18 ஆகஸ்ட் 2009

சகிப்புத்தன்மை

family

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியின் நகல் மேலே.

செய்தியுடன் வெளியாகியுள்ள புகைப்படத்தைப் பார்த்தால் அந்த குடும்பத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த மனத்தாங்கல்கள் ஏதாவது தெரிகின்றனவா?

Handsom couple with a beautiful child என்பார்களே அதுபோன்ற அழகான் குடும்பம்!

ஆனால் அந்த படித்த இளைஞர் தன் இளம் மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?

அல்லது அந்த படித்த, அழகான இளம் பெண் அத்தகைய கொடூர செயலுக்கு தன் கணவனை தன்னுடைய செய்கையால் இட்டுச் சென்றார் என்பதை நம்ப முடிகிறதா?

இந்த விபரீதத்திற்கு பின்னணி என்ன?

மனைவிக்கு தன் மாமனார், மாமியார் என்ற கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பமில்லை. தன்னுடைய கணவன், குழந்தையுடன் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்.  ஆனால் கணவனுக்கு இதில் விருப்பமில்லை.

இன்று நேற்றல்ல காலங்காலமாகவே இந்த பிரச்சினை குடும்பங்களில் இருந்துக்கொண்டுதான் வருகின்றது.

கூட்டுக் குடும்பம் என்கிற சொல்லே வழக்கில் இல்லாமல் போய்விடக்கூடிய காலம் வெகு விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது.

இதற்கு என்ன காரணம்? ஏன் பெண்கள் திருமணமான உடனே தங்கள் கணவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்து சென்றுவிட வேண்டும் என்ற நினைக்கின்றனர்?

ஓரிரண்டு குடும்பங்களில் என்றால் அந்த குடும்பத்திலுள்ள முதியவர்களால்தான் பிரச்சினை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் இதுதான் இன்றைய பிரதான பிரச்சினை.

இதற்கு மூல காரணம் சகிப்புத்தன்மை இல்லாமைதான் என்று கருதுகிறேன்.

பிறருடைய எண்ணங்களை, உணர்வுகளை மதிக்க மறுப்பது. நான் நினைப்பது நடந்தே தீரவேண்டும் என்கிற ஒருவித மூர்க்கத்தனம்.

இத்தகைய குணம் வயது வித்தியாசமில்லாமல் அனைத்து தலைமுறையினரிடமும் இருப்பதால்தான் இத்தகைய விபரீதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

தாய்க்கு மகன் மீதுள்ள அளவுகடந்த பாசம் மகனை ஒருவிதத்தில் அடிமையாகவே மாற்றிவிடுவதை காண்கிறோம். தன் மகன் தனக்குத்தான் என்ற நிலையில் தாயும் தன் கணவன் தனக்குத்தான் என்ற நிலையில் மனைவியும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு காரணம்.

Possessiveness borne out of love என்பார்களே அதுபோன்ற ஒருவித வெறித்தனமான அன்புதான் தனக்கு பிடித்த ஒருவரை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாத இயல்பை நம்மிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் உருவாக்குகிறது.

மேலும் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளவும் நம்மில் பலரும் முயல்வதில்லை.

சகிப்புத்தன்மை என்பது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் நாம் மறந்துபோகிறோம். பல குடும்பங்களில் முதியவர்கள் சொல்படித்தான் இளையவர்கள் நடக்க வேண்டும் என்கிற எழுதா சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்துவதையும் கண்டிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்டுள்ள குடும்பத்தில் மருமகளுடைய உணர்வை மாமியாரும், மாமனாரும் புரிந்துக்கொண்டு அவளுடைய விருப்பத்திற்கு இணங்கியிருந்தாலோ . அல்லது மாமனார், மாமியார் ஆகியோரும் என் குடும்பத்தினர்தான் என்று மருமகள் புரிந்துக்கொண்டிருந்தாலோ இத்தகைய விபரீதத்தை தவிர்த்திருக்கலாம்.

இப்போதைய நிலை என்ன? மனைவி இனி திரும்பி வரப் போவதில்லை. கணவன் சிறையில், குழந்தை அனாதை!

என்ன கொடுமை!

7 கருத்துகள்:

  1. விவாகரத்தாவது செய்து இருக்கலாம்..கொலையா?? அய்யோ!!

    பதிலளிநீக்கு
  2. வாங்க அமுதா,

    விவாகரத்தாவது செய்து இருக்கலாம்..கொலையா?? அய்யோ!!//

    இது கோபத்தின் உச்சியில் இருந்தபோது தற்செயலாக நடந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. உணர்ச்சி வசப்பட்டதால் வந்த வினை ! யார் மீது தப்பு என்றாலும் சிதைந்து குடும்பம் !
    அனாதையானது ஒரு குழந்தை! வருந்தங்கள்.. இப்படி எத்தனை குடும்பங்கள் ! சகிப்புத்தன்மை, மனித நேயம், நாகரீக பஞ்சம் ..

    பதிலளிநீக்கு
  4. வாங்க வளர்பிறை,

    இப்படி எத்தனை குடும்பங்கள் ! சகிப்புத்தன்மை, மனித நேயம், நாகரீக பஞ்சம் ..//

    இதுக்கெல்லாம் எப்போதுதான் முடிவு வருமோ!

    பதிலளிநீக்கு
  5. /Possessiveness borne out of love ?/

    அன்பினால் ஏற்படுகிற சுயநல ஆளுமை இல்லை இது. இன்றைய பெண்களுக்குசுமையை தாங்கிக் கொள்ள மனம் இல்லை. கூட்டுக் குடும்பம் என்பதே கசக்கிறது.

    பொருளாதார சுதந்திரம் வந்ததும், விபரீதமான சிந்தனைகளுமே கூட வருகின்றன. கல்யாணம் என்று ஒன்று அவசியமா? சின்னச் சின்ன சுகங்களுக்காக, ஒரு பந்தத்தில் சிக்கிக் கொள்ள வேண்டுமா? எதற்கு, மாமியார், நாத்தனார் என்று ஒரு கும்பலோடு ஒத்துப் போக வேண்டும் என்ற ரீதியில், கல்யாணம் செய்துகொள்ளாமலேயே, தேவைபடுகிற வரை சேர்ந்து வாழ்வது என்ற அளவிலும் கூட, மனோபாவங்களை, சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது.

    திருமணம் என்றாலே அவசியமில்லாத சுமைதான் என்றாகிவிட்டபோது, குடும்பம், உறவுகள், சகிப்புத்தன்மை என்பதெல்லாம் அங்கே தேவைப்படுவதில்லையே:-((

    பதிலளிநீக்கு
  6. வாங்க கிருஷ்ணமூர்த்தி,



    திருமணம் என்றாலே அவசியமில்லாத சுமைதான் என்றாகிவிட்டபோது, குடும்பம், உறவுகள், சகிப்புத்தன்மை என்பதெல்லாம் அங்கே தேவைப்படுவதில்லையே://

    உண்மைதான். இதற்காகவே இன்று பல இளம் பெண்கள் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. /இதற்காகவே இன்று பல இளம் பெண்கள் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள்./

    பயம் என்று கூட இதை சொல்ல முடியாது. குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை, சில இடங்களில் நடக்கும் அதீதமான வன்முறை கலைப் பொதுமைப்படுத்தி இந்த extreme இல் இருந்து அந்த extreme இற்குத் தாவுவது தான்.

    முன்னால், கலாசாரம், உறவுமுறைகள் என்று சிக்கலைத் தீர்த்து, சமாதானம் ஏற்படச் செய்த சாதனங்கள் வலுவிழந்து வருவதைச் சொல்வதாகவும் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு