24 ஜூன் 2006

கடந்த பாதை 1

என்னைக் கவர்ந்த நபர்கள் – 1

என்னுடைய தி.பா தொடரில் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் சந்தித்த பல நபர்களைக் குறித்தும் எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் குறித்தும் எழுதி வருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களுள் என்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றி எழுதினால் என்ன என்றும் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த வாரம் ஒரு பதிவு தொடர்.

இவர்களுள் என்னுடைய சொந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

இயல்பாகவே எனக்கு ஞாபக சக்தி அதிகம் என்று என் நண்பர்களும், உறவினர்களும் (என்னுடைய மனைவியும் என் இரு மகள்களும் இதில் அடக்கமில்லை. அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு absent minded professor) கூறக் கேட்டிருக்கிறேன்.

‘என்னைக்கோ நடந்ததயெல்லாம் எப்படிறா இவ்வளவு கரெக்டா அக்ஷரம் பிசகாம சொல்றே?’ என்று என்னுடைய தாய் மாமன்களுள் ஒருவர் ஒருமுறை அதிசயித்து போயிருக்கிறார்.

சுயபுராணம் பாடாம விஷயத்துக்கு வாங்க சார்....

வந்துவிட்டேன்:)

என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.. அதாவது எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய்.. அதாவது நான் சிறுவனாய் அரை நிஜார் அணிந்திருந்த காலந்தொட்டு..

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வந்திருந்த காலத்தில்தான் என்னுடைய சித்திகளுள் ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது.

அப்போது எங்களுடைய குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். தாத்தா, அம்மாச்சி (என் தாயின் அம்மா), மாமா (நான்கு), சித்தி (மூன்று) (என் அம்மா மூன்றாவது. என் பெரியம்மா திருமணம் முடிந்து  தூத்துக்குடியில், மாமா தனிக்குடித்தனம் சென்னையில்.. மாமாவும் அத்தையும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியது ஒரு தனிக்கதை.) என்னுடைய சித்தப்பா (அப்பாவின் ஒரே தம்பி. என்னுடைய மூன்று சித்திகளுள் (அம்மாவின் சகோதரிகள்) ஒருவரைத்தான் அவர் திருமணம் செய்திருந்தார்)  என் நான்கு சகோதரர்கள் மற்றும் என்னுடைய சித்தப்பா குடும்பத்தையும் சேர்த்து சுமார் இருபது பேர் கொண்ட குடும்பம்.

என்னுடைய சித்தி நாணி கோணிக்கொண்டு ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருக்க ஜாக்ஸன் துரையாக நடித்த ஜாவர் சீத்தாராமனைப் போலவும், கட்ட பொம்மனாக நடித்த சிவாஜி கணேசனைப் போலவும் நானே மாறி, மாறி பேசி நடித்துக் காட்டியது இப்போதும் நினைவில் அப்படியே நிற்கிறது.

சர்வர் சுந்தரம் படம் வெளிவந்தபோது நாகேஷின் 'நான் தண்ணிய குடிச்சி வயித்த நிறைச்சிக்குவேன்' என்னும் வசனமும் மிக பிரபலம். அதையும் பேசி நடித்திருக்கிறேன் (எல்லாம் வீட்டில்தான். ஆரம்பப் பள்ளி காலத்தில் பள்ளி மேடைகளிலும் நடித்திருக்கிறேன். அதைப் பற்றி பிறகு..)

எங்களுடைய கூட்டுக் குடும்பத்தின் indisputable தலைவர் என்னுடைய தாத்தாதான்.

நான் ஏறக்குறைய அவரைப் போலவே உருவத்திலும், நிறத்திலும் (‘ஏன் ஒங்க ஹேர் ஸ்டைலும் அப்படித்தான் இருக்கு’ என்று என்னுடைய இளைய மகள் அவ்வப்போது அவருடைய அப்போதைய வழுக்கைத் தலை புகைப்படத்தைப் பார்த்து நக்கலடிப்பதுண்டு) இருக்கிறேன் என்று என்னுடைய தாய் மாமன்களும், சித்திகளும் இப்போதும் கூறுவதுண்டு.

அவருக்கு நான், என் சகோதரர்கள் மற்றும் என்னுடைய சித்தப்பா பிள்ளைகள் (வானரப் பயல்க என்று ‘செல்லமாக’ அழைப்பார் என்னுடைய தாத்தா) எல்லோரும் unanimous ஆக வைத்த ‘செல்லப்’ பெயர் கருப்பு ஹிட்லர்.

