16 ஜூலை 2010

ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன்!!

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5

3. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது

குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல.

ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே.

இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!

இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?

ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.

கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.

மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!

4. பணிக்கு செல்லும் பெண்கள்

மேற்கூறிய அனைத்தும் பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது.

குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில.

எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை.

இதை எப்படி எதிர்கொள்வது?

அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது

புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!

ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்

சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.

வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?

வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை.

நிறைவுபெறுகிறது.

3 கருத்துகள்:

  1. I am continuously reading your posts and getting lot of informations which I can't gain through my present experience so kindly keep on your valuable service.

    Thank you,

    Regards,
    Ilamparithy,
    Malaysia

    பதிலளிநீக்கு
  2. Thanks Parithy.

    I am planning to write a few உளவியல் கட்டுரைகள் titled மனசு in the coming week. It would look deep into our Mind and its thoughts...

    பதிலளிநீக்கு
  3. I am very eager to read it.

    Thank you.

    பதிலளிநீக்கு