12 ஜூலை 2010

என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

அ) என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

'நான் மட்டுமே' அல்லது 'என்னால் மட்டுமே' என்பது போன்ற மனப்பாங்குள்ளவர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் சுமை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே இறுதிவரையிலும் இருக்கின்றனர். எந்த ஒரு அலுவலையும் அது எத்தனை எளிதானதாக அல்லது சிறிதானதாக இருந்தாலும் தன்னால்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும் என எண்ணுபவர்கள் இவர்கள். தங்களால் இயலாத காரியத்தையும் தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். குறிப்பாக மேற்பார்வையாளர் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களுடைய அலுவல்களை சரிபார்க்கும் பொருப்பை மறந்துவிட்டு அவர்கள் செய்துமுடிக்க வேண்டிய அலுவல்களையும் தங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். விளைவு? தங்களுடைய முதன்மை அலுவலான மேற்பார்வையை (supervisory) சரிவர ஆற்றாமல் உயர் அதிகாரிகளின் ஏச்சுக்கு ஆளாவார்கள். இத்தகைய ஏச்சிலிருந்து தப்பிக்க இரவு நேரம் வெகு நேரம் அலுவலகத்தில் அமர்ந்து தங்களுடைய அலுவல்களை செய்வார்கள். என்னுடைய வங்கி கிளைகள் பலவற்றில் இத்தகைய மேலாளர்களைக் கண்டிருக்கிறேன். அன்றாட அலுவல்களை முடிப்பதிலேயே குறியாயிருக்கும் இவர்களால் தங்களுடைய மேலாளர் முதன்மை பணியான கிளையின் வர்த்தக மேம்பாட்டை கோட்டை விட்டுவிடுவார்கள்.

இத்தகைய மனப்பாங்கிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல. ஆனால் தங்களால் இயன்றவரை இத்தகைய போக்கிலிருந்து விடுபட முயலவேண்டும். Delegation என்கிற அலுவல்களை அவரவருடைய பதவி அல்லது அந்தஸ்த்திற்கு ஏற்றார்போல் பகிர்ந்தளிக்கும் உத்தியை பயன்படுத்த வேண்டும். இது அலுவலகத்திற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கும் பொருந்தும். மனைவி மற்றும் குழந்தைகளால் செய்து முடிக்கக் கூடிய அலுவலை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இதற்கு முக முக்கியமாக தேவைப்படுவது 'என்னால் செய்து முடிக்க முடிந்த எந்த அலுவலையும் மற்றவர்களாலும் செய்ய முடியும்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது. ஒரு அதிகாரியின் வெற்றியே அவருடைய பணியாளர்களையும் அவரைப்போன்றே திறமையுள்ளவராய் மாற்றுவதில்தான் அமைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது வீட்டிற்கும் பொருந்தும். ஒரு குடும்பத் தலைவனின் வெற்றி குடும்பத்திலுள்ள அனைவரையும் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதில்தான் உள்ளது.

இத்தகைய 'என்னால் மட்டுமே முடியும்' என்ற மனப்பான்மையால் ஏற்றுக்கொண்ட அலுவல்களை முடிக்க முடியாமல் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு செல்வதும் அலுவலக நேரத்தில் வீட்டில் முடிக்க முடியாமல் போன அலுவல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

ஆ) நேரத்தின் அவசியத்தை உணர்வது.

அலுவலகங்களில் ஒரு தவறான கருத்து நிலவுவதை கண்டிருக்கிறேன். யார் அலுவலகத்திற்குள் முதலில் நுழைந்து இறுதியில் வெளியேறுகிறாரோ அவர்தான் மிகவும் உண்மையான ஊழியர் (Sincere worker) என்று கருதுவது. இது பல நேரங்களில் உண்மைக்கு நேர்மாறானதாக இருக்கும். ஒரு ஊழியர் தன்னுடைய அலுவல்களில் உண்மையானவராகவோ (sincere) அல்லது தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவோ (dedicated) இருப்பதைவிட அதை செய்துமுடிக்க தேவையான திறமை வாய்ந்தவராக (talented) அல்லது தகுதியுள்ளவராக (suitable) இருப்பதுதான் மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து முடிக்கக் கூடிய ஒரு அலுவலை அதிகாலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைந்து நாள் முழுவதும் அமர்ந்தும் அதை சரிவர செய்து முடிக்கவியலாத 'உண்மையான' ஊழியரை விட குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளித்த அலுவல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்துவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுபவர் எவ்வளவோ மேல். அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு செல்வதும் அல்லது அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த அலுவல்களை செய்பவர்களும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்களே. 'ஒரு நாளைக்கு முப்பத்தாறு மணி நேரம் இருந்தாக் கூட எனக்கு போறாது போலருக்கு' என்பது இப்போதெல்லாம் ஒரு கவுரவமாக போய்விட்டது.

