24 ஜனவரி 2012

அம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு!
ஜெயலலிதா அம்மையாருக்கும் அவருடைய தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கும் நீதிமன்றங்களிலிருந்து குட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.பதவியேற்றவுடனேயே அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி திமுக அறிமுகப்படுத்திய சமச்சீர்கல்வியை ரத்து செய்யும் முகமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பிறகு சட்டசபையிலுள்ள தனது அசுர பலத்தை பயன்படுத்தி சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க முயற்சி செய்தது. ஆனால் உண்மையில் சமச்சீர் கல்வியை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி அதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதுதான் அரசின் உள்நோக்கம் என்பதை உணர்ந்த உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் சமச்சீர் கல்வியை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இது முதல் குட்டு.பிறகு கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என முடிவெடுத்தது. சட்டமன்றத்தை முந்தைய ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டுவது என்ற அரசின் முடிவில் தலையிட விரும்பாத நீதிமன்றங்கள் அம்மையார் அதை மருத்துவமனையாக மாற்றும் முடிவுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து நிறுத்தி வைத்தது. பிறகு நடுவண் அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் அது வரை கட்டடத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டு பிறப்பித்து அரசின் உள்நோக்கம் நிறைவேற முடியாமல் செய்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து அம்மையாருக்கு தடையில்லா சான்று கிடைப்பத்து அவ்வளவு எளிதல்ல என்பதால் தற்போதைக்கு அம்மையாரின் நோக்கம் நிறைவேறப்போவதில்லை. இது இரண்டாவது குட்டு.அடுத்து அடையாரிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்ற முடிவு. இவ்விரண்டு முடிவுகளுமே முந்தைய அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு துர்நோக்கம் கொண்ட முடிவு என்பதுதான் சரி. அதாவது இதன் பின்னனியில் இருந்தது அரசியல் காழ்ப்புணர்வுதான். இது ஒரு மனமுதிர்வற்ற ஆட்சியாளரின் செயல்பாடு என்றாலும் தவறில்லை. ஆகவே அதற்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததுடன் இவ்வழக்கு நிலுவையிலுள்ள வரையில் புதிய இடத்தில் இதற்கென எவ்வித கட்டட மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டது. இது மூன்றாவது குட்டு.தற்போது மக்கள் நல பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது செல்லாது என்ற உத்தரவு. அரசின் சமீபத்திய முடிவுகளில் இதுதான் மிகவும் மோசமான முடிவு. மேற்குறிப்பிட்ட முடிவுகளால் எந்த ஒரு தனிமனிதனும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கப்படக் கூடிய ஒரு முடிவை அரசு எடுத்தது எவ்விதத்திலும் நியாயம் இல்லை என்பதை மிகத்தெளிவாக
சுட்டிக்காட்டி அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இது நான்காவது குட்டு. இதை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றம் சென்றாலும் நிச்சயம் அதற்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கப்போவதில்லை என்பதை அம்மையாரை தவிர அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆகவேதான் பல எதிர்க்கட்சி தலைவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லாமல் பணி நீக்கப்பட்டவர்களே உடனே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் பிடிவாதத்திற்கு பெயர்பெற்ற அம்மையார் உச்ச நீதி மன்றம் வரை சென்று மீண்டும் குட்டுப்படப் போவது உறுதி.இதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சில மாதங்களில் பலமுறை உச்ச நீதி மன்றத்தை அணுகி குட்டுப்பட்டுள்ளார் அம்மையார்.சாதாரணமாக அரசு தலைமையில் அமர்ந்திருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை கடுமையாக கண்டித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்போது அதற்கு தார்மீக பொருப்பேற்று பதவி விலகுவது வாடிக்கை. ஆனால் அது தன்மானம் உள்ளவர்கள் செய்யும் செயல். மேலும் எப்போதாவது ஒருமுறை குட்டுப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தினம் ஒரு குட்டு என்று பழகிப்போனவர்களிடமிருந்து அதை எதிர்பார்ப்பது நியாயமல்லவே.இந்த லட்சணத்தில் அவர் நாட்டின் பிரதமராக தகுதிபெற்றவர் என கூறுபவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஆனால் அதிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடக்க வாய்ப்புண்டு. அவர் பிரதமராகி தில்லி சென்று தேவகவுடாவைப் போன்று அதில் நீடிக்க முடியாமல் தோற்றுப் போனால் அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடும்!! அவருடைய காழ்ப்புணர்வு கொண்ட ஆட்சியிலிருந்து தமிழக மக்களும் ஒரு நிரந்தர விடுதலை பெறக் கூடும். ஆகவே அவருடைய கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான ஏன், அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் அளித்து அவரை நாட்டின் பிரதமராக உதவிட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்!

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக