12 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 117

என்னுடைய காசாளரும் உதவி மேலாளரும் குளறுபடிகளை சரிசெய்ய அதுவரை எடுத்திருந்த முயற்சிகளை ஆய்வு செய்ததில் அவர்களால் இயன்றவரை குளறுபடிகளை சரிசெய்ய முயன்றது தெரியவந்தது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக சரிசெய்துவிட முடியவில்லை.

பத்திரங்களைப் பூர்த்திசெய்வதிலிருந்த குளறுபடிகளில் பெரும்பாலானவற்றை சரிசெய்திருந்தார்கள். நல்ல வேளை. அவர்கள் இருவருமே மிகவும் கவனத்துடன் பூர்த்தி செய்திருந்ததால் வாடிக்கையாளர்களுடைய கையொப்பம் பெறவேண்டிய தேவை இருக்கவில்லை.

அவர்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனவைகளில் முக்கியமானது பத்திரங்களை ரிவைவ் செய்வது.

பத்திரங்களை ரிவைவ் செய்வது சட்டரீதியாக மிகவும் அத்தியாவசியமானதாகும். அதாவது எந்த ஒரு கடன் பத்திரமும், முக்கியமாக புரோ நோட் எனப்படும் Promissory Noteகள் கையொப்பமிட்ட தேதியிலிருந்து மூன்று வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

ஆகவே மூன்று வருட கெடு முடிவடையும்வரைக் காத்திருக்காமல் இருபத்தி ஏழாம் மாதமே அதாவது ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே, வாடிக்கையாளரிடமிருந்து ரிவைவல் கடிதம் ஒன்றை அதற்குரிய முத்திரைத் தாளில் பெற்றுவிட வேண்டும் என்பது நியதி.

அதென்ன ஒன்பது மாதக் காலக்கெடு?

எந்த ஒரு வாடிக்கையாளருமே 'ரிவைவல் கடிதத்தில் கையொப்பமிட வேண்டும் வாருங்கள்' என்றால் உடனே வந்துவிட மாட்டார். அவருக்கு கடன் தேவைப்படும்போது தினம் தினம் ஏன், ஒரே நாளில் இரண்டு, மூன்றுமுறை கூட நடையாய் நடப்பார்.

ஆனால் வங்கியின் தேவைக்கு வாருங்கள் என்றால் அவருக்கு என்று வசதிப்படுகிறதோ அப்போதுதான் வருவார். வந்தாலும் சார் இன்னைக்கி நாள் நன்றாக இல்லை என்பார். நாள் நன்றாக இருந்தால் இப்போ எமகண்டம், ராவுகாலம் நாளைக்கு போடுகிறேனே என்பார்.

சில சந்தர்ப்பங்களில் கடன் கொடுத்த இரண்டு வருடங்களில் வாடிக்கையாளருடனான உறவே முறிந்து போயிருக்கும். அந்நேரங்களில் அவர் வேண்டுமென்றே வராமல் காலம் தாழ்த்துவார்.

இதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது. கடன் கொடுத்த மேலாளர் இதற்கிடையில் மாற்றலாகிப் போயிருப்பார். புதிதாக வந்திருக்கும் மேலாளருக்கு வாடிக்கையாளரைப் பரிச்சயமிருக்காதல்லவா? புது மேலாளர் வாடிக்கையாளருக்கு கடிதம் அனுப்பி, அனுப்பி அலுத்துபோய் நாமே நேரில் சென்று பார்த்தாலென்ன என்று நினைத்துக்கொண்டு அவர்களுடைய வீடு தேடி செல்வார்.

வில்லங்கம் பிடித்த வாடிக்கையாளர் என்ன செய்வார்? இருந்துக் கொண்டே, ‘அவர் இல்லீங்க.. வெளியூர் போயிருக்கார்.’ என்று கூசாமல் சொல்லச் சொல்வார். அல்லது அவரே.. ‘அவர் என் தம்பிதாங்க. நீங்க குடுத்திட்டு போங்க. நான் அவன் வந்ததும் கையெழுத்து வாங்கி வைக்கறேன்.’ என்பார்.

மேலாளரும் வேறு வழியில்லாமல் ஏதோ கையொப்பம் கிடைத்தால் போதும் என்று கொடுத்துவிட்டு வருவார். அவ்வளவுதான், அது வரவே வராது. அவர் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நேரே எடுத்துக்கொண்டு அவருடைய வழக்கறிஞரிடம் சென்று, ‘சார் இதுல மேனேசர் கையெழுத்து கேக்கறார். போடலாமான்னு பார்த்து சொல்லுங்க.’ என்றிருப்பார்.

நேர்மையான வழக்கறிஞராயிருந்தால், ‘பரவால்லை போட்டு குடுங்க.’ என்பார். அவரும் வாடிக்கையாளரைப் போலவே வில்லங்கம் பிடித்தவராயிருந்தால், ‘இதுல கையெழுத்து போடறேன், போடறேன்னு இழுத்தடிங்க சார். ப்ரோ நோட்டு மூனு வருஷமானா காலாவதியாயிரும். அப்புறம் நீங்க லோன கட்டுலனாலும் மேனேசரால ஒன்னும் செய்யமுடியாது.’ என்று தவறான உபதேசத்தைக் கொடுத்திருப்பார்.

அதை நம்பி நம்முடைய வாடிக்கையாளரும் அன்றிலிருந்தே கடனையும் அடைக்க மாட்டார். மேலாளருக்குத்தான் அவரை அடையாளமே தெரியாதே. அவர் நேரே சென்றாலும் ஒரு பலனும் இருக்காது.

ஆக, மேலாளர் டென்ஷனில் இரவெல்லாம் உறங்காமல் தவிக்க வேண்டியதுதான்.

இத்தகைய இடைஞ்சல்களை எல்லாம் வங்கி மேலாளர் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகித்துத்தான் கெடு முடிவடைய ஒன்பது மாத காலம் இருக்கும்போதே வாடிக்கையாளரிடமிருந்து ரிவைவல் கடிதத்தை முறைப்படி பெற்றுவிடவேண்டுமென்ற நியதி வகுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அதுபோன்று ரிவைவல் வாங்காத கணக்குகளே பத்துக்கும் மேல் இருந்தன. என்னுடைய காசாளரும், உதவி மேலாளரும் வங்கியிலிருந்து அனுப்பிய எந்த கடிதத்திற்கும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கவில்லை.

அந்த பத்து கடன்களும் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து இன்று வரை கிளையில் இருந்த ஒரே ஆள் என்னுடைய காசாளர்தான். ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர்கள் அவரை யாரிடமும் அறிமுகப்படுத்தவே இல்லை என்பதால் அவர்களுள் ஓரிருவரைத் தவிர யாருடைய முகமும் அவருக்கு நினைவில் இல்லை.

என்னதான் முயன்றாலும் அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள எந்த வழியும் தெரியாமல் அவர்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தியது யார் என்பதை அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளிலிருந்து பார்க்கும்படி என்னுடைய உதவி மேலாளரைப் பணித்தேன்.

அவரும் எல்லாக் கோப்புகளையும் தலைகீழாய் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘சாரு.. எதுலயுமே அந்த டீடெய்ல்ஸ் இல்லே.. எல்லாத்துலயும் மேனேசர் சாரே.. known to meன்னு எழுதியாருக்காரு..’ என்றார்.  

சரி, இவற்றை என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்துக்கொண்டு மற்ற குளறுபடிகளை பார்த்தேன்.

அடுத்தது, வாடிக்கையாளரிடமிருந்து கடனுக்கு ஈடாக பெறப்படும் சொத்து பத்திரங்களை பட்டியலிட்டு பெறுவது மற்றும் அப்பத்திரங்களில் காணப்பட்ட சொத்துகளுக்கு உண்மையிலேயே வாடிக்கையாளர் பாத்தியஸ்தர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வது.

அதற்கும் சில விதிமுறைகள் இருந்தன.

முதலாவது, எந்த சொத்து பத்திரத்தை வாடிக்கையாளர் சமர்ப்பித்தாலும் அது நிச்சயம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். நல்ல வேளை, இப்போதுபோல் அதி நவீனமான நகல் எடுக்கும் காப்பியர்கள் அப்போது இல்லை. எது அசல் எது நகல் என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இரண்டாவது, சொத்து சம்பந்தப்பட்ட தாய் பத்திரத்திலிருந்து சுமார் பதிமூன்று வருடங்களுக்குண்டான பத்திரங்கள் பெறப்பட வேண்டும். எதற்காக என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் தேவைப்படும். ஆகவே அதை விட்டு விடுவோம்.

மூன்றாவது, சொத்தின் மீது ஏதாவது வில்லங்கம் அதாவது வங்கிக்கு அச்சொத்தை ஈடாக அடகு வைப்பதற்கு வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்ப்பது. அதற்கு தாய் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்த சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்கம் ஒன்றும் இல்லை என்ற சான்றிதழ் பெறப்படவேண்டும். வில்லங்கம் என்று வங்கிகள் சொல்வதில் சில: அந்த சொத்தின் மீதாக வேறு ஏதாவது கடன் அல்லது நிலுவை இருப்பது. நிலுவை என்றால் சொத்துவரியாகக் கூட இருக்கலாம். நிலுவையிலுள்ள சொத்து வரியை வசூலிக்க சொத்தையே ஜப்தி செய்யும் முன்னுரிமை அரசுக்குத்தான். வங்கிகள் அதன்மேல் எத்தனைக் கடன் கொடுத்திருந்தாலும் அரசுக்கு வரவேண்டிய நிலுவைக்குப் பிறகுதான் எல்லாமே. அதே போல்தான் விற்பனைவரி, வருமான வரி விஷயத்திலும். இரண்டாவது வில்லங்கம் சொத்தை வாங்கும்போது அதன் விலையில் ஏதாவது ஒரு பங்கை ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பிடித்துவைத்துக்கொள்வது. அத்தகைய சூழ்நிலையில் சொத்தை விற்றவருக்குத்தான் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் அத்தொகையின்மேல் மட்டுமல்ல முழுச்சொத்திலும் முன்னுரிமை இருக்கும். இருபது இருபத்தைந்து வருடங்கள் வரை வாங்கியவர் அத்தொகையை பைசல் செய்யாதிருக்கும் பட்சத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தொகையுடன் அதற்குண்டான வட்டியையும் சேர்த்தால் சில சமயங்களில் வங்கி அச்சொத்தின் மீது கொடுத்த கடனைவிடவும் கூடுதல் சொத்தை விற்றவருக்கு சேரவேண்டியிருக்கும்.

நான்காவது, சொத்தின்மேல் மைனர் எனப்படும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு உள்ள உரிமை. இதுதான் மிகவும் வில்லங்கம் பிடிச்ச வில்லங்கம்! அதை சரிவர கவனிக்காமல் கடன் கொடுத்துவிட்டால் கடனுக்கு கடனும் வராது, மைனர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் வங்கியே சிலவேளைகளில் ஈடுகட்ட வேண்டி வந்துவிடும். இதையும் இங்கு விளக்குவது கடினம்.

ஆக இந்த நான்கு முக்கியமான விதிமுறைகளையும் கடன் வழங்குவதற்கு முன்பே கடைபிடித்திருக்க வேண்டும். இதில் உதவத்தான் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு சட்ட ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

பத்திரங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றவுடனே அவற்றை சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசகரிடம் அனுப்பி அவருடைய சட்ட சான்றிதழைப் பெறவேண்டும் என்பதும் நியதி. ஆனால் பெரும்பாலான ஊர்களில், முக்கியமாக தூத்துக்குடி போன்ற சிறிய ஊர்களில், வங்கியின் சட்ட ஆலோசகரும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வழக்கறிஞரும் ஒரே ஆளாக இருந்துவிடுவதுண்டு.

