25 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 7

நேற்றைய பதிவின் எதிரொலியாக எனக்கு ஒரு தனிமடல் மின்னஞ்சல் வழியாக வந்தது. பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் அதன் சாராம்சத்தையும் அதற்குண்டான என்னுடைய பதிலையும் இங்கு கூறுகிறேன்.

மடலில் கூறியிருந்தது: 'உங்களுடைய பதிவின் நோக்கம் முழுவதும் ஏதோ பெண்கள்தான் ஓய்வுபெற்ற ஆண்களை சிரமத்திற்குள்ளாக்குவதுபோல் தொனிக்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது அதற்கு நேர் எதிர். தங்களை யாரும் பொருட்படுத்துவதில்லை என தாங்களாகவே கற்பனை செய்துக்கொண்டு தங்களுடைய சுடுசொற்கள் மூலம் குடும்பத்திலுள்ள அனைவரையும் மன அழுத்தத்திற்குள்ளாக்குவது பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்கள்தான்.'

என்னுடைய பதில்: என்னுடைய பதிவின் எந்த இடத்திலும் பெண்கள்தான் ஆண்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என எழுதியாக நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்றுதான் எழுதினேனே தவிர இதற்கு யார் காரணம் என்று எழுதவில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும் அப்படியொரு எண்ணத்தை என்னுடைய எழுத்து ஏற்படுத்தியிருக்குமானால் அதற்கு வருந்துகிறேன்.
இனி ஓய்வுபெற்றவர்கள் தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட மேலும் சில யோசனைகள்...

8. பேரக் குழந்தைகளை பராமரித்தல்: வயதான காலத்தில் ஆண்களை மீண்டும் ஒரு தந்தையின் நிலைக்கு உயர்த்த உதவுவது பேரக் குழந்தைகள் என்றால் மிகையாகாது. இளம் வயதில் ஆண்களில் பலராலும் தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இந்த குற்ற உணர்வு பல ஆண்களிடம் உண்டு, என்னையும் சேர்த்து. இளம் வயதில் பல ஆண்கள் தங்களுடைய உத்தியோக அந்தஸ்த்தையே மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். அலுவலகத்தில் கிடைக்கும் பதவி உயர்வு அளிக்கின்ற அற்ப மகிழ்ச்சியே அவர்களுக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொன்றாக தோன்றுகிறது. அலுவலக பதவிகளின் பின்னால் ஓடிக் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகியிருப்பதையும் 'உன்னுடைய உதவி இனி எங்களுக்கு தேவையில்லை' என்கிற மனப்பான்மையுடன் தங்களை நோக்குவதையும் உணரமுடிகிறது. 'When I was desperately in need of your emotional support, you had not time for me Dad.' என்று என்னுடைய நண்பருடைய மகன் ஒருவர் எனக்கு முன்னாலேயே என்னுடைய தந்தையை கேட்டதை இத்தனை வருடங்கள் கழித்தும் என்னால் மறக்க முடியவில்லை. ஒரு ஆணால் தன்னுடைய அலுவலகத்தில் எந்த அளவுக்கு உயர முடியுமோ அந்த அளவுக்கு உயர்ந்தவர் என்னுடைய நண்பர். ஆனால் அவருடைய ஒரே மகன் கல்லூரியை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். 'ஏன் இப்படி செய்துவிட்டாய் மகனே?' என்று வேதனையுடன் என் நண்பர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில்தான் இது. உண்மைதான். என்னால் என்னுடைய இளம் வயதில் என்னுடைய அலுவலக பணியின் நிமித்தம் இரு மகள்களையும் விட்டு எட்டு வருட காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. வாரம் ஒருமுறை அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது கூட அவர்களுடைய படிப்பை குறித்து மட்டுமே நான் பேசுவதாகவும் அவர்களைப் பற்றி, அவர்களுடைய பிற தேவைகளைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ள நான் முயல்வதில்லை என்பார் என் மனைவி! பல ஆண்களும் இப்படித்தான். ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து தங்களுடைய குழந்தைகளுக்கு தங்களால் என்னவெல்லாம் செய்துதர முடியுமோ என்றுதான் சிந்திக்கின்றார்களே தவிர அவர்களுக்கு தங்களுடைய அருகாமை தேவைப்படுகிறதா என்பதைப்பற்றி சிந்திப்பதே இல்லை. பல குடும்பங்களில் குழந்தைகள் தங்களுடைய தாயை மட்டுமே சார்ந்திருப்பதன் காரணமும் இதுதான். முதிர்ந்த காலத்தில் தந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்க குழந்தைகள் முன்வராததற்கும் இதுதான் காரணம் என்கின்றனர் பல உளநல மருத்துவர்கள். இளம் வயதில் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வால் அவதியுறும் பல ஆண்களுக்கும் அதிலிருந்து விடுபட இறைவன் அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புதான் பேரக் குழந்தைகள். தங்களுடைய குழந்தைகளுக்கு செய்ய இயலாமல்போன சேவைகளை பேரக்குழந்தைகளுக்கு செய்வதன் மூலம் மனதளவில் தங்களை விட்டு பிரிந்திருக்கும் மகன், மகளையும் கூட மீண்டும் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்ள முடியும் என்பதும் உண்மை.

9. செல்ல பிராணிகள்: நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை பேணுவதும் ஒரு நல்ல பொழுதுபோக்கு. குறிப்பாக பணியிலிருந்து ஒய்வுபெற்ற பின் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுபவர்களுக்கு செல்லபிராணிகள் ஒரு நல்ல துணையாகவும் உள்ளன. பிராணிகள்தானே என கருதாமல் அவைகளை தங்களுடைய குழந்தைகள் போன்றே கருதுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். தங்களுடைய தனிமையின் பாரத்தை குறைக்க செல்ல பிராணிகள் மிகவும் உதவுகின்றன என்கின்றனர் இவர்கள். அலங்கார மீன் வளர்ப்பிலும் ஈடுபடலாம். ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை பார்த்துக்கொண்டிருப்பதும் மன அழுத்தத்தை குறைக்க வெகுவாக உதவுகின்றது என்கின்றன ஆய்வுகள்! இப்போதெல்லாம் குறிப்பிட்ட கட்டணத்திற்கு மாதம் ஒருமுறை நம் வீட்டுக்கே வந்து மீன் தொட்டியை கழுவி சுத்தம் செய்து, நீரை மாற்றவும் செய்கின்றனர். வாரம் ஒருமுறையோ அல்லது நமக்கு வேண்டும்போதெல்லாம் நம் வீட்டிற்கே வந்து செல்ல பிராணிகளை சுத்தம் செய்யவும் அவற்றை நம்முடைய தேவைகளுக்கேற்றவாறு பயிற்றுவிக்கவும் வாடகை ஏஜன்சிகள் பல உள்ளன.

10. பொதுசேவையில் ஈடுபடுதல்: பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்தான் பொதுசேவையில் ஈடுபட வேண்டும் என்றில்லை. இன்று கணினி துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் வார இறுதிகளில் பொதுசேவையில் ஈடுபடுவது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அவர்களால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மட்டுமே ஈடுபடுகிற விஷயத்தில் ஓய்வுபெற்றவர்கள் முழுநேர அல்லது பகுதிநேர அலுவலாக ஈடுபடுவதால் நேரமும் பயனுள்ள வகையில் செலவாகிறது மனதுக்கு நிறைவும் அமைதியும் கிடைக்கிறது. பொது சேவையை பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய வீட்டுக்கருகாமையிலுள்ள ரிஜிஸ்திரார் அலுவலகத்திற்கு சென்று அங்கு வருகிறவர்களுக்கு அரசாங்க படிவங்களை இலவசமாக நிறப்பித் தருவார். அரசு இலாக்காவிலிருந்து ஓய்வுபெற்ற வேறொரு நண்பர் வீட்டிலிருந்தவாறே அரசு இலாக்காக்களிலிருந்து கிடைக்கக் கூடிய பல்வேறு மான்யங்களை எவ்வாறு பெறுவது என்பதற்கு ஆலோசனை வழங்குவார், அதாவது எவ்வித கட்டணமும் இல்லாமல். இவ்வாறு எத்தனையோ வகையில் அவரவர்க்கு இயன்ற அளவுக்கு தினமும் ஒரு மணி நேரத்தையாவது இதற்கு ஒதுக்கலாம்.

இவ்வாறு தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட பல வழிகள் உள்ளன.

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அந்த மாறுபட்ட சூழலை சந்திக்க தங்களை எவ்வாறு உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொள்வது என்பதை பார்த்தோம்.

ஆனால் இத்தகைய தம்பதியர்களிடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளின் மூலகாரணமே பொருளாதார ஸ்திரமின்மைதான். நேற்றுவரை மாதம் முதல் தேதியானால் முழு ஊதியம் வந்துக்கொண்டிருந்தபோதே பற்றாக்குறை பட்டியலை வாசித்துக்கொண்டிருந்த மனைவியை எப்படி சமாளிப்பது என்பதும் மிகவும் முக்கியமான பிரச்சினைதானே?

Organised Sector எனப்படும் அரசு மற்றும் அரசு சார பொது/தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்...



தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக