03 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 110

அன்று காலையில் என்னுடைய கிளைக்கு வந்து என்னையே பகிரங்கமாக குறை கூறிவிட்டு சென்ற வாடிக்கையாளர்!

நல்லவேளை, நான் வீட்டிற்குள் நுழைந்ததை அவர் பார்க்கவில்லை.

வாசலில் நுழைந்ததுமே என்னுடைய வாடிக்கையாளர் வரவேற்பறையில் அமர்ந்திருந்ததைக் கண்ட நான் உள்ளே சென்று அவரை சந்திப்பதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் திரும்பி வீட்டுக்கு வெளியே சென்று அடுத்த வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கு இருந்தவர் என்னுடைய மாமனாருடைய குடும்ப நண்பரானதால் அவருடன் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் ஒன்று விட்ட சகோதரர். அவரைப் போலவே வேடிக்கையாகப் பேசக்கூடியவர். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

அவருடைய வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய பத்து வயது மகனை அழைத்து என்னுடைய மனைவியை மாடிக்கு வருமாறு கூறச்சொல்லிவிட்டு நான் மீண்டும் என்னுடைய மாமனார் வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்திருப்பவர்கள் என்னை காண்பதற்கு முன் வீட்டு முற்றத்திலிருந்த முதல் மாடிக்கான படிகளில் ஏறி சென்றுவிட்டேன்.

மாடியிலேயே குளியலறையும் இருந்ததால் உடைமாற்றி குளித்து முடித்தேன். மேலே வந்த மனைவி பதற்றத்துடன் காணப்பட்டார். என்னைக் கண்டதுமே, ‘என்னங்க நீங்க வந்த முதல் நாளே வில்லங்கம் பண்ணியிருக்கீங்க? உங்கள பார்த்து பேசறதுக்காகத்தான் பரவர் சங்கத்து ஆளுங்க கீழ வந்து காத்துக்கிட்டிருக்காங்க. நீங்க பாட்டுக்கு மேல வந்துட்டீங்க?’ என்றார்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுமையாக இருந்தேன். ‘இங்க பார். அவர் என்ன கேக்கணுமோ கேட்டுட்டார். நானும் என்ன சொல்லணுமோ சொல்லிட்டேன். இப்ப இங்க எதுக்கு வந்திருக்கார்? இதுல உங்கப்பாவுக்கு என்ன வேலை?’

‘அட நீங்க வேற. எங்கப்பாவும் சங்கத்துல முக்கியமான பொறுப்புல இருக்காருங்க. அதனாலதான் அவர தலையிட்டு சமரசம் செஞ்சு வைங்கன்னு கேட்டுக்கறதுக்கு வந்திருக்காங்க. சங்கத் தலைவர் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாராம். நீங்க தயவு செஞ்சி கீழ வந்து உக்காருங்க. பிரச்சினையை தீர்த்து முடிச்சிருவோம். இல்லன்னா நாளைக்கு உங்க ப்ராஞ்சு முன்னால வந்து வில்லங்கம் பண்னாலும் பண்ணுவாங்க.’

நான் யோசித்துப் பார்த்தேன். என் மனைவி சொல்வது சரியாயிருக்கலாம். சங்கத்து தலைவர் வந்து என்ன சொல்கிறார் என்று பார்த்து முடிவெடுக்கலாம். நான் அன்று காலையில் கடன் கணக்குகளை சோதனையிட்டுக்கொண்டிருக்கையில் என்னுடைய முந்தைய மேலாளர், அதாவது இப்போது இருப்பவருக்கு முன்பு இருந்தவர், வழங்கியிருந்த சுமார் ஐந்தாறு படகு கடன்கள் சரிவர அடைக்கப்படாமல் இருந்ததைப் பார்த்திருந்தேன். இன்றைய சந்திப்பு ஒருவேளை அவற்றை வசூலிக்க வழிசெய்யலாம்.

