09 June 2010

பணியிலிருந்து ஓய்வு - சுய தயாரித்தல் 1

.

நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டியவர்கள்தான். அது பலருக்கு சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் அவர்களுடைய 60வது வயதில் ஏற்படுகிறது. சிலருக்கு விருப்ப ஓய்வு வாயிலாக எந்த வயதிலும் ஏற்படலாம். இப்போதெல்லாம் விருப்பஓய்வுக்கு தகுதிபெற தேவையான குறைந்தபட்ச பணிக்காலம் முடிந்ததுமே பலர்,

குறிப்பாக பெண்கள், ஓய்வுபெறுவதில் குறியாயிருக்கின்றனர். நாற்பது வயதை கடந்ததுமே எப்போதுடா விருப்பஓய்வு வாய்ப்பு வரும் என காத்திருக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையல்ல.

இதற்கு என்ன காரணம்? அலுவலகத்தையும் குடும்பத்தையும் பாலன்ஸ் செய்ய இயலாமைதான். முன்பெல்லாம் எந்த அலுவலகத்திலும் பெண்களுக்கென பல சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. என்னுடைய வங்கியிலேயே பெண்கள், குறிப்பாக சிறிய குழந்தைகள் உள்ள பெண்கள் பணிக்கு சற்று தாமதமாக வந்தாலோ அல்லது மாலையில் சற்று முன்னராகவே செல்வதற்கு விரும்பினாலோ அவர்களுடைய ஆண் அதிகாரிகள் கண்டுக்கொள்ள மாட்டார்கள். மேலும் குழந்தைக்கோ, கணவருக்கோ ஏன் மாமனார், மாமியாருக்கோ கூட உடல்நலமில்லை என்ற
காரணம் கூறி விடுப்பு எடுத்துக்கொண்டாலும் பெருந்தன்மையாக விட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது ஆண், பெண் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி அலுவலகத்தில் 'டார்ச்சர்' செய்யப்படுவது மிக, மிக சாதாரணமாகிவிட்டது. இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று அதிகார வர்க்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் பெண்கள் என்றால் தவறில்லை என கருதுகிறேன். அதுவும் நேரடியாக அதிகாரியாக நிறுவனங்களுக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் பெண்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண்கள் மீதுதான் அதிக வேலைப்பளுவை சுமத்துகிறார்கள், வீண் அதிகாரம் செய்கிறார்கள் என்பதும் உண்மை. இதை என்னுடைய வங்கியிலேயே பல கிளைகளில் நேரில் கண்டிருக்கிறேன். 'இந்த பொண்ணுங்கக்கிட்ட வேலை
செய்யறதுக்கு பாதி சம்பளம் பென்ஷனா கிடைச்சா போறும்னு போயிரலாம்னு தோனுது சார்.' என பல நடுத்தர வயது பெண் குமாஸ்தாக்கள் புலம்புவதை கேட்டிருக்கிறேன்.

ஆனால் இத்தகையோர் உண்மையிலேயே ஓய்வு பெறுவதற்கு தயாராயிருக்கிறார்களா என்று ஆய்வு செய்தால்  இல்லையென்றே தோன்றுகிறது. இத்தகையோரில் பலர் அலுவலக தொல்லையிலிருந்து விடுபட்டால் போறும் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று கருதியே விருப்ப ஓய்வில் செல்கின்றனர். ஆனால் சுமார் இருபதாண்டுகாலம் ஒரு அலுவலகத்தில் சுமார் எட்டு மணி நேரம் ஓய்வில்லாமல் பணியாற்றிவிட்டு வீட்டில் ஒருவேலையும் செய்யாமல் 'சும்மா' இருப்பது அத்தனை எளிதல்ல என்பதை உணரும்போது பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கின்றன பல ஆய்வுகள். தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு 'சும்மாத்தானடா ஒக்காந்திருக்கே.' என்று தன்னை ஏசும் தந்தையிடம் 'சும்மா
உக்காந்திருக்கறது லேசுன்னு நினைச்சியா? நீ ஒரு வேலையும் செய்யாம ஒரு நாள் முழுக்க சும்மா ஒக்காந்திரு பாப்பம்' என்பார். தோற்றவருக்கு பத்து சாட்டையடி என்றும் பந்தயம் வைப்பார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே அவருடைய தந்தையின் 'சும்மா' இருத்தலுக்கு சோதனை மேல் சோதனையாக வந்து சேர அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு சாட்டையடியை பெற்றுக்கொள்வார்.

உண்மைதான். பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் ஒரு நாள் முழுக்க ஒரு வேலையும் செய்யாமல் 'சும்மா' அமர்ந்திருப்பது அத்தனை எளிதல்ல. இதில் ஆண், பெண் என வேறுபாடு ஒன்றும் இல்லை.

இந்த சூழலில்தான் ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் அதற்கு தங்களை தயார் செய்துக்கொள்வது அவசியமாகிறது.

சுய தயாரிப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. உணர்வுபூர்வமான தயாரிப்பு.

2. பொருளாதார ரீதியான தயாரிப்பு.

சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் தங்களுடைய அறுபதாவது வயதில் ஓய்வு பெறுபவர்கள் ஓரளவுக்கு உணர்வுபூர்வமாக ஓய்வுக்கு தயாராக இருப்பார்கள். அவர்களிலும் சிலர் 'இந்த வேலையிலிருந்து ரிட்டையர் ஆனதும் இன்னொரு வேலைக்கு எப்படியாச்சும் போயிரணும்.  என்னாலல்லாம் வீட்ல சும்மா ஒக்காந்திருக்க முடியாது' என்கிற மனநிலையில் இருப்பதை கண்டிருக்கிறேன். இதில் தவறில்லைதான். ஏன் நானும் கூட அவ்வாறு நினைத்திருக்கிறேன். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பது ஓய்வு பெற்ற பிறகுதான் தெரியவரும். குறிப்பாக ஓரளவுக்கு உயர் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களால் ஓய்வுக்குப் பிறகும் அதே நிலையிலுள்ள பதவியில் அமர்வது என்பது எளிதல்ல. ஊதியத்தைவிட உயர்பதவியில் அனுபவித்திருந்த Perks எனப்படும் கூடுதல் வசதிகள், சலுகைகள், அதாவது ஓட்டுனருடன் கூடிய அலுவலக வாகனம், விமான பயணம் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதி வாசம்,
வழியனுப்ப, வரவேற்க வரும் ஊழியர் பட்டாளங்கள் இத்யாதி, இத்யாதிகள் தந்து வந்த சுக அனுபவம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் வேலையிலும் கிடைக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு அது இல்லை என்று தெரியவருகிற சூழல்...அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய இழப்பு தெரியும்.

இந்த கோணத்தில் இனியும் ஒன்றைப் பற்றி இங்கு தெரிவித்தாக வேண்டும். உயர்பதவியிலிருந்து அனுபவம் பெற்ற பலருக்கும் தங்களுடைய அலுவலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது ஒரு அலுவலை இப்படி செய்தால்தான் அதை வெற்றிகரமாக முடித்திட முடியும் என்றெல்லாம் ஒரு கருத்து இருக்கும். அவர்களுடைய பதவி அளித்திருந்த முடிவெடுக்கும் சுதந்திரம், உரிமை அவர்கள் மனதில் நினைத்ததை அப்படியே செயலில் வடிக்கவும் உதவியிருக்கும். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு அவர்கள் இணையும் நிறுவனத்தில் முடிவெடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போனால்  அதுவே அவர்களை உணர்வுபூர்வமாக மிகவும் பாதித்துவிட வாய்ப்புள்ளது.

ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கு என்னை உணர்வுபூர்வமாக தயாரித்திருந்த எனக்கே இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. அதைப் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தொடரும்...

9 comments:

Sambar Vadai said...

மிக்க நன்றி. ஜோசப் சார். இதைத்தான் எதிர்பார்த்தேன்.

