14 ஜூலை 2010

சார் லீவ் வேணும்!

இ) அவ்வப்போது விடுப்பில் செல்வது

அலுவலக அலுவல்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு அட்டெண்டன்ஸ் என்ற விருது அளிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு அவருடைய பள்ளியில் 'hundred percent attendance' விருது கிடைத்ததென்று பெருமையுடன் அலுவலக நண்பர்களுக்கு ஒரு விருந்தே அளித்து கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. அவரும் அப்படித்தான். வருடத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திற்கு வருவதில் குறியாயிருப்பார். இதைத்தான் gene கோளாறு என்கிறோம். அதாவது வம்சாவழி குணநலன்கள். இத்தகையோருக்கு தான் இல்லாவிட்டால் அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் என்று நினைப்பு. எப்போதாவது உடல்நலக் குறைவினால் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் வீட்டிலிருந்தவாறே மணிக்கொரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு remote control செய்ய முயலுவார்கள். இத்தகையோர் தங்களுடைய அலுவல்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார்கள் என்று பொருளாகாது. இவர்களுடைய நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதுபோலவும் தோன்றும். எங்கே நாம் செய்கிற தவறுகளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவரேனும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்கிற ஒருவித அச்சம் இருப்பது போலவும் தோன்றும். ஆகவே எங்களுடைய வங்கியில் கிளை மேலாளர்கள் வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நியதியை அறிமுகப்படுத்தியது.

அலுவலக சூழல்களிலிருந்து மட்டுமல்லாமல் வீட்டு சூழல்களிலிருந்தும் அவ்வப்போது மாற்றம் தேவை. இல்லையென்றால் ஒருவித சலிப்பு மனதில் குடிகொள்ள வாய்ப்புள்ளது. வருடம் ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவருவது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றால் மிகையல்ல. பெரும் பொருட்செலவுடன் நீண்ட தூரப் பயணம் சென்று வரவேண்டும் என்றில்லை. எவ்வளவு தொலைவு அல்லது எங்கு செல்கிறோம் என்பதல்ல முக்கியம். ஆனால் வெளியூர் செல்கிறேன் என்று அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் 'don't worry I will always be available in my cell phone' என்று கூறிவிட்டு செல்வதில் எவ்வித பயனும் இல்லை. சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அவருடன் வெளியூர் செல்லும் அனைவருக்குமே அவர் ஒரு தொல்லையாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. 'விடுப்பு' என்ற சொல்லிலேயே அன்றாட சூழலில் இருந்து 'விலகி' இருப்பது என்கிற பொருள் இருப்பதை கவனத்தில் கொண்டு இயன்றவரை விலகியிருந்தால் விடுப்பின் முழு பலனை அனுபவிக்க முடியும். மீண்டும் புத்துணர்ச்சி பெற்று திரும்பி தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் முடியும்.

ஈ) 'முடியாது', 'இல்லை' என்பதை தெளிவாக சொல்வது


இறைவன் ஒருவரால் மட்டுமே எதைக் கேட்டாலும் செய்ய முடியும் (அதாவது அப்படியொருவர் உள்ளார் என்பதை நம்புபவர்களுக்கு!). நம்மில் பலருடைய மன அழுத்தத்திற்கு மூல காரணமே நம்மால் செய்ய இயலாதவற்றையும் சரி என்று ஏற்றுக்கொள்வதுதான் என்றால் மிகையல்ல. 'என்னால் முடியாது' என்கிற சொல்லே என்னுடைய அகராதியில் இல்லை என்று கூறிக்கொள்வதை ஒருவித பெருமையாக கருதுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நம்மால் சிலவற்றைத்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும். இதற்கு நம்முடைய செயல்திறன் (physical ability) மட்டுமல்ல மனத்திறனும் (Mental ability) ஒரு காரணம். உடல் வலிமையால் இயலாதவற்றை மனவலிமையால் சாதித்துவிடலாம் என கருதுபவர்களும் உண்டும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது. நூற்றில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒருவேளை சாத்தியமாகலாம். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் அவனால் செய்யவியலாத காரியங்கள் பல உண்டு. அதை செய்கிறேன் என ஏற்றுக்கொண்டு அதை சரிவர செய்து முடிக்கவியலாமல் போகும்போதுதான் தேவையற்ற மன அழுத்தத்திற்குள்ளாகிறான்.