இதிலிருந்து விடுபடுவதும் உடனடியாக இயலாது என்றாலும் நாளடைவில் விடுபட முயல வேண்டும். ஒரு அலுவலை செய்து முடிக்க அலுவலகத்திலுள்ள திறமைவாய்ந்த சக ஊழியர்கள் எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனித்து தாங்களும் அதை பின்பற்ற முயல வேண்டும். துவக்கத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் காலப்போக்கில் அந்த கலை கைவந்துவிடும். துவக்க நாட்களில் அலுவலகத்தில் சற்று கூடுதல் நேரம் அமர்ந்திருக்க வேண்டிவந்தாலும் அலுவலக வேலைகளை அலுவலகத்திலேயே முடித்துவிட்டு செல்ல வேண்டும். அதை விடுத்து மீதமுள்ள அலுவல்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முயலக்கூடாது.

சமீப காலங்களில் சில நிறுவனங்கள், குறிப்பாக கணினித்துறையில், தங்களுடைய மூத்த அலுவலர்களை அவர்களுடைய வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கின்றன. 'I work from my home' என்று கூறிக்கொள்வது ஒரு பெருமையாகக் கூட கருதுகின்றனர் சிலர். ஆனால் காலப் போக்கில் இது தங்களுடைய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடும் என்பதை இவர்கள் மறந்துபோகின்றனர். காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணி வரை என்கிற அலுவலக நேரம் நாளடைவில் மறைந்து இருபத்திநாலு மணி நேரமும் அலுவல் என்றாகிவிடும்போது அதிலிருந்து மீள முடியாமல் திணறுவார்கள். வீடு வீடாக இருக்கும்வரைதான் குடும்பமும் குடும்பமாக இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.

தொடரும்..

3 கருத்துகள்:

 1. ஒரு சிறிய குறிப்பு;

  நான் என் சக அலுவரிடம் கற்ற பாடம் இது . அலுவலக நேரம் முடிந்த பிறகு வீட்டிலோ, வெளி இடங்களிலோ வைத்து அலுவலக மின்னஞ்சல், அலுவலக தொலைபேசி அழைப்புக்களை தொடவே கூடாது. விடுமுறை நாட்களிலும் அலுவலக மின்னஞ்சல்களை தொடாது இருத்தல்.

  பதிலளிநீக்கு
 2. அலுவலக நேரம் முடிந்த பிறகு வீட்டிலோ, வெளி இடங்களிலோ வைத்து அலுவலக மின்னஞ்சல், அலுவலக தொலைபேசி அழைப்புக்களை தொடவே கூடாது. விடுமுறை நாட்களிலும் அலுவலக மின்னஞ்சல்களை தொடாது இருத்தல்.//

  கரெக்டா சொன்னீங்க ராம்ஜி.

  பதிலளிநீக்கு
 3. கவனிக்க வேண்டிய இன்னும் சில:

  1. சில மேலாளர்கள் விடுமுறை நாட்களில் அலுவலகம் செய்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். தாங்கள் செல்வது மட்டுமல்லாமல் தங்கள் கீழ் பணிபுரிபவர்களையும் வரச்சொல்வார்கள். சிலர் மறுக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் ரொம்பவும் மனக்கசப்புடனும் மன அழுத்தத்துடனும் இருப்பதை பார்த்திருக்கிறேன். இதை பல மேலாளர்கள் உணர்வதே இல்லை.
  2. ஒரு சிலர் அலுவலக நேரம் முடிந்த பிறகு எந்த நண்பரை சந்தித்தாலும் யாருடன் பெசினாலும் தன் அலுவலக பிரச்சினைகள் அல்லது சாதனைகள் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் மனைவியிடமும் இதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதனால் பலருக்கு கடுப்பும் வெறுப்புமே ஏற்படும் என்பதை உணர மறந்து விடுகின்றனர். இதையும் தவிர்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு