04 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 111

தூத்துக்குடியின் பிரதான தொழில்களில் ஒன்று மீன்பிடித்தல் என்று முந்தைய பதிவுகளில் கூறியிருந்தேன்.

இதில் ஈடுபட்டிருந்தவர்கள் பரவர் எனும் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே பரதர் குலத்தைச் சார்ந்தவர்கள் முத்துக்குளிப்பதில் முனைப்பாயிருந்தவர்கள் என சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மீன்பிடித்தலும் இவர்களுடைய முக்கிய தொழில்களில் ஒன்றாயிருந்தது.

போர்ச்சுகீசைச் சார்ந்த ஃபிரான்சிஸ் சேவியர் என்ற கத்தோலிக்க பாதிரியார் 1540களில் இந்தியாவுக்கு வேதம் போதிக்க வந்தபோது கிறீஸ்துவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் இவர்கள். போர்ச்சுகீசியர்களிடையே பிரபலாமாகவிருந்த குடும்பப் பெயர்களை (surnames) மதமாற்றம் செய்யப்பட்ட பரவர்களுக்கும் இப்பாதிரியார் சூட்டினார்.

அவற்றுள் முக்கியமானவை ஃபெர்னாண்டோ, ஃபெர்னாண்டெஸ், பீரீஸ், கோமஸ், மச்சாது, ரோச்,  என்பவை. இப்பெயர்களைத் தாங்கிய எல்லாருமே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதல்ல. இவர்களுள் பலரும் கடந்த நானூறு ண்டுகளில் இடம்பெயர்ந்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல நகரங்களிலும் பரவி, படித்து, முன்னேறி இன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பலதரப்பட்ட நிலைகளில் உள்ளனர்.

ஃபிரான்சீஸ் சேவியர் தன்னுடைய வேதபோதகப் பணியில் இராமேஸ்வரம் துவங்கி கோவா வரை பயணித்து கடலோர மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பலரையும் மதமாற்றி அவர்களுக்கு தன்னுடைய நாட்டைச் சார்ந்த பெயர்களையே சூட்டியதாகவும் சரித்திரம் கூறுகிறது. ஆகவேதான் நான் மேலே குறிப்பிட்ட குடும்பப் பெயர்களைத் தாங்கியவர்களை கேரளம், மங்களூர் மற்றும் கோவா பகுதிகளிலும் காணமுடிகிறது.

என்னுடைய தந்தையாரின் குடும்பப் பெயர் ஃபெர்னாண்டோ, என்னுடைய தாயாரின் குடும்பப் பெயர் பீரீஸ். என்னுடைய மனைவியின் குடும்பப் பெயரும் ஃபெர்னாண்டோதான். என்னுடைய மாமியாரின் குடும்பப் பெயர் நத்தார். இதுபோலவே ராயர், பூபாலராயர், அடுத்தாரைக் காத்தார், கெய்த்தான் என்ற பெயர்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதில் வேடிக்கையென்னவென்றால் இப்போது படித்து நல்ல பதவிகளில் இருப்பவர்கள் தங்களுடைய குடும்பப் பெயரை வைத்து தங்களையும் மீனவர் வம்சத்தைச் சார்ந்தவர்களென பிறர் கருதிவிடுவார்களோ என்ற நினைப்பில் F.Dez, P.Rayan, Fdo என்று சுருக்கி வைத்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இன்று இக்குலத்தைச் சார்ந்தவர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும் இப்போதும் பரவர் என்றாலே தூத்துக்குடி பரவர் என்றுதான் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள்.

நான் மட்டுமல்ல என்னுடைய தந்தையும் தாயுமே சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களாதலால் - என்னுடைய தந்தை என்னுடைய தாய்க்கு தாய் மாமன். என்னுடைய தாத்தாவும் அவருடைய சகோதரர்களும் சிறுவயதில் இலங்கையில் கொழும்பு  படித்து வளர்ந்தவர்கள் -  எங்களுடைய குலத்தைப் பற்றி அவ்வளவாக நான் தெரிந்து வைத்திருக்கவில்லை.

