சாம்பசிவம் ஐயாவுடைய குடும்பத்தை எனக்கு சுமார் முப்பது வருடங்களாகப் பழக்கம்.
நான் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர்களுடையது.
ஒரு சுவரைப் பொதுவாக வைத்து இரண்டு பங்கங்களிலும் அமைந்திருக்கும் ஓட்டு வீடுகளில் ஒன்று அவர்களுடையது மற்றொன்று எங்களுடையது.
அவர்களுடையது சொந்த வீடு.. எங்களுடையது வாடகை.. ஆனால் அப்பா நீண்ட கால லீசில் (ஒத்தி என்பார்கள் அப்போது) எடுத்திருந்தார்..
எங்களுடைய குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழு பேர்.. அவர்களுடையதோ பத்து!
இதெல்லாம் அந்த காலத்தில் மிகவும் சகஜம்.
ஐயாவுக்கு முதல் இரண்டு பெண்கள்.. 3,4,5,6 வரிசையாக ஆண்கள்.. கடைசியில் இரண்டு பெண்கள் என எட்டு பிள்ளைகள்.
நாங்கள் அந்த வீட்டில் குடியேறியபோது முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் குடியிருந்தார்கள். மூன்றாவது மகனுக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர் சென்னையில் இருந்த ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். பட்டதாரி..
சாம்பசிவம் ஐயா ஒரு காலத்தில் முட்டை மொத்த வியாபாரியாக இருந்து நொடித்து போயிருந்தார். கேரளத்திலிருந்து ரயிலில் கூடை, கூடையாக வரவழைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தாராம். சில்லறை வியாபாரிகளின் சில்லறைத் தனத்தினால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்து குடியிருந்த ஒரு வீட்டைத் தவிர எல்லாவற்றையும் இழந்து பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கும் சூழலில் இருந்தார்.
முதல் இரு மகள்களுக்கு திருமணம் முடித்த போது செல்வாக்குடன் இருந்ததால் நல்ல செழிப்பு மிகுந்த இடத்தில் சம்பந்தம் செய்திருந்தார். ஆனால் இவர் நொடித்துபோனதுமே இரு சம்பந்திகளும் அவருடனான உறவையே துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆண்பிள்ளைகளில் மூத்தவருக்கும் (ஏகாம்பரம்) நல்ல வசதியான குடும்பத்திலிருந்துதான் பெண் எடுத்திருந்தார்கள்.
மருமகள் வீட்டிற்குள் நுழையவும் ஐயா நொடித்துப் போகவும் சரியாயிருந்திருக்கிறது.
ஐயாவின் மனைவியும் நல்லவர்தான். ஆனால் அக்கம்பக்கத்தினருடைய தூண்டுதல் அவரையும் பழியை புது மருமகள் மேல் போட வைத்தது.
மருமகள் தொட்டால் குற்றம்.. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற அவர் தொல்லைப்படுத்த வசதியான குடும்பம் என்று நினைத்து வந்திருந்த மருமகளுக்கு தனிக்குடித்தனம் போனால் என்ற தோன்ற ஆரம்பித்தது..
நாங்கள் புதிதாய் குடியேயிருந்த காலம் அது. பொழுது விடிந்தால் பொழுது போனால் தினமும் சிறிய, சிறிய காரியத்துக்கெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை, சச்சரவு என்று அடுத்த வீட்டில் இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு நடந்துக்கொண்டிருந்தது..
இரு பெண்களை அடுத்து பிறந்திருந்த நான்கு ஆண் மகன்களுக்கும் இடையில் ஒன்றிலிருந்து, ஒன்றரையாண்டு வித்தியாசம்தான், வயதில்..
வந்த மருமகளுக்கோ கணவனை விட எட்டு வயது குறைவு.. ஆக அவர் மூன்று கொழுந்தன்மார்களுக்கும் இளையவராக இருந்தார்.
ஆகவே மாமியார் மருமகள் சச்சரவில் கொழுந்தன்மார்களும் தலையிட்டு தங்களுடைய தாயார் பக்கம் சேர்ந்துக்கொள்வார்கள்.. கடைக்குட்டி தங்கைகள் இரண்டும் பள்ளிப் பருவம்.. பயந்துபோய் ஒதுங்கியிருப்பார்கள்.
இவர்களுடைய சச்சரவில் ஐயாதான் பாவம்.. நொந்துப்போவார். அந்நேரங்களில் எங்கள் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்துக்கொள்வார்.. சப்தம் ஓய்ந்து அமைதியானதும் வீட்டுக்கு திரும்புவார்.
இந்த கவலையிலேயே ஐயா ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். அன்றும் அதையொட்டி வந்த இருவாரங்களில்தான் எங்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மலர்ந்து ஒருவிதத்தில் நெருங்கிய உறவுக்காரர்களைப் போலானோம்..
ஐயா உயிருடன் இருந்த சமயத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவும் என்று நடந்தாலும் சற்று நேரத்தில் அமைதியாகிப் போவார்கள்..
ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் ஏற்படும் அமைதி என்பது பிறகுதான் புரிந்தது.
ஐயா எப்போது இறப்பார் என்று காத்திருந்ததுபோல முப்பதாம் நாள் சடங்கு கழியவும் ஏகாம்பரம் தன்னுடைய மனைவியின் வற்புறுத்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தனிக்குடித்தனம் போவதென தீர்மானித்தார்.
வீட்டுக்கு தெரியாமலே மும்முரமாக வீடு தேடும் படலத்தில் இறங்கினார்.. அவருடைய வீட்டுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு என் நண்பன் ஒருவனுடைய வழியாக தெரிந்துவிட்டது.
ஆனாலும் நமக்கேன் வம்பு என்று நான் இருந்துவிட்டேன். என் தாயாரிடம் கூட கூறவில்லை.
ஏகாம்பரம் வீட்டை ஏற்பாடு செய்தபோதும் தன் தாயிடம் அறிவிக்காமல் சாமான்களை ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்த வாகனத்துடன் வீட்டில் வந்து இறங்கியபோதுதான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..
பிறகென்ன.. ஒரே களேபரம்தான்.
கடைக்குட்டி பெண்கள் இரண்டுக்கும் முன்னரே ஏகாம்பரத்தின் மூன்று தம்பிகளும் அவரை வசைமாரி பொழிய மனிதர் ஆடிப்போய்விட்டார்.
இருப்பினும் தன்னுடைய முடிவில் உறுதியாய் நிற்கவே, அவருக்கு அடுத்தவர், ‘டேய்.. போறேன்னு முடிவு பண்ணதுலகூட எனக்கு வருத்தமில்ல.. ஆனா மாசம் முழுசும் பேசாம இருந்துட்டு இப்ப சம்பள தேதி அன்னைக்கி இப்படி எங்கள அம்போன்னு விட்டுட்டு போறியே இத என்னால மன்னிக்கவே முடியாது. எனக்கு வேல கெடச்சி கன்ஃபர்ம் கூட ஆகல.. என் ஒருத்தன் சம்பளத்துல நான் இந்த குடும்பத்த மேனேஜ் பண்ணணும். தங்கச்சிங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சி கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. இவ்வளவு இருக்கறப்ப ஒனக்கு எப்படிறா அண்ணிய கூட்டிக்கிட்டு போக மனசு வந்தது?’ என்று சரமாரியாக கேட்டும் ஏகாம்பரம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை..
ஏகாம்பரத்தின் அம்மாவிற்கோ மனசு ஆறவில்லை.. ‘டேய் வேண்டாம்.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு போறே.. போ.. நீ என்ன ஆவப்போறேன்னு பாக்கத்தான போறேன்..’ என்று வாயில் வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஏகாம்பரம் அசரவில்லை.. தன்னுடைய மாமனார் சீதனமாக கொடுத்திருந்த சாமான்களை ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்துவதிலேயே குறியாயிருந்தார்.
