06 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 113

என்னுடைய மேலாளர் நண்பர் விடைபெற்று சென்ற பின்னர் என்னுடைய பொறுப்பேற்கும் பணியை தீவிரத்துடன் தொடர்ந்தேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் அவரும் அவருக்கு முன்பிருந்த மேலாளர் வழங்கியிருந்த கடன் கணக்குகள் சம்பந்தப்பட்ட எல்லா தஸ்தாவேஜுகளையும், அவற்றிற்கு ஈடாக வங்கியில் வைத்திருந்த சொத்துக்களையும் ஆராய்ந்து என்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நியதி.

அப்படி செய்யத் தவிறினால் அவர்கள் செய்து வைத்திருந்த சகலவிதமான குளறுபடிகளுக்கும் நானும் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டியிருந்தது.

முந்தைய மேலாளர் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு சென்ற மறுநாளே நான் சம்பிரதாயமாக பால் காய்ச்சி என்னுடைய மாமனார் குடும்பத்தினர் குழுமியிருக்க என்னுடைய குடியிருப்புக்கு மாறினோம்.

நான் சென்னையிலும் தஞ்சையிலும் கூடியிருந்த வீடுகள் சொர்க்கமென்றால் தூத்துக்குடி வீடு நரகமாயிருந்தது. முதலாவது எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதி அக்கட்டிடத்திலேயே மிகவும் பழைய, சரியாக பராமரிக்கப்படாத பகுதியாயிருந்தது.

இரண்டாவது வீட்டின் பிரம்மாண்டம். சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என வெவ்வேறு அறைகள் இருந்தாலும் எல்லாமே படா படா பெரியவை. ஒவ்வொன்றும் சுமார் ஆயிரத்தைநூறு சதுர அடிகளுக்கும் கூடுதலானவை. கூரையின் உயரத்தைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். அதில் தொங்கிக்கொண்டிருந்த மின்விசிறியைச் சுற்றிலும், கூரையின் மூலை முடுக்குகளிலும் நூலாம்படை படை, படையாக தொங்கிக்கொண்டிருந்தன.

கூரையின் உயரத்தை கணக்கிலெடுத்து பார்த்தால் அதை சுத்தம் செய்தாலும் சுத்தமாகவே வைத்துக்கொண்டிருப்பதென்பது நிச்சயம் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாகவே இருந்தது. சமையலறையை கேட்கவே வேண்டாம். சுமார் ஐம்பது வருடத்திற்கு முந்தைய பாணியிலிருந்த களிமண் அடுப்புகள் கொண்ட மேடை. கரிபிடித்து பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

என்னுடைய முந்தைய இரண்டு மேலாளர்களுக்குமே படித்து பட்டம் பெற்ற மனைவிமார்கள் இருந்தது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் இதில் எப்படி குடித்தனம் நடத்தினார்கள் என்று நானும் என் மனைவியும் அதிசயித்துப்போனோம்.

என்னுடைய மாமியாரோ அதைப் பார்த்தவுடனே, ‘இதுல எப்படிடீ நீ சமையல் பண்ணப் போறே?’ என்ற கேள்வியுடன் என் மனைவியைப் பார்த்தார்.

நான் உடனே குறுக்கிட்டு.. ‘இதுலயா? சமையலா? நீங்க வேற. இன்னும் ரெண்டே நாள். இந்த மேடையே இருக்கற எடம் தெரியாம இடிச்சி தள்ளிட்டுத்தான் மறுவேலை.’ என்றேன்.

என் மனைவி அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். ‘என்ன சொல்றீங்க? இதென்ன நம்ம சொந்த வீடா? வீட்டுக்காரங்க எங்க இருக்காங்க? அத கேட்டீங்களா?’

நான் கேலியுடன் அவரைப் பார்த்து சிரித்தேன். ‘ஓ! அது உங்கிட்ட சொல்லலே இல்லே. நா வந்ததுலருந்து பிராஞ்சுல நடந்த குழப்பத்துல வீட்ட பத்தி எங்க பேசறதுக்கு நேரம் கிடைச்சிது? இந்த வீட்டு ஓனரோட கதை ரொம்ப பெரிசும்மா. அத அப்புறமா சொல்றேன். அவரோட ஒய்ஃப் திருவனந்தபுரத்துல தன் மகளோட இருக்காங்களாம். இந்த வீட்லருந்து வெறும் வாடகை மட்டுந்தான் அவங்க வாங்கிக்க முடியுமாம். மத்தபடி இத விக்கறதுக்கோ, இல்ல இடிச்சிட்டு புதுசா கட்டறதுக்கோ அவங்களுக்கு உரிமை இல்லையாம். அதனால அவங்க இந்த பக்கம் வந்தே வருஷ கணக்கா ஆயிருச்சாம். அதனால நாம என்ன பண்ணாலும் சரி, ஒழுங்கா வாடகை மட்டும் அனுப்பிச்சா போறும். அத நாமளா குடுக்கப்போறோம்? பேங்குதானே? அதுமட்டுமில்லாம இந்த வீடு பேங்கா பார்த்து புடிச்ச வீடுதானே? இதுல என்ன ரிப்பேர் பண்ணாலும் அதயும் பேங்கே செஞ்சிரும். ஆனா நமக்கு முன்னாலருந்த ரெண்டு மேனேசருமே ஒரு ஒழுங்கீனமான ஆளுங்கதானே? பேங்க்ல பண்ணி வச்சிருக்கறமாதிரிதானே இங்கயும் பண்ணியிருப்பாங்க? அவங்கக்கிட்ட இத விட வேறெதையும் எதிர்பார்த்து பிரயோசனமில்லை. படிச்சிருந்து என்ன பிரயோசனம்?’

‘அது சரிங்க. நீ இத இடிச்சி தள்ளிட்டா நா எங்க வச்சி பொங்குறதாம்?’

நான் சிரித்தேன். ‘பயப்படாதே. இடிச்ச கையோடவே நாம கடைசியா இருந்த வீட்ல இருந்தா மாதிரியே வசதியா மேடையும் இந்த பக்கம் ஷெல்ஃபும் போட்டுரலாம். இந்த ஊர்ல கேஸ் டீலரும் நல்ல வேளையா நம்ம கஸ்டமர்தான். அவர்கிட்ட ஏற்கனவே நம்ம தஞ்சாவூர்லருந்து மாற்றி வந்த வவுச்சர குடுத்துட்டேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்துரும். நீ ஒன்னு பண்ணு. அந்த மேடையில நீ ஒன்னும் செய்ய வேணாம். இந்த டைனிங் டேபிள் மேல கேஸ் ஸ்டவ்வ வச்சி நாலஞ்சி நாளக்கு மேனேஜ் பண்ணு. அடுத்த திங்கள் கிழமைக்குள்ள மேடை செங்கல் வச்சி கட்டி பூசி தந்துடறேன்.’

உடனிருந்த என்னுடைய மாமனார் உடனே. ‘அத நா பாத்துக்கறேன் மாப்பிள்ளை. நம்ம வீட்ல வேல செஞ்ச கொத்தனார் இருக்கவே இருக்கார். அவர விட்டா ரெண்டே நாள்ல வேலய முடிச்சி குடுத்துருவார்.’ என்றார்.

நான் சந்தோஷத்துடன் தலையை அசைத்தேன். அவர் கூறியது போலவே அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் வேலையை முடித்துத்தர சமையலறை ஒரு வழியாக என்னுடைய விருப்பப்படி மாறியது.

இதற்கிடையில் கொத்தனார் வேலை நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய கீழ் வீட்டில் இருந்தவர் சப்தம் கேட்டு மேலே வந்து நாங்கள் செய்துக்கொண்டிருந்த வேலையைப் பார்த்துவிட்டு சந்தோஷத்துடன், ‘அப்பாடா. சார் உங்களுக்காவது இத செய்யணும்னு தோனிச்சே? அப்படியே பெட் ரூமயும் சரி பண்ணிருங்க சார். இது எல்லாத்துக்கும் வற செலவ நா எங்க மைனிக்கிட்டருந்து வாங்கி குடுத்திடறேன். போன ரெண்டு மேனேசருங்கக் கிட்டயும் பத்து தடவையாவது இதுல எப்படி சார் குடுத்தனம் பண்றீங்கன்னு கேட்டிருப்பேன்.’ என்றார்.

அடி சக்கை! அப்புறம் என்ன என்று, என் மனைவியை மீண்டும் என்னுடைய மாமனார் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அடுத்த இரண்டு வாரங்களில் வீட்டையே தலைகீழாக மாற்றிவிட்டு அவரிடம் பில்லை கொடுத்தேன். அவர் சிரித்தவாறே, ‘சார் எங்க மைனி இந்த பில்ல பார்த்ததும் ஒடனே ஓடி வந்து பாக்கப் போறாங்க பாருங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னால வந்து வீட்டோட நிலைமைய பார்த்துட்டு நொந்துப் போய் இனி இங்க வரவே போறதில்லைன்னு போனாங்க. இப்ப வந்து பார்த்துட்டு நானே இங்க குடி வந்திடறேன்னு சொன்னாலும் சொல்லிருவாங்க.’ என்றார் தமாஷாக. தொடர்ந்து, ‘பயந்திராதீங்க சார். அவங்க திருவனந்தபுரத்துல எங்களுக்கு சொந்தமாருக்கற ஸ்கூல் ஒன்ன நடத்திக்கிட்டிருக்காங்க. அவங்க எங்க வந்து குடியிருக்க போறாங்க?’ என்றார்.

உண்மைதான் காரைக்குடி செட்டியார்களைப் போலவே மண்டபம் மரைக்காயர் குடும்பம் பள்ளிகள், ஆசிரமங்கள் என பல தொண்டு நிறுவனங்களை நடத்திவந்த பெயர் பெற்ற குடும்பம். பல தலைமுறையாய் பெரும் செல்வந்தர்களானாலும் எளிமைக்கு பேர்போனவர்கள்.

என்னுடைய வீட்டின் கீழ்பகுதியில் குடியிருந்தவர் பெயரில் பத்து மோட்டார் படகுகள் சொந்தமாக இருந்தன. நாள்தோறும் அவருடைய பணியாட்களுக்கு மாத்திரம் பெரிய, பெரிய பாத்திரங்களில் சமைக்கப்படும் பிரியாணின் மணம் மேலே குடியிருந்த எங்களையே பெரிய சோதனைக்குள்ளாகிவிடும். சரியாக மாலை ஏழுமணியானால் அவருக்கு சொந்தமான பெரிய வேன் வந்து அத்தனைப் பாத்திரங்களையும் ஏற்றிக்கொண்டு மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்றுவிடும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

அலுவலகத்தின் பின் பகுதியிலேயே குடிபுகுந்ததும் எனக்கு அலுவலகம் நேரம், வீட்டிலிருக்கும் நேரம் என்ற ஒரு பாகுபாடே இல்லாமல் இரவு உணவு நேரம்வரை அலுவலகத்திலேயே இருப்பேன். என்னுடைய மனைவியும் அவருடைய வேலை முடிந்ததும் என் மகளைத் தூக்கிக்கொண்டு சைக்கிள் ரிக்ஷ¡வில் (அதற்காகவே மாத வாடகைக்கு ஒரு வண்டியைப் பிடித்து வைத்திருந்தேன்) ஏறி அவருடைய வீட்டுக்கு சென்றுவிடுவார். என்னுடைய அலுவலக வேலை முடிந்ததும், சில நாட்களில் இரவு பத்து மணிக்குமேலும் ஆகிவிடுவதுண்டு, என் வேலைகளை முடித்துவிட்டு அவருக்கு தொலைபேசி செய்தால் அதே ரிக்ஷ¡வில் கொழுந்தன் துணையுடன் வந்து இறங்குவார். பிறகென்ன? சாப்பிட்டுவிட்டு தூங்க வேண்டியதுதான்.

இப்படி அடுத்த ஒருவார காலம் நேரம் காலம் பாராமல் என்னுடைய முந்தைய இரு மேலாளர்களும் செய்து வைத்திருந்த அத்தனை கோளாறுகளையும் இறுதியில் பட்டியலிட்டு பார்த்தபோது தலையைச் சுற்றியது.

அவர்கள் இருவருமே நான் அறிந்தவரை நேர்மையானவர்கள்தான். அவர்களுடைய செயல்பாட்டில்தான் குறை இருந்தது. வீட்டையே ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாதவர்கள் அலுவலகத்தை எப்படி வைத்துக்கொண்டிருக்க முடியும்?

எனக்கென்ன ஆச்சரியம் என்றால் கடந்த நான்காண்டுகளாக வருடா வருடம் வந்து சென்ற ய்வாளர்கள் குழு (Inspection team) என்ன செய்தது என்பதுதான்.