வானத்தை ஆடையாக கேட்கும் மனைவியையோ 'மலையையே போய் விற்றுவிட்டு வா' என்கிற உயர் அதிகாரியையும் திருப்திப்படுத்த முயன்றால் தோல்வி நிச்சயம்தானே!

'How to say NO' என்கிற தலைப்பில் பல மேலாண்மை ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளதை இணையதளங்களில் காணலாம். ஏனெனில் இது மிக அவசியமான மேலாண்மை தகுதிகளில் ஒன்று என்கின்றனர் பல வெற்றிபெற்ற சாதனையாளர்கள்.

தங்களால் இயலாதவற்றை மிக சாதுரியமாக, நாசூக்காக கேட்பவர் மனம் புண்படாதவாறு கூறக்கூடியவர்களே மேலாண்மை அல்லது அதிகார ஏணியில் மிக உயர்ந்த படியை அல்லது நிலையை எட்டக் கூடியவர்கள் என்றாலும் மிகையாகாது.

அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு சுமுகமான சூழலை உருவாக்க இந்த திறமை மிகவும் உதவுகிறது. 'உங்களால நான் கேட்டத வாங்கித்தர முடியலன்னா அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. எதுக்கு இத்தன நாள் இழுத்தடிச்சிட்டு இப்ப ஏமாத்தறீங்க?' என்றுதான் பல குடும்பங்களில் வாக்குவாதம் துவங்கும். 'எங்கப்பா முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிருவார் உங்கப்பா மாதிரி இழுத்தடிச்சிட்டு கடைசியில ஏமாத்த மாட்டார்.' இத்தகைய தந்தைகளின் பிள்ளைகளும் வாழ்க்கையில் எது தங்களால் முடியும் எது முடியாது என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்வர். முடியாது என்று கூறுகையில் ஏற்படுகின்ற ஏமாற்றம் ஓரிரு தினங்களில் மறைந்துவிடக் கூடும். மாறாக இன்று கிடைக்கும், நாளை கிடக்கும் என காத்திருத்தலால் ஏற்படும் ஏமாற்றம் அத்தனை எளிதில் மறைவதில்லை.

எட்டிப்பிடிக்க முடியாத வர்த்தக இலக்குகளை (Business Budgets) மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டு அதை எட்ட முடியாமல் தோற்று நின்ற பல கிளை மேலாளர்களை நான் கண்டிருக்கிறேன். அதே சமயம் தங்களால் எட்ட முடியாது என கூறிவிட்டு பிறகு அதை மிகவும் சிரமப்பட்டு எட்டி முடித்து சாதித்த மேலாளர்களையும் நான் கண்டிருக்கிறேன். முன்னவர்களை விடவும் பின்னவர்களுக்கே உயர் அதிகாரிகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பது உறுதி.

தொடரும்..

4 கருத்துகள்:

  1. //எங்களுடைய வங்கியில் கிளை மேலாளர்கள் வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நியதியை அறிமுகப்படுத்தியது.//

    enga officela ner opposite.. one day cl kooda tharamaatanga. appadiye kuduthalum, phone onla irukanum, thevaipatta online varanum :(((

    பதிலளிநீக்கு
  2. தனியார் நிறுவனங்கள் , வங்கிகளை விட அரசு நிறுவனங்களில் , அரசு வங்கிகளில் ஊழியார்கள் அதிக திருப்தியுடன் இருக்க, தேவையான அளவு விடுமுறை நாட்கள் இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க LK,

    enga officela ner opposite.. one day cl kooda tharamaatanga. appadiye kuduthalum, phone onla irukanum, thevaipatta online varanum :(((//

    இந்த மாதிரி அதிகாரிகள் (டீம் லீடர்கள்) பலரை கண்டிருக்கிறேன். இவர்கள் Dog in the manger ஆசாமிகள். தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள் பிறரையும் அனுபவிக்க விடமாட்டார்கள். இத்தகையவர்களிடம் பணிபுரிவது நரகத்தில் இருப்பதற்கு சமம். என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராம்ஜி,

    தனியார் நிறுவனங்கள் , வங்கிகளை விட அரசு நிறுவனங்களில் , அரசு வங்கிகளில் ஊழியார்கள் அதிக திருப்தியுடன் இருக்க, தேவையான அளவு விடுமுறை நாட்கள் இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம்.//

    நூத்துக்கு நூறு சரி.

    பதிலளிநீக்கு