19 நவம்பர் 2009

வங்கி வட்டி விகிதமும் கிளை திறப்பு விழாக்களும்!

இப்போதெல்லாம் வங்கிகள் ஒரே நாளில் நூற்றுக் கணக்கில் கிளைகளை துவங்குவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த மாதம் கேரளாவைச் சார்ந்த ஒரு தனியார் வங்கி. இன்று கர்நாடகாவைச் சார்ந்த ஒரு பொதுத்துறை வங்கி. இதற்கு பல முக்கிய பத்திரிகைகளில் முழுபக்க விளம்பரங்கள்.

நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலையைக் கடந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணமாக வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை குறைக்காததும் ஒரு காரணம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். விற்பனை அதன் விளைவாக கிடைக்கும் லாப விகிதம் சரிந்து வரும் இன்றைய சூழலில் வங்கிகள் வசூலிக்கும் அதிக வட்டி விகிதம் வங்கிக் கடன் பெற்று வர்த்தகம் மற்றும் தொழில் துவங்கவோ அல்லது விரிவுபடுத்தவோ கருதும் தங்களைப் போன்றவர்களை தயங்க வைக்கிறது என்கின்றனர் பெரும்பாலான வர்த்தக மற்றும் தொழிலதிபர்கள்.

இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் தன்னுடைய தலையங்கத்தில் வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதம் சரிய வேண்டுமென்றால் சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதமும் கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்கின்றது!

இது கடன் பெறுபவர்களின் கோணத்திலிருந்து பார்த்தால் நியாயமானதாக தோன்றலாம். ஆனால் சேமிப்பாளர்களின் குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்று வங்கிகள் வழங்கும் வட்டி ஒன்றையே நம்பியிருப்பவர்களுடைய கோணத்திலிருந்து பார்த்தால்?

மேலும் சேமிப்பாளர்கள் வங்கியில் இடும் தொகையிலிருந்துதானே வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது? சேமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைக் குறைத்தால் வங்கியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும். அதன் விளைவாக வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் குறையாதா?

கடந்த இரண்டாண்டுகளாகவே வங்கிகள் சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் குறைந்து, குறைந்து இப்போது பத்து வருட வைப்பு தொகைக்கே அதிகபட்சமாக 7% வட்டி (9% ஆக இருந்தது) வழங்கப்படுகிறது.

சேமிப்பாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைத்தால்தான் கடன் வட்டி விகிதத்தை குறைக்க முடியும் என்கின்றன வங்கிகள். ஆனால் வங்கிகள் தங்களுடைய லாப விகிதத்தைக் குறைத்தாலும் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும். அதாவது வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் மற்றும் வசூலிக்கும் வட்டி விகிதம் ஆகிய இரண்டு விகிதங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை (difference or spread) சற்று குறைத்துக்கொண்டாலே இதை சாதிக்க முடியும். ஆனால் பெரும்பாலான வங்கிகள் இதற்கு தயாராக இல்லை. இதில் தனியார் வங்கிகள் மட்டுமல்ல பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பல பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் அன்றாடம் அதிகரித்து வரும் நிர்வாக சிலவுகள். வங்கிகளின் நிர்வாக செலவுகளில் கணிசமான விழுக்காடு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்றாலும் கடந்த சில வருடங்களில் வங்கிகளுக்கிடையில் நிலவும் கடுமையான போட்டியின் விளைவாக ஏற்படும் விளம்பர சிலவுகளும் தேவைக்கு அதிகமாக கிளைகளை துவங்குவதும் முக்கிய காரணங்கள். நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ள இன்றைய சூழலில் அளவுக்கதிகமான கிளைகளை வங்கிகள் திறப்பது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. எழுபதுகளின் Expansion நிலையிலிருந்த வங்கித்துறைக்கு இன்றைய தேவை Consolidationதான் என்று பாரதப்பிரதமரே பலமுறை வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கில் கிளைகளை துவங்கி தங்களுடைய நிர்வாக சிலவுகளை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஒருவகையில் மூடத்தனம் என்றே தோன்றுகிறது.

நான் குறிப்பிட்ட கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த பொதுத்துறை வங்கி தங்களுடைய 104 வது வருட விழாவை சிறப்பிக்க இன்று 104 கிளைகளை திறக்கிறது! இதுவே அவர்களுடைய ஐந்நூறாவது வருட விழாவாக இருந்தால் ஒருவேளை 500 கிளைகளை திறந்திருக்குமோ என்னவோ. தங்களுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்த எத்தனை கிளைகள் தேவையோ அத்தனை கிளைகளை மட்டும் துவங்குவதை விட்டுவிட்டு தங்களுடைய வயதையொட்டி கிளைகளை துவங்கும் வங்கி தலைமையை என்னவென்று அழைப்பது.

