07 ஏப்ரல் 2006

எல்லோருக்கும் நன்றி

அன்பு நண்பர்களே,

'வேண்டாம் நண்பர்களே' என்ற என்னுடைய கட்டுரையில் நான் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் எதிர்ப்பு தெரிவித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல.

சமீப காலமாக சாதி, மொழி, இனம் இவற்றை மட்டுமே அல்ல ஆனால் மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடிவரும் சில தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய கூட்டணியையும் ஆதரித்து சில நண்பர்களுடைய பதிவுகளில் வந்த கட்டுரைகளைக் கண்டு மனம் வெதும்பி எழுதியதுதான் அக்கட்டுரை. அதில் நான் காண்பித்திருந்த ஒரு கட்டுரையும் அதன் சம்பந்தப்பட்ட பதிவர்களும் ஒரு உதாரணத்துக்கு மட்டுமே.

திராவிடம் என்ற தராசில் வைத்து நம்முடைய ஆட்சியாளர்களை தரம் பார்க்காதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.மு.கவை ஆதரிப்பது திராவிடத்தை ஆதரிப்பது என்றாகிவிடாது. அல்லது ஜெ. ஜெயித்துவந்தால் பிராமணீயம் செழித்து வளர்ந்துவிடும் என்பதும் சரியில்லை.

மு.கவும் சரி ஜெ.யும் சரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்தான். இவர்களுடைய செயல்பாடுகளில் யார் மேலானவர் என்றுமட்டும் பார்த்து அவரை ஆதரியுங்கள் என்றுதான் கேட்க விழைகிறேன்.

நான் திராவிடன் என்றோ அல்லது நான் தமிழன் என்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இன்றைய படித்த, திறமைவாய்ந்த தலைமுறை சுருங்கிவிடக்கூடாது என்பது மட்டுமே என்னைப் போன்ற முந்தைய தலைமுறையினரின் ஆதங்கம்.

ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும்.

அப்போதுதான் நாம் உன்மையிலேயே முன்னேறிவிட்ட மக்களாக கருதப்படுவோம்.

என்னை ஆள்பவன் நான் பேசும் மொழி பேசுபவனாகவோ, என் இனம் மற்றும் குலத்தைச் சார்ந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது நான் நினைத்தால் நான் ஒரு கிணற்றுத்தவளையாகத்தான் இருக்க முடியும்.

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

15 கருத்துகள்:

  1. ஜோ வின் பின்னூட்டம்:
    //ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். //

    ஜோசப் சார்,
    இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? வடநாட்டுக்காரர்கள் வெளிமாநிலத்தவரை குறிப்பாக தமிழனை கலெக்டராக ஏற்றுக்கொள்வார்களே தவிர ,முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .பிறமாநிலத்தவரானாலும் தலைவராகவும் ,சூப்பர் ஸ்டாராகவும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எந்த மாநிலத்துக்காரனை விடவும் தமிழ்நாட்டுக்காரனுக்கு அதிகமாகவே இருக்கிறது .மற்றவர்களிடமிருந்து அந்த பக்குவத்தை கற்றுக்கொள்ளும் நிலையில் தமிழன் இல்லை ..தமிழன் என்பது குறுகிய மனப்பான்மை என்ற உங்கள் கண்ணோட்டத்துக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன் .உங்கள் பரந்த மனப்பான்மை ஏன் இந்தியாவோடு நின்றுவிட்டது என்று புரியவில்லை .

    4:34 PM


    tbr.joseph said...
    ஜோ,

    உங்களுடைய வாதத்தின் பொருள் இப்போதும் எனக்கு விளங்க மாட்டேன் என்கிறது..

    தமிழர்கள் கொடிகட்டிப் பறக்காத நாடு உலகில் இருக்கிறதா என்ன?

    தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்கள் நம்முடைய தேசிய அளவிலும் கிங் மேக்கர்ஸாக அங்கீகரிக்கப்படவில்லையா?

    உலகின் வர்த்தக எல்லைகள் திறக்கப்பட்டு உலகெங்கும் நம்முடைய தமிழ் இளைஞர்கள் உலகெங்கும் சென்று சாதனைப் படைத்திருக்கும் சூழலில் த.நாவில் மட்டும் தமிழந்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

    பதிலளிநீக்கு
  2. ஜோசப் சார் சொல்வதில் கொஞ்சம் உண்மையில்லாமல் இல்லை.

    சமீபத்தில் நியூசிலாந்தில் ஒரு இந்தியர் பதவிக்கு வந்ததிற்கு மகிழ்ந்தோம். நாம் எதைப் பெறுவதில் மகிழ்கிறோமோ...அதை அடுத்தவருக்குக் குடுப்பதிலும் மகிழ வேண்டும்.

    அதே போல ஜோசப் சார் சொல்வது போல திராவிடத்தை ஆதரிப்பது என்பது கருணாநிதியை ஆதரிப்பது மட்டுமே என்பது சரியில்லை. மேடை கட்டிப் பேசி கடிதம் எழுதினால் மட்டுமே திராவிடத்தை ஆதரிப்பதாகாது. திராவிடம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட பொதுமை.

    என்றைக்கு அவர் ஒரு அமைச்சரைப் பார்த்து "என்னப்பா நெற்றியில் ரெத்தமா" என்று கேட்டாரோ அன்றைக்கே அவர் திராவிடத்தின் சகிப்புத் தன்மையை இழந்து விட்டார். அதை அவருடைய வீட்டிலேயே கேட்டிருக்கலாம்.

    அப்படியானால் வேறு யார் திராவிடத் தலைவர் என்று கேட்கலாம்? நிச்சயமாக ஜெயைச் சுட்டிக்காட்டப் போவதில்லை. ஜெ எவ்வளவு மோசமோ அதுக்குக் கொஞ்சமும் குறையாதவர்தான் கருணாநிதி என்பது எனது கருத்து. ரெண்டும் ஒன்றுதான். இதில் எது போய் எது வந்தாலும் விளைவு ஒன்றுதான்.

    வேறு யாரையும் ஆதரிப்பது திராவிடத்தை ஆதரிப்பது ஆகுமா என்றால் எனது விடை தெரியாது. ஆனால் நிச்சயமாக கருணாநிதியை ஆதரிப்பது என்பது திராவிடத்தை ஆதரிப்பதாகாது என்பது எனது கருத்து. ஆகவே ஓட்டுப் போடும் பொழுது தேர்ந்தெடுக்கின்றவர் ஊருக்கு நல்லது செய்வாரா என்று பார்த்துத் தேர்ந்தெடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். திராவிடமும் தமிழும் பிழைக்க நாம் வேறு வழிகளில் இப்பொழுது முயற்சி செய்வோம். நாடு பிழைக்க தேர்தலில் முயற்சி செய்வோம்.

    பதிலளிநீக்கு
  3. //என்னை ஆள்பவன் நான் பேசும் மொழி பேசுபவனாகவோ, என் இனம் மற்றும் குலத்தைச் சார்ந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது நான் நினைத்தால் நான் ஒரு கிணற்றுத்தவளையாகத்தான் இருக்க முடியும்.//

    அப்படி இல்லாதவன் அடிமையாக மட்டும்தான் இருக்க முடியும்.
    அடிமையாய் இருப்பதும் இல்லாதிருப்பதும் அவனவன் தனிப்பட்ட விருப்பம்

    பதிலளிநீக்கு
  4. ஒன்றே சொன்னாலும் அதை நன்றாக உறைக்கும்படி சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //த.நாவில் மட்டும் தமிழந்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?//

    ஜோசப் சார்,
    நான் நினைப்பதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் .நீங்கள் தான் இந்தியாவிலேயே தமிழன் தான் அப்படி நினைப்பது போலவும் சொல்லுகிறீர்கள் .நானோ இந்தியாவிலேயே தமிழன் மட்டும் தான் அப்படி நினைப்பதில்லை .அத்தகைய சகிப்புத்தன்மையும் பக்குவமும் தமிழனை விட யாருக்கும் இல்லை என்று சொல்லுகிறேன்

    நகர மாட்டேன் என்று சொல்பவனை விட்டு விட்டு கூட இருக்கிற நாலு எட்டாவது வைத்தவனைப் பார்த்து மட்டும் ஏன் அட்வைஸ் மழை பொழிகிறீர்கள் என தெரியவில்லை .நீங்கள் ஒரு தமிழனாக இருப்பதால் தான் இப்படி சிந்திக்கவாவது முடிகிறது .மற்றமாநிலத்தவன் இது பற்றி சிந்திக்க கூட மாட்டான் .

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பதிவைப் பற்றி எப்படி எழுதினாலும், உடனே அதற்கும் ஒரு 'முத்திரை' குத்த ஆட்கள் தயாராக இருப்பதை அறிந்தும், என்னால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடிய வில்லை!

    தமிழனை, தமிழனாக மட்டும் பார்க்காமல், இன, சாதி, அடிப்படையில் பிரித்து ஆளுமை செய்தே திராவிட அரசியல் நம் வாழ்வில் நுழைந்தது.

    இதற்கெனக் காத்திருந்த 'நியாயமான கோபத்தில் இருந்த' பெருவாரியான மக்களும் இதனைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததால் ஏற்பட்ட விளைவுதான், நாம் 30 வருடங்களாக அனுபவித்து வரும் அலங்கோலம்.

    இது சரியான மாற்று இல்லை எனத் தெரிந்தும், -- ஏனெனில், இது பார்ப்பனீயத்தின் பல் பிடுங்கப் பட வேண்டும் என்ற அவாவினைப் பூர்த்தி செய்த அதே வேளையில், மற்ற சாதிகளின் அடக்குமுறை தொடராமல் இருக்க எந்த ஒரு வழியும் செய்யப்படவில்லை என்ற காரணத்தால்-- தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர, மற்ற சாதிக்காரர்களை இது மறைமுகமாக வளர்த்து விட்டதால், அவர்களுக்கும் இது சமாதானமாகிப் போயிற்று!

    எந்த ஒரு நேரான கருத்தையும், சாதி, இன, அடிப்படையில், திசை திருப்பினால் மட்டுமே போதும் என்ற தவறான வழிமுறைகளை நன்கு கற்றுக்கொண்ட ஒரு சாராரும், கண்கொத்திப் பாம்பாய், இது போல நுழைந்து 'மறுதளிப்பு' என்ற பெயரில், தனி மனிதத் தாக்குதல்களை மேற்கொள்ளுவது என்பதுதான், கண்டிக்கத்தக்கதே தவிர, உங்கள் கருத்தோ அல்லது உங்கள் பின்னூட்ட் பதில்களோ அல்ல .

    தங்களின் சரியான கருத்து, அனைவர் மனத்திலும் போய் தைக்க, இறைவனை வேண்டுகிறேன்.

    நான் முதலில் 'மனிதன்', - பிறகு, 'தமிழன்', பிறகு 'இந்தியன்', அடுத்தது உலக அளவில் ஒரு 'மானுடன்' எனச் சொல்வதில் பெருமையும் எழுச்சியும் பெறுகிறேன்.

    அனைவரும் மனிதனில் இருந்து, மானுடன் ஆக முயற்சிப்போம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //நான் முதலில் 'மனிதன்', - பிறகு, 'தமிழன்', பிறகு 'இந்தியன்', அடுத்தது உலக அளவில் ஒரு 'மானுடன்' எனச் சொல்வதில் பெருமையும் எழுச்சியும் பெறுகிறேன்.//
    ஸ்K அண்ணா,
    நான் மட்டும் வேற என்ன சொல்லுறேன் .அதே தானே சொல்லுறேன் .இதென்னடா வம்பா போச்சு!

    பதிலளிநீக்கு
  8. ////என்னை ஆள்பவன் நான் பேசும் மொழி பேசுபவனாகவோ, என் இனம் மற்றும் குலத்தைச் சார்ந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது நான் நினைத்தால் நான் ஒரு கிணற்றுத்தவளையாகத்தான் இருக்க முடியும்.//

    அப்படி இல்லாதவன் அடிமையாக மட்டும்தான் இருக்க முடியும்.
    அடிமையாய் இருப்பதும் இல்லாதிருப்பதும் அவனவன் தனிப்பட்ட விருப்பம் //

    அப்படியானால் சோனியா ஆட்சிக்கு வந்தால் நாமெல்லாம் அடிமையாகப் போய் விடுவோமா முத்துக்குமரன்?

    இந்த நீதி தமிழகத்துக்குள் மட்டுமா? இல்லை எல்லா இடத்துக்குமா?

    பதிலளிநீக்கு
  9. எனக்கு புரியவில்லை. திராவிடம் என்றால் தமிழன் மட்டும் தானா? விந்திய மலைக்கு கீழே இருப்பதெல்லாம் திராவிடம் என்றல்லவா நினைததுக்கொண்டிருந்தேன்!

    நம்ம அப்துல் கலாம் இந்தியர் அனைவரும் விரும்பும் தமிழர் தானே?

    ஜோ சொல்வதை ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் வந்தோரை ஆதரித்திருக்கிறது. திறமைகளை போற்றியிருக்கிறது. நல்லவைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதில் மொழி மதம் என வேறுபாடு காட்டியதில்லை. அதனாலேயே இத்தனை சிதைவுகளுக்கு பின்னரும் தமிழ் வாழந்து கொண்டிருக்கிறது.

    ஆனால் அந்த மேலான குணம் இன்றைக்கு குறைந்திருக்கிறது. வளர்ச்சி என்பது புதிய மாற்றங்களை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில் தான் இருக்கிறது.

    ஆனால் குறுகிய அரசியல் லாபங்களுக்காக உணர்ச்சிகளை மட்டுமே தூண்டி; படித்தவர்கள் கூட சிந்திக்காமல் அதற்கு பலியாகி; வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. யோசித்துப்பாருங்கள், இது ஒரு பழைய பிழையின் நீட்சிதான் என்பது புரியும். எஸ்கே சொன்னது சரிதான். சமுதாய ஏற்றத்தாழ்வுக்கெல்லான காரணங்களை உற்பத்தி மற்றும் பொருளாதார அடிப்படைகளில் தேடாமல் ஒரு சாதியையோ ஒரு மதத்தினையோ மட்டும் திட்டித்தீர்த்த அரசியலின் logical நீட்சிதான் இன்று காணும் சாதி மற்றும் மத அடிப்படை அரசியல். அதுமட்டுமல்ல. ஒரு சாதியைத் திட்டி நடந்த (நடக்கும்)அரசியலை ஆதரித்த (ஆதரிக்கும்) எவருக்கும் இன்றைய சாதி அடிப்படை அரசியலைத் தவறென்று சொல்லும் தார்மீக உரிமை கிடையாது. டிபிஆர் அவர்களோ அல்லது அவரை இங்கு ஆதரித்தவர்களோ அந்த வகையைச் சார்ந்தவர்கள் அல்ல என நம்புகிறேன்.

    மற்றபடி இந்த திராவிட ஆரியப் பிரிவுகள் மொழிப்பிரிவுகளேயன்றி இன்ப்பிரிவுகள் அல்ல என்பது பல ஐராவதம் மகாதேவன் உட்பட்ட பல அகழ்வாராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அரசியல் வியாபாரிகளுக்கு லாபம் தந்த ஒரு விஷயம் அத்தனை சுலபமாக உண்மைக்குத் தலை தாழ்த்தி நிலை மாற்றம் கொள்ளூமா என்ன? சுட்டெரியும் உண்மைகளை சுத்த மனதுடன் எதிர்கொள்ள இவர்கள் யாரும் காந்தியுமல்ல, சுய விமர்சனம் செய்து அரசியலில் பரிணாம வளர்ச்சி அடையும் உண்மை கம்யூனிஸ்டுகளும் அல்ல. மிகச்சாதாரண அரசியல் வோட்டுப் பொறுக்கிகள். காலைப்பிடிக்கும் அரசியலாக இருந்தால் என்ன, காழ்ப்புணர்ச்சி அரசியலாக இருந்தால் என்ன? Professional பொறுக்கிகளுக்கு உண்மைகள் ஒரு பொருட்டா என்ன? In democracy people do not get the Government they need; they get the government they deserve. நாம் இங்கு விரல் வலிக்க எழுதி என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  11. அடடா! 'ஜோ' தம்பி, நான் சொன்னது உங்களைக் குறிப்பிட்டு அல்ல.
    பொதுவாக இந்தப் பதிவின் உயிர்க் கருத்தைப் பற்றிய எனது எண்ணங்கள் அவை.
    உங்கள் கருத்துத் துணிச்சலையும், வேகத்தையும் கண்டு களிப்புறுபவன் நான்!

    திராவிடம் பேசி தமிழனை ஏமாற்றியவர்களைப் பற்றியே நான் சொன்னது.

    முதல் பொய் இதில் ஆரம்பித்தது;
    "எங்கள் திராவிடப் பொன்னாடு
    தமிழ் வாழும் தென்னாடே"
    இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் நாட்டை விட்டு மற்ற திராவிட மாநிலங்களில் தமிழ் எங்கே இருக்கிறது?

    இந்தியன் எனச் சொல்ல வெட்கப்படுவார்களாம்;
    'ஜெய்ஹிந்த்' எனச் சொல்ல சிரிப்பு வருமாம்;
    ஆனால்,
    தன்னை ஓட ஓட விரட்டும் அண்டை மாநிலங்களையும் சேர்த்து,
    தன்னைப் பெருமையுடன் 'திராவிட ராஸ்கல்' எனக் கூறிக்கொள்வார்களாம்!

    இப்போது,எனக்குத்தான் சிரிப்பு வருகிறது.
    இல்லை, இல்ல, அழுகைதான் வருகிறது!

    இதில் ஏமந்து மயங்கும் உண்மைத் தமிழினத்தை எண்ணி!

    பதிலளிநீக்கு
  12. Professional பொறுக்கிகளுக்கு உண்மைகள் ஒரு பொருட்டா என்ன//

    உங்களுடைய இந்த வார்த்தை உபயோகத்தில் எனக்கு உடன்பாடில்லை அருணகிரி. வாதிக்கும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

    பதிலளிநீக்கு
  13. இதுவரை தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்த என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

    எந்த ஒரு கருத்துக்குமே எதிர் கருத்து நிச்சயம் இருக்கும். அக்கருத்துக்களை எதிர்த்து எழுதும் நேரத்தில் நிதானமாக பிறர் மனதை புண்படுத்தாத வகையில் எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன்.

    அத்துடன் நான் ஒருத்தருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவரை நான் தனிப்பட்ட முறையில் ஒதுக்கிவிடுகிறேன் என்று பொருள் கொள்தலும் கூடாது.

    வாதம் பிரதிவாதம் செய்வது கவிஞர்கள் மத்தியில் மட்டுமல்ல நம்மைப் போன்ற கத்துக்குட்டி எழுத்தர்கள் மத்தியிலும் இருக்கும். அந்த வாதத்திற்குப்பிறகு எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு சென்றுவிடவேண்டும். என்னை இவர் இப்படி எழுதிவிட்டாரே என்று மனம் கலங்கி நிற்கக்கூடாது . நம் உணர்ச்சிகளை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக, மிக அவசியம்.

    இந்த விஷயத்தை அலசியது போதும் என்று நினைக்கிறேன்.நன்றி நண்பர்களே. இனி அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  14. அய்யா, உண்மையிலேயே அது அர்த்தம் பொதிந்த வார்த்தை. வேறு வார்த்தை கிட்டவில்லை என்பதே உண்மை. யோசித்துப்பாருங்கள், அப்படி இல்லா விட்டால் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அரசியல் நடத்த முடியுமா? எனவே அது நிதானம் தவறிய வார்த்தை அல்ல. நிதர்சன உண்மை. So I respectfully disagree with your observation. And I agree it is time to move on to the next subject.

    பதிலளிநீக்கு
  15. முதலில் நாம் ஒரு உயிரினம்.ஆடு,மாடு,புல்,பூண்டு போல் ஒரு ஜீவராசி
    இரண்டாவது குரங்கினம்.ஏப் வகையை சார்ந்த ஒரு குரங்கினம்
    மூன்றாவது homosapiens எனப்படும் மனித இனம்
    நாலாவது இந்தியன்
    ஐந்தாவது திராவிடன்
    ஆறாவது தமிழன்
    ஏழாவது நாம் பிறந்த ஊர்வாசி
    எட்டாவது நம் தெருவாசி
    நம் குடும்ப உறுப்பினர்
    நான்

    இது தான் எனக்கு பிடித்த வரிசை.

    பதிலளிநீக்கு