16 பிப்ரவரி 2007

கடந்து வந்த பாதை - ரவி 2

ரவியும் அவருடைய மனைவி மல்லிக்காவும் மாலையும் கழுத்துமாய் வீட்டு வாசலில் வந்து நின்றபோது அவருடைய தாயாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சாஸ்திரங்களின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும் தான் வைத்திருந்த நம்பிக்கையை தன்னுடைய சொந்த அதுவும் ஒரே மகனே மதிக்கவில்லை என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த மகன் தான் பார்த்து வைக்கவேண்டிய பெண்ணை மட்டுமே திருமணம் செய்துக்கொள்வான் என அக்கம்பக்கத்தினரிடமெல்லாம் கூறிவந்திருந்த அவருக்கு தன்னுடைய மகனுடைய செயல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது என்பது அன்று அவர் நடந்துக்கொண்ட விதமே தெளிவாக எடுத்துக்காட்டியது.

அந்த சோக நிகழ்ச்சியை எத்தனை முயன்றாலும் வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலாது. ஏற்கனவே இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் ரவி ரகசியமாய் அதுவும் வேறொரு இனத்தைச் சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வந்து நின்றதை பார்த்தபோது கொதித்தெழ புதுமணப் பெண்ணை வரவேற்க வேண்டிய சமயத்தில் அது ஒரு துக்க வீடாக மாறிப்போனது.

ஆம்.. ரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் போய் மயக்கமடைந்து விழ ரவியின் தந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்க ரவி சடுதி நேரத்தில் மாலையைக் கழற்றிவிட்டு என்னுடைய வாகனத்தில் தாயைக் கிடத்த நானும் அவரும் அடுத்திருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினோம்.

இருவார சிகிச்சை. நினைவு திரும்பியது. ஆனால் ஒரு கை, கால் செயலிழந்துபோயின. பேச்சும் பறிபோனது.

அந்த நேரத்திலும் நிதானமிழக்காமல் தன்னுடைய மனைவியையும் தாயையும் அணைத்துச் சென்ற ரவியின் பக்குவத்தையும் அவனுக்கு துணையாய் நின்று மருமகளை வீட்டிற்குள் சேர்த்துக்கொண்ட அவனுடைய தந்தையையும் இப்போதும் நினைத்து வியக்கிறேன்.

அதுபோலவே புதுமணப்பெண் மல்லிகாவும். வயதுக்கு மீறிய பக்குவத்துடன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்த ரவியின் தாய்க்கு ஒரு கைதேர்ந்த தாதியைப் போல் அடுத்து வந்த சில மாதங்கள் சேவை செய்ததைப் பார்த்து அந்த குடியிருப்பில் இருந்த அனைவருமே வியந்து நின்றனர் என்றால் மிகையாகாது.

அடுத்த சில மாதங்களில் ரவியின் தாயாருடைய உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் அடைந்தது.

மல்லிகாவின் பணிவிடை அவருடைய மனதை மாற்றியிருக்கும் என்றுதான் நானும் மற்றவர்களும் நினைத்திருந்தோம். ஆனால் எங்களுடைய நினைப்பைப் பொய்யாக்கினார் அவர். செயலிழந்த கையும், காலும் சற்று சரியானதுமே தன் மருமகளை வெளியேற்றுவதிலேயே குறியாயிருந்தார் அவர். ரவியும் அவருடைய தந்தையும் எத்தனை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் நினைத்திருந்தது மல்லிகாவை வெளியேற்றிவிட்டு தன்னுடைய மகனுக்கு வேறொரு திருமணம் வைப்பது என்று!

ஆனால் அதற்கு ரவி ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்திருந்தும் அவர் அதிலேயே குறியாயிருந்ததுதான் வேதனை. ரவியின் தந்தை ஒரு சாதுவான மனிதர். மனைவி சொல்லை தட்டாத கணவர். தன்னுடைய மனைவி ரவி வீட்டில் இல்லாத சமயங்களில் மல்லிகாவிடம் நிர்த்தான்சயமாக பேசும் வார்த்தைகளுக்கு எதிர் பேச்சு பேச விரும்பியும் பேச முடியாத கோழை..

மல்லிகா குணத்தில் சொக்கத் தங்கம். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து சகோதரனுடைய அரவணைப்பில் வளர்ந்திருந்த அவளுக்கு ரவியின் தாயாருடைய அரக்கக் குணம் பழகிப்போனது. எந்த ஒரு சுடுசொல்லுக்கும் புன்னகையையே பதிலாய் தந்தவரை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். 'என்ன பொண்ணும்மா நீ? அவங்க இவ்வளவு பேசறாங்க எப்படி பொறுத்துக்கறே?' என்று அந்த குடியிருப்பிலிருந்த அவர் வயதொத்த பெண்கள் சிலர் சீண்டிப்பார்த்தபோது அதற்கும் ஒரு புன்னகை..

ரவியின் தாயாருக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்த மல்லிகா ஒரு சமயத்தில் அந்த வேலையையும் ராஜிநாமா செய்ய நினைத்தபோது என்னுடைய மனைவி அதை எப்படியோ தடுத்து நிறுத்தினார். 'இல்லக்கா.. நா ஆஃபீசுக்கு போயி பெருசா என்ன ஆவப்போவுது? ரவியோட சம்பளமும், மாமாவோட பென்ஷனுமே ஜாஸ்திக்கா. மாமி எப்படியாவது நல்லபடியா ஆயி மறுபடியும் வேலைக்கு போனா அவங்க போக்குலயும் மாறுதல் இருக்கும்னு நினைக்கேன்..அதான்..' என்றவரை நானும் தலையிட்டு 'வேலைய மட்டும் விட்டுராதம்மா.' என்று தடுத்து நிறுத்தினோம்.

அதுவே வினையாய் போனது. தன்னுடைய தாயார் முழுவதும் நலமடையாத நிலையில் மல்லிகா பணிக்கு திரும்புவதை ரவியே விரும்பவில்லை. 'இன்னும் எதுக்கு மல்லி வேலை? அம்மா இப்ப என்ன சொன்னாலும் என்னைக்காவது ஒருநா ஒன்னெ ஏத்துக்காம போயிரமாட்டாங்க. அதனால நீ பேசாம ராஜிநாமா செஞ்சிட்டு வீட்டோடயே இரு. அம்மா மறுபடியும் வேலைக்கு போற நிலைம வந்ததும் நானே ஒனக்கு வேற ஒரு வேலை பார்த்து தரேன்.' என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் மல்லிகா வேலையை உதறுவதில் காட்டிய தயக்கம் ரவியை மேலும் ஆத்திரமூட்டியது.

நானும் என்னுடைய மனைவியும் கூறிய அறிவுரையால்தான் மல்லிகா வேலையை விட மறுக்கிறார் என்பதை எப்படியோ அறிந்துக்கொண்ட ரவி ஒரு சந்தர்ப்பத்தில் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தலையிட்டால் நமக்கு மரியாதையில்லை என்பதை உணர்ந்த நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் ரவியின் தந்தை என்னுடன் நட்பாகவே இருந்தார்.

அடுத்த சில மாதங்கள் அந்த குடும்பத்தில் அன்றாடம் நடந்த சச்சரவுகளையும் ரவியும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்துக்கொண்டு மல்லிகாவை பழித்துரைத்ததையும் பார்த்தும் பாராமுகமாக இருந்து அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. 'ஏங்க நம்மால என்ன பண்ண முடியும். மல்லிகாவுக்கு கவலப்படறதத் தவிர நம்மால் இப்போதைக்கி ஒன்னும் பண்ணமுடியாது.' என்றார் என் மனைவி.

ஒரு கட்டத்தில் அந்த குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்களுடைய சங்க செயலாளரே தலையிடும் அளவுக்கு குடும்பச் சண்டை பெரிதாகிப் போனது. 'இது எங்க குடும்ப விஷயம். ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க.' என்று அவரையும் ரவி எடுத்தெறிந்து பேச அவரும் வேறு வழியில்லாமல் ஒதுங்கிப் போனார். ரவியின் தாயாருடைய போக்கால் அந்த குடியிருப்பிலிருந்த பெரும்பாலோனோர் அந்த குடும்பத்தையே ஒதுக்க துவங்கினர்.

இதற்கு மல்லிகாவே காரணம் என்று கருதிய ரவியின் தாய் அவளை மேலும் தன்னுடைய வார்த்தைகளால் நிந்திக்க துவங்கினார். பொறுத்தது போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஒருநாள் திடீரென்று மல்லிகா யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதை முற்றிலும் எதிர்பாராத ரவி மல்லிகாவின் அலுவலக நண்பர்கள் மூலமாக அலைந்து திரிந்தும் பலனில்லாததால் கலங்கிப்போனார். அந்த குடியிருப்பிலிருந்த எல்லோருடனும் பகையை வளர்த்துக்கொண்டிருந்ததால் எவரும் அவருடைய உதவிக்கு வர முன்வரவில்லை. எனக்கு விருப்பமிருந்தும் தயக்கமாக இருந்தது.

காவல்துறையினரிடம் செல்லவும் அவர்களுக்கு தயக்கம். வேறு வழியின்றி ரவியின் தந்தை என்னை அணுகி, 'அவனெ பாக்கவே பாவமாயிருக்கு சார். அவனோட அம்மா பக்கம் பேசறதா நினைச்சி மல்லிகாவ திட்டுனாலும் அவனுக்கு அந்த பொண்ணு இல்லாம முடியல சார். அந்த அளவுக்கு அவ மேல உசிரையே வச்சிருக்கான்.. எல்லாத்தையும் அவ அம்மாவுக்காக மறைச்சி வச்சிருந்துருக்கான். ஒங்கக் கிட்ட வந்து உதவி கேக்கவும் தயக்கம். நீங்கதான் ஏதாவது செய்யணும் சார்.' என்றார் பரிதாபமாக.

நல்லவேளையாக என்னுடைய கிளையில் வாடிக்கையாளராக ஒரு உயர் காவல்துறை அதிகாரி இருந்தார். அடுத்த நாளே நான் ரவியை அழைத்துக்கொண்டு மல்லிகாவின் சமீபத்திய புகைப்படத்துடன் அவரைச் சென்று சந்தித்தேன்.

அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்திலேயே அவரிடமிருந்து அழைப்பு வந்தது. 'மிஸ்டர் ஜோசப், நீங்க மட்டும் வாங்க. அவருக்கு தெரிய வேணாம். ' என்ற அவருடைய அழைப்பின் பொருள் விளங்காமல் அவருடைய அலுவலகத்திற்கு ஓடிச் சென்றேன்.. 'மிஸ்டர் ஜோசப் நீங்க சொன்ன பொண்ணு இதா பாருங்க?' என்று ஒரு பெண்ணின் சடலத்தின் புகைப்படத்தை காட்ட நான் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் ஆமாம் என்று தலையை அசைத்தேன். முட்டாள் பெண்.. கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டாள்! 'சாரி சார்.. இத நீங்களே அவங்கக்கிட்ட சொல்ற விதத்துல சொல்லி அவர கூட்டிக்கிட்டு போய் ஜி.எச் மார்ச்சுவரியிலருக்கற பாடிய வாங்கிக்கிருங்க.'

எப்படிச் சொல்வேன் அவரிடம்?

ஆனால் சொல்லத்தானே வேண்டும், வேறு வழி?

நான் எதிர்பார்த்திருந்ததுபோலவே ரவி நிலைகுலைந்துப் போனார். அவருடைய தந்தையோ குற்றவுணர்வால் குன்றிப்போனார். ரவியின் தாயாரோ 'விட்டது சனியன். அந்த ஒடம்ப அவங்களே எரிச்சிக்கட்டும் நீ போகக்கூடாது.' என்றார் தன் மகனிடம்.

அப்போதும் தன்னுடைய மனைவியை எதிர்த்துப் பேச முடியாமல் எங்களைப் பார்த்து அழுத ரவியின் தந்தையை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. வெறுப்புடன் விலகிப் போனேன். ரவி முதன் முதலாக தன்னுடைய தாயை பொருட்படுத்தாமல் தன்னுடைய நண்பர்களுடைய உதவியுடன் மல்லிகாவின் உடலை பெற்று தகனம் செய்ய முனைய நானும் குடியிருப்பிலிருந்த சில ஆண்களும் அவருடன் சென்று ஈமக்கடனை நிறைவேற்றினோம். இறுதியில் திரும்பி வரும் நேரத்தில் அவர் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, 'நீங்க சொன்னப்பவே அவள கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிருந்தா என் மல்லிகாவ நா இழந்துருக்கவே மாட்டேனே சார்..' என்று கதறியழுத காட்சியை நெடுநாட்கள் என்னால் மறக்கவே முடியவில்லை.

அத்துடன் நின்றாரா அவர்?

அன்று இரவே தன்னுடைய படுக்கையறையிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார், தன்னுடைய முடிவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு!

மரித்தபோதும் தன்னுடைய தாயை குறைசொல்ல விரும்பாத அன்பு மகனாக!

அதன் பிறகு கதறியழுத அவருடைய தாயை அந்த குடியிருப்பிலிருந்த யாருமே தேற்ற முன்வரவில்லை. செய்தி கேட்டு வந்திருந்த அவர்களுடைய உறவினர்களும் விட்டேத்தியாக கடமைக்கு இறுதிச்சடங்கில் பங்குகொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

அடுத்த ஆறே மாதத்தில் இருவருமே அந்த குடியிருப்பில் இருக்க விருப்பமில்லாமல் வெளியேற நானும் அடுத்த சில மாதங்களில் சென்னையிலிருந்து மாற்றலாகிப் போனேன்.

அந்த குடியிருப்பை வாங்க யாருமே முன்வராமல் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் காலியாகவே கிடந்தது என பிறகு கேள்விப்பட்டேன்.

*****

6 கருத்துகள்:

  1. Very touching incident sir. And your narration is fantastic. I adore you sir.

    Mahesh

    பதிலளிநீக்கு
  2. ஒரு மோசமான பெண்ணைவிட முதுகெலும்பில்லாத ஆண்மகனால் குடும்பத்திற்க்கு கேடு அதிகம்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க தேசாபிமானி,

    Very touching incident sir.//

    நன்றிங்க..

    கதைகளில் வருபவற்றைவிடவும் உருக்கமானவை நம் வாழ்வில் நடப்பவை.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஆதிபகவான்,

    ஒரு மோசமான பெண்ணைவிட முதுகெலும்பில்லாத ஆண்மகனால் குடும்பத்திற்க்கு கேடு அதிகம். //

    உண்மைதாங்க..

    ஆனா நிறைய ஆண்கள் பெண்களுக்கு பயந்து இப்படி இருப்பதில்லை. வீணாக குடும்பத்தில் சச்சரவு வேண்டாமே என்றுதான். ஆனால் அதை கோழைத்தனமாக நினைத்துக்கொண்டு சில பெண்கள் ஆடும் ஆட்டம்தான் கொடுமை.

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் சார்,

    தன் குழந்தைகளின் மகிழ்ச்சி நல்வாழ்வை விடத் தனது பிடிவாதமே பெரிது என்று நிற்கும் தாயை என்ன சொல்ல? குழந்தைகளை மனிதர்களாக மதிக்காமல் தனது சொத்துக்களில் ஒன்றாக கருதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :-(

    அன்புடன்,

    மா சிவகுமார்

    பதிலளிநீக்கு
  6. வாங்க சிவக்குமார்,

    குழந்தைகளை மனிதர்களாக மதிக்காமல் தனது சொத்துக்களில் ஒன்றாக கருதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்//

    உண்மைதாங்க. இத்தகையோரால் தாய் என்ற சொல்லே களங்கப்பட்டுவிடுகிறது.

    பதிலளிநீக்கு