என்னுடைய தந்தையும் என்ன காரணத்தாலோ எங்களுடைய குடும்பப் பெயரை எங்களுடைய பள்ளியிலும் பதிந்திருக்கவில்லை. கவே நானோ அல்லது என்னுடைய சகோதரர்களோ ஃபெர்னாண்டோ என்ற பெயருக்கு பின்னாலிருந்த பொருளை அறிந்திருக்கவில்லை.

எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் நாங்கள் இன்ன குலத்தைச் சார்ந்தவர்கள் என்ற விஷயமே எங்களுக்கு தெரியவந்தது. என்னுடைய மூத்த இரு சகோதரர்களுக்கும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த குடும்பங்களிலிருந்து பெண் எடுத்ததால் அப்போதும் இந்த விஷயம்  பெரிதாய் படவில்லை. என்னுடைய திருமணத்திற்கு தூத்துக்குடிக்கு சென்றபோதும் அதற்கு பெரிய முக்கியத்துவம் நானோ என் குடும்பத்தாரோ கொடுக்கவில்லை. என்னுடைய திருமண அழைப்பிதழிலும் கூட ஃபெர்னாண்டோ என்ற பெயர் என்னுடைய பெயருக்கு பின்னால் நான் சேர்த்துக்கொள்ளவில்லை.

என்னுடைய மாமனார் வீட்டு அழைப்பிதழைப் பார்த்ததும்தான் இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தூத்துக்குடியில் இருக்கிறதென்பதை ஓரளவு புரிந்துக்கொள்ள முடிந்தது. தான் இன்ன சமூகத்தை, இன்ன குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதை பறைசாற்றிக்கொள்வதில் தூத்துக்குடியினர் எவ்வளவு பெருமைக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் முழுவதுமாக புரிந்துக்கொண்டது அங்கு நான் மேலாளராக சென்றபோதுதான். ஏன் அதில் ஒருவகை வெறித்தனமும் இருந்ததென்றால் மிகையாகாது.

ஆகவே என்னுடைய மாமனார் என்னிடம் இதைப்பற்றி முதல் நாளே எச்சரித்தது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. என்னுடைய இரண்டாண்டு அனுபவத்தில் என்னிடம் பலரும் வந்து, ‘சார் நீங்க நம்மவங்கன்னு கேள்விபட்டேன். ரொம்ப சந்தோஷம் சார்.’ என்று கூறியபோது ஆரம்பத்தில் எனக்கு சலிப்பாயிருந்தாலும் அதை வைத்து யாருமே ஆதாயம் தேட முயலாதபோது எனக்கு அது பழகிப்போனது.

அச்சமூகத்தைச் சார்ந்தவர் எந்த ஒரு தொழிலையோ அல்லது வர்த்தகத்தையோ துவக்கியபோது அதன் திறப்புவிழாவுக்கு என்னை அழைப்பதென்பது வாடிக்கையாயிருந்தது. அதே போல அங்கிருந்த் பள்ளிகளுடைய விழாக்களில் கலந்துக்கொள்ளவும் எனக்கு தவறாமல் அழைப்பு வந்தது. நான் பணியில் சேர்ந்த அடுத்த மாதத்திலேயே என்னுடைய பங்கான தூய அந்தோணியார் ஆலய பங்கு பேரவையின் கவுரவ அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டபோதுதான் நான் சார்ந்த சமூகத்தினர் என்மீது எத்தனை அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பதை நான் உணர்ந்தேன். ‘அதாங்க நம்ம ஆளுங்களோட கொணம். உங்களுக்கு ஏதும்னா உயிரையும் கொடுக்கறதுக்கு அஞ்ச மாட்டாங்க.’ என்று என் மனைவி கூறியபோது அதை பொருட்படுத்தாத நான் நாளடைவில் அதன் பொருளை உணர்ந்துக்கொண்டேன். என்னை பரவர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்க அழைத்தபோது மட்டும் என்னுடைய பணியின் பொறுப்பை உத்தேசித்து மறுத்துவிட்டேன்.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் என்னுடைய அலுவலகத்தை அடைந்தபோது என்னுடைய மேலாளர் நண்பருடன் வேறொருவர் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அவர் புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் அப்போது தூத்துக்குடியில் பிரபலாமாயிருந்த மருத்துவர்களில் ஒருவர். அவருடைய மனைவியும் மருத்துவர்தான்.

