10 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 115

அன்று அந்த டிரஸ்ட் மேலாளரும் என்னுடைய காசாளரும் இருந்த மனநிலையில் நான் மனதில் நினைத்திருந்த திட்டத்தைப் பற்றி பேசினாலும் எந்த பயனும் இருக்காது என்பதுடன் இவர்கள் இருவருக்கும் இடையே தேவையில்லாத வாக்குவாதம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று நினைத்த நான் அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்ததும் எங்களுடைய இரு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த வங்கி-வாடிக்கையாளர் உறவை இனியும் வலுப்படுத்துவதைப் பற்றி மட்டும் பேசிவிட்டு புறப்பட்டேன்.

நானும் மேலாளரும் உரையாடிக்கொண்டிருந்த நேரம் முழுவதும் என்னுடைய காசாளர் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் அவரிடமிருந்து விடைபெறும் நேரத்தில்  அவருடைய நெல்லை ஆயரைச் சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படி கேட்டேன்.  அவர் உடனே, ‘சரி சார்.’ என்று விடையளித்தார்.

நான் அவருடைய அறையைவிட்டு வெளியேறும் நேரத்தில், ‘சார் ஒரு நிமிடம். உங்களிடம் தனியாக பேச விரும்புகிறேன்.’ என்றார் என்னுடைய காசாளரைப் பார்த்தபடி.

அவர் இதை கேட்ட விதமும் என்னுடைய காசாளரைப் பார்த்த விதமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லையெனினும் என்னுடைய காசாளர் உடனே என்னிடம், ‘நீங்க பேசிட்டு வாங்க சார். நான் வண்டிக்கிட்ட வெய்ட் பண்றேன்.’ என்று கூறிவிட்டு வெளியேறியதால் வேறு வழியின்றி அவர் வெளியேறும் வரை பொறுத்திருந்து மேலாளரைப் பார்த்தேன். ‘சொல்லுங்க சார்.’

அவர் என்னுடைய காசாளர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘சார் இந்த பையன் அவ்வளவு சரியில்லை. எங்க பெனிஃபிஷியர்ஸ் பணம் வாங்க வரும்போது அவனோட சாதி ஆளுங்களுக்கு நல்ல நோட்டும் மத்தவங்களுக்கு குறிப்பா எங்க சாதி ஆளுங்களுக்கு மோசமான, சில சமயத்துல கிழிஞ்சிபோன நோட்டுங்களும் கொடுக்கறதா எனக்கு நிறைய கம்ப்ளெய்ண்ட்ஸ் வந்திருக்கு. உங்களுக்கு முன்னால இருந்த மேனேஜர் இவனையும் அந்த ஹெட் க்ளார்க்கையும் அவங்க எடத்துல நிறுத்தி வச்சிருந்தார். நீங்களும் இவனுங்களுக்கு ரொம்ப எடம் குடுத்திராதீங்க. அப்புறம் உங்களுக்கே மரியாதை இல்லாம பன்னிருவான்க.’என்றார்.

அவர் பேசிய விதம் எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பினாலும் இவரிடம் வாக்குவாதம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று நினைத்துக்கொண்டு, ‘கவலைப்படாதீங்க சார். I will take care.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.

வெளியில் வந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்து டிரஸ்ட் அலுவலகம் இருந்த சிதம்பர நகரைக் கடந்து மத்திய பேருந்து நிறுத்தத்தை அடையும்வரை எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த என்னுடைய காசாளர் மவுனமாக வரவே அவருடைய மனநிலையை உணர்ந்து அவரிடம் சற்று பேச வேண்டும் என்று நினைத்து, ‘இங்க பக்கத்துலருக்கற ரெஸ்டாரண்ட்ல ஒரு காப்பி சாப்டுட்டு போலாம் வாங்க.’ என்று அவர் மறுப்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் ஒரு உணவகம் முன்பு நிறுத்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு நுழைந்தேன்.

எதிரும் புதிருமாக ஒரு மேசையில் இருவரும் அமர்ந்தோம். ஆனால் அப்போதும் அவர் சந்தோஷமில்லாத முகபாவத்துடன் அமர்ந்திருந்தார். ‘என்ன கோமஸ், அவர் பேசினதையே இன்னும் நினைச்சிக்கிட்டிருக்கீங்களா?’ என்றேன்.

அவர் குனிந்துக்கொண்டே, ‘நான் போனதும் என்னைப் பத்தி புகார் ஏதும் சொல்லியிருப்பாரே.’ என்றார்.

நான் அவரிடம் உண்மையை சொன்னால் பிரச்சினை மேலும் பெரிதாக வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து, ‘இல்லீங்க. அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.’ என்றேன்.

அவர் என்னுடைய பதிலில் திருப்தியடையவில்லை என்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. நான் இதை மறைப்பதால் அவருக்கு என்மேல் இருந்த நம்பிக்கைக் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் எனக்குத் தோன்றியது. அதைக் காட்டிலும் அவர் கூறியதை அப்படியே மறைக்காமல் கூறுவதன் மூலம் அது உண்மையா என்றும் தெரிய வாய்ப்பிருக்கிறது என்று நினைத்த நான் மேலாளர் கூறியதை அப்படியே மிகைப்படுத்தாமல் கூறினேன்.

நான் கூறி முடிக்கும்வரை அமைதியாய் கேட்ட அவர் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு, ‘அப்படியா சார் சொன்னான் அவன்? அவனெ...’ என்று மேலே தொடர முடியாமல் உதடுகள் துடிக்க தடுமாறியதைக் கண்டதும் என்னுடைய முடிவு தவறாகிப்போனதோ என்று ஒரு நொடி நினைத்தேன்.

