07 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 6

என்னுடைய திருமணம் தூத்துக்குடியில் நடந்தது. திருமணம் முடிந்து சென்னையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

என்னுடைய வங்கி நண்பர்களுக்கென தனியாக ஒரு விருந்து கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில் எனக்கு மிகவும் நெருக்கமாயும் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய அலுவலக மற்றும் வெளியிலுள்ள நண்பர்களை மட்டும் என்னுடைய உறவினர்களுடன் சேர்த்து வரவேற்புக்கு அழைத்திருந்தேன்.

அவர்களுள் ஒரு ஜோடிதான் பிரேம் மற்றும் லதா தம்பதியினர். அவர்களுக்கும் திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது.

நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்தான். என்றாலும் கேரள மாநிலத்திற்கே உரிய கலரில் சினிமா கதாநாயகன், கதாநாயகி போலிருந்ததை வரவேற்புக்கு வந்திருந்த அனைவருமே கவனித்தனர்.

மேடையிலிருந்த திருமண ஜோடியைவிட விருந்தினர் வரிசையிலிருந்த இவர்கள்தான் எல்லோரையும் கவர்ந்தனர் என்றால் மிகையாகாது.

நான் வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேருவதற்கு முன் சென்னையில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியிருந்தேன். அவற்றுள் ஒன்றில் எனக்கு அறிமுகமாகி நாளடைவில் நெருங்கிய நண்பரானவர் பிரேம். தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத்தைச் சார்ந்தவர்.

நானும் அவரும் சேர்ந்து சாலையில் செல்லும் நேரத்தில் அவர் மீது படாத இளம் கண்களே இல்லையெனலாம். அவ்வளவு அம்சமாக, செக்கச் செவேலென்ற கலரில் அப்போதிருந்த சிவக்குமாரைப் போல் இருப்பார்.

‘தோடா ப்ளாக் அண்ட் ஒய்ட் ஜோடி’ என என்னையும் அவரையும் சேர்த்து சிலர் கமெண்ட் அடித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

அவரை கணவராக அடையும் பெண் நிச்சயம் அவரை சந்தேகித்தே தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார் என்று  எங்களுடைய நண்பர்களுடைய வட்டத்தில் அப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. அத்தனை பெண் விசிறிகள் இருந்தனர்.

ஆனாலும் ப்ரேம் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளவே மாட்டார். ‘டேய் ஜோசப் இதெல்லாம் வெறும் தோல்டா. இதுக்கு மட்டும் ஆசைப்பட்டு வர எந்த பொண்ணையும் நா ஏறெடுத்துக்கூட பாக்க மாட்டேன்.. எங்க வீட்ல பாத்து வைக்கற பொண்ணத்தான் கட்டிக்குவேன்.’ என்பான்.
அப்படித்தான் நடக்கவும் செய்தது.

நானும் அவனும் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை நிரந்தரமாகவில்லை. இரண்டு வருடங்கள் அப்ரெண்டிஸ் கணக்கராக வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ‘டேய் நீ மட்டும் இந்துவாருந்திருந்தா ஒன்னையும் கன்ஃபர்ம் செஞ்சிருப்பாங்களாம். நம்ம செக்ஷன் ஹெட் இன்னொருத்தர் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார். எனக்கு ச்சேன்னு யிருச்சி.. நானும் பேசாம இந்த வேலைய விட்டுட்டு உங்கூடவே வேற வேலைய தேடிக்கலாம்னு பாக்கேன்.’ என்றான் நான் வேலையிலிருந்த இறுதிநாளன்று.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் கத்தோலிக்க கிறிஸ்துவனாயிருந்தது என்னுடைய தவறா என்ன? இரண்டு வருடங்கள் மாடு மாதிரி உழைத்தேனே? என்றெல்லாம் எண்ணி மருகினேன். இருப்பினும் என்னுடைய நண்பனிடம், ‘டேய்.. எனக்காக நீ வேலைய விடறதா? எனக்கு வேற வேலை கிடைக்காம போகாதுறா.. நீ வேணா பாத்துக்கிட்டேயிரு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்கு இத விட நல்ல வேலையா கிடைக்கும். அதுக்குத்தான் இந்த வேலையோ போச்சோ என்னவோ? நான் இந்த ஆஃபீச விட்டுப் போனாலும் நம்ம நட்பு தொடரணும்..’ என்று சமாதானப்படுத்தினேன் என் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு.

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவைத் திறப்பார் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை இருந்தது.

அதே போல் ஒரே மாதத்தில் இப்போது நான் பணியாற்றும் வங்கியில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது.

நாங்கள் இருவருமே சென்னையில் இருந்ததால் எங்களுடைய நட்பு தடையில்லாமல் தொடர்ந்தது. மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திக்காமல் இருந்ததில்லை.

எனக்கு திருமணமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்  அவருடைய திருமணம் அவர் கூறியிருந்தபடியே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அவருடைய சொந்த ஊரில் நடந்தது. அவருக்கு பெண் கொடுக்க நீ, நான் என்று அவருடைய தாய் மற்றும் தந்தை வீட்டு உறவினர்கள் முயற்சித்தும் இரண்டு வீடுகளுக்கும் உறவு இல்லாத ஒரு குடும்பத்தில்தான் அவருக்கு பெண் அமைந்தது.

பெண் பார்ப்பதற்கு என் நண்பரை விட நல்ல கலரும், லட்சணமும் கொண்டவராய் இருந்தது அவருடைய பெற்றோரை விட என்னைப் போன்ற நண்பர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில் எங்கள் இருவருடைய நண்பர்கள் வட்டத்திலும் ப்ரேமுக்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதில் ஒரு விவாதமே நடந்திருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவருமே எதிர்பாராத அழகுடன் பெண் அமைந்தது எல்லோருக்கும் பரம திருப்தி. ‘டேய் ப்ரேம் நீ எங்கள மாதிரி எந்த பொண்ணுங்க பின்னாலயும் போகாம, யார் வலையிலயும் விழாம அப்பா, அம்மா பார்த்து வச்ச பொண்ணையே கட்டுன பாரு.. நீ உண்மையிலயே க்ரேட்தாண்டா..’ என்று நண்பர்கள் சிலர் திருமணத்தன்று பாராட்டியபோது, ‘டேய் பசங்களா போறும் நீங்களே கண்ணு வச்சிராதீங்க.’ என்று அவருடைய தாயார் எங்களை அடக்கியது இப்போதும் நினைவில் நிற்கிறது..

அவர் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும்..

சாரி.. நல்லது நடந்தாத்தான் இப்படி சொல்வார்கள் இல்லையா?

நடந்தது நல்லதல்லவே..

ஆனால் அவர் அன்று சொன்னது சரிதான் போலிருக்கிறது என்பதை சில வருடங்கள் கழித்து நான் அவனை மீண்டும் இதே சென்னையில் சந்தித்தபோதுதான் தெரிந்தது.

நான் மேலாளராக பதவி உயர்வு பெற்று பல இடங்களுக்கும் சென்று சென்னைக்கு மீண்டும் திரும்பியபோது சுமார் ஐந்தாறு வருடங்கள் கடந்திருந்தன.

சென்னையிலிருந்து மாற்றலாகிச் சென்றபோதும் என்னையும் என் மனையையும் வழியனுப்ப என் உறவினர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப்ரேமும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே ரயில் நிலையம் வந்திருந்தனர்.

அதன் பிறகு முதல் வருடத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மாதம் ஒருமுறையாவது கடிதம் எழுதிக்கொள்வோம். அது மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை என்று நீண்டு நாளடைவில் நின்றுபோனது.

நான் மதுரையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றலானபோது ப்ரேமின் நினைவு மீண்டும் வர என்னிடமிருந்த அவனுடைய கடைசி விலாசத்திற்கு கடிதம் எழுதி சென்னை வந்ததும் அவனை வந்து சந்திப்பதாக அறிவித்தேன். ஆனால் நான் சென்னைக்கு புறப்படும் வரை அவனிடமிருந்து பதிலே வரவில்லை.

இருப்பினும் நான் அதை பெரிதுபடுத்தாமல் சென்னை வந்து சேர்ந்தபின் ஒரு வாரம் கழித்து அவனுடைய அலுவலகத்திற்கு சென்றேன். வரவேற்பறையிலிருந்த ரிசெப்ஷனிஸ்ட்டிடம் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்பிய பத்து நிமிடத்தில் என் எதிரே வந்து நின்ற ப்ரேமைக் கண்டு பேச்சற்று போய் அவனையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னடா ப்ரேம்.. இது என்ன கோலம்?’ என்று நான் அதிர்ச்சியில் சற்று உரக்கவே கேட்டுவிட்டேன் போலிருக்கிறது.. தன்னுடைய பணியில் ஆழ்ந்திருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண் என்னை முறைத்தார்.

ப்ரேம் ஒரு வரட்டுப் புன்னகையுடன், ‘எப்படிறா இருக்கே.. பாத்து எவ்வளவு நாளாச்சி.. வா வெளிய போய் பேசலாம்.’ என்றவாறு என் முன்னே நடக்க நான் மாறாத அதிர்ச்சியுடன் அவன் பின்னே சென்றேன்.

அவனுடைய அலுவலக காண்டீனை நோக்கி அவன் நடக்க நான் அவனை பிந்தொடர்ந்தேன்.

காலியாய் கிடந்த கான்டீன் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஒக்கார்றா.. நீ என்ன கேக்க வரேன்னு புரியுது.. சொல்றேன்.. அதுக்கு முன்னால நீ எப்படி இருக்கே.. அதச் சொல்லு.. என் கதை பெரிய கதை.. ஆரம்பிச்சா ரெண்டு நாளைக்கு சொல்லலாம்..’ என்றான்..

அவனுடைய குரலில் இருந்தது கேலியா இல்லை சுயபச்சாதாபமா என்று எனக்கு விளங்கவில்லை.

அவனுக்கெதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னைப் பற்றிய விவரத்தை சுருக்கமாகக் கூறி முடித்தேன். ‘ரெண்டு பொண்ணுங்க ப்ரேம்.. மூத்தவ மூனாவது படிக்கிறா.. சின்னத இனிமேத்தான் சேக்கணும்.. தூத்துக்குடியில சின்னதா ஒரு வீட்டைக் கட்டி முடிச்சதுதான் இந்த அஞ்சு வருசத்துல நான் செஞ்ச பெரிய சாதனை.. இப்ப சொல்லு என்ன இது கோலம்? ஒன் மொகத்துக்கு என்ன ஆச்சி....நீ இருந்த இருப்பு என்ன? என்ன கோலம்டா இது?’

மன்மதன் மாதிரி இருந்த அவனுடைய முகம் முழுவதும் ஸ்கின் கேன்சர் என்பார்களே அப்படியிருந்தது, முடிச்சு முடிச்சாக. காது மடல்களிலும் மூக்கின் தண்டு மீது, நெற்றியில் என.. தோலும் கருத்துப் போய்.. தலை நிறைய சுருள், சுருளாக அடர்த்தியாக இருந்த அவனுடைய முடி போன இடமே தெரியாமல் பாதி வழுக்கையாய்.. முப்பது, முப்பத்தைந்து வயதில் அரை கிழவனாக..

‘சொல்றா லதா எப்படி இருக்காங்க? பிள்ளைங்க எத்தன பேர்?’ என்றெல்லாம் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் அவன் கையிலிருந்த சிகரெட் விரல் நுனியை சுடுகிறது என்ற நினைவும் இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்த எனக்கு அதை கேட்க துணிவில்லாமல்...

சிறிது நேரம் கழித்து சிகரெட்டை அணைத்துவிட்டு மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி என்னுடைய கரங்களைப் பற்றியவாறு, ‘லதா இப்ப எங்கூட இல்லடா.. போய்ட்டா.’ என்றான் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.. ‘சிம்பிளா சொல்லணும்னா ஓடிப்போய்ட்டாடா.. என் குழந்தையையும் தூக்கிக்கிட்டு..’

நாளை நிறைவு பெறும்..




3 கருத்துகள்:

  1. மனதைக் கனமாக்கி விட்டது இந்தப் பதிவு. "இளமை நில்லாது யாக்கையோ நிலையாது" என்பது எவ்வளவு உண்மை. முருகா! நீயே துணை.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    ஒன்னு கவனிச்சீங்களா? நல்லவங்களுக்குத்தான் இந்த மாதிரி சோதனைகளெல்லாம் வருது.. அதான் ஏன்னு புரியல..

    பதிலளிநீக்கு
  3. // tbr.joseph said...

    வாங்க ராகவன்,

    ஒன்னு கவனிச்சீங்களா? நல்லவங்களுக்குத்தான் இந்த மாதிரி சோதனைகளெல்லாம் வருது.. அதான் ஏன்னு புரியல.. //

    நல்லவங்களுக்குச் சோதனை வர்ரது சரி...ஆனா சோதனை வர்ரவங்கள்ளாம் நல்லவங்கன்னு சொல்ல முடியுமா! :-)))))

    பதிலளிநீக்கு