12 ஏப்ரல் 2006

இது பெற்றோர்களுக்கு!

நான் தினமும் காலையில் எழுந்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் நடக்கச் செல்வதுண்டு.

அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் ... LKG யிலிருந்து பள்ளி இறுதிவரைப் படிக்கும் மாணவ, மாணவியர்.. .. அவர்களுடைய கலர்ஃபுல்லான சீருடையில் பளிச்சென்று.. சில சிரித்துக்கொண்டு, சில எரிச்சலுடன் வேண்டாவெறுப்பாக, சில ரிக்ஷா மற்றும் பள்ளி வேன்களில், சில அப்பா, அம்மா, அண்ணன்மார்களுடைய வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்தவாறு அன்றைய தேர்வுக்கான பாடங்களை படு சீரியசாக உதடுகள் முனுமுனுக்க மனப்பாடம் செய்துக்கொண்டு....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்து செல்வது ஒரு தனி ஆனந்தம்தான்.

அப்படித்தான் நேற்றும்..

என்னுடைய வீடு இருக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதி காலை நேரத்தில் அமைதியாக இருக்கும். சுமார் எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்ட பகுதி. எட்டாவது குறுக்குத் தெருவில் நுழைந்து 7, 6, 5, என்று  முதல் குறுக்குத் தெருவில் வெளியேறும்போது  நாற்பத்தைந்து நிமிடங்கள் செல்வதே தெரியாது..

நான் தினமும் என்னுடைய நடை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஒரு பணக்காரத்தனமான குடியிருப்பிலிருந்து ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒரு தனி ஆட்டோவில் ஏறிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவரை வழியனுப்ப அவருடைய தாயாரும் வாசல்வரை வந்து நின்று ஆட்டோ அத்தெருமுனையில் திரும்பும்வரை நின்றுக்கொண்டிருந்துவிட்டு செல்வார்.

நேற்றும் வழக்கம்போல நான் அவ்வீட்டை நெருங்கினேன். சட்டென்று என்னுடைய வாக்கிங் காலணியின் வார் (Shoe lace) ஒன்று அவிழ்ந்திருந்ததைக் கவனித்த நான் சாலையோரத்திலிருந்த ஒரு குட்டிச் சுவரில் காலை வைத்து அதை சரிசெய்துக்கொண்டிருந்தேன்.

வழக்கம்போல சர்ரென்று அந்த ஆட்டோ வந்து குடியிருப்பின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த மாணவனின் அருகே நிற்க மாணவன் தன் தாயை நோக்கி கையைசைத்துவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோவிற்குள் குனிந்து பார்த்த அவனுடைய தாயார் உடனே கிளம்பவிருந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சரமாரியாக ஆட்டோ ஓட்டுனரை வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தார்.

நான் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்.

என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை..

‘ஏய்யா, எம் பையன் தனியா வசதியா போய்வரணும்னுதானே நீ கேட்டதுக்கும் மேல சொளையா குடுக்கறேன். ஒன்ன யாருய்யா வேற ஒரு ஆள அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட கூட்டிக்கிட்டு போ சொன்னது? இன்னைக்கி ஆட்டோவுக்குள்ள குனிஞ்சி பார்த்ததுனால தெரிஞ்சது. டெய்லி இப்படித்தான் பண்றியா?’

ஆட்டோ ஓட்டுனர் பணிவுடன், ‘எம்மா.. டெய்லி இல்லம்மா. இந்த  பொண்ணும் பத்தாவதுதாம்மா. நம்ம தம்பியோட க்ளாஸ்தான். இன்னைக்கி பரீட்சைக்கு நேரமாயிருச்சின்னுதான் வழியில பார்த்து கையை காட்டிச்சுன்னு கூட்டியாந்தேன்.’ என்று கூற இதை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த கணவர் ஓடிவந்து அவர் பங்குக்கு ஆட்டோ ஓட்டுனரை ஏச..  அதுவரை பொறுமையாயிருந்த ஆட்டோ ஓட்டுனரும் எதிர்த்து பேச அங்கே சில நிமிடங்களில் ரசாபாசாமாகிவிட்டது..

நான் அத்துடன் எழுந்து அங்கிருந்து புறப்பட்டேன்..

வரும் வழியெல்லாம் இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அந்த மாணவனுடைய தாயும் தந்தையும் நடந்துக்கொண்டவிதம் சரிதானா?

எனக்கென்னவோ அந்த இரு குழந்தைகளுமே இவர்களுடைய நடத்தையால் மனத்தளவில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நேற்றைய தேர்வை இருவருமே சரியாக எழுதியிருக்க முடியாதென்றே தோன்றுகிறது.

பெரியவர்கள் சச்சரவில் ஈடுபட்டிருக்கும்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த இருவருமே தலையைக் குனிந்துக்கொண்டு தங்களுடைய மடியில் இருந்த புத்தகப் பையையே பார்த்துக்கொண்டிருந்தைப் பார்க்க முடிந்தது.

அவர்களுடைய மனநிலை நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

முக்கியமாக அந்த மாணவன். அம்மாணவி பள்ளியைச் சென்றடைந்ததுமே அவனுடைய பெற்றோர் நடந்துக்கொண்டவிதத்தைப் பற்றி நிச்சயம் தன்னுடைய தோழிகளிடம் விவரித்திருப்பார்.  

கேவலம், ஒரே வகுப்பில் பயிலும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் சேர்ந்து ஒரு வாகனத்தில் செல்வதை அவனுடைய பெற்றோர் இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க வேண்டுமா? அவருடைய கேள்வியை மீண்டும் பாருங்கள்.. ‘அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட’ எத்தனை கேவலமான மனது அந்த தாய்க்கு..

நேற்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பிய என்னுடைய இளைய மகளிடம் இந்நிகழ்ச்சியை விவரித்தபோது அவள் கூறியது: ‘பாவம்பா அந்த பையன்’

உண்மைதான். இச்சம்பவத்தால் மனத்தளவில் அதிகம் பாதிக்கப்படப்போவது அந்த மாணவன்தான்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

9 கருத்துகள்:

  1. உண்மைதான் ஜோசப் சார். சரியாகச் சொன்னீர்கள். பாவம்...அவர்கள் மஞ்சள் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். மஞ்சள் அல்லாதவைகளும் மஞ்சளாகத் தெரிகின்றன.

    பொறுப்பற்ற பெற்றோர்கள் பிள்ளைகளைக் கெடுக்கும் கோடாலிகள். அந்தப் பையனைப் பற்றி அவனுடைய நண்பர்கள் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். பிறகு அந்தப் பையன் கொஞ்சம் கொஞ்சமாக தனது பெற்றோரை வெறுக்கத் தொடங்குவான். இருவருக்கும் இடைவெளி அதிகரிக்கும். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    அவர்கள் மஞ்சள் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். மஞ்சள் அல்லாதவைகளும் மஞ்சளாகத் தெரிகின்றன.

    சரியாய் சொன்னீர்கள்.

    பொறுப்பற்ற பெற்றோர்கள் பிள்ளைகளைக் கெடுக்கும் கோடாலிகள்//

    பல இளைஞர்கள் திசைமாறிப் போவதற்குக் காரணமே இத்தகைய பெற்றோர்கள்தான்.

    இந்த பதிவு வலைப்பதிவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தும் நினைத்தேன். ஆனால் பெரும்பாலோனோர் தேர்தல் களத்தில் பிசியாய் இருக்கிறார்கள் போலிருக்கிறது.

    தரமான சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகள் இடம் தெரியாமல் போய்விடுகின்றன. ஹூம்..

    பதிலளிநீக்கு
  3. பதிவு நல்ல பதிவு தான் ஜோசப் சார். தலைப்பு தான் குழப்பமா இருக்கு.. "இது பெற்றோர்களுக்கு"ன்னு படிச்சிட்டு, எனக்கென்னன்னு கவனிக்காமயே போய்ட்டேன் :)

    பதிலளிநீக்கு
  4. வாங்க பொன்ஸ்,

    நீங்களும் பெற்றோர் ஆவிங்க இல்லே:-)

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  6. comment adikkalenna padikkale alladhu pidikkalennu arthama?

    பதிலளிநீக்கு
  7. வாங்க கிறுக்கன்,

    Also the Auto driver musy have obtained a prior permission for the girl. //

    There might be several justifiable reasons for the parents to feel aggrieved. But that is not the way to deal with that issue. That too on the street!

    ( Will you allow any stranger if you rent a CAB) //

    That is not the issue. The girl is not a stranger. She is the classmate of the boy.

    பதிலளிநீக்கு
  8. பாவம்தான். ஆத்திரப் பெற்றோர்கள், கோபக்கூத்தாடிப் போட்டுடைப்பது குழந்தைகளின் மன ஆரோக்கியம் என்ற தோண்டியைத்தான்.

    இதுவே ஒருபக்கச் சிறுகதையாக குமுதத்தில் வந்தால்? ஒரு கற்பனை:

    இது நடந்த நாள் மாலை பள்ளி விட்டவுடன் அந்தப்பையனும் பெண்ணும் ஒருசேரப் பேசிக்கொண்டு ஆட்டோ பக்கத்தில் வந்து ஆட்டோக்காரரிடம் "எங்களுக்கு இப்படி ஹெல்ப் பண்றதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்க; நாளையிலிருந்து வழக்கம்போல சந்து முனைக்கு வந்து இவ வெயிட் பண்ணுவா, காலைல வீட்டுல திட்டினதுக்காக நாங்க மன்னிப்புக் கேட்டுக்கறோம்; " என்று சொல்ல, ரிக்ஷாக்காரர் அவர்களை ஏறிட்டுப்பார்த்து "தம்பி, அவங்கள சொல்லிக் குத்தமில்ல, ஒங்க விஷயம் அரசல் புரசலா அவங்களுக்குத் தெரியும்போல, இந்த வயசுல வர கெறக்கத்துல படிப்பக் கோட்ட விட்டீங்கனா பின்னால என்னய மாதிரி தெனப் பொழப்புக்கே கஸ்டப்படணும், என்னய மண்டைல அடிச்சு, சொல்லித் திருத்த எனக்கொரு அப்பாரு இல்லாமப் போனத நெனச்சு எவ்ளோ நாளு நொந்திருக்கேன் தெரியுமா?
    பின்னாடி காலத்துல மூணாவது ஆளுகிட்ட முச்சந்தியில என்னய மாதிரி திட்டு வாங்காம இருக்கணும்னுட்டுதான், என்னயத்திட்டறா மாதிரி ஒங்களுக்கு சொல்லிக்காட்டியிருக்காங்க அவங்க. நான் சொல்லி நீங்க ரெண்டுபேரும் கேப்பீங்களானு தெரியாது, ஆனா இந்தப் பாவத்துல எனக்குப்பங்கு வேணான்டுதான் நானே இன்னயோட நின்னுக்கறதா சொல்லிட்டேன், ஒங்க கிட்டயும் சொல்லிட்டு போலாம்னுட்டுத்தான் வந்தேன், பாத்துக்குங்க தம்பி" என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

    பதிலளிநீக்கு