இதற்கு தலைமை தாங்குவது நாட்டின் நிதித்துறை அமைச்சர்!

8 கருத்துகள்:

  1. பொருளாதரத்தேக்கநிலை, வட்டிவீதக்
    குறைப்பு இவற்றீற்கு இடையிலும்
    இந்த ஆண்டில், ஒரு பொதுத்துறைவங்கி தனது பங்குதாரர்களுக்கு லாப ஈவாக
    {dividend} 45% அறிவித்துள்ளதே?

    பதிலளிநீக்கு
  2. முட்டாள்தனமான சிந்தனையுடன் வங்கிகள் செயல்படுகின்றன. அதிக கிளைகள், அதிக ஊழியர்கள், அதிக விளம்பரம், அதிக நிர்வாக செலவு அதற்காக அதிகமாக கடன்களுக்கு வட்டி வசூலித்தல் ... அதே நேரத்தில் சேமிப்புக்கு குறைந்த வட்டி. அதுவுமல்லாமல் மறைமுகமாக ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிப்பது...மொத்தத்தில் பாதிக்கப்படுவது பாமர மக்களே.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ஜி,

    பொருளாதரத்தேக்கநிலை, வட்டிவீதக்
    குறைப்பு இவற்றீற்கு இடையிலும்
    இந்த ஆண்டில், ஒரு பொதுத்துறைவங்கி தனது பங்குதாரர்களுக்கு லாப ஈவாக
    {dividend} 45% அறிவித்துள்ளதே?//

    கடந்த அரையாண்டு மற்றும் காலாண்டில் லாபம் அடையாத வங்கியே இல்லையெனலாம். ஆனாலும் கடன் வட்டி விகிதத்தை குறைக்கும் எண்ணம் எவருக்கும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  4. வாங்க மஞ்சூர்,

    முட்டாள்தனமான சிந்தனையுடன் வங்கிகள் செயல்படுகின்றன.//

    கொஞ்சம் உரக்க சொல்லுங்க. எல்லார் காதுலயும் விழட்டும். முக்கியமா ரிசர்வ் வங்கி காதுல விழணும்.

    பதிலளிநீக்கு
  5. கனரா வங்கி 104 கிளைகளை ஒரே நாளில் ஆரம்பிப்பது கூட அவ்வளவு பெரிய விஷயமில்லை சார்! முன்னாள் நிதியமைச்சருடைய தொகுதியில், வீட்டுக்கொரு கிளையை ஆரம்பிக்காத குறையாக, ஒவ்வொரு பொதுத் துறை வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு கிளைகள் ஆரம்பித்த கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?

    வங்கிகள் தேசீய மயமாக்கப் பட்டபோது, மிகவும் புரட்சிகரமான செயலாக வர்ணிக்கப்பட்டது. ஆரம்பத்தில் குதிரை மாதிரித் தான் தெரிந்தது! வெள்ளி மூக்கு முளைத்த பிறகு தானே தெரிகிறது.

    1990 களில் ஆரம்பித்த பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாக இருந்தவர் மன்மோகன் சிங். அவருடைய ஆட்சிக் காலத்தில், சீர்திருத்தப்படவேண்டியவை எல்லாம் இலவசங்களாகவும், தள்ளுபடிகளாகவும் பறக்கிறது.

    ஊழல்மயமான அரசியல் வலுவாக இருக்கும் நிலயில் ரிசர்வ் வங்கி என்ன தான் செய்துவிட முடியும்?

    வங்கிகளில்,இவர்கள் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பது வரிப்பணம் கூட இல்லை! முதலீடு செய்திருப்பவர்களின் பணம்! அதை துஷ்ப்ரயோகம் செய்கிற போக்கை,அவர்கள் தான் தடுத்து நிறுத்த முடியும்!

    பதிலளிநீக்கு
  6. வாங்க கிருஷ்ணமூர்த்தி,

    ரொம்ப கச்சிதமா கரெக்டா சொல்லிட்டீங்க. ப. சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகள் கூட இப்படி சில்லறைத்தனமான விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதுதான் வேதனை. சிவகங்கை தொகுதியை சுற்றிலும் அவர் திறந்து வைத்த பல வங்கிக் கிளைகளும் இன்று நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா6:54 AM

    Dear Mr. TPR,

    Long time no blog. Hope atleast you post one blog in every week.

    Mr. P. Chidambaram is a true politician. What can we expect from him.
    One small example is..
    Few years back in Coca-cola Vs GOI, both himself and his wife represent both particies. Every one knows about his double standard.

    There are very few good new generation banks. If you see service standards old generation banks and old schedule banks are far better than new generation banks especially No.1 private bank.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2:48 PM

    please post atleast 4 blogs per month.... :)

    பதிலளிநீக்கு