என்னையே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்தேன். ‘சரி. நான் கீழ வரேன்.ஆனா இப்ப இல்லை. அவங்க தலைவர் வந்ததுக்கப்புறம்.’

சிறிது நேரம் குழப்பத்துடன் என்னை பார்த்த என் மனைவி, ‘சரிங்க.ஆனா ஒன்னு.’ என்றார்.

‘என்ன சொல்லு.’

‘எங்க அப்பா சொன்னாங்கறதுக்காகவோ அல்லது சங்கத்து ஆளுங்க சொன்னாங்கறதுக்காகவோ உங்களுக்கு விருப்பமில்லாத காரியத்த செய்யமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா தயவுசெஞ்சி அத ப்ளண்டா எல்லார் முன்னாலயும் சொல்லி டென்ஷன க்ரியேட் பண்ணிராதீங்க. உங்களால முடியாதுங்கறதக்கூட டிபளமாட்டிக்கா சொல்லுங்க. ப்ளீஸ்.’

எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் ஒரு நொடி என் மனைவியையே பார்த்தேன். பிறகு, ‘சரி. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ போய் தலைவர் வந்ததும் சொல்லியனுப்பு. போ.’ என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு என்னுடைய அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த நோட்டுப்புத்தகத்திலிருந்த திருப்பி அடைக்கப்படாமல் இருந்த கடன் கணக்குகளின் விவரத்தை குறித்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் மாடிப்படியின் கீழிருந்து அழைத்த என் மனைவியின் குரல் கேட்டு நான் குறித்துக்கொண்டு வைத்திருந்ததை கையில் எடுத்துக்கொண்டு கீழே சென்றேன்.

வரவேற்பறையில் என்னுடைய வாடிக்கையாளரையும் சேர்த்து சுமார் ஐந்தாறுபேர் இருந்தனர். அவர்களுடன் என்னுடைய காசாளாரையும் கண்ட நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். அவரோ என்னுடைய பார்வையை தவிர்ப்பதிலேயே குறியாயிருந்தார்.

என்னுடைய மாமனார் எழுந்து என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். என்னுடைய வாடிக்கையாளர் மட்டும் என்னைக் கண்டுக்கொள்ளவேயில்லை. அன்றைய சந்திப்பு பிரச்சினையில்தான் முடியப்போகிறது என்னுடைய உள்ளுணர்வு கூறவே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்து தலைவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவரையே பார்த்தவாறு இருந்தேன்.

என்னுடைய மாமனார் என்னையும் என்னுடைய வாடிக்கையாளரையும் மாறி, மாறி பார்த்துவிட்டு தலைவரைப் பார்த்து, ‘என்ன தலைவரே பேசாம இருந்தா எப்படி? நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க.’ என்றார்.

தலைவர், ‘என்னை என்னத்தைய்யா சொல்லச் சொல்றீங்க? நம்ம கோமஸ் தம்பி (என்னுடைய காசாளருடைய குடும்பப் பெயர். இந்த குடும்பப் பெயரைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.) என் வீட்டுக்கு வந்து பேங்குல நடந்ததப் பத்தி சொன்னப்ப எனக்கு வெக்கமாப் போயிருச்சி. நம்ம ------------ (என்னுடைய வாடிக்கையாளர்) நடந்துக்கிட்டது சரியில்லைன்னுதான் தோனுது.’

என்னுடைய வாடிக்கையாளர் கோபத்துடன் குறுக்கிட்டார். ‘என்ன தலைவரே சொல்றீய? நீங்க இங்க வந்தது இதச் சொல்றதுக்கா? அப்போ எனக்கு ஏற்பட்ட நஷ்டம்? அதுக்கென்ன சொல்றீய?’

எனக்கும் அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. நான் எதிர்பார்த்ததற்கு நேரெதிராக நடப்பதைப் பார்த்தவாறு குழம்பிப்போய் சரி என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் என்று அமைதியாக அமர்ந்திருந்தேன்.

