01 ஜூலை 2006

கடந்து வந்த பாதை- 2

அப்பளப்பூ சிறுவன் அண்ணாசாமி
(கற்பனைப் பெயர்)

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த சமயம்.

எங்களுடைய வீட்டுக்கு தினமும் மாலை நேரங்களில் என் வயதையொத்த ஒரு சிறுவன் வீட்டிற்கு அப்பளம் விற்க வருவான்.

என்னுடைய தாத்தாவுக்கு அஞ்சி திண்ணையை விட்டு தள்ளியே நிற்பான். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் பிடிக்கும்.

என்னுடைய பள்ளிக்கு செல்லும் பாதையில்தான் அவனுடைய வீடும் இருந்தது. ஒரு நாள் அவனுடைய வீட்டைக் கடக்கையில் அவனும் தலையில் புத்தக பையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து இறங்கியதைப் பார்த்து நின்று, ‘டேய் நீ எந்த ஸ்கூல்? எத்தனாம்ப்பு?’ என்றேன்.

அவன் என் வயதையொத்தவன் என்றாலும் என்னை விட இரண்டு வகுப்புகள் கீழே...

அவனுடைய வீடிருந்த அதே தெருவில் இருந்த ஒரு மாநகராட்சி பள்ளியில் படித்துக்கொண்டிருப்பதாக கூற அன்றிலிருந்து நான் அவன் வீட்டிலிருந்து இறங்கும் அதே நேரத்தில் அங்கு செல்வதில் குறியாயிருந்தேன்.

ஆனால் நான் என் சகோதரர்களுடன் தான் செல்லவேண்டும் என்பது என்னுடைய தாத்தாவின் நியதிகளுள் ஒன்று. எனக்கு மட்டுமல்ல என் சகோதரர்களுக்கும் தாத்தாவுடைய நியதியை மீறினால் என்ன தண்டனை என்பது நன்றாகவே தெரிந்திருந்ததால் அதை மீற துணியமாட்டோம்.

ஒவ்வொரு நியதி மீறலுக்கும் இரண்டு நிமிடம் என்று ஒன்றாக சேர்த்து வார இறுதியில் சனிக்கிழமை உச்சி வெயிலில் முற்றத்திலிருந்த கடப்பைக் கல் தரையில் முட்டியிட்டு இருக்க வேண்டும்..

அதே தவறை தொடர்ந்து செய்தால் தரையில் கல் உப்பை பரப்பி அதன் மேல் முட்டியிடவேண்டும்..

கால் முட்டி கொப்பளித்துப் போய்விடும். தாத்தாவை எதிர்த்து பேச வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கே தைரியமிருக்காது. இந்த நிலையில் எங்களைப் போன்ற சிண்டுகளுக்கு என்ன செய்ய இயலும்?

ஆகவே அவன் அப்பளம் விற்க வரும்போது தாத்தாவின் முதுகுக்கு பின்னால் நின்றுக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகை செய்வதோடு எங்களுடைய நட்பு நின்று போனது. ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில் அவனிடமிருந்து அப்பளம் வாங்க என்னுடைய அம்மாச்சியை நச்சரிப்பேன். ‘எலேய் நேத்துதான வாங்குனோம்? தெனமுமா வாங்க முடியும்?’ என்ற அம்மாச்சியை கெஞ்சி கூத்தாடி தினமும் பத்து நயா பைசாவுக்காவது வாங்க வைத்துவிடுவேன். (பத்து நயா பைசா என்பது அப்போது எனக்கு பெரிய பணம்!! இருபத்தைந்து பைசாவுக்கு நான்கு உள்ளங்கையளவு வெங்காய பஜ்ஜி, ஒரு காப்பி குடிக்க முடிந்த காலம் அது!)

அத்துடன் அவன் கொண்டுவரும் குட்டி, குட்டியான அப்பளத்தை (அப்பளப்பூ என்பான், கேட்டால்) எப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

ஒருமுறை சனிக்கிழமை பகல் என்னுடைய தாத்தா உறங்கும்வரை காத்திருந்துவிட்டு ('உலகம் முடியப் போவுது தாத்தா' என்றாலும் 'இருலே ஒரு மணி நேரம் தூக்கம் போட்டுட்டு வந்துடறேன்' என்பார். அந்த அளவுக்கு சரியாக மதியம் 12.30 உண்டு முடித்தால் பிற்பகல் 2.00 மணி வரை கண்டிப்பாய் உறங்க வேண்டும் அவருக்கு) அவனுடைய வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் சென்றேன்.

அப்போதுதான் தெரிந்தது அவனுடைய குடும்ப நிலைமை. பாவமாக இருந்தது.

அப்பா ஒரு ஓட்டை ஒடசல் தையல் மிஷினை மிதித்துக்கொண்டிருந்தார். ஈர அப்பள பூக்களை அவனுடைய சித்தி உருட்டி, உருட்டி கொடுக்க என்னுடைய நண்பன் முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த கிழிந்த பெட்ஷீட்டில் ஒரு தட்டில் கொண்டு போய் வைத்துக்கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்ததும் ஒரு ஈர அப்பள பூவை எனக்கு கொண்டு வந்து கொடுக்க நான் ஆசையோடு வாங்கி வாயில் வைக்க லேசான சோடா மாவு கலந்து உளுந்தம்மாவு மற்றும் உப்பின் ருசி நாக்கைத் தாக்கியது இப்போதும் நினைவிருக்கிறது. ஈர மாவின் ருசி பொறித்த அப்பளத்தின் ருசியிலிருந்து மாறுபட்டிருந்ததையும் உணர முடிந்தது.

அவன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டு வர நானும் அவனும் வீட்டின் பின்பக்கமிருந்த ஒரு பொட்டல் தோட்டத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்ததும் என் மனதில் இப்போதும் நிழலாக தெரிகிறது..

அவனுடைய தாயார் அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட காச நோயாளியான அப்பா இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டாராம். சித்திக்கு பிறந்ததோ ஐந்து குழந்தைகள்.. அதில் நான்கு பெண்கள்..

ஆனால் அந்த பிள்ளைகள் யாருமே அப்பள வேலையில் ஈடுபட்டிருந்ததாய் தெரியவில்லை. எல்லாமே என் நண்பந்தான். அதனால்தான் பள்ளியில் சேர இரண்டு வருடங்கள் தாமதமாயிருந்தது. இதை என்னிடம் விவரித்தபோதும் கூட அவன் உதடுகளில் ஒரு புன்னகை இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை.. சித்தியின் கொடுமையை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..

என்னையும் அவனையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவனுடைய நிலமை என்னை என்னவோ செய்ய நானும் அவனும் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.

நான் எட்டாவது முடித்ததும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்னை காட்பாடி போர்டிங் பள்ளியில் சேர்க்க அவனுடனான தொடர்பு விட்டுப்போனது.

நான் பள்ளி படிப்பு முடிந்து திரும்பி வந்தபோது அவனிருந்த வீடு பூட்டி கிடக்க.. அவனைப் பற்றி அண்டை வீட்டில் விசாரித்தும் பயனில்லாமல் போனது.

அதன் பிறகு பத்து வருடங்கள்..

நான் வங்கியில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்தபிறகு அவனை திடீரென்று சாலையில் வைத்து சந்திக்க நேர்ந்தது..

ஆளே மாறிப்போயிருந்தான்.

‘எப்படிறாருக்கே..?’ என்ற என்னுடைய கேள்விக்கு அவனிடமிருந்து பதிலாக வந்தது அவனுடைய ட்ரேட் மார்க் பளிச் புன்னகை.

கிழிந்த அரைக்கால் சட்டை, கசங்கிய சட்டை.. வாராத தலை என்று அவனைக் கண்ட உருவத்துக்கும் இப்போது இளைஞனாய் என் முன்னே நின்ற உருவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..

அவனை இழுத்துக்கொண்டு டவுட்டன் கார்னரில் இருந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தேன்..

நேரம் போனதே தெரியாமல் அவன் பேசுவதைக் கேட்க ஏதோ சினிமா பார்ப்பதுபோலிருந்தது எனக்கு..

அவனுடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது..!

படிப்பில் அவன் படுசுட்டி என்று முன்பே கேள்விப்பட்டிருந்தேன். மாநகராட்சி பள்ளியில் படித்தும் பதினோராவது வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிலிலேயே முதலாவதாக வந்திருக்கிறான்.

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் சென்னையிலிருந்த பிரபல கல்லூரி ஒன்றில் பி.காம் முடித்து வங்கிகள் நடத்தும் தேர்வில் அகில இந்திய மெரிட் லிஸ்ட்டில் இடம் பிடித்து நாட்டிலேயே மிகப் பெரிய  அரசு வங்கியொன்றில் நேரடியாக பயிற்சி ஆஃபீசராக பணியில் சேர்ந்து அவனை நான் சந்தித்தபோது இரண்டு வருடங்களாகியிருந்தது.. தந்தை அவன் கல்லூரியில் இருந்தபோதும் சித்தி அவன் பணியில் சேர்ந்த முதல் வருடம் மரித்து போக அவனும் சித்தியின் பிள்ளைகளுமாக வீடு பிடித்து..

இளம் வயதிலேயே குடும்பஸ்தனாய்..

அவனும் சென்னையிலேயே பணியில் இருந்ததால் எங்களுடைய நட்பு தொடர்ந்தது...

நான் குமாஸ்தா பதவியிலிருந்து அதிகாரியாக பதவி உயர்வு பெற்றபோது அவன் மேலாளராக பதவி உயர்வு பெற்று சென்னையிலிருந்து மாற்றலாகிப் போனான்..

அதன் பிறகு மீண்டும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு தொடர்பு விட்டுப் போனது..

அதற்குப் பிறகு ஜூன் மாதம் 1999ம் வருடம்..

சென்னையிலிருந்து நான் ஏ.ஜி.எம் ஆக பதவி உயர்வு பெற்று எர்ணாகுளத்திலிருந்த என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கு தலவைராக செல்கிறேன்..

அவர் அவருடைய வங்கியின் மும்பை தலைமையலுவலகத்திலிருந்து சென்னை ரீஜியனல் ஹெட்டாக (ஜி.எம் பதவி) வருகிறார்..!

சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்திக்கிறோம்.. அதே ட்ரேட் மார்க் சிரிப்புடன் என்னை அடையாளம் கண்டுகொண்டு  அழைத்து பேசுகிறார்..

சித்தியின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் செய்துவிட்டு தான் மட்டும் திருமணம் ஏதும் செய்துக்கொள்ளாமல்.. ஒரு நல்ல அண்ணனாக, அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு மாமாவாக, பெரியப்பாவாக..

அன்று ஏர்போர்ட் லவுஞ்சில் வைத்து பார்த்ததுதான்..

ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது....

இப்போது ஏதோ ஒரு வடக்கத்திய மாநிலத்தில்.. பெரிய பதவியில்..

எப்படிப்பட்ட இமாலய சாதனை அவருடையது!

அவருடைய வெற்றிக்கு அவர் ஒருவர்தானே காரணம்..

முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பதற்கு அவருடைய வாழ்க்கையொரு உதாரணம்..

அப்படியொருவனை நண்பனாக பெற்றது எவ்வளவு பெரிய பாக்கியம்.. என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்..

அப்பளப்பூ அண்ணாசாமியை என்னால் மறக்கவே முடிந்ததில்லை..

இனியும் வரும்...





16 கருத்துகள்:

  1. அட! சனிக்கிழமையில் ஒரு போனஸ்
    சந்தோஷம்..
    ஒரு மெழுகுவர்த்தி யின் கதை
    எல்லோருக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு இவர் மட்டும் ஏன் இப்படி.......?

    பதிலளிநீக்கு
  2. சீரிய சிந்தனை, சாதனை எண்ணம் இருந்தால் தடைகள் வெரும் மணல் மேடுகள் என்பதற்க்கு அண்ணாசாமி மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.

    அதை அழகாக எடுத்துக்காட்டியதற்க்கு நன்றி ஜோசப் சார்.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் இயலாதது இல்லை.

    பதிலளிநீக்கு
  4. உழைப்புக்குக் கிடைச்ச வெகுமதி.

    அண்ணாச்சாமி நல்லா இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ஜி!

    ஒரு மெழுகுவர்த்தி யின் கதை//

    கரெக்டான கேப்ஷன்..

    எல்லோருக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்டு இவர் மட்டும் ஏன் இப்படி.......? //

    நீங்க சொல்லிட்டீங்களே மெழுகுவர்த்தின்னு.. அது அழிஞ்சாத்தானே ஒளி கொடுக்கமுடியும்?

    அண்ணாச்சாமி தன் கடமைகளையெல்லாம் முடிச்சப்போ திருமண வயசு போயிருச்சேன்னு நினைச்சிருப்பார்..

    பதிலளிநீக்கு
  6. வாங்க நன்மனம்,

    சீரிய சிந்தனை, சாதனை எண்ணம் இருந்தால் தடைகள் வெரும் மணல் மேடுகள் என்பதற்க்கு அண்ணாசாமி ஒரு எடுத்துக்காட்டு//

    ஆமாங்க.. அதனாலயேதான் எனக்கு அவர பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மணியன்,

    நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் இயலாதது இல்லை. //

    உண்மைதான், சந்தேகமேயில்லை..

    பதிலளிநீக்கு
  8. வாங்க துளசி,

    உழைப்புக்குக் கிடைச்ச வெகுமதி.//

    உண்மைதான்..

    அண்ணாச்சாமி நல்லா இருக்கணும்.//

    உங்கள மாதிரி ஆளுங்க வாழ்த்தும்போது நல்லாவே இருப்பார்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு தேவதைக் கதை மாதிரி இருந்தது. கஷ்டப்பட்டு படித்து முன்னேறியவரின் வரலாற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். கடைசி வரிகளில் புல்லரித்தது எனக்கு.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    பதிலளிநீக்கு
  10. வாங்க சிவகுமார்,

    படித்து முன்னேறியவரின் வரலாற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.//

    நன்றிங்க.. இனியும் வரும்..

    தொடர்ந்து படிங்க..

    பதிலளிநீக்கு
  11. குடும்பதிற்காக செய்யும் தியாகமா அல்லது நமக்காக அமைத்துக்கொள்ளும் மகிழ்ச்சியான வாழ்க்கையா(we have only one life). யாரவது தெளிவு படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க அகிலன்,

    குடும்பதிற்காக செய்யும் தியாகமா அல்லது நமக்காக அமைத்துக்கொள்ளும் மகிழ்ச்சியான வாழ்க்கையா(we have only one life). //

    உங்க கேள்விக்கு ஒரே வார்த்தையில பதில் சொல்ல முடியாது அகிலன்..

    எது உண்மையான மகிழ்ச்சிங்கறது அவங்க அவங்க மனநிலையைப் பொறுத்தது..

    அண்ணாசாமியின் நிலையிலிருந்து பாருங்கள்.. அவருடைய சகோதர, சகோதரிகள் அனைவருமே அவருடைய சித்தியின் பிள்ளைகள்.. அதாவது சிறுவயதில் அவரை கொடுமைக்குள்ளாக்கியவருடையை பிள்ளைகள். இருப்பினும் அவர் அவருடையை கடமையை செய்தார்.
    இது ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் சுமப்பதற்கு சமமல்ல.. அதையும் விட மேலானது..

    ஒரு தாய் தான் நினைத்தாலும் தன் வயிற்றிலிருக்கும் பிள்ளையை இறக்கி வைத்துவிட முடியாது. கருத்தாங்கிவிட்டால் சுமந்துதான் தீரவேண்டும்..

    ஆனால் ஒரு சகோதரனுடைய நிலை அப்படியல்ல.. அதுவும் அண்ணாசாமியைப் போன்றவர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இருக்கவில்லை. இருந்தும் செய்தார்.. அதனால்தான் இறைவன் அவருக்கு வாழ்க்கையில் அவர் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வெற்றியை அளித்தார்..

    அவருக்கு அவருடைய கடமையை நல்லவிதமாய் நிறைவேற்றினோம் என்ற மகிழ்ச்சி இப்போதும் இருக்கும்..

    அதுதான் உண்மையான மகிழ்ச்சியா என்றால்.. அது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது..

    நீங்களும் நானும் அண்ணாசாமியின் சூழ்நிலையில் இருந்திருந்தால் ஒருவேளை நாமும் அவரைப் போலவே நடந்திருப்போமோ என்னவோ..

    பதிலளிநீக்கு
  13. தியாகச் செம்மல்கள் இவர் போன்றவரால்தான்,
    நாடும், நாமும் இயங்குகிறொம்!
    நெகிழ வைத்த பதிவு!

    கதையை விட,
    சொன்ன நடையே உயர்வு!

    அப்படியே பாதி வழியில்,
    'ன்'ன்னை, 'ர்'ராக்கினீர்கள் பாருங்கள்.
    அங்கே தெரிகிறது உங்கள் உயர்வு!

    பதிலளிநீக்கு
  14. குடும்பத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்று திரைப்படங்களிலும் கதைகளிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் உண்டு. பின்னே ஏன் மழை பெய்யுதுங்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  15. வாங்க SK!

    அப்படியே பாதி வழியில்,
    'ன்'ன்னை, 'ர்'ராக்கினீர்கள் பாருங்கள்.//

    ரொம்ப உண்ணிப்பா கவனிச்சி படிச்சிருக்கீங்க..

    சொல்லப் போனா அது என்னையும் அறியாம வந்தது..

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராகவன்,

    பின்னே ஏன் மழை பெய்யுதுங்கிறீங்க? //

    ஆமாம் ராகவன்..

    பதிலளிநீக்கு