அன்னா ஹசாரேவும் அவருடைய குழுவினரும் தங்களுடைய உண்னாவிரதத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் குதிக்கவிருப்பதாகவும் எதிர்வரும் தேசீய பொதுத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரவேற்கத்தக்க முடிவு.
இன்று நாட்டில் பரவி நிற்கும் ஊழலுக்கு முக்கிய காரணமே இந்திய அரசியல்வாதிகள்தான் என இதுவரை கூறிவந்த அன்னாவும் அவருடைய குழுவினரும் தனிக்கட்சி ஒன்றை துவக்கி தற்போது தேசீய அரசியலில் உள்ள எந்த தேசிய /பிராந்திய கட்சிகளுடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமால் தேர்தலை தனித்து எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்பதையும் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த ஆண்டு, நாட்டிலுள்ள ஊழலை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் துவக்கியபோது மக்கள், குறிப்பாக படித்த, நடுத்தர மக்களிடமிருந்து அவருக்கு அபிரிதமான ஆதரவு இருந்தது உண்மைதான். ஏனெனில் அவருடைய போராட்டம் எந்த தனிப்பட்ட அரசியல்வாதிக்கோ கட்சிக்கோ எதிராக இல்லாமல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்து நடத்தப்பட்டது.
அவருடைய கோரிக்கை நியாயமானதோ இல்லையோ அல்லது வெறும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நாட்டிலுள்ள ஊழலை ஒழித்துவிட முடியும் என்ற வாதம் சரியோ இல்லையோ இதற்கு ஒரு துவக்கத்தையாவது ஏற்படுத்த லோக்பால் மசோதா உதவும் என்ற எண்ணம் நடுத்தர மக்களிடம் இருந்ததுதான் அவருடைய முயற்சிக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் ஆதரவு கிடைக்க காரணம்.
ஆனால் ஊழலை எதிர்த்து போராட்டத்தை துவக்கிய அன்னாவும் அவருடைய குழுவினரும் நாளடைவில் நாட்டை தற்போது ஆளும் மத்திய அமைச்சர்கள் பலரையும், ஏன் பிரதமரையும் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரணாப்பையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்ட முனைந்ததுதான் அவரை அதுவரை ஆதரித்து வந்த பலரையும் பின்வாங்க வைத்தது.
அன்னாவும் அவருடைய குழுவினரும் ஒரு பொறுப்பற்ற, தாங்கள் கூறுவதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்று பிடிவாதம் பிடிக்கும் ஒரு கூட்டம் என்பதுதான் இன்று பலருடைய கருத்தும் என்றால் மிகையாகாது. ஆகவேதான் இம்முறை அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை அறிவித்தபோது முன்பு இருந்த அளவுக்கு கூட்டம் சேராமல் போனது. மேலும் தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே ஊழல் பேர்வழிகள்தான் என்பதுபோன்ற பொறுப்பற்ற பேச்சும் பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அவருடைய இயக்கத்தை புறக்கணிக்க வைத்தன.
இதே நிலை நீடித்தால் தன்னுடைய போராட்டம் வலுவிழந்துபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்குத் தள்ளியிருக்க வேண்டும். இப்போதுமட்டுமல்லாமல் இனி எப்போதும் இதுபோன்ற போராட்டத்திற்கு மக்களுடைய வரவேற்பு முன்பிருந்ததுபோல் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் - இவர்களில் பலருக்கு இதுவேதான் இப்போதைய முக்கிய தொழில் என்பது வேறுவிஷயம் - ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கி தேர்தலை சந்திக்கலாம் என்ற யோசனையை அன்னாவின் மனதில் தெளித்திருக்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சியை, அதுவும் தேசிய அளவில், துவக்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்பது அத்தனை எளிதா என்ன? இந்த முயற்சியில் ஒருசில பிராந்திய கட்சிகள் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால் தேசிய அளவில் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது அன்னா ஹசாரேவுக்கு தெரியுமோ என்னவோ அவருடைய குழுவிலுள்ள 'அறிவுஜீவிகளுக்கு' நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு பொழுதுபோக வேண்டுமே? தேர்தலில் வெற்றி பெற்றால் அது தங்களுடைய சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தோற்றால் ஊழலுக்கு கிடைத்த வெற்றி என்றும் - கேப்டன் பாணியில் - ஒரு அறிக்கை விட்டுவிட்டுலாமே என்று நினைத்திருக்கலாம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்து முடிந்த 10 மாநில தேர்தல்கள் பல பிராந்திய கட்சிகளுக்கே வலு கூட்டியுள்ளன என்பதையும் கருத்தில்கொண்டால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவும் கூட கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான். இந்த லட்சணத்தில் அரசியலுக்கு அறிமுகமே இல்லாத அறிவுஜீவிகளை களத்தில் இறக்கிவிடப் போகும் அன்னாவின் கட்சியின் நிலை என்னவாக இருக்கும்?
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக