சலிப்புடன், ‘என்னடா இது.. மறுபடியும் ஒரு பிரச்சினையா?’ என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் சென்றேன்..
அதற்குள் கைகலப்பு பெரிதாகி தெருச் சண்டையளவுக்கு வந்துவிட்டது.
கும்பலை நெருங்கியதும்தான் விளங்கியது.
ஒரு மாதத்திற்கு முன் NTC Showroom மேலாளரிடம் தகராறு செய்த என்னுடைய கட்டிட உரிமையாளரின் சகோதரர் மகன்தான் இப்போதும் அதே மேலாளரிடம் தகராறு செய்ய அது கைகலப்புவரை சென்றிருக்கிறது.
சரி, என்ன காரணம் என்று விசாரித்தறிந்தபோது இன்று அவர் கோபப்பட்டது சரிதான் என்று எனக்குத் தோன்றியது.
திருச்சியிலிருந்து வந்திறங்கிய Safe Deposit Locker சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ளது. மேலும் அது ஆறடி உயரமுள்ளதாயும் இருந்ததால் அதை கட்டடத்திற்குள் கொண்டு செல்ல அகண்ட வாயிலும் உறுதியான் தளமும் வேண்டும். என்னுடைய கிளைக்கென ஒதுக்கப்பட்ட இடம் NTC துணிக்கடையின் பின்புறம் இருந்ததால் அவர்களுடைய கடை வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம்.
ஆனால் கடை மேலாளர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏனென்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சல் இருக்குமாம்!
இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த National Textile Corporation கடை பண்டிகைக் காலங்களிலேயே ஈயடித்துக் கொண்டிருக்கும். அதன் நேரெதிரில் இருந்த என்னுடைய கட்டிட உரிமையாளரின் சகோதரர் கடையில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும் நேரத்திலும் NTC கடையில் ஓரிரண்டு வாடிக்கையாளர்கள் கூட இருக்க மாட்டார்கள்!
கடை மேலாளர் அவருடைய வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சலாயிருக்கும் என்று பொறுத்தமில்லாத காரணத்தைக் கூறவே நம்முடைய ஹீரோ (கடை உரிமையாளரின் சகோதரர் மகன்) கோபமடைந்ததில் ஆச்சரியமில்லையே, அதுவும் இரவும் எட்டு மணிக்கு மேல்!
மேலும், திருச்சியிலிருந்து வந்திருந்த வாகன ஓட்டுநரும் எப்படியாவது தான் கொண்டு வந்திருந்தவைகளை இறக்கி வைத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என்பதில் குறியாயிருந்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் கடை மேலாளருடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் கடைவாசலில் SDLஐ இறக்கி வைக்க மேலாளர் வாசலின் குறுக்கே நின்றுக் கொண்டு வழி மறிக்க நம்முடைய
ஹீரோ முதலில் கையை ஓங்கியிருக்கிறார்.
எந்த கடை சிப்பந்தி தன்னுடைய மேலாளர் அடிபடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்? அவர்களும் கோதாவில் இறங்கவே அங்கு நிமிட நேரத்தில் Free for all நடந்தேறியிருக்கிறது.
நான் அங்கு சென்றவுடன் நான், நம்முடைய ஹீரோவின் தந்தை மற்றும் அவருடைய சித்தப்பா ஆகியோர் அடங்கிய fire fighting squad இடையில் புகுந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்குள் கடை சிப்பந்திகளுள் ஒருவர் காவற்துறைக்கு தொலைப்பேசி செய்ய வேறு வேலையில்லாத அவர்கள் அட! ஒரு கேஸ் கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் வந்து சேர ஒரு தமிழ் சினிமாவின் க்ளைமாக்ஸ் அங்கு அரங்கேறியது!
இதில் இன்னொரு வேடிக்கை!
நான் ஒரு சைக்கிளில் மோதிய கேஸ் நினைவிருக்கிறதா? அதை விசாரித்து என் மேல்தான் தவறு என்று முடிவு செய்தாரே அதே ஆய்வாளர்தான் இப்போதும் வந்திருந்தார்!
அவ்விபத்து நடந்து முடிந்தபிறகு அந்த காவல் நிலையத்திலிருந்து என் கிளையிருந்த பகுதி காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்திருக்கிறார். தகராறு செய்த கூட்டத்தில் நானும் நிற்கிறேன். என் வண்டியில் அடிபட்ட அப்பள்ளி சிறுவனும் நிற்கிறான்! அத்துடன் அச்சிறுவனுக்காக காவல்நிலையத்தில் ஆஜராகியிருந்த அவருடைய தந்தையும் பெரியப்பாவும்!
எங்கள் எல்லோரையும் ஒருசேர பார்த்த ஆய்வாளர் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றார். எனக்கோ அந்த இக்கட்டான நேரத்திலும் அவர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.
‘என்ன சார்? என்ன தகராறு? ஒரு அரசாங்க ஊழியரை அடிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியுமா உங்களுக்கு?’ என்று அதே பந்தாவில் என்னையும் என்னுடைய கட்டிட உரிமையாளரையும் பார்த்து கேட்டார். அதற்குள் நம்முடைய ஹீரோவை இரு காவலர்கள் பிடித்துக் கொண்டனர். கையில் விலங்கு மட்டும்தான் இடவில்லை.
நான் பதில் கூறுவதற்குமுன் என் முதுகில் கைவைத்து ‘சார் நீங்க தலையிடாதீங்க, நான் பார்த்துக்கறேன்.’ என்ற நம்முடைய ஹீரோவின் தந்தை ஆய்வாளரைப் பார்த்து, ‘சார் யாரும் யார் மேலயும் கை வைக்கலை. நாங்களே இதே சமாதானமா தீர்த்துக்கறோம். நீங்க தயவு செய்து போங்க சார்.’ என்றார்.
ஆய்வாளருக்கு வந்ததே கோபம். ‘சார் என்ன விளையாடறீங்களா? நாங்களே இருக்கற கேஸ்களையே பைசல் பண்றதுக்கு ஆளில்லாம திண்டாடிக்கிட்டிருக்கோம். நீங்க சும்மானாச்சும் ராத்திரி பத்து மணிக்கு (எட்டு மணிதான் ஆகியிருந்தது!) ஃபோன் பண்ணுவீங்க நாங்க வந்து சேர்ந்ததும் நாங்களே பார்த்துக்கறோம் நீங்க போங்கன்னு சொல்வீங்க நாங்க எதுக்கு இருக்கோம்?’ அவர் இடையில் கூறிய ஒரு வசவு வார்த்தையை நாகரீகம் கருதி எழுதாமல் விட்டிருக்கிறேன்.
நம்முடையவர், கடை மேலாளரைப் பார்த்து ‘சார் நான் உங்களை அப்புறமா ‘கவனிச்சிக்கிறேன்’ என்று கண்சாடைக் காட்டினார். உடனே ‘சும்மா வர்ற காச ஏன் விடுவானேன்’ என்று அவருடைய கண்சாடையை மிகச் சரியாகப் புரிந்துக் கொண்ட மேலாளர் ஆய்வாளரைப் பார்த்து, ‘சார் உங்கள யார் வரச் சொன்னா? நாங்க யாரும் கம்ப்ளெய்ண்ட் பண்ணலையே?’ என்றார். அவருக்கு நன்றாகத் தெரியும் தன்னுடைய கடையிலிருந்துதான் யாரோ தொலைப்பேசி செய்திருக்கிறார்களென்று.
கடை மேலாளர் மட்டும் அரசாங்க அதிகாரியாக இல்லாதிருந்தால் ஆய்வாளரின் கை அவருடைய கன்னத்தைப் பதம் பார்த்திருக்கும். அவருடைய கை விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றதிலிருந்தே யாரை அறை விடலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.
‘சார் உங்க கடையிலருந்துதான் ஃபோன் வந்தது. யாருன்னு பேர கேக்கறதுக்குள்ள கட் பண்ணிட்டாங்க.’
மேலாளர் தன் ஊழியர்களைப் பார்த்து. ‘யோவ் யார்யா பண்ணது? உங்கள் நான் பண்ண சொன்னேனா? ஏன்யா அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி என் மானத்த வாங்கறீங்க?' என்றவர் கோபத்துடன் நின்றுக் கொண்டிருந்த ஆய்வாளரைப் பார்த்தார், 'சார், யார் பண்ணியிருந்தாலும் அவங்க சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நம்ம ஓனர் சொன்னா மாதிரி இத நாங்களே தீர்த்துக்கறோம் நீங்க தயவுசெய்து போங்க சார்.’ என்றார் தன் கைகளைக் கூப்பியவாறு.
ஆய்வாளருக்கு திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. குழுமியிருந்தவர்களைப் பார்த்து முறைத்தார். ‘யோவ் ஒன்னுமில்லேன்னு சார் சொல்லிட்டாரில்லே. எதுக்குய்யா கூட்டம் போட்டுக்கிட்டு?’ என்றவர் திருச்சியிலிருந்து வந்த வாகனத்தின் பதிவுப் பலகையை அப்போதுதான் பார்த்தவர்போல் அவரை அதட்டினார். ‘யோவ், எந்த ஊர் வண்டி இது? பர்மிட் இருக்காய்யா? எங்க காட்டு?’
அவர் பதற்றப்படாமல் தன் ஆர்.சி. புத்தகத்தையும் ரூட் பர்மிட்டின் நகலையும் எடுத்து காண்பித்தார். நிச்சயமாக அது அந்த ஆய்வாளருடைய வேலை இல்லை என்பது ஓட்டுனருக்கும் தெரியும் அங்கு குழுமியிருந்த பலருக்கும் தெரியும். இருப்பினும் காவல்துறை அதிகாரியாயிற்றே என்ற மரியாதையில் மவுனமாக நின்றனர். இரண்டையும் பேருக்கு பார்த்த ஆய்வாளர் அரைமனதுடன், ‘சரி, சரி. போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாம சீக்கிரம் இறக்கி வச்சிட்டு போ.’ என்றவாறு தன்னுடன் வந்திருந்த இரு காவலர்களையும் பார்த்து, ‘யோவ், ஓடறவன பிடிக்காதீங்க. நிக்கறவன் எங்க ஓடிடப் போறாங்கறமாதிரி ஆளுக்கு ஒரு பக்கமா பிடிச்சிக்கிட்டு நில்லுங்க. போங்கய்யா, அந்த பையனை விட்டுட்டு போய் ஜீப்ல ஏறுங்க.’ அதட்டியவாறு அவரும் காத்திருந்த ஜீப்பில் ஏறிக் கொண்டு வந்த வேலையை உருப்படியாக நடத்த முடியாமல் தடுத்த நம் ஹீரோவின் தந்தையைப் பார்த்து முறைத்துவிட்டு ஓட்டுனரை எரிச்சலுடன் பார்த்து ‘வண்டிய எடுய்யா. ராத்திரி நேரத்துல உசிர வாங்கிக்கிட்டு...’ என்று இரைந்தார்.
காவல்துறை வாகனம் சென்றுக் கூட மறைந்திருக்கவில்லை. கடை மேலாளர் நம் ஹீரோவைப் பார்த்து முறைத்தார். ‘டேய் பையா. உங்கப்பா மூஞ்சிக்காக விட்டுட்டேன். ஆமா, இவந்தான் என்னை அடிச்சான்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தேன்னா உன்ன உள்ள தூக்கிப் போட்டுருப்பான். பாய், உங்க பையன் கிட்ட சொல்லி வைங்க. இனியொருதரம் இப்படி நடந்துச்சு, ஜென்மத்துக்கும் நம்ம கடைய விட்டுக் கொடுக்க முடியாத மாதிரி பண்ணிருவேன்.’
நம்முடைய ஹீரோ திமிறிக் கொண்டு வர அவருடைய தந்தை அவரைப் பார்வையாலேயே அதட்டி ‘நீ கடைக்குப் போ. நான் பேசிட்டு வரேன்.’ என அவரும் தலையைக் குனிந்துக் கொண்டு சென்றார்.
கடை மேலாளர் என்னைப் பார்த்தார். ‘சார் இன்னும் ஒரு கால் மணி நேரம் பொறுத்துக்குங்க. ஒன்பது மணிக்கு கடைய மூடிருவோம். உங்க மேற்பார்வையிலயே இறக்கி வச்சுட்டு போறீங்கன்னா, உங்க பொறுப்புல கடை சாவிய கொடுத்துட்டு போறேன். காலையில ஒரு ஒன்பது மணிக்கு கொண்டு வந்து கொடுத்துறுங்க. என்ன சார்?’ என்றார்.
அதுவும் நல்ல யோசனைதான் என்பது போல் நான் என் உரிமையாளரைப் பார்த்தேன். அவர், ‘சார் சொன்னா மாதிரியே செஞ்சுருவோம் சார். அதுவரைக்கும் நீங்க நம்ம கடையில வந்து உக்காருங்க .’ என்ற உரிமையாளரையும் கடை மேலாளரையும் பார்த்தேன். ‘சரி சார். நான் பாத்துக்கறேன். நீங்க சாவிய குடுத்துட்டு போங்க.’
ஆக கைகலப்பு போராட்டம் ஒரு வழியாக முடிந்து அமைதியானது.
நான் அங்கிருந்து நகர்ந்து எதிரிலிருந்த கடையை நோக்கி செல்ல நம்முடைய ஹீரோவின் தந்தையும் அவருடைய சகோதரரும் கடை மேலாளருடன் ரகசியமாக ஏதோ பேசுவது தெரிந்தது.
என்னவாயிருக்கும் என ஊகித்து என் நேரத்தை விரயமாக்க விரும்பாமல் நான் எதிரிலிருந்த கடைக்குள் நுழைந்து கல்லாவில் கோபத்துடன் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஹீரோவைப் பார்த்தேன்.
அவர் என்னைக் கண்டதும், ‘சார் அப்பாவுக்காக அந்த ஆளை வுட்டுட்டேன். இல்லன்னா இன்னைக்கே ரெண்டுல ஒன்னு பார்த்திருப்பேன்.’ என்றார்.
நான் என்ன சொல்வதென தெரியாமல் மவுனம் சாதித்தேன்.
அவர் தொடர்ந்து, ‘எங்க சித்தப்பா எதுக்கும் லாயக்கில்ல சார். கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சிக்கிட்டு.. நாலு ஆளுங்கள வச்சி எல்லாத்தையும் தூக்கி ரோட்ல வீசியெறிஞ்சிட்டு கடைய பூட்டாம..’ என்று ஆத்திரத்துடன் பேச ஆரம்பிக்க கடைக்குள் நுழைந்த அவருடைய தந்தையும், சித்தப்பாவும் அவரைப் பார்த்து முறைக்க அவர் வாயை மூடிக்கொண்டு கல்லா பெட்டியிலிருந்து இறங்கி கடைக்குப் பின்புறமிருந்த வீட்டை நோக்கி நடந்தார்!
இன்றைய பதிவ பிரச்சினைன்னு போடாமயே முடிச்சிரலாம்னு பார்த்தா முடியலையே..
அன்றைக்கு இரவு SDL ஐ கடை வழியாகக் கொண்டு சென்றபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்பட்ட விபத்து அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெரிய தலைவலியாய் போனது..
தொடரும்..