சாதாரணமாக ஒரு கிளையைப் பொறுப்பேற்றவுடன் நாங்கள் பார்ப்பதற்கு அக்கிளையை ஆய்வு செய்த குழுவின் கடந்தகால அறிக்கைகளைத்தான். அதில் குறிப்பிடப்பட்டிருந்த குளறுபடிகளை மேலாளர்கள் சரிசெய்துவிட்டனரா? இல்லையென்றால் ஏன் செய்யவில்லை என்பதை மட்டும் பார்த்து குறித்துக்கொள்வோம். அந்த காலக்கட்டத்திற்கு பிறகு வழங்கப்பட்ட கடன்களை மட்டும் முழுமையாகஆராய்ந்து பார்த்து எங்களுடைய பொறுப்பேற்கும் அறிக்கையை (Taken charge report) மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம்.

எங்களுடைய அறிக்கையில் காண்பிக்கப்பட்ட குளறுபடிகளுக்கு சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது மேலதிகாரிகளுடைய பொறுப்பு. அவர்களுடைய விளக்கம் சரியில்லாத பட்சத்தில் விசாரணை, தண்டனை என்று தொடரும்.

ஆனால் கிளை பொறுப்பை ஏற்கும் பெரும்பாலான மேலாளர்கள் எதற்கு வீனாக நம்முடைய நண்பர்களைப் பற்றி புகார் எழுதுவது, முடிந்தவரை சரிசெய்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே எதையாவது செய்ய முயன்று அது விபரீதத்தில் முடிய மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

எனக்கு முந்தைய மேலாளரும் அதைத்தான் செய்ய முயன்றிருக்கிறார். அவருக்கு முந்தைய மேலாளரும் அவரும் ஒரே குழுவைச் சார்ந்தவர்கள் (Batch). ஒரே தேதியில் குமாஸ்தாக்களாக பணியில் சேர்ந்து ஒரே தேதியில் கிளை மேலாளர்களாக பதவியமர்ந்தவர்கள். அடுத்தடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமல்லாமல் இருவருமே நாடார் கிறிஸ்துவர்கள்.

என்னுடைய முந்தைய மேலாளரைக் காட்டிலும் அவருக்கு முந்தையவர் குளறுபடிகளின் மன்னர்! அவரும் பிற்காலத்தில் விசாரணைக்குட்பட்டு அப்போதிருந்த நிலையில் (Grade) இருந்து பதவியிறக்கப்பட்டு பாவம் இப்போதும் அதே நிலையில் இருப்பவர்.

இவர்களிருவரும் மேலாளர்களாகவிருந்த கிளையின் பொறுப்பை எடுத்த என்னுடைய நிலமையை சற்று எண்ணிப் பாருங்கள்..

இப்போது நினைத்தாலும் அந்த சங்கடங்களிலிருந்து நான் எப்படித்தான் மீண்டு என்னுடைய பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாமல் தப்பித்து வந்தேனோ என்று எண்ணிப் பார்க்கிறேன்..

எல்லாம் அந்த இறைவனுடைய கருணை என்றெல்லாமல் வேறென்ன?

தொடரும்..

7 comments:

அருண்மொழி said...

Mr. Joseph,

I have been reading your blogs regularly.

Offlate I noticed that you have started naming the castes openly (which you never did earlier).

Watchout, you are still in service.

arunmoli

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

Thank you so much for your concern.

I will be careful:-)

sivagnanamji(#16342789) said...

i second what arunmoli has said

துளசி கோபால் said...

இதுக்குத்தான் வீடும் ஆஃபீஸும் ஒரே கட்டிடத்துலே இருக்கக்கூடாது. உங்க மாமனார்
வீடு அந்த ஊர்லே இருந்ததாலே உங்க மனைவிக்கு நல்லதாப் போச்சு. இல்லேன்னா
சின்னப்புள்ளையோடு 'விக்விக்'னு தனியா எவ்வளோ போரடிச்சுருக்கும்?

tbr.joseph said...

வாங்க ஜி!

அருண்மொழிக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்.

I will be careful.

tbr.joseph said...

வாங்க துளசி,

சின்னப்புள்ளையோடு 'விக்விக்'னு தனியா எவ்வளோ போரடிச்சுருக்கும்?//

ஆமாங்க. அத ஏன் கேக்கறீங்க? தூத்துக்குடியாவது பரவால்லை. ஆனா மும்பையில மராத்திகாரங்க நடுவுல என் மனைவி பட்ட பாடு இருக்கே.. ஆறே மாசத்துல கொண்டு போய் சென்னையிலயே விட்டுட வேண்டியதா போச்சு.

Sivaprakasam said...

அது என்ன கிறித்துவ நாடார்கள்? இந்து நாடார்களிலிருந்து வித்தியாசம் காட்டவா? என்னமோ போங்க ஒண்ணும் விளங்கலை