‘இங்க பார் -------------------. நீ செஞ்சதுக்கு பேரு அடாவடித்தனம். போட்டு உன்னோடது. இன்சூரன்ஸ் இருக்குன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்னு சொல்லி நீ பேங்கு மேனேசர வேணும்னா ஏமாத்த பாக்கலாம். ஆனா சங்கத்துலருக்கற எல்லாருக்குமே நீ அந்த விஷயத்துல எப்படின்னு தெரியும். அதனாலதான் சொல்றேன் நீ பண்ணது அடாவடித்தனம்னு. தப்பு உன்மேலத்தான்னு தெரிஞ்சிருந்தும் பேங்குல போயி சார் நம்ம ----------------------ஐயாவோட மருமகன்னு தெரிஞ்சிருந்தும் எல்லார் முன்னாலயும் அவர மோசமா பேசிட்டு வந்திருக்கே. நீ பேசினத அவர் வேணும்னா பொறுத்துக்கிட்டு போயிருக்கலாம். ஆனா அவர் கீழ வேல செய்யற நம்ம கோமஸ் தம்பி பொறுத்துக்க முடியாம நேர என்கிட்ட வந்து சொன்னார். இல்லன்னா நீ என்கிட்ட ஃபோன்ல சொன்னத வச்சி நானும் தப்பான முடிவுக்கு வந்திருப்பேன். இப்ப நா இங்க வந்தது உன் விஷயத்த சார்கிட்ட பேசறதுக்கில்ல. நீ எங்க எல்லார் முன்னாலயும் நீ இன்னைக்கி நடந்துக்கிட்ட மொறைக்கு சார்கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதச் சொல்றதுக்குத்தான் நா இங்க வந்தேன்.’

நான் என்னுடைய காசாளரை நன்றியுடன் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து லேசான புன்னகையுடன் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார்.

என்னுடைய வாடிக்கையாளர் வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டார். நானும் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்காமல் அவர் என்னை நோக்கி நீட்டிய கரத்தைப் பற்றி குலுக்கினேன். அவரோ அடுத்த நொடியே எழுந்து யாரிடம் விடைபெற்றுக்கொள்ளாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார். அவருக்கு பின்னாலேயே அவருடன் வந்திருந்தவர்களுள் ஓரிரண்டு பேரும் எழுந்து சென்றனர்.

ஆனால் தலைவர் அதை பொருட்படுதாமல். ‘அவனப்பத்தி நீங்க கவலைப் படாதீங்க தம்பி. அவன் அப்படித்தான். பத்து போட்டுக்கு முதலாளிங்கற திமிர்ல இப்படி ஏதாச்சும் செஞ்சிக்கிட்டேதான் இருக்கான். கொஞ்ச நாளாவே அவனோட போக்கு சரியில்லை. அவனோட அப்பா சங்கத்துல ஒருகாலத்துல முக்கியமான ஆளா இருந்ததுனால இவன் செய்யறதையெல்லாம் அவருக்காக பொறுத்துக்க வேண்டியிருக்கு.’ என்ற தலைவர் என்னுடைய மாமனாரிடம், ‘நீங்களும் இத மனசுல வச்சிக்காதீங்க. அவனால இனி உங்க மருமகனுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதுக்கு நா பொறுப்பு.’ என்றார்.

என்னுடைய மாமனார் பதிலொன்றும் பேசாமல், ‘சரிய்யா. நீங்க பேசிக்கிட்டிருங்க’ என்றவாறு அவருடைய அறைக்குள் சென்றுவிட்டார்.

நான் குறித்து வைத்திருந்த கணக்குகளைப் பற்றி தலைவரிடம் கூறி அவற்றை வசூலிக்க உதவும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நான் அளித்த விவரங்களைக் குறித்துக்கொண்டு கண்டிப்பா அவங்கக்கிட்ட பேசறேன் தம்பி என்று உறுதியளித்தார். பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டுச் செல்லும்போது, ‘தம்பி நீங்க நம்ம சங்கத்துல வந்து ஒரு நாள் பேசணும். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஐ.ஓ.பி பேங்குல உங்களமாதிரி நம்ம சாதிய சேர்ந்த மேனசரு இருந்தாரு. அவர் வந்தப்புறம்தான் நம்ம ஆளுங்களுக்கு போட்டுக்கு கடன் கொடுக்கறதுக்கு நிறைய மேனசருங்க முன்வந்தாங்க. நீங்க சொன்னா மாதிரி கொஞ்ச பேர் கடன திருப்பி அடைக்கமாட்டேங்கறாங்க. ஆனா எல்லாரும் அப்படியில்லே. சரியான நேரத்துல எங்கக்கிட்ட வந்து சொன்னீங்கன்னா நாங்களே முன்ன நின்னு லோன பிரிச்சி குடுத்துருவோம். அதனால அதப்பத்தி கவலப்படாம நீங்க இருக்கப்போற மூனு வருஷத்துல உங்களால முடிஞ்ச அளவு போட்டுக்கு லோன் குடுக்கணும் தம்பி.’ என்றார்.

நான் சரி என்பதுபோல் தலையை அசைத்தேன். ‘எங்க பேங்கோட வரைமுறைக்கு ஒத்துவந்தா என்னால முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா செய்யறேன். ஆனா கடன் வாங்க வரவங்க சாதிய பாத்தெல்லாம் என்னால கொடுக்க முடியாது. தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்றவாறு அறையில் ஒரு மூலையில் நின்றுக்கொண்டிருந்த என் மனைவியை பார்த்தேன். அவர் 'ஐயோ இது வேணுமா?' என்பதுபோல் சைகைக்காட்டுவதைப் பார்த்துவிட்டு நிறுத்திக்கொண்டேன்.

தலைவருடைய முகம் சட்டென்று கருத்துப்போனாலும் சமாளித்துக்கொண்டு சிரித்தார். ‘பரவாயில்லை தம்பி. பார்த்து செய்யுங்க.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு செல்ல அறையிலிருந்த மற்றவர்களும் என்னையும் என்னுடைய மனைவியையும் பார்த்து புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு சென்றனர்.

என்னுடைய மாமனார் அவருடைய அறையிலிருந்து வெளியே வந்து அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார். என்னை அமரச்சொல்லிவிட்டு அவரும் அமர்ந்து என்னைப் பார்த்தார்.

‘மாப்பிள்ளை நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாட்டாலும் இங்க எல்லாமே சாதிய முன்ன வச்சித்தான் நடக்கும். இங்க இருக்கற எல்லா பேங்கு மேனேசருங்களுக்குமே இது நல்லா தெரியும். நம்ம ஊர்லருக்கற ரெண்டு பெரிய பிசினஸ்ல இந்த மீன்பிடித்தொழிலும் ஒன்னு. மத்தது உப்பு தயாரிக்கறது. மீன்பிடித்தொழில எப்படி நம்ம சாதிக்காரங்க செய்யறாங்களோ அதுமாதிரி உப்புத்தொழில் ----------- சாதிக்காரங்களோடது. இவங்க ரெண்டு பேரும் வாங்கியிருக்கற கடந்தான் எல்லா பேங்குலயும். இவங்க கடன் வாங்கலைன்னா இங்கருக்கற நிறைய பேங்குங்களுக்கு பிசினஸ் செய்யறதுக்கு வழியே இருக்காது. நீங்க மெட்றாஸ்லயே பிறந்து வளர்ந்ததுனால இந்த சாதி விஷயமெல்லாம் ஒருவேளை பிடிக்காம இருக்கலாம். ஆனா தயவு செஞ்சி இன்னைக்கி தலைவர்கிட்ட பேசினாமாதிரி பேங்குல வர்றவங்கக்கிட்ட பேசிராதீங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். லோன் குடுக்காட்டியும் பரவாயில்லை. ஆனா பேச்சில கொஞ்சம் நிதானமா இருந்தா நல்லது. தப்பா நினைச்சிக்காதீங்க. ஏதோ சொல்லணும்னு தோனிச்சி சொல்லிட்டேன்.’

அவர் கூறியதிலிருந்த கரிசனம் எனக்கு புரிந்ததால் நான் ஒன்றும் பேசாமல் எழுந்து மாடிக்கு சென்றேன்.

தொடரும்..

12 comments:

ஜோ / Joe said...

நல்ல சுவாரஸ்யமான அத்தியாயம்!

tbr.joseph said...

நன்றி ஜோ.

G.Ragavan said...

ஜோசப் சார்....இனிய உளவாக இன்னாத கூறல்னு சொல்வாங்க....பொதுவாகவே இல்லைங்கறைதையும் இனிமையாச் சொல்றதும் உண்டு. அப்ப ஒங்களுக்குக் கொஞ்ச வயசு. அப்படிச் சொல்லீருப்பீங்க...இப்ப அப்படி இல்லதானே?

சாதியும் மதமும் விளையாடுற விளையாட்டுகளப் பாத்தீங்களா...கொடுமையோ கொடுமை...

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அப்ப ஒங்களுக்குக் கொஞ்ச வயசு. அப்படிச் சொல்லீருப்பீங்க...இப்ப அப்படி இல்லதானே?//

கரெக்ட்.

srishiv said...

அருமையான தொடர் ஐயா,
தங்களின் பக்கத்தினை தொடர்ந்து படித்துவரும் பின்னூட்டமிடா வாசகர்களுள் நானும் ஒருவன், இன்னும் எழுதுங்கள், காத்திருக்கின்றோம்.
வனக்கமுடன்,
ஸ்ரீஷிவ்

tbr.joseph said...

நன்றி ஸ்ரீஷிவ்..

துளசி கோபால் said...

உங்க மாமனார் சொன்னது சரிதாங்க. கிராமங்களிலெயும், ச்சின்ன நகரங்களிலேயும்
எல்லா விஷயத்துலேயும் 'நாசூக்கா' நடந்துக்கணும். கொஞ்சம் முறைப்பைக் காமிச்சோன்னாப் போச்சு.
எப்படியோ நல்லா முடிஞ்சது. ஆனா, உங்களை நம்ப முடியாதுங்க. நாளைக்கே குண்டைத் தூக்கிப் போட்டுருவீங்க:-)

tbr.joseph said...

வாங்க துளசி,

ஆனா, உங்களை நம்ப முடியாதுங்க. நாளைக்கே குண்டைத் தூக்கிப் போட்டுருவீங்க//

லைஃபே அப்படித்தானங்க. முடிஞ்சிருச்சின்னு நினைப்போம். அதுவே மறுபடியும் விஸ்வரூபம் எடுத்து வந்து நம்மள மிரட்டும். என்னடாயிது இத எப்படி தீர்க்கப்போறோம்னு நினைச்சிக்கிட்டிருப்போம். புஸ்வாணம் மாதிரி ஒன்னுமில்லாம போயிரும்.

arunagiri said...

இதில் சாதி குறித்த மற்றொரு முக்கிய பாடமும் இருக்கிறது. சாதி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தொழிலை மையப்படுத்தி உருவாகி வளர்ந்து நிலை கொள்கிறது மற்றும் மாற்றம் அடைகிறது என்பதுதான் அது.

சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் சாதி என்பது ஒரு கூட்ட மக்களுக்கு குழுத்தன்மை, தனி அடையாளம் இவற்றைத் தந்து அவை மூலம் தொழில் தொடர்ச்சியையும், வாழ்நிலைப் பாதுகாப்பையும் அளிக்கும் ஒரு சாதனமாக இருந்து வந்திருக்கிறது. சந்தைப்பொருளாதாரம் விளைவிக்கும் பொருளாதார சுழற்சி மற்றும் சமூக மாற்றங்களால் ஒரு கால கட்டத்தில் ஒரு இடத்தில் மேலிடத்தில் இருந்த ஒரு சாதி மற்ற இடத்திலோ மற்ற கால கட்டத்திலோ வேறிடத்திற்குத் தள்ளப்படுகிறது.

சைனா, ஜப்பான், இந்தோனேசியா, பெர்சியா, அரபு உள்ளிட்ட பல பழைய சமுதாய அமைப்புகளிலும் இத்தகைய (very similar)அதிகாரப் பங்கீடுகளும் அதன் விளைவான உராய்வுகளும் பல காலம் தொட்டு இருந்து வந்திருக்கின்றன. இந்தியத்துணைக்கண்டத்திலும் சாதிப்பிரிவுகள் எல்லா மதங்களிலும் காணக்கிடைப்பற்குக் காரணமும் இதுதான். பொருளாதார சுழற்சி மற்றும் சமூக மாற்றங்கள் சமுதாயத் தளத்தில் விளைவிக்கும் அதிகார மாற்றங்களும், அடுக்கு மாற்றங்களும், சாதிச் சண்டைகளாக, மனித உரிமை மீறல்களாக, வன்கொடுமைகளாக வெளிப்படுகின்றன.

சாதி என்பது ஒரு மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ நிலை கொண்ட static அமைப்பு அல்ல- அது பொருளாதாரக்காரணங்களை அடிப்படையாகக்கொண்ட live, evolving and changing சமுதாய அதிகாரப்பங்கீட்டு அமைப்பு. இதனாலேயே சாதி என்ற அமைப்பு பல நேரங்களில் social transaction-க்கான கருவியாகவும், இனம், மதம், மொழி கடந்ததாகவும், எளிதில் அழித்துவிட முடியாததாகவும் உள்ளது. சாதி குறித்த இந்த புரிதல் சாதிப்பிரச்சினைகளை அணுகும் அனைவருக்கும் அவசியம்- அவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பேங்க் லோன் கொடுப்பவராக இருந்தாலும் சரி. Financial transactions-ம் social transactions-ம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. உங்கள் மாமனார் சொன்னதில் இந்த நேரடி அனுபவப் புரிதல் வெளிப்படுகிறது.

tbr.joseph said...

வாங்க அருணகிரி,


சாதிகளின் தோற்றத்தையும் அதன் தவிர்க்கமுடியாதமையையும் ரொம்ப பிரமாதமா சொல்லிட்டீங்க.

நாம் கல்லூரியில் பயில்வதைவிட நம்முடைய அனுபவத்தில் படித்ததுதான் அதிகம். நான் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளை பறைசாற்றிக்கொள்வதைவிட நான் சந்தித்த பிரச்சினைகள், தோல்விகள், ஏன் அவமானங்களையும் கூட குறிப்பிட்டு, அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி எழுதுவதுதான் இத்தொடரின் நோக்கமே.

முத்து(தமிழினி) said...

சினிமா மாதிரியில்ல பண்ணியிருக்காரு அந்த சங்கதலைவர்....உப்பு தொழில் எந்த சாதிக்கிட்ட சார் இருக்கு? ச்சும்மா சொல்லுங்க....

சாதி இருக்கறவரை அதைபத்தி பேசாம இருக்கமுடியாது.அதை வைத்து இழிவுபடுத்துவது தான் தவறு.

tbr.joseph said...

வாங்க முத்து,

உப்பு தயாரிக்கும் தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பவர்கள் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுடைய சமூகத்தைப் பற்றி எழுதுவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. நாடார் மற்றும் பரவர் சமூகத்தினரிடையே உள்ள வேற்றுமைகள், விரோதங்கள் அவ்வப்போது பூசலாக வெடிப்பது தூத்துக்குடியில் சகஜம்தான்.