02 செப்டம்பர் 2019

சுருங்கி வரும் பதிவர் வட்டம்

சுமார் பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சு வந்த தமிழ் வலைப்பூக்களின் (Blogs) திரட்டியான ‘தமிழ்மணம்’ செயலிழந்து போனதை அடுத்து தமிழ் பதிவர் வட்டம் வெகுவாக சுருங்கி போய்விட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் பதிவுகளை அவை எழுதப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே திரட்டி அவற்றை அழகாக வரிசைப் படுத்தி வெளியிட்டு வந்த ‘தமிழ்மணம்’ நிதிபற்றாக் குறை காரணமாக (அப்படித்தான் தோன்றுகிறது) சடுதியாக செயலிழந்துபோனது நம் தமிழ் பதிவர் வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பலவும் இன்று செயலிழந்து போனதும் உண்மை. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இண்டிப்ளாகும் (Indieblog) கூட இப்போது புதிய அங்கத்தினர்களை ஏற்பதில்லை. கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட பதிவர்களின் பதிவுகளை மட்டும் இப்போதும் திரட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது ஆங்கில வலைப்பூக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திரட்டி என்பதால் அதில் இடம் பெறும் தமிழ் பதிவுகள் வெகு வெகு சொற்பம்தான். அவர்களிலும் பலர் அவ்வப்போதுதான் எழுதுகிறார்கள்.

திரட்டிகள் செயலிழந்து நிற்கும் இத்தகைய சூழலில் பதிவுர்கள் எழுதும் பதிவுகளை மற்ற சக பதிவர்களுக்கோ அல்லது பொது வாசகர்களுக்கோ எடுத்துச் செல்வது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்கள் அறிவார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய சக பதிவாள நண்பர்கள் நட்பு அடிப்படையிலேயே கூகுள் தேடுதலை பயன்படுத்தி தேடிப் பிடித்து வாசித்து வருகிறார்கள் என்பதை ப்ளாகர் வெளியிடும் தகவல்களில் (Statistics) இருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது.

என்னுடைய பதிவுகளை வாசிக்கும் மொத்த வாசகர்களில் சுமார் 95 விழுக்காடு வாசகர்கள் கூகுள் தேடல் வழியாகத்தான் தளத்திற்கு வருகிறார்கள் என்பது கீழ்காணும் திரையை பார்த்தாலே தெரியும்


இந்த படத்தில் மேல் பகுதியில் கூகுள் தேடலுக்கு கீழே ஃபீட்லி (feedly) என்ற தேடல் இருப்பதை காணலாம்.

அது உண்மையில் ‘தேடல்’ அல்ல ‘திரட்டி’. திரட்டி என்பதை விட ’வாசிப்பான்’(reader) என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாசிப்பானின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகத்தான் என்னுடைய ப்ளாகர் ’Stat' பகுதியில் பார்த்தேன். உடனே இது என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கூகுள் தேடலில் ‘feedly' என்று தேடிப்பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த அற்புத கையடக்க 'app.'

இதை உடனே என்னுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கூறியுள்ளபடி செய்து எனக்கு தெரிந்த சில பதிவர்களின் பதிவு விலாசங்களை சேர்த்தேன். அவற்றில் சமீபத்தில் எழுதப்பட்ட பதிவுகளின் விவரங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே கிடைத்தன.



ஸ்மார்ட் செல்பேசி (ஆண்டிராய்ட் அல்லது ஆப்பிள் iOS) வைத்திருப்பவர்கள் இந்த செயலியை (app) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

ஸ்மார்ட் செல்பேசி இல்லாதவர்கள் கனிணியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் விலாசம்: www.feedly.com

இதில் நுழைந்தவுடன் நாம் காணும் login திரை இது::



இந்த தளத்திற்குள் நுழைய (login) தனியாக கணக்கு எதுவும் தேவையில்லை . நம்முடைய கூகுள் அல்லது முகநூல் கணக்கையே பயன்படுத்தலாம்.


இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் நாம் காணும் திரை:



இதில் ’தேடல்’ பெட்டியில் நீங்கள் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்த உடனே அதனுடைய பெயர் பெட்டியின் கீழே காண்பிக்கப்படும். அதையும் க்ளிக் செய்யுங்கள்.


உடனே அந்த தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை காட்டும்.



இந்த திரையில் ‘follow' பட்டனை க்ளிக் பண்ணிட்டு அதுக்குக் கீழே ‘new feed' ஐயும் க்ளிக் செய்யுங்கள்.


இந்த திரையில் உங்களுடைய ‘new feed' பெயரை ‘தமிழ்’ என்றே தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இந்த தளத்தில் உலகெங்கும் உள்ள பல ஆங்கில பதிவுகளும் படிக்க கிடைக்கின்றன. 

நாம் தெரிவு செய்யும் பதிவுகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும் என்பதால் அந்த தொகுப்பின் பெயர் தமிழ் என்று இருந்தால் அவை அனைத்தையும் இந்த தொகுப்பிலேயே சேமித்து வைத்தால் பிறகு படிப்பதற்கு எளிதாக இருக்கும். 

இவ்வாறு நீங்கள் படிக்க விரும்பும் அனைத்தும் தளங்களையும் அதாவது RSS FEED உள்ள் சுமார் 100 தளங்களை இந்த இலவச மென்பொருளில் (free version) சேமித்துக்கொள்ளலாம். நாம் சேமித்த தளங்களின் பட்டியல் திரையின் இடது பகுதியில் காண்பிக்கப்படும்.

இதில் சேமிக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அவை பதியப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயலியில் தரவிறக்கம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். 

செல்பேசியில் என்றால் உடனே அழைப்பான் (notification) வரும். கனிணி என்றால் நாம் இந்த feedly.com தளத்தில் நுழைந்தவுடனேயே புதிதாக வந்துள்ள பதிவுகளின் பட்டியல் காட்டப்படும்.

நான் என்னுடைய செல்பேசியில் சேமித்து வைத்துள்ள பட்டியலிலுள்ள அனைத்து தளங்களின் நகல்களையும் என்னுடைய கனிணியிலும் காண முடிகிறது. இதற்கென்று மீண்டும் உள்நுழைய (login) தேவையில்லை. 

என்னுடைய செல்பேசியில் நான் சேமித்து வைத்துள்ள சுமார் பதினைந்து பதிவர்களின் தளங்களின் பட்டியலை மேலே வெளியிட்டுள்ளேன். இதில் இடம் பெறாத பதிவர்கள் தங்களுடைய தளத்தின் விலாசத்தையும் தாங்கள் பருந்துரைக்கும் பதிவர்களின் தளங்களுடைய விலாசங்களையும் இந்த பதிவின் கருத்துரையில் (comments) நானும் அவற்றை சேமித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் படிக்க உதவியாக இருக்கும். நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.

**********