17 மே 2006

திரும்பிப் பார்க்கிறேன் 135

இந்த பிரச்சினைக்கு ஒரே வழி வாடிக்கையாளருடைய இழப்பை ஈடு செய்வதுதான் என தீர்மானித்து, ‘உங்களுக்கு இத மறுபடியும் சரிபண்றதுக்கு என்ன செலவு ஆகுமோ அத நாங்க குடுத்துட்டா உங்களுக்கு திருப்தியா?’ என்றேன்.

அவருடைய முகம் போன போக்கிலிருந்தே அவர் மீண்டும் கோபத்தின் உச்சிக்கு செல்லப்போகிறார் என்பதைக் காட்டியது.

‘என்ன சார் விவரம் புரியாம பேசிக்கிட்டிருக்கீங்க? நா இத போயி என் வீட்ல சொன்னேன்னு வச்சிக்குங்க. அவ்வளவுதான். எங்க வீட்டாளு உடனே கோச்சிக்கிட்டு வீட்டுக்கு போயிருவா. அப்புறம் இந்த விஷயம் அவுக வீட்டுக்குப் போயி.. அவுக வீட்டாளுங்க முன்னால.. ஏன் சார்.. சே.. எல்லாம் இந்த முட்டாப்பயலால வந்த வெனை..’

அவர் இருந்த மனநிலையில் விட்டால் அந்த இடத்திலேயே என்னுடைய உதவி மேலாளரை அடித்துவிடுவார் போலிருந்தது. நான் உடனே என்னுடைய தலைமைக் குமாஸ்தாவிடம் மலையாளத்தில் எங்களுடைய கிளையில் கடனுதவி பெற்றிருந்த நகைக்கடை முதலாளியை அழைத்து ஒரு பொற்கொல்லரை அனுப்பச் சொல்லி பணித்தேன். அவரும் சரியென்று தலையசைத்துவிட்டு செல்ல நான் என் உதவி மேலாளரிடம் ஆங்கிலத்தில், ‘சார் நீங்க போய் உங்க வேலைய பாருங்க. நீங்க இங்க நின்னுக்கிட்டிருந்தா பிரச்சினைதான் பெரிசா போகும். நான் டீல் பண்ணிக்கறேன்.’ என்றேன்.

அவரும் விட்டால் போறும் என்று அறையை விட்டு வெளியேற என்னுடைய வாடிக்கையாளர் உடனே எழுந்து அவரை தடுத்து நிறுத்த சென்றார். நல்ல வேளையாக என் அறைக்குள் நுழைந்த வேறொரு வாடிக்கையாளர் அவரைப் பிடித்துக்கொண்டார். என்னுடைய உதவி மேலாளர் வெளியேறியதும் நானும் எழுந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்திவிட்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன்.

‘இங்க பாருங்க, இந்த மாதிரி எமோஷனல் ஆறதினால இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சிராது. அமைதியா இருங்க. நான் எனக்கு தெரிஞ்ச கடையிலருந்து ஒரு கொல்லர அனுப்ப சொல்லியிருக்கேன். அவர் வந்ததும் இதுக்கு என்ன வழின்னு கேக்கலாம். உங்க மனைவி கண்டுபிடிக்க முடியாத அளவுல ஒட்டியாணத்த ஒட்டி தரவேண்டியது எங்க பொறுப்பு.’ என்றேன்.

என்னுடைய அறைக்குள் கடைசியாக நுழைந்த வாடிக்கையாளரும் என்னுடைய யோசனையை கேட்டு அவரை சமாதானப்படுத்த அவரும் சிறிது நேர யோசனைக்குப் பிறகு அமைதியானார். ‘சார் நா போய்ட்டு  ஒரு கால் மணி நேரம் கழிச்சி வரேன். நீங்க கொல்லர்கிட்ட பேசும்போது நான் இருந்தா ஏதாவது பிரச்சினையாயிரும். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ. என் வீட்லயோ என் மாமியார் வீட்லயோ யாரும் ஒட்டியாணம் ஒடஞ்சத கண்டுபிடிச்சிரக்கூடாது சார். அப்புறம் நா என்னமோ ஒட்டியாணத்த ஒடச்சி தங்கத்த சுருட்டிக்கிட்டதா பட்டம் கட்டிருவாங்க. பொறவு நா நாண்டுக்கிட்டுத்தான் சாவணும். சொல்லிட்டன்.’

