்கு குறுக்கே கொஞ்சம் நீளமா.. ஆனா இதுல லதாவுக்கு என்னவோ நிம்மதியாருந்தா மாதிரி.. எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்குமே அவளோட அந்த ஒரு மாதிரி கவலைப்படாத குணம் அதிர்ச்சியாருந்தது. ஆனா நா அத பொருட்படுத்தல.. எப்படியோ அவளோட நச்சரிப்புலருந்து விடுதல கிடைச்சிதேன்னு நினைச்சேன்..’ என்று நிறுத்திய ப்ரேம் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க, ‘என்னடா இது நீ பாட்டுக்கு ஊதி தள்ளிக்கிட்டே இருக்கே.. முந்தியெல்லாம் நீ இவ்வளவு குடிக்க மாட்டியே?’ என்றேன்.
ஆனால் அவன் அதைக் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான்.
‘ஆனா என் குழந்தையே என் முகத்த பார்த்து பயந்து அலற ஆரம்பிச்சப்போதான் வீட்ல மறுபடியும் பிரச்சினை வந்தது ஜோசப். லதா ஒரு நாள் ‘என்னங்க நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க இந்த மூஞ்சோட பிள்ளையோட மொகத்துல விழிக்காதீங்க. இனிமே அவ தூங்கனதுக்கப்புறம் வாங்களேன்.. இல்லன்னா மூஞ்சிக்கு ஏதாச்சும் வைத்தியம் பாருங்க.. குழந்தைக்கென்ன எனக்கே ஒங்க மொகத்த பாக்க சகிக்கல.. இந்த முகத்துக்கா ஏங்கிப் போய் நின்னேன்னு நினைச்சால அருவருப்பாருக்குன்னு’ சொன்னப்போ எனக்கு நேரா போய் தற்கொல பண்ணிக்கலாம்னு கூட தோனிச்சி.. ஆனா எங்கம்மா அப்பா மொகத்துக்காக பொறுத்துக்கிட்டேன். என் ஆஃபீஸ்ல என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டருந்து எனக்கு கிடைச்ச ஆறுதல்கூட என் வீட்ல கிடைக்கலேன்னு நினைச்சப்போ பேசாம டைவர்ஸ் பண்ணிட்டா என்னன்னு கூட தோனிச்சி. ஒனக்குதான் தெரியுமே எங்க குடும்பம் HUFனு.. கல்யாணத்துக்கு நின்ன சித்தப்பா பொண்ணுங்க, அத்தை பொண்ணுங்கன்னு எதையாவது காரணம் காட்டி என் விருப்பத்த நிறைவேத்திக்கவே முடியாதுன்னு போயிருச்சி.’
‘டேய் ப்ரேம்.. லதா சொன்னா மாதிரி இதுக்கு ஏதாச்சும் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டித்தான் பாரேன்னு அப்பா சொன்னாரேன்னு நானும் போய் காட்டுனேன்.. அந்த டாக்டர் ப்ரஸ்க்ரைப் பண்ண க்ரீம வாங்கி ஒரு ரெண்டு வாரத்துக்கு தடவியிருப்பேன்.. அது எனக்கு ஒத்துக்கல போலருக்கு.. ஒரு மாசத்துக்கப்புறம்தான் இந்த ராஷஸ் வந்துது.. அதுக்கப்புறம் தோலெல்லாம் திட்டு திட்டா கருப்பா இப்பருக்கற மாதிரி...’ சொல்ல வந்ததை தொடர முடியாமல் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு சூனியத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனிடம் என்ன பேசுவதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..
‘கீறல் வடு இருந்ததுக்கே வீட்டுக்கு இருட்டனதுக்கப்புறம் வாங்கன்னு சொன்னவளாச்சே.. இனி கேக்கணுமா? அஞ்சாறு மாசம் கழிச்சி ஒரு நாள் நான் ஆஃபீஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு ஒருவாரம் கழிச்சி வரேன்.. வீடு பூட்டிக் கிடக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க ஒருத்தர் வந்து ‘சார் ஒங்க வய்ஃப் குழந்தைய தூக்கிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு போய்ட்டாங்க.. நீங்க வந்ததும் ஃபோன் பண்ணுவீங்களாம்..’என்று என்னுடைய வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டுபோனார்றா.. நா வீட்ட தொறந்து பாக்கேன்.. முன் ரூம்லயே ஒரு லெட்டர்.. இனிமே ஒங்கக் கூட என்னால வாழ முடியாது. நான் போறேன்.. என்னோட மனசுக்கு புடிச்ச ஒருத்தர் கூட, என்னோட என் குழந்தையையும் ஏத்துக்க தயாராருக்கறவரோட போரேன்.. எங்க வீட்டுக்கு தெரிய படுத்தி, என்னெ தேட முயற்சி செஞ்சீங்கன்னா.. நீங்க என்னெ கொடுமை படுத்துனதா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்னு லெட்டர்ல.. ஆனா அடுத்த நாளே நான் பொறப்பட்டு அவங்க ஊருக்கு போனேன்.. லெட்டர காட்டினேன்.. அவங்க அதிர்ச்சியில என்ன பேசறதுன்னே தெரியாம நிக்க.. நான் எங்க ஊருக்கு போய் அப்பா, அம்மாட்ட சொன்னேன்.. அப்பாவால தாங்க முடியல.. நான் ஊருக்கு திரும்பி வந்து சேர்றேன்.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு தந்திவருது.. வீட்ல சித்தப்பா, அத்தை எல்லாருமா சேர்ந்து பேசியிருக்காங்க.. அப்பாவால தாங்க முடியல.. மாசிவ் அட்டாக். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அடுத்த நாளே..' தொடர்ந்து பேச முடியாமல் சற்று நேரம் மவுனமாகிறான்.. நானும் எதிரே சாலையில் படுபிசியாய் இருந்த போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்...
எத்தனை நேரம் போனதோ அவனாகவே தொடர்கிறான். 'அதுக்கப்புறம் அம்மாவ கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டேன்.. லதா எங்க போனா, யாரோட போனா.. ஒரு விவரமும் இல்லை.. அந்த அப்பார்ட்மெண்ட்லயே எல்லாரும் கேள்விப்பட்டப்போ நம்ப முடியாம என்னையே சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. அதுல ஒருத்தர் போலீஸ்ல புகார் பண்ணி.. அவங்க வந்து என்னெ ஸ்டேஷனுக்கு கூப்ட்டுட்டு போயி.. அடுத்த நாள் பேப்ப்ரல எல்லாம் வந்து.. எங்க ஆஃபீஸ்லயே என்னெ சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க. என் மேல ஒரு தப்பும் இல்லன்னு விடற வரைக்கும் நா பட்ட அவஸ்தை இருக்கே... வார்த்தையால சொல்ல முடியாதுறா.. விஷயத்த கேள்விப்பட்டு எங்க சித்தப்பாமார்ங்கல்லாம் வந்து அம்மாவ குடும்ப மானமே என்னால காத்துல போயிருச்சிங்கறா மாதிரி பேசு, பேசுன்னு பேசி.. அந்த டென்ஷன் தாங்காம அம்மாவுக்கும் அட்டாக் வந்து ஒரு பக்கம் கை, கால் விளங்காம போயிருச்சி.. இப்ப அம்மாவும் நானுந்தான்..’
அந்த சந்திப்புக்குப் பிறகு வாரம் ஒருமுறையாவது அவனுடைய வீட்டுக்குச் செல்வதென தீர்மானித்தேன்.. ஆனால் என்னுடைய எந்த முயற்சியும் அவனை அவனுடைய சோகத்திலிருந்து விடுவிக்கவில்லை..
அதன் பிறகு நான் மீண்டும் பதவி உயர்வு பெற்று மும்பைக்கு செல்ல எங்களுடனான சந்திப்பு நின்றுபோனது....
ஐந்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் சென்னை வந்த பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்தும் ராஜிநாமா செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.. வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது அவனுடைய தாயார் இறந்த கையோடு ப்ரேம் வீட்டையும் காலி செய்துவிட்டு சென்றுவிட்டான் என்று தெரிந்தது..
நான் மும்பைக்கு செல்வதற்கு முன் அவனை ஒரு முறை சந்தித்தபோது அவன் கூறிய இந்த வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில்.. ‘என் மொகத்த பார்த்து வர்ற எந்த பொண்ணையும் கட்டறதில்லேன்னு தீர்மானமா இருந்தேனே.. ஆனா லதா என்னெ கட்டுனதே இந்த மொகத்துக்காகத்தான்னு அப்புறந்தான்டா தெரிஞ்சது.. இப்ப சொல்றேன்.. நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம்மள விரும்பற பொண்ணையில்ல.. ஏன்னா லதா மாதிரி வெறும் தோலுக்காக கட்டுறாங்களா இல்லையான்னு நம்மளால தெரிஞ்சிக்க முடியாதுல்லே..’
சத்தியமான வார்த்தை.. அதனால் பாதிக்கப்பட்டவனாயிற்றே.. அதில் உண்மை இருக்கத்தான் செய்யும்..
நிறைவு..
முதல் பதிவு
பதிலளிநீக்குஅழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளும், விபத்துகளும் வந்துருதா?
பதிலளிநீக்குபாவங்க ப்ரேம். நெஞ்சே பதறிடுச்சு.
அழகு அழகு என்பதெல்லாம் ஒரு நொடியில் இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா! கொடுமை. இவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வேண்டுவதையும் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
பதிலளிநீக்குபொதுவாகவே புறத்தோற்றத்தினைப் பாதிக்கின்ற தோல்நோய் கொண்டவர்கள் நிலையே துன்பமானதுதான். இறைவன் அவர்கள் அனைவருக்கும் துன்பமில்லாத இன்பத்தைக் கொடுக்கட்டும்.
அழகு இத்தனை ஆபத்தானதா? புற அழகை விட உள்ளங்கள் கருத்தொருமித்தாலே கல்யாணம் கெட்டி.
பதிலளிநீக்கு//நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம்மள விரும்பற பொண்ணையில்ல.. //
பதிலளிநீக்குவள்ளி ரஜனி வசனம் உல்டாவா ?:))
அன்பின் ஐயா
பதிலளிநீக்குஉங்கள் நண்பர் சொன்னது உண்மைதான், நம்மை நேசிக்கும் பெண்ணைவிட நாம் நேசிக்கும் பெண்ணை மணம் புரிந்தால் இன்னும் இல்வாழ்க்கை சிறக்கும் , சில தருணங்களில் மட்டும் அபூர்வமாய், நம்மை நேசிக்கும் பெண்ணும் நம்மை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வாள், அப்படி ஒரு பெண் அமைந்தால் இன்னும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் என்றே நினைக்கின்றேன், இன்னும் சில மாதங்களில் நான் அதிர்ஷ்டசாலியா இல்லை துரதிர்ஷ்டசாலியா என்பது தெரிந்துவிடும்...அற்புதமாக எழுதுகின்றீர்கள் ஐயா...அட்லீஸ்ட், இந்த பாதைகளை எல்லாம் வேர்டு டாக்குமெண்டில் ஒருங்குறியில் சேமித்து வைத்திருக்கின்றீர்களானால், மொத்தமாக எனக்குக்கொடுங்கள் ஐயா, என்னால் முடிந்த அளவிற்கு அவற்றினை பதிப்பித்து, என் தோழர்களுக்கு இலவசமாக கொடுத்து அவர்களும் இந்த அற்புதமான ஆசிரியரை அறிந்துகொள்ளட்டுமே? என் ஆசான் திரு.பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களுக்கு அப்புறம், நான் மயங்கியது தங்களின் எழுத்து நடையிலே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐயா, துளசி அம்மாவின் எழுத்து நடை தனி, ஆயினும், இது கிராமிய மணம் என்றும் சொல்லமுடியாத ஒரு சுகமான ராகமாகவே தொடர்கின்றது இன்றும் என்றும் என்றென்றும் என்றே நினைக்கின்றேன்...:) துளசி அம்மாவின் பூனைக்குட்டிகளைப்பார்த்து மாதங்கள் ஆயின, விரைவில் தளத்தினை தரிசிக்க அந்த இறைவன் மனம் வைக்கட்டும் :)
ஸ்ரீஷிவ்...:)
வாங்க துளசி,
பதிலளிநீக்குஅழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளும், விபத்துகளும் வந்துருதா?//
அப்படீன்னும் சொல்லமுடியாது. நான் எத்தனையோ அழகு ஜோடிகள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். என்னவோ ப்ரேமுக்கு இப்படி நடந்துவிட்டது.
என்ன செய்வது? இதில் என்ன கொடுமை என்னவென்றால் மனிதர் எங்கிருக்கிறார் என்பதே மர்மமாக இருக்கிறது:(
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வேண்டுவதையும் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.//
ஆமாம் ராகவன். அவர் எங்கிருந்தாலும் நடந்தவற்றை மறந்துவிட்டு சந்தோஷமாக இருக்க அந்த இறைவந்தான் அருள்பாலிக்க வேண்டும்.
வாங்க ஸ்ரீஷிவ்,
பதிலளிநீக்குஇன்னும் சில மாதங்களில் நான் அதிர்ஷ்டசாலியா இல்லை துரதிர்ஷ்டசாலியா என்பது தெரிந்துவிடும்...//
அப்படியா? வாழ்த்துக்கள். உங்களுடைய நல்ல குணத்திற்கு நல்ல பெண்ணாகவே அமைவார்கள்.. நம்பிக்கையுடன் இருங்கள்.
இந்த பாதைகளை எல்லாம் வேர்டு டாக்குமெண்டில் ஒருங்குறியில் சேமித்து வைத்திருக்கின்றீர்களானால், மொத்தமாக எனக்குக்கொடுங்கள் //
இதுவரை பதிந்ததை வேண்டுமானால் தருகிறேன்.. இரண்டு நாட்கள் தாருங்கள்..
துளசி அம்மாவின் பூனைக்குட்டிகளைப்பார்த்து மாதங்கள் ஆயின, விரைவில் தளத்தினை தரிசிக்க அந்த இறைவன் மனம் வைக்கட்டும் //
ஏன்? அவர்களுடைய தளத்தினை தரிசிப்பதில் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்ன?
வாங்க மணியன்
பதிலளிநீக்குஅழகு இத்தனை ஆபத்தானதா?//
சாதாரணமா சுமாரான அழகுள்ள பெண்களுக்குத்தான் அழகான கணவர்மேல் சந்தேகம் எழும். ப்ரேம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டது ஒரு விவரிக்க முடியாத ஒரு விபரீதம் என்றே சொல்ல வேண்டும்.
புற அழகை விட உள்ளங்கள் கருத்தொருமித்தாலே கல்யாணம் கெட்டி. //
நூத்துல ஒரு வார்த்தைங்க.. அதுதான் நிரந்தரமான மகிழ்ச்சிக்கு ஆதாரம்.
வள்ளி ரஜனி வசனம் உல்டாவா ?//
வள்ளியில இப்படியொரு வசனம் வருமோ? சாதாரணமாவே உலகத்துல இப்படித்தான் சொல்வாங்க. இது ஒருதலைக் காதல் சம்பந்தப்பட்ட கருத்து. ஆனால் ப்ரேமுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தோன்றிய கருத்தாக இருக்கலாம்.
இரண்டு நாட்கள் என்ன ஐயா
பதிலளிநீக்குஒரு வாரம் கூட எடுத்துக்கொள்ளுங்கள், அந்த பதிவுகளை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என் தோழர்களின் திருமணங்களுக்கு இந்த நினைவுகளை பதிப்பித்துக்கொடுப்பதன் மூலம், ஒரு நல்ல சேவை செய்த மனதிருப்தி வரும் என்றே நினைக்கின்றேன்....உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்புகின்றேன்...:) துளசி அம்மாவின் தளம் பார்க்க சோம்பேறித்தனம் என்றே சொன்னேன் ஐயா :) இது சுறுசுறுப்பு சங்கர்லால் என்றால் அது பொறுமையின் லட்சுமி, சிவசங்கரி...:))
ஸ்ரீஷிவ்...:)