ஆனால் சிறிது நேரத்தில் வெய்ட்டர் கொண்டு வந்து வைத்த குளிர்ந்த நீரைக் குடித்து சகஜ நிலைக்கு வந்தார். பிறகு, ‘அந்தாள் சொன்னத நீங்க நம்பிட்டீங்களா சார்?’ என்றார்.

நான் சற்று நேரம் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தேன். இது இருபக்கமும் கூரான கத்திபோன்ற கேள்வி என்று நினைத்தேன். ‘இல்லீங்க’ என்று சொன்னால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இவரையும் எனக்கு ஒரு மாத காலத்திற்கும் குறைவாகத்தான் பரிச்சயம் என்பதால் மேலாளர் கூறியது உண்மையாக இருந்தால் இவர் என்னுடைய பதிலால் தன்னுடைய தவறான அணுகுமுறையை மேலும் தீவிரமாக்கிவிட வாய்ப்பிருந்தது. மாறாக ஆமாங்க என்றால் இவர் உடனே என்னையும் ஒரு எதிரியாக வரித்துவிட வாய்ப்பிருந்தது என்று நினைத்தேன்.

ஆகவே பேச்சை மாற்ற நினைத்து, ‘சரி அத அப்புறம் சொல்றேன். இப்ப நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு இந்த ஊர்ல மட்டும் இந்த சாதி விஷயம் இவ்வளவு தீவிரமா இருக்கு?’ என்றேன்.

அவர் என்னுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டாரோ இல்லையோ நான் கேட்ட கேள்வி அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். உடனே தூத்துக்குடியின் சரித்திரத்தையே எனக்கு விளக்க ஆரம்பித்துவிட்டார். அந்நகரத்தையே இருகூறாக இரு  முக்கிய சாதிகளைச் சார்ந்த மக்கள் பிரித்திருந்ததை பல உதாரணங்களுடன் எனக்கு விளக்கினார். அவருடைய பேச்சிலிருந்த ஆவேசம் அவ்விரு இனத்தவரிடையே இருந்து வந்த மன வேற்றுமை இன்று நேற்று தோன்றியதல்ல என்பதை புரிந்துக்கொண்டேன்.

இதற்கிடையில் நாங்கள் ஆர்டர் செய்திருந்த சிற்றுண்டியை வெய்ட்டர் கொண்டுவரவே பேச்சு சிறிது நேரம் தடைபட்டுப் போனது. நல்ல வேளை, அவர் சற்று முன்பு கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை என்பதை அவர் மறந்தே போனார்.

நாங்கள் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறியபோது நேரம் மாலை ஏழுமணியைக் கடந்திருந்தது. அவருடைய வீடு மணல் தெருவில் இருந்ததால் அவருடைய வீட்டையடைய என்னுடைய வங்கி அலுவலகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவருடைய வீடுவரை வருகிறேன் என்று நான் கூறியதை மறுத்து, ‘வேணாம் சார். நான் இவ்வளவு சீக்கிரம் வீட்லபோய் என்ன பண்றது? நா சாதாரணமா எங்க சங்க ஆபீசுக்கு போய் கேரம்ஸ் விளையாடிட்டு ஒரு பத்து மணி போலத்தான் வீட்டுக்கு போவேன். நீங்க போங்க. நா பஸ் பிடிச்சி போய்க்கறேன்.’ என்றார்.

ஆக, அன்று அவரிடம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து நான் இந்த ஊரிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை எத்தனை கவனமாக இருக்கவேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்துக்கொண்டேன். நல்லவேளை. என்னுடைய தந்தை என்ன காரணத்தாலோ என்னையும் என் சகோதரர்களையும்  பள்ளியில் சேர்த்த நேரத்தில் எங்களுடையக் குடும்பப் பெயரை எங்களுடைய பெயருடன் சேர்த்து பதியாமல் விட்டுவிட்டார். இல்லையென்றால் என்னுடைய பெயரை வைத்தே நான் எந்த இனத்தைச் சார்ந்தவன  என்று இவ்வூரில் இருந்த என்னுடைய வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கும் என்று நினைத்தேன்.

நான் இதை ஏன் இவ்வளவு வேலை மெனக்கெட்டு சொல்கிறேன் என்பதை நான் தூத்துக்குடியைப் பற்றிய இத்தொடரை எழுதி முடிக்கும்போது புரிந்துக்கொள்வீர்கள். நான் இதற்கு முன்பிருந்த தஞ்சையிலும் நான் வீடு தேடி அலைந்தபோது இப்பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. ஆனால் என்னுடைய கிளை அலுவலில் இப்பிரச்சினை இடையூறாக இருந்ததில்லை.

நான் சிறுவயது முதலே சென்னையில் வளர்ந்ததால் சாதிக் கலவரம் என்ற வார்த்தையைக் கூட நான் கேட்டதில்லை. திரு. பக்தவத்சலம் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் சென்னை மற்றும் தமிழகமெங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெகு தீவிரமாக நடத்திய காலக்கட்டத்தில்கூட நான் காட்பாடியில் போர்டிங் பள்ளியில் இருந்ததால் அதன் தீவிரத்தை முழுவதுமாக நான் உணரவில்லை.

மேலும் என்னுடைய பள்ளியில் தமிழ் மீடியத்துடன் ஆங்கில ஸ்ட்ரீம் என்பார்களே அது இருந்ததால் நான் அதில் சேர்ந்தேன். இரண்டாம் விருப்பப் பாடமாக  தமிழைத் தவிர்த்து, ஹிந்தியைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். தமிழை நான் ஆரம்பப் பாடசாலையில் பயின்றதோடு சரி.

ஆகவே சிறுவயது முதலே என்னுடைய சாதி மற்றும் மொழியில் எனக்கு பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ இப்போதும் இனம், மொழி என்பதையெல்லாம் பெரிதாக நினைத்துக்கொண்டு ஏன் இந்த அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளையும் அதே கண்ணோட்டத்துடன் நான் வளர்த்தேன்.

நான் தூத்துக்குடியில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்கள் இரு வேறு அணிகளாய் பிரிந்து நின்றதைப் பார்த்தபிறகுதான் என் மூத்த மகளைப் பள்ளியில் சேர்த்த சமயத்தில் இந்திய கத்தோலிக்கன் என்று மட்டுமே கொடுத்தேன்.

என்னுடைய மகளை தூத்துக்குடியில் மிகவும் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த ஹோலிகிராஸ் பள்ளியில் சேர்த்தபோது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த கன்னியாஸ்திரி ஒரு ஆங்கிலோ இந்தியர். கோவாவைச் சார்ந்தவர்.

அவர் அந்த நகரத்திற்கு வந்து சுமார் ஐந்தாண்டுகாலம் ஆகியிருந்தது. ஆனாலும் அவரும்கூட என்னுடைய மகளைப் பள்ளியில் சேர்க்க ஒத்துக்கொண்டு நான் படிவங்களை அவருடைய அறையில் அமர்ந்து பூர்த்திக்கொண்டு செய்துக்கொண்டிருக்கும் அந்த பத்து நிமிட நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க வந்த இரு பெற்றோர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக அட்மிஷனை மறுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ஆனாலும நான் ஒன்றும் பேசாமல் படிவத்தைப் பூர்த்தி செய்து முடித்து அவரிடம் சமர்ப்பித்தேன்.  அவர் நான் Caste என்று இருந்த இடத்தில் ஒன்றும் நிரப்பாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ‘Why did you leave it blank Mr.Jospeh? You might stand to lose the benefits your child would be eligible for, later.’ என்றார். நான், ‘I don’t mind Sister. Please don’t insist on this.’ என்றேன்.

அவரும் புன்னகையுடன், ‘As you please’ என்று கூறிவிட்டு படிவத்தில் ‘Admitted’ என்ற முத்திரையை பதித்துவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்தார். ‘Do you know one thing Mr.Joseph?’ என்றார்.

‘Yes Sister?’

‘Here people walk in and demand admission on the basis of their caste. They feel that they should be given admission as they belong to this particular caste which is the majority in this town, whether they deserve it or not.’

நான் என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

அவர் என்னுடைய சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, ‘I bluntly refuse to give admission to their children as I did just now.’ என்றார்.

நான் ஏன் என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘They just flash their family name as if it is a qualification. They would also proudly say that they could pay any amount as donation to get their children admitted. But once they get the admission that’s it. They won’t pay any attention to their child’s education. They won’t even ensure that their child attends the school everyday. Our School’s name gets noticed because of the performance of children belonging to other castes especially the hindu Brahmin children, these people only tarnish our name.’  

நான் என்ன பதில் பேசுவதென தெரியாமல் வெறுமனே நன்றி கூறிவிட்டு என் மகளை அழைத்துக்கொண்டு பள்ளிக் கட்டணத்தை அடைக்கும் இடத்தை நோக்கி நடந்தேன்.

என்னுடைய பெயருடன் சேர்த்து என்னுடைய சாதிப் பெயரும் இருந்திருந்தால் என்னுடைய மகளுக்கும் அந்த அவல நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன்..

சுயநலம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அப்போது எனக்கு இப்படி நினைப்பதைத் தவிர வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை..

தொடரும்..

31 comments:

arunagiri said...

ஹூம், ஏற்கனவே தமிழன் என்ற உணர்வு இல்லை என்ற பட்டம். Political correctness-இல் இருந்து பிறழத்துணியும் மற்றொரு பதிவை இட்டதற்காக என்னவெல்லாம் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறீர்களோ.

துளசி கோபால் said...

கிறிஸ்துவப் பள்ளிகளிலே எல்லா ஜாதி மக்களும் சேர்ந்து படிச்சாங்கதான். அங்கேதான் நல்ல
கல்வியும், பசங்களுக்கு நல்ல ஒழுக்கமும் கிடைக்குமுன்னு பரவலான நம்பிக்கை இருந்துச்சு.
கான்வெண்ட்லெ படிக்கறது ஒரு பெருமையும்கூட அந்தக் காலத்துலே.

tbr.joseph said...

வாங்க arunagiri,

அப்படியெல்லாம் தப்பா ஒன்னும் நான் எழுதலையே. யதார்த்தைத்தான் எழுதியிருக்கிறேன்.

டி ராஜ்/ DRaj said...

தப்பா இருந்தா மன்னிச்சிருங்க சார். எனக்கென்னவோ அந்த சிஸ்டர் கொஞ்சம் judgemental-ஆக நடந்துகொண்டதாகவே தெரியுது...

The Rev. Sister might have seen many similar cases, but I believe that the children stood a chance irrespective of their parents behaviour.

tbr.joseph said...

வாங்க துளசி,

கிறிஸ்துவப் பள்ளிகளிலே எல்லா ஜாதி மக்களும் சேர்ந்து படிச்சாங்கதான். //

உண்மைதான். ஆனா நான் குறிப்பிட்ட HM இருந்த வரைக்கும் அவங்களோட கொள்கையில பிடிவாதமாத்தான் இருந்தாங்க. அதனால ஒரு பெரிய ரகளையே ஏற்பட்டு ஆயர் தலையிட்டு சமாளிக்க வேண்டி இருந்தது.

arunagiri said...

மற்றொரு விஷயமும் தோன்றுகிறது. முன்கோபி என்று நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிகொண்டாலும், எப்படி டிப்ளமாடிக்காக இந்த விவகாரங்களைக் கையாண்டு இருக்கிறீர்கள் எனப் பார்க்கையில் வியப்பாக உள்ளது. எனக்கு டிப்ளமாடிக் அப்ரோச் இப்பவும் அவ்வலவு சுலபத்தில் கைவர மாட்டேன் என்கிறது.

ஓர் உதாரணம்: நான் அந்தப்புதிய வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. சீனப்பெயர் கொண்ட ஆஸ்திரேலியர் ஒருவருக்குத்தேவைப்பட்ட ஒரு உதவியைச் செய்து விட்டு, அது குறித்து வெள்ளைக்கார கலீக் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் "இந்தப்பெயர் ஆஸ்திரேலியப் பெயர் போல இல்லையே?" என்றார். "அப்படியா..." என்றேன் ஆச்சரியம் தொனிக்க. அவர் எனக்கு விளக்கும் விதத்தில் "ஆம், ஆஸ்திரேலியப் பெயர் என்றால் ஆங்கிலப் பெயர் கொண்டதாக இருக்கும்- பில், ஜார்ஜ் என்பது போல" என்று சொல்ல, நான் "அவை ஆஸ்திரேலியப் பெயர்களா என்ன?" என்று கேட்டதில், ஒரு 5 செகண்டுகள் என்னையே பார்த்து விட்டு "யு ஆர் ரைட், அது ஆங்கிலப் பெயர், ஆஸ்திரேலியப் பெயர் அல்ல" என்றார். (என் மனைவியிடம் இதை சொல்லி நல்ல டோஸ் வாங்கிக் கட்டிக்கொண்டேன் என்பது வேறு விஷயம்).

tbr.joseph said...

வாங்க ராஜ்,

எனக்கென்னவோ அந்த சிஸ்டர் கொஞ்சம் judgemental-ஆக நடந்துகொண்டதாகவே தெரியுது...//

உண்மைதான் ராஜ். ஆனா அவங்களோட வாதம் கொஞ்சம் சரியானதுதான்னு நா அங்க இருந்த கொஞ்ச நாளுக்குள்ளேயே தெரிஞ்சிக்கிட்டேன்.

தூ..டி யில நல்ல பெயர் பெற்றிருந்த கிறிஸ்துவ பெண்கள் பள்ளி இது ஒன்றுதான். மற்றவையெல்லாம் இந்து மத்தத்தைச் சார்ந்தவர்களுடையது. So naturally there was intense competition among these Schools. It was quite natural that the HM wanted best results in the Board Exams. But she had to relent when the issue was taken by the association of the said caste and the Tuticorin Bishop himself intervened to set right the issue.

tbr.joseph said...

Arunagiri,

நானும் இதுபோன்ற முட்டாள்தனங்கள் நிறைய செய்துவிட்டு மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன். பட்டு, பட்டு தெரிந்துக்கொண்டதுதான் இந்த பொறுமையும், நிதானமும். It takes time.

டி ராஜ்/ DRaj said...

// It was quite natural that the HM wanted best results in the Board Exams. //
நீங்க சொல்றது சரி தான் சார்.

கிறுஸ்துவ கல்விநிறுவனங்களுக்கு பொதுவாகவே நல்ல பேர் உண்டு தானே. அப்போ அவங்க கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்.

arunagiri said...

"யதார்த்தைத்தான் எழுதியிருக்கிறேன்". சரியாப்போச்சு. 'யதார்த்தம் வேறு, Political correctness வேறு' என்று உங்களுக்கு இதுவரை தெரியாதா? Politically correct இல்லாத யதார்த்தம் பேசினால் அடிப்படைவாதி பட்டம் கிட்டும் அபாயம் உண்டு. யதார்த்தமாக இல்லாவிட்டாலும் politically correct என்றால் குறைந்தது பிற்போக்குவாதி என்ற வசவிலிருந்து தப்பிக்கலாம். ஆனாலும் Politically correct-ஆக இருக்கக்கூடிய யதார்த்தத்தை மட்டுமே பேசி பிறவற்றை விலக்குவதே 'முற்போக்கு' அரசியலுக்கு முழுமுதல் இலக்கணம்.

dondu(#4800161) said...

"Our School's name gets noticed because of the performance of children belonging to other castes especially the hindu Brahmin children, these people only tarnish our name."

போச்சு, உங்களுக்கு பெயர் வைக்க செந்தமிழ்ச் செல்வன் வந்துவிடப் போகிறார். கவனம், கவனம்.

அந்தப் பள்ளித் தலைவி கூறியது தர்க்க சாத்திரப்படி பிழையாகும். அதை fallacy of hasty generalisation என்று கூறுவதுண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ / Joe said...

நகரங்களில் இருக்கும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ,அதுவும் கன்னியர்கள் நடத்தும் பள்ளிகள் இப்படி ரிசல்ட் % வெறி பிடித்து அலைவது ஒன்றும் புதிதல்ல .கல்வி நிறுவனங்கள் தாழ்நிலையிலிருக்கும் ,அறியாமையிலிருக்கும் மக்களை ,மாணவர்களை உயர்த்தி விடும் குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டுமே தவிர ,வெறும் % காட்டி பெருமை பீத்திக்கொள்ள நடத்துவது சேவை அல்ல .

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் .நான் 10-வது வகுப்பு வரை எங்கள் கிராமத்தில் உள்ள எங்கள் பங்குக்கு சொந்தமான கிறிஸ்தவ பள்ளியில் படித்தேன் .எங்கள் ஊரில் உள்ள அனைத்து மாணவர்களும் இங்கு தான் படித்தார்கள் .ஒரு ஊரில் நன்கு படிக்ககூடிய ,படிக்காத ,மக்கு மாணவர்கள் என்று பல தரப்பட்ட மாணவர்கள் இருக்கலாம் .ஆனால் அனைவரையும் இங்கே சேர்த்துக்கொள்ள வேண்டும் .தகுதி பார்த்து சேர்க்க முடியாது .ஆனால் 10-வது வகுப்பு தேர்வில் 40 பேர் எழுதி (கிட்டத்தட்ட அனைவரும் எம் கிராமத்து மாணவர்கள்) 40 பேரும் வெற்றி பெற்றோம் . தொடந்து எங்கள் கிராமத்துப்பள்ளி 95%-க்கு குறையாது வெற்றி ஈட்டி வருகிறது .

10-வது வகுப்புக்கு பின்னர் பிளஸ் -2 நாகர்கோவிலின் புகழ்பெற்ற கிறிஸ்தவ பள்ளியில் சேர்ந்தேன் .10-வது வகுப்பில் நல்ல மதிபெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே எனக்கு இங்கே இடம் கிடைத்தது .எனது வகுப்பில் படித்த அனைவருமே 10-வது வகுப்பில் 400 மதிப்பெண்ணுக்கு மேலே எடுத்தவர்கள் .கிராமத்துப் பள்ளியில் இருந்த ஆசிரியர்களின் தரத்தில் 10-ல் ஒரு பங்கு கூட இங்கு கிடையாது .ஆனால் ரிசல்ட்-க்கு மட்டும் குறைச்சல் இல்லை ..400 -மார்க் எடுக்கும் மாணவன் இவர்கள் முயற்சியால் ஒன்றும் பாஸாகவில்லை.

எல்லா விதமான மாணவர்கலையும் ஏற்றுக்கொண்டு ,படிக்காத மாணவனையும் படிக்க வைப்பது தான் உண்மையான கல்விக்கூடத்தின் நோக்கமாக இருக்க முடியும் ..ஏற்கனவே நன்கு படிக்கின்ற ,அல்லது படித்த பின்புலமுள்ள மாணவர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு நாங்கள் % வாங்கி விட்டோம் என்று பீத்திக்கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?

tbr.joseph said...

வாங்க ஜோ,

உங்களுடைய கோபம் மிகவும் நியாயமானதுதான். நானும் என்னுடைய பிள்ளைகளை ஒவ்வொரு பள்ளியிலும் சேர்த்தபோதெல்லாம் இவ்விதமான கோபத்திற்கு ஆளாகியிருக்கிறேன். முக்கியமாக சென்னையிலும், மும்பையிலும். ஆனால் என்ன செய்ய? அதுதான் யதார்த்தம். இப்போதெல்லாம் போர்ட் தேர்வில் செண்டம் ரிசல்ட் வேண்டும். அதுதான் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரின் ஒரே நோக்கம். இதில் சாதியாவது, மதமாவது.. கிறிஸ்துவப்பள்ளிகளில் கிறிஸ்துவர்களுக்குத்தான் முதலிடம் என்று பல ஊரிலுள்ள ஆயர்களும் முயன்றுபார்த்து தோல்வியைத் தழுவியதுதான் தெரிந்த விஷயமாயிற்றே.

ஜோ / Joe said...

//போர்ட் தேர்வில் செண்டம் ரிசல்ட் வேண்டும். அதுதான் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரின் ஒரே நோக்கம். //

இது சுயநலம் .சாதி,மதத்தை விடுங்கள் .அந்தந்த பகுதியில் கிறிஸ்தவ பள்ளிகள் கீழ் நிலையிலிருக்கும் மக்களையும் கைதூக்கி விட வேண்டும் .படிக்காத மாணவனை படிக்க வைப்பது தான் பள்ளியின் திறமையே தவிர ,தானாகவே படிக்கின்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் வெற்றியில் இவர்கள் பேரெடுப்பதல்ல சேவை .நான் இதனால் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் கிராமத்திலும் ,நகரத்திலும் படித்த எனக்கு கோபன் வருவதை தவிர்க்க முடியவில்லை . % மட்டும் தான் குறிக்கோள் என்றால் பேசாமல் அவர்கள் கிறிஸ்துவின் பெயரால் சேவை செய்வதாக சொல்லாமல் இருக்கட்டும்.

தேர்வில் ஒரு மார்க் குறைந்தாலும் பக்கத்து வீட்டு பையனோடும் ஒப்பிட்டு தன் பிள்ளையை குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தி பெற்றோர்கள் மார்க் பைத்தியம் பிடித்து அலைவது போல ,சில கல்வி நிறுவனங்களும் தங்கள் உண்மையான சேவையை மறந்து விட்டு தனிப்பட்ட பெயருக்காக இப்படி பைத்தியம் பிடித்து அலைகின்றன..அடிப்படையிலிருந்து வளராத எந்த சமூகமும் உருப்படாது.

tbr.joseph said...

அடிப்படையிலிருந்து வளராத எந்த சமூகமும் உருப்படாது. //


உண்மைதான் ஜோ.

பள்ளிகளை விடுங்கள். சென்னையிலிருக்கும் பல புகழ் பெற்ற கிறிஸ்துவ கல்லூரிகளிலும் இதே அவலம்தான். அவற்றுள் சிலவற்றில் மார்க் மட்டும் இருந்தால் போதாது. பிள்ளைகள் பார்க்கவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். இந்த கேவலத்தை எங்கு போய் முறையிட?

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
என் வாதத்தின் அடிப்படையாக ஒரே ஒரு கருத்தை சொல்லி முடிக்கிறேன்.

இறைமகன் இயேசு பாவிகளையும் ,சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் தேடிச்சென்று அவர்களோடு அளவளாவி உணவருந்தியபோது ,பெரிய மறைநூல் அறிஞர்களும் மதவாதிகளும் அவர் தகுதியற்றவர்களோடு தொடர்பு கொள்வதாக சொன்னபோது இயேசு சொன்னது "மருத்துவன் நோயற்றவர்களுக்கன்று .நோயுற்றவர்களுக்கே தேவை .நீதிமான்களையன்று பாவிகளையே தேடி வந்தேன்"

டி ராஜ்/ DRaj said...

//சில கல்வி நிறுவனங்களும் தங்கள் உண்மையான சேவையை மறந்து விட்டு தனிப்பட்ட பெயருக்காக இப்படி பைத்தியம் பிடித்து அலைகின்றன..அடிப்படையிலிருந்து வளராத எந்த சமூகமும் உருப்படாது//

அவர்களுக்கும் வேறு வழியில்லை. பாஸ் ஆகியோர் சதவிதம் குறைந்தால் உடனேயே பள்ளி சரியில்லை என செய்தி பரப்ப ஆட்கள் (சகஊழியர்கள், கன்னியாஸ்திரிகளையும் சேர்த்து) தயார். The HM has his/her reputation at stake.

டி ராஜ்/ DRaj said...

//சென்னையிலிருக்கும் பல புகழ் பெற்ற கிறிஸ்துவ கல்லூரிகளிலும் இதே அவலம்தான். அவற்றுள் சிலவற்றில் மார்க் மட்டும் இருந்தால் போதாது. பிள்ளைகள் பார்க்கவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். இந்த கேவலத்தை எங்கு போய் முறையிட?//

சரியான சிபாரிசும் வேணும் சார். நான் படித்த திருச்சியிலுள்ள கத்தோலிக்க கல்லூரியில் தகுதியே இல்லாத பலர் சிபாரிசு மட்டுமே கொண்டு விதிகளை வளைத்து முதுகலை பட்டபடிப்புக்கு சேர்ந்ததை பார்த்திருக்கிறேன். அட்மிஷன் நேரத்தில் கல்லூரியும், பாதிரியார்களின் இருப்பிடமும் திருவிழாக் களை கட்டும்.

துளசி கோபால் said...

டிபிஆர்ஜோ,

//இப்போதெல்லாம் போர்ட் தேர்வில் செண்டம் ரிசல்ட் வேண்டும்.
அதுதான் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரின் ஒரே நோக்கம். இதில்...//

இதுதான் இல்லை. இந்த 'இப்போதெல்லாம்' எல்லாம் 'அப்போதே 'வந்துருச்சு.
நான் படிச்ச காலத்துலெயே (அதுவும் ஸ்காட்லாண்ட் மிஷன் நடத்துனதுதான்)
கொஞ்சம் சந்தேகமா இருக்கற மாணவிகளை ஒம்போதுலேயே நைஸா வடிகட்டிருவாங்க.
அப்பத்தான் பத்தாம் வகுப்புலே 100% பாஸ்.

இதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோ / Joe said...

//கிறிஸ்துவப் பள்ளிகளிலே எல்லா ஜாதி மக்களும் சேர்ந்து படிச்சாங்கதான். அங்கேதான் நல்ல
கல்வியும், பசங்களுக்கு நல்ல ஒழுக்கமும் கிடைக்குமுன்னு பரவலான நம்பிக்கை இருந்துச்சு.
கான்வெண்ட்லெ படிக்கறது ஒரு பெருமையும்கூட அந்தக் காலத்துலே. //

துளசி அக்கா,
ஏன் எல்லாம் இறந்தகாலதுலயே சொல்லுறீங்க. இப்போ அப்படி இல்லைண்ணு சொல்ல வர்றீங்களா?

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

அந்தப் பள்ளித் தலைவி கூறியது தர்க்க சாத்திரப்படி பிழையாகும். அதை fallacy of hasty generalisation என்று கூறுவதுண்டு.//

இருக்கலாம். உங்களுக்கு பதில் டி. ராஜ் சொல்லியிருக்காரு. அதையும் பாருங்க. அதுவும் சரிதானே.

tbr.joseph said...

சிபாரிசு மட்டுமே கொண்டு விதிகளை வளைத்து முதுகலை பட்டபடிப்புக்கு சேர்ந்ததை பார்த்திருக்கிறேன்//

இந்த அக்கிரமம் இப்பவும் தொடர்கிறது ராஜ்.

tbr.joseph said...

"மருத்துவன் நோயற்றவர்களுக்கன்று .நோயுற்றவர்களுக்கே தேவை .நீதிமான்களையன்று பாவிகளையே தேடி வந்தேன்" //

இதை என்னுடைய பாதிரியார் நண்பரும் படிக்க வாய்ப்பிருக்கிறதென்பதால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த வாக்கியங்களையெல்லாம் நம்மளப் போலருக்கறவங்கதான் நினைவுல வச்சிக்கிட்டிருக்கறோம். சம்பந்தப்பட்டவங்கள்ல நிறைய பேர் மறந்தே போய்ட்டாங்க. அதான் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல CSI நடத்துகின்ற நிறுவனங்களிலும் இத்தகை அக்கிரமங்கள் நடக்கின்றன. எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம்.

tbr.joseph said...

இதுதான் இல்லை. இந்த 'இப்போதெல்லாம்' எல்லாம் 'அப்போதே 'வந்துருச்சு.//

நீங்க சொல்றது உண்மைதான் துளசி.

துளசி கோபால் said...

ஜோ,

இறந்தகாலம் மட்டும்தான் தெரியுது எனக்கு. இப்ப அங்கே என்ன நடக்குதுன்னு பத்துநாள், ஒரு மாசம்
போற என்னால் தெரிஞ்சுக்க முடியலை. தமிழ்நாட்டை விட்டே கனகாலமாச்சுப்பா.

Srimangai(K.Sudhakar) said...

ஜோசப் சார்,
தூத்துக்குடி குறித்து நீங்க எழுதுவது மிகச் சரி.
ஒரு சிறு அறிமுகம்...நான் அந்த ஊருல பொறந்து வளர்ந்தவன். நடுவுல சில வருசம் மட்டும் அம்பாசமுத்திரம். படிப்பெல்லாம் கத்தோலிக்க கிறித்துவ பள்ளிகளில்தான். புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி -தூ-டி. புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி அம்பை... எனக்கு இதனாலேயே விவிலியம் நன்றாகத் தெரியும். தூத்துக்குடியின் ஜாதிப் போர்கள் பிரபலமானவை. இருபது வருடங்கள் முன்பு தெருக்கள் கோஷ்டி ( செட்டு என்பார்கள்) அடித்துக்கொண்டு சாவது மிகச் சகஜம். உங்கள் பதிவில் வந்திருந்த தெருப்பெயர் ஒருக்காலத்தில் நடுங்க வைத்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
குடும்ப நிலை காரணமாக புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் இருந்து டி.சி வாங்கிவந்து பாளையங்கோட்டையில் புனித ஜான் மேல்நிலைப்பள்ளியில் அட்மிஷன் கேட்டோ ம்.. பள்ளியின் பெயர் பார்த்தவுடன் அட்மிஷன் இல்லை என மறுத்துவிட்டனர்.. ( கத்தோலிக்க , ப்ராடெஸ்டெண்ட் பனிப்போர்). பின்னர் தூத்துக்குடியில் ஒரு பாதிரியார் (அருட்தந்தை ஹென்றி) சிபாரிசில் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.
என்னதான் சொன்னாலும், இந்த ஜாதிச்சண்டையும் பணபலமும், அடியாட்கள் பலமும் தூத்துக்குடியை கலங்க அடித்தது என்பது வருந்தத்தக்க உண்மை. 'மாசி'க்கும் மக்ரோனுக்கும் பெயர்போன தூத்துக்குடி, இன்றாவது மாறியிருக்கிறதா எனத் தெரியவில்லை.
நான் ஒழுங்காக மார்க் எடுக்கவில்லையென்றால் எனது ஆசிரியர்கள் செல்லமாக " ஏலெ _____! ( ஜாதிப்பெயர் இடவும்), என்ன படிக்கச் சொணங்குத? நாளைக்கு என்னலா செய்வ? பாஸ்கெட்பால் சோறுபோடாது..வெளங்குதா?" என புடதியில் வார்த்தையுடன் அடியும் போட்டுத்தான் படிக்கவைத்தார்கள். ஆசிரியர்கள் அளவில் இச்சாதி ஊடுருவவில்லை என்னும் ஆறுதல் அன்று உண்டு.
இன்னும் எழுதுங்க சார்.
with regards
K.Sudhakar

tbr.joseph said...

அடடா இன்னுமொரு தூ.டிக்காரர்.

வாங்க சுதாகர்,

'மாசி'க்கும் மக்ரோனுக்கும் பெயர்போன தூத்துக்குடி,//

ஞாபகப்படுத்தாதீங்க சுதாகர். பேர கேட்டவுடனே நாக்கு ஊறுது. முன்னத தின்னு தின்னு ப்ரெஷரும், பின்னத தின்னு ஷுகரும் ஏறுனதுதான் மிச்சம் :-(

" ஏலெ _____! ( ஜாதிப்பெயர் இடவும்), என்ன படிக்கச் சொணங்குத? நாளைக்கு என்னலா செய்வ? //

இந்த மாதிரி லாங்வேஜ கேட்டு எத்தன நாளாச்சிது? அப்படி புட்டத்துல போட்டதுனாலதான இப்ப படிச்சி பெரியா ஆளாயிருக்கீங்க?

நீங்க சொன்னா மாதிரி பள்ளி ஆசிரியர்களிடத்தில் இந்த சாதிப்பற்று அதிகம் இல்லைதான். கேள்விப்பட்டிருக்கிறேன்.

G.Ragavan said...

ஜோசப் சார். நானும் வந்துட்டேன்.

தூத்துக்குடியில் நானும் பள்ளியில் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் சாதிப் பிரச்சனை அங்கு இருந்தது உண்மைதான்.

நான் முதலில் பேபி கிளாஸ் படித்தது சுப்பையா வித்யாலயத்தில். இப்பொழுது அங்கு பேபி கிளாஸ் கிடையாது. முழுக்க முழுக்க பெண்கள் பள்ளியாகி விட்டது. பிறகு எக்ஸ்டென்ஷன் மிடில் ஸ்கூலிலும் செ.சேவியர்சிலும் படித்தேன்.

சாதி மத ரீதியான பாகுபாடுகள் அந்த வயதிலேயே என்னைக் கொஞ்சம் தீண்டியிருக்கின்றன என்றால் மிகையாகாது. தெரியாத்தனமாய் ஒரு நண்பனின் வீட்டுக்குப் போய் ஏளனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டது இன்னும் நினைவிருக்கிறது.

பள்ளிக்குத் தாமதமாகப் போகையில் Asst HM Father-டம் கையெழுத்து வாங்க வேண்டும். வீட்டில் பண்டிகை என்று நான் காரணம் சொல்லி நான் அடி வாங்கியது. வேறொரு பையன் ஏதோ திருப்பலி தொடர்பாக செய்து வந்ததால் அடி வாங்காமலும் போயிருக்கிறான். இது போன்ற நிகழ்வுகள் மிகச் சாதாரணம் என்று இப்பொழுது தெரிகிறது.

ஆசிரியர்களும் பாகுபாடு பார்ப்பார்கள். நல்லவர்களும் இருந்தார்கள். மறுக்க முடியாது. நடிகர் சந்திரபாபுவின் சொந்தக்காரர் ஒருவர் எனக்குத் தமிழாசிரியராக இருந்தார். அவர் மிகவும் நல்லவர். கிருத்துவராக இருந்தாலும் தமிழ் இலக்கியப் பாடங்களை எந்தப் பாகுபாடும் காட்டாது மிகச் சிறப்பாக எடுத்தவர். அப்பொழுதே அவருக்கு வயது மிகவும் இருந்தது. பெயர் நினைவில்லை. செ.சேவியர்சில் இரண்டு ஆசிரியர்கள் பெயர்கள்தான் நினைவிருக்கிறது. பெர்க்மான்ஸ் (இவர் நாடகங்களிலும் நடிப்பார்). குருமலை (பெரிய உடம்போடு இருப்பார்.) பீட்டர் (ஓவியமும் தமிழும் எடுத்தார் என நினைக்கிறேன்.)

ஊருக்குள்ளும் இந்தப் பிரச்சனைகள் உண்டு. சில ஏரியாக்களுக்கு நாங்கள் போகவே மாட்டோம். உங்களுக்கே தெரியும் அவை எந்த ஏரியாக்களாக இருக்குமென்று.

பள்ளிகள் என்று வந்தால் ஹோலி கிராஸ் (பெ) சேவியர்ஸ் (ஆ) காரப்பேட்டை நாடார் (ஆ) சுப்பையா வித்யாலயம் (பெ) எஸ்.ஏ.வி (ஆ) அலோஷியஸ் (பெ) செ.ஜான் (இ) ஆகியவை பழையவை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு அட்மிஷன் முறையினை வைத்திருந்தார்கள்.

சிதம்பர நகரில் இருக்கும் சக்தி விநாயகர் பின்னாளில் வந்த பள்ளியாயினும் இப்பொழுது நன்றாகவே செய்கிறார்கள். பெண்களுக்கான பள்ளிகளில் சுப்பையா வித்யாலயமும் ஹோலி கிராசும் போட்டியிடுகின்றன. செ.ஜான் எங்களுக்கெல்லம் பெரிய பள்ளி. டை, ஷூ என்று போவார்கள். அது கொஞ்சம் மேல்த்தட்டு மக்கள் படிக்கும் பள்ளி. பொதுவாகச் சொன்னால்...பள்ளிகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒரு விதம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்த மாதிரி விளக்கமான பின்னூட்டங்கள படிக்கும்போதுதான் அப்படியே தூ..டி க்கு போய்வந்தா மாதிரி இருக்கு.

நீங்க சொல்றது அத்தனையும் நிதர்சனமான உண்மை ராகவன்.

நீங்க சொன்ன ச.பாபுவோட மற்றுமொரு சகோதரர்தான் என்னுடைய மாமனார் வீட்டுக்கருகில் இருந்தார். நீங்கள் கூறிய வாத்தியாரின் வீடு விக்டோரியா சாலையில் ஒரு முடுக்கில்.. எனக்கும் அவருடைய பெயர் ஞாபகமில்லை.

ppage said...

சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்து மகிழ்ச்சி தந்தது இந்த பதிவு.

காரணம். நானும் தூத்துக்குடிதான்.

மிக நல்ல பதிவு. ஆழமான விடயம்.

தூத்துக்குடி, சாதிய வேர்களின் வீரியமும் விழுதுகளும் தவிர்க்க முடியாத பூமி. நம் தமிழக பட்டணங்கள் எல்லாமே இப்படித்தானோ என கேள்வியும் வருகிறது.

பெர்க்மான்ஸ் தான் எனது ஆசிரியர் ஆசான். எனது ஒரு பதிவில் அவரை நினைவு கூர்ந்தது கீழே...

http://padukali.blogspot.com/2009/10/281009.html

என்னையும் உங்க செட்டுல சேர்த்துக்கோங்கல....

டி.பி.ஆர் said...

வாங்க ppage,

நான் இந்த பதிவை எழுதி அநேகமா நாலு வருசம் ஆயிருச்சி. இப்போ இதுக்கு ஒரு மறுமொழி. நீங்களும் நம்ம ஊருதான். வாழ்க. செட் என்ன செட் நீங்களா சேந்துக்க வேண்டியதுதான். உங்க பதிவ பாத்துட்டு மறுமொழி போடறேன்.