12 பிப்ரவரி 2013

எதிர்பாராததோர் மரணம்.... மீண்டும்...


டோண்டு அவர்களுடைய அகால மரணச் செய்தியை இன்று காலை படித்தபோது உண்மையிலேயே அதிர்ந்துபோனேன். எதிர்பாராமல் வருவதுதான் மரணம் என்றாலும் அவருடைய ஆஜானுபாகவான, திடகாத்திரமான உருவம் உஷா அவர்கள் எழுதியிருந்ததுபோல இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது.

அவரை எனக்கு 2004லிருந்துதான் பழக்கம். நான் பதிவுலகில் நுழைந்தபோது ஏற்கனவே பிரபலமாகியிருந்த பதிவர் அவர். எனக்கு நினைவில் இருக்கும்வரை என்னுடைய முதல் பதிவில் முதலில் வரவேற்று வாழ்த்தியவர் அவர்தான். நான் அதன் பிறகு எழுதிய ஏறத்தாழ அனைத்துப் பதிவுகளிலும் அவருடைய பின்னூட்டம் இருக்கும். நான் சாதாரணமாக வேறெந்த பதிவிலும் சென்று கருத்துக்களை முன்வைப்பதில்லை. ஆகவே என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் மிகவும் அரிதாகவே வருவதுண்டு... இன்றும் அப்படித்தான்.

ஆனால் என்னுடைய பதிவுகளை தவறாமல் படித்து தன்னுடைய கருத்துக்களை - அவை பல சமயங்களில் எதிர்மறையானதாக இருந்தாலும் - பதிவு செய்வதுடன் என்னுடைய ப்ரொஃபைலில் இருந்த என்னுடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசவும் செய்வார். அடிக்கடி மின்னஞ்சலிலும், கூகுள் டாக்கிலும் தொடர்பு கொண்டு உரையாடியதுண்டு. ஒவ்வொரு கிறீஸ்துமஸ் அன்றும் தவறாமல் அவருடைய தொலைபேசி வாழ்த்து வரும். என்னுடைய மனைவிக்கும் அவரை நன்றாக தெரிந்திருந்தது.

நான் ஒரு வங்கி அதிகாரி என்று தெரிந்ததும் வங்கி, மற்றும் அதன் அலுவல்களைக் குறித்து பல சந்தேகங்களை அவ்வப்போது கேட்பார். நான் பதிவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போடலாமே என்றபோது உடனே சம்மதித்துடன் நில்லாமல் ஜெயராமன் போன்ற நண்பர்களையும் சம்மதிக்க வைத்து அழைத்து வந்தார். அப்போதெல்லாம் பதிவர்கள் கூட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்று.

நான், அவர், ஜெயராமன் மற்றும் இன்னும் சில பதிவுலக நண்பர்கள் இணைந்து பல மாதக் கூட்டங்களை சென்னையிலுள்ள டிரைவின் உட்லேன்ட்ஸ் உணவகத்தில் நடத்தியது இப்போதும் நினைவில் உள்ளது. பதிவுலகைப் பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்ததை அப்போது என்னால் உணர முடிந்தது.

ஆனால் அதற்குப் பிறகு போலி டோண்டு விவகாரம் விபரீதப் போக்கை அடைந்தபோது ராகவனின் செயல்பாடுகளிலும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பதிவுலகமே இரண்டுபட்டு தேவையில்லாமல் என்னையும் அவருடன் இணைத்து சிலர் இழிவுபடுத்தியபோது பல அலுவல்களுக்கிடையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருந்த எனக்கு எதற்கு இந்த தேவயற்ற மனக்கசப்பு என்று அவருடைய பதிவுகளை வாசிப்பதையே நிறுத்தி வைத்திருந்தேன்.

ஆனாலும் பதிவுலகைக் கடந்து எங்களுடைய நட்பு தொடரத்தான் செய்தது. நட்புக்கு கருத்து ஒற்றுமை தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. அவருடைய மனதைரியத்தையும் தான் மனதில் எண்ணியதை, அது சரியோ தவறோ, அப்படியே எழுதும் ஆற்றலும் எனக்கு அவரிடம் பிடித்த குணங்களில் ஒன்று. ஆனால் உஷா அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று அந்த போலி டோண்டு விவகாரத்திலிருந்து அவர் மீளவே இல்லை என்பதை நானும் உணர்ந்துக்கொண்டேன்.  அந்த விஷயம் அவரை எந்த அளவுக்கு காயப்படுத்தியிருந்தது என்பதையும் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதை அத்தனையளவுக்கு பெரிதாக்கியதற்கு அவருடைய எழுத்தும் ஒரு காரணம் என்று அவரிடமே பலமுறை கூறியிருக்கிறேன். ஆனாலும் அவரைப் பற்றி தவறாக ஒருநாளும் எண்ணியதில்லை. அது அவருடைய சுபாவம் என்று ஏற்றுக்கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை பதிவுகளில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவருடைய குணத்தை தீர்மானிப்பதோ அல்லது அதற்காக அவரை இழித்துரைப்பதோ மனமுதிர்வற்றவர்கள் செய்யும் செயல். அதிலும் ஒருசிலர் அவருடைய மறைவுக்குப் பிறகும் என்றோ நடந்தவற்றைப் பற்றி அவதூறாக பேசுவதென்பது அநாகரீகமான செயல் என்றே படுகிறது.

இந்த பதிவு அவருடனான என்னுடைய தனிப்பட்ட நட்பை மீண்டும் ஒருமுறை அசைபோடவும் அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனையை பதிவு செய்யவும் எழுதப்பட்டது. ஆகவே தயவு செய்து இதில் வந்து அவரைப் பற்றியோ அல்லது அவருடைய எழுத்தைப் பற்றியோ விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

**********



4 கருத்துகள்:

  1. Rip Dondu :((
    Agreeing everyword what you said

    பதிலளிநீக்கு
  2. அவர் மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சி தந்தது:(

    ஆன்மசாந்திக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. Agreeing everyword what you said//நன்றி அகிலா.

    பதிலளிநீக்கு
  4. அவர் மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சி தந்தது:(//

    உண்மைதான் துளசி. நிச்சயம் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    நான் மலேஷியாவில் இருந்ததால் அவருடைய இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு