05 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 112

அடுத்த நாள் காலை அலுவலகம் திரும்பிய நான் அங்கு குழுமியிருந்த பெண்கள், குழந்தைகள் கும்பலைப் பார்த்து திகைத்து நின்றேன்.

அவர்களைப் பார்த்ததுமே எனக்கு நான் பணியில் சேர்ந்த முதல் நாள் என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் என்னை மிரட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அவர் கூறியதுபோல் இது ஏதும் தர்ணாவோ என்ற அச்சத்துடன் குழுமியிருந்தவர்களைப் பார்த்தேன்.

ஆனால் அவர்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. குழுமியிருந்தவர்கள் எல்லோருமே நடுத்தர வயது பெண்கள், சில வயோதிகர்களும், சில பள்ளிப்பருவத்திலிருந்த பெண்களும், வெகு சில மாணவர்களும் காணப்பட்டனர்.

நான் முன்பு கூறியிருந்தது போல என்னுடைய வங்கி அமைந்திருந்த மரைக்காயர் மஹலின் முதல் மாடி பால்கனியே சுமார் எழுநூறு சதுர அடி பரப்புடன் மிக விசாலமானது. சுற்றிலும் இரும்பு கைப்பிடி கிராதியுடன் வெளியிலிருந்து பார்ப்பதற்கு கம்பீரமாக அந்த காலத்து அரண்மனைப் போல காட்சியளிக்கும். அத்தகைய பால்கனி முழுவதும் இவர்கள் அடைத்துக்கொண்டு நின்றதைப் பார்த்தபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள் என்று அனுமானித்தேன்.

அவர்களைக் கடந்து சென்றபோது எல்லோர் கையிலும் எங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கு பாஸ்புத்தகத்தையும் பார்த்தேன். ஆக, இவர்கள் என்னுடைய வாடிக்கையாளர்கள்தான், நிச்சயம் தர்ணா செய்ய வாய்ப்பில்லை என்ற நினைப்புடன் மேலாளர் அறைக்குள் நுழைந்தேன். மேலாளர் அறையில் இல்லை. கதவைத் திறந்துக்கொண்டு குமாஸ்தாக்கள் மற்றும் உதவி மேலாளர் அமர்ந்திருந்த கவுண்டருக்குள் நுழைந்தேன்.

உதவி மேலாளர் இருக்கையில் மேலாளரும் அடுத்திருந்த குமாஸ்தாவின் இருக்கையில் உதவி மேலாளரும் அமர்ந்திருந்தனர். நான் மேலாளரை நெருங்கி அவருக்கு பின்னால் நின்று பார்த்தேன். அவருடைய கையில் நீண்டதொரு லிஸ்ட் இருந்தது. அவர் அதிலிருந்து ஒவ்வொரு பெயராக வாசிக்க அருகில் அமர்ந்திருந்த உதவி மேலாளர் தன்னுடைய கையிலிருந்த க்ளியரிங் புத்தகத்திலிருந்தவற்றை டிக் செய்துக்கொண்டிருந்தார்.

அவர்களுடைய வேலையில் குறுக்கிட விரும்பாமல் அலுவலக நேரம் துவங்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்ததால் கிளையின் தலைமைக் குமாஸ்தாவும் காசாளரும் பால்கனியை அடுத்திருந்த வராந்தாவில் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை சைகைக் காட்டி அழைத்தேன்.

‘என்ன சார்?’ என்றவாறு வந்தவர்களிடம், ‘என்ன இங்க கூட்டம்? யார் இவங்க?’ என்றேன்.
காசாளர் உடனே, ‘இங்க குட் சமாரிட்டன்னு ஒரு ச்சாரிட்டி இருக்கு சார். அவங்கதான் இங்க கூடியிருக்கறவங்களோட ஸ்பான்சர்ஸ். இவங்க பிள்ளைங்க படிக்கறதுக்காக கனடாவுலருந்து ஸ்டைஃபண்ட் வருது. ஸ்கூல் ஃபைனல் வரைக்கும் படிக்கற மாணவர்களுக்கு மாசா மாசம் ரூ.250லருந்து ரூ750 வரைக்கும் வரும். ச்சாரிட்டி ட்ரஸ்ட்டோட அக்கவுண்ட் நம்ம பேங்க்ல இல்லே. க்ரிண்ட்லேஸ் பாங்க்லதான். அங்க பணம் வந்ததும் ஒவ்வொரு மாசமும் முதல் புதன்கிழமை நம்ம பாங்க்லருக்கற இவங்க அக்கவுண்ட்டுக்கெல்லாம் மாத்தி செக் குடுத்துருவாங்க. இவங்க அடுத்த நாளே வந்து எடுத்துக்கிட்டு போயிருவாங்க. இன்னைக்கி முதல் வியாழக்கிழமை இல்லையா? அதான் வந்துட்டாங்க. இன்னைக்கி நாம வேற ஒரு வேலையும் பாக்க முடியாது. நம்ம ரெகுலர் கஸ்டமர்ஸ் வந்தாக்கூட இவங்க கூட்டத்த பார்த்ததும் போயிட்டு அடுத்த நாள்தான் வருவாங்க.’ என்றார்.

‘அப்படியா? இதுனால நம்ம பேங்குக்கு ஏதாச்சும் லாபம் இருக்கா, இல்ல வேல மட்டுந்தானா?’ என்றேன்.

காசாளர் சிரித்தவாறு தலைமைக் குமாஸ்தாவைப் பார்த்தார். அவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். ஆனால் தமிழும் எழுத, பேச நன்றாக வரும். ‘நீங்க வேற சார். சுமார் இருநூத்தம்பது கணக்கு இருக்கு. ஒவ்வொன்னுலயும் ரூ.100 வச்சாக்கூட போறும். நாம செய்யற வேலைக்கு கூலி மாதிரியாவது இருக்கும். வைக்க மாட்டாங்க. அடுத்த நாளே எடுத்துக்கிட்டு போயிடறது மட்டுமில்லே சார். ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டாச்சுன்னா கூட பெரிய ரகளைப் பண்ணிருவாங்க. நாம குடுக்கற நோட்டுல ஒரு சின்ன பொத்தல் இருந்தாக்கூட எங்க வயித்துல ஏன்யா அடிக்கறீங்கன்னு பேசுவாங்க. ஏன் கேக்கறீங்க? இன்னைக்கி முழுசும் இருந்து பாக்கத்தான போறீங்க? எல்லாம நம்ம ------------------ சார் (இப்போதைய மேலாளருக்கு முந்தைய மேலாளர்) செஞ்ச வேலை. அவர சொல்லிக்குத்தமில்லை. அவர் அந்த டிரஸ்ட் அக்கவுண்ட் கிடைக்கும்னு பார்த்தார். ஆனா அவங்க நீங்க குடுக்கற ஃபாரெக்ஸ் ரேட் நல்லால்லைன்னுட்டு கிரிண்ட்லேஸ் பாங்க விட்டுட்டு வரமாட்டேன்னுட்டாங்க. அவன்களுக்கு டெப்பாசிட். நமக்கு வேலை.. இவரும் எப்படியாச்சும் கழட்டிவிட்டுரலாம்னு பார்த்தார். ஒன்னும் நடக்கலே. எந்த பேங்குமே இவங்க கணக்கே வேணாம்னுடறாங்களாம். டிரஸ்ட் மேனேசர் வந்து நீங்களும் க்ளோஸ் பண்ணிருன்னு சொன்னா பாவம் இவங்க எங்க சார் போவங்கன்னு அழறார். என்ன பண்றதுன்னு தெரியாம மாசா மாசம் இவங்கள கட்டிக்கிட்டு அழ வேண்டியதா இருக்கு.. உங்களாலயாச்சும் ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாருங்க சார்..’ என்றார் மூச்சுவிடாமல்.

அவர் கூறியதைக் கேட்டபோது சற்றே மிகைப்படுத்தி கூறுகிறாரோ என்று நினைத்தேன்.

அவர் கூறியதைவிடவும் மோசமாக இருந்தது அவர்களுடைய நடவடிக்கை. அவர்கள் எல்லோரையும் சமாளிப்பதற்காகவே மேலாளரும் அன்றைய தினம் உதவி மேலாளர் இருக்கையில் நாள் முழுவது அமர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது.

காலையில் ஒன்பதரை மணி துவங்கி மதியம் நான்கு மணி வரை அவர்களுடைய அலுவலை கவனிப்பதற்கே கிளையிலிருந்த மொத்த பணியாளர்களுக்கும் சரியாக இருந்தது. அன்று க்ளியரிங் ஹவுசிலிருந்து வந்திருந்த அனைத்து காசோலைகளும் கவனிப்பாரற்று கிடந்ததையும் பார்த்தேன். இவர்களுடைய வருகையை முன்கூட்டியே அறிந்திருந்ததால் என்னுடைய கிளையின் வாடிக்கையான வாடிக்கையாளர்களும்கூட அன்று வங்கிக்கு வராமல் இருந்ததைப் பார்த்தேன்.

மதிய உணவு இடைவேளையின்போதுதான் என்னுடைய மேலாள நண்பருக்கு ஓய்வு கிடைத்தது. நான் அவருடைய அறையிலமர்ந்து முந்தைய நாள் பார்த்து முடித்திருக்க வேண்டிய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, ‘பாத்தீங்களா ஜோசப் என்ன பாடுபட வேண்டியிருக்கு? இந்த கும்பல் வந்துட்டா போறும். ஒரு ரெண்டு மூனு நாளைக்கு நாம பாக்க வேண்டிய வேலையெல்லாம் அப்படியே நின்னுப்போயிரும். இதுல தமிழ் கொஞ்சங்கூட பேசத்தெரியாத ஒரு அசிஸ்டெண்ட் மேனேஜர போட்டுட்டு இந்த எச்.ஓ பண்ற அழும்பு வேற. இவர் பேசறதுக்கு அவன்களுக்கு புரியாது.. தூத்துக்குடிக்காரங்க பேசற பாஷை சில சமயத்துல நமக்கே புரிய மாட்டேங்குது. இதுல அவர் என்ன செய்வார் பாவம்? தெலுங்கு ஆசாமி. இக்கட, அக்கடன்னு என்னத்தையாவது பேசுவார். எல்லா தமிழ் வார்த்தைங்களோடயும் ‘உ’ன்னு ஒரு வார்த்தையையும் சேர்த்துக்கிட்டு அவர் பேசறத கேட்டா நமக்கே இவர் என்ன பேசறார்னு புரியாது. வர்றவங்களுக்கு எங்க புரியப் போவுது? மலையாளியானாக்கூட பரவாயில்லை. தமிழ் படிக்க வரலைன்னாலும் பேசினாலாவது புரிஞ்சிக்கலாம். இவருக்கு தமிழும் வராது, இங்க்லீசும் வராது. இங்க எல்லாமே பிரச்சினைதான் ஜோசப். சொந்த ஊருன்னு வந்துட்டீங்க. எந்த பிரச்சினையிலயும் மாட்டிக்காம இங்கருந்து போன சரிதான்.’

உமக்கு எதுதான்யா பிரச்சினையில்லை என்று நினைத்துக்கொண்டு மவுனமாயிருந்தேன்.

மாதம் ஒருநாள் அதுவும் அரை நாள், சந்திக்க வேண்டிய இந்த பிரச்சினைக்கே இப்படி மருகும் இவர் செய்து வைத்திருந்த குளறுபடிகளை சரிசெய்ய நாம் எத்தனை அவஸ்த்தைப் படவேண்டும் என்று நினைத்தேன்.

எங்கோ கண்காணாத தேசத்திலிருந்து நம்முடைய ஏழை மாணவர்கள் படிப்பதற்கென நல்ல மனம் படைத்த சிலர் மாதா மாதம் லட்சக்கணக்கில் அனுப்பிவைக்கும்போது அதை பட்டுவாடா செய்ய இவரும் இவருடன் பணிபுரிபவர்களும் இத்தனை சலிப்பு காட்ட வேண்டுமா என்று நினைத்தாலும் இதை சற்று ஒழுங்குபடுத்த வேண்டும் என்று குறித்துக்கொண்டேன்.

அன்றும் அதற்கடுத்த நாளும் அவருடன் சேர்ந்து இன்னும் சில வாடிக்கையாளர்களை - இம்முறை என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் - சந்தித்தேன்.

அவர்களுள் பலரும் என்னுடைய முதல் இரண்டு மேலாளர்கள் சார்ந்த நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களே என்பதை நான் குறித்துக்கொண்டாலும் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. இது முதலில் எனக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தினாலும் போகப் போக அதில் எந்தவித தவறும் இல்லை என்பதை உணர்ந்துக்கொண்டேன்.

மீன்பிடித்தொழிலில் எப்படி பரவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தார்களோ அதே போன்று உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, பலசரக்கு, மளிகை, தேங்காய் எண்ணெய் (தூத்துக்குடியின் மிகப் பிரபலாமான விவிடி தேங்காய் எண்ணெயை மறக்க முடியுமா? அதே போன்றுதான் ஏவிஎம் என்ற நிறுவனமும் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பிரசித்தம்.), நகை தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற வணிகத்தில் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களும், மற்ற பிற தொழில் மற்றும் வணிகத்தில் பிள்ளைமார் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இவற்றுள் பெருவாரியான வணிகத்தினர் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களே. தூத்துக்குடியின் மொத்த வணிகர் சமூகத்தை எடுத்துக்கொண்டால் நாடார் சமூகத்தினர் பாதிக்கு சற்று கூடுதலாகவும் மற்றவர்கள் மீதியும் இருந்தனர்.

அதனால்தானோ என்னவோ தூத்துக்குடியிலிருந்த தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டிருந்த வங்கிகளில் ஏறக்குறைய எல்லா வங்கிகளுடைய கிளைகளிலுமே நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களே மேலாளர்களாக இருந்ததைப் பார்த்தேன். தூத்துக்குடி மாவட்டத்திலேயே தலைமயகங்களைக் கொண்ட இரு வங்கிகள் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களால் அப்போது நடத்தப்பட்டு வந்தன.

ஆகவே என்னுடைய கிளையிலும் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களே அதிக அளவில் வணிகக் கடன் பெற்றிருப்பதில் எந்தவித அதிசயமும் இல்லை என்பதை நாளடைவில் உணர்ந்துக்கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை வங்கி அலுவலகத்தில் நுழைந்துவிட்டால் என்னை மேலாளர் என்ற முறையில் யார் அணுகி கடனுதவி கேட்டாலும் அவர்களுடைய வணிக தரத்தை மதிப்பிட்டு எங்களுடைய வங்கி நியதிகளுக்குட்பட்டு அவருக்கு கடனுதவி அளிக்க வாய்ப்பிருந்தால் செய்துக்கொடுக்க தயங்கியதே இல்லை.

என்னை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அந்த இறுதி இரண்டு நாளும் எந்தவித பிரச்சினையுமில்லாமல் கழிய என்னுடைய மேலாளர் நண்பரை அவ்வார இறுதியில் ஒரு பிரிவு உபசார விருந்து கொடுத்து சுமுகமாக அனுப்பி வைத்தேன்.

நானும் அவரும் சமவயது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள். ஆனால் அவர் ஒரு முதுநிலைப் பட்டதாரி. ஆகவே எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிகாரியானவர்.

வங்கி வணிகத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கி நியதிகளைக் காற்றில் பறக்கவிடுவது அவருக்கு சர்வசாதாரனம். தூத்துக்குடியில் அவர் செய்து வைத்திருந்த குளறுபடிகள் பல இருந்தும் அவரைப் பற்றி எந்த வாடிக்கையாளருமே தவறாக பேசாததால் நான் மேலிடத்தில் முறையிடாமல் அவற்றுள் பலவற்றை சரிசெய்தேன். ஆனாலும் தணிக்கை அதிகாரிகள் அவருடைய செயல்பாட்டைப் பற்றி தாறுமாறாக எழுதி வைத்துவிட்டு சென்றார்கள்.

அவர் அங்கிருந்து மாற்றலாகிப்போன கிளை தூத்துக்குடியைக் காட்டிலும் சற்று பெரியது. அங்கு சேர்ந்த முதல் இரண்டாண்டு காலத்தில் அவருடைய கிளையின் வணிகத்தை தூத்துக்குடியில் செய்தது போலவே இரட்டிப்பாக்கி சாதனை படைத்தார். இவருடைய செயல்பாட்டைப் பற்றி அதிகம் அறிந்திராத அப்போதைய வங்கியின் முதல்வரால் மேலாளர் கூட்டங்களில் பெருமையாகப் பேசப்பட்டார். அவர் இருந்த கிளையும் என்னுடைய கிளையும் ஒரே வட்டாரத்தைச் சார்ந்திருந்தது. என்னுடைய வட்டாரத்திலிருந்த அவ்வருடத்திய நட்சத்திர மேலாளர்களுள் அவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

ஆனால் அடுத்த றுமாதத்தில் அவர் கிளையில் நடந்த தணிக்கையில் அவர் வணிகத்தை கூட்டுவதற்கு கையாண்ட முறைகளில் இருந்த குளறுபடிகள் வெளியே வர விசாரணக்குட்படுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டு இன்றும் அன்று வகித்து வந்த அதே நிலையில் (Grade) இருக்கிறார். ஆனாலும் அதே பந்தா, அதே அலட்சியப் போக்கு தொடர்கிறது என்பதுதான் வேதனை.. இப்போதும் பார்த்தால், ‘நீங்க எப்படி மேல வந்தீங்கங்கறது எனக்கு தெரியாதாக்கும்’ என்பார் நக்கலாக..

என்ன செய்வது? சில ஜென்மங்கள் பட்டாலும் திருந்தாது என்று நினைத்துக்கொள்வேன்.

தொடரும்..

13 comments:

Krishna said...

இந்த மாதிரி ஆட்கள் வளர்ச்சி அடைந்தாலும் அது வீக்கம்தானேயன்றி, உயர்வு இல்லைதானே. வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி சார்.

துளசி கோபால் said...

ஏங்க அவுங்களும் ஏழைங்கதானே?
100 ரூபாய்ன்னா 100. அதுக்கு எத்தனை செலவு காத்திருக்கோ என்னவோ?

பொன்ஸ்~~Poorna said...

அந்த ட்ரஸ்ட் பணம் வாங்க வரும் மக்களை எப்படி ஒழுங்குபடுத்தினீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு சார்.. சீக்கிரம் சொல்லுங்க..

டி ராஜ்/ DRaj said...

தஞ்சாவூர் சமூக சேவையாளர் யாரும் மாதிரி பணத்தை முழுங்காம வேண்டியவங்களுக்கு அது கிடைத்ததே. அதுவே ஆச்சர்யம் தான் சார்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இந்த மாதிரி ஆட்கள் வளர்ச்சி அடைந்தாலும் அது வீக்கம்தானேயன்றி, உயர்வு இல்லைதானே//

அதைத்தான் இன்றைய அரசியல்வாதிகளின் உயர்விலேயே பார்க்கிறோமே. ஆட்சியாளர்கள்தான் வளர்கிறார்களே தவிர ஆட்சிசெய்யப்படுபவர்கள் அப்படியேதானே இருக்கிறோம்?

tbr.joseph said...

வாங்க துளசி,

வங்கி பணியாளர்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருப்பது பணமாகத் தெரியாது. வெறும் கணித எண்களாகவே தெரியும். ஆனால் வேறொன்றும் நீங்கள் பார்க்கவேண்டும். வங்கி சேவை என்பது பொதுநலத்தொண்டு சேவை இல்லை. அது ஒரு வியாபாரஸ்தலம். வங்கிகள் செய்யும் ஒவ்வொரு சேவைக்கும் Cost உண்டுதானே. அதைத்தான் அவர் நாம செய்யற வேலைக்காவது கூலி கிடைத்தால் போலாவது இருக்கும் என்றார்.

tbr.joseph said...

வாங்க பொன்ஸ்,

அந்த ட்ரஸ்ட் பணம் வாங்க வரும் மக்களை எப்படி ஒழுங்குபடுத்தினீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு சார்//

நிச்சயம் எழுதுகிறேன். அதற்கு டிரஸ்ட்டில் பணிபுரிந்தவர்களின் உதவியும் மிகவும் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் என்னுடைய யோசனையை அவர்கள் நிராகரித்தாலும் அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களாகவே இறங்கிவந்து ஒத்துக்கொள்ள எங்கள் இருவருக்குமே அது நல்ல தீர்வாக இருந்தது.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

தஞ்சாவூர் சமூக சேவையாளர் யாரும் மாதிரி பணத்தை முழுங்காம வேண்டியவங்களுக்கு அது கிடைத்ததே. அதுவே ஆச்சர்யம் தான் சார். //

தஞ்சையில் நடந்துக்கொண்டிருந்தது ஒரு தனிநபர் ஸ்தாபனம். அதில் அவரும் அவருடைய மனைவியும் வைத்ததுதான் சட்டம். ஆனாலு தூ..டி யில் இருந்தது ஒரு கண்ணியமான, சட்டத்துக்குட்பட்ட ஸ்தாபனம். அதுவும் நெல்லை CSI ஆயரின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கி வந்த ஒரு சேவை மையம்.

G.Ragavan said...

தூத்துக்குடீல முந்தி ஒரு பஸ்டாண்டுதான் இருந்திச்சி. அதுல பஸ் ஏறி குறுக்குச்சாலை (பாஞ்சாலங்குறிச்சி பக்கத்துல) வழியாப் போற எந்த ஊருக்குப் போகனும்னாலும் தூத்துக்குடி வி.வி.டி வழியாத்தாம் போகும். பஸ்சுக்குள்ள இருந்து பாத்தா பெரிய மந்தைல கொப்பரைகளக் காயப் போட்டிருப்பாங்க. ஜம்முன்னு வாசன மூக்கத் தொளைக்கும். அந்த வழியில போறது ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி சுப்பையா வித்யாலயம் பள்ளிக்கூடத்துக்கு முன்னாடியும் ஒரு எண்ண மில் இருந்திச்சி. அந்த வழியாப் போனாலும் ஜம்முன்னு தேங்காண்ண வாட தூக்கும்.

புதுக்கிராமத்துல கட வெச்சிருந்தவங்கள்ள பிள்ளைகள்தான் நெறையன்னு நெனைக்கிறேன். ஆனா பொதுவுல பாரதி ஸ்டோர் தர்மராஜ் நாடார் கடைன்னு மளிகைக் கடைகள் நாடார் இனத்தவர் கடைகளா இருக்கும். அதே போலத்தான் உப்பும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நிங்கதான் தூ..டி காரராச்சே. உங்களுக்கு தெரியாததா? ஆனா ஒன்னுங்க. நாடார் சமூகத்தினர மாதிரி உழைப்பு வேற யார்கிட்டவும் நான் பார்த்ததில்லை.

மணியன் said...

மிகவும் சுவாரசியமாக விவரிக்கிறீர்கள். அடிப்படை காரணங்களை சுட்டி சூழலை நன்கு விவரிப்பதால் உங்கள் அனுபவங்களை எங்களுடையதாக உணர முடிகிறது.

ஆமாம், ஏன் புகைப்படத்தை எடுத்து விட்டீர்கள்?

tbr.joseph said...

வாங்க மணியன்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

ஏன் புகைப்படத்தை எடுத்து விட்டீர்கள்?//

சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான். இனி மாதம் ஒரு முகமூடி அணிந்து வலம் வரலாம் என்று இருக்கிறேன்:-))

Ramasamy said...

DEAR T.P.R.JOSEPH
I ALSO AGREE WITH YOUR OPINIUN WHICH IS THE NADAR COMMUNITY ARE HARD LABOUR WITH FULL HEARTED ANDTHERE APPORCH ARE ALSO KNOWN EVERYBODYARE GOOD.
IAM A NEW READER OF YOUR EXPERIENCE IN YOUR ENNULAGAM AND VERY MUCH IMPREESIVE ABOUT YOUR TITLE THAT IS"ITHU ENNULAGAM MATTUMMALLA NAM ANAIVARUTHUM".,
RAMASAMY,
NEW READER.