12 ஜூலை 2007

என் முதல் புத்தகம்

நான் தமிழில் எழுத ஆரம்பித்ததே சமீபத்தில்தான்.

இத்தனை விரைவில் ஒரு புத்தகம் எழுத முடியும் என்றோ அல்லது அதை ஒரு பிரபல பதிப்பகத்தார் மூலம் வெளிக்கொணர முடியும் என்றோ நான் கனவிலும் நினைத்ததில்லை.

தமிழில் வலைப்பூ ஒன்றை துவக்கி எழுத நினைத்ததே ஒரு விபத்துபோலத்தான். அதுவே ஒரு பதிப்பகத்தாரின் கவனத்தை ஈர்த்து என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரிக்க வைத்தது மேலும் ஒரு இனிய விபத்து.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் நண்பர் பத்ரி அவர்களிடமிருந்து 'வசதிப்படும்போது அலுவலகம் வரை வந்து செல்லவியலுமா?' என்று தொலைபேசி வந்தபோது என்ன ஏது என்று கேட்க தோன்றவில்லை. அந்த வாரமே ஒருநாள் அவருடைய அலுவலகம் சென்று அவரையும் அவருடைய தலைமை ஆசிரியர் பா.ராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் இருவரும் தெரிவித்தபோது என்னால் அதை சரிவர செய்யமுடியுமா என்ற ஐயம் எழுந்தது.

இதற்கு காரணம் இருந்தது.

Non-fiction எனப்படும் கட்டுரைகள் எழுதுவது என்பது அத்தனை கடினமல்ல. அது சென்றடையும் வாசகர்களின் தரம் சற்று உயர்ந்ததாகவே இருக்கும். இத்தகைய கட்டுரைகளை படிக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக அவற்றை தேடி படிக்கும் வாசகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் எழுதினாலே போதும்.

ஆனால் ஒரு முழு புத்தகத்தையும் அதை வாசிப்பவர்களின் ஆர்வம் குறைந்துவிடாமல் - அதாவது சுமார் ஒரு மணி நேரம் - எழுதுவது என்பது... என்னைப் பொறுத்தவரை மலைப்பாகத்தான் இருந்தது.

அதுவும் வங்கி சார்ந்த புத்தகம் எழுதுவது...

ஆயினும் என் மீது அவர்கள் இருவரும் வைத்திருந்த நம்பிக்கையை அல்லது எதிர்பார்ப்பை ஏமாற்றுவது சரியல்லவே என்று நினைத்து அடுத்த சில வாரங்களில் சென்னை நகரத்திலிருந்த பல புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கினேன். ஒரு வழிகாட்டுதலுக்கு, ஒரு மாதிரிக்கு, ஒரு புத்தகம் கிடைக்குமே என்ற ஆவலுடன்... அதுவும் தமிழில்..

ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை... .

ஆங்கிலத்திலும் கூட வங்கி பரிவர்த்தனைகளைப் பற்றிய முழுமையான புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை..

என்னுடைய வங்கி அனுபவத்திலிருந்தே ஒரு கருவை உருவாக்கி அதை எப்படி புத்தகமாக வடிவமைக்கப் போகிறேன் என்று ஒரு குறிப்பை தயாரித்து பத்ரி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

என்னுடைய குறிப்பில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 'நீங்கள் இதை பல அத்தியாயங்களாகப் பிரித்து மென் நகலை எனக்கு அனுப்பிவிடுங்கள், நான் என்னுடைய ஆசிரியர்களிடம் கொடுத்து தேவைப்பட்டால் அதை வாசகர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி எழுதச் சொல்கிறேன்.' என்றார்.

அப்படி துவங்கியதுதான் இந்த புத்தகம்...

புத்தகம் முழுவதையும் எழுதி முடிக்க சுமார் மூன்று மாத காலம் பிடித்தது என்றாலும் என்னுடைய எழுத்தை பழுது பார்த்து ஒரு அழகான புத்தகமாக வடிவமைத்து வெளியிட்ட பெருமை பதிப்பகத்தாரையும் அதன் ஆசிரியர் குழுவையே சாரும்.

ஆயினும் சில இடங்களில் எழுத்து நடை சற்று ஜனரஞ்சகமாக போய்விட்டதோ என்று புத்தகத்தைப் படித்த என்னுடைய சில வங்கி நண்பர்கள் கூறியதென்னவோ உண்மை!

'இப்படி எழுதினால் மட்டுமே தமிழ் வாசகர்கள் படிப்பார்கள் அல்லது வாசகர்கள் மத்தியில் இத்தகைய புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கும்' என்றால் அது எந்த அளவுக்கு சரி என்பது தமிழ் புத்தக உலகில் அதிக அனுபவம் இல்லாத எனக்கு தெரியவில்லை.

இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கி பல எழுத்தாளர்களுடைய புத்தகங்களை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பெரும்பாலானவை இத்தகைய நடையில்தான் இருந்தது.

ஆனால் எனக்கு தெரிந்தவரை ஆங்கிலத்தில் இந்நிலை இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்தே, வாசகர்கள் அவருடைய நிலைக்கு (level) உயர்ந்து, வாசிக்க பழகிக்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் அதிக லாபம் இல்லாத இத்தொழிலை பெரும் முதலீடு செய்து நடத்துவதால் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப எழுத்தாளர்கள் இசைந்து கொடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்று நினைக்கிறேன்.

பல புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் கிழக்கு பதிப்பகத்தார் என்னையும் ஊக்குவித்து எழுத வைத்ததற்கு நன்றி.

இதைப் பற்றி ஏன் முன்பே எங்களுக்கு தெரிவிக்கவில்லை. புத்தகம் வெளிவந்த பிறகாவது எழுதியிருக்கலாமே என்று சில வலைப்பதிவு நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் எதற்கும் ஒரு நேரம், காலம் வரவேண்டுமல்லவா? அது இப்போதுதான் வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

இனி நம்முடைய சக வலைப்பதிவாளர், நண்பர் சீனியர் ராகவன் சார் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னுடைய புத்தகத்திற்கு மதிப்புரை எழுதியபோது எழுப்பியிருந்த கேள்விகளுக்கு என்னுடைய விளக்கங்கள்......

நாளை...