14 மார்ச் 2014

ஆ ராசாவே! உன்னெ நம்பி.....

முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு இலாக்கா அமைச்சர் ஆ.ராசா அவர்கள் மீண்டும் மக்களவை தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலும் அதில் ராசாவின் பங்கு என்ன என்பதும்  மீண்டும் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சிகளில் Tainted Raja nominated again என்று பேச ஆரம்பித்துள்ளன.
 
இந்த சூழலில்  2012ம் ஆண்டு இந்த வழக்கில்  உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது அந்த  தீர்ப்பை நடுநிலையுடன் நான் விமர்சித்து எழுதிய பதிவை ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன். 

 உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது நான் ஏற்கனவே அனுமானித்திருந்தேன். மேலும் அந்த தீர்ப்பு வெளிவந்தபோது இந்த முடிவு நான் எதிர்பார்த்ததுதான் என்று சுப்பிரமணியம் சுவாமி மகிழ்ச்சியுடன் அறிவித்ததிலிருந்தே தெரிகிறது அவர் எந்த அளவுக்கு உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை அறிந்துள்ளார் என்பது.
 
இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால் ஒரு நீதிமன்றத்தின்  (அது மாநிலங்களிலுள்ள கடைநிலை நீதிமன்றமானாலும் நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றமானாலும்) தலையாய பணி ஒரு வழக்கின் வாத பிரதிவாதங்களை கேட்டு அதன் அடிப்படையில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது மட்டுமே. மாறாக  நாட்டில் நடக்கும் ஊழல்களையோ அல்லது அதிகார துஷ்பிரயோகங்களையோ அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய புகார்கள் எதுவும்  இல்லாமல் விசாரணையில் நேரடியாக இறங்குவதோ அல்லது நாட்டின் புலனாய்வு கழகங்களை அவற்றை விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடுவதோ அல்ல. ஒரு நீதிமன்றம் எவ்வித புகாரும் இல்லாமல் தாமாக முன்வந்து (suo moto) ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஒரு புகாரை தன்னுடைய நேரடி மேற்பார்வையில் புலனாய்வு (Investigation) செய்வது judicial override என்பதல்லாமல் வேறில்லை. அவ்வாறு நாட்டில் நடைபெறும் ஊழல்களை எல்லாம் ஒரு நீதிமன்றம் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை  நடத்துவது என தீர்மானித்து செயலில் இறங்கினால் அதன் தலையாய பணியான நீதிபரிபாலனம் செய்ய அதற்கு போதிய நேரம் இருக்காது. மேலும் ஒரு நீதிமன்றம் உத்தரவிட்ட புலனாய்வின் அறிக்கையை அதுவே தள்ளுபடி செய்துவிடுவதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாயிற்றே?  
 
ஆனால் அதே சமயம் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளையோ அல்லது இந்த வழக்கில் அது வழங்கியுள்ள தீர்ப்பை குறை கூறுவது என்னுடைய நோக்கமல்ல என்பதை மிகவும் தெளிவாக கூற விரும்புகிறேன். அது போன்றே 2ஜி அலைக்கற்றையை ஏ. ராசா ஒதுக்கீடு செய்த விதத்தை "நியாயப்படுத்தும் நோக்கமும் எனக்கில்லை. அவர் செய்தது இமாலய தவறுதான். இத்தகைய முறைகேட்டான ஒதுக்கீட்டால் அவர் தனிப்பட்ட முறையில் ஏதேனும் லாபம் அடைந்தாரா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில நிறுவனங்களுக்கு வேறு சில நெருக்கமானவர்களுடைய பரிந்துரையின் பேரில், தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கும் அதிலுள்ள ஒரு சில தனிநபர்களுக்கும்  பொருளாதார இலாபம் அடைந்து கொடுக்கும் நோக்கத்துடனேயே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தார் என்பது மட்டும் அவராலேயே மறுக்க முடியாத உண்மை.

இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு சில பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வோம்.

1. முதலில் வந்தவருக்கே முதல் உரிமை என்ற அணுகுமுறை அரசியல் சாசனத்தின் 14வது ஷரத்துக்கு எதிரானது என்கிறது தீர்ப்பு.
 
அரசியல் சாசனத்தின் 14வது ஷரத்து என்ன கூறுகிறது?
 
"Equality before law The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth."
 
 
"சட்டத்தின் முன்பு எந்த இந்திய குடிமகனும் தன்னுடைய மதம், இனம், சாதி, பால் மற்றும் பிறப்பிட அடிப்படையில் வேறுபடுத்தப்படலாகாது."

சுருக்கமாக கூறினால் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். இதன்படி பார்த்தால் நாட்டில் எந்த ஒரு ஒதுக்கீட்டையும் செய்யும்போது இந்த 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் செய்ய முடியாதே.
 
ஆனால் இதிலும் உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தை வைக்கிறது.
 
"When it comes to alienation of scarce natural resources like spectrum etc., the State must always adopt a method of auction by giving wide publicity so that all eligible persons may participate in the process. Any other methodology for disposal of public property and natural resources/national assets is likely to be misused by unscrupulous people who are only interested in garnering maximum financial benefit and have no respect..."
 
"ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை போன்ற தேசிய சொத்துக்களைப் பங்கீடு செய்யும்போது அரசு தகுதியுள்ள அனைவரும் பங்கேற்கும் விதமாக ஏல முறையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் வேறு எந்த முறையில் அவற்றை பங்கீடு செய்தாலும் அதை பெற தகுதியற்ற ஒருசிலர் குறிப்பாக அதை உடனே விற்று இலாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அதை தவறான வழியில் பெற்றுவிட வாய்ப்புள்ளது."
 
இந்த வாதத்தை சரி என்று ஏற்றுக்கொண்டால்  தேசிய முற்போக்கு கூட்டணியும் (NDA) இதே முறையில்தானே அலைக்கற்றையை பங்கீடு செய்தது?
 
அது தவறல்லவா? அப்படியானால் அந்த ஒதுக்கீட்டையும் உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்யவில்லை என்று வாதிடுகிறார் அரசு சார்பில் வாதிட்ட சால்வே.
 
அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில்:
 
"The argument of Shri Harish Salve, learned senior counsel that if the Court finds that the exercise undertaken for grant of UAS Licences has resulted in violation of the institutional integrity, then all the licences granted 2001 onwards should be cancelled does not deserveacceptance because those who have got licence between 2001 and 24.9.2007 are not parties to these petitions and legality of the licences granted to them has not been questioned before this Court"
 
"2001 முதல் 2007 வரை அலைக்கற்றையை பெற்ற நிறுவனங்கள் இந்த வழக்கில் சம்பந்தபட்டிருக்கவில்லை. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முறையைப் பற்றியும் இந்த நீதிமன்றத்தில் யாரும் முறையீடு செய்யவில்லை."
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்ணோட்டம் எந்த வகையில் நியாயம்? அதாவது 2001முதல் 2007 வரை கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' என்கிற முறையும் சரியில்லைதான். ஆனால் அதைப்பற்றி யாரும் இதுவரை முறையிடவில்லை என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதுபோலல்லவா இருக்கிறது தீர்ப்பு? நாளைக்கே ஒருவர் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால் என்னாவது? அவற்றையும் ரத்து செய்வதை தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழியுள்ளதா? அவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுடையை அலைக்கற்றை உரிமங்களும் ரத்து செய்யப்படுமானால் வாடிக்கையாளர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது!

2. அலைக்கற்றைக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட தேதி முன்தேதி இட்டு மாற்றியது சட்ட விரோதமானது.

தொலைதொடர்பு இலாக்கா (DOT) அதிகாரி ஏ.கே. ஸ்த்ரீவத்ஸவா (இவரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான்) 24.9.2007 அன்று இலாக்கா அமைச்சரான ஏ.இராசாவுக்கு சமர்ப்பித்த குறிப்பில் அன்றைய தியதியில் இலாக்காவிடம் 12 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 167 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் இத்தகைய மிக அதிக அளவிலான விண்ணப்பங்களை இலாக்கா இதுவரை பரிசீலனை செய்ய வேண்டிய சூழலை
சந்தித்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆகவே இனி அலைக்கற்றை ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பிக்க 10.10.2007ஐ இறுதி தியதியாக முடிவு செய்து
அறிவிக்கலாம் என்று அமைச்சருக்கு பரிந்துரைக்கிறார்.
 
அது என்ன 10ம் தேதி அக்டோபர் முதல் தேதி (why 10th?  It should be 1st Oct.) என்று முடிவு செய்து அறிவியுங்கள் என்று குறிப்பில் (Note) தன் கைபட எழுதி திருப்பி அனுப்புகிறார் இராசா.
 
அதன் படி 25.9.07  பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவருகிறது. 
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏற்கனவே அதாவது 1.10.2007 இறுதி தேதி என்ற அறிவுப்பு வெளிவருகின்ற நேரத்தில், வோடாஃபோன் எஸ்சார், ஐடியா செல்லுலார், டாடா டெலி சர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் 2006ல் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் இலாக்காவிடம் பைசல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தன! மேலும் இந்த இலாக்கா உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த விளக்கம் ஒன்றில் 25.9.07 வரை சுமார் 22 நிறுவனங்கள் 232 உரிமங்களுக்காக விண்ணப்பத்திருந்தன என்று தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் புதிய விண்ணப்பங்கள் பெற வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கே முன்பே நிலுவையில் இருந்ததால் அவையும் 25.9.07 முதல் 1.10.2007 வரை பெறப்பட்ட 467 விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட்டன!
 
அதாவது, முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அரசின் கொள்கையின்படி 2006ல் இலாக்காவின் வசம் நிலுவையிலிருந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில்  உரிமங்களை வழங்கலாம் என்றும்  மீதமுள்ள அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது குறித்து  பிறகு தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்து கைவசமிருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து பைசல் செய்கிறது இலாக்கா.
 
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் விளம்பரம் வெளியிடப்பட்ட தியதியான 25.9.2007 வரை பெறப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் அதற்கு பிறகு சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்பாக ஒதுக்கீட்டைப் பெற தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு பயனடைகின்றனர். இதைத்தான் சட்டத்திற்கு புறம்பானது என்கிறது உச்ச நீதிமன்றம்.
 
ஏனெனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க புதிதாக ஒரு தியதியை அதாவது 1.10.2007 என்று அறிவித்துவிட்டு திடீரென 25.9.2007 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையிட்டு உரிமம் வழங்கியது நியாயமற்றது, இது ஒரு போட்டியை அறிவித்துவிட்டு அதன் ஷரத்துக்களை மாற்றுவதற்கு சமம் என்கிறது நீதிமன்றம். ஏனெனில் முன் தேதியிட்டு உரிமங்களை வழங்கியதன்மூலம் 25.9.07க்குப் பிறகு சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களை தகுதியற்றவர்களாக்கிவிட்டதே. ஆகவே இது  சட்டத்திற்கு புறம்பானது என்பது நீதிமன்றத்தின் வாதம்.
 
இது சரிதானா? அப்படியானால் 25.9.07க்குப் பிறகு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டனவா என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததா என்ற கேள்வி எழுகிறது. மாறாக, அவற்றில் ஒருவருக்கேனும் உரிமம் வழங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் இத்தகைய வாதம் செல்லுபடியாகாதே? மேலும் 25.9.07 அன்று இலாக்கா வசமிருந்த விண்ணப்பங்களும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய ஒதுக்கீட்டுக்குப் பிறகு பெறப்பட்டு அடுத்த ஒதுக்கீட்டிற்காக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தவை என்பதால் அவற்றை எப்படி இலாக்கா நிராகரித்திருக்க முடியும்?
 
நியாயமாக பார்த்தால், புதிதாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்க முடிவெடுக்கும் சமயத்தில் அதுவரை பெறப்பட்டு முடிவெடுக்கப்படாமல் உள்ள விண்ணப்பங்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க இலாக்கா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிறகு அரசின் கொள்கைப்படி முன்வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு வாதத்தை உச்ச நீதிமன்றம் வைத்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
 
நாளையுடன் முடியும்

10 கருத்துகள்:


  1. ஒரு பதிவு எழுதும் முன் நிறையவே spadework மற்றும் homework செய்கிறீரகள் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6:07 PM

    பல தகவல்கள், வித்தியாசமான கோணங்கள், தொடர்ந்து வாசிக்கின்றேன். :)

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வாதம் சரியென்றாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமரிசிப்பதால் நீதி மன்ற அவமதிப்பு என எடுத்துக் கொள்ளப்போகிறார்கள். ஜாக்கிரதை! அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆத்தீ...எம்புட்டு மேட்டர் எல்லாம் உள்ளே இருக்கு !

    பதிலளிநீக்கு
  5. G.M Balasubramaniam said...

    ஒரு பதிவு எழுதும் முன் நிறையவே spadework மற்றும் homework செய்கிறீரகள் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.//
    இந்த தகவல்கள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. தேடுவதற்குத்தான் நேரம் வேண்டும். அதுதான் நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளதே:))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  6. 4:15 PM
    இக்பால் செல்வன் said...
    பல தகவல்கள், வித்தியாசமான கோணங்கள், தொடர்ந்து வாசிக்கின்றேன். :)//

    உண்மைதான். ஆ.ராசாவும் சரி அவர் சார்ந்த திமுகவும் சரி நாங்கள் தவறேதும் செய்யவில்ல என்று கூறிவருகின்றனர். அப்படியானால் தொலை தொடர்பு இலாக்காவில் நடந்ததாக கூறப்படும் அதாவது உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  7. 6:07 PM
    வே.நடனசபாபதி said...
    உங்கள் வாதம் சரியென்றாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமரிசிப்பதால் நீதி மன்ற அவமதிப்பு என எடுத்துக் கொள்ளப்போகிறார்கள். ஜாக்கிரதை! //

    நான் இந்த பதிவை எழுதுவதற்கு முன்பு பல பிரபல ஆங்கில பத்திரிகைகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து எழுதப்பட்டிருந்த பல கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் சில கட்டுரைகள் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கூட கடுமையாக விமர்சித்திருந்தன. ஆகவேதான் இதை எழுதுவதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறை கூறுவது என்னுடைய நோக்கமல்ல என்ற டிஸ்கியை கட்டுரையின் முதல் பகுதியிலேயே வைத்திருக்கிறேனே!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு


  8. :04 PM
    MANO நாஞ்சில் மனோ said...
    ஆத்தீ...எம்புட்டு மேட்டர் எல்லாம் உள்ளே இருக்கு !//

    இதுக்கு மேலயும் இருக்கு. கட்டுரையின் இறுதிப் பகுதியையும் படித்துவிட்டு சொல்லுங்கள். அரசுக்கு ஏற்பட்ட இமாலய இழப்புக்கு உண்மையில் யார் பொறுப்பு என்று!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. மேலோட்டமாகவே இது பற்றி அறிந்து வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு விளங்கும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு