தாய்ப்பாசம்.
நான் அப்போது தூத்துக்குடியில் பணிபுரிந்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் என்னுடைய வாடிக்கையாளர்களுள் ஒருவரை சந்தித்துவிட்டு வீடு திரும்பினேன். இரவு சுமார் எட்டு மணி இருக்கும்.
என்றைக்கும் இல்லாமல் என்னுடைய வீட்டு வாசலிலேயே காத்திருந்த என்னுடைய மனைவியைப் பார்த்து வியந்து, ‘என்ன, யார பாக்கறே?’ என்றேன்.
பதில்கூறாமல் சற்று நேரம் நின்ற அவருடைய முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பிரச்சினை என்பதுமட்டும் புரிந்தது.
‘லாரன்ஸ் அண்ணன் ஃபோன் செஞ்சிருந்தாங்க. நம்ம வில்சன் திடீர்னு இறந்துட்டாராம். ஒங்கள ஒடனே புறப்பட்டு வரச்சொன்னாங்க.’
என்னுடைய வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு என்னுடைய செவிகளை நம்பமுடியாமல் என் மனைவியைப் பார்த்தேன். ‘என்ன சொல்ற? யாரு.. சரியா பேர கேட்டியா? வில்சனா? அவனுக்கு இப்பத்தான கல்யாணம் ஆச்சி! ஏன், எப்படின்னு ஏதாச்சும் கேட்டியா?’
எனக்கும் லாரன்சுக்கும் உள்ள நெருக்கம், அந்த குடும்பத்துடனான எனக்கு இருந்த பிணைப்பு எல்லாம் என் மனைவிக்கு நன்றாக தெரியும். எதிர்பாராத இந்த செய்தி என்னை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதும் அவருக்கு தெரியும்..
என்னுடைய குரலிலிருந்த பதற்றத்தைக் கண்டு என்னை நெருங்கி வந்து என் கைகளைப் பற்றினார். ‘ஒங்க வருத்தம் புரியுதுங்க. ஒடனே பொறப்பட்டு போங்க. நானும் ஒங்கக்கூட பொறப்பட்டு வந்துருவேன்.. ஆனா மூனு மாசங்கூட ஆவாத பாப்பாவ தூக்கிக்கிட்டு..’
ஆம். என் இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. தூத்துக்குடியிலிருந்து திருத்துறைபூண்டிக்கு பேருந்தைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. இரவு நேரத்தில் பேருந்தில் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பயணம் செய்வது அத்தனை உசிதமல்ல என்று நினைத்தேன்.
‘வேணாம். நான் மட்டும் போறேன். நாம அடுத்த தடவ வேளாங்கண்ணிக்கு போம்போது ஒன்னெ அங்க கூட்டிக்கிட்டு போறேன்.. வா.. நான் குளிச்சிட்டு புறப்பட்டு போறேன்.’
அவசர, அவசரமாக குளித்து உடை மாற்றிக்கொண்டு ஓடுகிறேன். தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டிணம் அல்லது தஞ்சாவூர் சென்று அங்கிருந்து வேறொரு பேருந்தைப் பிடித்து ஊர் போய் சேர எப்படியும் விடியற்காலை ஆகிவிடும்.
நல்ல வேளை நாகப்பட்டிணம் வண்டியே கிடைத்துவிடுகிறது. ஏறி அமர்ந்து கண்களை மூடுகிறேன்.
மூடிய கண்களுக்குள்ளே வில்சன்..
என்னைப் போலவே கருத்த நிறம். ஆனால் களையான முகம். அதிலும் ஒரு கவர்ச்சி. சிரித்தால் பளிச்சென்று வெளிச்சம்போட்டது போல் மலர்ந்துவிடும் ஒரு சிரிப்பு.
வீட்டில் கடைசிப் பிள்ளை. லாரன்ஸ் மூத்தவர். எனக்கு கடந்த சுமார் பத்து வருட பழக்கம்.
அப்போது நான் என்னுடைய சென்னை மத்திய கிளையில் துணை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
சென்னைத் துறைமுகத்தில் சிப்பந்தியாக (Peon) பணிபுரிந்து ஓய்வுபெற இன்னும் ஆறே மாதங்களிருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த தன்னுடைய தந்தையின் அலுவலகத்திலிருந்து கிடைத்த காசோலையை மாற்றி தன்னுடைய கணக்கில் வரவு வைப்பதற்காக அவர் வந்தபோது என்னை சந்தித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
காசோலை சற்றே அதிகமான தொகைக்கு இருந்ததால் கவுண்டரிலிருந்து என்னுடைய கணக்காளர் (Accountant) அதனை ஏற்றுக்கொள்ள தயங்கி லாரன்சை என்னுடைய அறைக்கு அழைத்து வந்திருந்தார்.
எனக்கு அவருடைய முகத்தைப் பார்த்ததுமே பிடித்துப்போனது. ஏன், எதற்கு சொல்லத் தெரியவில்லை. என்ன ஏது என்று மேற்கொண்டு எந்த விசாரணையுமில்லாமல் அவர் கொண்டுவந்திருந்த காசோலையை அதுவரை பெரிதாக எந்த வரவு செலவும் செய்யாதிருந்த அவருடயை கணக்கில் வரவு வைத்துக்கொள்ள நான் கையொப்பமிட்டு கொடுக்க என்னுடைய கணக்காளருக்கு அவ்வளவாக திருப்தியில்லையெனினும் என்னை மறுத்து பேச மனமில்லாமல் ஏற்றுக்கொண்டார்.
அன்று துவங்கிய நட்பு நாளடைவில் வளர்ந்து குடும்பத் தலைவனை இழந்து நின்ற அந்த குடும்பத்தில் எப்படியோ நானும் ஒருவனாகிப் போனேன்.
அவரும் சென்னைத் துறைமுகத்தில்தான் குமாஸ்தாவாக பணிபுரிந்துக்கொண்டிருந்தார். என்னுடைய கிளை அவருடைய அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்பதால் என்னுடைய கிளைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்காமல் செல்லமாட்டார்.
அவருடைய குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம். சொந்தமாக சிறியதொரு ஓட்டு வீடு சென்னை பெரம்பூர் பகுதியில். ஐம்பது வயதில் அம்மா, இருபது வயதில் ஒரு தங்கை மெர்சி. ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை தேடிக்கொண்டு.. அவருக்கு இரண்டு வயதுக்குக் கீழே கடைக்குட்டி வில்சன். பள்ளி படிப்பு முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் தெருமுனைகளில் நின்றுக்கொண்டு வம்படித்துக்கொண்டிருந்த வாலிபன். பொறுப்பற்றவன் என்று சொல்லமுடியாது. தாயின் அதிகபட்ச பாசத்தில் வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாதிருந்தவன்..
லாரன்சுடைய வருமானத்தில்தான் குடும்பம் நடந்துக் கொண்டிருந்தது. ‘இவன நினைச்சாத்தான் கவலையா இருக்கு ஜோசஃப்.. . எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். மெர்சி ஸ்கூல் முடிச்சதுமே அப்பா டீச்சர் ட்ரெய்னிங் படிம்மான்னு சேர்த்துவிட்டார். அப்பாவுக்கு நிறைய ஃபாதர்ஸ் பழக்கம். எங்கயாவது டீச்சர் போஸ்ட் வாங்கிரலாம்னு நினைச்சார். அப்பா இப்ப இல்லன்னாலும் அவருக்கு தெரிஞ்ச ஃபாதர்ஸ் மூலமா அவளுக்கு வேல எப்படியும் கெடச்சிரும்னு நினைக்கேன். வேல கெடச்சதும் அப்பா இறந்ததும் கெடச்ச பணத்துல அவ கல்யாணத்த முடிச்சிருவேன். அப்புறம் அம்மாவ பாத்துக்கறதுக்கு நா இருக்கேன். ஆனா இவனத்தான் என்ன பண்றதுன்னு தெரியல. என்னாலதான் காலேஜ் போமுடியலை.. நீயாவது காலேஜ்ல சேர்ந்து படிடான்னா எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். கேக்காம இப்படி ஊர் சுத்திக்கிட்டிருக்கான். எல்லாம் அம்மா குடுக்கற செல்லம்.’ என்று சொல்லி மாய்ந்தததை நினைத்துக்கொள்கிறேன்.
நான் துணை மேலாளர் பதவியிலிருந்து பதவி உயர்வுபெற்று சென்னை, தஞ்சை ஊர்களில் மேலாளராக இருந்துவிட்டு தூத்துக்குடி வந்திருந்தேன்.