அவர் அறையை விட்டு வெளியேறி என்னுடைய உதவி மேலாளரை முறைத்துவிட்டு செல்ல நான் என் அறையிலிருந்த வாடிக்கையாளரின் தேவையை நிறைவு செய்து அனுப்பினேன்.

அடுத்த அரை மணி நேரத்தில் நான் கேட்டிருந்த பொற்கொல்லர் வந்து சேர்ந்தார். அவர் பழுதாகிப்போன ஒட்டியாணத்தைப் பார்த்ததும், ‘ இது நம்ம கடை ஜாமானில்ல சார். நம்மளதாருந்த அவ்வளவு ஈசியா ஒடையாது.’ என்றார்.

நான் நடந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறிவிட்டு, ‘இத எப்படியாவது பத்த வச்சி குடுக்கணும். ஆனா பத்த வச்சது தெரியக்கூடாது. அதுக்கு கூட ஏதாச்சும் தங்கம் போடணும்னா போட்டிரலாம்.’ என்றேன்.

அவர் கருத்துப்போயிருந்த இடத்தில் தன்னுடைய விரல்களால் சுரண்டிப் பார்த்துவிட்டு, ‘கொஞ்சம் தூக்கலாவே செம்பு கலந்திருக்காங்க சார். இது கடைகள்லருந்து வாங்கியிருக்க மாட்டாங்க. வாங்கியிருந்த கட முத்திரை இருக்குமே. தனியா ஆசாரிக்கிட்ட குடுத்து செஞ்சிருப்பாங்க. இத ஒட்ட வைக்கிறதும் கஷ்டம். அப்படியே செஞ்சாலும் வெளிய தெரியத்தான் செய்யும் சார்.’ என்றார்.

‘அப்படி சொன்னா எப்படீங்க? வேற என்னதா வழி?’

அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். ‘சார் நா ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?’

‘சொல்லுங்க.’

‘இத நீங்க எடுத்திருக்கவே கூடாது சார். இதுலருக்கற மொத்த தங்கமே பாதிகூட இருக்காது. அவ்வளவு செம்பு சேர்த்திருக்காய்ங்க. முழுசையும் அழிச்சிட்டுத்தான் செய்ய முடியும். அப்படியே அழிச்சீங்கனா பாதிக்கு மேல போயிரும்.’

நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தேன். பாதிக்கு மேல் என்றால் ஏழரை பவுண்! பவுண் ரூ. 650/- விற்ற காலம் அது. அப்படி பார்த்தால் ரூ.5000/- தங்கத்திற்கே போய்விடும். பிறகு செய்கூலி, சேதாரம் என்று பார்த்தால் ரூ.7000/- வரும் என்று கணக்கு போட்டு பார்த்தேன். அந்த காலத்தில் அது கணிசமான தொகைதான். ஒன்று நான் என்னுடைய கையில் இருந்து வைக்க வேண்டும். இல்லையென்றால் நானும் என்னுடைய உதவி மேலாளரும் பாதி, பாதி என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். நான் பொறுப்பேற்ற சமயத்தில் நகைகளுடைய தரத்தைச் சரி பார்க்காததால் முந்தைய மேலாளர்களை இதற்கு பொறுப்பாக்க முடியாது.

ஆனால் அதே சமயம் இப்படியொரு ஒரு தரக்குறைவான ஆபரணத்தை அடகு வைத்து கடன் பெற்ற வாடிக்கையாளருக்கு வங்கியையே குறை கூற எத்தனை மனத்துணிவு வேண்டும் என்று நினைத்துப் பார்த்தேன். நியாயமாக இத்தகைய ஆபரணத்தை அடகு வைத்து கடன் பெற முயன்ற குற்றத்திற்காக வாடிக்கையாளர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமே என்றும் நினைத்தேன்.

‘சரி.. ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க. நம்ம கஸ்டமர் வந்ததும். இப்ப என்கிட்ட சொன்ன விஷயத்த அப்படியே அவர் முன்னால சொல்லுங்க.’ என்று அவரை வெளியே ஹாலில் காக்க வைத்துவிட்டு என்னுடைய மற்ற அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனாலும் மனது சற்றுமுன் பொற்கொல்லர் கூறியதை சுற்றியே சென்றுக்கொண்டிருந்தது.

கால் மணி நேரம் என்று போனவர் ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து வந்தார்.

