என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த நண்பர்கள் சிலரின் சடுதி மரணத்தைப் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன்..
ஆனால் இந்த வாரம் நிகழ்ந்த ஒரு மரணம் சடுதியானதும் அகாலமானதுமட்டுமல்ல அவலமானதும் கூட..
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் என்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த நான் என்னுடைய புதல்வியர்களின் விருப்பத்திற்கேற்ப சென்னையிலேயே தொடர்ந்து வசிப்பதென தீர்மானித்தேன்.
ஆனால் சென்னையில் எனக்கென்று சொந்த வீடு இல்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து பதினைந்தாயிரம் வாடகைக்கு கொடுத்து இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்பதால் ஒரு வீடு அல்லது குடியிருப்பை தேடி அலைய ஆரம்பித்தேன். ஒரு வருடம் முயன்றும் சென்னை நகராட்சிக்குள் என்னுடைய பட்ஜெட்டுக்குள் கிடைக்கவில்லை.
ஆகவே சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் என்னுடைய உறவினர்கள் சிலருடைய உதவியுடன் சென்னையிலிருந்து சுமார்
25 கி.மீ. தூரத்திலுள்ள ஆவடியில் ஒரு வீட்டு மனையை விலைக்கு வாங்கினேன். ஆனால் அப்பகுதியில் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இல்லாத, அதாவது பரம்பரை பட்டா உள்ள மனைகளே அதிகம் இருந்தன. என்னுடைய அதிர்ஷ்டம் ஒரு சிறிய மனை அப்ரூவலுடன் இருப்பதாக நான் சந்தித்த தரகர் கூறவே அதை போய் பார்த்தேன். பிடித்திருந்தது. ஆனாலும் ஆவடி நகராட்சி அளித்த ஒப்புதல் சான்றிதழின் ஃபோட்டோ நகல் மட்டுமே தரகரிடம் இருந்தது. அதில் நகராட்சி ஒப்புதலின் எண் தெளிவாக இல்லாததால் யாரை விசாரிப்பது என்று குழம்பியிருந்தபோதுதான் மனைக்கு மிக அருகாமையிலேயே வசித்த, இந்த முன்பின் பரிச்சயமில்லாத, நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நிலமும் நான் பார்த்த மனையின் நிலமும் ஒரே லே-அவுட்டுக்குள் அடங்கியிப்பதாக தரகர் கூறியதால் அவரை அணுகி அவருடைய மனையில் ஒப்புதல் சான்றிதழை காண்பிக்க முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன்.
ஆனால் அவர் மட்டுமல்லாமல் அவருடைய இளம் மனைவியும் என்னையும் என்னுடைய மனைவியையும் புன்சிரிப்புடன் வரவேற்று அவர்கள் வசம் இருந்த அனைத்து ஆவணங்களையும் எனக்கு காண்பித்து தயங்காமல் வாங்குங்கள் என்றனர்.
முன்பின் பரிச்சயமில்லாத இருவரை வீட்டுக்குள் அழைத்து முகம் மலர எங்களுடைய அனைத்து ஐயங்களையும் நிவர்த்தி செய்த அவ்விருவரின் நேர்த்தியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அத்துடன் நில்லாமல்
'நாங்க வீடு கட்டறப்போ என்னல்லாம் மிஸ்டேக் பண்ணமோ அத எல்லாம் உங்களுக்கு சொல்றேன் சார். நீங்க அத எல்லாம் அவாய்ட் பண்ணீங்கன்னாவே போறும், ஈசியா கட்டி முடிச்சிரலாம்.' என்றார். அன்று சுமார் அரை மணி நேரம் தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக பகிர்ந்துக்கொண்ட அவருடைய பெருந்தன்மை மறக்க முடியாத ஒன்று. அதுமட்டுமல்லாமல் திருமணமாகி பத்து வருடம் குழந்தை இல்லாமல் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்த சமயத்தில்தான் ஒரு மனையை வாங்கி வீடு கட்டினாலாவது குழந்தை இல்லாத சோகத்தை மறக்க முடியும் என்று கருதி வீடு கட்டுவதை துவங்கியதாகவும் வீட்டைக் கட்டி முடித்த அடுத்த மாதமே தன்னுடைய மனைவி கற்பமானதாகவும் கூறினார். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அதற்குப் பிறகு என்னால் உடனே வீட்டை கட்ட முடியாமல் பல
தடங்கல்கள் ஏற்பட்டு இரண்டாண்டுகள் இழுத்துக்கொண்டே போனது. நமக்கு நேரம் வரும்போது கட்டிக்கொள்ளலாம் என்று நானும் இருந்தேன். அவருடனான தொடர்பும் நான் என்னுடைய மனையை காண செல்லும்போது ஏற்பட்ட ஒருசில நிமிட சந்திப்புகளுடன் நின்றுபோனது.
ஆறுமாதங்களுக்கு முன்பு வீட்டு கட்டுவதை துவங்குவதென தீர்மானித்து ஒரு ஒப்பந்தக்காரரை அணுகி அவரை அழைத்துக்கொண்டு மனைக்குச் சென்றபோது அவருக்கும் இந்த நண்பரை நன்கு தெரிந்திருந்தது.
அவருடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்று நண்பரும் பரிந்துரைக்கவே ஒப்பந்தம் செய்து பணியை துவக்கவிருந்தபோது ஆழ்கிணறு தோண்ட நான் கேட்காமலேயே தண்ணீர் கொடுத்து என்னுடைய பூமி பூஜையிலும் கலந்துக்கொண்டு எனக்காக தன் நண்பரான ஒப்பந்தக்காரரிடம் பரிந்துரைத்து உதவினார். என்னுடைய மனைக்கு பின்னால் அமைந்திருந்த ஒரு புதிய குடியிருப்பின் உரிமையாளரும் அவருடைய நண்பர் என்பதால் அதிலேயே ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து கட்டட வேலையை துவக்கினேன். நான் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக கட்டடம் வளர்ந்து நிற்கிறது....
ஆனால் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த நண்பர் இப்போது இல்லை
....
ஏன் இந்த மரணம் சடுதியாய் வந்து மிகவும் நல்ல ஒரு மனிதரை அதுவும் நாற்பது வயதும் கூட நிறைவுபெறாத ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டது என்பதை எப்படி சொல்வது....
பத்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற ஒரே மகளை ..
இரண்டே வயதிலும் வாய் ஓயாமல் பேசும் அந்த இளம் சிட்டை விட்டுவிட்டுச் செல்ல எப்படி அந்த மனிதருக்கு மனம் வந்தது...
'கணவன், மனைவி இருவருமே வாய் ஓயாமல் இப்படி பேசுகிறீர்களே உங்கள் மகளும் அப்படியே பேசுவதில் என்ன வியப்பிருக்கிறது' என்று நானே கேலியாக அவர்களிடமே கூறியிருக்கிறேன். அப்படி பேசுவார்கள் இருவரும்.... யாரிடமும் அவ்வளவு நெருங்கி பழகாமல் எட்டியே இருந்த நானும் என் மனைவியும் அவர்களுடைய அபிரிதமான பேச்சில் மயங்கி மாதம் ஒருமுறையாவது அவர்களுடைய இல்லத்திற்கு சென்று மணிக்கணக்கில் அவர்கள் இருவர் மட்டுமல்லாமல் அவர்களுடைய குட்டிப் பெண்ணின் மழலையும் ரசித்திருப்போம்....
அப்படிப்பட்ட குடும்பத்தை எப்படி அவரால் கைவிட்டுச் செல்ல முடிந்தது?
இரண்டு நாட்களுக்கு முன்னர் ....
நான் மாலை நடைக்குச் சென்று விட்டு வரும் வழியில் இருந்த ரயில்வே லெவல் கிராசிங் அருகில் ஒரு பெரிய கூட்டம் நின்று இருந்ததை பார்த்தேன்.
ஆனால் பாதுகாப்பற்ற அந்த கிராசிங்கில் கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்க முயன்று அதிவேகமாக நெடுந்தூர ரயில்களில் அடிபட்டு மரிப்பது சகஜம் என்பதால் நான் கண்டுக்கொள்ளவில்லை...
ஆனால் வீடு திரும்பியதும்தான் தெரிந்தது அன்று அடிபட்டு மரித்தவர் மிகக் குறைந்த காலத்தில் எங்களை கவர்ந்துவிட்ட நண்பர்தான் என்பது...
தவறி விழுந்திருப்பார் என்று நானும் என்னுடைய மனைவியும் நினைத்திருந்ததற்கு மாறாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவரேதான் வேண்டுமென்று விழுந்துவிட்டார் என்று கூறியதாக கூறி
'ஏன் இப்படி செஞ்சார்னு தெரியலையே சார்.... உங்க கிட்டக் கூட ரெண்டு நாளைக்கு முன்னால பேசிக்கிட்டிருந்தாரே....' என்று அவருடைய மனைவி கதறியபோது என்னால் ஒன்றும் கூற முடியவில்லை...
உண்மைதான்..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நானும் அவரும் என்னுடைய வீட்டுக்கு வெளியில் நின்று கட்டுமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... 'உங்க வீட்டு வேல முடிஞ்சதும் நான் சின்னதா ரெண்டு ரூம் மாடியில போடலாம்னு இருக்கேன் சார்....' என்றாரே என்று என்னுடைய மனது அடித்துக்கொள்கிறது....
இரண்டு நாட்களுக்குள் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்..
இருவருமே பணிபுரிபவர்கள்... கை நிறைய வருமானம் .... பின் என்னதான் பிரச்சினை? எப்படி விசாரிப்பது.... யாரிடம் விசாரிப்பது...
இறுதிச்சடங்கிற்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலக நண்பர்களும் இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்..
இரண்டு நாட்களாக கண்ணை மூடினாலும் உறக்கம் வராமல் அந்த புன்னகை நிறைந்த முகமும்.... இறுதிச் சடங்கில் தூக்கக் கலக்கத்துடன் தன் ஒரேஅத்தையின் இடுப்பில் அமர்ந்து உடலை சுற்றி வந்து கும்பிட்ட இரண்டு வயதே நிறம்பிய என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்த அந்த சிட்டின் முகமும்..... பாடாய் படுத்துகிறது...
***********