இந்த ஏழெட்டு வருடங்களில் நான் சென்னை செல்லும்போதெல்லாம் லாரன்சையோ அவர் என்னையோ தொடர்புக்கொள்ளாமல் இருந்ததே இல்லை.
இந்த இடைபட்ட காலத்தில் அவருடைய தங்கை திருமணம் முடிந்தது. தபால்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய கணவருக்கு நாகப்பட்டிணத்தை அடுத்திருந்த திருத்துறைபூண்டிக்கு மாற்றலாக நல்லவேளையாக சென்னையில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்த கிறித்துவ பள்ளி கன்னியர்களுக்கும் அங்கு ஒரு கிளையிருக்க அவருக்கும் மாற்றல் கிடைத்தது என்று கேள்விப்பட்டிருந்தேன்.
லாரன்சுக்கும் பதவி உயர்வு கிடைத்து ஹைதராபாத் செல்ல அவருடைய தாயார் மெர்சியுடன் சென்னையில் வில்சனுடன் தனியாக..
அதன்பிறகு அந்த குடும்பத்துடனான என்னுடைய நெருக்கம் அற்றுப்போனது..
**
என்னுடைய பேருந்து நாகப்பட்டிணத்தை அடைந்தபோது காலை நான்கு மணி.. அங்கிருந்து திருத்துறைப்புண்டி அரைமணி நேர பயண தூரம் என்று தெரிந்தது.
திருத்துறைபூண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி லாரன்ஸ் தொலைபேசியில் கூறியிருந்த விலாசத்தை சைக்கிள் ரிக்ஷ¡ ஓட்டுனரிடம் காட்டியபோது, ‘நீங்க தம்பிக்கு யாருங்க? தங்கமான தம்பிங்க அவரு.. திடீர்னு இப்படி செஞ்சிக்குவார்னு யார்ங்க எதிர்பார்த்தா.. ஏறுங்க கொண்டுவிடறேன்..’ என வாயடைத்துபோய் அவரை பார்க்கிறேன்..
கிராமம் என்றும், நகரம் என்றும் சொல்ல முடியாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் சிற்றூர்..
‘திடீர்னு இப்படி செஞ்சிக்குவார்னு..’ என்ற வார்த்தைகள் என்னையே சுற்றி சுற்றி வந்தன.. நான் கேட்காமலே ரிக்ஷ¡வை மிதித்தவாறே அவர் தொடர்கிறார்.
‘அந்த தம்பி பஜார்ல பெட்டிய கடைய தொறந்தப்போ யார்றா நீ வெளியூர்காரன்னு எல்லாரும் எதுத்துக்கிட்டு நின்னோம்.. ஆனா இந்த ஆறே மாசத்துல எல்லாத்தையும் வளச்சி போட்டுருச்சுங்க.. அந்த மொகத்துல பளிச்சின்னு சிரிப்போட நிக்கறப்போ அதும்மேல யாருக்கும் கோவமே வராதுதாங்க..’
‘என்ன சொல்றீங்க? கடை வச்சிருந்தாரா? இங்கயா?
ரிக்ஷ¡ ஓட்டுனர் திரும்பி பார்க்கிறார். ‘என்னய்யா ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னில்ல நினைச்சேன். அந்த தம்பியோட அக்கா டீச்சர் வீட்லதான அவரும் அவரோட அம்மாவும் இருக்காங்க?’
ஓ! என்று வியக்கிறேன்.
‘தோ.. வீடு வந்துருச்சுங்க.. இறங்கிக்குங்க.’
இறங்கி நான் கையில் வைத்திருந்த இருபது ரூபாய் பணத்தை அவர் கையில் திணிக்கிறேன். ‘ஐயையோ வேணாங்க.’ என்று மறுத்துவிட்டு செல்பவரை வியந்துபோய் பார்க்கிறேன்.
‘டேய்.. இவன் செஞ்சிட்டு போனத பார்த்தியாடா?’ என்ற குரல் கேட்டு திரும்புகிறேன். லாரன்ஸ். இரண்டு நாள் மீசை, தாடியுடனான கவலை தோய்ந்த முகம். மற்றபடி ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்த அதே மெலிந்த தேகம். வாயை பொத்திய துவாலையுடன் என்னைப் பார்த்த அந்த முகத்தில் இந்த சாவுக்கே காரணம் நாந்தான்டா என்பதுபோன்ற ஒரு துயரம்..
‘எப்படிறா.. என்னடா ச்சி.. இப்பத்தானடா கல்யாணம் ஆச்சின்னு கேள்விப்பட்டேன்.. இவ்வளவு தூரம் பழகியும் நம்மக்கிட்ட சொல்லாமயே முடிச்சிட்டானேன்னு நான் மாஞ்சிபோய் ஆறுமாசங்கூட ஆகலையேடா.. ஒன்னையும் அவனையும் அடுத்த தடவ பாக்கற்ப்போ சண்டை போடணும் நான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.. அதுக்குள்ளே..’ என்று மேலே தொடரமுடியாமல் நின்றவனை தோளை அணைத்துக்கொண்டு சென்றவருடன் வீட்டுக்குள் செல்கிறார்.
நடுக்கூடத்தில் லாரன்சின் அம்மாவின் மடியில் கிட்த்தப்பட்டிருந்த வில்சனின் உயிரற்ற உடலைப் பார்க்கிறேன். அருகில் பெஞ்சில் திறந்து வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி.. ‘என்னடா இது?’ என்று கலக்கத்துடன் திரும்பி லாரன்சை பார்க்கிறேன்.
‘என்னெ என்ன பண்ண சொல்ற ஜோசப்.. அம்மா அவன மடியிலருந்து எறக்க விட மாட்டேங்கறாங்க.. நான், மெர்சி, மாப்பிள்ளை, அக்கம்பக்கத்துலருக்கறவங்க, ஸ்கூல் கன்னியாஸ்திரிங்கன்னு எல்லாரும் சொல்லி பார்த்துட்டோம். என் மடியில படுத்துக்கிட்டு என்னெ எழுந்து போயி மெர்சிக்கு ஃபோன் செய்யவிடாம இப்படி அநியாயமா போய் சேர்ந்துட்டான்டா.. இந்த பாவிய கோயிலுக்கு கொண்டு போறவரைக்கும் என் மடியிலயே வச்சிக்கறேண்டாங்கறாங்க..’
சற்று நேரம் நின்றுக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்து வாசலில் கிடந்த இருக்கையில் நானும் லாரன்சும் அமர்கிறோம்..
அடுத்த அரை மணியில் லாரன்சும் மெள்ள மெள்ள அதுவரை நடந்ததை கூறுகிறார்.
‘நானும் மெட்றாஸ்லருந்து போனது வில்சனுக்கு தோதா போயிருச்சி ஜோசப். அவம்பாட்டுக்கும் இன்னும் ஜாஸ்தியா ஊர் சுத்த ரம்பிச்சிருக்கான். அப்போ ஒரு பொண்ணெ பாத்து, பழக ஆரம்பிச்சி.. அவங்க நடுவுல தப்பு நடந்துபோயிருக்கு. அந்த பொண்ணு வயித்துல பிள்ளையோட நிக்க.. என்ன பண்றதுன்னு தெரியாம அப்பத்தான் எனக்கு ஃபோன் செஞ்சி சொன்னான். நான் பதறிப்போயி ஓடிவந்தேன்.. ரெண்டு பேருக்கும் கல்யாணத்த செஞ்சி வச்சிரலாம்னுதான் நெனச்சேன். ஆனா அம்மாவுக்கு அந்த பொண்ண சுத்தமா பிடிக்கலடா..’
‘ஏன்டா?’ என்கிறேன்..
‘அது ஒரு தலித் பொண்ணுடா.. சேரியில இருந்துருக்காங்க.’
நான் என்ன சொல்வதென தெரியாமல் அவரையே பார்க்கிறேன்.
‘நீ ஏன் இப்படி பாக்கறேங்கறது புரியுது.. ஆனா பிடிவாதமா நின்ன அம்மாவ ஒன்னும் பண்ண முடியல. நாமளும் எம்.பி.சி தானமா.. நாமளேன்னு இப்படி நினைக்கலாமான்னு எவ்வளவோ சொல்லிபாத்தேன். டேய்.. நீ எதையாச்சி சொல்லி சப்பைக் கட்டாத.. நம்மளையும் அந்த சேரி பொண்ணையும் ஒப்பிட்டு பேசாதன்னு சொல்லிட்டாங்க. நான் சரின்னு சொல்லி நம்ம பங்கு சாமியார்கிட்ட போயி பேசினேன். அவர் ஒங்க தம்பியா இப்படி செஞ்சிட்டான்.. ஒங்கப்பாவுக்கு எவ்வளவு தெய்வ பக்தி.. வரச்சொல்லுங்க பேசி பாக்கேன்னார். ஆனா என்ன சொன்னாரோ தெரியலை வில்சன் அவரையே அடிச்சிட்டு வந்த கையோட என்னையும் அடிக்க வந்துட்டான். நானும் இனி பேசி பிரயோசனமில்லேன்னு நினைச்சி திரும்பி போய்ட்டேன். அவன் அந்த பொண்ண கூட்டிக்கிட்டு போயி ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டிருக்கான். அந்த பொண்ணு வீட்லயும் சேத்துக்கல.. தனியா இருந்து குடும்பம் நடத்தியிருக்கான். மெர்சி இத கேள்விபட்டு போயி அம்மாவ கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டு எனக்கு ஃபோன் செஞ்சா. நானும் அதுவும் நல்லதுக்குத்தான்னு இருந்துட்டேன்.’
இவ்வளவும் நடந்திருக்கிறதா என்று மலைத்து போகிறேன். திருமணம் நடந்த விஷயத்தை மட்டும் வேறொரு நண்பர் வழியாக கேள்விப்பட்டிருந்த நான் இந்த ஆறுமாதமாக நமக்கு சொல்லாமயே கல்யாணம் முடிச்சிருக்கான் பார்.. இவ்வளவு நாள் பழகுனதுக்கு இதான் அர்த்தம்போலருக்கு என்று மருகிக்கொண்டு இருந்திருந்தேன்.
'ஆனாலும் அம்மாவ விட்டுட்டு அவனால இருக்க முடியல. மெர்சி வீட்டுக்கு ஃபோன் செஞ்சி அம்மாக்கூட பேசணும் சொல்லியிருக்கான். ஆனா அம்மா ஒத்துக்கல போலருக்கு. நீ அந்த பொண்ண விட்டுட்டு வந்தாத்தான் உங்கூட பேசுவேன்னு சொல்லியிருக்காங்க.. நீ ஒங்க அம்மாதான் முக்கியம்னு போனேன்னா திரும்பி வராத, என்னெ மறந்துருன்னுருக்குன்னு அந்த பொண்ணு.. அம்மாவா பொஞ்சாதியான்னு வில்சன் திண்டாடியிருக்கான். அப்புறம் என்ன நெனச்சானோ தெரியல பொஞ்சாதிக்கிட்டகூட சொல்லிக்காம பஸ் பிடிச்சி இங்க வந்துருக்கான். இங்க வந்தவனுக்கு அம்மா பிடிவாதத்த தட்டமுடியாம மெர்சிதான் ஒரு பெட்டிக் கடைய வச்சிக்குடுத்து இந்த ஆறுமாசமா இங்கயே பிடிச்சி வச்சிருக்கா. ஆரம்பத்துல வில்சன் சந்தோசமாத்தான் இருந்துருக்கான். ஆனா ரெண்டு நாளைக்கு முன்னால அவனுக்கு மெட்றாஸ்ல குழந்த பிறந்த நியூஸ் வந்திருக்கு.. போய்ட்டு ஒரு வாரத்துல வந்துடறேன்னு கெஞ்சியிருக்கான். அம்மா நீ போறதுன்னா இந்த அம்மா இல்லேன்னுட்டு போன்னு சொல்லியிருக்காங்க. மெர்சியும், மாப்ளையும் அவன் போய்ட்டு வரட்டுமேன்னு சொல்லியிருக்காங்க. அம்மா பிடிவாதமா முடியவே முடியாதுன்னு நிக்க வில்சன் என்ன நினைச்சானோ தெரியல.. நேத்து கடைக்கு போற வழியில பயிருக்கு போடற உரத்த வாங்கி வச்சிக்கிட்டு பகல் வீட்டுக்கு சாப்ட வந்த எடத்துல குடிச்சிட்டு படுத்துருக்கான். கொஞ்ச நேரத்துல வாய்ல நொற தள்ளிக்கிட்டு வந்து அம்மா மடியில படுத்துக்கிட்டு நான் தப்பு பண்ணிட்டம்மான்னு கதறியிருக்கான்.. டேய் என் மடியிலருந்து எழுந்துருடா நான் மெர்சிக்கு ஃபோன் பண்ணட்டும்னு அம்மா கதறியிருக்காங்க. அவன் விடவேயில்ல போலருக்கு. அப்படியே அம்மா மடியிலயே துடிதுடிச்சி செத்து போயிருக்கான்டா.. அதான் அம்மா அவன மடியிலயே போட்டுக்கிட்டு ராத்திரியெல்லாம்..
நேத்து சாயந்தரம் ஆறு மணிக்கு எனக்கு ஃபோன் வந்து அரக்கபரக்க ஓடி வரேன். நல்ல வேளை ஆஃபீஸ் வேலையா ஒரு வாரமா மெட்றாஸ்லதான்.. இல்லன்னா இப்பக்கூட வந்திருக்க முடியுமான்னு...’ லாரன்ஸ் துவாலையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்குகிறார். நான் அவரை எப்படி தேற்றுவதென தெரியாமல் சிலையாக அமர்ந்திருகிறேன்..
நேரம் ஆக, ஆக பஜாரில் கடைவைத்திருந்தவர்களின் கூட்டம்... மாலையும் கையுமாக..
அதில் ஒரு சிறுவன், ‘அண்ணா, விதி கேசட்ட எத்தன தடவ கேட்டாலும் போடுவியேண்ணா.. இப்படி அநியாயமா போய்ட்டியே..’ என்று கதறுவதைப் பார்க்கிறேன்..
வசனங்களுக்காகவே பரபரப்புடன் பேசப்பட்ட விதி படத்தின் ஒலிநாடா மிகவும் பிரபலாமாகவிருந்த காலம் அது..
மாலையானதும் வில்சனை வலுக்கட்டாயமாக அவனுடைய தாயாரின் மடியிலிருந்து எடுத்து குளிப்பாட்டி அவனுக்கு மிகவும் பிடித்த ஆடையையுடுத்தி சவப்பெட்டியில் கிடத்துகிறார்கள்..
அடுத்த அரைமணியில் கோவிலை நோக்கி அவனுடைய இறுதிப்பயணம் அந்த தெருவே திரண்டு வந்து பங்கெடுக்க புறப்படுகிறது..
ஆனால் யாருக்குமே அவனுடைய மனைவிக்கு தகவலளிக்கவேண்டுமென்று தோன்றவில்லையே என்று நினைத்துப் பார்க்கிறேன்..
அந்த மரணம்.. என் வாழ்வில் என்னை மிகவும் உலுக்கிய மரணங்களில் அதுவும் ஒன்று..
அவன் இருபத்தஞ்சு வருசம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்!
அம்மாவா மனைவியா என்று வந்தபோது அம்மா என்று தேடி வந்த தன் மகனை அவனுக்கு பிறந்த பிள்ளையை பார்க்கக்கூட அனுப்பாத அந்த தாய்பாசத்தை நினைத்து கோபப்படுவதா..
பிறந்ததுமே அப்பாவை பறிகொடுத்து நின்ற அந்த பச்சிளம் குழந்தைய நினைத்து வருந்துவதா..
தன் தம்பியின் மரணத்துக்கு தானும் ஒரு பொறுப்போ என்ற வேதனையில் திருமணமே புரிந்துக்கொள்ளாமல் தனியாளாய்போனார் லாரன்ஸ்..
அதன்பிறகு அவரை இருமுறை சென்னையில்வைத்து சந்தித்ததோடு அந்த குடும்பத்துடனான தொடர்பு அற்றுப்போனது..
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
*******
//நீ போறதுன்னா இந்த அம்மா இல்லேன்னுட்டு//
பதிலளிநீக்குஇது போல் பெண்களின் பிடிவாதம் பல குடும்பங்களை புரட்டிப்போட்டு சீரழித்திருக்கிறது. கண்கெட்டப் பின் கர்தரிடம் முறையிட்டு என்ன பயன் :((
மனசை ரொம்ப பாரமாக்கிட்டீங்க ஜோசப் சார்.. சில பெற்றோர்கள் தங்கள் பாசப் பிடிவாதங்களினால்.. தங்களை அறியாமலேயே பெரிய இழப்புக்களுக்குக் காரணமாகிவிடுகின்றனர்...
பதிலளிநீக்குஎனக்கும் இது போல சிலரைத் தெரியும்.
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... பெருமூச்சுதான்..
சீமாச்சு...
வாங்க கண்ணன்,
பதிலளிநீக்குகண்கெட்டப் பின் கர்தரிடம் முறையிட்டு என்ன பயன்//
உண்மைதான். ஆனால் அந்த பாழும் தாய்க்கு தெரியவில்லையே..
பையனை பறிகொடுத்துவிட்டு என்னால்தான், என்னால்தான் இந்த பாவியாலதான் எம்பையன் போய்ட்டான் என்று அந்த அன்னை கதறியழுததை என்னால் மறக்கவே முடியவில்லை.
வாங்க சீமாச்சு,
பதிலளிநீக்குதங்களை அறியாமலேயே பெரிய இழப்புக்களுக்குக் காரணமாகிவிடுகின்றனர்...//
என்ன செய்வது.இதற்குத்தான் பெண்ணுள்ளம் பேதையுள்ளம் என்கிறார்கள் போலிருக்கிறது.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குநம்ம நாட்டுல பாசம் ,அன்பு இதெல்லாம் வெறும் மிரட்டல்களாகவும் ,தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த அடுத்தவரின் அபிலாஷைகளுக்கு துளியும் மதிப்பளிக்காமல் இருப்பதை நானும் கண்டிருக்கிறேன் .
இந்த தாய் செய்தது மகா பாவம் ..தாய்ப் பாசம் என்று சொல்லி தாய்ப்பாசத்தை கொச்சைப் படுத்தாமல் இருந்தால் நல்லது.
இதைத்தான் திருவள்ளுவர்
பதிலளிநீக்கு"அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"
என்று அப்போதே அழகாகக் கூறிச் சென்றார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா வணக்கம் :(
பதிலளிநீக்குமனதை பாரமாக்கி, கண்களையும் குளமாக்கிவிட்டீர் ஐயா :(, எனக்கும் வில்சன் என்று ஒரு உற்ற தோழன் இருக்கின்றான், அவன் நினைவு வந்துவிட்டது, என் பள்ளிகாலத்தோழன், இன்றும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் முதலிடத்தில் இருப்பவன்...அருமையான எழுத்துக்கள் ஐயா, மிக்க நன்றி, இன்னும் எழுதுங்கள்...
சிவா @ ஸ்ரீஷிவ்
வாங்க ஜோ,
பதிலளிநீக்குஇந்த தாய் செய்தது மகா பாவம்//
நீங்க சொல்றது உண்மைதான். தாய்ப்பாசம்கற வார்த்தையின் உட்பொருளை புரிந்துக்கொள்ளாமல் பல தாய்மார்கள் செய்யும் கொடுமைதான் நான் குறிப்பிட்ட சம்பவம்.
வாங்க டோண்டு,
பதிலளிநீக்குஅறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"//
கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!
வாங்க ஸ்ரிஷிவ்,
பதிலளிநீக்குவில்சன் என்று ஒரு உற்ற தோழன் இருக்கின்றான், அவன் நினைவு வந்துவிட்டது//
உண்மைதான். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும்..
உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரிஷிவ்.
பொஸஸிவ்னெஸ், ஈகோ.....?
பதிலளிநீக்குதாய்ப்பாசம் என்று மெருகு போட்டாலும் தனக்குப் பிள்ளைப்பாசம்
இருப்பது போலவே அவனுக்கும் பிள்ளைப் பாசம் இருக்குமென்பதை அறியாத உள்ளம் என்ன உள்ளம்
வாங்க ஜி!
பதிலளிநீக்குபொஸஸிவ்னெஸ், ஈகோ.....?//
இம்மாதிரியான வார்த்தைகளின் பொருள் கூட தெரியாத ஒரு பாமர தாய் அவள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் பாசம்.. கண்மூடித்தனமான பாசம்.தன் மகன் தனக்கே சொந்தம் என்கிற பிடிவாதமான, மூர்க்கத்தனமான பாசம்..அவ்வளவுதான்
<-----
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் அந்த பாழும் தாய்க்கு தெரியவில்லையே
---->
அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.ஒரு வரட்டுப்பிடிவாதம்தான்.நான் என் தாயைப் பார்த்து 4 வருடங்களாகிறது.இடையில் ஒரு தடவை போனில் பேசினென்.
மனச கனக்க வெச்சுட்டீங்களே ஜோசப்பூ!!
பதிலளிநீக்குவாங்க ஜெயசந்திரசேகரன்,
பதிலளிநீக்குமனச கனக்க வெச்சுட்டீங்களே //
அப்படீங்களா?
எனக்கும் எழுதி முடித்தபோதே அப்படித்தானிருந்தது.