அரசு அலுவலகங்களில் அளிக்கப்படும் பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க உதவும் உத்தரபிரதேச அரசின் உத்தரவை இந்திய அரசியல் சாஸனத்திற்கு எதிரானது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தன் விளைவாக சட்டத் திருத்தம் கொண்டு வர நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் இதுவரை குரல் கொடுக்க துணியவில்லையென்றாலும் இந்த செய்தியை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளின் வாசகர் பகுதிகளிலும் இதற்கு எதிர்மறையான கருத்துக்களே குவிந்தவண்ணம் உள்ளன. அல்லது அத்தகைய கருத்துக்கள் மட்டுமே பத்திரிகைகளால் பிரசுரிக்கப்படுகின்றன என்றும் கூறலாம்.
அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட மக்கள் பதவி உயர்வு அளிக்கப்படும் கட்டத்திலும் அதே மாதிரியான ஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. அப்படியானால் இத்தகைய ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் நுழையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையிலும் அதே பதவியில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய கருத்தா?
அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை வயது, கல்வித் தகுதி (மதிப்பெண் விகிதம்) ஆகியவற்றில் சலுகை வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் அவர்களுடைய மூதாதையர்களுக்கு அவர்களுடைய சாதியை காட்டியே கல்வித்துறையில் சம வாய்ப்புகளை அளிக்க மறுத்ததன் விளைவுதானே, கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களில் பலரும் இன்றுவரை பின்தங்கியிருப்பதற்குக் காரணம்? அதனால்தானே அவர்களுக்கு இன்னமும் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது?
எத்தனை காலம்தான் இத்தகைய சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று மேல்சாதியினருடைய முறையீட்டில் ஓரளவுக்கு நியாயம் இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் சாதியின் அடிப்படையில் மக்கள் பிரிவு படுத்தப்பட்டு இழிவு படுத்தப்படுவதும் நடந்துக்கொண்டுதானே இருக்கிறது? சுதந்திர இந்தியாவில் நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய பல வாய்ப்புகள் அவர்களுக்கு அவர்களுடைய சாதியின் அடிப்படையில் மறுக்கப்பட்டு வந்ததன் விளைவாகத்தானே அவர்களில் பலரும் இன்றும் பொருளாதாரத்திலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்?
ஆகவே இத்தகையோர் சமுதாயத்தில் மற்றவர்களைப்போன்றே அவர்களும் சமமாக கருதப்படும் வரையிலும் - அதாவது சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள கிராமத்திலும் சாதியின் அடிப்படையில் மக்கள் இழிவு படுத்தப்படுவது ஒழியும் வரையிலும் - அவர்களுக்கென அரசு செய்துவரும் ஒதுக்கீடும் தொடரத்தான் வேண்டும்.
இந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியிலுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி பணியாளர்களுக்கு பதவி உயர்விலும் தனி ஒதுக்கீடு மிகவும் அவசியமே. பத்து இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் இத்தகைய ஒதுக்கீட்டின் மூலம் எஸ்.சி/எஸ்.டி வகுப்பைச் சார்ந்த இருவர் அல்லது மூவர் மட்டுமே பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகைய ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெறும் எஸ்.சி/எஸ்.டி அதிகாரிகளில் ஒருசிலர் திறமையற்றவர்களாகவோ நேர்மையற்றவர்களாகவோ இருக்க வாய்ப்பிருந்தாலும் அதனால் ஒன்றும் அரசு நிர்வாகம் சீர்கெட்டுப்போய்விடாது. இதனால் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பல தகுதியுள்ள மேல்சாதி பணியாளர்கள் இழந்துவிடுவதால் அவர்கள் மனச்சோர்வுக்குள்ளாகி தங்கள் பணியில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலும் எவ்வித நியாயமும் இல்லை. இப்போதும் கூட பதவி உயர்வுக்கு தகுதியுள்ள அனைவருக்குமே பதவி உயர்வு கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை!
**********