என்னுடைய மேலாளர் நண்பர் என்னிடம், ‘ஜோசஃப் டாக்டர் நம்ம கிளை திறந்த நாளிலிருந்தே நம்முடைய வாடிக்கையாளர். இவர்தான் நான் உங்கக்கிட்ட அறிமுகப்படுத்த நினைச்சிருந்த முதல் வாடிக்கையாளர்.  இவரே இன்னைக்கி வருவார்னு எதிர்பார்க்கலை.’ என்றார்.

நான் உடனே அவரைப் பார்த்து, ‘உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் டாக்டர்.’ என்றேன்.

அவரும் சற்றே வெட்கத்துடன், ‘உங்க ஃப்ரெண்ட் சொல்றா மாதிரி நா ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை மிஸ்டர் ஜோசஃப். நானும் என் மனைவியும் தூத்துக்குடியில் க்ளினிக் செட்டப் பண்றதுக்கு ஃபண்ட்சுக்காக எங்கெங்கெயோ அலைஞ்சி கிடைக்காம முளிச்சிக்கிட்டு நின்னப்போ உங்க ப்ராஞ்ச் திறக்க வந்த மேனேசர்தான் கூப்டு நா தரேன்னு சொல்லி ஹெல்ப் பண்ணார். கடைசியில பார்த்தா அவரும் நம்ம ஊர்க்காரராயிட்டார். தோனாவூர்லருந்து வந்த ரெண்டு பேரும் எதிர்ப்பார்க்காம இந்த ஊர்ல சந்திச்சிக்கிட்டோம். அப்புறம் அம்பாசமுத்திரக்காரரான இவர் வந்தார். நட்பு விடாம தொடர்ந்திருச்சி. இதுல இன்னொரு விசேஷம். இவரும் சரி, இவருக்கு முன்னால இருந்தவரும் சரி சி.எஸ்.ஐ னதுனால ஒரே சர்ச்சுக்குத்தான் போறோம். அதுவும் எங்களோட நட்புக்கு ஒரு காரணம்னு சொல்லலாம்.’ என்றவாறு உரக்கச் சிரித்தார்.

அவர் சொல்லாமல் விட்டது அவரும் என்னுடைய முந்தைய இரண்டு மேலாள நண்பர்களும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான். அதை அவர் சென்றபிறகு என்னுடைய மேலாளர் நண்பர் பெருமையுடன் கூறிக்கொண்டார். அதாவது என்னுடைய குலத்தைச் சார்ந்தவர்கள்தான் நம் கிளையுடைய முக்கியமான வாடிக்கையாளர்கள் என்று மறைமுகமாக என்னிடம் கூறுகிறாராம்!

அத்துடன் நிற்காமல் ‘உங்க ஆளுங்க சம்பாத்தியத்த முழுசும் சாப்டதுபோக, நகையிலயும், துணிமனிகள்லயும்தான் போடுவாங்களே தவிர பேங்க்ல அஞ்சி பைசா போட வரமாட்டாங்க ஜோசஃப்.’ என்று அவர் கமெண்ட் வேறு அடித்தபோது நான் என்ன சொல்வதென தெரியாமல் வாளாவிருந்தேன்.

ஆக, படித்து பதவிகளில் இருந்தவர்களும் கூட சாதி, மதம், இனம் என்றுபார்த்துத்தான் உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதையும் தூத்துக்குடியில் வைத்துத்தான்  நான் அறிந்துக்கொண்டேன்.

அன்று வர்த்தக நேரம் முடிந்தவுடன் என்னுடைய மேலாளர் நண்பர் என்னை அழைத்துக்கொண்டு எங்களுடைய கிளையின் முக்கிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திக் கொடுத்தார்.

அதில் தூத்துக்குடியின் கத்தோலிக்க மத ஆயர் (இவர் நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து பிறகு ஆயராக உயர்த்தப்பட்டவர்), பல்நோக்கு சமூக சேவை மையம் (தஞ்சையிலிருந்ததைப் போன்றது), முதியோர் இல்லம், தொழுநோயாளர்களுடைய மறுவாழ்வு இல்லம், மூன்று ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் (இதுவும் தூத்துக்குடி நகரத்தின் முக்கியமான வணிகங்களுள் ஒன்று) தலைவர்கள், என பல வாடிக்கையாளர்களை சந்தித்தேன்.

இவற்றுள் முதியோர் இல்லத்துடனான என்னுடைய உறவு அலுவலக உறவையும் கடந்து இன்றும் தொடர்கிறது. அவ்வில்லத்துடனான என்னுடைய உறவு என்னுடைய அலுவலக வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகவும் மனநிறைவளித்த உறவாகும். அதே போன்றுதான் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லமும். இவ்விரு இல்லத்திலும் கன்னியர்களின் சேவையின் மகத்துவத்தை நேரில் கண்டு வியந்துநின்றவன் நான். இத்தகையோர் இருப்பதால்தானோ என்னவோ இவ்வுலகத்தில் சந்தோஷமும், சமாதானமும் இன்னும் இருக்கின்றன.

அன்று மாலை சுமார் ஏழுமணிக்கு அலுவலகத்திற்கு திரும்பிச் சென்றபோது அலுவலகத்தில் யாருமில்லாததால் நான் உடனே விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை அலுவலகம் திரும்பிய நான் அங்கு குழுமியிருந்த பெண்கள், குழந்தைகள் கும்பலைப் பார்த்து திகைத்து நின்றேன்.

தொடரும்..

17 comments:

-/பெயரிலி. said...

/நான் மட்டுமல்ல என்னுடைய தந்தையும் தாயுமே சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களாதலால் - என்னுடைய தந்தை என்னுடைய தாய்க்கு தாய் மாமன். என்னுடைய தாத்தாவும் அவருடைய சகோதரர்களும் சிறுவயதில் இலங்கையில் கொழும்பு படித்து வளர்ந்தவர்கள் - எங்களுடைய குலத்தைப் பற்றி அவ்வளவாக நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. /

இலங்கையின் நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் பகுதியின் பரதவர்களின் நிலை, அவர்கள் தமிழே தெரியாமல் சிங்களவர்களாகத் தம்மை அடையாளம் காட்டுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றது.

டி ராஜ்/ DRaj said...

//உங்க ஆளுங்க சம்பாத்தியத்த முழுசும் சாப்டதுபோக, நகையிலயும், துணிமனிகள்லயும்தான் போடுவாங்களே தவிர பேங்க்ல அஞ்சி பைசா போட வரமாட்டாங்க ஜோசஃப்//

அவரு இப்படி பேசறது கொஞ்சம் ஓவர் தான் சார்.
நமக்கு விருப்பமிருக்கோ இல்லையோ நம்ம சாதிய வைச்சே சில அனுமானங்களுக்கு மற்றவர்கள் வந்திடறாங்க. இதுல என்ன கொடுமைன்னா, சில நேரம் இவங்க நம்மளோட சாதிய தப்பா ஊகிச்சு வைச்சுக்கிறது தான்.

டி ராஜ்/ DRaj said...

அது சரி, ஏன் சார் ப்ரோஃபைலில இருக்கிற போட்டோவ மாத்தினீங்க??

துளசி கோபால் said...

ஜாதி, இனம் இந்த பற்று எல்லாம் அப்படியே ரத்தத்துலே ஊறிப்போயிருதுல்லே பலருக்கு.

ஆமாம், உங்க புது ஃபோட்டோ நல்லா இருக்கே:-)

dfdffd said...

சார்,

உங்கள் சமுதாய மக்கள் ( உங்கள் சாதி மக்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) சமுதாயத்தில் ஒரு முன்னேறாத நிலையில் இருந்தால் அவர்களுடன் நீங்கள் கலந்து உங்களை அவர்களில் ஒருவராக உணர வைத்தால் அதில் தப்பே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

இது பல வகையில் அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

Krishna said...

துளசி மேடத்தோட குறும்பைப் பார்த்தீங்களா! உங்க போட்டோவையே போடுங்க சார்

tbr.joseph said...

வாங்க பெயரிலி,

இலங்கையின் நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் பகுதியின் பரதவர்களின் நிலை, அவர்கள் தமிழே தெரியாமல் சிங்களவர்களாகத் தம்மை அடையாளம் காட்டுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றது. //

அப்படியா? ஆனால் இன்னமும் கொழும்பில் என்னுடைய தாத்தாவின் சகோதரர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தாரோடு வசதியாக இருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தகைய தமிழர்கள் உலகில் பலவிடங்களிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

அவரு இப்படி பேசறது கொஞ்சம் ஓவர் தான் சார்.//

சரி இன்னொன்னும் சொல்றேன். நான் சீஃப் மேனேஜர் பதவியிலிருந்து ஏ.ஜி.எம் பதவி உயர்வு நேர்காணலுக்கு சென்றுவிட்டு வந்திருந்தேன். முடிவுகள் இன்னும் வெளியாகிருக்கவில்லை. அப்போது என்னுடைய வங்கியின் முதல்வராக இருந்தவர் ஒரு தமிழர். பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவர். நேர்காணலில் கலந்துக்கொண்டவர்களின் performancஐ முதல்வர் மற்றும் சீனியர் இயக்குனர்கள் கலந்தாலோசித்து யாருக்கு பதவிஉயர்வு அளிக்கலாம் என்று கூட்டம் கூடி தீர்மானிப்பார்கள். அந்த கூட்டத்தில் என்னுடைய முதல்வர் என்னுடைய பெயரை படிக்கப்பட்டதும் என்னுடைய சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு 'அவன் இந்த அளவுக்கு வந்ததே ஜாஸ்தி. He doesn't deserve further promotion. என்றாராம். அதற்கு மகாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த இயக்குனர் கோபத்துடன் Sir, please. If he is good he gets the promotion. Nothing else should be looked into. என்றாராம்.

அப்படி கிடைத்ததுதான் என்னுடைய ஏ.ஜி.எம் பதவி உயர்வு. நல்லவேளை. என்னுடைய டி.ஜி.எம் பதவி உயர்வு நேரத்திற்கு முன்பே அந்த முதல்வருடைய பதவி பறிபோனது..

tbr.joseph said...

ராஜ்..

ஏன் சார் ப்ரோஃபைலில இருக்கிற போட்டோவ மாத்தினீங்க?? //

ச்சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான். இளமையா இருக்கட்டுமேன்னு..

tbr.joseph said...

வாங்க துளசி,

ஜாதி, இனம் இந்த பற்று எல்லாம் அப்படியே ரத்தத்துலே ஊறிப்போயிருதுல்லே பலருக்கு.//

நல்லவேளை அந்த ரத்தத்தோட கலர் எல்லாருக்கும் ஒரே மாதிரி கடவுள் வச்சிட்டார். இல்லன்னா கலர வச்சே இது இன்ன சாதிக்காரனோட ரத்தம். எனக்கு இவன் ரத்தம் வேணாம்னு சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல..

உங்க புது ஃபோட்டோ நல்லா இருக்கே:-)//

குறும்பு?

tbr.joseph said...

வாங்க பொதுஜனம்,

அவர்களுடன் நீங்கள் கலந்து உங்களை அவர்களில் ஒருவராக உணர வைத்தால் அதில் தப்பே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.//

தப்பில்லைதான். சங்கத்தில் பொறுப்பு ஒன்றையும் எடுத்துக்கொள்ளவில்லையே தவிர அவர்களுடைய சங்க கூட்டத்திற்கு தூ.டி இல் இருக்கும்போதும் அங்கிருந்து மதுரைக்கு மாற்றலாகிச் சென்றபோதும் தவறாமல் செல்வேன். என்னுடைய அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்தும் கொள்வேன். ஆனால் ஏதாவது பெரிதாக பயன் ஏற்பட்டிருந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னைக்கு வந்ததும் அதை அப்படியே விட்டுவிட்டேன்..

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

துளசி மேடத்தோட குறும்பைப் பார்த்தீங்களா! உங்க போட்டோவையே போடுங்க சார் //

துளசியோட குறும்பு ஊரறிஞ்சதாச்சே.. கொஞ்ச நாளைக்கு இதுவே இருக்கட்டும்.. எனக்கென்னவோ இந்த கிராஃபிக் ஸ்மார்ட்டா இருக்கா மாதிரி தெரியுது..ஹி..ஹி..

G.Ragavan said...

சார்...சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. பெரியாரின் தாக்கத்தில்தான் தமிழர்கள் தங்கள் சாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை விட்டார்கள். அது நல்லதுக்கே என்பது எனது கருத்து. ஒருவருடைய பெயரை வைத்து சாதியைக் கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக.

தூத்துக்குடியில் இந்தச் சாதி விருப்பம் ரொம்பத்தான். நானும் நெறைய பாத்திருக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிக்கும் போதும் பட்டிருக்கிறேன். எல்லா வாத்தியார்களையும் கொறை சொல்லல. ஆனா ஒரு சிலர் மோசந்தான். இந்த மாதிரி ஆளுக எல்லா இடத்துலயும் இன்னமும் இருக்காங்கங்கறதுதான் வேதனையே.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நீங்க சொல்றது ரொம்ப சரி. நான் இதுவரை பணியாற்றியுள்ள இடங்களில் சாதியை வைத்து மாணவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்வதை தூ..டி யில்தான் பார்த்திருக்கிறேன். சாதிப் பெயரை வைத்தே பள்ளிகள் இருந்ததையும் அங்குதான் பார்த்தேன். எனக்கு மட்டுமல்ல என் பிள்ளைகள் இருவருக்குமே பெயருக்கு பின்னால் குடும்பப் பெயரை சேர்க்கக்கூடாது என்று நான் முடிவெடுத்ததும் அங்கிருந்தபோதுதான்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
தூத்துக்குடியில் சாதி நிலை பற்றியும் ,பரவர்களிடையே உள்ள பெயர்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது .நன்றி!

bharathar said...

Fernando, Gomez என்பவை குடும்பப் பெயர்களே. அவை ஜாதிப்பெயர்கள் அல்ல. பரதர் (அ) பரவர் என்பதே ஜாதிப்பெயர்.

எனவே Fernando, gomez etc., (Total 52) பெயருக்குப்பின்னால் சேர்ப்பது ஒன்றும் குற்றமாகாது.

tbr.joseph said...

வாங்க பரதர்,

எனவே Fernando, gomez etc., (Total 52) பெயருக்குப்பின்னால் சேர்ப்பது ஒன்றும் குற்றமாகாது.//

நான் அது ஒரு குற்றம் என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா என்ன?

நான் சேர்த்துக்கொள்ளவில்லை என்று மட்டும்தானே சொல்லியிருக்கிறேன். என்னுடைய பிள்ளைகள் இருவரும் கூட சேர்த்துக்கொள்வதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

அது என்னவோ வேண்டாம் என்று தோன்றியது. அவ்வளவுதான்.