அச்சமயங்களில் சாதாரணமாக வழக்கறிஞருக்கு தன்னுடைய தற்காலிக வாடிக்கையாளரான வங்கியைக் காட்டிலும் தன்னுடைய நிரந்தர வாடிக்கையாளரிடம்தான் கூடுதல் ‘பாசம்’ இருக்கும். ஆகவே வில்லங்கம் இருந்தாலும், ‘பெரிசா ஒன்னும் இல்லைசார். We can take an affidavit from the borrower.’ என்று சர்வசாதாரனமாக கூறிவிடுவார். முக்கியமாக தமிழ்நாட்டில் தஞ்சை, ஆந்திராவில் பீமாவரம், ராஜாமுந்திரி, குண்டூர் போன்ற விவசாயக் குட்டுக் குடும்பங்கள் இருந்த பகுதிகளில் இந்த குடும்பப் பாகப் பிரிவினையில் பல குளறுபடிகளை அதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களே செய்துவிடுவதுண்டு.

அவர்களே அந்த நகரத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகர்களாகவிருப்பதால் தங்களுடைய குளறுபடிகளை மறைத்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்துவிடுவார்கள்.

அவர்களுடைய தகிடுதத்தங்கள் கடன்களை வசூலிக்க வங்கிகள் நீதிமன்றங்களை நாடும்போதுதான் வெளியே வரும்..

அப்போது சட்டத்தை படித்தறியாத வங்கி மேலாளர்கள்தான் பலிகடாவாகிவிடுவார்கள்.

நான் மேலே கூறிய நான்கு குளறுபடிகளுமே என்னுடைய கிளையில் இருந்தன..

அதை நான் தலைகீழாக நின்றாலும் நிவர்த்தி செய்வது கடினமென்பதால் அவற்றையும் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் சேர்ப்பதென முடிவு செய்தேன்.

‘சார், உங்க அறிக்கைய அனுப்பறதுக்கு முன்னால எதுக்கும் நம்ம மேனேசர்ங்கக் கிட்ட பேசிரலாமே சார்.’ என்றார் என்னுடைய தலைமைக் குமாஸ்தா..

சரி என்று சம்மதித்து அவரையே அவர்களை ஃபோனில் அழைத்து பேசச் சொன்னேன். ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் என் மேல் மனத்தாங்கல் இருந்ததால்தான் இந்த ஏற்பாடு..

ஆனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவரே வந்து, ‘சார், ஒன்னும் பலனில்லை. அவங்க ரெண்டு பேருமே உங்க மேனேஜர் என்ன பெரிய வக்கீலா. லீகல் அட்வைசர் க்ளியர் பண்ணத இவர் எப்படிய்யா சரியில்லைங்கறார்னு சொல்லிட்டாங்க.’ என்றார்..

‘சரி விடுங்க.’ என்றேன்.

அத்துடன் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையை முடிவு செய்து என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்...

ஒரு மாதம் வரை ஒரு தகவலும் வரவில்லை..  நான் முற்றிலும் எதிர்பார்த்திராத நாளில் என்னுடைய முந்தைய மேலாளர்கள் இருவருக்கும் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ‘விளக்கக் கோரல்’களின் நகல்கள் வந்து சேர்ந்தன..

அதற்கப்புறம் சுமார் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர்கள் என்மேல் குறை கூற நான் அவர்களைக் குறை சொல்ல ஒரே டென்ஷன்தான்..

தொடரும்..

7 comments:

துளசி கோபால் said...

பேங்க் மேனேஜர்னு மதிப்பாச் சொல்லிக்கலாமே தவிர, வேலை நாய்பட்ட பாடா இருக்கே!
எல்லா பேங்குலேயும் இதுபோலச் சிக்கல்கள் இருக்குமா? இல்லே அவ்வளவாத் தொந்திரவு இல்லாத
பேங்கும் இருக்கா?

tbr.joseph said...

