24 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 6

மன அமைதிக்கு இசைக்கு நிகரான மருந்து வேறெதுவும் இல்லையென்றாலும் வெறுமனே இசையை கேட்டுக்கொண்டு அமர்வதும் அத்தனை எளிதல்ல. செவிகள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்க மனம் அதன் போக்கில் வலம் வர ஆரம்பிக்கும். அதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த தோல்விகளையே நினைவுக்கு கொண்டு வந்து சஞ்சலமடையச் செய்யும். இதுவும் இயற்கைதான். அலைபாயும் மனதை கட்டுப்படுத்த நினைப்பதில் அர்த்தமில்லை. யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கூட துவக்கத்தில் அலைபாயும் மனதை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்றுதான் கூறுகின்றனர். கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்துவது என்பது யோகாவில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே சாத்தியமாகிற ஒரு அதிசயம்!4. பத்திரிகை, புத்தகங்கள் வாசித்தல்: ஆகவே மனதுக்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கையிலேயே கையில் ஒரு புத்தகமோ அல்லது வார சஞ்சிகையோ இருந்துவிட்டால் கட்டுக்கடங்காமல் அலைபாயும் மனதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். பணியில் இருந்த காலத்தில் அலுவலக பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் ஆழ்ந்துபோயிருப்பவர்களால் இசையை ரசிப்பதிலோ புத்தகம் வாசிப்பதிலோ நேரத்தை செலவழிக்க விருப்பம் இருந்தும் இயலாமல் போயிருக்கலாம். இவ்விரு இன்பத்தையும் ஒருசேர அனுபவிக்க கைகூடி வரும் காலத்தில் அதை அனுபவிக்க தடையேதும் இல்லையே. இந்த இசையைத்தான் கேட்க வேண்டும் இந்த புத்தகத்தைத்தான் அல்லது சஞ்சிகையைத்தான் வாசிக்க வேண்டும் என்றில்லை. பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் நான் செய்த முதல் வேலை சென்னையிலுள்ள ராஜ் வீடியோ விஷன் கடைக்கு சென்று பழைய பாடல்கள் மற்றும் கர்நாடக வாத்திய இசை ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளை வாங்கியதுதான். ஏனெனில் அங்குதான் பழைய சினிமா பாடல்கள் இப்போதும் கிடைக்கின்றன. அங்கிருந்து சென்னை திருவல்லிக்கேணி, சூளைமேடு, பழைய மூர்மார்க்கெட் பகுதிகளில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கி ஆங்கில நாவல்களை வாங்கினேன். 1980 மற்றும் 90களில் வெளிவந்த புத்தகங்கள் பலவும் இத்தகைய கடைகளில் பாதி விலைக்கு கிடைக்கின்றன. குமாஸ்தா மற்றும் கடைநிலை அதிகாரியாக பணியாற்றிய காலங்களில் எனக்கிருந்த ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள மட்டுமல்லாமல் பெருமளவு நேரத்தை செலவழிக்கவும் இவை எனக்கு இப்போது மிகவும் உதவுகின்றன. ஆனால் அந்த வயதில் ஒரே நாளில் முழுமூச்சாக, சில சமயங்களில் நள்ளிரவு வரை அமர்ந்து, ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிடுவேன். இப்போது அது சாத்தியமில்லை. சிறு, சிறு எழுத்துக்களை தொடர்ந்து படிக்க முடிவதில்லை என்பதால் தினம் காலையிலும் மாலையிலும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்குகிறேன்.5. வீட்டிற்குள் ஆடக் கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவது: இசையுடன் இணைத்து ரசிக்கக் கூடிய மற்றொரு பொழுதுபோக்கு Indoor Games எனப்படும் உள்ளரங்கவிளையாட்டுகள். இவற்றுள் பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களால் எளிதில் கற்றுக்கொண்டு விளையாடக் கூடிய விளையாட்டு சதுரங்கம். எனக்கு தெரிந்த வரை இதற்கு மட்டுமே நம்முடன் விளையாட வேறொருவர் வேண்டும் என்பதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்தவாறே இருவருடைய காய்களையும் நகர்த்தி விளையாட முடியும். நேரம் செல்வதே தெரியாமல் மணிக்கணக்கில் விளையாட முடிகிறது! இதில் நாட்டமில்லாதவர்கள் கேரம், சீட்டுக்கட்டு, ஏன் இந்திய சதுரங்கம் எனப்படும் பரமபதம் போன்ற விளையாட்டுகளிலும் நேரத்தை செலவழிக்கலாம். இதை படிப்பவர்களில் சிலர் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறதே என நினைக்கலாம். 'When you become old you should return to your childhood stage' என்று எப்போதோ படித்த ஆங்கில வாக்கியம் நினைவுக்கு வருகிறது. உண்மைதான். வயதானவர்களும் குழந்தைகள்போல்தான் என்று நம் வீடுகளில் கூறுவதில்லையா? நாம் மாணவ பருவத்தில் எதையெல்லாம் செய்து நேரத்தை போக்கினோமோ முதிர்ந்த வயதிலும் அதே நிலைக்கு திரும்பிச் செல்லக் கூடியவர்களால் மட்டுமே எவ்வித மன அழுத்தத்திற்கும் உள்ளாகமல் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதில் இணைந்து ஈடுபடக் கூடிய மனப்பாங்கு கணவர்-மனைவி இருவருக்குமே இருக்குமானால் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் அமையக்கூடிய காலத்தை இனிமையானதொரு காலமாக செலவழிக்க மிகவும் ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.6. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது: இதற்கு 'தான்' என்கிற அதிகார ஆடைகளை அல்லது வேஷங்களை களைந்து 'நாம்' என்கிற நிஜத்துக்கு இறங்குவது மிகவும் முக்கியம். 'ஆம்பிளைக்கு அடுக்களையில என்ன வேலை?' இது அந்தக் காலம். 'ஆம்பிளைக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?' இது இந்த காலம். சில தினங்களுக்கு முன்பு இந்து தினத்தாளில் வெளியான ஆங்கிலக் கட்டுரை ஒன்று இந்த தொனியை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பணியில் இருக்கும் இளம் கணவர்களும் கூட வீட்டு வேலைகளில் குறிப்பாக சமையலறையில் சம பங்கை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியை. 'If the wife is attending to her baby the husband should not hesitate to stir the sambar!' என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் 'husband should stir the boiling Sambar on the stove when the wife is attending a telephone call!' என்கிறது கட்டுரை. அதாவது மனைவி தன் தோழியுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் கணவர் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரை கிளறிவிடவேண்டுமாம்! இளம் கணவருக்கே இந்த நிலையென்றால் எந்த வேலையுமில்லாமல் அமர்ந்திருக்கும் ரிட்டையர்ட் ஆன கணவர் என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்! ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மனைவியும் பணிக்கு சென்று கணவருக்கு இணையாக ஊதியம் ஈட்டும் காலக்கட்டத்தில் இப்படி மனைவி கருதுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது. இந்த கட்டுரையின் இறுதி வாக்கியம்தான் முத்தாய்ப்பாக அமைகிறது. இளம் கணவர் ஒருவர் இவ்வாறு புலம்புகிறாராம். 'I was taught to be a good son, good father etc. but never a good husband!' ஒரு நல்ல கணவனாக இருக்க எப்படி பயிற்றுவிப்பது அல்லது யார் பயிற்றுவிப்பது? எனக்கென்னவோ நல்ல மகனாக இருக்க முடிந்த எந்த ஒரு ஆணாலும் ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முடியும் என்றே தோன்றுகிறது. தன்னுடைய தாயை நேசிக்கும் ஒரு ஆனால் மட்டுமே தன்னுடைய மனைவியையும் உண்மையாக நேசிக்க முடியும். மனைவிக்கு உதவுவதில் இளம் வயதிலிருந்தே மனதளவில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு ஆணால் மட்டுமே தன்னுடைய முதிர்ந்த வயதிலும் எவ்வித பந்தாவும் இல்லாமல் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ முடியும் என்பதும் உண்மை. வீட்டு வேலைகளில் ஈடுபடுதால் ஓய்வு நேரத்தை பயனுடன் செலவழிக்க முடிகிறது என்பதுடன் நம்மை ஒரு இடைஞ்சலாக கருதுகிற மனைவியை அந்த எண்ணத்திலிருந்து மாற்றவும் முடிகிறதே என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
 
தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக