22 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 5

பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆண்களை வீட்டிலிருக்கும் மனைவியின் மற்றும் பணிக்கு செல்லும் மனைவியின் கணவர் என இருவிதமாக பிரிக்கலாம் என்று கூறினேன். இதற்கு காரணம் வீட்டிலிருக்கும் காலத்தை எவ்வித மன உளைச்சல்களும் இல்லாமல் செலவழிக்க உணர்வுபூர்வமாக தங்களை தயாரித்துக்கொள்ள வேண்டிய முறைகளிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

இவர்கள் இருவருள் வீட்டிலிருக்கும் மனைவியின் கணவருக்குத்தான் அதிக மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இத்தகையோர் அத்தகைய சூழலை தவிர்க்க தங்களை முன்கூட்டியே தயாரித்துக்கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம்!


இவர்களிலும் இருசாரார் உண்டு. அதிகம் பேசாத மனைவி மற்றும் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் மனைவி! இவர்களுள் பின்னவரை மனைவியாக கொண்டவர்க்குத்தான் அதிகம் முன் தயாரிப்பு தேவையாம்!

கணவரும் அதிகம் பேசும் சுபாவம் உடையவர் என்றால் அதிகம் பிரச்சினை எழ வாய்ப்பில்லையாம். மாறாக தான் உண்டு, தன் வேலையுண்டு என அமைதியான சுபாவம் உடைய கணவர் என்றால் அவருடைய மனைவியும் அதிகம் பேசாத கூச்ச சுபாவம் உடையவர் மனைவியாக இருந்துவிட்டால் பிழைத்தார். இல்லையென்றால்.....

மனைவி அமைவதென்றால் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள்!

மேலை நாடுகளில் சமீப காலங்களில் விவாகரத்து செய்யும் தம்பதிகளில் நாற்பது விழுக்காட்டிற்கு மேல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தம்பதியர்கள்தாம் என கூறுகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஏனாம்?

கணவன் இல்லாத சூழலில் சுதந்திரமாக நாள் முழுவதும் பொழுதை போக்கிய பெண்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற கணவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை முடக்குவதாக கருதுகின்றனராம். ஆகவே தங்களுடைய அமைதிக்கு பங்கம் விளைந்துவிட்டதாக கருதும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழவே
விரும்புகின்றனர்.

ஆண்களோ ஓயாமல் பேசும் மனைவியரால் தங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ற வாதத்தை முன்வைத்து விவாகரத்து கோருகின்றனராம். 'அதிகம் பேசும் மனைவி ஒழுகும் கூரைக்கு சமம்' என்று பைபிளே கூறுகிறது! ஒழுகும் கூரையின் அடியில் எப்படி நிம்மதியாக வாழ்வது?

ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெறுபவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும் குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கை துணைவர்களும் (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) தங்களை தயாரித்துக்கொள்வது அவசியமாகிறது.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை பொருளாதார பிரச்சினைகளை விடவும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளே இத்தகையோருடைய இல்லற வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. ஏனெனில் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் அரசுதுறை அல்லது அரசைச் சார்ந்த (மான்யம் பெறுகிற) துறைகளில் பணியாற்றுவதால் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது. மேலும் பெரும்பாலான தம்பதியர் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பே தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடுவதால் எஞ்சி நிற்கும் கணவன் - மனைவி என்ற இருநபர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் போதுமானதாகவே கருதப்படுகிறது.
ஓய்வூதியத்திற்கு தகுதியில்லாதவர்களுக்கும் - அதாவது அரசுத்துறை இலாக்கா,நிறுவனங்களைச் சாராதவர்கள் - ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெற சமீபகாலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள் கைகொடுக்கின்றன. இவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.

ஆகவே பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தவிர்த்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்வதுதான் மிக அவசியம்.

முதலில் பணிக்கு செல்லாத மனைவியருடன் ஓய்வு காலத்தை எப்படி பிரச்சினைகள் இல்லாமல் அல்லது முடிந்த அளவுக்கு தவிர்த்து வாழ்வது என்பதை பார்க்கலாம்.

1. கணவன் தன்னுடைய பழைய அந்தஸ்த்திலிருந்து இறங்கிவருவது: பணியிலிருந்த காலத்தில் அலுவலகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்த முடியுமோ அவ்வளவு ஆதிக்கத்தை வீட்டிலும் செலுத்திவந்த ஆண்கள் ஓய்வுக்குப் பிறகு தங்களுடைய முந்தைய அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். அதிகாரம் இல்லாதம் ஆதிக்கம் எத்தனை நாளுக்குத்தான் செல்லும்?

2. காலை நேர முன்னுரிமை: காலையில் எழுந்து காப்பி குடிப்பதிலிருந்து, தினத்தாள் படிப்பது, குளிப்பது என எல்லாவற்றிலும் தனக்குத்தான் முதல் உரிமை என்ற எண்ணத்தை விட்டுவிட்டு பணிக்கு செல்லும் மகன், மகள், மருமகள் ஆகியவர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டுக்கொடுக்க முன்வரலாம். காலையில் ஆறு மணிக்கே எழுந்துவிடும் பழக்கத்தை முடிந்தால் (அதாவது தனி படுக்கையறை வசதி உள்ளவர்கள்) சற்று தள்ளிப் போடலாம். அது இயலாத பட்சத்தில் மனைவியை தாஜா செய்து (அதிகாரம் செல்லாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஒரு கப் காப்பி வாங்கி குடித்துவிட்டு (என்னைப் போன்று சமையல் தெரிந்த பெரிசுகள் உறங்கும் மனைவியை எழுப்ப தேவையில்லை. தாங்களாகவே காப்பி தயாரித்துக் கொள்வது நல்லது!) வாக்கிங் செல்லலாம். வாக்கிங் செல்லும்போது கவனிக்க வேண்டியது. அதுவரை உடல் எடையை குறைக்க வேக வேகமாக நடந்திருக்கலாம். ஆனால் இப்போதைய தேவை நேரத்தை கடத்துவது. ஆகவே காலாற நடப்பதுதான் முக்கியம். வேக வேகமாக நடந்த காலத்தில் எதிரில் வருபவர்களுக்கு காலை வணக்கம் சொல்லக் கூட நேரம் இருந்திருக்காது. ஆனால் இப்போது நேரம் மிக அதிக அளவில் கையிலிருப்பதால் உங்களை கண்டுக்கொள்ளாமல் செல்பவரையும் தடுத்து நிறுத்தி காலை வணக்கம் சொல்லலாம். சுய அறிமுகம் செய்துக்கொள்ளலாம். அவரும் ஓய்வு பெற்றவர் என்றால் சாவகாசமாக நின்று அங்கலாய்ப்புகளை பகிர்ந்துக்கொள்ளலாம். நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய தேவைகளை அநேகமாக பூர்த்திசெய்துக்கொண்டிருப்பார்கள். சலவை செய்ததுபோல் crisp ஆக இருக்கும் தினத்தாளை படித்துத்தான் பழக்கம். குடும்பத்திலுள்ளவர்களால் படித்து குதறப்பட்டு தொய்ந்துபோய் சிதறிக்கிடக்கும் தினத்தாளை எடுத்து முடிந்த அளவுக்கு நீவி சரிசெய்து படிக்கலாம். இதிலேயே குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். அதன் பிறகு குளியலறை காலியாக இருந்தால் குளித்துவிட்டு காலை உணவு மேசையில் ரெடியாக இருக்கும் பட்சத்தில்... இல்லையென்றால் 'உங்களுக்கு இப்ப என்ன அவசரம்.. வேலைக்குப் போறவங்க முதல்ல சாப்டுக்கட்டும்' என்கிற ஓசை வரும். வெளியில் கேட்காதவாறு பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் சென்று படித்த தினத்தாளையே படிக்கலாம். இவை யாவும் துவக்கத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் சரியாகிவிடும்.

2. இசையை ரசிப்பது: பரபரப்பாக இருந்த காலத்தில் இசையை ரசிப்பதற்குக் கூட பொறுமை இருந்திருக்காது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் ஆனால் அதே சமயம் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகமல் அமைதியாக இருக்க உதவும் அருமருந்து இசை! இசைய ரசிப்பதற்கு பெரிதாக ஞானம் எதுவும் தேவையில்லை. அது சாஸ்த்ரீக இசையாயிருந்தாலும் சரி, நாட்டுப்புற பாடல்களாக ஏன் திரை இசையாக இருந்தாலும் சரி... கேட்பதற்கு செவித்திறனும் ரசிப்பதற்கு ஆர்வமும் இருந்தாலே போதும். ஓய்வு பெற்றவர்களுடைய தேவை மன அமைதி, நேரம் கடத்துவது. அதற்கு இசையை விட்டால் சிறந்த மாற்று இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதில் ஒரேயொரு சிக்கல். உங்களுடன் வீட்டில் இருப்பவர்களுடைய விருப்பு, வெறுப்பு. குறிப்பாக உங்களுடைய மனைவி. உங்களுடைய செவிகளில் தேனாக ஒழுகும் குன்னக்குடியின் வயலின் இசையும் கூட உங்களுடைய மனைவியின் காதில் நாராசமாக விழலாம். அல்லது அவருக்கு மிகவும் பிடித்த வாய்ப்பாட்டு கூட உங்களுடைய செவிகளில் அர்த்தமில்லாத ஓசையாக விழலாம். உங்களுடைய விருப்பத்திற்கு அவர்களை கொண்டு வர முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களுடைய விருப்பத்திற்கு உங்களை தயார் செய்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. வேறு வழியில்லாமல் நீங்கள் கேட்க துவங்கும் இசையும் கூட நாளடைவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இசையாகிப் போக வாய்ப்புண்டு. மனமிருந்தால் மார்க்கமுண்டே!தொடரும்..

4 கருத்துகள்:

  1. நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நான் "ஓய்வு" பெற்ற பின் இதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் !!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. வாங்க தருமி, நான் "ஓய்வு" பெற்ற பின் இதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் // நான் ஓய்வுன்னு சொல்றது முழு நேர பணியிலிருந்து பெற்ற நிரந்தர ஓய்வு. அதற்கு பிறகு நாம் ஈடுபடும் அலுவல்கள் எல்லாம் முழுநேர அலுவல்கள் அல்லவே? இருப்பினும் நீங்கள் சொல்வதுபோல் எதாவது ஒரு அலுவலில் முழுமையாக ஈடுபட்டாலே போதும்.. நேரம் போய்விடும்.

    பதிலளிநீக்கு