நாங்கள் குடியிருந்த வீடு சென்னை வேப்பேரி பகுதியில் சாலையிலிருந்து (காளத்தியப்ப முதலி தெரு என்ற அந்த சாலைக்கு செல்லமாக ‘கோணத்தெரு’ என்று பெயர் இருந்தது. அதற்கு தெரு கோணலாக இருந்தது மட்டுமல்ல.. அதில் வசித்த பெரும்பாலோனோர் பால் வியாபாரம் செய்யும் கோணார் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் ஒரு காரணம்) சுமார் நூறடி உள்வாங்கியிருந்தது. அப்போதே என்னுடைய தாத்தா வீட்டு உரிமையாளரை (அவருக்கு குண்டு செட்டியார் என்ற பட்டம் சூட்டியிருந்தோம். அப்போது சென்னையில் மளிகை மற்றும் எண்ணெய் கடைகள் எல்லாம் செட்டியார் கடைகள் என்றுதான் அழைக்கப்படும்.. அதாவது காமராஜர் முதலமைச்சராவதற்கு முன்பு.. அதற்குப்பிறகுதான் இப்போதும் முடிசூடா மன்னர்களாக சென்னையை வளைத்துப்போட்டிருக்கும் நாடார்களின் பிரவேசம் நடந்தது) மிரட்டி நீண்ட காலத்துக்கு லீஸ் (Lease) போட்டிருந்தார். அதை 'ஒத்தி' என்பார்கள்.

சாலையிலிருந்து வீட்டிற்கு ஒரு நீஈஈஈண்ட சந்து. வாசற்கதவில் இருந்த ஒற்றைக் கதவைத் தள்ளி திறப்பதற்கே பெரிய பாடு.. ('சரியா சாப்ட்டாத்தானடா.. கோழி மாதிரி கொறிச்சா.. ஒரு கதவ தள்றதுக்கு படற பாட்ட பாரு..' இது அம்மாச்சி.. அவர் தாத்தாவுக்கு நேர் எதிர்.. சரியான பயந்தாங்கொள்ளி.. தாத்தா இருக்கும் பக்கமே வரமாட்டார். அடுப்படிதான் அவருடைய நிரந்தர வாசஸ்தலம்.. அப்படியிருந்தும் பத்து பிள்ளைகளா என்று கேட்காதீர்கள்.. அதுதான் அக்காலத்திய தாம்பத்தியம்..) வாசலில் ஒரு சிறு ஓட்டுக் கூரை.. வாசற்கதவுக்கென..

நீண்ட சந்தைக் கடந்து வீட்டை அடைந்தால் வாசலில் இரண்டு நீண்ட திண்ணைகள், வாசலுக்கு இடமும் வலமுமாக.. ஒன்று பெரியதும் மற்றொன்று அதைவிட சற்று சிறியதுமாக..

அதில் பெரிய திண்ணைதான் தாத்தாவின் நிரந்தர இருப்பிடம். அதாவது இரவு உறக்கமும் சேர்த்து.

அவர் படுக்கும் திண்ணையை சுற்றிலும் ச்சாக்கால் (Gunny Cloth - பழைய சாக்கு பைகளை பிரித்து உருவாக்கியதல்ல. புத்தம் புதிய ச்சாக்கு துணி. மீட்டர் கணக்கில் கிடைக்கும்) ஆன ஒரு திரைச்சீலை தொங்கும்.. அதற்கெனவே ஒரு தையற்காரரை வரவழைத்து அளவெடுத்து தைத்தது. திரைச்சீலை காற்றில் பறக்காமலிருக்க திண்ணை விளிம்பில் மரச்சட்டம் அடித்து கொக்கிகளையும் பொருத்தியிருப்பார். திரைச்சீலையின் விளிம்பில் அந்த கொக்கிகளில் மாட்டுவதற்கு ஏதுவாக துணியாலான வளையங்கள் அடிக்கொரு இடைவெளியில் தைக்கப்பட்டிருக்கும். காலையில் விடிந்ததும் சுருட்டி எரவானத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை இரவு  எட்டு மணியானதும் டாண் என்று தளர்த்தப்பட்டுவிடும். திண்ணையின் விளிம்பில் பொருத்தப்பட்டிருந்த கொக்கிகளில் மாட்டிவிட்டால் சூரைக்காற்றிலும் பறக்காமல் உள்ளுக்குள் கும்மென்று இருக்கும்.

