23 மே 2014

இது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா?

அந்த காலத்தில் ஒரு நாட்டில் புதிதாக மன்னர் முடிசூட்டப்படும்போது அந்த நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளின் மன்னர்களை அந்த முடிசூட்டும் விழாவுக்கு அழைப்பார்களாம். அவற்றிற்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். 

முதலாவது உங்களுடைய நட்பும் ஆதரவும் எனக்கு தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவது. 

இரண்டாவது நானும் ஒரு அரசன் என்ற அங்கீகாரம் அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். 

இதற்கும் நம்முடைய நாட்டின் பதினான்காம் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி அந்த விழாவுக்கு தெற்காசிய நாட்டுத் தலைவர்களை எல்லாம் அழைத்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? 

யாரும் சற்றும் எதிர்பார்த்திராத அவருடைய இந்த நடவடிக்கைக்கு நான் மேற் கூறிய இரண்டாவது காரணம்தான் உண்மையான காரணம் என்று நினைக்கின்றேன். உள்நாட்டில் இன்னும் என்னை பலரும் பிரதமராக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகவே நீங்கள் என்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தருவதன் மூலமாக அந்த அங்கீகாரத்தை எனக்கு தாருங்கள், அதனால் உள்நாட்டில் எனக்கு மதிப்பு கூடும் என்கிற எண்ணம்.

இவர் ஒரு இஸ்லாமிய விரோதி ஆகவே இவர் பிரதமரானால் நமக்கு மட்டுமல்லாமல் இந்திய துணைக்கண்டத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் கூட பாக்கிஸ்தானில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஏனெனில் மோடிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடலாம் என்று பாஜக தலைவர் ஒருவரே வெளிப்படையாக கூறியது நினைவிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மோடியை விரும்பாதவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றுதானே? ஆகவேதானே இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டது! இப்படிப்பட்ட சூழலில் நானே பாக்கிஸ்தான் பிரதமரை என்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தால் என்னைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள எண்ணத்தை மாற்றி விடலாம் என்பதுடன் இந்த ஒரேயொரு செயல்பாட்டால் மேற்கத்திய நாடுகளிடம் என்னைப் பற்றி நிலவி வரும் எண்ணத்தையும் மாற்றிவிடலாம் என்றும் மோடி கருதியிருப்பார். ஆனாலும் வெறுமனே பாக்கிஸ்தான் அதிபரை மட்டும் அழைத்தால் இந்த தன்னுடைய எண்ணத்தை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்ற நினைப்பில் அவருக்கு தோன்றிய மாற்று உத்திதான் தெற்காசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அழைப்பது என்ற முடிவு. 

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் (POK) பாக்கிஸ்தான் இராணுவத்தினர் ஒரு இந்திய வீரரின் தலையைத் துண்டித்துவிட்ட செய்தி வெளியான தினங்களிலிருந்து ஒரு சில வாரங்கள் கழித்து பேச்சு வார்த்தைக்காக அந்த நாட்டு வெளியுறவு அதிகாரிகள் குழு நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தது. அப்போது 'நம்முடைய நாட்டு வீரரின் தலையைக் கொய்தவருக்கு தில்லியில் பிரியாணி பரிமாறப்படுகிறது' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் எள்ளி நகையாடியவர்தான் இந்த மோடி. இப்போது என்ன நடக்கிறது? தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே அதே எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் எல்லை மீறி புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி உயிரிழந்தார். அதற்கு இன்னமும் பாக்கிஸ்தான் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அந்த நாட்டு பிரதமருக்கு அழைப்பு செல்கிறது.

இந்திய மீனவர்கள் வடக்கே பாக்கிஸ்தான் கடற்படையினராலும் தெற்கே இலங்கை கடற்படையினராலும் துன்புறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் மத்தியிலுள்ள வலுவற்ற ஆட்சியாளர்களே என்று கூறிவந்த மோடி இப்போது பாக்கிஸ்தான் பிரதமரை மட்டுமல்லாமல் இலங்கை அதிபரையுமல்லவா அழைத்திருக்கிறார்?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மோடியை வாழ்த்துவதற்காக அவரை சந்திக்கச் சென்ற பாஜகவின் கூட்டாளி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நீங்கள் எதைச் செய்தாலும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மட்டும் இந்தியாவுக்குள் விளையாட அனுமதிக்கலாகாது என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்போதே மோடி நான் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய தேவையில்லை என்பதை இவருக்கு காட்ட வேண்டும் என்று எண்ணி அவர்களுடைய கிரிக்கெட் அணியை என்ன அவர்களுடைய பிரதமரையே அழைக்கிறேன் பார் என்று முடிவெடுத்திருக்க வேண்டும். 

இலங்கை அதிபரை அழைக்கவும் இதே எண்ணம் தான் காரணம். ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா முன்நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இலங்கையை ஒரு எதிரி நாடாக கருத வேண்டும் என்று தமிழக சட்ட்மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியதையும் தமிழகத்திலுள்ள கட்சிகள் எதில் உடன்படுகிறார்களோ இல்லையோ ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதுவதில் தங்களுடைய அனைத்து வேற்பாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்பதையும் மோடி அறியாதவரா என்ன? முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராஜபக்சே வெறுப்பை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் பாஜக அப்படியல்ல என்று அவருடன் கூட்டு வைத்து அவருக்காகவே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த தமிழக கட்சிகள் விரும்புவது என்ன என்பதையும் மோடி அறியாதவரா? இருப்பினும் அவர் இப்படியொரு முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? உங்களுடைய எண்ணங்கள் எனக்கு முக்கியமில்லை நான் என் வழியிலேயேதான் செல்வேன் என்று சொல்லாமல் சொல்கிறார். அதுதான் உண்மை. இதை அவர் தூக்கியெறிய விருக்கும் துணை/இணை அமைச்சர் பதவிகளுக்காக காத்திருக்கும் தமிழக கட்சிகள் புரிந்துக்கொண்டால் நல்லது. 

அவருடைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று அவரை எதிர்த்து நான் எழுதி வந்துள்ள பல பதிவுகளிலும் கூறியிருக்கிறேன். இது அவருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ  ஒரேயொரு இடத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அவரை புறக்கணித்தார்கள். அன்புமணி ஜெயித்தது சாதியின் அடிப்படையில் மட்டுமே என்பதால் அதைப்பற்றி இங்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை. ஆக மோடியின் செயல்பாடுகளைப் பற்றி அறியாமல் இருந்தது அவருக்கு துணை சென்ற தமிழக கட்சிகள் மட்டுமே. இவர்கள் தலைகீழாக நின்றாலும், ஏன் அவருடைய பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தாலும் மோடியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவருடைய தாரக மந்திரம் நாட்டின் பொருளாதார மேம்பாடு (economic development) மட்டுமே. `அதற்கு அண்டை நாடுகளுடன் நட்புறவு மிக, மிக அவசியம் என்பது அவருக்கு தெரியும். அதுதான் சரியான தீர்வும் கூட.

தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் அவற்றைக் கடந்து அண்டை நாடுகள் எனப்படும் சீனா,  கிழக்கேயுள்ள ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுடனான நட்புறவும் நமக்கு அவசியம். மேலும் தன்னை உள்ளே வரவேண்டாம் என்று பல  ஆண்டுகள் விசா அளிக்க மறுத்து வந்த அமெரிக்காவை நம்புவதை விட அதற்கு செக் மேட் வைக்கக் கூடிய நாடுகளான, ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் நட்புறவு மிகவும் அவசியம் என்பதும் மோடிக்குத் தெரியும். மோடி குஜராத் மாநில முதலமைச்சரானதும் முதலில் விஜயம் செய்த நாடுகள் ஜப்பானும் சீனாவும்தான். இவர் சீனாவுக்கு சென்று வந்த பிறகுதான் அங்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த குஜராத்தி வைர வியாபாரிகளில் பலர் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுதான் மோடியின் பின்புலம். சீனாவோடு நட்புறவை வளர்த்துக்கொண்டால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அட்டூழியங்களும் குறையும் என்பது அவருடைய நம்பிக்கை. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியத் துணைக்கண்டத்தில் அடாவடி செய்துக்கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் அமெரிக்காவை விட சீனாவுக்குத்தான் அஞ்சுகின்றன என்பதும் சீனாவின் தயவில்தான் இந்த நாடுகளின் பொருளாதாரம் உள்ளன என்பதும் நம்மவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ மோடிக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது. இது காங்கிரசுக்கும் தெரியும், முந்தைய பிரதமர் மன்மோகனுக்கும் தெரியும். ஆனால் துணிந்து நடவடிக்கையில் இறங்க முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளின் நெருக்குதல் அவர்களுக்கு தடையாக இருந்தது. ஆனால் மோடிக்கு அந்த தடை இல்லை. 

இந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் அன்னிய நாட்டின் முதலீடு எவ்வளவு முக்கியமோ நம்முடைய நாட்டு நிறுவனங்கள் அன்னிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்வதும் அங்கு தங்களுடைய வணிகத்தைப் பெருக்குவதும் முக்கியம். இதை மோடி உணர்ந்திருக்கிறாரோ என்னமோ தெரியாது ஆனால் அவருக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ள வர்த்தக முதலாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.  எனக்கு இஸ்லாமிய சிங்கள நாடுகளின் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றால் என்ன அவர்களுடனான வர்த்தக தொடர்புக்கு மதிப்புள்ளதாயிற்றே? நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்? இதுதான் மோடியின் தத்துவம். அதை மக்கள் உணர்ந்திருந்ததால்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அவருக்கு வாக்களித்து சரித்திரம் கண்டிராத வெற்றியை அவருக்கு அளித்துள்ளனர் என்பதை அவருடன் கூட்டு வைத்துள்ள கட்சிகள் உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. அதை விட்டு விட்டு எங்கோ இருக்கும் தமிழனின் நலன்தான் முக்கியம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். 

எங்கோ இருக்கும் தமிழனைப் பற்றிய கவலையை விடுங்கள் எங்களுடைய மீனவர்கள் அநியாயமாக கொல்லப் படுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்கிறீர்களா? அதற்கும் கூடிய விரைவில் ஒரு வழி பிறக்கும். இந்திய கடல் எல்லைகளில் நம்முடைய கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம் தவறுதலாகக் கூட எல்லை தாண்டிச் செல்லும் நம்முடைய மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது ஒன்று மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். மேலும் இத்தகைய இடையூறுகளுக்கு பின்புலமாக இருக்கும் சீனாவின் செயல்பாடுகளும் மோடியின் சீனாவுடனான நட்புறவால் முடிவுக்கு வரும்.

ஆனால் ஆங்கிலத்தில் One should not bite more than one can chew என்பார்கள். அதாவது மென்று விழுங்க முடியாத அளவுக்கு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாதாம்! இதை ஏன் சொல்கிறேன் என்றால் அரசியலிலும் கூட ஆற அமர தீர்க்கக் கூடியவைகளை அவசரப் பட்டு ஒரே சமயத்தில் தீர்க்க முயலக் கூடாது.  இது மோடியின் விஷயத்தில் உண்மையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*********** 


26 கருத்துகள்:

  1. மோடியின் இந்த செயல்கள் சுத்தமான விளரம்பரம்தான். சந்தேகம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. பொறுத்திருந்து பார்ப்போம்....

    பதிலளிநீக்கு
  3. இப்படி பிரச்சினை வருமென்று தெரிந்து இருந்தும் ,நடை முறையில் இல்லாத இந்த வழக்கத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை !அண்டை நாடுகளின் உறவை விட நம் மக்களின் உணர்வை மதிக்க வேண்டியது முக்கியம் அல்லவா ?
    த ம +1

    பதிலளிநீக்கு
  4. நல்ல அலசல், ஆனால் 'எங்கோ இருக்கும் தமிழனைவிட' இந்த வரிகள் உறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  5. //One should not bite more than one can chew என்பார்கள்.//

    உண்மைதான் அதிகம் சாப்பிட்டால் அவதிதான். பொறுத்திருப்போம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. நிதானம் பிரதானம்...

    வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?

    பதிலளிநீக்கு
  7. நிதானம் பிரதானம்...!

    வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?

    பதிலளிநீக்கு
  8. நல்லது நடக்கட்டும் என்று எதிர்பார்க்கலாமே. பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    காலம் விரைவில் பதில் சொல்லும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. பார்வைகள் said...
    மோடியின் இந்த செயல்கள் சுத்தமான விளரம்பரம்தான். சந்தேகம் இல்லை//

    சரியாக சொன்னீர்கள். ஆனாலும் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டுமே. அது மோடியிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இதுதான் அவருடைய பலமும் பலவீனமும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் நாகராஜ் said...
    பொறுத்திருந்து பார்ப்போம்....//

    உண்மைதான். அவருடைய உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் அது நன்மையில் முடிந்தால் நல்லதுதானே?

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. Bagawanjee KA said...
    இப்படி பிரச்சினை வருமென்று தெரிந்து இருந்தும் ,நடை முறையில் இல்லாத இந்த வழக்கத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை !அண்டை நாடுகளின் உறவை விட நம் மக்களின் உணர்வை மதிக்க வேண்டியது முக்கியம் அல்லவா ?//

    இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பிரதமர் பொறுப்பிலிருந்து பார்க்கும்போது அவர் ஒட்டுமொத்த நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமே. பாக்கிஸ்தான் பிரதமரை அழைப்பதில் சிவசேனா போன்ற கட்சிகளுக்கு உடன்பாடில்லை. ராஜபக்சேவை அழைப்பதில் நமக்கு உடன்பாடில்லை. பங்களாதேஷ் பிரதமரை அழைப்பதில் திரினாமூல் காங்கிரசுக்கு உடன்பாடில்லை. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

    பாஜகவை பொறுத்தவரை காங்கிரசுக்கு உள்ள சுமைகள் அதற்கு இல்லை. ஏனெனில் இலங்கையில் நடந்த அக்கிரமங்கள் எதற்கும் அது துணை போகவில்லை. ஆகவே மோடியால் ராஜபக்சேவிடம் கறாராக பேச முடியும். தன்னுடைய மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிடுவதில் மோடி பிரபலமானவர். மன்மோகனைப் போல அவர் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறொருவரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டிய தேவையும் கட்டாயமும் அவருக்கு இல்லை. ஆகவே அவருடைய இந்த முயற்சியில் தவறேதும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது போன்று இலங்கை விவகாரத்தில் ஒரு தீர்வு காண மோடிக்கு சிறிது அவகாசம் அளிக்கத்தான் வேண்டும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கவிப்ரியன் கலிங்கநகர் said...
    நல்ல அலசல், ஆனால் 'எங்கோ இருக்கும் தமிழனைவிட' இந்த வரிகள் உறுத்துகிறது.///

    தமிழக தமிழனுடன் ஒப்பிடுகையில் இலங்கை தமிழன் எங்கோ வாழும் தமிழன்தான். இங்கு வாழும் தமிழர்களில் சிலர் சாதியின் பெயரால் அடித்து கொலை செய்யப்பட்டு தற்கொலை என்று சோடித்துவிடும்போதெல்லாம் இன்று இலங்கைத் தமிழனுக்காக போர்க்கொடி ஏந்தும் சீமான், நெடுமாறன் போன்றவர்கள் ஏன் வாய் மூடி இருந்தனர். அவர்கள் தலித் என்பதால்தானே. இங்குள்ள அரசியல் தலைவர்களின் முதல் கடமை இங்குள்ள தமிழர்களுடைய நலனுக்காகத்தான். அதை பலரும் மறந்துவிட்டு இலங்கை தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. 8:07 PM
    வே.நடனசபாபதி said...
    //One should not bite more than one can chew என்பார்கள்.//

    உண்மைதான் அதிகம் சாப்பிட்டால் அவதிதான். பொறுத்திருப்போம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.//

    அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மோடி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவருடைய இந்த முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று நம்புவோம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. திண்டுக்கல் தனபாலன் said...
    நிதானம் பிரதானம்...

    வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?//

    கண்டிப்பாய் தெரியத்தான் போகிறது. அவருடைய எண்ணம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் விளைவும் நல்லதாகவே இருக்கும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. Packirisamy N said...
    நல்லது நடக்கட்டும் என்று எதிர்பார்க்கலாமே. பொறுத்திருந்து பார்ப்போம்.//

    எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் இதே எண்ணத்துடன் காங்கிரஸ் அப்போது எடுத்த சில முடிவுகளை மோடி பரிகசித்ததும் உண்மைதானே. அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பழனி. கந்தசாமி said...//

    நல்ல ராஜதந்திரம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  18. ரூபன் said...
    வணக்கம்
    ஐயா

    காலம் விரைவில் பதில் சொல்லும்..

    உண்மைதான்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  19. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    போகப் போகத்தான் தெரியும்.//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  20. மதவெறியைத் தூண்டாதவரைக்கும் நல்லது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அபிப்பிராயத்தில் வெற்றி பெற்றவர். நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயலாமலா இருப்பார். சில காலம் கழித்து அவரது செய்கைகளை விமரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன்

    பதிலளிநீக்கு
  21. G.M Balasubramaniam said...

    மதவெறியைத் தூண்டாதவரைக்கும் நல்லது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அபிப்பிராயத்தில் வெற்றி பெற்றவர். நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயலாமலா இருப்பார். சில காலம் கழித்து அவரது செய்கைகளை விமரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன்//

    சரியான கருத்து.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. எங்கோ இருக்கும் தமிழனுக்காக தமிழ்நாட்டு தமிழனின் நலன்கள் பாதிக்க வேண்டுமென்று அவசியமில்லை.தமிழ்நாடு பற்றி எரியும் என்று ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.எதற்காக தமிழ்நாடு பற்றி எரிய வேண்டுமாம்?

    பதிலளிநீக்கு
  23. இந்த பதிவின் மூலம் மிக சுலபமா அரசியலில் லாபமடைவதிற்காக தமிழகத்தையே ஒரு கோமாளிகள் கூடமாகமாற்றிவிட தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் கடுமையா முயற்சிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக தமிழன் நலன்கள் என்றால் இந்திய பாஸ்போட்டில் வெளிநாடுகளில் அவர்களில் குடும்பத்தை முன்னேற்ற சென்று துன்படும் தமிழக தமிழன் துயரங்களை,நலன்களை தமிழக அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. எங்கோயிருக்கும் நாடு இலங்கையில் கூட இந்திய வம்சாவளி மக்கள் தமிழங்க தான் அங்கே வாழும் மக்களில் ஏழைகளாக உள்ளனர். ஆனா இந்திய வம்சாவளி தமிழர்களை விட சற்று முன்பு அங்கே குடியேறிய இந்தியர்கள் தங்களை இலங்கை தமிழர்கள் என்ற பெயரில் அழைத்து கொண்டு அங்கே சிங்களவங்களைவிட வசதியாக வாழ்கிறார்கள்.அவங்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் போராடுகின்றன. தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றுகிறார்களாம். இந்திய அரசையே மிரட்டுவார்களாம்.
    இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மோடிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. திரு வேகநரி அவர்களுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு