07 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 114

என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கை தயாரானதும் என்னுடைய வட்டார மேலாளருக்கு அனுப்புவதற்கு முன்னர் என்னுடைய உதவி மேலாளர் மற்றும் என்னுடைய தலைமை குமாஸ்தாவுடனும் இதைக் குறித்து பேசினால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

என்னுடைய அறிக்கையின் நகலை அவர்களுக்கு காண்பிக்காமல் அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் அவர்களுடன் கலந்தோசிக்கலாம் என்று முடிவுடன் அவற்றை ஒரு குறிப்பேட்டில் (Pad) குறித்துக்கொண்டு அவர்கள் இருவரையும் அன்று மாலை அழைத்து பேசினேன்.

இருவரும் ஆரம்பத்தில் என்ன பேசுவதென தெரியாமல் தயங்குவதைப் பார்த்த நான், ‘நீங்க இப்ப சொல்ற எதையும் மேலிடத்துல சொல்லப் போறதில்லை. நான் தவறாக எதையும் மேலிடத்திற்கு தெரிவித்து விட கூடாதே என்றுதான் உங்களுடன் ஆலோசனை செய்கிறேன். தயங்காமல் உங்களுடைய கருத்தைக் கூறுங்கள்.’ என்றேன்.

உதவி மேலாளர் அப்போதும் தயக்கத்துடன், ‘இதுல நா சொல்றதுக்கு ஒன்னுமில்லே சார். நீங்களா பார்த்து என்ன செய்யணுமோ செய்யுங்க.’ என்றார்.

நான் வியப்புடன், ‘ஏன் அப்படி சொல்றீங்க?’ என்றேன்.

அவர் தயக்கத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்த தலைமைக் குமாஸ்தாவைப் பார்த்தார். ‘சார் வேற ஒன்னுமில்லை. போன மேனேஜர் சார் செஞ்ச ஒரு காரியத்த பத்தி அவர்கிட்ட சொல்லப் போயி அவர் உங்க வேலைய மட்டும் பாருங்கன்னு சொல்லிட்டார். அதுலருந்து நா எதுலயும் என் கருத்த சொல்றதில்லே சார். இவர் எவ்வளவு சீனியர்? இவர் கிட்டயும் அப்படித்தான் சொல்லிட்டார் ஒரு நாள்.’

நான் தலைமைக் குமாஸ்தாவைப் பார்த்தேன். அவர் லேசான புன்னகையுடன், ‘நம்ம அசிஸ்டெண்ட் மேனேசர் சொல்றது சரிதான் சார். நான் இப்பிடி சொல்றேனேன்னு நீங்க தப்பா நினைச்சிக்கலைன்னா சொல்றேன்.’ என்றார்.

‘இல்லை. சொல்லுங்க.’

‘நம்ம -------------- சார் (மேலாளரின் பெயர்) தமிழாள்ங்களத்தவிர வேற யாரையும் நம்ப மாட்டார் சார். அதனால நாங்க சொல்ற எதையும் பொருட்படுத்தாம அவருக்கு தோன்றதையே செய்துக்கிட்டு போவார். நம்ம காஷியர் மட்டும் சொன்னா கேட்டுக்குவார். ஆனா செய்யமாட்டார். கொஞ்ச நாளைக்கப்புறம் அவரும் சொல்றத நிறுத்திக்கிட்டார்.’

நான் இருவரையும் பார்த்தேன். பிறகு தலைமை குமாஸ்தாவிடம். ‘சரிங்க. உங்க விஷயத்துல சரி. ஆனா இவர் விஷயம் அப்படியில்லையே’ என்றே உதவி மேலாளரை சுட்டிக் காட்டி.

‘மேனேஜர் குடுக்கற லோன் ப்ரொப்போசல் ஒவ்வொன்னுலயும் இவர் சரி பார்த்ததா இவரோட கையெழுத்து இருக்கே. அதே மாதிரி டாக்குமெண்ட்சும்.. நம்ம எச். ஓ. நியதிப்படி அதையெல்லாம் இவர்தானே சரிபார்த்து உள்ள வைக்கணும்? இவர் பாட்டுக்கு ஒன்னுத்தையும் பார்க்காம கையெழுத்து மட்டும் போட்டு வச்சிருக்காரு? நா இந்த ரிப்போர்ட்டை இப்படியே அனுப்பினேன்னா இவருந்தான பதில் சொல்லணும்?’

