ரஹீம்: போன தடவ நாம கூடி பேசினப்போ இலங்கைக்கு இந்த வருசத்தோட பொருளாதார உதவிய அமெரிக்கா 10 சதவீதம் குறைச்சிருச்சின்னு ஜோசப் சொன்னாரே நினைவிருக்கா?
கணேஷ்: ஆமா பாய், அதுக்கென்ன இப்போ?
ரஹீம்: அந்த நியூஸ் வந்த 24 மணி நேரத்துக்குள்ளாறவே அங்க பாஸ்டன் சிட்டியில பாம்ப் வெடிச்சிருக்கு பாத்தீங்களா?
ஜோசப்: (சிரிக்கிறார்) நீங்க என்ன பாய் எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடறீங்க? அது ஒரு தற்செயலா நடந்த சம்பவம்னுதா நான் நினைக்கேன். அதுக்கும் இலங்கைக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.
கணேஷ்: அப்படித்தான் நானும் நினைக்கேன். அப்படிப் பார்த்தா ஏறக்குறைய அதே நேரத்துல இங்க பேங்ளூர்லயும் ஒரு பாம்ப் ப்ளாஸ்ட் நடந்துருக்கே இதுக்கும் இலைங்கைதான் காரணமா இருந்துருக்கும்னு சொல்லலாமா?
ரஹீம்: இருந்தாலும் இருக்கும் யார் கண்டா?
கணேஷ்: அதெல்லாம் இருக்காது பாய். ஆனாலும் இந்த அமெரிக்க உளவுதுறை இவ்வளவு அசால்டா இருந்துருக்கக் கூடாது.
ரஹீம்: எதுக்கு அப்படி சொல்ற?
கணேஷ்: ட்வின் டவருக்கு அப்புறம் அங்க இதுவரைக்கும் இந்த மாதிரி பெரிசா எந்த டெரர்ரிஸ்ட் அட்டாக்கும் நடக்கல இல்லையா, அதனால பெரிசா எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாம அசால்டா இருந்துட்டாங்கன்னு சொல்ல வரேன்.
ஜோசப்: அதென்னவோ உண்மைதான்னு எனக்கும் தோனுது. இல்லன்னா இந்த மாதிரி ஒரு இன்டர்னேஷனல் ஈவென்ட் நடத்தறப்போ ஸ்டார்ட்டிங் அன்ட் ஃபினிஷிங் ஸ்பாட்ல கூடவா செக்யூரிட்டி இவ்வளவு ஸ்லாக்கா (slack)
இருக்கறது? ஃபினிஷிங் லைன்லருந்து ஐந்நூறு அடி தூரத்துக்குள்ளவே ரெண்டு பாம் வச்சிருக்காங்களாமே. அதுவும் எதுல? நாம ரெகுலரா யூஸ் பண்ற ப்ரெஷர் குக்கர்ல! ஒரு பேசிக் செக்யூரிட்டி ஸ்கேன்ல கூட கண்டுபிடிச்சிருக்கக் கூடிய த்ரெட் (threat) இது, என்ன சொல்ற கணேஷ்?
கணேஷ்: ஆமா ஜோசப். இந்த மாதிரி சில்லறைத் தவறுகள FBI மாதிரி ஏஜென்சிகளே செய்யறதுதான் ஆச்சரியமா இருக்கு. ஏறக்குறைய 48 மணி நேரம் ஆகப்போகுது இதுவரைக்கும் சஸ்பெக்ட்டுன்னு சொல்லி யாரையும் அரெஸ்ட் கூட பண்ண முடியலையாம். ஆக்சிடென்ட் ஸ்பாட்ல ரகசிய கேமரா கூட இல்ல போலருக்கு. இல்லன்னா இந்த பாம்ப யார் அங்க கொண்டு வந்து ப்ளான்ட் (plant) பண்ணான்னு தெரிஞ்சிருக்கும் இல்ல?
ஜோசப்: அதுக்கு நம்ம போலீஸ் எவ்வளவோ தேவலை. பங்ளூர்ல பாம்ப் எங்க வச்சா யார் வச்சான்னு சம்பவம் நடந்த அஞ்சாறு மணி நேரத்துக்குள்ள ஒருவிதமா கண்டுபுடிச்சிட்டாங்களே?
ரஹீம்: அப்படியா, யாராம்?
ஜோசப்: அதெல்லாம் இப்போதைக்கு நிச்சயமா சொல்ல முடியாதாம் பாய். அங்க நிறுத்தியிருந்த டூ வீலர்கள்ல ஒன்னுல வச்சிருக்க வாய்ப்புண்டுன்னுதான் சொல்றாங்க. ஆனா அந்த பைக்க அங்க கொண்டு வந்து பார்க் பண்ணிட்டு போன ஆள அங்க வச்சிருந்த வீடியோ காமராவுல பதிஞ்சிருக்கற இமேஜ பாத்து கண்டுபுடிச்சிறலாம்னு போலீஸ் சொல்றாங்க. அதோட அந்த வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர வச்சி அது தமிழ்நாட்டு வண்டின்னும் கண்டுபிடிச்சிருக்காங்களாம்.ஆனா அந்த வண்டியோட நம்பர் இருந்தும் ஓனர கண்டுபிடிக்க முடியலையாம். அப்புறம் எதுக்கு இந்த RTO எல்லாம் கம்ப்யூட்டரைஸ் பண்ணாங்க?
ரஹீம்: அப்புறம்?
ஜோசப்: வண்டிக்குள்ளாற இருக்கற எஞ்சின் நம்பர வச்சி அந்த பிராண்ட் வண்டி விக்கற கம்பெனிய புடிச்சாங்களாம். அவங்க மூலமா அத வித்த டீலர புடிச்சி பாத்தா அந்த வண்டியோட ஓனர் மூனு மாசத்துக்கு முன்னாலதான் அத நான் காஞ்சிபுரத்துல இருக்கற ஒருத்தருக்கு வித்தேன்னு சொல்றாராம். ஆனா வண்டிய வாங்குனவன் இதுவரைக்கும் தன் பேருக்கு மாத்திக்கவே இல்ல
போலருக்கு. இப்ப எவனோ செஞ்ச தப்புக்கு இவர் மாட்டிக்கிட்டா மாதிரி இருக்கு. இதெல்லாம் ஒரு பேசிக் விஷயம். வண்டிய வித்து காச வாங்கிட்டா மத்தும் போறாது. அத முழுசா வித்தவங்க பேர்ல மாத்தி குடுத்துறனும். இல்லாட்டி இப்படி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதுதான். ஆனா அதனாலயே இத முழுசா சால்வ் பண்ணிட்டதா சொல்ல
முடியாதுன்னு நினைக்கறேன்.
கணேஷ்: அப்புறம் இலங்கை விஷயமா இன்னொரு புது நியூஸ் ஜோசப்.
ஜோசப், ரஹீம்: அப்படியா, அது என்னதுய்யா?
கணேஷ்: தன் கையில் இருக்கும் தினமணி நாளிதழை விரிக்கிறார்: இதுல வந்த ஒரு ஆர்டிக்ள்ல இலங்கை பிரசிடென்ட் ராஜபக்ஷேயோட குடும்பத்துல இருக்கறவங்க எப்படியெல்லாம் இலங்கை அதிகாரத்த வளைச்சி போட்டுருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க.
ஜோசப்: என்ன கட்டுரை அது, படிங்க கேப்போம்?
கணேஷ்: ஆக்சுவலா கட்டுரை வந்து இப்ப உலக நாடுகள்ல அதிகாரத்துல இருக்கறவங்களோட குடும்ப அரசியலப் பத்திதான். இங்க நேரு குடும்பம், உ.பியில முலாயம் குடும்பம், மஹாராஷ்டிராவில பவார், கர்நாடகாவுல எடியூரப்பா, அப்புறம் நம்ம ஊர் கலைஞர் குடும்பம் அப்படீன்னு சொல்லிக்கிட்டே வந்து கடைசியில ராஜபக்ஷேவ பத்தி டீட்டெய்லா
மென்ஷன் பண்ணிருக்காங்க.
ரஹீம்: அத அப்படியே படியேன் கணேஷ்.
கணேஷ்: சரி, சரி, முழுசையும் படிச்சா ரொம்ப நேரம் ஆவும். அதனால ராஜபக்ஷேவ பத்தி சொல்லியிருக்கறத மட்டும் வாசிக்கிறேன்.
"இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச இலங்கையின் குடியரசுத் தலைவர்,
அவரது தம்பி கோத்தபய ராஜபட்ச ராணுவ அமைச்சகத்தின் செயலாளர்,
இரண்டாவது தம்பி பாசில் ராஜபட்ச பொருளாதார மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்,
நான்காவது தம்பி சமல் ராஜபட்ச அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர்,
ராஜபட்சவின் மருமகன் சசீந்தர ராஜபட்ச, உவி மாநிலத்தின் முதன்மந்திரி,
நாடாளுமன்ற அவைத்தலைவர் சமல்,
ராஜபட்சவின் மகன் சமீந்தர ராஜபட்ச, ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் டைரக்டர்,
மகிந்த ராஜபட்சவின் மருமகன்கள்:
ஜலியா விக்ரமசிம்கா அமெரிக்காவில் இலங்கை அரசின் தூதர்,
உதய விக்ரமசூரியா ருஷியாவில் இலங்கை அரசின் தூதர்,
பிரசன்ன விக்ரமசூரியா விமான நிலையங்களின் சேர்மன்,
மகிந்த ராஜபட்சவின் மைத்துனர் நிஷாந்த விக்ரசிங்கா ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் சேர்மன்."
ரஹீம்: அடேயப்பா, பஞ்ச பாண்டவர் குடும்பம் மாதிரி இவருக்கும் நாலு தம்பிங்க போலருக்கு. இந்த லிஸ்ட்டுல மூனாவது தம்பி பேரதான் காணம். அந்த காலத்துல இருந்தா மாதிரி ராஜபக்ஷே குடும்பம் ஒரு அரச குடும்பம்தான் போலருக்கு. இதுக்கு நம்ம ஆளுங்களே தேவல போலருக்கே?
கணேஷ்: (சிரிக்கிறார்) ஆமா பாய். கலைஞர் அம்பது வருசமா அரசியல்ல இருந்தாலும் ரெண்டு மகன்கள தவிர வேற எந்த குடும்பத்தாரையும் அரசியலுக்கு இழுத்து விடல. அத்தோட, ஸ்டாலின், அழகிரி ரெண்டு பேருமே
அடிமட்டத்துலருந்து வேல செஞ்சி வந்தவங்கதான்னு நினைக்கறேன்.
ரஹீம்: அப்போ கனிமொழி?
கணேஷ்: அது ஒரு எக்செப்ஷன் (exception) பாய். ஆனா அந்தம்மாவையும் நேரடியா அமைச்சராக்கலையே. எலெக்ஷன்ல நின்னு ஜெயிச்சி பார்லிமென்ட்டுக்கு போனாங்க. அவ்வளவுதான?
ஜோசப்: அப்புறம், நம்ம நரேந்திர மோடி விஷயத்துல புதுசா ஒரு திருப்பம் வந்துருக்கு படிச்சீங்களா?
கணேஷ்: படிக்கறதுக்கு முன்னால பாக்கவும் செஞ்சேன். முந்தா நேத்து ராத்திரி ஹெட்லைன்ஸ் டுடே சானல்ல காம்ச்சான அதானே?
ஜோசப்: ஆமா அதேதான். இன்னைக்கி பேப்பர்ஸ்லயும் டீட்டெய்லா வந்துருக்கு. இந்த விஷயமா செட்டப் (set up) பண்ண special investigation team (SIT) மோடிக்கு எதுவுமே தெரியாதுங்கறா மாதிரி குடுத்த ரிப்போர்ட்ட
சுத்த ஃப்ராடுங்கறா மாதிரி field levelலருந்து போலீசும் செக்யூரிட்டி ஸ்டாஃபும் (security staff) அவங்க ஹையர் அப்சுக்கு (higherups) சரமாரியா அடுத்தடுத்து கைபட எழுதி அனுப்புன spot reports எல்லாம் இப்ப வெளியில வந்துருச்சி.
ரஹீம்: அப்படியா? அந்த ரிப்போர்ட்லாம் அழிஞ்சிருச்சிங்கறா மாதிரில்ல இதுவரைக்கும் சொல்லிக்கிட்டு இருந்தானுங்க?
ஜோசப்: அதுவும் ஒரு செட்டப்தான் பாய். உண்மை மெதுவாத்தான் வெளியில வரும்னு சொல்வாங்க, கேள்விப்பட்டதில்ல? அதுமாதிரிதான் இதுவும். இதுக்கும் மோடி தரப்புலருந்து புதுசா ஏதாச்சும் பதில் வரும் பாருங்க.
ரஹீம்: எது எப்படியோ இந்த மோடி மட்டும் பிரதமரா வந்துறக் கூடாது ஜோசப்.
ஜோசப்: (சிரிக்கிறார்) பார்ப்போம் இந்த லேட்டஸ்ட் ஸ்கூப்ப (scoop) அவரு எப்படி சமாளிக்கிறார்னு முதல்ல பார்ப்பம். அத்தோட அவரு பி.எம் கேன்டிடேட்டா நிக்கறதுக்கு கட்சிக்குள்ளவே அவ்வளவா சப்போர்ட் இல்ல போலருக்கே. போறாததுக்கு நிதிஷ் குமார் வேற அவர நிறுத்துனா நா கூட்டணியில இல்லேங்கறா மாதிரி சீன் காட்றாரே.
கணேஷ்: எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு ப்ரீப்ளான்ட் எலெக்ஷன் ஸ்டன்ட்டுன்னு படுது. நீங்க வேணும்னா பாருங்க கடைசியில அவர்தான் பி.எம் கான்டிடேட்டா நிப்பாரு.
ரஹீம்: எதுக்கு அப்படி சொல்றே? அவர நிறுத்துனா எங்கள மாதிரி சிறுபான்மை ஆளுங்க யாரும் ஓட்டு போட மாட்டோம் தெரியுமில்ல?
கணேஷ்: நீங்களே சொல்லிட்டீங்க பாய்... சிறுபான்மையினர்னு. நீங்க மைனாரிட்டிதான். மெஜாரிட்டி ஹிந்துஸ்தானே அவங்களுக்கு இவர் மேல என்ன ஆட்சேபனை இருக்கப் போவுது, என்ன ஜோசப்?
ஜோசப்: நீங்க சொல்றதும் ஒரளவுக்கு உண்மைதான் கணேஷ். இல்லன்னா குஜராத்ல நடந்த கலவரத்துக்கு பின்னால
இவர்தான்னு அங்க இருக்கற மெஜாரிட்டி ஹிந்துஸ்க்கு தெரியாமயா இருக்கும்? அப்படியும் தொடர்ந்து மூனு தரம் அவருக்கே ஓட்டு போட்டுருக்காங்களே? அப்போ நேஷனல் லெவல்லயும் அதே மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயம்?
ரஹீம்: அடப்போங்கய்யா நீங்களும் ஒங்க வியாக்கியானமும். அந்த ஆள மட்டும் பி.எம்மா நிறுத்தட்டும் அப்புறம் பாருங்க நடக்கறத. எனக்கு வேற வேலை இருக்கு நா வரேன்.
அவர் கோபத்துடன் எழுந்து வீட்டிற்குள் நுழைய செய்வதறியாது சிறிது நேரம் அமர்ந்திருக்கின்றனர் மற்ற இருவரும்.
கணேஷ்: எதுக்கு பாய்க்கு இவ்வளவு கோவம் வருது ஜோசப்? நா சும்மா ஒரு பேச்சுக்குத்தான சொன்னேன்?
ஜோசப்: சரி விடுங்க கணேஷ். இவர் கோவம் எத்தன நாளைக்கி? நா அப்புறமா ஃபோன்ல பேசி பாக்கேன். வாங்க போலாம்.
இருவரும் சாலையில் இறங்கி பேசிக்கொண்டே செல்கின்றனர்.
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக