15 ஜனவரி 2006

பிரியாவிடை - தாற்காலிகமாக!

என் அன்பு தமிழ்மண - நந்தவன நண்பர்களுக்கு,

இது என்னுடைய நூறாவது பதிவு!

கடந்த ஒரு வார காலத்தில் உங்களுடன் நட்சத்திர அந்தஸ்த்துடன்(!) என்னுடைய எளிய படைப்புகளை பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்த நிர்வாகி திரு. காசி மற்றும் அவருக்கு உறுதுணையாய் நின்று இத்திரட்டியைத் திறம்பட நடத்திவரும் திரட்டியின் அனைத்து அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

தமிழ்மண விலாசத்தில் நட்சத்திரமாக இவ்வாரத்தைத் துவங்கி நந்தவன விலாசத்தில் நட்சத்திரமாக முடிப்பது ஒரு அபூர்வ அனுபவம்தான்.

தற்செயலாக நடந்த விஷயம் என்றாலும்.. இதில் எனக்கு எந்தவித பங்கும் இல்லையென்றாலும்.. I feel strangely honoured!

கடந்த வாரத்தில் நான் எழுதிய பதிவுகளையும் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களையும் குறித்து ஆலோசித்தேன்.

Image hosted by Photobucket.com

பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஒரு இடுகையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இத்தனைக் குறைவான பின்னூட்டங்களைப் பெற்ற நட்சத்திர வலைப்பதிவாளர் நானாகத்தானிருக்க வேண்டும்!!

ஒருவேளை நான் தமிழ்மணத்தில் அங்கத்தினராகி மூன்று, நான்கு மாதங்களே ஆகியுள்ளன என்பதுதான் காரணமோ.. தெரியவில்லை.

இதென்ன அத்தனைப் பெரிய பிரச்சினையா? இல்லைதான்.

பிறகெதற்க்கு இந்த புள்ளி விவரங்களைத் தருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

ஏதோ தோன்றியது.. தந்திருக்கிறேன்.. இத்தனைக் குறைந்த எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் பெற்றதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

ஒன்றும் புலப்படவில்லை..

ஆனால் என்னுடைய எல்லா நட்சத்திர இடுகைகளையும் வாசித்து அறிவார்ந்த பின்னூட்டங்களை இட்டு எனக்கு ஆதரவளித்தவர்களுள் முக்கியமானவர்கள் இருவர்.. ஒன்று துளசி, மற்றவர் கோ.ராகவன்.

இருவருக்கும் என் மனமார்ந்த, உள்ளார்ந்த நன்றி..

என்னுடைய பெரும்பாலான நட்சத்திர இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இட்டவர் டி.ராஜ் மற்றும் ஜோ. இவர்களுக்கும் என் நன்றிகள்.. என்னுடைய சில இடுகைகளுக்காவது பின்னூட்டம் இட்ட மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

இவ்வாரத்தில் என் பதிவை தேசிபண்டிட் இணைய தளத்திற்கு அறிமுகப்படுத்திய பிரேமலதாவுக்கும் நன்றி.

நான் ஒரு வலைப்பதிவைத் துவக்கி எழுதத் துவங்கியதே ஒரு பொழுதுபோக்காகவும், என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும்தான்..

ஆனால் என் பதிவையும் வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்களே என்பதையறிந்தபோது ஒரு சந்தோஷம் மனதில் தோன்ற தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

நான் என் அலுவலக வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களையும், சிக்கல்களையும் அதை நான் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றேன் என்பதையும் எழுதுவதன் மூலம் அது மற்றவர்க்கு, முக்கியமாய் இளைஞர்களுக்கு உதவியாயிருக்கக் கூடும் என்பதாலேயே 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தொடரை எழுத ஆரம்பித்தேன். இதுவரை அது தொடர்ந்து தமிழ்மண பதிவாளர்களைக் கவர்ந்திருக்கிறது என்று நினைத்துத்தான் தொடர்ந்து எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்..

பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் என் பாதையை விட்டு நிச்சயம் விலக மாட்டேன். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குறை சொல்லியோ அல்லது இல்லாத ஒரு எதிரியைக் கற்பனை செய்துக் கொண்டோ அதையே திருப்பி, திருப்பி எழுதி ஒரு சர்ச்சையை எழுப்பும் வகையில் நிச்சயம் எழுத மாட்டேன்.

நான் எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டங்கள் வரவில்லையென்றாலும் நட்சத்திர வாரத்தில் சராசரியாக 150 பேர் என்னுடைய பதிவிற்கு வரவு தந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன்..

என் பதிவிற்கு வருகை தந்த எல்லா தமிழ்மண பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கூறி நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்..

உங்கள் அன்புள்ள,
டிபிஆர். ஜோசஃப்

13 ஜனவரி 2006

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

டேய்.. போலீஸ்காரன் மேலயே கைய வைக்கிறியா? நடறா ஸ்டேஷனுக்கு.. அங்க போயி முட்டிக்கி முட்டி தட்டினாத்தான் புத்தி வரும்.. நடறா..

கவு: (சுற்றிலும் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்க்கிறார்) பார்றா இந்த அநியாயத்த.. இவர் மேல போயி நான்  கை வச்சிட்டேனாம்.. ஏங்க இது உங்களுகே நியாயமா இருக்கா? சொல்லுங்க.. நான் உங்கள தூக்கிவிடலன்னா அந்த பன்னித் தலையன் மேலயே உருண்டுக்கிட்டிருக்க வேண்டியதுதான்.. ஏதோ நம்ம தமிள் நாட்டு போலீசாச்சே.. மானம் போயிரக் கூடாதுன்னு தூக்கி விட்டா.. அதுக்கு போயி ஸ்டேஷனுக்கு வா மேஷனுக்கு வான்னு.. ஏன் சார் போலீஸ், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..

செந்: (மீண்டும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்) ஏண்ணே.. உங்களுக்கு இது தேவையா.. சார் எத்தன சீனியர் போலீஸ் தெரியுமா? அவர் மேல போயி கை வச்சிட்டீங்களேண்ணே.. டூ பேட்.. டூ பேட்..

கவு: டேய் என்ன நக்கலா? போலீஸ் இருக்காரேன்னு பாக்கறேன்.. ஆமா இப்போ என்னமோ பேட்டுன்னு சொன்னியே.. என்னாடா?..

செந்: (அலட்சியத்துடன்) அது இங்கிலீஸ்னே.. அதெல்லாம் ஒங்களுக்கு புரியாது.. அப்படீன்னா.. ரொம்ப மோசம்னு அர்த்தம்..

கவு: இப்ப என்னடா மோசத்த கண்டுட்டே..

செந்: பின்னே.. சாரை தொட்டு அடிச்சிருக்கீங்க.. சும்மாவா.. அதுவும் சார் யாரு? தமிழ்நாட்டு காவல் படை.. அதுவும் இத்தன பேருக்கு முன்னால.. போலீசா.. கொக்கா.? என்னய்யா பாத்துக்கிட்டு சும்மா இருக்கீங்க.. சொல்லுங்கய்யா.. இவரு அவர அடிச்சாரா இல்லையா.. நீங்கதான் பாத்துக்கிட்டிருக்கீங்கல்லே.. சொல்லுங்க..

கவு: (கூட்டத்தைப் பார்த்து) ஆமாய்யா.. சொல்லுங்க.. நீங்கதான்யா சாட்சி.. நானாய்யா இவர அடிச்சேன்? சொல்லுங்கய்யா.. யாராச்சும் ஒரு ஆள் சாட்சி சொல்லுங்கய்யா..

கூட்டத்தில் ஒருவர்: அட போங்கய்யா.. சாட்சி சொல்லிட்டு அப்புறம் அவரு கூப்டற எடத்துக்கெல்லாம் யார் அலையறது? நீங்க ஜெயிலுக்கு போனா என்ன.. போவாட்டி என்ன.. நம்ம சோலிய பாக்கறத விட்டுப்புட்டு.. போய்யா நீயும்.. உன்.. (அவர் விருட்டென்று போக.. கூட்டத்திலிருந்த அனைவரும் கலைந்து செல்கின்றனர்.. செந்தில், க.மணி, காவற்காரர் மட்டும் நிற்கின்றனர்..)

காவல்: டேய் நடங்கடா.. உங்க ரெண்டு பேரையும் நியூசன்ஸ் கேஸ்ல புக் பண்ணிருக்கேன்.. ஊம், நடங்க..

கவு: என்னா கேசுங்கோ போலீஸ்.. ஏன் தமிள்ல சொல்ல மாட்டீங்களோ?

செந்: (தலையிலடித்துக் கொள்கிறார்) அண்ணே.. நியூசன்ஸ்னா சந்தேகக் கேஸ்னு அர்த்தம்.. இது கூட தெரியாம.. அதுக்குத்தான் நாலெழுத்து படிச்சிருக்கணுங்கறது.. இப்ப பாருங்க.. (கா.காரிடம்) ஏங்க ஏட்டய்யா, எங்க மேல என்ன சந்தேகம்னு கேஸ் போடப் போறேங்கறீங்க? சொல்லுங்க.. கொலை பண்ணமா, கஞ்சா வச்சிருந்தோமா.. என்னன்னு சந்தேகப் படறீங்க? சொல்லுங்க. சொன்னாத்தானே வக்கீல் வச்சி வாதாட முடியும்? (க.மணியைப் பார்த்து பெருமையுடன் சிரிக்கிறார்) எப்படிண்ணே?

கவு: டேய் வேணாண்டா.. கொலைங்கற, கஞ்சாங்கற. அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ.. நீயா ஏதாச்சும் ஐடியா கொடுத்து என்ன வம்புல மாட்டி விட்டுராதடா.. (கா.காரரிடம் கெஞ்சுகிறார்) ஐயா போலீஸ்.. நா புள்ளக் குட்டி காரங்க.. இந்த சொறியன் தான்யா வாடா கோயம்பேடு மார்க்கட்ல இளிச்ச வாயங்க நெறைய பேர் இருப்பாய்ங்க.. ஏதாச்சும் கோல்மால் பண்ணி இன்னைக்கி சாப்பாட்டுக்கு வேண்டியத சம்பாதிச்சிக்கலாம்னு கூட்டியாந்தான். வந்த எடத்துல ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் குளப்பி என்னத்தையோ சொல்லப் போக நா கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்யா..

செந்: (கவு.மணியை நெருங்கி ரகசிய குரலில்) அண்ணே சும்மாயிருங்கண்ணே.. இவர் கிட்ட போயி கெஞ்சிக்கிட்டு.. இவரால என்ன பண்ணிரமுடியும்னு இப்படி கெஞ்சறீங்க.. இவர் சாதாரண போலீஸ்ணே.. சும்மா மார்க்கெட்ல ரோந்து போய்ட்டு வாயான்னு ஸ்டேஷன்லருந்து அனுப்பிருப்பாங்க.. ஒரு அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா அள்ளிக்கிட்டு போயிருவாரு.. இப்ப பாருங்க..
(சட்டைப் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு கா.காரரிடம் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.) அய்யா.. இந்தாங்க சீக்கிரம் யாரும் பாக்கறதுக்குள்ள எடுத்துக்குங்க..

(கா.காரர் தன் கையிலிருந்த லட்டியால் ஓங்கி செந்திலின் விரல்களில் அடிக்கிறார்.)

(செந்தில் அடியின் வீரியத்தில் துடிதுடித்துப் போய் கையை வாயில் வைத்துக் கொண்டு சூப்புகிறார்)

காவல்: டேய் உங்கள் எந்த கேசுல புக் பண்றதுன்னு தெரியாமத்தான் பப்ளிக் நியூசென்ஸ் - அதாவது பொது இடத்தில் இடைஞ்சல்  - கேஸ்ல புக் பண்லாம்னு பார்த்தேன். இப்ப ஒரு அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம்கற கேசையும் போட்டுடறேன்.. ரெண்டுபேரும் நடங்கடா..

(இரண்டு பேர் முதுகிலும் கையை வைத்து தள்ளிக்கொண்டு போகிறார்)

கவு: டேய்.. நாரவாயா.. இது ஒனக்கே அடுக்குமாடா.. சும்மா வீட்ல இருந்தவன இங்க கூட்டியாந்து.. ஒன்னுத்துக்கும் உதவாத பிரச்சினைய பண்ணி.. பெருசா இங்கிலீஷ் தெரியும்னு.. அவர் ஒன்னு சொல்ல நீ ஒன்னு நினைச்சிக்கிட்டு.. இப்ப பார்றா உன்னால நானும் மாட்டிக்கிட்டு.. டேய் மவனே.. இது தேவையாடா.. வூட்ல அவ வேற தேடிக்கிட்டு இருப்பாளேடா.. இப்ப அவளுக்கு எப்படிறா நியூஸ் சொல்றது? ஏதாவது பேசறானா பார்.. டேய் வாய்ல என்னத்தடா வச்சிருக்கே..  இந்த அடிக்கே வாய்ல விரல வச்சிக்கிட்டு சூப்பிக்கிட்டு வரியே.. அங்க ஸ்டேஷன்ல போயி என்ன பிரேடு எடுக்க போறானுங்களோ தெரியலையேடா.. (குரல் எடுத்து கத்துகிறார்) ஐயா மாருங்களே.. அம்மா மாருங்களே.. இந்த அநியாயத்த கேக்கறதுக்கு யாருமே இல்லீங்களா..

காவல்: (லட்டியை ஓங்குகிறார்) டேய் என்ன சவுண்டு வுடுற? பேசாம வந்தேன்னா.. இப்ப போட்டுருக்கற ரெண்டு கேசோட போயிரும்.. அஞ்சோ, ஆறோ மாசம் உள்ளருந்துட்டு வெளிய வந்துரலாம்.. இனியும் கூவி கலாட்டா பண்ணே.. கலகத்த தூண்டுனேன்னு அந்த கேசையும் சேத்துருவேன்.. அப்புறம் மவன, ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கும் களிதான்.. நடங்கடா..

(கோயம்பேடு சந்தை வளாகத்திலிருந்த காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர் முன்பு நிறுத்தப் படுகின்றனர் இருவரும்.)

ஆய்: (காவற்காரரையும் க.மணியையும் செந்திலையும் பார்க்கிறார்) உன்ன என்ன செய்றதுக்கு அனுப்பினேன், நீ என்ன பண்ணிட்டு வந்து நிக்கறே? மினிஸ்டரு வராரு கூட்டம் கூடாம பாத்துக்கயான்னா இவனுங்கள தள்ளிக்கிட்டு வந்து நிக்கற.. யார்யா இந்த ரெண்டு பேரும்? (இருவரையும் மீண்டும் உற்றுப் பார்க்கிறார்) சார் நீங்க கவுண்டமணி, செந்தில் இல்ல.. நீங்க எங்க சார் இங்க?

(க.மணியும், செந்திலும் சிரிக்கின்றனர்)

கவு: ஒன்னுமில்ல சார்.. நாங்க ---- டிவிக்காக ஒரு ப்ரோக்ராம் பண்றோம்.. எங்க வழக்கமான சண்டைய பார்த்துட்டு பொது ஜனங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பாக்கத்தான் இங்க வந்து பண்ணோம்.. நாங்க ரெண்டு பேரும் பண்ணிக்கிட்டிருந்தத நாங்க நினைச்சா மாதியே நிஜம்னு நினைச்சி கூட்டமும் கூடிருச்சி..அதுல நிஜ போலீஸ் வருவார்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல சார்.. இவர் வந்ததும்.. சரி இதுவும் நேச்சுரலாத்தான் இருக்குன்னு டைரக்டர் சிக்னல் காண்பிக்கவே நாங்களும் தொடர்ந்து ஆக்ட் பண்ண ஆரம்பிச்சோம், இவர் அத உண்மைன்னு நம்பி எங்க ரெண்டு பேரையும் இங்க தள்ளிக்கிட்டு வந்துட்டாரு.. எங்கள யாருமே அடையாளம் கண்டுக்கலைன்னு நினைச்சி கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும்.. இந்த சீன் நல்லா வந்ததுல ரொம்ப சந்தோஷம் சார்.. இருந்தாலும் உங்களுக்கு தான் வீண் சிரமம். சாரி சார்..  மன்னிச்சிக்குங்க.. (பின்னால் திரும்பி பார்த்து  நிலையத்தில் காமராவுடன் நுழையும் டைரக்டரையும் அவருடைய சிஷ்யர்களையும் காட்டி) பார்த்தீங்களா சார்.. நேச்சுரலா இருக்கட்டுமேன்னு ஒரு இருபதடி தள்ளி பார்க் பண்ண வேன்லருந்து ஷூட் பண்ணிக்கிட்டிருந்த டைரக்டர், காமரா மேன் இவங்கதான். (இயக்குனரைப் பார்த்து) சார், நீங்க சொல்லுங்க சார்.. ஐயாவுக்கு தெரியணுமில்ல..

இயக்குனர்: ஆமா சார்.. எங்க கம்பெனி ஐடெண்டி கார்டு சார்.. (தன்னுடைய கார்டை கொடுக்கிறார்)

ஆய்: (காவல்காரரைப் பார்த்து) யோவ் உருப்படியா ஒரு காரியம் செய்ய சொன்னா.. போய்யா, நிஜம் எது நிழல் எதுன்னு தெரியாம.. (குழுவைப் பார்த்து) சாரிங்க.. இருந்தாலும் ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லிட்டு புடிச்சிருக்கலாம்லே.. அனாவசியமா மினிஸ்டர் வர நேரத்துல கூட்டம் கூடிச்சின்னா.. அப்புறம் எங்களுக்குத்தான் ப்ராப்ளம்.. போங்க.. (க.மணி, செந்திலிடம் தன் மேசையிலிருந்த புத்தகத்தை எடுத்து நீட்டுகிறார்.) சார் வந்ததுதான் வந்தீங்க.. இதுல உங்க கையெழுத்த போட்டுட்டு போங்க சார்..

கவு: (திடுக்கிட்டு) எதுல? உங்க ஸ்டேஷன் புஸ்தகத்துலயா?

ய்: (சிரிக்கிறார்) இல்ல சார்.. சும்மா உள்ளருக்கற இந்த பேப்பர்ல போடுங்க.. எம் பசங்களுக்கு உங்க தமாஷ்னா உசிருசார்.. உங்கள ஸ்டேஷன்ல பாத்தேன்னு சொன்னா நம்ப மாட்டான்க சார்.. அதுக்குத்தான்..

கவு: (செந்திலைப் பார்த்து கேலியுடன்.) டேய்.. பாத்தியாடா.. எனக்கு எங்கல்லாம் விசிறின்னு.. சார் எவ்வளவு பெரிய ஆய்வாளர்.. உங்கிட்ட கேட்டாரா பார்த்தியா..

ஆய்: சார் கோச்சிக்காதீங்க.. உங்க ரெண்டு பேர் கையெழுத்தும் தான் வேணும்..

செந்: (சிரிக்கிறார்) பார்த்தீங்களாண்ணே.. சினிமாவுலதான் நீங்க அடிப்பீங்க, நான் வாங்கிப்பேன்.. நிசத்துல உங்களுக்கிருக்கா மாதிரியே எனக்கும் விசிறிங்க இருக்காங்க.. தெரிஞ்சிக்குங்க..

(காமரா மேன் இந்த காட்சியையும் படம் பிடிக்கிறார்)

ஆய்: (பதற்றத்துடன் எழுந்து) சார் காமராவ மூடுங்க சார்.. மினிஸ்டர் வர நேரம்.. ப்ளீஸ்.. போங்க சார்... (காவல்காரரைப் பார்த்து) யோவ் நீ என்ன இளிச்சிக்கிட்டு நிக்கே.. போய்யா நிஜமாவே கூட்டம் ஏதும் கூடாம பாரு போ.. நீங்க வாங்க சார்.. படப்பிடிப்பை நாளைக்கு வச்சிக்கிட்டீங்கன்ன நல்லாருக்கும் .. நான் முறையா பாதுகாப்பு தரேன். இப்ப தயவு செய்து போங்க.. ப்ளீஸ்..

முற்றும்

பொங்கல் வாழ்த்துக்கள்!!

Image hosted by Photobucket.com

நந்தவன பூக்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்

அன்புடன்,
டிபிஆர்.ஜோசஃப்

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

இடம் கோயம்பேடு சந்தை

பாத்திரங்கள்:

கவுண்டமனி, செந்தில், மற்றும் பலர்.

காலை நேரமாதலால் காய்கறி விற்போரும் வாங்குவோரும் வருவதும் போவதுமாக கூட்டம் அலைமோதியது.

கவுண்டமனியும் செந்திலும் ஒரு மீன்பாடி வண்டியில் வந்து இறங்குகிறார்கள்.

கவு: டேய், டேய் மொட்டைத் தலையா, பாத்துறா, என்னமோ ப்ளைமவுத் கார ஓட்டுறா மாதிரி ஓட்டுற..

செந்: (இளக்காரமாக சிரிக்கிறார்) என்னண்ணே என் தலை நிறைய புதர் மாதிரி கருகருன்னு முடி வச்சிருக்கேன். என்ன போயி மொட்டத் தலையாங்கறீங்க? அப்புறம் என்னடான்னா ப்ளைமவுத் காருங்கறீங்க.. நீங்க எந்த ஒலகத்துல இருக்கிறீங்க? இப்பல்லாம் ஏதுன்னே ப்ளைமவுத் காரு.. அதான் ஜிங், கிங்குன்னு புதுசா, புதுசா என்னென்னமோ வந்துருக்கே அதுல ஏதாச்சும் சொல்லக்கூடாது? நீங்க சரியான வேஸ்ட்டுண்னே..

கவு: (சலித்துக்கொள்கிறார்) டேய்.. வர வர நீ ரொம்பத்தான் லொள்ளு பண்றே.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா.. சரிடா.. புதர் தலையான்னு சொல்லிட்டன் போறுமா..

செந்: (கேலியுடன்) அப்புறம் அந்த காருண்னே? அதுக்கு ஒன்னும் பதில் இல்லையா?

கவு: அடப் போடா. நா எங்க புது கார பாக்கறது? நமக்கெல்லாம் அந்த சின்ன வயசுல பாத்த காருங்க பேருதாண்டா ஞாபகத்துல வருது.. சரி.. டேய், இங்க எதுக்குடா என்ன கூட்டிக்கிட்டு வந்த? இது எதோ மார்க்கெட்டு மாதிரியிருக்கு. ஏண்டா, ஏதாச்சும் காய் கறி வியாபாரம் பண்ணப்போறமாக்கும்.. இது நமக்கு சரிபட்டு வரும்கற?

செந்: (எரிச்சலுடன்) இன்னைக்கி உங்களுக்கு என்னாச்சிண்னே .. நான் வர்ற வழி முச்சூடும் கிளிப்பிள்ளிக்கி சொன்னா மாதிரி சொல்லி கூட்டியாந்தா இங்கன வந்து மறுபடியும் எதுக்குடா கூட்டியாந்தேங்கறீங்க?

கவு: மறந்து போச்சிரா பனங்கொட்ட தலையா. இன்னொரு தபா தான் சொல்லேன்.. பெருசா அல்டிக்கற?

செந்: (வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி லுங்கியை அவிழ்த்து விடுகிறார். வண்டியின் கேரியரில் இறங்காமல் அமர்ந்துக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த க.மணியை பார்க்கிறார்) என்னண்ணே.. இறங்கலையா?

கவு: (தூக்கத்திலிருந்து விழித்தெழுவர் போல முழிக்கிறார்) எ.. என்னடா?

செந்: (எரிச்சலுடன்) சரியா போச்சி.. ஏன்ணே.. தெரியாமத்தான் கேக்கறேன், வீட்ல அண்ணிக்கூட ஏதாச்சும் தகராறா? வந்ததுலருந்தே பாக்கறேன். பேயறைஞ்சா மாதிரி இருக்கீங்க? வர்ற வழியெல்லாம் இங்க என்னத்துக்கு வரோம், என்ன செய்யப் போறோம்னு சொல்லிக்கிட்டே வந்தேன்.. இங்க வந்தப்புறம் எதுக்குடா கூட்டியாந்தேங்கறீங்க? சொல்லுங்கண்ணே, என்ன விஷயமாந்தாலும் சொல்லுங்க.. அதான் நா இருக்கேன்ல.. தம்பிக்குடையான் படைக்கு அஞ்சான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.. சும்மா சொல்லுங்கண்ணே.. (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பெருமையுடன் சிரிக்கிறார்)

கவு: (சந்தேகத்துடன் செந்திலை பார்க்கிறார்) டேய்.. இப்ப என்ன சொன்னே.. ஒன்னுமே புரியலையடா.. எங்க இன்னொரு தபா சொல்லு?

செந்: (குழப்பத்துடன்) என்னத்த சொல்ல சொல்றீங்க?

கவு: அதாண்டா.. சொறி, படைன்னு என்னமோ சொன்னீயே.. அத இன்னொரு தபா சொல்லுடா..

செந்: (இளக்காரமாக) என்னண்ணே நீங்க.. எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிக்கிட்டிருக்கேன்.. கேவலமா சொறி, படைன்னு சொல்றீங்க.. அதுன்ணே.. அதாவது கிருஷணன் இருக்காருல்லண்ணே..

கவு: யாரு, அந்த கிருஷ்ண பகவானையா சொல்றே?

செந்: குறுக்க குறுக்க பேசாம கேளுங்கண்ணே..

கவு: (வாயைப் பொத்திக்கொள்கிறார்) சரிடா சொல்லு..

செந்: அந்த கிருஷ்ணனோட தம்பி அண்ணனுக்கெதிரா எவ்வளவு பெரிய படை வந்தாலும் ஒத்தையா நின்னு சமாளிப்பாராம். அதத்தான்ன தம்பிக்குடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க.. டிவியில ராமாயணம் போட்டான்லே அதுலருந்துதான்ன கத்துக்கிட்டேன். அதெல்லாம் நீங்க எங்க பாத்திருக்கப் போறீங்க.. எங்கயாச்சும் டப்பாங்குத்து பாட்டு போட்டா பாப்பீங்க..

கவு: (தரையில் எதையோ தேடுகிறார்) சை.. தேடுறப்ப ஒன்னும் கிடைக்காதே..

செந்: என்னத்தண்ணே தேடறீங்க? எங்கிட்ட சொன்னா நானும் கூட தேடுவேன்லே?

கவு: (ஓரத்தில் கிடந்த பெரிய கல்லைக் காட்டுகிறார்) டேய் இரும்புத்தலையா அந்த கல்லை எடுறா.

செந்: (திடுக்கிட்டு) அந்த கல்லா? வேணாண்ணே..

கவு: ஏண்டா? தூக்க முடியாதேன்னு பாக்கறியா?

செந்: சேச்சே அதுக்கில்லண்ணே..

கவு: பின்ன? உன் தல மேல போட்டுறுவேன்னு பாக்கறியா?

செந்: ஹெஹ்ஹே.. ஏன்னே..  உங்களால அத முட்டு வரைக்கும் கூட தூக்க முடியாது.. அப்புறம் எந் தலை மேல எங்க போடறது.. வேற ஏதாச்சும் பேசுங்கண்ணே..

கவு: டேய் கொஞ்சம் அப்படி திரும்பி நில்லு..

செந்: (குழப்பத்துடன்) எதுக்குண்ணே.. இதுக்கும் அதுக்கும் என்னண்ண சம்பந்தம்?

கவு: நில்லேன் சொல்றேன்..

(செந்தில் திரும்பி நிற்கிறார். க.மணி எட்டி உதைக்க செந்தில் தலைக்குப்புற கல் இருந்த இடத்துக்கு அருகில் போய் விழுகிறார். க.மணி குனிந்து கல்லை எடுத்து அவர் தலைக்கு மேல் கொண்டு செல்கிறார். இதைப் பார்த்து ஒரு சிறு கூட்டமே அவர்களைச் சுற்றி கூடிவிடுகிறது.)

கவு: டேய்.. கல்ல தலைக்கு மேல தூக்க முடியாதுன்னா சொன்னே.. இப்ப என்னடா சொல்றே.. இப்படியே போட்டுரட்டுமா?

செந்: (கைகளை தன் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. விளையாடாதீங்க.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரப்போதுன்ணே..

(கூட்டத்திலிருந்த இரண்டு பேர் க.மணியை பிடித்து பின்னுக்கிழுக்கின்றனர்.)

கவு: (திமிறுகிறார்) யோவ் வுடுங்கய்யா.. இந்த பிடாரித் தலையன் மண்டையில இத போட்டுட்டுதான் மறு வேலை. வுடுங்கய்யா..

பிடித்துக்கொண்டிருந்தவர்களுள் ஒருவர்: ஏன்ணே.. எதுக்கு அவர் தல மேல போடணுங்கறீங்க.. சொல்லுங்க.. விட்டுடறோம்..

(க.மணி கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு முறைக்கிறார். கேட்டவன் நெற்றியில் வேகமாக தட்ட அவரும் போய் செந்திலின் மேல் விழுகிறார். அவரைப் பிடித்துக் கொண்டிருந்த இன்னொருத்தர் குதித்து பின்வாங்குகிறார்)

கவு: ஏண்டா, டேய்.. என்ன நீ பெரிய வஸ்தாதுன்னு நினைப்பா? எனக்கும் அவனுக்கும் இடையில வந்து பூந்துக்கிட்டு காரணத்த சொல்லு ... பூரணத்த சொல்லுன்னுக்கிட்டு.. சொல்லலன்னா என்னடா பண்ணுவே? (செந்திலை குனிந்து பார்க்கிறார்) டேய் கரிச்சட்டித் தலையா என்னாடா மேல ஆளு கிடக்குதேன்னு பாக்கறியா? மவனே.. இன்னைக்கி நீ தப்பிச்சே.. இப்படியே பேசிக்கிட்டிருந்தே .. உனக்கு என் கையாலதான் சாவே.. எந்திரிச்சி வாடா..

(அந்த நேரம் பார்த்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு காவற்காரர் நுழைகிறார்)

காவல்: யோவ் தள்ளுய்யா.. என்னாய்யா இங்க கூட்டம்? போங்கய்யா... (தரையில் கிடக்கும் செந்திலையும் முறைத்துக்கொண்டு நிற்கும் க.மணியையும் பார்க்கிறார். செந்தில் மீது விழுந்து கிடந்தவர் எழுந்து ஓடிவிடுகிறார். குண்டான செந்திலால் சட்டென்று எழுந்திருக்க முடியாமல் தடுமாறுகிறார்.) டேய் எந்திரிடா.. (படு ஒல்லியான அவர், கையைக் கொடுத்து தூக்கிவிட முயல அவரும் சேர்ந்து செந்திலின் மேல் விழ கூட்டமே கொல்லென்று சிரிக்கிறது. சமாளித்துக்கொண்டு எழுந்து நிற்க முடியாமல் தடுமாறியவரை க.மணி பிடித்து நிறுத்துகிறார்.)

கவு: ஏங்க போலீஸ்.. இவனே நெதமும் பத்து வாட்டி திங்கறவன்.. இவன போயி நீங்க தூக்க போவணுமா.. லட்டியால முட்டில ரெண்டு தட்டுனீங்கன்னா படக்குன்னு எழுந்திரிச்சிருக்கப் போறான்.. அத வுட்டுட்டு.. என்ன போலீசோ நீங்க, போங்க.. (காவற்காரரின் கையிலிருந்த லட்டியைப் பிடுங்கி செந்திலின் அருகே தரையில் இரண்டு தட்டு தட்ட செந்தில் பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறார். கூட்டம் மீண்டும் சிரிக்கிறது)

கவு: பாத்தீங்களா ஓடறத.. இந்தாங்க.. (லட்டியை கொடுக்கிறார்) இத தூக்கறதுக்காவது சத்து இருக்கா? (அவருடைய வலது கை முஷ்டியைப் பிடித்து பார்க்கிறார்) என்னா சார் கைல எலும்புதான் மாட்டுது.. சதையையே காணோம்.

காவல்: (கவு.மணியின் கையை உதறிவிட்டு லட்டியை பிடுங்கிக் கொள்கிறார். பிறகு அவருடைய சட்டைக் காலரை எட்டிப் பிடிக்கிறார்.) டேய்.. போலீஸ்காரன் மேலயே கைய வைக்கிறியா? நடறா ஸ்டேஷனுக்கு.. அங்க போயி முட்டிக்கி முட்டி தட்டினாத்தான் புத்தி வரும்.. நடறா..

இதன் அடுத்த, இறுதிப் பகுதி நாளை..

12 ஜனவரி 2006

கா..கா..கா - 2 (நகைச்சுவை)

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராய் தலையைக் குனிந்துக் கொண்டு தப்பித்தால் போதும் என்று எழுந்து போகின்றனர்)

வடி: யோவ் என்னய்யா இது.. நா கேட்டப்ப இல்லைன்னவனெல்லாம் உன் மூஞ்ச பார்த்ததும் ஆமாங்கறானுங்க.. யார்யா நீ?

பார்: டேய்.. என்ன நடிச்சே தப்பிச்சிரலாம்னு பாக்கறீயா.. உனக்கு ஜெமினி கணேசன் யாருன்னு தெரியாது?

வடி: யோவ் எதிர்ல நிக்கற உன்னையே யாருன்னு தெரியல.. அது யாருய்யா ஜெமினி கணேசன்? அந்தாள எனக்கு எதுக்கு தெரியணுங்கற?

பார்: (திரும்பி டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) ஏங்க, உங்களுக்கு ஜெமினி கணேசன தெரியுமா?

டீ.க: என்ன தம்பி நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு.. காதல் மன்னன தெரியாதாக்கும். அந்த தம்பிதான் சும்மா கிண்டல் பண்ணுதுன்னா.. நீங்களும் என்ன கேக்கறீங்களே..

பார்: (வடிவேலுவிடம்) பாத்தியாடா.. நாள் முழுசும் டம்ளர் டம்ளரா டீ, காப்பிங்கற பேர்ல சுடுதண்ணிய வித்துக்கிட்டிருக்கறவருக்குக்கூட (டீக்கடைக்காரர் முகத்தை தொங்கப்போடுகிறார்) ஜெமினி கணேசன்னவுடனே காதல் மன்னன்னு தெரியுது.. நீ தெரியலேன்னு டிராம பண்றியா?

வடி: யோவ் யாரைய்யா சொல்ற? உண்மைலையே தெரியாதுய்யா..

பார்: சரி.. உனக்கு என்ன வயாசாச்சி..

வடி: (சந்தேகத்துடன்) எதுக்கு?

பார்: (முட்டியை வைத்து முகத்தில் லேசாக குத்துகிறார்) ஊம்.. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.. சொல்றா.. என்ன வயசாச்சி.. அம்பது, இல்ல அது ஜாஸ்தி.. ஒரு நாப்பத்தஞ்சி..

வடி:(அழுகிறார்) யோவ்.. முழுசா இருபது கூட ஆவலய்யா. என்ன போயி.. ஏன்யா இந்த அழும்பு பண்ற.. எனக்கின்னும் கல்யாணம் கூட ஆவலைய்யா?

பார்: ஐ! எனக்குக்கூடத்தான் முப்பத்தஞ்சி வயசாயும் இன்னும் கல்யாணம் ஆவலே.. அதுக்காக நீ சின்னப் பையன்னு ஆயிருமா? சரி.. என்னை தெரியலை ஒத்துக்கறேன்.. ஜெமினி கணேசன்னு யாருன்னு சொல்லு விட்டுடறேன்.. சொல்லு..

வடி: (அழுகை கூடி குரல் உச்சத்துக்கு போகிறது) யோவ்.. நெசமாலுமே நீ சொல்ற ஆள எனக்கு தெரியாதுய்யா..

பார்: டேய், வேணாம். இந்த ஜிம்கானா வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. சரி.. நீ சினிமால்லாம் பாப்பேல்ல?

வடி: (அழுகையை நிறுத்திவிட்டு.. தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உறுமுகிறார்.) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. வாரம் ரெண்டு சினிமான்னாச்சும் பாக்கலேன்னா ஐயாவுக்கு சாப்பாடு எறங்காதுல்லே..

பார்: அதுசரி.. சினிமால்லாம் பாக்கற ஆளுதானா நீ.. பார்த்தா தெரியலையே..

வடி: யோவ்.. சினிமா பாக்கற ஆளுன்னு பாத்தவுடனேயே சொல்லிருவியா நீ? போய்யா.. எவனாச்சும் காதுல பூ வச்சிருப்பான் அவங்கிட்ட போயி சொல்லு.. சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப சினிமா பாக்கறியான்னு கேக்கறே.. அதச் சொல்லு..

பார்: (டீக்காரரை திரும்பி பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னையே மடக்கிட்டான்.. (வடிவேலுவைப் பார்த்து) சரி.. அவ்வை சண்முகி படம் பாத்திருக்கியா..

வடி: (சந்தோஷத்துடன்) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. நம்ம கமல் காசன்னா நமக்கு உசுருல்லே..

பார்: என்னது கமல் காசனா? உன் நாக்குல இடி விழ! கமல் காசன் இல்லடா கமல் ஹாசன்.. எங்க சொல்லு.. கமல் ஹாசன்..

வடி: (தனக்குள்) நமக்கு 'ஹா' வராதுன்னு தெரிஞ்சிருப்பான் போலருக்குதே.. இத வச்சே நம்மள ராவிருவானே.. பேசாம ஜெமினி கணேசன தெரியும்னே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எல்லாம் இன்னைக்கி முளிச்ச நேரம்.. (பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்)இப்ப என்ன வேணும் ஒனக்கு? அவர் பேரை இன்னொருத்தரம் சொல்லணும்.. அதானே..

பார்: (நெற்றியில் அடிக்கிறார்) அதாண்டா வேணும், வெண்ண.. சொல்லு.. க..ம..ல் ஹா..ச..ன்.. அழுத்தமா கரெக்டா சொல்லு.. விட்டுர்றேன்.. ஜெமினி யார்னு கூட சொல்ல வேணாம்.. இத்த மட்டும் கரெக்டா சொல்லு.. சொல்றா டேய்..

வடி: (அழுகிறார்) அதுக்கேன்யா சும்மா சும்மா அடிக்கறே.. வலிக்குதில்லே..

பார்: டேய் பேச்ச மாத்தாத.. சொல்லு..

வடி: கமல் காசன்.. சொல்லிட்டேன்.. போட்டுமாய்யா.. சந்தைய மூடிரப்போறான்யா.. ஆத்தா வையும்.. விட்டுறுய்யா..

பார்: (டீக்காரரைப் பார்த்து) ஏங்க.. இவன் கரெக்டா சொன்னானா? உங்களுக்கு எப்படி
கேட்டிச்சி..

டீ.கா: (தனக்குள்) சரியாச் சொன்னான்னு சொன்னா புது தம்பி கோச்சிக்கும். தப்புன்னு சொன்னா வீணா அந்த தம்பியோட விரோதமாயிரும். அந்த தம்பியோட ஆத்தா வேற ஊர்ல பெரிய மனுஷி.. எனக்கு இது தேவை தானா? இருந்தாலும் இந்த புது தம்பி படா பேஜார் புடிச்சவந்தான்.. என்ன சொல்றது?

பார்: யோவ் என்ன உனக்கும் காதுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

டீ.கா: (பதறிக்கொண்டு) இல்லீங்களே தம்பி..

பார்: அப்புறம் என்ன? இவர் சொன்னது சரியா தப்பான்னு கேட்டனே? பதிலையே காணோம்..

(டீ.கா.. பார்த்திபனின் பின்னால் நின்றுக்கொண்டிருந்த வடிவேலுவின் கைகளில் இருந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்கிறார். அவரையுமறியாமல் புன்னகை விரிய.. பார்த்திபன் அவருடைய பார்வை சென்ற பாதையில் பார்க்கிறார். வடிவேலு சட்டென்று ரூபாய் நோட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.)

பார்: (வடிவேலுவை அப்படியே திருப்பி அவருடைய கையிலிருந்த நூறு ரூபா நோட்டை பிடுங்கிக் கொள்கிறார்) டேய் என்ன லஞ்சமா? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான்.. காலைலருந்து எந்த லூசு மாட்டுவான் இன்னைக்கி சாப்பாட்டுக்கு புடுங்கலாம்னு பார்த்துக்கிட்டிருந்தேன்.. நீ மாட்டிக்கிட்டே.. ரொம்ப தாங்க்ஸ்.. (பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்) ஆமா, நான் அம்பது ரூபா எடுத்ததுக்கு ஜாமான் வாங்கணும், ஆத்தா வையும்னு ஒப்பாரி வச்சியே.. இப்ப சொளையா நூறு ரூபா நோட்ட எடுத்த நீட்டுற? (டீக்கடை நோக்கி நடக்க வடிவேலு அவர் பின்னாலேயே ஓடுகிறார்)

வடி: (கெஞ்சுகிறார்) யோவ், யோவ், வேணாம்யா.. நா முட்டாத்தனமா காச எடுத்து நீட்டிட்டேன்யா.. அத குடுத்துறுய்யா.. அது ஆத்தா காசுய்யா.. நா ஓன் கால்ல வேணும்னாலும் விழறேன்.. குடுத்துறுய்யா.. (காலில் விழ குனிகிறார்)

பார்: (வலது கரத்தை உயர்த்து ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா போ. எழுந்திரு. இன்னொரு தரம் கமல் ஹாசன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடு..

வடி: (தரையில் கைகளை ஊன்றி தடுமாறி எழுந்து அழுக்கான கைகளை மறந்து போய் தன் சட்டையில் தேய்க்க.. சட்டை முழுவதும் அழுக்காகிறது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அழுகிறார்) யோவ் இது ஒனக்கே நல்லாருக்கா.. வெள்ளையும் சொள்ளையுமா சந்தைக்கு போயிட்டிருந்தவன கூட்டி வச்சி வம்பு பண்ணி.. ஒன் கால்ல விழ வச்சி இப்படி அலங்கோலமாக்கிட்டியே.. நியாயமாய்யா.. சொல்லுய்யா.. நியாயமா?

பார்: (டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார். திரும்பி டீக்காரரை பார்க்கிறார்) ஏங்க, ஐயா இப்பத்தான் அம்சமா இருக்காருல்லே.. (வடிவேலுவிடம்) இப்படியே போ.. கரெக்டா கூலிக்காரன் மாதிரியிருக்கே.. சந்தையில எல்லாம் சீப்பா தருவான்.. உங்கையிலயும் நூத்தம்பது ரூபா கம்மியா இருக்கில்லே.. இந்த வேஷம் கரெக்டா இருக்கு.. போ.. டாடா.. (டீக்காரரிடம்) யோவ்.. சூடா ஒரு டீ போடு.. தண்ணி கலக்காத பால்ல போடு.. அதான் சார் நூறு ரூபா குடுத்துருக்காரே.. அப்படியே ரெண்டு பப்ஸ எடு..

வடி: (இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்கிறார்) யோவ் நீங்க ரெண்டு பேருமே நல்லாருக்க மாட்டீங்க.. சொல்லிட்டேன்.. (அழுக்கான சட்டையை தட்டிவிட்டுக்கொண்டே சைக்கிளை நோக்கி செல்கிறார்)

பார்: (கைதட்டி) டேய் நில்றா.

வடி: (திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்கிறார்) இன்னுமென்னய்யா? அதான் கைலருந்ததெல்லாத்தையும் பிடுங்கிட்டே இல்ல.. பொறவென்ன?

பார்: பயந்துராத.. காசெல்லாம் வேணாம்.. ஹா ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரியேன்.. சிரிச்சிக்கிட்டே போனா காசு போனதெல்லாம் மறந்துருமில்லே அதான் கேட்டேன்.. எங்க கொஞ்சம் சிரி..

(வடிவேலு அவர் சொன்னதன் சூட்சுமம் புரியாமல் அழுதுக்கொண்டே ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க அது கா, கா, கா என்று ஒலிக்கிறது. பார்த்திபனும், டீக்காரரும்.. சற்று முன் பெஞ்சிலிருந்து எழுந்து சென்று ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க வடிவேலு தன் தவறைப் புரிந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரே ஓட்டமாய் சென்று மறைகிறார்.)

பார்: அவன் கலருக்கு இப்ப அவன் கத்துனத பார்த்துட்டு ஊர்லருக்கற காக்காங்கல்லாம் வராம இருக்கணும்..


முற்றும்.

எனக்குப் பிடித்த மாமனிதர்கள் - 3 (2)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் – குறள் 314

தனக்குத் துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பதாவது அவர்கள் வெட்கமுறும்படி நல்ல உதவியை அவர்களுக்கு செய்து விடுவதாகும்.

காளி கோவில் அருகே இறக்கும் தருவாயில் இருப்பவர்களைக் கொண்டு சென்று சிகிச்சை செய்வதால் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறதென மறியல் செய்த காளி கோவில் பூசாரிக்கே நோய் முற்றி கவனிப்பார் யாருமில்லாததால் அவரையும் இதே இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இவர் தங்களுடைய இல்லத்தையே மூடச் செய்தவர்களுள் ஒருவராயிற்றே என்று பாராமல் அவரை இல்லத்தில் சேர்த்து பணிவிடை செய்தனர் அன்னை திரேசா இல்லத்து சகோதரிகள்.

இத்தனை அன்பு படைத்தவர்களிடம் அறியாமையுடன் நடந்து கொண்டதை எண்ணி வருந்திய பூசாரி அவரை நலம் விசாரிக்க வந்த அன்னையின் கரம் பற்றி, ‘நான் முப்பது ஆண்டுகளாக கருமை நிறம் கொண்ட தேவதைக்குப் பணிபுரிந்தேன். அத்தேவதை இதோ உயிர் பெற்று வெண்ணிறத் தேவதையாக வந்து என் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.’ என்று கூறி கண்ணீர் உகுத்தார்.

ஆரம்ப காலங்களில் அன்னை திரேசா ஒரு துணிப்பையைக் கரங்களில் எடுத்துக்கொண்டு கொல்கொத்தா நகரவாசிகளிடம், கடைகளிலும் பண உதவி வேண்டி செல்வது வழக்கம். ஒரு நாள் ஒரு பெரிய கடையின் உரிமையாளர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்தார். இதை முற்றிலும் எதிர்பாராத அன்னை பதட்டப்படாமல் தன் கைகளை துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து புன்னகையுடன் இது நீங்கள் உங்கள் உயிரையே எனக்கு தானமாக கொடுத்ததற்கு சமம் என்றார். அதைக் கேட்ட கடை முதலாளி உடனே எழுந்து ஒடி வந்து அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் அன்னை அப்போது எழுப்பிக்கொண்டிருந்த குழந்தைகள் காப்பக கட்டிடத்தின் முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். (இச்சம்பவம் மூலப் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது அல்ல. நான் சென்னை லொயோலா கல்லூரியில் அன்னக்கு நடந்த பாராட்டு விழாவில் கேட்டது)

தொழு நோயாளர்களுக்கு ஓர் இல்லம்

1959ம் ஆண்டு அன்னை அவர்கள் மேற்கு வங்காள அரசின் உதவியுடன் ஒரு தொழு நோய் மருத்துவமனையை திறந்தார்.

கண்கவர் தோட்டங்களின் மத்தியில் இரு நூறு குடியிருப்புகளைக் கொண்ட சாந்தி நகரில் தொழு நோயாளிகள் நிம்மதியுடன் சிகிச்சை பெற்றனர். அந்த சாந்தி நகர் இப்போதும் ‘காந்திஜி பிரேம் நிவாஸ்’ என்ற பெயருடன் தொழு நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்துவருகிறது.

இங்கு தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி செங்கல் சூளை, பால் பண்ணை, அச்சுக் கூடம் என பல தொழில்வசதிகளை செய்து தந்ததன் மூலம் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் காப்பகம் - சிசுபவன்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோருடையதே என்ற யேசு பிரானின் அறிவுரைக்கேற்ப அன்னை அவர்கள் ‘அழிக்கப்படப் பிறந்தோர் குழந்தைகள் அல்ல. அவர்கள் இவ்வுலகத்தை ஆளப் பிறந்தவர்கள். ஆகவே வளர்க்க முடியாவிட்டால் என்னிடம் கொடுங்கள்’ என்று இருகரம் நீட்டி அனாதையாய் தெருக்களில் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்க அவர் 1953ம் ஆண்டு துவக்கிய இல்லத்தின் பெயர்தான் நிர்மல் சிசுபவன்.

அனாதைத் தாய்மார்களுக்கும் உதவி

அனாதையாய் விடப்பட்ட தாய்மார்களுக்கும் இவ்வில்லத்திலேயே அன்னை அவர்கள் புகலிடம் அளித்தார். வஞ்சகர்களால் ஆசைக் காட்டி மோசம் செய்யப்பட்ட அனாதை இளம் பெண்களுக்கு வாழ்வளிக்கும் அற்புத இல்லமாக அமைந்தது இவ்வில்லம்.

ஏழை எளியவர்களுக்கு கல்வி வசதி

1957ம் வருடம் ஐந்தே ஐந்து அனாதை மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இலவச கல்வியளிக்கும் பள்ளி 1958ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உருவெடுத்தது.

நூறு மாணவ மாணவியரைக் கொண்டு திகழ்ந்த எந்த ஒரு பள்ளிக்கும் கட்டிடம் கட்டித் தருகின்ற கொல்கொத்தா மாநகராட்சியின் கவனத்தை அன்னையின் பள்ளியும் கவர்ந்தது. அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் அன்னையின் கல்விப் பணி முழு வீச்சில் தொடர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் கொல்கொத்தா நகரெங்கும் விரிவடைந்து பதினான்கு பள்ளிகளானது.

மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தன் சபை கன்னியர்களை ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பினார்.

அத்துடன் திருப்தியடையாத அன்னை தன் தொழு நோயாளிகளின் இல்லத்தில் வசித்துவந்தவர்களின் குழந்தைகளுக்கென பதினைந்தாவது பள்ளியைத் துவக்கி அவர்களுடைய குழந்தைகளின் அறிவு கண்களையும் திறந்து வைத்தார்.

எல்லாம் இறைவன் சித்தம்

மரம் வைத்தவன் கண்டிப்பாய் தண்ணீரையும் ஊற்றுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் அன்னை தெரேசா.

அவர்கள் துவக்கிய அன்பின் பணியாளர்கள் சபை உலகெங்கும் ஒரு ஆலமரத்தைப் போல் கிளைவிட்டு வளர்ந்து நின்றபோது ஏற்பட்ட சகலவிதமான பிரச்சினைகளையும் இறைவனின் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையின் துணையுடன் எதிர்கொண்டார்.

மேலை நாடுகளிலும் அன்னையின் பணி பரவுதல்

1960ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்ற அன்னை லாஸ்வேகஸ் நகரில் நடந்த மகளிர் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் இந்திய மண்ணில் தனக்கிருக்கும் கடமைகளை எடுத்துரைத்ததைக் கேட்ட பெண்களும், தாய்மார்களும் மனமுவந்து நன்கொடைகளை வாரி வழங்கினர்.

அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து, உரோமாபுரி, ஜெர்மன் போன்ற பல மேலை நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து தன் இல்லங்களின் பணிகளுக்கு உதவுங்கள் என்று இருகரம் நீட்டி யாசித்தார்.

மேலை நாடுகளில் அவருடைய சேவைக்கு பெருத்த ஆதரவு கிடைக்கவே அவருடைய இல்ல கிளைகள் ஆஸ்திரேலியா, ஜெர்மன்,ஆப்பிரிக்கா உட்பட உலகிலுள்ள ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் தன்னுடைய சபையை விரிவு படுத்தினார். இன்றும் கொல்கொத்தாவிலும் இந்தியா முழுவதும் அன்னையின் சபையைச் சார்ந்த கன்னியர்கள் நடத்திவந்த இல்லங்கள் ஆற்றும் சேவைக்கு தேவையான பண வசதி இதுபோன்ற நாடுகளிலிருந்தே வருகின்றது.

அன்னையின் சேவையால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடரான எட்வர்டு கென்னடி ஒருமுறை கொல்கொத்தாவுக்கு அன்னையைக் காண வந்திருந்தார். அச்சமயம் அன்னை ஒரு நோயாளியைத் தொட்டு மருத்துவம் செய்துக் கொண்டிருந்தார். எட்வர்ட் கென்னடி அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்க ஆசைப் பட்டார்.

அன்னை, ‘ என் கை அழுக்காக இருக்கிறது. இதோ வருகிறேன்.’ என்று கைகளைக் கழுவச் சென்றார். உடனே கென்னடி அவர்கள் ‘யார் சொன்னது? உங்கள் கைதான் புனிதமான கை. இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கை’ என்று அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்கி தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும்

1964. மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்

1972 - அமைதி விருதான நேரு விருது

1976 விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா’ விருது

1978 இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979 - நோபல் பரிசு

1980 இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா

1983 BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1991 குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற பாரதிய வித்யா பவன் உறுப்பினர் விருது

1992 பாரதத்தின் தவப் புதல்வி விருது மற்றும் பாரத சிரோமணி விருது

1993 ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்’ விருது

1995 கொல்கொத்தாவின் நேதாஜி விருது மற்றும் தயாவதி மோடி அறக்கட்டளை விருது

1996 ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது

என உலகில் இவருக்கு அளிக்கப்படாத விருதுகளே இல்லை எனப்படும் அளவுக்கு அன்னை திரேசா அவர்கள் உலகெங்கும் உள்ள மக்களால் கவுரவிக்கப்பட்டார்.

இதில் போப்பாண்டவரும் உலகெங்கும் உள்ள கிறீத்துவ சபைகளும், அவர்கள் நடத்துகின்ற பல்கலைக் கழகங்களும் அளித்த விருதுகள் சேர்க்கப்படவில்லை!

இத்தனை விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற அன்னை தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

முதுமைக் காலம்

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய் பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்.

இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சார்ந்த சகோதரி நிர்மலா அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் வெள்ளிக் கிழமை என்றும் போல் காலையில் எந்தவித அறிகுறியும் இன்றி கண்விழித்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்தது. அவருடைய சிறப்பு மருத்துவரான அஸீம் பர்தன் பரிசோதனைக்குப் பிறகு வழக்கம்போல் தன்னுடைய அன்றாட பணிகளில் ஈடுபட்டார்.

அன்று மாதத்தின் முதல் வெள்ளியாதலால் வழக்கம்போல் காலை உணவைத் தவிர்த்து தியானத்தில் ஈடுபட்டார். கன்னியர்களின் கட்டாயத்தின் பேரில் மதிய உணவை உண்டு ஓய்வெடுத்தார்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு உறங்க செல்லும் நேரத்தில் மீண்டும் நெஞ்சு வலி அதிகரிக்கவே மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் ‘இயேசுவே, இயேசுவே’ என்ற வார்த்தைகளுடன் அன்னையின் உயிர் பிரிந்தது.

அவருடைய இறுதிச் சடங்கில் பங்குகொள்ளாத உலகத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் கூடி அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செய்தது.

கொல்கொத்தா நகரில் மட்டுமல்ல, இந்தியாவின் மூலை முடுக்களிலும் உலகெங்கும் பரவி கிடக்கும் அன்னையின் சபை கன்னியர்கள் நடத்தும் இல்லங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எல்லாவற்றின் வழியாக பலன் பெறும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார் அன்னை திரேசா என்னும் ஆக்னஸ்.

இவரும் நான் பெருமையுடன் வணங்கும் மாமனிதர்களில் ஒருவர்.

*****

மூலம்:அருளாளர் அன்னை தெரேசா - ஆசிரியர் பட்டத்தி மைந்தன் - 156 பக்கங்கள் -

11 ஜனவரி 2006

கா..கா..கா! (நகைச்சுவை)

நடிகர்கள்: பார்த்திபன், வடிவேலு, மற்றும் பலர்.

சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் பார்த்திபன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.

தெருமுனையில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த வடிவேல் தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிடுகிறார். அவர் பார்ப்பதை பார்த்திபனும் பார்த்துவிடுகிறார். உடனே ஒரு விஷமப் புன்னகை அவர் உதடுகளில் தவழ்கிறது. இருப்பினும் பார்த்தும் பார்க்காததுபோல் தன் அருகில் பெஞ்சில் கிடந்த தினத்தந்தி நாளிதழை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு படிக்கிறார்.

வடிவேலு சைக்கிளிலிருந்து இறங்கி வந்த வழியே செல்ல முயன்றவர் பார்த்திபன் பேப்பரில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறார். நின்று யோசிக்கிறார்.

வடி: அட கன்றாவியே.. இன்னைக்கி பொறப்பட்ட நேரமே சரியில்லை போலருக்குதேடா.. இவன் எங்க இங்க வந்தான்? கேள்வி கேட்டே கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணித் தொலையறது? (பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கிறார்) நம்மள பார்த்திருப்பானோ.. இருக்காது.. அவன்தான் பேப்பர்ல முங்கிட்டான்லே.. நம்மள பார்த்துருக்க மாட்டான்.. நாம வந்த வழியே போனோம்னு வச்சிக்க.. நோட் பண்ணாலும் பண்ணுவான்.. அதனால.. சைலண்ட்டா வண்டிய உருட்டிட்டே போயி.. அந்த பயல தாண்டுனதும் ஏறிக்குவம்.. அதான் கரெக்ட். அப்படியே பார்த்துட்டாலும் அவன் யாருன்னு தெரியாத மாதிரி நடிச்சிருவோம். நடிக்கறதுக்கு நமக்கு சொல்லியா தரணும்.. நடிப்புல நம்ம யாரு? கிங்குல்ல? (தன் பாணியில் கழுத்தை உலுக்கிக் கொண்டு உறுமுகிறார். பிறகு சைக்கிளை உருட்டிக் கொண்டே பார்த்திபன் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பார்த்துக்கொண்டு ‘நான் பார்த்ததிலே இவன் ஒருத்தனைத்தான் அசிங்கம் என்பேன் ரொம்ப அசிங்கம் என்பேன்.’ என்று பார்த்திபனை மனதில் நினைத்துக் கொண்டு வாய்க்குள் பாடியவாறே செல்கிறார். இதை ஆரம்பமுதலே கவனித்துக்கொண்டிருந்த பார்த்திபன் அவர் கடையைக் கடக்கும்வரை பொறுத்திருந்து பேப்பரை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன் இரண்டு கைகளையும் தட்டுகிறார். பிறகு பேப்பரை மீண்டும் எடுத்து முகத்தை மூடிக்கொள்கிறார்.)

(கைதட்டல் சப்தம் கேட்டு ஷாக் அடித்தாற்போல் நின்ற வடிவேலு தன்னையுமறியாமல் திரும்பிப் பார்க்கிறார். பார்த்திபன் பேப்பரைப் படித்தவாறே ஓரக்கண்ணால் வடிவேலுவைக் கவனிக்கிறார். வடிவேலு பார்த்திபன் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்து நிம்மதியடைகிறார்.)

வடி: யார்ராவன்? கைதட்டல் சத்தம் மட்டும் கேக்குது திரும்பிப் பார்த்தா ஒரு பய மவனையும் காணோம்.. காலங்கார்த்தால வம்பு பண்றதுக்குன்னே அலையறானுவப்பா.. நிம்மதியா எளுந்திரிச்சமா.. ஒரு வேல சோலிய பாத்தமான்னு இருக்க முடியுதா.. ரோட்டுல நிம்மதியா நடமாடக் கூட முடியாம.. என்ன பொளப்புறா சாமி... பேசாம துபாய்ல கக்கூஸ்... (வாயைப் பொத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்) வாணாம்.. வாய குடுத்து மாட்டிக்கிறாத.. வாய்க்குள்ள பேசினாக் கூட கண்டுபிடிச்சிருவான்.. எமகாதக பய.. உக்காந்துருக்கான் பார், ஒன்னுமே தெரியாதமாதிரி.. அவன் மூஞ்சும், மொவறையும்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்பிடியே போயி சந்தைல ஆத்தா குடுத்த லிஸ்ட்டு பிரகாரம் ஜாமான வாங்கிக்கிட்டு ஊர் போய் சேர்வோம்.. சைக்கிளை உருட்ட ஆரம்பித்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவர்போல்..) சரிஈஈஈஈ.. அதான் கடை போயிருச்சில்ல.. பொறவெதுக்கு உருட்டறது? சும்மா சல்லுன்னு ஏறிக்கிற வேண்டியதுதான.. (சைக்கிளை நிறுத்தி வலது காலை தூக்கி சீட்டின் மேல் வைக்கிறார்.. மீண்டும் கைதட்டல் சப்தம் கேட்கிறது. பதறியடித்துக் கொண்டு காலை இறக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். யாரும் காணாமல் மீண்டும் காலை சீட்டுக்கு உயர்த்துகிறார். அவருக்கு பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது. ‘டேய் கேன, உன்னைத்தாண்டா. காது கேக்கல?)

வடி: (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரையும் காணோம். பார்த்திபனைப் பார்க்கிறார். அவர் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியடைகிறார்.) சை.. குரல் மட்டுந்தேன் கேக்குது.. மூஞ்ச காணோமே.. அசரீரிம்பாங்களே அதா இருக்குமோ.. (தலையை ட்டிக்கொண்டு) இருக்கும், இருக்கும்.. நமக்கெதுக்கு வம்பு.. திரும்பிப் பாக்காம.. மிதிச்சிக்கிட்டு.. வாணாம்.. கால தூக்கிப் போடறப்பதான குரல் கேக்குது.. உருட்டிக்கிட்டே போய்ட்டா.. ஆமா.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் உருட்டிக்கிட்டே போயி..

(அவர் போவதைப் பார்த்த பார்த்திபன் பேப்பரை மடித்து தன் அருகில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை தட்டுகிறார்.)

வடி: என்னடாயிது காலங்கார்த்தால ரோதனை.. (சடாரென் திரும்பி) எவண்டா அவன்.. என்ன நக்.. (பார்த்திபன் தன்னையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு தனக்குள்) பார்த்திட்டாண்டா.. பார்த்திட்டாண்டா.. இன்னைக்கி போனாப்பலதான்... சரி, சரி.. அவன யாருன்னு தெரியாதமாதிரி நடிக்கத்தான போறோம்.. முட்டாப் பய மவன்.. கண்டுபிடிக்கிறானான்னு பாப்பம்..

(பார்த்திபன் பெஞ்சிலிருந்து எழுந்திருக்காமலேயே வடிவேலுவை நோக்கி ‘இங்க வா’ என்று சைகை செய்கிறார்.

வடி:(தனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறார். அங்கே யாரையும் காணாமல் பார்த்திபனைப் பார்க்கிறார்) யாரு, என்னையா?

பார்: ஆமாண்டா.. உன்னையேத்தான்.. நீ என்ன டமார செவிடா? ரெண்டுதரம் கைதட்டியும் திரும்பிப் பாக்காம போற?

வடி: (வேண்டா வெறுப்போடு வந்து அவன் முன்னே நிற்கிறார். ஆனால் அவர் முகத்தைப் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டு நிற்கிறார்) யோவ் யாருய்யா நீ? ரோட்ல பேசாம போய்ட்டிருக்கற ஆள இளுத்து வச்சி வம்பு பண்ற?

பார்: டேய் வெண்ணெ.. என்ன பார்த்து பேசுறா.. அங்க எங்கயோ சூன்யத்த பாத்த்துக்கிட்டு யார்யா நீன்னா? அங்கருந்து யாரு.. செத்துப்போன உங்க பாட்டனா பதில் குடுப்பான்..

வடி: (கோபத்துடன் பார்த்திபனை முறைக்கிறார்) யோவ்.. எதுக்குய்யா எங்க தாத்தனையெல்லாம் இளுக்கற? வேணாம்.. மரியாத கெட்டுரும்...சொல்லிட்டன்.. ஆளம் தெரியாம கால விட்டுட்டு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் வாயை மூடிக்கொள்கிறார்)

பார்: (நெருங்கி வடிவேலு முகத்தை உற்று பார்க்கிறார்) டேய் என்ன நிறுத்திட்டே.. சொல்லு.. ஆழம் தெரியாம என்னத்த விட்டேன்.. சொல்றா?

வடி: ஒன்னுமில்லப்பா.. ஆள விடு.. சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்..ஆள விடு..

பார்: டேய், டேய் நிறுத்துறா... நீ என்ன பதினாறு வயதினில கமல்ஹாசனா.. சொன்னதையே சொல்லிக்கிட்டு.. சரி.. என்னை தெரியல? பார்த்தும் பாக்காத மாதிரி போற...?

வடி: (பார்த்திபனை பார்க்கிறார்) தெரியலயே.. நீ யாருன்னே தெரியலையே (அழுகிறார்) எதுக்குய்யா சும்மா போய்ட்டிருந்த என்ன இளுத்து வச்சி வம்பு பண்றே.. விடுய்யா.. சந்தைக்கு போணும்.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. என்ன விட்டுறு..

பார்: (டீ கடை பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏங்க உங்க யாருக்காவது என்ன அடையாளம் தெரியுதா?

எல்லோரும் கோரசாக: ஓ தெரியுதே.. புதுசா ஊருக்கு வந்துருக்கற தம்பிதானே.. நல்லாத் தெரியுது..

பார்: (சலிப்புடன்) என்னங்க நீங்க.. நா இந்த ஊருக்கு வந்துதான் ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல.. இன்னும் புதுசா ஊருக்கு வந்த தம்பிங்கறீங்க? சரி அது போட்டும்.. அப்ப என்ன உங்க எல்லாருக்கும் அடையாளம் தெரியுது.. (டீக்கடைக்காரரை பார்க்கிறார்) ஏங்க டீ.. உங்களுக்கு?

டீக்கடைக்காரர்: (தனக்குள்) களவாணிப்பய.. எம்பேரு தெரிஞ்சிருந்தும் நக்கலா டீங்கறாம் பாரு.. பேசாம தெரியலேன்னு சொல்லிரலாமா? ஆனா இவன் குடுக்க வேண்டிய அம்பது ரூவா காசு அம்பேலாயிருமே.. (பார்த்திபனையும் வடிவேலுவையும் மாறி மாறி பார்க்கிறார்) அட என்ன தம்பி கிண்டல் பண்ணிக்கிட்டு... உங்கள் தெரியாம இருக்குமா? நீங்க வேற நமக்கு அம்பது ரூவா பாக்கி வச்சிருக்கீக, உங்கள தெரியாம போயிருமா?

பார்: யோவ்? என்ன சந்துல சிந்து பாடறியா.. பிச்சாத்து அம்பது ரூபா.. (சட்டென்று திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) சார் ஒரு அம்பது ரூபா இருந்தா குடுங்க சார்.. இந்த டீக்கடைக் காரன் மூஞ்சில விட்டெறியறேன்.. (வடிவேலு இல்லையென்று மறுக்க அதை பொருட்படுத்தாமல் அவருடைய சட்டைப் பையில் கைவிட்டு கொத்தாய் கிடைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கடைக்காரரை நோக்கி எறிகிறார்) இந்தாய்யா ஒம் பிச்சாத்து அம்பது ரூபா.. சார் யாருன்னு நினைக்கறே? துபாய்ல லச்ச லச்சமா சம்பாதிச்சவரு.. அதையெல்லாம் விட்டுட்டு இந்த ஊர்ல.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சேவை செய்யணும்னு இங்கயே தங்கிட்டார்.. (வடிவேலுவை பார்த்து) என்ன கக்கூ.. சாரி.. உங்க பேரே இதுவரைக்கும் சொல்லலையா.. அதான்.. கொஞ்சம் கன்ஃப்யூசாயிட்டேன்.. இப்ப சொல்லுங்க.. ஏன் பாத்தும் பாக்காத மாதிரி போனீங்க..ங்க என்ன ங்க.. டேய் சொல்லுறா.. எதுக்கு... பார்த்தும்... பாக்காம... போன?

வடி: யோவ் யார்யா நீ? லூசா.. நாந்தான் தெரியாதுங்கறேன்ல.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற? கைலருந்த காசையும் எடுத்துக்கிட்டு.. யோவ் வேணாம்.. எடுத்த காச திருப்பி குடுத்துறு.. அப்புறம் சந்தைலருந்து ஜாமான் வாங்காம வீட்டுக்கு போனா.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. காச குடுய்யா.. (அழுகிறார். கடையிலிருந்த எல்லோரும் சிரிக்கின்றனர்)

பார்: டேய்.. (விரல்களை மடக்கிக்கொண்டு முஷ்டியை உயர்த்தி முகத்துக்கு முன்னால் குத்துவதைப் போல் வருகிறார்) டேய் யாரப் பாத்து லூசுங்கற? இப்ப சொல்லு.. நீ அன்னைக்கி பஸ்சுல டிக்கட் வாங்காம.. செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட லஞ்சம் குடுத்து அடிவாங்குன பார்ட்டி தான?

வடி: (தனக்குள்) படுபாவிப் பய.. நாம முட்டாத்தனமா செஞ்ச காரியத்தையெல்லாம் ஒன்னு விடாம ஞாபகத்துல வச்சிருக்கானே.. இப்ப என்ன பண்றது? சரி.. நாம போட்ட வேஷத்தையே தொடர்ந்து போட வேண்டியதுதான்.. (அசடு வழிகிறார்) யோவ் நெசமாவ நான் அவனில்லைய்யா.. என்ன விட்டுறு..

பார்: (கோபத்துடன்) டேய் என்ன ஜெமினி கனேசன்னு நினைப்பா.. கொட்டா டாக்கீஸ்ல நான் அவனில்லை படத்த பாத்துட்டு.. என்ன.. நக்கலா? நீ நான் அவனில்லைன்னு சொன்னா நான் நீ அவனில்லைன்னு நம்பிரணுமா? சொல்றா நீ அவந்தானே...

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஒவ்வொருவராய் எழுந்து போகின்றனர்)

இதன் அடுத்த இறுதி பகுதி நாளை..

எனக்குப் பிடித்த மாமனிதர் - 3

எனக்குப் பிடித்த மாமனிதர் - 3

இந்திய திருநாட்டிற்கு ஈடு இணையற்ற பெருமை சேர்த்தவர்களில் ஒருவர் அன்னை தெரேசா அவர்கள் என்றால் மிகையாகாது. யுகோஸ்லேவியா நாட்டில் பிறந்த அன்னை அவர்கள் நமது கொல்கொத்தா நகரத்தில் தனக்கென ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி ஏழை எளியோர்க்கு ஜாதி, மத பேதமின்றி தொண்டாற்றியவர்.

அல்பேனியா நகரங்களில் புகழ்பெற்று விளங்கியவைகளில் ஒன்றான ஸ்காம்ஜேயாவில் நிக்கோலா மற்றும் திரானா தம்பதியருக்கு 1910 ம் ண்டு பிறந்த அன்னை திரேசாவின் இயற்பெயர்ஆக்னஸ் கொன்சகா பொஜாக்ஸியு ஆகும்.

ஸ்காப்ஜே நகர அரசியல் சபையின் உறுப்பினைர்களில் ஒருவரான அவருடைய தந்தை ஓரளவு செல்வமும் செல்வாக்கும் பெற்றவராயிருந்தார். அல்பேனியாவின் விடுதலைக்கும் பாடுபட்ட அவருடைய செல்வாக்கு பலருக்கு பொறாமையை விளைவித்தது. எனவே ஒருநாள் விருந்துக்கு அழைத்துச் சென்று அவருடைய உணவில் நஞ்சைக் கலந்து கொன்றுவிட்டனர்.

நாற்பத்தைந்தே வயதில் முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் மரணமடைய தலைவனையிழந்த ஆக்னஸ்சின் குடும்பம் செய்வதறியாமல் தவித்தது. ஒன்பதே வயதான ஆக்னஸ் அந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பள்ளிப் படிப்பில் முழு தீவிரம் காட்டி படித்துவந்தார். தான் படித்ததுடன் படிக்க முடியாதவர்களுக்கும் கற்பித்து வந்தார்.

தன்னுடைய  இளம் வயதிலேயே Sodality என்ற சபையில் அங்கத்தினராக சேர்ந்து ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்தார். அச்சபையிலிருந்து அயல் நாடுகளுக்கு சென்று சேவைபுரிந்த கன்னியர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஆக்னஸ் தானும் அதுபோல் செல்ல விரும்பினார். அவர்களுள் சிலர் இந்தியாவிலுள்ள கொல்கொத்தா நகருக்குச் சென்று தாங்கள் செய்த சமூக சேவையைப் பற்றி ஆக்னஸ் வசித்து வந்த பகுதியின் பாதிரியார் அவர்களுக்கு கடிதம் மூலம் தங்களுடைய அனுபவங்களை தெரிவித்தனர். அவற்றையெல்லாம் படித்த ஆக்னஸ் அவற்றால் மிகவும் கவரப்பட்டு தனக்கும் அப்பாக்கியம் கிட்டாதா என ஏங்கலானார்.    

அவருடைய எண்ணத்திற்கு அவருடைய தாயும், மூத்த சகோதரியும் ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு அவருடைய பிடிவாத குணத்திற்கு பணிந்து அவரை போக அனுமதித்தனர்.

அவர் விருப்பப்படியே 1929ம் ண்டு ஜனவரி மாதம் ஆறாம் நாள் கொல்கொத்தா வந்து சேர்ந்தார்.

ராஜாராம் மோகன்ராய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, சரத் சந்திரர், கவியரசு இரவீந்தரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அறிவுசால் ஆன்றோர்களை இந்த உலகிற்கு ஈந்த கொல்கொத்தா நகரம் பல ஆண்டுகள் தவம் இருந்து ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் வந்த ஆக்னசை இரு கரம் விரித்து வரவேற்றது.

அதன் பின்னர் இரண்டாண்டு காலம் இறையியல் பயிற்சியும், ஆசிரியர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்து 1931ம் ஆண்டு மே மாதம் 24ம் நாள் கன்னியர் மடத்தில் தன்னுடைய முதல் துறவற வாக்குறுதியை முடித்து ஆக்னஸ் என்ற தன் பெயரை சகோதரி தெரேசாவாக மாற்றிக்கொண்டார். பின்னர் டார்ஜிலிங் சென்று சில காலம் ஆசிரியராக பணியாற்றிய பின் கொல்கொத்தா திரும்பி தூய மரியாள் பள்ளியில் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து சுமார் 17 ஆண்டுகாலம் திறம்பட பணிபுரிந்தார்.

1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் ஒரு பயிற்சியில் பங்குபெற டார்ஜிலிங்கை நோக்கி ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். பயண நேரத்தை வீணாக்க விரும்பாமல் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவருடைய செவிகளில் ‘சேரிகளுக்கு நீ சென்று சேவை செய்ய வேண்டும். இதுவே என் அன்புக் கட்டளை’ என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க கேட்டார். அவருக்கு இது தெய்வத்தின் குரலே என்று தோன்றியது.

இறைவன் கட்டளையை ஏற்று கொல்கொத்தா திரும்பியதும் தன்னுடைய ஆசிரியர் பணியிலிருந்து விலகி முழுநேர சேவைப் பணியில் ஈடுபட உறுதி பூண்டார்.

ஆனால் அவருடைய முடிவைக் கேள்வியுற்ற அவருடைய மடத்தலைவி அவரை அங்கிருந்து ‘அசென்சால்’ என்ற மடத்துக்கு மாற்றினார். அவருடைய ஆணைக்கு பணிந்த தெராசா அங்கு சென்று சேர்ந்தாலும் அவருக்கு மிகவும் பழக்கமாயிருந்த பங்கு பாதிரியார் வான் எக்சம் வழியாக கொல்கொத்தாவில் அன்று பேராயரரக இருந்த பெரியர் (Perriar) அவர்களுக்கு தன்னுடைய சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

நல்ல உள்ளம் படைத்த பேராயர் திரேசாவின் வேண்டுகோளை தன்னுடைய பரிந்துரையுடன் உரோமாபுரியிலிருந்த போப்பாண்டவருக்கு அனுப்பி வைத்தார். முதலில் தெரேசாவின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுத்த போப்பாண்டவர் அவருடைய தொடர்ந்த விண்ணப்பங்களை மறுக்க முடியாமல் இறுதியில் 1948ம் வருடம் தெரேசா அப்போதிருந்த கன்னியர் சபையிலிருந்து விலகி முழுநேர சேவைப் பணியில் ஈடுபட அனுமதியளித்தார்.

சபையிலிருந்து வெளியேறியதும் சகோதரி தெரேசா செய்த முதல் வேலை தன்னுடைய கன்னியர் உடையை களைந்து விட்டு இந்திய ஏழைப் பெண்கள் உடுத்துவதுபோன்ற பருத்தி நூலால் நெய்யப்பட்ட சேலையை தெரிவு செய்ததுதான். மூன்று நீலக்கரைகளைக் கொண்ட வெள்ளை சேலைதான் இன்றுவரை அவர் துவங்கிய அன்பின் பணியாளர் (Missionaries of Charity) சபை சகோதரிகளின் சீருடையாக இருந்து வருகிறது.

இந்த சபையின் நோக்கம்: நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் வாழும் ஏழை எளிய மக்கள்,ஆதரவற்றோர், தொழுநோயாளர், இறக்கும் தருவாயில் இருப்போர் ஆகியோடருக்கு இலவச சேவை புரிதல்.

கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வாக்குறுதிகளுடன் ஏழைகளுக்கு முழு மனதுடன் இலவச சேவை புரிதல் என்ற நான்காவது வாக்குறுதியையும் இச்சபையில் கன்னியராக சேரும் எவரும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அது இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இச்சபை துவக்கப்பட்ட காலத்தில் ஒரு நாள் வீதியோரத்தில் அரை குறை ஆடையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு ஏழைக் கிழவியைப் பார்த்தார். அப்பெண்ணின் உடலை எறும்புகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பதறிப்போன சகோதரி தெரேசா அவரை அப்படியே தன் இரு கரங்களிலும் அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அருவருப்புடன் சிகிச்சையளிக்க மறுக்கவே அப்பெண்மனிக்கு சிகிச்சை அளிக்காதவரை தான் அங்கிருந்து போவதில்லை என்று சத்தியாக் கிரகம் செய்ய ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக சிகிச்சை செய்தும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடையவே சகோதரி தெரேசா  அன்றே ஒரு முடிவுக்கு வந்தார்.

மோட்டிஜில் பகுதியில் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்தார். அதில் இறக்கும் தருவாயிலிருந்தவர்களை நகர் முழுவதும் தேடி கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். நாளடைவில் வந்து சேர்ந்த பிணியாளர்களின் எண்ணிக்கைப் பெருகவே மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து காளி கோயிலின் அருகே இருந்த இரண்டு தர்ம சாலைகளில் ஒன்றைப் பெற்று தன் சேவையை தொடர்ந்தார்.

சகோதரி தெரேசா அன்னை தெரேசாவாக மாறுதல்

1949ம் ண்டு மார்ச் மாதம் 19ம் நாள். அன்று யேசுவின் வளர்ப்புத் தந்தை அர்ச். சூசையப்பரின் (St. Joseph) திருவிழா. விழாவுக்கு பெருந்திரளாக கூடியிருந்த அப்பகுத்த ஏழை எளிய மக்கள் சகோதரி தெரேசாவை அன்புடன் ‘அன்னை’ என்று அழைக்க அதுவே அவருடைய அடைப்பெயராக மாறி அன்று முதல் அன்னை தெரேசா என அழைக்கப் பட்டார்.

இதன் இரண்டாம் பாகம் நாளை...




10 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர் - 2

டாக்டர் விஞ்ஞானி iஇந்திய ஜனாதிபதி மேதகு ஆவுல்பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.

பிறந்த ஊர்: இயற்கை எழில் கொஞ்சம் ராமேஸ்வரம்.

இங்கு அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பழைமையான புண்ணியஸ்தலங்களில் ஒன்றான இராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் சுற்றுலாவினரை படகில் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவருடைய தாத்தா.

பள்ளிப் பருவம்

ஒரு முறை இராமநாத சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவின் போது உற்சவ மூர்த்திகளான சுவாமியும், அம்பாளும் ஆழமான தெப்பக்குளத்தில் சரிந்து விழுந்துவிடவே, ஊர்மக்கள் அனைவரும் அதைக்கண்டு வேதனையுற்று என்ன செய்வதென தெரியாமல் தவித்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் குளத்தினுள் குதித்து சுவாமியையும் அம்பாளையும் வெளிக்கொண்டு விழா சிறப்புற உதவியவர் நம் அப்துல் கலாம்!

ராமேஸ்வரத்தில் ஆரம்ப பள்ளியில் அவர் பயின்றுக் கொண்டிருந்த சமயத்தில் ராமேஸ்வரம் கோயிலின் தலைமைக் குருக்களான பட்சி இலட்சுமண சாஸ்திரிகளின் மகனான பட்சி ராமநாத சாஸ்திரி அவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர். அவர்கள் இருவரும் வகுப்பறையில் ஒரே இருக்கையில் அருகருகே அமர்வது வழக்கம்.

இதைக் கண்ட சாதி உணர்வு கொண்ட ஆசிரியர் ஒருவர் கலாம் அவர்களை கடைசி இருக்கையில் அமரச்செய்தார். இதைக் கண்டு வெகுண்ட பட்சி ராமநாத சாஸ்திரி தன்னுடைய தந்தையிடம் சென்று முறையிட்டார்.

தன் மகனின் கோபத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தையும் அடுத்த நாளே பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரைக் கடிந்து திரு. கலாம் அவர்களை தன் மகனுக்கு அருகில் அமரவைத்தார்.

இந்த பட்சி ராமநாத சாஸ்திரிகள்தான் திரு. கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றபோது இராமேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன் டில்லி சென்று அவருக்கு சாமி பிரசாதத்தை வழங்கியவர்.

கல்லூரி படிப்பு

திரு. கலாம் அவர்கள் பொறியியல் பட்டதாரி என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவர் தன்னுடைய பாடத்திட்டம் முடிந்ததும் ஏரோடைனமிக் வடிவமைக்கும் பொறுப்பை தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அது தாழ்வாகப் பறந்து தாக்கும் ஒரு போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டப் பணியாகும். அச்சமயத்தில் எம்.ஐ.டியின் இயக்குனராக இருந்தவர் பேராசிரியர் திரு.சீனிவாசன் அவர்கள். இவர் திரு.கலாமின் திட்டம் தமக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்ற தம் முடிவை அவரிடம் தெரிவித்தார்.

அத்துடன், ‘உனக்கு நான் மூன்று நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் விமானத்தின் எல்லா அம்சங்களையும் விவரித்து காட்டும் வரைபடத்தை அளிக்காவிட்டால் உன்னுடைய உதவித் தொகையை தடுத்து நிறுத்தி விடுவேன்’ என்றும் எச்சரித்தார்.

ஏழ்மை நிலையிலிருந்த திரு. கலாம் அவர்கள் உதவித் தொகையை நம்பித்தான் தன் படிப்பைத் தொடர வேண்டிய சூழ்நிலை. ஆயினும் மனந்தளராமல் ஊண் உறக்கமின்றி பேராசிரியர் குறிப்பிட்ட கெடுவுக்குள் வரைபடத்தை முடித்துவிட அதைப் பார்த்து வியந்து பாராட்டினார் அவருடைய பேராசிரியர்!

சைவ உணவில் ஆர்வம்

திரு. கலாம் அவர்கள் இஸ்லாமியர் விரும்பி உண்ணும் புலாலைத் தவிர்த்து சைவ உணவையே விரும்பி உண்டு மகிழ்ந்தார். புலால் உணவில் கிடைக்காத அரிய பல சத்துக்களும், புரதங்களும் சைவ உணவில் அதிகம் கிடைப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும், இரத்தத்தை சுத்திகரித்து எப்போதும் சுத்தமாக வைக்கவும் உதவுவதாக கருதினார். அத்துடன் ஓர் உயிரை வதை செய்து அதை உண்டு மகிழும் கொடுமையை விரும்பாததால் திரு.கலாம் அவர்கள் அசைவ உணவுவகைகளைப் புறக்கணித்தார்.

ஏழ்மை

ஏழ்மையின் சிரமங்களை நன்குணர்ந்த கலாம் அவர்கள் ‘சாதாரண பின்னணியில் வளர்ந்த என் போன்றோருக்கு பத்துகள் எப்போதுமே காத்திருக்கும். ஆனால் அதன் பின்னணியில் சோர்ந்துபோய் மூலையில் அமர்ந்திருக்கலாகாது. நமக்கான வாய்ப்புகளை நாமேதான் உருவாக்கி கொள்ள வேண்டும்.’ என்று தன்னை சந்தித்த எல்லோரிடமும் வலியுறுத்தி கூறுவது வழக்கம்.

தாய்மொழிப் பற்று

தாய் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல அரங்குகளிலும் வலியுறுத்திய கலாம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்தார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் தமிழ்சங்கம் நடத்திய பல கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு தமிழில் எழுதி முதல் பரிசை வென்றுள்ளார்.

அவர் எம்.ஐ.டியில் படித்த காலத்தில் ‘நமது விமானத்தை நாமே தயாரிப்பது எப்படி’ என்ற கட்டுரையை தமிழிலேயே எழுதினார். அதற்காக அறிவியல் அறிஞர்கள் மற்றும் அவருடைய ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றார்.

செயற்கரிய செயல்கள்

வல்லரசு நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்து அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் தயாரித்து மார்தட்டிக் கொண்டிருக்க நமது கலாம் அவர்கள் குறைந்த செலவில் ‘பொக்ரானில்’ வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்து மேலை நாடுகளிடையே நமது நாட்டின் மதிப்பை உயர்த்திக் காட்டினார்.

அத்துடன் நின்றுவிடாமல் செயற்கை ஏவுகலனான S.L.V3இன் உதவியுடன் முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்தார்.

‘கார்பன்’ என்ற ஒரு புதிய பொருளை கண்டுபிடித்து முடக்குவாத நோயால் அவதியுறுவோர்க்கு புனர் வாழ்வு தரும் அமைப்பிற்கு உதவ உருவாக்கினார்.

முட நீக்கியல் துறையில் திரு. கலாம் அவர்கள் புரிந்த சாதனை இன்றளவும் பெருமையுடன் பேசப்படுகிறது. அந்நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அதிக எடை கொண்ட உலோகத்தால் ஆன கருவிகளை அணிந்து எடை பளுவின் காரணத்தால் நடக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கலாம் அவர்களின் லேசான கார்பன்-கார்பன் என்ற எடை குறைந்த உலோகத்தால் செய்யப்பட்ட நடை சாதனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவிட முடியாத வரப்பிரசாதமாக அமைந்தது.

எம்மதமும் சம்மதம்

கலாம் அவர்கள் ஜனாதிபதியாக வேட்பு மனு தாக்கல் செய்ததும் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு தாங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது

என்ற கீதை வரிகளை மேற்கோள் காட்டி தமக்கு எல்லா மதமும் சம்மதம் என்றும் தாம் ஒரு மதத்திற்கு மட்டும் உரியவர் இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்லி காட்டினார்.

நாடும் வீடும்

திரு.கலாம் அவர்கள் போரை விரும்புபவர் என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே இருந்து வந்தது. அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி வேட்பாளரை நிறுத்தி மக்களின் முன் வைத்த குற்றச்சாட்டும் இதுதான். அதற்கு அவர், ‘ஒரு மனிதன் என்னதான் பணம் படைத்தவனாயிருந்தாலும் உடல் வலுவிழந்து காணப்பட்டால் அவனால் சேர்த்த பணத்தை கட்டிக் காக்க முடியாமல் வாழ்க்கையின் பாதியிலேயே அவனது வாழ்க்கை அஸ்தமித்து விடுகிறது. அதே சமயம் பலம் படைத்தவனாயிருந்தாலும், பணமின்றி அவனது வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கி சிதைந்து விடுவதும் இயற்கையே. அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பொருளாதாரமும், இராணுவமும் கை கோர்த்து ஒரு சேர நடந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியும் நன்றாக அமையும். நம் நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தி நம்மை சுற்றியுள்ள நாடுகளை பயமுறுத்த வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். பலம் பொருந்திய நம் ராணுவம் நம்மை எளிதில் வெற்றி கொண்டு விடலாம் என்ற எண்ணத்தை நம் எதிரிகளின் மனதிலிருந்து நீக்க உதவும். அதுதான் நம் நோக்கம்’ என்று விளக்கினார்.

கலாமும் மாணவர்களும்

ஒரு முறை திரு. கலாம் அவர்கள் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் சமயத்தில் ஒரு மாணவன் எழுந்து, ‘தாங்கள் இந்நாட்டிற்காக என்ன சாதிக்க போகிறீர்கள்?’ என்று வினவினான்.

கலாம் அவர்கள் பட்டென்று, ‘இந்த தேசமே உங்கள் கையில் இருக்கும்போது உங்களை நம்பித்தான் நான் எதையும் சாதிக்க இயலும் என்றார்.’

வேறொரு சமயத்தில் பள்ளிச் சிறிமி ஒருத்தி கலாம் அவர்களிடம் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் கையெழுத்து பெற அணுகியபோது அச்சிறுமியிடம் ‘உன் எதிர்கால ஆசை என்ன?’ என்று வினவினார். அதற்கு அச்சிறுமி, ‘ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவில் நான் வாழ விரும்புகிறேன்.’ என்று பதிலளித்தாள்.

இதுபோன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவை நனவாக்குதே தம்முடைய லட்சியம் என்று உறுதி பூண்டார் திரு. கலாம்.

ஜனாதிபதியாக ஒரு விஞ்ஞானி

திரு. கலாம் அவர்கள் இந்திய ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருந்த நேரம். நிருபர்கள் அவரிடம், ‘ஒரு விஞ்ஞானியாக செயல்பட்டது இந்த பெரும் பொறுப்பிற்கு தயார் செய்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘தலைமைப் பண்புகள்தான் எந்த ஒரு பெரிய பொறுப்புக்கும் அடிப்படை தேவை. இந்த பண்புகள் பெறுவதற்கு விஞ்ஞானப் பணியில் நன்றாகவே பயிற்சி அளித்திருக்கிறார்கள்.’ என்று பதிலளித்தார்.

நடுநிலை ஜனாதிபதி

இந்திய ஜனாதிபதியாக பதவியேற்றபின் நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதிலளித்தார் திரு.கலாம், ‘நான் நானாகவே இருப்பேன். ஜனாதிபதி ஜனாதிபதியாகவே இருப்பார்.’ இதன் மூலம் நடுநிலை ஜனாதிபதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நாசூக்காக தெரிவித்தார்.

இவர் பெற்ற விருதுகள்

1. 1997 – பாரத் ரத்னா.
2. 1981 – பத்மபூஷன்.
3. 1990 – பத்மவூபுஷன் மற்றும் ஓம்பிரகாஸ் பாசின் விருது

அத்துடன் டாக்டர் பிரன்ராம் விண்வெளி விருது, தேசீய வடிவமைப்பு விருது போன்ற இந்தியாவின் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மற்ற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க பல பல்கலைக்கழகங்கள் முன் வந்தபோது அதனை நாசூக்காக மறுத்தவர்தான் நம் கலாம் அவர்கள்!

அவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிமுறைகள்:

1. தன்னிலை உணர்ந்த எளிய வாழ்க்கை.
2. எம்மதமும் சம்மதம் என்ற நிலை.
3. உழைப்பு, உழைப்பு, அயரா உழைப்பு.
4. அதுவும் குறிக்கோள் சார்ந்த நேர்மையான உழைப்பு.
5. ஆசிரியர்களை மதிக்கும் நேர்மையுடன் கூடிய பண்பு.

ஆதர்ஷ புருஷன்

சமுதாயத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த கலாம் அவர்கள்,ஆறு வயதில் தினசரி பத்திரிகைகளை வீடு வீடாக விநியோகித்த கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக, விஞ்ஞானிகளை உருவாக்குபவராக, இன்றைய இளைய உலகம் தமது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ள ஆதர்ஷ புருஷனாக திகழும் கலாம் அவர்கள்தான் நான் மிகவும் மதிக்கும் மாமனிதர்களுள் ஒருவர்.

******

மூலம்:எங்கள் அப்துல் கலாம் - ஆசிரியர்:விஷ்ணு

09 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர்கள் - 1

நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு அறிவியல் ஆசிரியராக கோவையைச் சேர்ந்த ஒருவர் புதிதாக எங்கள் பள்ளியில் சேர்ந்தார்.

அவர் பாடங்களுக்கிடையில் சுவாரசியமான அறிவியல் தகவல்களை சொல்வது வழக்கம். ஆகவே நாங்கள் எல்லோரும் அவருடைய வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

அறிவியல் உலகில் அவருக்கு மிகவும் பிடித்த மனிதர் கோவை இவ்வுலகுக்கு அளித்த, விந்தை மனிதர், படிக்காத மேதை, ஒப்பற்ற அறிவியல் நிபுணர், காலம் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள்.

என்னுடைய ஆசிரியர், இவரைப் பற்றியும் அறிவியல் துறையில் இவர் சாதித்த இமாலய சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைக்காத நாளே இருந்ததில்லை என கூறலாம்.

என்றைக்காவது ஒரு நாள் அவர் மறந்துவிட்டாலும், ‘சார் ஜி.டி. நாயுடுவைப் பத்தி ஒன்னும் சொல்லலையே சார்’ என்போம் கோரசாக.

மாணவ பருவத்திலிருந்த எங்களுக்கு ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை எங்களுடைய ஆசிரியர் கூறும்போது ஒருவேளை சார் ரீல் விடுகிறாரோ என்றும் தோன்றும்.

நட்சத்திர வாரத்தில் நான் கடந்த சில மாதங்களாக எழுதி வரும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ தொடருடன் கூடுதல் பதிப்பாக எனக்குப் பிடித்த தலைவர்கள், அறிவியல் நிபுணர்கள் என எழுதலாமே என்று நினைத்து சென்னையிலுள்ள பிரபல புத்தக கடைகளில் ஏறி இறங்கினேன்.

‘வாழ்க்கை வரலாறு’ என்ற பிரிவில் நான் கண்ட புத்தகங்களுள் ஒன்று திரு.மெர்வின் எழுதிய ‘உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு’ என்ற புத்தகம்.

சட்டென்று எனக்கு பழைய நினைவுகள் திரும்பி வர இவரைப் பற்றி எழுதினாலென்ன என்று தோன்றியதன் விளைவுதான் இந்த நட்சத்திர இடுகை.

ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் எழுதுவதற்காக தரையில் பரப்பி வைத்திருந்த மணலை அள்ளி சிரியர் கண்ணில் வீசிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார். அவருடைய தந்தை எத்தனை முயன்றும் நம் எதிர்கால விஞ்ஞானிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் போய்த்தொலை என்று தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு காவலனாக இருக்கச் செய்தார்.

எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதல் உலகப்போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே லட்சத்து ஐம்பதினாயிரம் சேர்த்து திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களின் தில்லுமுல்லுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கியவர் நாயுடுதான்.

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் பேடண்ட் உரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938ம் வருடம் பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.

ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.

உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

*******

மூலம்: உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு: ஆசிரியர்:மெர்வின்.

என்னைப் பற்றி...

கடந்த மாதம், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு இவ்வார நட்சத்திரமாக இருக்க விருப்பமா என்று கேட்டபோது நானா, நட்சத்திரமா என்று நினைத்தேன்.

ஏனென்றால் நான் என்னுடைய வலைப்பதிவை ஆரம்பித்தே சுமார் நான்கு மாதங்களே ஆகிறது. இதுவரை பெரிதாக ஒன்றும் எழுதிவிடவில்லையே என்றும் நினைத்தேன்.

எதிர்வரும் வாரத்தில் அதுவும் நட்சத்திரமாக, நம் தமிழ்மண நண்பர்களின் பார்வைக்கு என்னுடைய இடுகைகள் முன்வைக்கப்படும்போது அவர்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் வகையில் என்னால் எழுதமுடியுமா என்றெல்லாம் ஒரு சில நிமிடங்கள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

பிறகு, கடந்த சில வாரங்களில் நட்சத்திரங்களாக தேர்வு செய்யப்பட்ட என்னுடைய நண்பர்களின் நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அதில் உள்ள இடுகைகள் சிலவற்றை, முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்த இளம் எழுத்தாளர்களான ஜோ, கோ. ராகவன் போன்றோருடைய பதிவுகளையும் அவர்களைப் பாராட்டி வந்த பின்னூட்டங்களையும் வாசித்தபோது மலைப்பாயிருந்தது.

அவர்களைத் தொடர்ந்து துளசி மற்றும் தருமி அவர்களுடைய பதிவுகளையும் வாசித்தேன். அவர்களுடைய எழுத்துத் திறமைக்கு ஈடுகொடுக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

‘உன்னால் முடியாது’ என்று பதில் வந்தாலும் முயன்றுதான் பார்ப்போமே என்ற தீர்மானத்துடன் என்னை தொடர்பு கொண்ட தமிழ்மணம் நிர்வாகிக்கு சரியென்று பதில் எழுதினேன்.

இதோ, உங்கள் முன்னிலையில் இவ்வார நட்சத்திரமாக....

என்னுடைய முதல் இடுகையில், என்னைப் பற்றி நான் சுருக்கமாக கூற வேண்டுமானால்...

நான் சென்னையில் ஒரு தனியார் வங்கியின் கணினி இலாக்காவின் தலைவராக பணி புரிகிறேன். என் கீழ் சுமார் முப்பது பொறியாளர்கள் சென்னையிலும் கொச்சியில் சுமார் இருபது பேரும் பணிபுரிகிறார்கள்.

எனக்கு ஒரு(!) மனைவியும் இரு மகள்களும்.

மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து அவர் கணவருடன் கோலாலம்பூரில் வாசம். கடந்த இரு வாரங்களாக சென்னையிலிருந்துவிட்டு நேற்றுதான் திரும்பிச் சென்றார்கள்.

இளையவள் கணினி பொறியாளர் படிப்பில் இறுதியாண்டு.

திருமணம் முடிந்த இந்த இருபத்தைந்து வருடங்களில் என் குடும்பத்தாருடன் அதிக பட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ந்து இருந்திருப்பேன். மற்ற நேரங்களில் எல்லாம் வெவ்வேறு நகரங்களில் நானும் சென்னையிலேயே தொடர்ந்து அவர்களும். ரிமோட் கண்ட்ரோலே தேவையில்லாமல் திறம்பட என் குடும்பத்தை நடத்திச் சென்றவர் என் மனைவி.

என் வங்கி அலுவலில் சாதாரணமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றலாகும். ஆனால் எனக்கு தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஒரு ஊரில் இருக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஏன்?

முன்கோபம். அதன் விளைவாக யாருடனும் ஒத்துப்போக முடியாத நிலை. சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் கூட அதீத உணர்ச்சிவசப்படும் குணம்.

திருமணம் ஆன புதிதில் கேட்கவே வேண்டாம்.

ஆயினும் என்னுடைய சிறுபிள்ளைத்தனத்திற்கெல்லாம் பொறுமையுடன் ஈடு கொடுத்து என்னை மெள்ள, மெள்ள ஒரு சராசரி மனிதனாக மாற்றியமைத்த பெருமையும் என் மனைவியையே சாரும்.

இதோ, கடந்த ஐந்தாண்டுகளாக யார் வம்புக்கும் செல்லாமல் நல்ல பிள்ளையாக இருப்பதற்கு என் இரு பிள்ளைகளும் ஒரு பெரிய காரணம்.

என் பிள்ளைகள் இருவரையுமே முழுச்சுதந்திரம் கொடுத்து எந்த ஒரு நொடிப்பொழுதும் ‘நான் ஒரு பெண். என்னால் இவ்வளவுதான் முடியும்.’ என்று நினைக்கலாகாது என்று சொல்லி, சொல்லி வளர்த்தேன்.

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. யார், யாருடைய பேச்சுக்கும் எதிர் பேச்சு பேசலாம் என்ற கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் என் குடும்பத்தில் ஆரம்ப முதலே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன். இளமையில் எனக்குக் கிடைக்காத அரிய சுதந்திரங்கள் அவை!

இன்னொன்றிலும் படு உறுதியாயிருந்தேன். அதான் என்னுடைய குலம் என்ன என்பது என் பிள்ளைகளின் மனதில் ஊன்றிவிடக் கூடாதென்பதில். அது அவர்களுடைய பள்ளி சான்றிதழ்களில் காணப்படும் வெறும் குறிப்பாக மட்டுமே இருந்தது.

என் குலம், மொழி போன்றவை என்னை மற்றவரிடமிருந்து பிரித்துப் பார்க்கும் ஒரு முள்வேலியாகவே நான் கருதுகிறேன். அது என்மேல், என் பெற்றோரால் திணிக்கப்பட்ட ஒன்று. அதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. ஆனால் என்னுடைய திருமணம்? அது நடந்து முடிந்துபோன விஷயம். காலம் கடந்து விசனப்படுவதில் எந்த பலனும் இல்லை.

என் மூத்த மகளுடைய திருமணத்தை நான் அவளுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். என்னுடைய கருத்தும் என் பிள்ளைகளுடைய கருத்தும் ஒத்துப் போனது வசதியாய் போனது. அதனால் என் குடும்பத்திற்குள் பூசல் வந்தபோதும் என் மகளுடைய உறுதி எனக்கும் தொற்றிக்கொள்ள மலேசியவாழ் இந்திய வம்சத்தைச் சார்ந்த மலேசியர் ஒருவரை மணம் புரிந்து பதினைந்து மாதங்கள்...

இதுதான் என்னைப் பற்றிய சுருக்கம்.

சரி, இவ்வாரத்தில் என்ன செய்வதாய் உத்தேசம்..

நான் என்னுடைய ‘என்னுலகம்’ பதிவில் எழுதிவரும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தொடருடன் எனக்குப் பிடித்த சில மாமனிதர்களைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஒரு அறிவியல் வல்லுனர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒரு சமூக சேவகி, ஒரு அரசியல் தலைவர் என வரும் வாரம் முழுவதும் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

என்னுடைய இரண்டாவது வலைப்பதிவான ‘என் கதையுலகம்’ பதிவில் இன்று ஒரு புதிய நாவலைத் துவக்குகிறேன். என்னுடைய வங்கி அலுவலைப் பின்னணியாக வைத்து எழுதுகிறேன்.

இப்பதிவைக் குறித்து தினமலரில் எழுதியலிருந்து எனக்கு தமிழ்மணத்திற்கு வெளியிலும் பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

எனக்கு தளம் அமைக்க வாய்ப்பளித்த ப்ளாகருக்கும் என் இடுகைகளைத் திரட்டி அங்கத்தினர்களின் பார்வைக்கு வைத்த தமிழ்மணம் நிர்வாகி காசி அவர்களுக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்து இத்திரட்டியைத் திறம்பட நடத்திவரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி..

தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..

நன்றியுடன்,
டிபிர். ஜோசஃப்