13 ஜூலை 2006

மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக்

நான் அப்போது தஞ்சையில் பணிபுரிந்துக்கொண்டிருந்தேன்.

ஒருநாள் நால் அலுவலகத்தை சென்றடைந்து என்னுடைய அனுதின அலுவலில் ஆழ்ந்துப் போயிருந்த நேரம்.

வீட்டிலிருந்து தொலைப்பேசி. எதிர் முனையில் பதற்றத்துடன் என் மனைவி.

என்ன என்றேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு பேய் காத்தோட மழையடிச்சி வீட்டுக்குள்ளாற எல்லாம் மழைதண்ணி வந்திருச்சிங்க. தூளியில படுத்திருந்த பாப்பாவும் சுத்தமா நனைஞ்சி போயிட்டா. பிள்ளை குளிர்ல நடுங்குது. நானும் அம்மாவும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருக்கோம். உடனே புறப்பட்டு வாங்க.. சீக்கிரம்.’

கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எதிர் கடையிலிருந்த நண்பரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறேன்.

என்னுடைய வங்கியிருந்த பகுதியிலும் சரி, என் வீடு இருந்த பாதையிலும் சரி எங்கும் மழையின் சுவடுகள் இல்லை. ஆனால் என்னுடைய வீடு இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்திருந்தது.. ..

வீட்டையடைந்தபோது என்னுடைய பத்துநாள் மகளின் உடம்பு கொதித்து போயிருக்கிறது. என் மனைவி அழுத கோலத்தில். மூத்தவள் அந்த களேபரத்திலும் ஆழ்ந்த உறக்கத்தில்..

எனக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு என் மூத்த மகளை என்னுடைய மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு இளைய மகளை மருத்துவமனைக்கு எடுத்துக்கொகொண்டு ஓடுகிறேன்..

மருத்துவமனையில் என் மகளுடைய பிரசவம் பார்த்த மருத்துவரே இருந்ததால் உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டனர்..

இரண்டு மணி நேர போராட்டம்.

நானும் என் மனைவியும் மருத்துவமனை வராந்தாவில் தவிப்புடன் காத்திருக்கிறோம்..

அவசரப் பிரிவு பகுதியிலிருந்த என் மகளை இரு தாதிமார்கள் கொண்டுவந்து வேறொரு அறையில் கிடத்தியதைப் பார்த்துவிட்டு ஓடிச் செல்கிறோம்..

யாராவது ஒருத்தர் மட்டும் வந்து பார்க்கலாம் என்கின்றனர்.

‘என்னால முடியாதுங்க. நீங்க போய் பார்த்துட்டு வாங்க.’ என்கிறார் என் மனைவி.

நான் சென்று பார்க்கிறேன். அமைதியாய், ஒரு மென்மையான பூவைப்போல் கிடக்கிறாள் என் மகள். மேல் மூச்சு வாங்குகிறது. பஞ்சு போன்ற கைகளில் குளுக்கோஸ் ஊசி குத்திய இடமெல்லாம் சிவந்து போய்..

ஜுரத்தின் உச்சத் தாக்கத்தில் முகமெல்லாம் ரத்தச் சிவப்பாய்.. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களை லேசாய் திறந்து வலப்புறம் திரும்பி திறந்திருந்த ஜன்னல் வழியாக யாரையோ அல்லது எதையோ பாக்கிறாள். அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது..

நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது..

பிறந்து சரியாய் பத்தாம் நாள் இந்த உலகை விட்டே போய்விட்டாள் என் மகள்..

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...

இதை நான் எப்படிப் போய் வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் என் மனைவியிடம் அறிவிக்கப்போகிறேன் என்று மலைத்துப் போய் நிற்கிறேன்.

திரும்பிப் பார்க்கிறேன். இதை எதிர்பார்த்திருந்ததுபோல் என்னுடைய மருத்துவர் வருகிறார். குழந்தையைக் குனிந்து பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார். என் கண்களில் ததும்பி நின்ற கண்ணீரினூடே.. ‘How did this happen, Doctor?’ என்கிறேன்..

‘Sorry Mr.Joseph, It appears to be brain fever. Her fragile brain has already been damaged due to the high fever. I am sorry.’ என்றவாறு மெள்ள வெளியேறுகிறார்.

இதை அறை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி ‘என்னங்க..’ என்று கண்ணீருடன் ஓடிவருவது தெரிகிறது. அப்படியே அவளை அணைத்துக்கொண்டு ஆறுதலிளிக்கிறேன்..

அதற்குப் பிறகு ஆக வேண்டிய காரியங்களையெல்லாம் எந்திரக் கதியில் செய்து முடிக்கிறேன்.

நண்பர்கள், என்னுடைய வங்கி வாடிக்கையாளர்கள் என நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவு கூட்டம் என் வீட்டின் முன்னே ஏதோ ஒரு விஐபியின் மரணம் போல நடந்து முடிகிறது..

*********

12 கருத்துகள்:

  1. படிப்பதற்கே சோகமாக இருந்தது. குழந்தைகளின் மரணம் கொடியது. பூக்களைப் படைக்கும் போது சில பூக்கள் கல்லரைக்காகவே படைக்கப்படும் போலும் :((

    பதிலளிநீக்கு
  2. வாங்க கண்ணன்,

    சில பூக்கள் கல்லரைக்காகவே படைக்கப்படும் போலும் :(( //

    மிகவும் ஆறுதலான வரிகள் கண்ணன்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. வாங்க பார்வை,

    மிக ஆச்சரியமாக இருக்கிறது.எப்போ நடந்தது??//

    எந்த வருடம் என்கிறீர்களா? அல்லது இந்த நிகழ்வு எப்போது என்கிறீர்களா?

    இரண்டாவது கேள்வி சரியென்றால் மரணத்திற்கு ஒரு நொடி முன்பு.

    முதல் கேள்வி என்றால்: 1981ம் வருடம்


    'விதி வலியது"//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  4. மரணம் கொடியதுதான், அது எதிரிக்கு நேர்ந்தால் கூட..

    ***

    பெற்றோரை இழப்பதை காட்டிலும், பெற்ற குழந்தைகளை இழப்பது இன்னும் கொடியது..

    ***

    மனதை நெகிழ்த்தும் இந்த சம்பவத்தை முன்பே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன், ஜோசப் !!

    பதிலளிநீக்கு
  5. வாங்க சோ. பையன்,

    மனதை நெகிழ்த்தும் இந்த சம்பவத்தை முன்பே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன்//

    ஆமாங்க.. ஆனால் சமீப காலமாக மரணங்களைப் பற்றி சில பதிவுகள் தொடர்ந்து (தேன்கூடு போட்டிக்காக என்று நினைக்கிறேன்.) வந்துக்கொண்டிருப்பதால் நானும் இதை மீள்பதிவு செய்தால் என்ன என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  6. மனசு ரொம்பவும் வலிக்குதுங்க. எப்படி உங்களால் இவ்வளவு லேசாக அதனை எழுத முடிகிறது என்று பிரம்மிப்பாக இருக்கிறது. உண்மையான சம்பவம் என்றதும் துடித்தே போய்விட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜெஸிலா,

    எப்படி உங்களால் இவ்வளவு லேசாக அதனை எழுத முடிகிறது என்று பிரம்மிப்பாக இருக்கிறது. //

    அந்த துயர சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ரு நினைக்கிறேன்.

    இருப்பினும் நீங்க இத படிக்கறப்போ அனுபவிச்ச அந்த வலியை நானும் எழுதனப்போ அனுபவிச்சேன் என்பதுதான் உண்மை..

    But life has to go on, NO?

    உங்களைப் போன்றவர்களின் ஆறுதலான வார்த்தைகள் என்னுடைய சோகத்தை குறைக்கின்றன..

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  8. பின்னூட்டம் இல்லை
    மவுனமே என் பின்னூட்டம்
    எல்ல உணர்வுகளையுமே வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜி!

    மவுனமே என் பின்னூட்டம்//

    சில சமயங்கள்ல இந்த மவுனம் வார்த்தைகளைவிட கனமாக தோன்றும்.. ஆறுதலாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க டி!

    I am sure the lil Angel of urs continues to guard ur family//

    ஆமாம். என் மகள் வானதூதராக இருந்து எங்களை காக்கிறாள் என்பதில் ஐயமே இல்லை..

    பதிலளிநீக்கு
  11. நீங்க இத படிக்கறப்போ அனுபவிச்ச அந்த வலியை நானும் எழுதனப்போ அனுபவிச்சேன் என்பதுதான் உண்மை..

    இல்லை.
    வாசிக்கும் போது நாம் அனுபவிப்பதை விட மிக மிக மிக அதிகமாக நீங்கள் அப்போது அந்தத் துயரை அனுபவித்திருப்பீர்கள்.
    இதை எழுதிய பின 20வருடங்களிலும் உங்களை விட்டு அகலாது இருந்த சோகத்தின் அளவு அல்லது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க சந்திரா,

    இதை எழுதிய பின 20வருடங்களிலும் உங்களை விட்டு அகலாது இருந்த சோகத்தின் அளவு அல்லது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.//

    உண்மைதாங்க.. ஒங்கள மாதிரி நண்பர்களுடன் அதை பகிர்ந்துக்கொண்டபோது நிச்சயம் குறையத்தான் செய்தது..

    நன்றி..

    பதிலளிநீக்கு