அவர் முன்னிலையில் பொற்கொல்லர் என்னிடம் கூறியதை மீண்டும் எடுத்துரைத்தார். அதைக்கேட்டதும் என்னுடைய வாடிக்கையாளர் மேலும் பிரச்சினை செய்யாமல் சென்றுவிடுவார் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக, ‘என்ன சார் ரெண்டு பேரும் பேசி வச்சி விளையாடறீங்களா? நீங்க செஞ்ச தப்ப மறைக்க இதுல தங்கமே இல்லேன்னு டிராமா போடறீங்களா? வேணாம் சார். இது நல்லால்லே. நா அனாவசியமா போலீசுக்கு போவேண்டியிருக்கும்.’ என்று மிரட்டினார்.

ஆனால் பொற்கொல்லரோ அசரவில்லை. ‘அண்ணே வேணாம். நீங்களே போலீஸ், கீலீஸ்னு சொல்லி சார உசுப்பேத்திராதீங்க. நான் சொல்றது உண்மை. உங்களுக்கே தெரியாம நீங்க ஏமாந்திருக்கலாம். இதுல பாதிக்கு மேல செம்புதான். நீங்க வேணும்னா நம்ம கடைக்கு வாங்க. நம்ம முதலாளிக்கிட்ட காமிச்சி பாத்துரலாம்.’ என்றார் மிரட்டும் குரலில்.

நான் மவுனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பொற்கொல்லர்களுடைய பரம்பரை தொழிலை சந்தேகித்ததில் அவரும் கோபத்துடன் தன்னுடைய கூற்றில் ஸ்திரமாய் நிற்கவே அதுவரை ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த என்னுடைய வாடிக்கையாளர் ஸ்ருதி குறைந்து சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘அண்ணே.. நீங்க சொன்னது உண்மையா? இது எங்க மாமியார் வீட்ல சீதனமா போட்டதுண்ணே.. நீங்க பாட்டுக்கு எதையாச்சும் சொல்லி வைக்காதீங்க.’

அவருடைய ஸ்ருதி குறைந்த குரலில் இருந்தே அவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்கு புரிந்தது. திருமணத்திற்கு சீதனமாய் மனைவி கொண்டு வந்த நகைகளை எடை போட்டு பார்ப்பதோ, உரைத்துப் பார்ப்பதோ நடக்குமா என்ன?

பொற்கொல்லருக்கும் அவர் குரலில் இருந்த இறக்கம் புரிந்திருக்க வேண்டும். அவர் விடாமல், ‘வேணும்னா வாங்க. கடையில போயி உரைச்சி பாத்துருவோம்.’ என்றார்.

நான் பார்த்தேன். இந்த நேரத்தில் வாடிக்கையாளரை சற்று மிரட்டிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஆகவே அவரை கோபத்துடன் பார்த்தேன். ‘இங்க பாருங்க. என்னெ கேட்டா நீங்க வேணும்னே, அதாவது இது போலி நகைன்னு தெரிஞ்சே பேங்க்ல வச்சி கடன் வாங்கியிருக்கீங்கன்னு சொல்வேன். நீங்க போலீஸ்க்கு போறேன்னு சொன்னா மாதிரி நான் சொன்னா என்ன பண்ணுவீங்க? இதுல பாதிதான் தங்கம்னு இவரே சாட்சி சொல்லுவார். என்ன சொல்றீங்க?’

அவர் அப்போதும் வீம்புடன், ‘சார் சும்மா மிரட்டிப் பாக்காதீங்க. எனக்கு தெரிஞ்சிருந்தா நா ஏன் சார் இந்த ஜாமான திருப்பி எடுக்க வட்டியோட பணத்த கட்டறேன்?’ என்றார்.

‘சரிங்க. ஒத்துக்கறேன். ஆனா நீங்க எப்ப வந்துருக்கீங்க? கெடு எல்லாம் முடிஞ்சி திருப்பி எடுத்துக்கறீங்களா இல்ல ஏலம் விடட்டுமான்னு கேட்டதுக்குப்புறந்தானே.. எங்க நாம எடுக்காம போயி ஏலம் விடற நேரத்துல விஷயம் வெளியே தெரிஞ்சி மாட்டிக்கிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சும் நீங்க மீட்க வந்துருக்கலாமே.’ என்ற நான் சட்டென்று நினைவுக்கு வர நான் என்னுடைய உதவி மேலாளரை அழைத்தேன்.

அவர் வந்ததும், ‘சார் இந்த லோன்ல இந்த ஒட்டியாணத்தோட வேற ஏதாச்சும் நகைங்க இருந்துதா? ஏன்னா அட்வான்ஸ் தொகைய பார்த்தா இந்த நகைய விட கூடுதலா இருக்கே?’ என்றேன்.

‘ஆமா சார்.  ஒரு நாலுவடம் சங்கிலி. ரெண்டு வளையல், நாலஞ்சி மோதரம்லாம் கூட இருக்கு. மொத்தம் முப்பது, முப்பத்தஞ்சி பவுண் சார்.’

நான் உடனே பொற்கொல்லரிடம், ‘நீங்க ஒன்னு பண்ணுங்க. அந்த நகையையெல்லாம் கொஞ்சம் உரைச்சி பாருங்களேன்.’ என்று கூற என்னுடைய வாடிக்கையாளர் எழுந்து, ‘என்ன சார் விளையாடறீங்களா? ஏன் அதையும் உரைச்சி பார்த்து உடைக்க போறீங்களா? வேணாம் சார். ஒடஞ்ச ஒட்டியாணத்த அப்படியே குடுங்க போறும். நானே சரி பண்ணிக்கறேன். தேவையில்லாம பிரச்சினைய பெரிசாக்கிராதீங்க.’ என்று படபடத்தார்.

அவருடைய படபடப்பைப் பார்த்தே மீதமுள்ள நகைகளும் போலியல்லாவிட்டாலும் மாற்று குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன்.

அவற்றை உரைத்து அவை ஒரு வேளை போலியாக இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் யோசித்தேன். அவர் கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் அடைத்துவிட்டார். அத்துடன் ஒட்டியாணம் உடைந்திருந்தாலும் பரவாயில்லை அப்படியே கொடுத்துவிடுங்கள் என்றும் அவர் சரணடைந்திருந்த சூழலில் மேலும் மீதமுள்ள நகைகளை பரிசோதித்து பிரச்சினையை நீட்டி போலிஸ், புகார் என்று அலைவதுடன் என்னுடைய மேலிடத்திற்கும் அறிவிக்க வேண்டி வருமே.

இதெல்லாம் தேவைதானா என்று நினைத்த நான் சற்று பரிதாபத்துடன் என்னை பார்த்தவாறு நின்றிருந்த வாடிக்கையாளரைப் பார்த்தேன்.

பிறகு பொற்கொல்லரைப் பார்த்து, ‘நான் கூப்டதும் நீங்க வந்ததுக்கு நன்றி சார். இவரே  ஒட்டியாணம் ரிப்பேர் பண்ணாட்டாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டதால பிரச்சினைய மேற்கொண்டு வளர்க்க வேணாம்னு பாக்கறேன்.’ என்று கூறிவிட்டு என்னுடைய உதவி மேலாளரிடம், ‘Give him some money for his services.’ என்று அனுப்பி வைத்தேன்.

அவர்கள் இருவரும் வெளியேறியதும் என் வாடிக்கையாளரைப் பார்த்தேன். ‘சார். உங்க பேர்ல தப்ப வச்சிக்கிட்டே எவ்வளவு சாமர்த்தியமா பேசினீங்க? நா நினைச்சா உங்க மேல புகார் பண்ண முடியும். இருந்தாலும் விஷயத்த பெரிசாக்க வேணாம்னு விட்டுடறேன். பேசாம மிச்ச நகையையும் வாங்கிக்கிட்டு போங்க சார்.’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் தலையை குனிந்தவாறு வெளியேற நான் என்னுடைய உதவி மேலாளரை இண்டர்காம்மில் அழைத்து வேறேதும் பிரச்சினை செய்யாமல் நகைகளை கொடுத்தனுப்ப சொன்னேன்.

எப்படி இருக்கிறது பாருங்கள்? அவர் செய்த கலாட்டாவில் அன்று சிறிது நேரம் எல்லோரும் கதிகலங்கி நின்றதை நினைத்துப் பார்க்கிறேன்.  அந்த பொற்கொல்லர் மட்டும் தகுந்த சமயத்தில் பத்பாந்தனைப் போல் வந்திராவிட்டால் தேவையில்லாமல் என் கையிலிருந்து கணிசமான தொகை போயிருக்கும்..

தொடரும்..