தொடரில் பல்வேறு அம்சங்களையும் தொட்டு செல்வீர்கள் (உளவியல், பொருளாதாரம், குடும்பம்....) என எதிர்பார்க்கிறேன்.

ஆண் மகவு இல்லாதோர் (இந்தக்காலத்தில் ஆண் வாரிசு பலரும் பெற்றோரை சரியாக கவனிக்காத நிலையிலும் ஓர் நம்பிக்கை இருக்கிறது - ஓய்வுக்குப் பிறகு பிள்ளையை நம்பி இருக்கலாம் என) ஓய்வை எதிர்கொள்வது எப்படி எனவும் எழுதவும்.

(பெண் பிள்ளைகள் இந்தக்காலத்தில் பெற்றோரையும் காப்பாற்றுவதில் பங்கு எடுக்கிறார்கள் என்றாலும் ஓரளவிற்கு மேல் சார்ந்து இருந்தால் மாப்பிள்ளையின் ஒத்துழைப்பு இல்லையென்றால் கஷ்டம்)

மேலும் தற்போது 'பென்ஷன் ப்ளான்' என பல்வேறு கம்பெனிகளும், மியூச்சுவல்நிதி நிறுவனங்களும் விளம்பரம் செய்கின்றனவே ? எந்த வயதிலிருந்து இத்தகைய முதலீடுகள் துவங்க வேண்டும் 30? 35? 40 ? 45 ?

விலைவாசி ஆண்டுக்க்கு 20% உயருகையில் இன்னும் 10/15/20/30 வருடங்கள் கழித்து ஓய்வு பெறுவோர் எத்தனை முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது எத்தனை தேவைப்படும் என கால்குலேட்டர் எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். இதனை நம்பலாமா?

மீண்டும் நன்றி.

துளசி கோபால் said...

இதைத்தான் ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். நல்ல ஆரம்பம்.

எங்கூர்லே 65 வயசுவரை வேலை. அதுக்குப்பிறகுதான் சூப்பரானுவேஷன்.
இதுலே ஸ்பௌஸுக்கு 65 ஆனாலும் போதும்.

பெண்ணுக்கு வயசு குறைவா இருக்கணும் என்ற கண்டிஷன் எல்லாம் இந்த நாட்டில் இல்லை. அதனால் பிரச்சனையும் இல்லை.

இன்னொன்னு சொல்லிக்கறேன். நமக்குத்தான் பெரிய வேலையில் இருந்து சின்ன வேலைக்குப் போகத்தயக்கம். இங்கே பிரதமர்கூட வேலையை வேணாமுன்னு விட்டுட்டு அவரோட பழைய தொழிலுக்குப் போயிருக்கார். (விவசாயம்தான்)

என்னுடைய தோழியின் கணவர் போலீஸ் பிரிவில் உயர் அதிகாரியா இருந்துட்டு, சிந்திக்கும் வேலை டென்ஷனா இருக்குன்னுட்டு அதை விட்டுட்டு ஒரு சாதாரணக் கம்பெனியில் கூரியர் வண்டி ஓட்டறார்!!!!

டி.பி.ஆர் said...

இதைத்தான் எதிர்பார்த்தேன். //

உங்களுடைய எதிர்பார்ப்பை முழுவதுமாக இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

தொடரில் பல்வேறு அம்சங்களையும் தொட்டு செல்வீர்கள் (உளவியல், பொருளாதாரம், குடும்பம்....) என எதிர்பார்க்கிறேன்.//

நிச்சயமாக. பொருளாதார ரீதியிலும் பலர் இன்று நல்ல விவரம் இல்லாமல் முதலீடு செய்துவிட்டு பரிதாப நிலையில் நிற்பதை பார்த்திருக்கிறேன். இயன்ற அளவுக்கு இன்று சந்தையில் இருக்கும் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து அளிக்க முயல்வேன்.

டி.பி.ஆர் said...

துளசி கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் ஈகோ பார்க்காமல் எந்த வேலையானாலும் செய்வது என்பதை. ஆனால் நீங்கள் கூறும் நீயுஜீ கலாச்சாரமும் நம்முடைய கலாச்சாரமும் முற்றிலும் வேறு என்பதையும் நிலைனைவில் கொள்ள வேண்டும். இங்கு உயர் பதவியிலிருந்த ஒருவர் ஓய்வுக்குப் பிறகு குரியர் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக வேண்டாம் ஜூனியர் அதிகாரி பதவியில் பணிக்கு சேர்ந்தால் கூட நம் குடும்பத்தினர் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உறவினர்கள், நண்பர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

manjoorraja said...

ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட

திடீரென நடுவில் வேலை போய் அதனால் அவர்கள் படும் கஸ்டம் சொல்லி மாளாது.

1. சரியான வேலை கிடைக்கவேண்டும்
2. சரியான வேலை கிடைத்தாலும் முன்பு கிடைத்த சம்பளம் கிடைக்காது. அதை விட குறைவாக, சில சமயம் பாதியாக கிடைக்கும்.
3. பழைய கம்பெனியில் பல நாட்கள் வேலை செய்த ஓதாவில் கொஞ்சம் செளகரியங்கள் கிடைக்கும் ஆனால் புதிய கம்பெனியில் எதிர்ப்பார்க்க முடியாது கிடைப்பதும் கஸ்டம்.

இதில் 40-45 வயது வரை ஒரே வேலையில் இருந்து விட்டு பின் வேலையை விட்டு நிறுத்தப்படுபவர்களின் நிலை இன்னும் மோசம். வேலை கிடைப்பது மிகவும் கஸ்டம். அதற்கு முக்கிய காரணம் வயது. அடுத்து படிப்பு. ஓரளவு நல்ல படிப்பு இருந்தால் (கூடுதல் திறனுள்ள படிப்பு) தான் வாய்ப்பு இருக்கும். சராசரியான படிப்பு என்றால் (பட்டபபடிப்பு அதற்கும் கீழ்) மிகவும் கஸ்டம்.
வேலை வேண்டாமென வீட்டிலும் இருக்க முடியாது. ஏனெனில் இரண்டுங்கெட்டானான வயசு (40 முதல் 55 வரை யான வயசு)

sriram said...

டிபிஆர் ஐயா
இந்தத் தொடர் யாருக்கு உபயோகமோ எனக்குத் தெரியாது, எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வயதில் ரிட்டயர்மெண்ட் எனது குறிக்கோள். அதுக்கப்புறம் சம்பளத்துக்கு வேலைக்குப் போகக் கூடாதுன்னு நெனச்சிருக்கேன். சென்னைக்குத் திரும்பி வந்து சின்னப் பசங்களின் படிப்புக்கு உதவியா இருப்பது, எளியோருக்கு Spoken English, career / education counseling, personality development ஆகியவற்றை இலவசமாக செய்ய விருப்பம். சுருக்கமா சொன்னா Free Trainer (My temper will not let me be a teacher, but I can be a trainer). இதெல்லாம் இப்போ வெறும் எண்ணங்களா இருக்கு, நடக்குமுன்னு நம்பறேன்..

ரிடைர்மெண்டுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள உங்க எழுத்துக்கள் உதவும்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

டி.பி.ஆர் said...

ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட

திடீரென நடுவில் வேலை போய் அதனால் அவர்கள் படும் கஸ்டம் சொல்லி மாளாது.//

கரெக்டா சொன்னீங்க ராஜா. இத்தகைய சூழலுக்கு நிச்சயம் யாரும் தயாராயிருக்க முடியாது.

டி.பி.ஆர் said...

நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வயதில் ரிட்டயர்மெண்ட் எனது குறிக்கோள். // ஐம்பது வயசுங்கறது கொஞ்சம் சீக்கிரமா தெரியலையா ஸ்ரீராம்? It all depends on how you look at life. சிலருக்கு 70 வயதானாலும் ஒரு வேலையில் இல்லாமல் வீட்டில் இருக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை.

தருமி said...

அட ... வாங்க வாங்க ..

நிறைய எழுதுங்க .. பகிர்ந்துக்க ஆளா இல்லை இங்கே?