11 ஆகஸ்ட் 2006

கோவா பயணம் 2

ஆஹா.. போதையில் விழுந்தாலும் யாருக்கு தெரியப் போகிறதென்ற திருப்தியில் குடிமகன்கள் அனைவரும் கூடத்தின் பின் பகுதியிலிருந்த இருக்கைகளை தவிர்த்து கையிலிருந்த கோப்பைகளுடன் மெத்தைகளில் அமர இன்னிசை உதாஸ் சாப்பின் தங்கக் குரலுடன் துவங்கியது..


Photobucket - Video and Image Hosting




பங்கஜ் உதாஸ்சைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நான் பலமுறை அவருடைய பாடல்களை கேட்டிருந்தாலும், தொலைக் காட்சியில் பார்த்திருந்தாலும் அன்றுதான் அவரை மிக அருகில் இருந்து பார்க்கவும் அவருடைய இன்னிசையை கேட்கவும் முடிந்தது.

மாலை துவக்க விழாவில் அரங்கம் நிறைந்திருந்தாலும் அன்று இரவு இசை நிகழ்ச்சி குறிப்பிட்ட விருந்தினர்களுக்கென மட்டுமே நடந்ததால் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை.

அரங்கத்தின் முன் பாதியில் தரையில் மெத்தைகளும் திண்டுகளும் பிற்பாதியில் சுமார் ஐம்பது இருக்கைகளும் என ஏற்பாடு சிறப்பாக இருந்தது.

காலையில் மிகவும் ஃபார்மலாக உடையணிந்து வந்திருந்த எல்.ஐ.சியின் முன்னாள் தலைவர், IIT Powai பேராசிரியர் உள்பட்ட அனைத்து முக்கிய விருந்தினரும் அவரவர் எத்னிக் உடைகளில் வந்திருந்தனர்.

என்னைப் போன்ற சிலர் டீஷர்ட், ஜிப்பா குர்த்தா உடையில். எல்லோருக்கும் கலர், கலரான துப்பட்டாக்களை இலவசமாகவே வழங்கினர்.

அரங்கம் மங்கலான விளக்கொளியில் மறைந்திருக்க பளிச்சென்ற விளக்கொளியில் மேடை பங்கஜ் உதாஸ் சாப் குழுவினர் காட்சியளித்தனர்.

சற்று முன் அரங்கத்திற்கு வெளியே கோப்பை கோப்பையாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தவர்கள்தான் - அந்த ஹீரோ உட்பட. அவரும் இசைக்கலைஞர்தான்- மேடையில் பங்கஜ் உதாஸ்சுடன் கலைஞர்களாக அமர்ந்திருந்தனர்!

அரங்கத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களுடைய கைகளில் இருந்த பாதி கோப்பைகளைப் பார்த்ததும் பங்கஜின் உதடுகளில் ஒருவித கேலிப் புன்னகை மலர 'தோடி, தோடி பியா கரோ' என்று துவங்க அரங்கமே வாஹ், வாஹ் என்று விகசித்தது.

அதனையடுத்து 'சாந்தி ஜைசா ரங் ஹை தேரா சோனே ஜைசா பால்,' பிறகு 'பியார் கரானே வாலே, ப்யார் காராத்தே ஹை ஷான் சே' என தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரம் உருது மற்றும் தூய ஹிந்தி பாடல்களை தனக்கே உரிய பாணியில் பாடிய போது என்னை போன்றவர்களுக்கு வார்த்தைகள முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவருடைய குரலிலும் உடனிருந்த இசைக் கலைஞர்களின் திறமையிலும் அமிழ்ந்துப் போய் நேரம் போனதே தெரியவில்லை.

கச்சேரி நடந்துக் கொண்டிருக்கையிலேயே அரங்கத்திலிருந்தவர்கள் அவ்வப்போது எழுந்து சென்று காலியாகிப்போன மது கோப்பைகளை நிரப்பிக் கொண்டு வருவதிலும் அவருக்கு எந்தவித இடைஞ்சலும் இருந்ததாக தெரியவில்லை.

உமர் கயாம் ஒரு நேரம் மசூதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர், ‘இப்படி இறைவனின் சன்னிதானத்தில் மது அருந்தி புனிதத்தைக் கெடுக்கிறீர்களே’ என்று வருத்தப்பட்டாராம். அதற்கு உமர் ‘இறைவன் இல்லாத இடத்தை எனக்கு காட்டுங்கள் அங்கு மது அருந்தாமல் இருக்கிறேன்’ என்றாராம்.

ஆம்.. இறைவன் எங்குதான் இல்லை அங்கு மது அருந்தாமல் இருப்பதற்கு.

ஆனால் போதை தரும் மதுவும் பங்கஜ் அவர்களின் மனதை மயக்கும் இசையில் தோற்றுத்தான் போனது.

தொடர்ந்து எழுந்து சென்று மது கோப்பைகளை நிரப்புவதில் குறியாயிருந்த வெகு சிலரும் கச்சேரி சூடுபிடிக்க அதை மறந்தே போய் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவ்வப்போது அரங்கத்தில் எழுந்த வாஹ், வாஹ் ஒலி இந்தியனாய் இருந்தும் மொழியில் அன்னியனாகிப் போனேனே என்று நொந்துப் போனேன்.

நள்ளிரவைக் கடந்து சென்ற அன்றைய இசையில் முழுமையாக மூழ்கிப்போன அனைவருமே அடுத்த நாள் காலையில் விழித்தெழ மிகவும் சிரமப்பட்டனர் என்பது அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

நானும் கண் விழித்தபோது மணி எட்டைக் கடந்திருந்தது. ஒன்பது மணி வரை காலை உணவு என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்ததால் குளித்து முடித்து காஷ¤வல் உடையில் முந்தைய நாள் இரவு உணவு பரிமாறப்பட்ட இடத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பஃபே வகை உணவை ஒரு கை பார்த்தேன்(!).

அடடடடா.. எத்தனை வகை உணவு.. இந்தியன் ரொட்டி எனப்படும் நான், பரோட்டாவிலிருந்து மேற்கத்திய வகை பேக்கன் வரை இருந்தும் நம் பக்கத்து இட்லி, கல் தோசை, உப்புமா சட்னி, சாம்பார் ருசியே தனிதானே..

புறப்படும்போதே என்னுடைய மனைவி இட்ட வேண்டுகோள் (உத்தரவு என்பதே சரி) காதில் ஒலிக்க நல்ல பிள்ளையாய் நம் பக்கத்து உணவு வகைகளோடு பசியை ஆற்றிக்கொண்டு.. முட்டை ஸ்க்ராம்பிள், முட்டை ம்லெட், பீஃப் சாண்ட்விச், என வகை வகையாய் அறுபது எழுபது வயதைக் கடந்த பெரியவர்கள் உள்ளே தள்ளுவதைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ‘பினா ஷக்கார் காஃபி தேனா’ என்று ஆர்டர் செய்வதை விட எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஹ¥ம்..

அன்றைய காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்து மணிக்கு துவங்கின. நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள் அனைவருமே இந்தியா பொருளாதார மற்றும் வங்கி உலகில் பிரபலமானவர்கள்.

அவர்களுள் ஐ.ஐ.டி பொவாய், மும்பை பேராசிரியர் டாக்டர் திபக் பத்தக் அவர்களின் நகைச்சுவைக் கலந்த பேச்சு மிகவும் பிடித்திருந்தது.

அவருடைய உரையின் இறுதியில் வேடிக்கையான கற்பனை நிகழ்ச்சி ஒன்றை விவரித்ததைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

இந்திய வங்கி உலகில் மேலதிகாரிகள் முக்கியமாக அரசு வங்கிகளில் கணினி மற்றும் தகவல் இலாக்காவில் தொழில்நுட்ப மாற்றங்களை வரவேற்க எவ்வளவு தயக்கம் காட்டுகின்றனர் என்பதை சுவைபட எடுத்துரைத்தார்.

பொதுவாகவே அரசு அதிகாரிகள், இதில் வங்கித்துறை மட்டும் விதிவிலக்காகுமா என்ன?, எந்த ஒரு முடிவு எடுக்கவும் தயங்குவார்கள். Pass the Buck Attitude தான் அதிகம் காணப்படும்.

வங்கித் துறையில் முக்கியமாக கணினி மற்றும் தகவல் துறை இலாக்காக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. காலதியாகிப் போன வன்பொருட்களை (Hardware) மாற்றி நடைமுறை சந்தையில் உள்ளவற்றை வாங்க அவர்களை மசிய வைப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதுவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனர் (CVC) என்ற அமைப்பு அமைக்கப்பட்டப் பிறகு தங்களுடைய எந்த ஒரு முடிவும் அவர்களால் பரிசீலிக்கப்படும் என்பதை காரணம் காட்டியே தங்களுடைய முடிவுகளைத் தள்ளிப்போடுவது வழக்கமாகிப்போனது.

கணினி இலாக்காவை சரிவர நடத்திச் செல்ல தகுதியான ஆட்களை பணிக்கு அமர்த்துவதும் அவ்வளவு எளிதானக் காரியமல்ல. இன்று வங்கித் துறையில் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கும் எவருமே கணினி துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்ல. இருக்கவும் முடியாது. ஏனெனில் வங்கித்துறையில் இன்று உயர் பதவியில் இருப்பவர் அனைவருமே ஐம்பது, ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். அவர்கள் கல்லூரியில் படித்த நாட்களில் கணினித் துறை சம்பந்தப்பட்ட படிப்பு இல்லை.

இருப்பினும் தங்களுக்கு பரிச்சயமில்லாத கணினி துறையை நிர்வகிக்க இளம் அதிகாரிகள் நிச்சயம் தேவை என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

வங்கித் துறையில் நடைபெறும் பணியமர்த்தும் நடைமுறை செயல்பாட்டை (Recruitment Process) கேலி செய்து பத்தக் அவர்கள் இக்கற்பனை நிகழ்ச்சியை கூறினார்.

ஒருமுறை ஒரு வங்கி அதிகாரி தன்னுடைய வங்கி தலைமை அலுவலக வளாகத்திலிருந்த தென்னை மரங்களில் இருந்து காய்களைப் பறிக்க ஆள் எடுக்க விரும்பினார்.

எங்கே CVC நியதிகளை மீறினால் பிரச்சினையாகி விடுமோ என்று பயந்து ஒரு பணியமர்த்தும் வேலையை ஒரு வெளி மனித வள மேம்பாடு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

அவர்கள் அதிகாரியின் அறிவுரைப்படி பணியில் அமர்த்தப்படுபவர்களின் தகுதிகளை பட்டியலிட்டனர்.

பணியமர்த்தபடுபவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல் தகுதி.

அதனைக் கண்ட அதிகாரி பதறிப்போய் ‘No, no. If you say that they should be human beings it would be treated as a specific brand and might be objected by CVC.’ என்றாராம்.

சரியென்று வேறுவழியின்றி தகுதி பட்டியலை மாற்றி அமைக்க.. அது கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது:

1. இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள் இருக்க வேண்டும். தகுதி மதிப் பெண்: 30
2. மரத்தில் வேகமாக ஏறி இறங்க தெரிந்திருக்க வேண்டும்: தகுதி மதிப்பெண்:60

மீதி பத்து மதிப்பெண்களுக்கு எந்த தகுதியை நிர்ணயிக்கலாம் என்று சிந்தித்த அதிகாரி இறுதியில் மூளையும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆக மூளைக்கு பத்து மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது.

தகுதிப் பட்டியல் வங்யின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதைக் கண்டு தங்களுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்று நினைத்த பலரும் விண்ணப்பித்தனர்.

இதை காட்டில் வசித்த ஒரு குரங்கு பட்டாளமும் காண நேர அட! நமக்கேற்ற வேலை போலிருக்கிறதே என்று கருதி முழுப் பட்டாளமும் விண்ணப்பித்ததாம்.

மரம் ஏறுவதில் முழு மதிப்பெண்களையும் பெற்ற குரங்குப் பட்டாளம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட வங்கி அதிகாரி பரிந்துரைத்த நிறுவனத்தை நொந்துக்கொண்டாராம்..

இதை படிக்கிறபோது உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ இல்லையோ அவர் அன்று மேடையில் உடலசைவுகளுடன் எடுத்துரைத்தபோது அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

சிரிப்பொலி முழுவதுமாய் அடங்குவதற்குள் இந்திய செய்தி மற்றும் அரசியல் உலகில் புகழ் பெற்ற பத்திரிகையாளர் அருண் ஷோரியின் படு சீரியசான பேச்சு துவங்கியது.

அவர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாஜ்பேயி தலைமையிலான தன்னுடைய அரசு என்னவெல்லாம் செய்தது என்று எடுத்துரைத்ததுடன் நில்லாமல் இப்போதைய மன்மோகன்சிங் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற தோரணையில் பேச அரங்கத்திலிருந்த பலரும் முகம் சுளித்தனர்.

சாதாரணமாக பத்திரிகைகளில் காரசாரமாக எழுதும் அருண் ஷோரி அன்று அவ்வளவாக பிரகாசிக்கவில்லையென்றுதான் கூறவேண்டும். சில கட்டங்களில் தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் திணறி நின்றதும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

அரங்கத்தில் குழுமியிருந்த வங்கித்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆற்ற வேண்டிய உரையின் தரம் அவருடைய அன்றைய பேச்சில் இல்லை என்றுதான் கூறவேண்டும்..

எப்போதடா முடியும் என்று காத்திருந்தவர்கள் அவருடைய உரையின் முடிவில் பேருக்கு கரவொலி எழுப்பிவிட்டு உணவு இடைவேளைக்கு விரைந்தனர்.

வெளியே அடை மழை!

நானும் என் நண்பரும் காலையிலேயே எங்களுடைய கோவா கிளை மேலாளரிடம் பழைய கோவாவில் அமைந்திருந்த தூய சவேரியார் தேவாலயத்துக்கு செல்ல ஒரு வாகனத்தை ஹோட்டலுக்கு அனுப்புங்கள் என்று கூறியிருந்தோம்.

அவரும் சரியாக இரண்டு மணிக்கு வாகனத்துடன் வந்து சேர பகலுணவை முடித்த கையோடு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நானும் என் நண்பரும் செமினாருக்கு மட்டம் போட்டுவிட்டு கிளம்பினோம்..


Photobucket - Video and Image Hosting




படங்களுடன் அடுத்த இறுதிப் பதிவில்..

10 கருத்துகள்:

  1. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பது இதுதானோ ? அரசுத்துறையில் தளையற்று செயல்படவும் முடியாது; அரசுத்துறையின் ஆதிக்கத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  2. கோவா மயக்கமா?7/8 லிருந்து சூரியன் உதிக்கவேயில்லையே...படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. வாங்க மணியன்,

    அரசுத்துறையில் தளையற்று செயல்படவும் முடியாது; அரசுத்துறையின் ஆதிக்கத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது. //

    ஆமாங்க. அரசு அதிகாரிகளுக்கே உரிய தகுதி அது..

    பதிலளிநீக்கு
  4. கோவா மயக்கமா?7/8 லிருந்து சூரியன் உதிக்கவேயில்லையே...//

    அப்படியும் வச்சுக்கலாம்:) திங்கள் கிழமையிலிருந்து மீண்டும் வரும்..

    படங்கள் அருமை //

    நிறைய படங்கள் எடுத்தேன். இந்த ஃபோட்டோ பக்கெட் தளம் தொல்லைக் கொடுப்பதால் வெளியிட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. ஆகா, சாப்பாடு போட்டு செமினார் நடத்தறாங்களா !!! அருமை...

    ****

    எங்க ஆபிஸ்லயும் சொல்றேன்.. இப்படியெல்லாம் நடத்தச் சொல்லி...

    ****

    போட்டோ பக்கெட்டை தூக்கி வீசுங்கள், டினி பிக் தளத்தை உபயோகப்படுத்துங்கள்
    www.tinypic.com

    பதிலளிநீக்கு
  6. ஆகா, சாப்பாடு போட்டு செமினார் நடத்தறாங்களா !!! அருமை...

    பின்னே.. வருஷம் பூரா கோடி கோடியா கொட்டி குடுக்கறோமே சும்மாவா:)

    எங்க ஆபிஸ்லயும் சொல்றேன்.. இப்படியெல்லாம் நடத்தச் சொல்லி...//

    சொல்லுங்க.. சொல்லுங்க..

    ****

    பதிலளிநீக்கு
  7. அடாடா..... உங்க கோவா பயண அனுபவம் அட்டகாசமா இருந்துருக்கே. இன்னிக்குத்தான் மூணூ பதிவையும்
    சேர்த்துப் படிச்சேன். படங்கள் எல்லாம் அருமை. நாங்க இதுவரை அந்தப் பக்கம் போகலை.
    இந்தியாவுலேயே எவ்வளோ நல்ல நல்ல இடங்கள் இருக்கு. அதையெல்லாம் அனுபவிக்காம, ஊருலகம் சுத்திவந்து
    என்ன பயன்? ன்னு நொந்துக்கிட்டோம்!

    புனித சவேரியாரைக் காமிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  8. Arun shourie basically a politician with some agenda..nobody can change the economic policy just like that..

    you have not discussed abt basel two? it is the hot topic nowadays..
    alm etc

    பதிலளிநீக்கு
  9. வாங்க துளசி,

    இந்தியாவுலேயே எவ்வளோ நல்ல நல்ல இடங்கள் இருக்கு. அதையெல்லாம் அனுபவிக்காம, ஊருலகம் சுத்திவந்து
    என்ன பயன்? ன்னு நொந்துக்கிட்டோம்!//

    ஆனா கோவாவில அப்படியொன்னும் பெருசா பாக்கறதுக்கு ஒன்னும் இல்லை..பீச்சைத் தவிர.. நாங்க போன நேரம் மழைக்காலமாருந்ததால அதையும் அனுபவிக்க முடியல..

    ஆனா ஒன்னு எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு அப்படியே கேரளா மாதிரி இருக்கு.. பல மாடி கட்டடங்கள் ஜாஸ்தி இல்லாம இருந்ததே ஒரு பெரிய ரிலீஃப்..

    பதிலளிநீக்கு
  10. வாங்க முத்து,

    you have not discussed abt basel two? it is the hot topic nowadays..
    alm etc//

    அது ஒரு ஐ.டி செமினார்ங்க.. யாருமே பேங்கிங் பத்தி பேசலை.. பேசினவங்களும் ஐ.டி. டிபார்ட்மெண்ட்லருந்து வந்திருந்ததால அவங்க பேங்க்லருக்கற ஐ.டி இனிஷியேட்டிவ் பத்திதான் பேச்சு இருந்தது..

    பதிலளிநீக்கு