வாங்க துளசி,

பேங்க் மேனேஜர்னு மதிப்பாச் சொல்லிக்கலாமே தவிர, வேலை நாய்பட்ட பாடா இருக்கே!//

ஆமாங்க. ஆனாலும் நாம கடன் கொடுத்து அத வச்சி சிலர் முன்னேறும்போது அதுல கிடைக்கற சந்தோஷம் வேற எந்த வேலையிலயும் கிடைக்காதுங்க. எந்த வேலையிலதான் பிரச்சினையில்லை. என்ன? இதுல கொஞ்சம் ரிஸ்க் ஜாஸ்தி. அவ்வளவுதான். தலை தப்பினா தம்பிரான் புண்ணியம்னு சொல்றாப்பல.

டி ராஜ்/ DRaj said...

சார்:
இவ்வளவு விஷயத்தையும் சரிபாத்து முடிக்கறதுக்கே ஒரு வருஷம் வேணூம் போலயே. சொகுசா வேலை பாக்கறாங்கன்னு இவ்வளவி நாள் நெனச்சேன், ரொம்ப கஷ்டம் தான் சார் பேங்க் வேலை.

ராஜ்

tbr.joseph said...

வாங்க ராஜ்,

சொகுசா வேலை பாக்கறாங்கன்னு இவ்வளவி நாள் நெனச்சேன், ரொம்ப கஷ்டம் தான் சார் பேங்க் வேலை.//

வீட்டுக்கு வீடு வாசப்படி. உங்க வேலைல மட்டும் கஷ்டமில்லையா என்ன?

என்ன, நாங்க தினம் தினம் பலதரப்பட்ட ஆள்ங்கள டீல் பண்ணனும். ஒரு பேங்க் மானேஜர் நல்ல பி.ஆர்.ஓவா, நல்ல மேன் மேனேஜரா, சட்டம் கொஞ்சம் தெரிஞ்சவரா, கொஞ்சம் ஆடிட்டரா, எல்லாத்துக்கும் மேல தைரியம் உள்ளவரா இருக்கணும்.. ஆக மொத்தம் ஒரு ஆல்டோட்டல் பூபதியா இருக்கணும். இல்லன்னா அவ்வளவுதான்.

srishiv said...

aiya அற்புதம் போங்க
எப்பவும் போல இப்பவும் அசத்தல், எங்க அப்பா பட்ட பாட்டை நேரில் பார்த்த மாதிரி இருக்கு, அவர் அக்ரி மேனேஜர் நீங்க கமர்சியல் போல இருக்கு :) நன்றிகள்...
ஸ்ரீஷிவ்...:)

Sivaprakasam said...

Oh!இவ்வளவு கஷ்டம் இருக்கா வங்கி மேலாளர் உத்தியோகத்துல!

arunagiri said...

எனக்குத்தெரிந்து வங்கி மற்றும் LIC இரண்டிலும் பலர் எதற்கு risk, இட மாற்றம் என்று clerk-ஆகவே இருந்து விடுவார்கள். (Unionists இதில் முக்கிய அடக்கம். ஓரு Sidebar digression: lic மற்றும் banks-இல் இருந்த virulent unionism பற்றி எழுதாதற்கு இன்னும் பணியில் இருப்பதுதான் காரணம் என்றால் புரிந்து கொள்வேன்). ஓடும் பாம்பை மிதிக்கும் வயதில் நான் இவர்களைக்கண்டு வியந்திருக்கிறேன். உத்தியோக உயர்வையும் கொடுத்து ஊர் சுற்றவும் வாய்ப்புக் கிடைக்கும்போது அதை உதறி விட்டு, உள்ளூரில் கிணற்றுத்தவளைகளாய் இருக்கிறார்களே என்று. (இப்போது வியக்க மாட்டேன்).