11 ஏப்ரல் 2013

திண்ணை - நாட்டு நடப்பு - அலசல்


ரஹீம்: என்னய்யா கணேசு, நேரத்தோட வந்துட்டீரு. இன்னைக்கி மழைதான்.

கணேஷ்: பாய், ஒன்னெ எத்தன தரம் கணேசுன்னு கூப்டாதேன்னு சொல்றது? எம்பேரு கணேஷ்யா.

ரஹீம்: சரி, சரி, ஏதோ ஒன்னு. என்ன இன்னைக்கிம் ஜோசப் லேட்தானா?

தொலைவில் ஜோசப் வருவதை பார்க்கிறார் கணேஷ்.

கணேஷ்: (ஜோசப் அருகில் வந்ததும்) ஒங்களுக்கு ஆயுசு நூறு ஜோசப், இப்பத்தான்...

ஜோசப்: (சிரித்தவாறே திண்ணையில் அமர்கிறார்) என்ன இன்னைக்கிம் என் மண்டைய உருட்றாரா பாய்?

ரஹீம்: அதெல்லாம் இல்லைய்யா...  இன்னைக்கி என்ன புதுசா நியூஸ்?

ஜோசப்: இந்த ஸ்டூடன்ஸ்ச நினைச்சாத்தான் பாவமா இருக்கு.... அவங்களுக்கு ஒட்டு மொத்தமா போறாத காலம் போலருக்கு.

கணேஷ்: என்ன ஜோசப் சொல்றீங்க?

ஜோசப்: போன வாரம் முழுசும் வந்த நியூஸ பாத்தா அப்படித்தானே தோணுது? பத்தாம் வகுப்பு பசங்களோட ஆன்ஸர் ஷீட் மாயம், கொல்கொத்தாவுல ஒரு ஸ்டூடன்ட பஸ்சுலருந்து இறக்கி போலீஸ் அடிச்ச அடியில செத்தே போய்ட்டான்...

ரஹீம்: உண்மைதான் ஜோசப். ஆனா கடவுளுக்கே அட்றஸ் எதுன்னு தெரியாம பசங்க முழிச்சது? கொடுமையிலும் கொடுமைய்யா... இப்படியெல்லாமா பசங்கள போயி சோதிப்பாங்க?

கணேஷ்: என்னது கடவுளுக்கு அட்றஸா? என்ன பாய் சொல்றீங்க?

ரஹீம்: அட, ஆமாய்யா. கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுன்னு ஒரு கேள்வி... கடவுள்னு இருக்கறது பசங்களுக்கு தெரியும்னு வச்சிக்குவம். ஆனா எந்த அட்றசுக்குன்னு பசங்க எழுதுவாங்க?

ஜோசப்: அது பெரிய விஷயமில்ல பாய். தூண்லயும் இருப்பான் துரும்புலயும் இருப்பான்னுதான் பசங்க கேள்விப்பட்டிருப்பாங்க. ஆனா  இதுல ஒரு விஷயம். கடவுள், மதம்கறதெல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விஷயம். கடவுளே இல்லைன்னு சொல்றவங்களும் இருக்கறப்போ இந்த மாதிரி கேள்வியெல்லாம் ஒரு அரசு நடத்தற பரீட்சையில கேக்கறது எந்த விதத்துல நியாயம்?

கணேஷ்: சரியா சொன்னீங்க ஜோசப். இதெல்லாம் சுத்த கேணத்தனமா இருக்கு..

ரஹீம்: சரி ஜோசப். போன வாரத்துல இதையெல்லாம் விட முக்கியமா பேசப்பட்டது என்ன தெரியுமா?

ஜோசப்: நீங்களே சொல்லுங்க பாய்.

கணேஷ்: அடுத்த பிரதமர் நாந்தான், நாந்தான்னு சொல்லிக்கிட்டு திரியற மோடிய பத்திதானே பாய் சொல்ல வறீங்க?

ரஹீம்: அட, ஆமாய்யா. இன்னும் தேர்தல் வர்றதுக்கு முழுசா ஒரு வருசம் இருக்குதுங்கறாங்க. எதுக்கு இப்பருந்தே இவரு ஆலா பறக்கறாருன்னுதான் தெரியல.

ஜோசப்: மொதல்ல அவங்க கட்சியிலேயே இவர்தான் பிரதமர் கேன்டிடேட்டுன்னு கூட சொல்லலையே, அத கவனிச்சீங்களா?

ரஹீம்: அத விடுங்க. அந்த கட்சியில இருக்கற எல்லாருக்குமே பிரதமராகனும்னுதான் ஆசை. அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ்... ஏன் வெங்கய்யா நாயுடுக்குக் கூட ஆசை இருக்கத்தான் செய்யிது. இவங்கள்ல இருக்கறதுலயே ஜூனியர் இந்த மோடி. குஜராத்ல அத செஞ்சேன்னு, இத செஞ்சேன்னு சொல்லிக்கிட்டு அலையறாரு... குஜராத்லதான் இஸ்லாமியர் சமூகம் செழிப்பா, பாதுகாப்பா இருக்குன்னு வேற சொல்லிக்கிறாரு...

கணேஷ்: சரிதானே பாய்... கோத்ரா சம்பவத்துக்கப்புறம் அங்க போன பத்து வருசத்துல பெருசா ஏதும் இந்து-முஸ்லீம் கலவரம் நடக்கலதானே?

ஜோசப்: இருக்கலாம் கணேஷ்.. ஆனா குஜராத்லயும் பெரிய பண முதலாளிங்களுக்குத்தான் இவர் சலுகைகளை வாரி குடுத்து இருக்காரு... அதனால அரசுக்கே பல கோடி நஷ்டம்னு தலைமை கணக்கரோட ரிப்போர்ட் சொல்லுதே. பெரிய தொழிற்சாலை எல்லா மாநிலத்துக்கும் அவசியம்தான், ஒத்துக்கறேன் ஆனா உற்பத்தி ஜாஸ்தியானா மட்டுமே போறாதே. ஸ்டேட்ல இருக்கற ஏழைங்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கணும் இல்ல?

ரஹீம்: கரெக்ட் ஜோசப். அது மட்டுமில்ல. ஒரு சின்ன ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேஷன் போலவா ஒரு கன்ட்ரிய மேனேஜ் பண்றது? முதல்ல இவர் ஒரு முக்கியமான சென்ட்ரல் மினிஸ்ட்ரியில மினிஸ்டரா இருக்கட்டும். முக்கியமா தொழில் மந்திரியாவோ அல்லது எனர்ஜி மந்திரியாவோ இருந்து செஞ்சி காட்டட்டுமே. ஒரு ஸ்டேட் சிஎம்மா இருந்துட்டு நேரே பிஎம் ஆவறேன்னா எப்படி? ஏன் நம்ம மேடத்துக்கு கூடத்தான் அந்த ஆசை இருக்கு? என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: (சிரிக்கிறார்) கரெக்டா சொன்னீங்க பாய்.

கணேஷ்: (சற்று கோபத்துடன்) அப்போ ராகுல் மட்டும் தகுதியானவரா?

ஜோசப்: யார் சொன்னா? அது காங்கிரஸ்காரங்க சொல்றதுதானே! அவரு போன வாராம் சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல பேசுனத பார்த்தா அவருக்கு அவ்வளவா விவர ஞானம் இல்ல போலருக்கே! வெறுமனே இங்லீஷ்ல சரளமா பேச வந்தா போறுமா?

ரஹீம்: ஆமாய்யா. மோதி பிஎம் ஆவறதுக்கு ஒரு அஞ்சி வருசம் காத்திருந்தா போறும்னா ராகுல் இன்னும் ஒரு இருபது வருசமாவது காத்திருக்கணும். மொதல்ல அவர ஒரு குட்டி மினிஸ்டிரிக்காவது இன்டிபென்டன்ட் சார்ஜ் எடுக்க சொல்லணும் ஜோசப். அதுக்கே திராணியில்லாம ஓடி ஒளியறாரு. இந்த லட்சணத்துல பிஎம் போஸ்ட் குடுத்தா, நாடு குட்டிச்சுவர்தான்.

கணேஷ்: சரி பாய். இவரும் வேணாம், அவரும் வேணாம்னா அப்புறம் யார்தான் லாயக்குன்னு நீங்களே சொல்லுங்க!

ரஹீம்: (சிரிக்கிறார்) கோவப் படாதய்யா. மொதல்ல நம்ம நாட்டுல ஜனங்களே டைரக்டா பிரதமர எலெக்ட் பண்ற மாதிரி எலெக்ஷன் ரூல்ஸ்ல சேஞ்ச் வரணும்.

கணேஷ்: (சிரிக்கிறார்) அதெல்லாம் நடக்கற கதையா பாய்?

ரஹீம்: (கோபத்துடன்) யோவ் கணேசு, நக்கலா சிரிக்காத. விஷயத்துக்கு வா, ஏன் நடக்காதுங்கறே?

ஜோசப்: கணேஷ் சொல்றதுலயும் நியாயம் இருக்கு பாய். இங்க பாதிக்கி மேல படிப்பறிவு இல்லாத ஜனங்க. கட்சி சின்னத்த பாத்துத்தான் ஓட்டு போட்டு பழக்கம். இவங்கக் கிட்ட போயி ஆள பாத்து ஓட்டு போடுங்கன்னு சொன்னா எப்படி பாய்?

ரஹீம் (கோபத்துடன்) ஏன் போன தடவ நாம நகராட்சி மேயர்ங்கள டைரக்டா எலெக்ட் பண்ணலையா?

கணேஷ்: உண்மைதான் பாய். ஒத்துக்கறேன். ஆனா சென்னை மேயர் போஸ்ட்டுக்கு சைதை துரைசாமின்னா யாருன்னு தெரிஞ்சிதான் ஓட்டு போட்டாங்கன்னு சொல்றீங்களா?

ரஹீம்: (எரிச்சலுடன்) பின்னே?

கணேஷ்: நீங்க வேணும்னா தெரிஞ்சி போட்டுருக்கலாம் பாய். ஏன்னா நீங்க இருக்கறதே சைதாப்பேட்டையிலதான். ஆனா எத்தன பேருக்கு அவர  உண்மையிலயே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறீங்க? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் ஒரு கவுன்சிலரா கூட இல்லாம இருந்தவருக்கு எப்படி பாய் ஜனங்க மேயர் பதவிக்கு போட்டிருப்பாங்க? எல்லாம் அம்மா  கட்சிங்கறதாலதான் பாய். அத முதல்ல புரிஞ்சிக்குங்க.

ஜோசப்: அவர் சொல்றது சரிதான் பாய். எனக்கே அவர இதுக்கு முன்னால தெரியாது. இப்பவும் சொல்றேன். அவர் அவங்க கட்சி கவுன்சிலருங்களயே கார்ப்பரேஷன் மீட்டிங்ல கன்ட்ரோல் பண்ண முடியாம திணர்றத பாத்தா அவர் எந்த அளவுக்கு சக்சஸ்ஃபுல்லா இந்த போஸ்ட்ல ஃபங்ஷன் பண்ண முடியும்னு சந்தேகமாத்தான் இருக்கு.

ரஹீம்: சரிங்க.. அப்ப யார்தான் அடுத்த பிரதமர்?

ஜோசப்: இங்லீஷ்ல ஒன்னு சொல்வாங்க. Known devil is better than the unknown angelனு. அதாவது தெரியாத தேவதைய விட தெரிஞ்ச பிசாசே தேவலைன்னு. அதுமாதிரி இப்ப இருக்கறவரே மறுபடியும் வந்தா போறும்னுதான் எனக்கு தோனுது.

கணேஷ்: (எரிச்சலுடன்) எது, வெளிக்கி போறதுக்குக்கூட பத்து தரம் யோசிக்கற சிங்கையா?

ஜோசப்: (அதிர்ச்சியுடன்) என்ன கணேஷ்... ஒரு கவர்மென்ட் ஆஃபீசரா இருந்து ரிட்டையர்ட ஆனா நீங்களா பாமரத்தனமா இப்படி கேக்கறது? இத நா உங்கக் கிட்டருந்து எதிர்பார்க்கல.

கணேஷ்: சாரி ஜோசப்... வாய் தவறி வந்துருச்சி... ஆனா இந்த சிங் எல்லாத்துக்குமே யோசிச்சி, யோசிச்சி டிசைட் பண்றவராச்சேங்க... இன்னும் அஞ்சி வருசத்துக்கு இவரே வந்தா பங்களாதேஷ்காரன் கூட நம்மள பாத்து பயப்படமாட்டான். சிங்களவன கேக்கவே வேணாம்..

ரஹீம்: கணேஷ் சொல்றது சரிதான் ஜோசப்..

ஜோசப்: இப்பத்தைக்கி இவர விட்டா வேற யாரும் எலிஜிபிளா இருக்கறா மாதிரி எனக்கு தெரியல.

கணேஷ்: ஏன், நம்ம சிதம்பரத்துக்கு என்னாச்சி?

ஜோசப்: அவர் டேலன்டட்தான், க்னாலட்ஜபிள்தான்... ஆனா மனுசனுக்கு பொறுமையில்லையே... போறாததற்கு அவர் மேல நிறைய புகார் இருக்கே... ஒரு சிஎம் கூடயும் ஒத்துப் போக மாட்டார். நம்ம மேடத்தோட பரம எதிரி வேற. அவர யார்ங்க சப்போர்ட் பண்ணுவா?

ரஹீம்: நீங்க சொல்றதும் சரிதாங்க... இன்னைக்கி சென்ட்ரல் மினிஸ்ட்ரியில இருக்கற யாருக்குமே அடுத்த டெர்ம்ல பிஎம் ஆவற தகுதி இல்லேன்னுதான் நினைக்கறேன்.

ஜோசப்: அப்ப நம்மள பொருத்தவரைக்கும் அடுத்த எலெக்ஷன்ல காங்கிரஸ் ஜெயிச்சி வந்தா சிங்தான் பி.எம். சரிதானே?

கணேஷ்: (சிரிக்கிறார்) கடைசியில சொன்னீங்களே சரியான பஞ்ச் ஜோசப்.

ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா பஞ்ச்?

கணேஷ்: அதான் சொன்னாரே காங்கிரஸ் ஜெயிச்சி வந்தான்னு...

ரஹீம்: சரிய்யா... ஒங்க பிஜேபி வருதுன்னு வச்சிக்குவம்... யார் வருவான்னு நினைக்கே... நிச்சயமா மோடி வரமாட்டாரு..

கணேஷ்: பின்னே?

ரஹீம்: ஒன்னு அத்வானி இல்லன்னா சுஷ்மா ஸ்வராஜ்...

ஜோசப்: எனக்கும் அப்படித்தான் படுது...

ரஹீம்: (எழுந்துக்கொள்கிறார்) சரிங்க, எனக்கு இன்னைக்கி சீக்கிரம் கடைக்கி போவணும்... அடுத்த வாரம் பாக்கலாம்..

ஜோசப்பும் கணேஷும் திண்ணையிலிருந்து இறங்கி நடக்க பாய் அவர்கள் தெருமுனை சென்று திரும்பும்வரை பார்த்தவாறு நிற்கிறார்.

*******



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக