என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன்.
தமிழ்வழி கல்வியே ஏதோ பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டிருந்த காலம். அதாவது பணம் செலவழித்து கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்கு என்பதுபோன்றதொரு மாயை..
கிறிஸ்துவ குடும்பங்களில் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒருவித கட்டாயமாக கருதப்பட்டு வந்த காலம். 'இங்க்லீஷ்ல எழுதுறதும் பேசுறதும் நமக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுக்கும்' என்பார் என்னுடைய தாத்தா. நம் வீட்டு பிள்ளைகள் எல்லாருமே மெட்றிகுலேஷன் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்.
'நம்ம வீட்லருந்து ஒருத்தனாவது கடவுள் சேவைக்கு போகணும். அதனாலதான் ஒன்னெ குருமடத்துல சேக்கறேன்' என்று என்னுடைய விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளாமலே கொண்டு சேர்த்தவர். குருமடத்திலோ தப்பித்தவறியும் கூட தமிழில் பேசிவிடக்கூடாது என்கிற நிர்பந்தம். ஆனால் நாளடைவில் என்னுடைய கோபமும், பிடிவாதமும் என்னை அங்கிருந்து விரட்டியடித்தது.
இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தாய்மொழியில் பயிலுவது எங்களுடைய பிறப்புரிமை. யாரும் எம்மீது அந்நிய மொழியை திணிக்க அனுமதியோம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
தமிழை இரண்டாவது பாடமாக எடுக்கவும் தயங்கி வந்த காலம் மறைந்து தமிழ்வழி கல்வி மற்ற வழி கல்விக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என்கிற நிலை பரவலாக குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் அதுவே நிலைப்பெற தாய்தமிழ்க்கு அதற்குரிய முக்கியத்துவம் உருவாக ஆரம்பித்தது.
தமிழில் பிழையின்றி பேசுவது, எழுதுவது என துவங்கி தூய தமிழில் பேசுவதையும் ஒருவித கவர்ச்சிக் கலையாகவே மாற்றினர் திராவிட கட்சி பேச்சாளர்கள். பாமர மக்களையும் தங்களுடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலால் கவர்ந்து அரசியல் கூட்டங்களை இலக்கிய கூட்டங்களாக மாற்றிய பெருமை அண்ணா, மு.க, நாஞ்சிலார், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சாரும். அதன் பிறகு திரைப்படப் பாடல்கள் வழியாக தூய தமிழை பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.
இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு தூய தமிழில் பேச, எழுத வெகு இலகுவாக வருகிறது என்றால் அதிசயமல்ல என்றாலும் இது ஒரு வரவேற்கத்த மாற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
வலைப்பதிவுகளில் இன்றைய தலைமுறையினர் எழுதும் அழகைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். நாளுக்கு நாள் வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு இப்போதெல்லாம் கணினியில் தமிழை நேரடியாக எழுத முடிகிறது என்பதும் ஒரு காரணம் என்றாலும் இதுவும் ஒரு சந்தோஷமான விஷயம்.
எழுதும் விஷயம் எதுவாக இருந்தாலும் அதை படைக்கும் நேர்த்தி, எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத கருத்தானாலும் அதையும் இறுதிவரை பிடித்து வாதிடும் அழகு, உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்.
வலையுலகத்தில் மட்டுமல்லாமல் இன்றைய வார, மாத இதழ்களில் வெளிவரும் கதையல்லாத கட்டுரைகளிலும்தான் எத்தனை நேர்த்தியாக இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மனதிலுள்ளவற்றை எடுத்துரைக்கின்றனர்.
இந்த வாரத்து விகடனில் வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:
தற்போது படப்பிடிப்பில் உள்ள ஜெயம் ரவியின் 'தேடிவந்த காதலி' திரைப்படத்தின் இயக்குனர், ரவியின் மூத்த சகோதரர் ஓரிரு வரிகளில் கதையின் கருத்தை இப்படி கூறுகிறார்:
'ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேதான். ஆனா இருபது வயசுலயும் நீ என் கைய விடாம பிடிச்சு வச்சிருக்கியே, இது நியாயமா?'
'ஆயிரம் ருபாய்ல 'ஆலன்ஷோலி ஷர்ட்' எடுத்து கொடுத்து 'ஜம்முனு எக்ஸிக்யூடிவ மாதிரி போடா'ன்னு பெருமையா சொல்றார் அப்பா. ஆனா மகனுக்கோ 150 ரூபாய்ல பாண்டிபஜார்ல 'போக்கிரி சட்டை' வாங்கி போட்டுக்கணும்னு ஆசை.'
இது இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடைபெறக்கூடிய தலைமுறை போராட்டம்தான்.. ஆனால் எத்தனை அழகாக, சுருக்கமாக நினைவில் நிற்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது!!
அதே இதழில் வேறொரு கட்டுரையில் இன்று பிரபலமாகவுள்ள ஓவியர் ஷ்யாம் தன்னுடைய இளைய பருவ சிரமங்களை நினைவு கூற்கிறார். தான் பெற்றுள்ள வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மிக அழகாக கூறுகிறார்:
'என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் கடவுள்தான் என்பது என் நம்பிக்கை. எனக்கான வாய்ப்புகளை அவர் என் வாழ்க்கைப் பாதையில் விதைத்துக்கொண்டே செல்ல, நான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். கஷ்டப்படத் தயாராக இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னைக் கைவிடவில்லை.'
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை இத்தனை எளிமையாக, அழகாக, சுருக்கமாக சொல்லிவிட முடியுமா என்ன?
இன்றைய தலைமுறையின் கைகளில் தமிழ் மேலும் அழகு பெறுகிறது என்பதில் எள்ளளவும் பொய்யில்லை...
********