29 June 2007

எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?

ஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா?

அதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..

முதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....

அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

உடனே எழுத முடியாமல் போனதற்கு காரணம் வெளியூரில் இருந்ததுதான்.

எனக்குள் ஒருவன் என்று என்னுடைய வக்கிரங்களை அல்லது விசித்திரங்களை, எழுதியது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது......

அதன் பிறகு அழகுகள் ஆறு என என்னை ஈர்த்த அழகான நினைவுகளைப் பற்றி எழுதியது அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட்டு பார்க்க உதவியது...

ஆனால் சாதனைகள் எட்டு என்றால் சற்று மலைப்பாகத்தான்....

சாதனைகள் என்பதைவிட என்னுடைய வலிமைகள் (Strengths) என நான் நினைப்பதைப் பற்றி எழுதினால் சரியாயிருக்குமோ என்ற ஒரு எண்ணம்..

முயன்றிருக்கிறேன்...

சுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான் அல்ல!

அடக்கி வாசித்தே பழகிப்போனவன்...

ஆனால் இது சங்கிலித் தொடர் விளையாட்டல்லவா, ஆகவே ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் சொல்லலாம் என்ற முடிவுடன்...

1. கர்மமே கண்ணாயிருப்பது...

சாதாரணமாக ஒரு வேலையையோ அல்லது பொறுப்பையோ ஏற்றுக்கொண்டால் அதை முடிக்காமல் விடுவதில்லை என்கிற ஒரு வைராக்கியம் சிறுவயது முதலே இருந்ததாக என் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்... இப்போதும் அப்படித்தான்... ஒருவேளை அது என்னுடைய அறிவுக்கோ அல்லது திறமைக்கோ அப்பாற்பட்டதாக கூட இருந்திருக்கலாம்... ஆனால் நீயாச்சு, நானாச்சு என்கிற ஒருவித பிடிவாதத்துடன் எதையும் முயன்று பார்த்துவிடுவதுண்டு....

2. என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது... பொறுமையுடன்..

நான் நட்ட செடி இன்றே பூக்கணும் என்கிற மனநிலையுடன் எதற்கும் அவசரப்பட்டதில்லை. இதை என்னுடைய பலஹீனம் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கென்னவோ நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நின்றதுண்டு. அது அலுவலக பதவி உயர்வாக இருக்கலாம்... அல்லது சொந்த வாழ்க்கையில் நான் கைகொள்ள நினைத்த சொத்துபத்தாக இருக்கலாம்.. எதையும் அடித்துபிடித்து அடைய முயன்றதில்லை...

3. பிறர் வம்புக்கு செல்லாமல் இருப்பது..

ஆனால் வந்த வம்பை விடுவதில்லையா என்று கேட்டால்... அதிலும் முயன்ற அளவுக்கு தவிர்க்கவே முனைந்திருக்கிறேன்... நான் அதீதமாக உணர்ச்சிவசப்படுபவன் என்கிற முத்திரை குத்தப்பட்டவன் என்பதாலும் இத்தகைய ஒரு மனப்பான்மையை சமீபகாலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்...

4. சரி என்று கருதுவதற்காக இறுதிவரை போராடுவது...

என்னுடைய உள்மனதில் சரி என்று நினைப்பதில் உறுதியாய் நிலைத்திருப்பது ஒருவிதத்தில் பிடிவாதம் என்று பலருக்கும் தோன்றினாலும் அதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். இதனாலேயே பலருடைய வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தாலும்... இது தொடர்கிறது.. கட்டையில் ஊறிப் போன ஒன்றாயிற்றே.. அதை எப்படி விடுவது?

5. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையுடன் சந்திப்பது..

வெற்றியில் வானம் வரை மகிழ்வதிலும் தோல்வியில் பாதாளம் வரை வீழ்வதிலும் நம்பிக்கையில்லாதவன்... என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்துள்ள பல தோல்விகளும் என்னை அவ்வளவாக பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் இந்த மனப்பாங்குதான்... இது மரணம் வரை தொடர வேண்டும் என்று ஆசைதான்... உடலில் ஏற்படும் பலஹீனம் மனத்தளவில் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது... பார்ப்போம்... தள்ளாத வயதில் பிள்ளைகளும் கைவிட்டுவிட சோர்ந்துபோன பலரை நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததன் விளைவோ என்னவோ அதற்கும் என்னை நானே தயார் செய்துக்கொள்கிறேன்...

6. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு நிதானம் இழக்காமல் இருப்பது... (இதில் சமீபகாலமாக சற்று இறங்கி வந்துள்ளதை உணர்கிறேன்...)

இது கயிற்றின் மீது நடப்பதுபோலத்தான்.. சங்கடமான சூழலிலும் முகத்தில் அதை காட்டாமல் இருப்பது என்பது எளிதல்லவே... நானும் எல்லாவித ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போனவன்தானே.. ஏன் எப்போதும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று உன்னை நீயே கட்டிப்போடுகிறாய் என்றெல்லாம் என் உள்மனது அவ்வப்போது இடித்தாலும் இன்றுவரை, இயன்றவரை நிதானம் இழக்காமல் இருக்கத்தான் முயல்கிறேன்... சிலமுறை என்னையுமறியாமல் இழந்ததுண்டு...

7. அலுவலகத்தையும் குடும்பத்தையும் அதனத்தன் இடத்திலேயே வைத்திருப்பது...

குறிப்பாக என்னுடைய அலுவலக தோல்விகள் என்னுடைய குடும்ப வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதில் முனைப்பாய் இருந்திருக்கிறேன்... அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வரும் டிபிஆர் வெறும் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே இருந்திருக்கிறான். அலுவலகத்திற்கு வெளியில்தான் என்னுடைய உலகமே இருந்து வந்துள்ளது என்றாலும் மிகையாகாது... அதனால்தானோ என்னவோ தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சகோதரர்கள் என்ற எந்த உறவுகளையும் இழந்துவிடாமல் இருக்க முடிந்திருக்கிறது... நல்லநாள் பொழுதுகளில் உற்றார் உறவினருடன் அவர்களுள் ஒருவனாக கலந்துவிட முடிந்திருக்கிறது... அலுவலக அதிகாரத்தை குடும்பத்தில் காட்டாமல் இருக்க முடிந்திருக்கிறது...

8. இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருப்பது...

சிறுவயதில் தாத்தாவின் அரவணைப்பில், பிறகு மாணவப் பருவத்தில் குருமார்களின் வழிகாட்டுதலில், விடுதியில் வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய உள்மனதில் இந்த இறை நம்பிக்கை வெகு ஆழமாக ஊன்றிப்போனது... என்னுடைய படிப்பும் அறிவு வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை எந்த அளவிலும் குறைத்துவிடவில்லை.. சொல்லப் போனால் அதை மேலும் வளர்த்துள்ளது என்பதுதான் உண்மை... இறை சிந்தனைகளை அறிவு பூர்வமாக சிந்திப்பதில் பயனில்லை என்பதில் வெகு ஆழமான நம்பிக்கையுள்ளவன் நான்... நான் சார்ந்திருக்கும் மதத்தின் அருமைகளை, அதன் உள்ளர்த்தங்களை உணர்ந்திருக்கும் நான் மற்ற மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் உணர்வுபூர்வமாக மதிப்பதிலும் உறுதியாய் இருப்பவன். மதங்களை விட மனங்களே மேன்மையானவை என்பதில் நம்பிக்கையுள்ளவன்... அதனால்தானோ என்னவோ என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்த பல தோல்விகளையும், சோதனைகளையும், இன்னல்களையும் வெற்றிகொள்ளும் ஒரு சக்தி, ஒரு மன உறுதி எனக்குள் இருந்து வந்திருக்கிறது என்று கருதுகிறேன்...

இனி விளையாட்டு விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும்...

எல்லாம் சரி... இந்த மூனாவது விதிதான் இடிக்குதே.. யாரை அழைக்கிறது?

அதுவும் எட்டுப் பேரை?

அதிலும் இதுவரை இந்த தொடர் விளையாட்டில் பங்குபெறாதவர்களை...!

கடந்த இருவாரங்களாக தொடர்ந்து தமிழ்மணம் வர இயலாமற்போன இந்த சூழலில் கண்களை மூடிக்கொண்டு சில பெயர்களை பட்டியலிடுகிறேன்...

1. சிவஞானம்ஜி
2. மா.சிவக்குமார்
3. ஜோ
4. முத்து தமிழினி
5. வினையூக்கி
6. துளசி
7. ரஷ்யா ராமநாதன்
8. கோவி. கண்ணன்..


******

8 comments:

G.Ragavan said...

வாங்க சார் வாங்க. எட்டு போட்டு நீங்களும் லைசென்ஸ் வாங்கீட்ட்டீங்க...சூப்பரு.

ரெண்டு நாளா ஊர்ல இல்லாம பதிவு போடாம இருந்தீங்க. இன்னைக்குச் சேத்து வெச்சு எட்டு பதிவு..அதாவது எட்டு பத்திய பதிவு.

நீங்க போட்ட எட்டும் சரிதான் சார். உங்களப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனும். சொல்லீருக்கீங்களே. சரிதான். நல்ல தகவல்கள்தான்.

ராமநாதனையும் ஆளக் காணோம். துளசி டீச்சரும் இன்னமும் எட்டு போடலை. நீங்க கூப்டீங்க. அப்பப் போட்டுருவாங்கன்னு நெனைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

முத்தா முதல்ல வந்துருக்கீங்க.. மிக்க நன்றி..

நீங்க சொன்னா மாதிரி ராமனாதன்கிட்டருந்து கொஞ்ச நாளா மெய்ல கூட காணம்...

என்னாச்சி ரஷ்யாவுல குளிர் ஜாஸ்தியோ!

மணியன் said...

உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறீர்களே, அதுவே ஒரு வலிமைதான். மற்றவர்களை சரியாக எடைபோடுவதும் உங்கள் வலிமைதான். அப்புறம் உங்கள் அழகான எழுத்தை மறந்துவிட்டீர்களே !

அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி.

tbr.joseph said...

வாங்க மணியன்,

உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறீர்களே, அதுவே ஒரு வலிமைதான். //

அப்படியா? மிக்க நன்றி.

அப்புறம் உங்கள் அழகான எழுத்தை...//

ம்ம்ம்ம்ம்ம்ம்... சந்தோஷமாத்தான் இருக்கு இப்படி சொல்றத படிக்கறப்ப... நன்றி..

ஆனா அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும் போலருக்கு...

இலவசக்கொத்தனார் said...

நல்ல 8 தாங்க!

tbr.joseph said...

மிக்க நன்றி கொத்தனார்:-))

Murali said...

Hello TBR

Very nice post. I second Manian's opinion. Writing beautifully in tamil is one of your strengths.

Murali

tbr.joseph said...

Thanks Murali:-))