தலைமைக் குமாஸ்தா உதவி மேலாளரைப் பார்த்தார். அவர் என்ன பதில் பேசுவதென தெரியாமல் பரிதாபமாகப் பார்த்தார். பாவம். அவர் உதவி மேலாளராக பதவியேற்ற முதல் கிளை அதுதான். தமிழ் சுத்தமாக வராது. அவர் முன்னால் வைத்து அவரையே தரக்குறைவாக வாடிக்கையாளர்கள் பேசினாலும் சிரித்துக்கொண்டு இருப்பார்.

அவருடைய முகபாவத்தை வைத்து நான் கூறியதன் உட்பொருள் அவருக்கு விளங்கியதா என்றுகூட என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இவருக்காகவாவது நாம் கண்டுபிடித்தவற்றுள் மிக முக்கியமானதைத் தவிர வேறொன்றையும் இதில் எழுதக்கூடாது என்று தீர்மானித்தேன். பிறகு எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து என்னுடைய முழு அறிக்கையின் ஒரு நகலை அவரிடம் கொடுத்தேன்.

‘இங்க பாருங்க மிஸ்டர் ----------------. இத முழுசும் படிச்சு பாருங்க. அப்பத்தான் நீங்க எவ்வளவு சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கீங்கறது உங்களுக்கு புரியும்.’ என்றேன்.

பிறகு தூத்துக்குடியை சேர்ந்த என்னுடைய காசாளரை என்னுடைய அறைக்கு வரவழைத்தேன். அவரும் என்னுடைய தலைமைக் குமாஸ்தா அளவுக்கு சீனியர்தான். ஆனால் என்னுடய தஞ்சை காசாளரைப் போலவே சொந்த ஊரிலேயே இருக்கலாமே என்று நினைத்து பதவி உயர்வை விரும்பாமல் இருந்தவர்.

அவர் வந்ததும், ‘சார் நீங்களும் இவரோட உக்கார்ந்து இந்த ரிப்போர்ட்லருக்கற பார்ட்டீசையெல்லாம் கூப்டு இந்த டாக்குமெண்ட்ஸ்லருக்கற குறைபாடுகள எப்படி ரெக்டிஃபை பண்ணலாம்னு பாருங்க. உங்களால முடியாத விஷயத்த மட்டும் இன்னும் ரெண்டு வாரத்துல என் பார்வைக்கு கொண்டு வாங்க. நம்மளால முடிஞ்ச அளவுக்கு ரெக்டிஃபை பண்ணதுக்கப்புறம் என்னோட ரிப்போர்ட்டை அனுப்பறேன். உங்களால இவருக்கு ஹெல்ப் பண்ண முடியுமில்லே?’ என்றேன்.

அவர் உடனே புன்னகையுடன், ‘நிச்சயமா சார். உங்கள மாதிரி அவரும் எங்கள கலந்துக்கிட்டு செஞ்சிருந்தார்னா இந்த பிரச்சினையே வந்திருக்காது. அவர் பிசினச கூட்டணும், பிசினச கூட்டணுங்கற ஒரே நோக்கத்துல எங்க யாரையும் கலந்துக்காம அவருக்கு என்ன சரின்னு தோனுதொ அத செஞ்சிக்கிட்டே போயிருவார் சார்.’ என்றார்.

‘சரிங்க. நாம இனி அதப்பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை.’ என்று கூறிவிட்டு சட்டென்று நினைவுக்கு வர, ‘நீங்களும் உக்காருங்க. ஒரு முக்கியமான விஷயம். இப்பவே டிஸ்கஸ் பண்ணிருவோம்.’ என்றேன்.

அவரும் அமர என் எதிரிலிருந்த மூவரும் என்ன விஷயம் என்பதுபோல் என்னை பார்த்தனர்.

நான், ‘இந்த குட்சமாரிட்டன் விஷயம். எனக்கு ஒரு யோசனை தோணுது. நான் சொல்றத கேட்டுட்டு உங்க அபிப்பிராயத்த சொல்லுங்க.’ என்றேன்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த காசாளர், ‘சொல்லுங்க சார்’ என்றார் ஆவலுடன்.

‘அடுத்த மாசத்துலருந்து அந்த அக்கவுண்ட் ஹோல்டர்சையெல்லாம் மதியானத்துல வரச் சொன்னா எப்படி. அதாவது லஞ்ச் டைமுக்கப்புறம்.’ என்றேன்.

தலைமைக் குமாஸ்தா உடனே, ‘அதனால் என்ன லாபம் சார்?’ என்றார்.

‘பெரிசா லாபம்னு ஒன்னுமில்லை. ஆனா நம்ம ரெகுலர் கஸ்டமர்சுக்கு எந்த பாதிப்பும் இருக்காதில்லையா?’ என்றேன்.

காசாளர், ‘சார் அப்படி பண்ணனோம்னா நா கேஷ க்ளோஸ் பண்றதுக்கு ராத்திரியாயிருமே சார்.’ என்றார். அவருக்கு தன்னுடைய வேலை இரட்டிப்பாயிருமே என்ற கவலை.

நான் அவரைப் பார்த்து லேசான புன்னகையுடன், ‘உங்க வேலை ஜாஸ்தியாயிருமேன்னு நினைக்காதீங்க. அன்னைக்கி மட்டும் நம்ம க்ளார்க்குல ஒருத்தர அடிஷனல் காஷியரா குடுக்கறேன். நீங்க உங்க ரெகுலர் கேஷ் வேலைய பார்த்தீங்கன்னா அந்த கஸ்டமர்ஸ் வேலைய அவர் பார்த்துக்குவார்.’ என்றேன்.

காசாளர் அப்போதும் திருப்தியடையாமல், ‘இருந்தாலும் அந்த கேஷியருக்கும் எங்கிட்டருந்துதான சார் கேஷ் எடுத்து குடுக்கணும்? அப்பவும் அவர் வேலைய முடிக்காம நா எப்படி கேஷ க்ளோஸ் பண்றது?’ என்றார்.

‘ஒன்னு பண்ணுவோம். போன மூனு மாசத்துல ஆவரேஜா அவங்களுக்கு மொத்தமா எவ்வளவு கேஷ் பட்டுவாடா பண்ணோம்னு பாருங்க. அடுத்த மாசத்துலருந்து அந்த தொகைய அட்வான்ஸ் பேமெண்டுல டெபிட் பண்ணி அவர்கிட்ட குடுத்துருவோம். அவர் கேஷ் பட்டுவாடா பண்ணி முடிச்சதுக்கப்புறம் மீதி இருந்திச்சின்னா அடுத்த நாள் திருப்பி கட்டி அந்த அட்வான்ஸ் பேமேண்ட் அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிருவோம். குறைஞ்சிருச்சின்னா இருக்கவே இருக்கு லேட் பேமெண்ட் அக்கவுண்ட். அதுல டெபிட் பண்ணி கேஷ் குடுத்திரலாம்.’

தலைமைக் குமாஸ்தா குறுக்கிட்டு, ‘சார் நீங்க டிஸ்கஷன்னு இறங்குனதால நா என் மனசுல படறத சொல்றேன். தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்றார்.

நான் புன்னகையுடன், ‘சார்.. நா எதையுமே எங்கூட வேலை செய்யறவங்களோட டிஸ்கஸ் பண்ணாம செஞ்சதில்லை. எனக்கு பிடிச்சதத்தான் நீங்க சொல்லணும்னும் நா எதிர்பார்க்க மாட்டேன். தாராளமா என்ன சொல்ல வந்தீங்களோ அத சொல்லுங்க.’ என்றேன்.

அவர் திருப்தியுடன் புன்னகைத்தார். ‘சார் நீங்க சொன்ன யோசனை தப்புன்னு சொல்லலே. ஆனா நிச்சயமா நம்ம இன்ஸ்பெக்ஷன் டீம் கமெண்ட் பண்ணுவாங்க. ஏன்னா பார்ட்டீசுக்கு குடுக்க வேண்டிய கேஷ அட்வான்ஸ் பேமெண்ட் அக்கவுண்ட்ல டெபிட் பண்றது நடைமுறையில இல்லாத ஒன்னாச்சே சார்.’

ஆமாம். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழலில் இதற்கென தனியாக அனுமதி கேட்டால் நிச்சயம் என்னுடைய வட்டார மேலாளர் மறுக்க மாட்டார் என்று நினைத்தேன். ‘சரிங்க. நீங்க சொல்றதும் சரிதான். ஆனா ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டா நம்ம ஜோனல் மேனேஜர் தருவார்னு நினைக்கிறேன். இதுனால எங்க ரொட்டீன் பிசினஸ் தடைபட்டு போதுன்னு சொன்னா நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கிறேன். ட்ரை பண்ணி பாக்கலாம்.’ என்றேன்.

அவர்கள் மூவருக்குமே என்னுடைய யோசனைப் பிடித்திருந்ததால் அன்றைய கலந்தாலசனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். அதன்படி அன்றே இரவே அமர்ந்து என்னுடைய வட்டார மேலாளருக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அடுத்த இரண்டு வாரங்களில் என்னுடைய யோசனையை ஏற்று அட்வான்ஸ் பேமெண்ட்டிலிருந்து எடுக்கக் கூடிய தொகைக்கு அதிக பட்ச வரம்பை நிர்ணயித்து மீதமுள்ள தொகையை உடனே செலுத்தி அடுத்த நாளே அக்கணக்கை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வந்தது.

‘சார் இத ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னால அந்த டிரஸ்ட் மேனேஜர வரவழைச்சி பேசிரலாம்.’ என்றார் என்னுடைய காசாளர்.

‘அவரை வரவழைக்கறதுக்கு பதிலா நாமளே அவர போயி பார்த்தா என்ன? அன்னைக்கி நாங்க போனப்போ அவர் ஊர்ல இல்ல.’ என அவரும், ‘சரி சார். நானும் வேணும்னா உங்கக்கூட வரட்டுமா?’ என்றார்.

நான் உடனே சந்தோஷத்துடன், ‘என்ன சார் இப்படி கேக்கறீங்க? தாராளமா வாங்க. நீங்க ஃபோன் பண்ணி நாம இன்னைக்கி சாயந்திரம் ஆறுமணி போல வரோம்னு சொல்லிருங்க.’ என்றேன்.

அவரும் ஊரிலிருப்பதாகவும் நீங்கள் வாருங்கள் என்று அவர் கூறியதாக என்னுடைய காசாளர் கூறவே அன்று மாலையே நானும் அவரும் புறப்பட்டுச் சென்றோம்.

ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம், நாங்கள் அங்கு சென்றடைந்தபோது அவரும் வேறொருவரும் பெருத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க எங்களைப் பார்த்ததும் அவருடன் பேசிக்கொண்டிருந்தவரை, ‘நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க சார்.’ என்று முரட்டுத்தனமாக பிடித்து வெளியே தள்ளிவிட்டு எங்களை இறுகிய முகத்துடன் வரவேற்றார்.

நாங்கள் அவருடைய அறையில் சென்று அமர்ந்ததும், ‘தப்பா நினைச்சிக்காதீங்க சார். நாங்க ஏதோ எங்களால ஆனமட்டும் இந்த ஊராளுங்களுக்கு நல்லது செய்யலாம்னு பாக்கறோம். ஆனா இந்த (ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைக் குறிப்பிட்டு) -------------- பயலுவளுக்கு எந்த நன்றி விசுவாசமும் இல்ல பாருங்க.. இப்ப வந்து கத்திட்டு போறப் பயலுக்கு தொழில்ல நல்ல வருமானம் வருதுன்னு எங்களுக்கு தெரிய வந்தது.. அதனால இவனோட பிள்ளைங்க படிப்புக்குன்னு வந்துக்கிட்டிருக்கற தொகைய இந்த மாசத்தோட நிறுத்திட்டோம். அதுக்கு வந்து மரியாதையில்லாம.. இந்த ------------பய.. பேசிட்டு போறத பாத்தீங்களா?’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இதோ ஒரு நிமிஷத்துல வரேன் சார் என்று அறையை விட்டு வெளியே சென்றார்.

நான் ‘என்னங்க.. இந்தாளு இப்படி பேசறாரு? ஒன்னும் சரியில்லையே. நாம சொல்ல வந்த விஷயத்த சொல்லணுமா?’ என்றேன் காசாளரிடம்..

காசாளர், ‘அவர் இப்படித்தான் சார். நானும் அவர் சொன்ன சாதிய சேர்ந்தவன்னு தெரிஞ்சும் என் முன்னாலயே அவர் பேசறத பாத்தீங்களா சார்? நீங்க இருக்கீங்களேன்னு பேசாம இருந்துட்டேன்.’ என்றார் கோபத்துடன்.

நான் அவரை சமாதானப்படுத்த முயன்றேன். வந்த இடத்தில் இனியும் ஒரு புது பிரச்சினையை கிளப்ப வேண்டுமா என்று யோசித்தேன்.

தொடரும்..

9 comments:

துளசி கோபால் said...

டிபிஆர் ஜோ,

எங்கே போனாலும், எப்பப் பார்த்தாலும் இந்த 'ஜாதிப் பிரச்சனை' தீரவே மாட்டேங்குதே(-:

ஏங்க இந்த ஜாதி அபிமானம் எல்லோர்கிட்டேயும் நிஜமாவே இருக்கா? இல்லெ லாபம் இருந்தாமட்டும்
பயன்படுத்தறாங்களா?

ஏன்னா, ஜாதிதான் முக்கியமுன்னா ஒரே ஜாதியிலே இருக்கறவங்களெ, அவுங்களுக்கு லாபமுன்னா
ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தறாங்கதானே?
ஒண்ணும் புரியலைங்க(-:

நல்லவேளை உங்க போஸ்டிங்கை சீக்கிரம் படிச்சுட்டேன். இப்ப ஸ்ரீராமநவமி பூஜைக்குப் போறேன்.
வர ரொம்ப நேரமாயிரும்.( ராத்திரி சாப்பாடு அங்கெதான்!)

உங்க அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்து(க்)கள்.

tbr.joseph said...

வாங்க துளசி,

ஏங்க இந்த ஜாதி அபிமானம் எல்லோர்கிட்டேயும் நிஜமாவே இருக்கா? //

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. இன்றைய அரசியல்களத்துல நடக்கற முக்கியமான வாதம் என்னன்னு நினைக்கிறீங்க?

நம்முடைய தலைவர்களைப் போலத்தான நாமளும் இருப்போம். நம்முடைய தலைமுறையோடு அழிந்து போகாதா இந்த சாதிப்பேய் என்றுதான் நான் தினமும் ஏங்குகிறேன்.

tbr.joseph said...

ஏன்னா, ஜாதிதான் முக்கியமுன்னா ஒரே ஜாதியிலே இருக்கறவங்களெ, அவுங்களுக்கு லாபமுன்னா
ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தறாங்கதானே?
ஒண்ணும் புரியலைங்க(-://

ஆமா துளசி என்னை மற்ற சாதிக்காரனோடு ஒப்பிட்டுப் பார்த்து யார் பெர்யிவன் என்று பார்த்துக்கொள்கிறேன். ஆனால் அவனும் என்னுடைய சாதிக்காரன் என்றால் அவனை பொருளாதார கண்ணோட்டத்தில் குறைத்து மதிப்பிட பார்க்கிறேன். எனக்கு தேவை இருக்கும் நேரங்களில் அவன் என்னுடைய சாதிக்காரன். அது முடிந்துவிட்டால் அவன் யாரோ நான் யாரோ..

டி ராஜ்/ DRaj said...

//ஆனா இந்த (ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைக் குறிப்பிட்டு) -------------- பயலுவளுக்கு எந்த நன்றி விசுவாசமும் இல்ல பாருங்க.//

சிலருடைய குணமே அப்படித்தான சார். யோசிக்காம பேசறது. அதுவும் கொஞ்சம் செல்வாக்கான, அதிகாரமுள்ள ஆள இருந்தா எதுவும் பேசலாம்ன்னு தான் சிலருக்கு நெனப்பு.

G.Ragavan said...

சாதியையும் மதத்தையும் தங்களுடைய சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களே நிறைய..ம்ம்ம்...காலம் மாறும்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

சிலருடைய குணமே அப்படித்தான சார். யோசிக்காம பேசறது. அதுவும் கொஞ்சம் செல்வாக்கான, அதிகாரமுள்ள ஆள இருந்தா எதுவும் பேசலாம்ன்னு தான் சிலருக்கு நெனப்பு. //

ஆமாங்க. அதுல சில வங்கி மேலாளர்களும் அடக்கம். எங்க வங்கியையும் சேர்த்துத்தான் சொல்றேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சாதியையும் மதத்தையும் தங்களுடைய சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களே நிறைய//

கரெக்டா சொன்னீங்க.

Karthik Jayanth said...

ஜோசப் சார்,

உங்களின் தி.பா பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் கமென்ட்ஸ் எதுவும் நான் பெரிதாக எழுதியதில்லை, ஆனால் உங்களின் அனுபவங்களில் எனக்கு பல Take Away. உங்களுக்கு கருத்து சொல்லும் அளவுக்கு நான் சத்தியமா க.கந்தசாமி இல்ல.

நீங்க தூத்துகுடிக்கு வந்ததுக்கு அப்புறம் உங்களுடன் பணி செய்தவர்கள் பற்றி எழுதும் போது அவர்களின் சாதியை நேரடியாக எழுதுவது சரியானது அல்ல என்று நினைக்கிறேன். I completely understand its quite normal to identify people based on their caste / religion in down south cities.

அதுவும் தவிர நீங்கள் இன்னும் வங்கியின் உயர் பதவியில் இருப்பது, உங்களை பற்றி ஒரு நிலை சார்ந்த (biased thoughts) எண்ணத்தை மற்றவர்களுக்கு உண்டாக்கலாம்.

நான் எதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்

tbr.joseph said...

வாங்க கார்த்திக்,

நான் எதாவது தவறாக சொல்லியிருந்தால் ...//

நீங்க சொன்னது எதுவுமே தப்பில்லீங்க. இனி கவனமாய் இருப்பேன்.