17 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 4

பணியிலிருந்து ஓய்வு பெற்ற துவக்க நாட்களில் (initial post-retirement days) மனம் எதையோ பறிகொடுத்துவிட்டதுபோல் தோன்றுவது மிகவும் இயல்பான விஷயம்.  அதுபோலவே, 'எதற்கு இந்த ஓய்வு, என்னால் இன்னும் குறைந்தபட்சம் ஐந்தாறு வருடங்களுக்காகிலும் இதே திறமையுடன் பணியாற்ற முடியுமே'  என்ற எண்ணம் தோன்றுவதும் மிகவும் இயற்கை. இது ஏதோ நமக்கு மட்டும்தான் ஏற்படுகிற ஒருவித நோய் என்று நினைத்து, நினைத்து மருகுவதை முதலில் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழலுக்கு நம்மை நாமே தயாரிப்பதற்கு மிகவும் தேவையான ஒன்று பணியிலிருந்து ஓய்வுபெற்றாக வேண்டும் என்கிற நிதர்சனத்தை மனதளவில் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

இதில் இன்னொரு கோணமும் உண்டு. பணியிலிருந்து ஓய்வுபெறும் சமயத்தில் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு இலாக்காவின் தலைமை பொறுப்பில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நாம் இல்லாவிட்டால் அந்த நிறுவனம், இலாக்கா சரிவர இயங்க முடியாது என்கிற எண்ணம் உள்மனதில் பதிந்திருக்கும். அத்தகையோர் ஓய்வு பெற்றபிறகு அந்த நிறுவன/இலாக்காவை சார்ந்தவர்கள் எந்த நிர்வாக அலுவல்கள் சார்பாகவும் அவர்களை தொடர்புகொள்ளவில்லையென்றால் அதுவே அவர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இத்தகைய மன அழுத்தத்திற்கு ஒய்வுபெற்ற முதல் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நானே ஆளாகியிருக்கிறேன். அத்தகைய எண்ணத்தை முழுவதுமாக என் மனதிலிருந்து அகற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

இத்தகைய மன அழுத்தம் மிகவும் இயல்பான விஷயம்தான் என்பதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில்தான் அவர்களுடைய  கவனம் முழுவதும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அதை விடுத்து சிலர் தங்களுடைய முன்னாள் சகாக்களை தொலைபேசியில் அழைத்து  'இப்பத்தான் நிம்மதியா எந்த டென்ஷனுமில்லாம சந்தோஷமா இருக்கேன்.' என்று உண்மைக்கு புறம்பாக கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.  இது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல்தான்.

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை இத்தகைய துவக்கக்கால மன அழுத்தத்திற்கு (post-retirement anxiety) தயாரிப்பதற்கென்றே இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் 'Exit Counselling'ஐ நடத்துகின்றனர். இதில் மிகவும் முக்கியமாக இடம் பெறுவது ஓய்வு நேரத்தை எப்படி செலவழிப்பது, உண்மையைக் கூற வேண்டுமென்றால், எப்படி வீணடிப்பது என்பதை கற்பிப்பதுதான். ஆக்கபூர்வமான எந்த ஒரு சிந்தனையுமில்லாமலும் அல்லது எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமலும் ஓய்வு நேரத்தை வீணடிப்பதில் தவறேதும் இல்லை என்பதை மிகவும் இயல்பாக உணரவைப்பதும் இதில் அடக்கம்.

ஆமாங்க. நிர்வாக பொறுப்பில் இருக்கும் பலருக்கு நேரத்தை வீணடிப்பது என்பது முற்றிலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒரு 'குற்றம்'. அத்தகையோரை இந்த 'குற்ற உணர்விலிருந்து' விடுவிப்பதுதான் இத்தகைய ஆலோசனை கூட்டங்களின் மைய நோக்கம். இசையை ரசிப்பது, புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிப்பது, உள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுவது இவை எதிலும் நாட்டம் இல்லாதவர்களை எவ்வித சிந்தனைகளுமில்லாமல் தொடர்ந்து பல நிமிடங்கள் அமர்ந்திருப்பது என்பதுபோன்ற பல உத்திகளை பயிலவும், சுருக்கமாக கூற வேண்டுமென்றால் பரபரப்பான அலுவலக சூழலிலிருந்து அமைதியான குடும்ப சூழலுக்கு பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை தயாரித்துக்கொள்ளவும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் வெகுவாக உதவுகின்றன.' Walkingஆ அதுக்கு எங்கங்க நேரம்?' என்பவர்களை   மனம்போன போக்கில் காலாற நடப்பதே மனதை லேசாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மருந்து என்பதை உணர்த்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்று.

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை பலவிதமாக பிரிக்கலாம். அவற்றில் முக்கியமான இரு பிரிவுகள்: பணிக்கு செல்லாத மனைவியை உடையவர் அல்லது பணிக்கு செல்லும் மனைவியை உடையவர். முதலாமவருக்கு வீட்டிலிருக்கும் மனைவியே ஒரு பிரச்சினை என தோன்றும். மற்றவருக்கு பேச்சு துணைக்குக் கூட ஆளில்லாத தனிமையே ஒரு பெரிய சுமையாக தெரியும். இரண்டிலும் exceptions எனப்படுபவர்களும் உண்டு. அலுவல், அலுவல் என மனைவியை பிரிந்திருந்ததை ஒரு குறையாக நினைத்திருந்தவர்களுக்கு மனைவியின் அருகாமை விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கும். தனிமையே ஒரு அலாதியான விஷயம் என நினைத்து மோனத்தில் ஆழ்ந்துப்போக கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்பவர்களும் உண்டு. என்னுடைய அலுவலக நண்பர்  ஒருவர் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதிலேயே விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்தார். 'என்னங்க இந்த வயசுல ரிட்டையர் ஆகி வீட்ல எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க?' என்று கேட்டேன். 'இந்த ஹரிபரியிலருந்து விடுபட்டு தனியா இருக்கணும்னு கொஞ்ச நாளாவே தோனுதுங்க. ஒய்ஃபும் வேலைக்கு போயிருவாங்க. பசங்களும் ஹாஸ்டல்ல இருக்கறதால வீட்ல யார் தொல்லையுமில்லாம இருக்கலாம்.' என்றார். ஆனால் அவர் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ அவர் ஓய்வு பெற்ற இரண்டாண்டுகளுக்குள் சுறுசுறுப்பாக இருந்துவந்த அவருடைய மனைவி ஒருவார ஜுரத்திலேயே யாரும் எதிர்பாராத விதமாக மரித்துப்போனார். அதற்குப் பிறகு அவருடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் வேலை கிடைத்து வெளிநாடு சென்றுவிட உண்மையிலேயே வாழ்க்கையில் தனித்துதான் போனார்.

வீட்டிலிருக்கும் மனைவியை அனுசரித்து செல்வது மிகவும் சிரமம் என நினைப்பவர்கள் அவர்களும் தங்களைப் பற்றி அப்படித்தான் கருதுகிறார்கள் என்பதை உணர்வதில்லை. அதை உணர்ந்துக்கொண்டு அந்த எண்ணத்தை எப்படி அவர்களுடைய மனதிலிருந்து அகற்றுவது என ஆலோசித்து அந்த முயற்சியில் இறங்கினாலே போதும், தீர்வு கிடைப்பது நிச்சயம். இதற்கு முதலில் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆண்கள் அதுவரை வகித்துவந்திருந்த அலுவலக பதவியிலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். காலையில் குளிப்பதிலிருந்து எல்லாம் அப்பாவுக்குதான் முன்னுரிமை என்பதும் எந்த டென்ஷனும் இல்லாமல் அவர் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு ஏதுவான சூழலை வீட்டில் ஏற்படுத்துவதுதான் குடும்பத்திலுள்ள அனைவருடைய தலையாய கடமை என்பதுபோலவும் பரபரப்புடன் இயங்கும் பல குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய ஆண்கள் தங்களுடைய கற்பனை அதிகார பீடத்திலிருந்து இறங்கி வருவது என்றால் அத்தனை எளிதல்ல. ஆனால் அதை எத்தனை விரைவில் உணர்ந்து இறங்கி வருகிறார்களோ அத்தனை விரைவில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்திற்கும் நல்லது.

தொடரும்..

பி.கு: பி.எஸ்.என்.எல் இன் குளறுபடியால் கடந்த மூன்று நாட்களாக Internet இணைப்பே இல்லாதிருந்தேன். உலகமே இருண்டதுபோலாகிவிட்டது!

12 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு. எல்லோருக்கும் தேவையான பதிவு.

  மனம் ஒரு மாடு போன்றது. அலுவலகம் என்ற கயிற்றுடன் பிணையப்பட்டு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்து பழகி பின் அது தான் உலகம் என்று நம்பி விடும். திடும் என்று ஒருநாள் கயிறு அறுந்தாலும் அந்த வட்டத்தை விட்டுவர தோணுவதில்லை.

  ரசிக்கவும் , ருசிக்கவும், வாழவும், பேசவும் நிறைய இருக்கிறது. குடும்பம் , பிள்ளைகள் , அலுவலகம் என்பது மட்டும் தான் சந்தோசம் என்று என்னும் போது தான் பிரச்சனை . இது போன்ற மனத்தடைகளை உடைத்துவிட்டால் உலகமே நம் வீடு தான்.

  பதிலளிநீக்கு
 2. மற்றும் ஒரு நன்றி. அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு

  பதிலளிநீக்கு
 3. வாங்க வால் பையன்,

  மனம் ஒரு மாடு போன்றது. அலுவலகம் என்ற கயிற்றுடன் பிணையப்பட்டு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்து பழகி பின் அது தான் உலகம் என்று நம்பி விடும். திடும் என்று ஒருநாள் கயிறு அறுந்தாலும் அந்த வட்டத்தை விட்டுவர தோணுவதில்லை. //

  ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. தொகுத்து நூலாக்குங்கள்.

  நடை நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 5. வாங்க கண்ணன், தொகுத்து நூலாக்குங்கள்.// அவ்வளவு பெரிதாக எழுத முடியுமா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 6. கல்லூரி என்பதலாவோ என்னவோ இன்னும் கல்லூரியோடு தொடர்புண்டு. அதோடு நடந்த சில கலவரங்களில் முழுப்பங்கும், கல்லூரிக்கென ஆரம்பித்த ப்ளாக்கத் தொடர்ந்து பேணி வருவதாலும் இன்னும் 'ரிட்டையர்மென்ட்" ஆன உணர்வே இன்னும் வரவில்லை!!

  அதோடு இப்போது ந்ம்ம சொந்த ப்ளாக் .. அது இதுன்னு வாழ்க்கை பிசியாகத்தான் போகிறது .......

  பதிலளிநீக்கு
 7. வாங்க தருமி, அது இதுன்னு வாழ்க்கை பிசியாகத்தான் போகிறது // அதுபோதும்.. இப்படி ஓய்வுபெற்ற அனைவருமே எதாவது ஒரு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
 8. கடந்த ஒரு வருடத்தில் எனக்குத் தெரிந்த வகையில் பத்து பேர்களாவது பணி ஓய்வு பெற்று இது போன்று வலைபதிவில் எழுதிக் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டிருந்த போதிலும் உங்களிடமிருந்த அடிப்படை ரசனை உணர்வுகள் இன்று எழுத உதவுகின்றதோ என்று யோசித்துக் கொண்டேயிருக்கின்றேன்.

  மீண்டும் வருவேன்.

  பதிலளிநீக்கு
 9. மீண்டும் வருவேன்.//

  வாங்க ஜோதிஜி. ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறேன் என்ற ஆரம்பக் கால கவலைகள் உங்களைப் போன்ற இளம் பதிவுலக நண்பர்களுடைய நட்பால் கரைந்தே போனது. மீண்டும் ஒரு இளைஞனாய் வலம் வருகிறேன்.... அட்லீஸ் பதிவுலகில்!!

  பதிலளிநீக்கு