காற்றடித்தாலும், மழையடித்தாலும் தாத்தா அசரமாட்டார்.. ‘பலத்த மழைக்காலத்தில் ஓட்டுக் கூரை ஒழுகினாலும் டப்பா, டபரான்னு வச்சிக்குவாரேயொழிய கூரை ஒழுகுதுன்னு வீட்டுக்குள்ள வந்து நான் பார்த்த ஞாபகமே இல்லை..’ என்பார் என்னுடைய தந்தை.. அவருடைய தாய் மாமந்தான் என்னுடைய தாத்தா..

தாத்தாவுக்குத் துணையாக சில நாட்களில் மரவண்டு மாதிரி குளிர்ல சுருண்டு படுத்திருந்த ஞாபகம் லேசா இருக்கு..

அப்போதெல்லாம் மின்சார விளக்கு என்பது எங்களைப் போன்றோருக்கு எட்டாக்கனி. இருட்ட ஆரம்பித்துவிட்டால் அந்த நீஈஈஈண்ட சந்தைக் கடந்து வீட்டு வாசலை அடைவதற்குள் பயத்தில் நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ளும். வாசற்கதவை திறந்துவைத்தால் தெரு விளக்கு வராண்டா முழுவதும் விழும்.. ஆனால் தாத்தா ஒத்துக்கொள்ள மாட்டார். ‘எலேய் மொதல்ல வாசக்கதவ மூடு..’ என்ற அவருடைய குரல் எங்களுடைய மனசுக்குள் ஒலிக்கும்..

தனியாக வர நேர்ந்தால் உரத்தக் குரலில் எம்.ஜி.ர் பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வாசலை தாண்டியதும் எடுக்கும் நாலு கால் பாய்ச்சலை திண்ணையை அடைந்ததும்தான் நிறுத்துவோம். அதற்கும் தாத்தா ஏசுவார். ‘எலேய்.. நீ ஓடற ஓட்டத்துல தரையே பேர்ந்து போச்சி பார்.. வீட்டுக்காரன் வந்தா தோ இந்த கரியந்தான் ஒடச்சான்னு ஒன்னெ புடிச்சிக் குடுத்துருவேன். அப்புறம் ஒம்பாடு அவர் பாடு..’

‘ஆம்மா.. பெரிய வீடு.. நாம குதிச்சித்தான் ஒடஞ்சிதாக்கும்..’ என்று முனகிக்கொண்டே அவரைக் கடந்துச் சென்றுவிட்டு அவர் அப்படி திரும்பியதும் அவருடைய முதுகுக்குப் பின்னால் நின்று அளவம் காட்டிவிட்டு ஓடிவிடுவோம்..

‘எலேய், நீ அங்கன நின்னுக்கிட்டு என்ன செய்றேன்னு தெரியாதாக்கும்.. தாத்தாக்கு முதுகுலயும் கண்ணுருக்குலே.. தொலைச்சிருவேன் தொலைச்சி..’

அட ச்சை.. இந்த தாத்தாவோட பெரிய ரோதனை.. என்ற எத்தனை முறை மனதுக்குள் சபித்திருக்கிறேன்.

அவருடன் இன்னொரு தொல்லை, இரவானால் அவருக்கு பலகாரம் வாங்கி வருவது..

இருபது பேர் கொண்ட குடும்பத்தில் தினசரி காலைப் பலகாரம் இட்லி, சட்னிதான்.. தாத்தாவுக்கு மிளகு பொடியும் நல்லெண்ணையும் வேண்டும்..

அம்மாச்சி காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆளுக்கு இத்தனையென்ற கணக்கில் (எல்லாம் தாத்தாதான் தீர்மானிப்பார்.. என்னைப் போன்ற சிறுசுகளுக்கு இரண்டு.. இளவட்டங்களுக்கு மூன்று.. பெரியவர்களுக்கு நான்கு.. அவருக்கும் நான்குதான்) இட்டிலியை இரண்டு பெரிய பித்தளை சட்டிகளில் அவித்து எடுத்துவிடுவார்.. ஒவ்வொரு இட்டிலியும் நம் உள்ளங்கை அளவில் பெரிதாக, பூமாதிரி.. (‘கை வலிக்குதுன்னு பாக்காம ஆட்டுங்கடி.. அப்பத்தான இட்டிலி பூ மாதிரி மெத்துன்னு இருக்கும்..’ அம்மாச்சி என் சித்திகளிடம் பாடும் தினசரி பாட்டு)..

அதில் இரண்டை விழுங்கி தண்ணீர் குடித்தால் மதியம் பள்ளியில் பகலுணவு நேரம் வரை திம்மென்றிருக்கும்..

தாத்தாவுக்கு இரவிலும் இட்டிலிதான்.. ஆனால் வீட்டில் காலையில் சுட்ட இட்டிலி பிடிக்காது. மீதியிருந்த மாவில் சுட்டாலும் சாப்பிடமாட்டார். அவருக்கென்று சுடச்சுட ஓட்டலில் இருந்து வாங்கி வரவேண்டும்.

வீட்டில் இருந்த ஏழு பேரப் பிள்ளைகளில் தினம் ஒருவர் என்று டர்ண் (turn) போட்டுக்கொண்டு போவோம் (அதுவும் தாத்தா ப்ளான்தான்).

வீட்டிலிருந்து இறங்கினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சூளை பஸ் ஸ்டாண்டில் அருகில் இருந்த  உடுப்பி ஓட்டலில்தான் வாங்க வேண்டும் என்பது தாத்தாவின் பல நியதிகளில் ஒன்று. இரவு ஏழு மணி அடித்துவிடக்கூடாது.. ‘எலேய்.. இன்னைக்கி யாரோட டர்ண்.. போய்ட்டு வெரசா வாங்கலே.. ஹோம் வொர்க் வந்து செஞ்சிக்கலாம்.. ஓடு..’ என்ற குரல் திண்ணையிலிருந்து வரும்.

எல்லோருக்கும் அவரவருடைய டர்ண் எப்போது என்று தெரிந்திருந்தாலும் தினமும் நீ போ, நீ போ என்று ஒருவரையொருவர் சுட்டிக்காட்டுவோம்..

என்னுடைய அம்மாவைப் போலவே நானும் குடும்பத்தில் மூன்றாவதுதான்.. எனக்கு இரண்டு வயது மூத்தவர் ஒருவர்.. அவரைவிடவும் மூன்று வயதில் எல்லோருக்கும் மூத்தவர்..

மூத்தவர்கள் டர்ண் வந்தால் அவர்கள் மற்றவர்களை ஏவிவிடுவார்கள்.. என்னுடைய தம்பிகளில் ஒருவரும் சித்தப்பாவின் மூன்று பிள்ளைகளில் இருவரும் ஐந்து வயதுக்கும் கீழே..

ஆகவே என்னுடைய மூத்த இரு சகோதரர்களின் டர்ண் வரும்போதும் நான், எனக்கு நேர் கீழே இருந்த தம்பி மற்றும் சித்தப்பா மகன் என மூன்று பேர் மாறி, மாறி செல்ல வேண்டும்..

‘தாத்தாக்கிட்ட போட்டு குடுத்தே.. மவனே ஒன்னெ ஸ்கூல்ல வச்சி மண்டைய ஒடச்சிருவேன்..’ என்ற என்னுடைய மூத்த சகோதரர்கள் இருவருடைய மிரட்டலுக்கு தாத்தாவே தேவலை என்று நினைத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக நாங்கள் மூன்று பேரும் மாறி, மாறி செல்வோம்..

‘எலேய்.. மூனு இட்டிலி.. அப்புறம் மிளகுப் பொடி எண்ணெய ஊத்தி.. தனித்தனியா கட்டி வாங்கிட்டு வரணும்னு எத்தனெ தடவ சொல்லியிருக்கேன்.. இன்னைக்கும் எல்லாத்தையும் ஒன்னா ஒரே பொட்டலமா வாங்கிட்டு வந்துட்டியா.. இத போயி உள்ள குடுத்துட்டு மறுபடியும் போய் நா சொன்னா மாதிரி வாங்கிட்டு ஒடியா போ.. நிக்காதே.’

போக ஒரு கி.மீ, திரும்பி வர ஒரு கி.மீ.. ராத்திரி நேரத்தில் கால் கடுக்க பாதி ஓட்டம் பாதி நடையாக ஒன்றுக்கு இரண்டு முறை சென்று வந்ததை இப்போது நினைத்தாலும்..

தாத்தா பயங்கர கோபக்காரர். என்னுடைய தாயே திருமணத்திற்குப் பிறகும் அவரிடம் கோபத்தில் எதிர்த்து பேசிவிட்டு தலையில் குட்டு வாங்கியதை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அம்மாச்சிக்கு அவரைக் கண்டாலே சிம்ம சொப்பனம்.. அம்மாச்சி வாழ்வில் சுதந்திரத்தை அனுபவித்தது தாத்தாவின் மரணத்திற்குப் பிறகுதான் என்றால் மிகையாகாது..

ஆனாலும் தாத்தாவை எனக்கு பிடிக்கும். அவருடைய பெயரைத்தான் எனக்கும் வைத்திருக்கிறது.. சூசை மாணிக்கம்..

ஜோசஃப் என்பதற்கு தமிழில் சூசை என்று பொருள்.. என்னுடைய வீட்டில் என்னுடைய பெயர் சூசை.

தாத்தா எந்த நோயிலும் விழாமல் நான் காட்பாடியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரே நாள் ஜுரத்தில் காலமானார்..

இன்னும் வரும்..



8 கருத்துகள்:

  1. ஆஹா.... இது உங்களோட எவ்ரிடே மனிதர்களா?

    அடிச் சக்கை. நல்லா இருக்கார் தாத்தா.

    பாட்டிக்குத் தாத்தான்னாவே பயம், ஆனா பிள்ளைகள் பத்து. இதுவும் நல்லா இருக்கு. எங்க தாத்தாவுக்கு 12 புள்ளைங்க:-)))

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    எங்க தாத்தாவுக்கு 12 புள்ளைங்க//

    உங்களோட பூனை பாட்டிய படிச்சிக்கிட்டிருக்கற நேரத்துல கூகுள் டாக்குல உங்க பின்னூட்டம் வந்தது:)

    அந்த காலத்துல பத்துக்கு கீழ பெத்துக்கிட்டாத்தான் ஆம்பிளைக்கு ஏதோ கோளாறுன்னு சொல்வாங்க போலருக்கு..:)

    பதிலளிநீக்கு
  3. Dear Sir

    Wishing u success on this new blog series

    பதிலளிநீக்கு
  4. வாங்க தேவ்..

    உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள் மலரும்
    மனதை நிறைவாய்க் கவரும்

    அதென்ன 10, 12 னு போட்டி..ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பட்டியா?

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஜி!

    ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பட்டியா? //

    பட்டி? அப்படீன்னா? புரியலையே..

    நாம எல்லாரும் பேசறது, எழுதறது தமிழ்னாலும் சில சமயங்கள்ல ஒருத்தர் எழுதறது ஒருத்தருக்கு புரியாம போயிருது பாருங்க.

    பதிலளிநீக்கு
  7. பட்டி என்றால் மாடு போன்ற விலங்குகளை அடைக்க மூங்கில் போன்ற கழிகளால் உருவாக்கப்பட்ட ஒரு திறந்தவெளி அரண் ஐயா, :) , ரொம்ப நாளா சொல்லனும்னு...:) நான் உங்கள் என்னுலகத்தின் ரெகுலர் வாசகன், ஆனால் அடிக்கடி பின்னூட்டமெல்லாம் போடறது இல்லை, ஆனால் ஒன்று விடாமல் படித்துவிடுவேன் உங்கள் அனுபவப்பகிர்வுகளை, துளசி அம்மாவின் தளத்திற்கு இணையாக ஒரு தளத்தினை நான் மதித்துப்பார்க்கின்றேன் என்றால், அது தங்களின் தளமும், திரு.டோண்டு ஐயா போன்ற சிலரின் தளங்களும் ஆகும், :) அருமையாக எழுதுகின்றீர்கள் ஐயா, மிக்க நன்றி, ஒரு கேள்வி, என் தந்தை பாரத மானில வங்கியில் தலைமை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார், தாங்களும் ஓய்வு பெற்ற ஒரு வங்கிப்பணியாளர் ( இப்போது பணியில் இருந்தாலும்) என்பதால் கேட்கின்றேன், அவர் என்ன செய்யலாம்?
    நன்றிகள் பல,
    ஸ்ரீஷிவ்...:)

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஸ்ரிஷிவ்,

    பட்டி: அடடா.. இது எனக்கு தெரியாம போயிருச்சே.. உங்க விளக்கத்துக்கு நன்றி.

    என்னுடைய பதிவைப் பற்றிய உங்களுடைய பாராட்டுகளுக்கும் நன்றி.

    உங்களுடைய தந்தையின் விஷயம். அவருக்கு எது பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்யலாம். ஒருவர் தன் விருப்பம் போல் வாழ்வதென்பது ஓய்வுக்கு பிறகுதான்.

    பணம் சம்பாதித்தல் மட்டுமே வாழ்க்கையில் இன்பம் தருவதில்லையே. அதற்கும் மேல் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே..

    அவருக்கு எது விருப்பமோ அதை செய்ய அவரை விடுங்கள்.. அதுதான் நல்லது..

    பதிலளிநீக்கு