இறுதியில் அவருடைய தாய், ‘டேய்.. நாளை இல்லன்னா மராநாள் இங்க வந்து நின்னு என் பெஞ்சாதிக்கு பிரசவம்மா.. நீங்க வந்து பாக்கணும்னு வந்து நின்ன.. அப்புறம் தெரியும் சேதி..’ என்றார் ஆவேசத்துடன்..
ஏகாம்பரத்திற்கு என்ன தோன்றியதோ, ‘காச தூக்கிப் போட்டா நாலு களுத வந்து பிரசவம் பார்த்துட்டு போது.. இதுக்குன்னு போயி இங்க வந்து நிக்கப் போறனாக்கும்.. நீங்க வந்து அங்க நிக்காமருந்தா போறாது.. நீ வாடி...’ என்று தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போயே போய்விட்டார்..
அன்று ஏற்பட்ட விரிசல்தான்.. இரு குடும்பமும் ஒரே ஊரில் இருந்தும் பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக சமாதானமே இல்லாமல் இருந்தது..
இதற்கிடையில் நானும் என்னுடைய பதவி உயர்வு மற்றும் ஊர் மாற்றம் காரணமாக சென்னையை விட்டு செல்ல அக்குடும்பத்துடனான நட்பு என்னைப் பொறுத்தவரை நின்றுபோனது. ஆனால் என்னுடைய தாயார் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் எனக்கு எழுதும் எல்லா கடிதத்திலும் அந்த குடும்பத்தைப் பற்றி எழுதாமல் இருந்ததே இல்லை..
ஏகாம்பரத்தின் அடுத்த சகோதரர் குமார் குடும்பத்தின் முழு பொறுப்பையும் தன் தோள்மேல் சுமந்துக் கொண்டது, அவர்கள் இருந்த வீட்டிலேயே மேலும் இரு குடித்தனக்காரர்களை வைத்து அதில் வந்த வாடகைப் பணத்துடன் தன்னுடைய ஊதியத்தையும் சேர்த்து அதில் திறம்பட குடும்பத்தையும் நடத்தி தனக்கு அடுத்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களுக்கும் படிப்பு முடிந்தவுடன் வேலை வாங்கிக் கொடுத்தது.. என அக்குடும்பத்தில் நடந்த எல்லாவற்றையும் எனக்கு தவறாமல் எழுதுவார்கள்..
அடுத்த சில ஆண்டுகளில் எங்களுடைய குடும்பமும் அந்த வீட்டிலிருந்து குடிபெயர்ந்து பெரம்பூர் பகுதிக்கு சென்றுவிட அக்குடும்பத்துடனான தொடர்பு அறவே நின்றுப்போனது.
நான் தஞ்சையில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் ஏகாம்பரத்தின் தாயார் இறந்துவிட்டதாக என்னுடைய தாயார் மூலமாக செய்தி வந்தது. என்னால் செல்ல இயலவில்லை..
இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த என்னுடைய தாயார் வழியாக கடந்த பத்தாண்டுகளில் அக்குடும்பத்தில் நடந்தவைகளைப் பற்றிய செய்தி எனக்கு கிடைத்தது.
‘குமாரும் சரி அவனோட தம்பிகளும் சரி இன்னவரைக்கும் கல்யாணமே செஞ்சிக்கலடா.. தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் முடிச்சதுமே நல்ல எடத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டான் குமார்.. இப்ப மூனு பேர் மட்டும் தனியா பொங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்க.. வீட்ட இடிச்சி பெரிசா கட்டியிருக்கானுங்க.. ரெண்டு அக்காமார் இருந்தும் அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் தோனல பாரேன்.. என்ன பண்றது? எல்லாம் தலையெழுத்து.' என்று என் தாய் எழுதியிருந்தபோது மனசு லேசாக வலித்தது..
தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை என்று சுற்றிவிட்டு 1987ல் சென்னை வந்து சேர்ந்தபோது.. என் தந்தை எங்களுக்கு கோடம்பாக்கம் அசோக் நகரில் வீடு அமைத்துக் கொடுத்திருந்தார். அங்கு குடியேறி ஒரு வாரம் இருக்கும்.. நானும் என் மனைவியும் வடபழனி மார்க்கெட்டில் வைத்து ஏகாம்பரத்தையும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்தோம்..
அவர் சற்று தளர்ந்துபோயிருந்தார்.. ஆனால் அண்ணி (நானும் அவரை அண்ணி என்று அழைத்து பழகிப்போயிருந்தேன்) செழிப்பாக இருந்தார்கள்.. அவர்களைப் பார்த்தால் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பது தெரிந்தது.. இரண்டு மகன், இரண்டு மகள்கள்.. பிள்ளைகள் நால்வருமே அம்சமாக, அழகாக ஒரு வசதிபடைத்த குடும்பத்து பிள்ளைகள் போலிருந்தனர்...
இரண்டு ஆண்பிள்ளைகளில் மூத்தவன் சென்னையில் சிறந்த பள்ளிகள் ஒன்றான எக்மோர் டான்போஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் சுமாராயிருந்த அடுத்தவன் மைலாப்பூர் செயிண்ட் பீட்ஸ்.. பெண் பிள்ளைகள் இருவரும் சர்ச் பார்க் கான்வெண்டில் என்று பெருமையுடன் அண்ணி கூறியபோது எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பெண் பிள்ளைகள் இருவரும் 'கோடம்பாக்கம் பாத்திமாவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றேன்..
அலட்சியத்துடன் அது காதில் வாங்காமல் ஏகாம்பரம் அண்ணா நின்றிருந்தார். அண்ணியோ ‘ஏன் சூசை.. அது அவ்வளவு நல்ல ஸ்கூல் இல்லையே.. சர்ச் பார்க்ல சேர்த்திருக்கக் கூடாது?’ என்றபோது எப்போதும் அமைதியுடன் இருக்கும் என் மனைவிக்கே கோபம் வந்தது.. நான் கண்சாடைக் காட்டி அவரை அமைதிப் படுத்திவிட்டு.. ஏகாம்பரம் அண்ணாவிடம், ‘அண்ணே.. அண்ணி என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு புரியுது.. இருந்தாலும் என் சக்திக்குட்பட்டுதான என்னால செய்ய முடியும்? என்னவோ நல்லாருக்கீங்கல்லே.. அதுபோறும்..’ என்றேன்.. அவரோ நான் கூறியதை சட்டை செய்யாமல் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.
அதற்குப்பிறகு அவரை மீண்டும் நான் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு..
மனிதர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்..
என்னைக் கண்டதும் அதுவரையில்லாத பாசத்துடன் உரையாடினார்..
அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது..
என்னுடைய மனதில் ‘இவருக்கு வேணும்’ என்ற சந்தோஷமும் இருந்தது..
இருந்தாலும் இப்படியொரு நிலை இவருக்கு வந்திருக்க வேண்டாம் என்ற வேதனையும் இருந்தது.
நாளை நிறைவுபெறும்..
// நாளை நிறைவுபெறும்.. //
பதிலளிநீக்குநாளைக்குக் கொக்கி இருக்காதே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது
:-)))
வாங்க லதா,
பதிலளிநீக்குநாளைக்குக் கொக்கி இருக்காதே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது//
அவ்வளவு ஈசியா தப்பிச்சிருவீங்களா என்ன? தொடர்தான் வராது.. ஆனா அப்பப்போ வந்து கொக்கி போட்டுக்கிட்டுத்தான் இருப்பேன்:)