18 March 2014

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோழைத்தனம்!

தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து அன்றைய தினத்தாளில் மூழ்கியிருந்த ரஹீம்பாய் ஓசைப் படாமல் வந்து அமர்ந்த கணேஷை கவனியாமல் பத்திரிகையைல் இருப்பதை உரக்க வாசிக்கிறார்: 'காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட தயங்குகின்றனர்.'

கணேஷ்: அது தெரிஞ்சதுதானய்யா. தோக்கப்போறோம்னு தெரிஞ்சும் நிக்கிறதுக்கு தைரியம் வேணுமே?

திடுக்கிட்டு நிமிரும் ரஹீம்பாய் கணேஷை பார்த்து முறைக்கிறார்: யோவ், அத நீ சொல்லக் கூடாது. 

அந்த நேரத்தில் வந்து சேரும் ஜோசப்: என்ன காலையிலயே பனிப்போர் ஆரம்பிச்சிருச்சா? இன்னைக்கி என்ன சப்ஜெக்ட்?

கணேஷ்: (சிரிக்கிறார்) வாங்க ஜோசப். நீங்களே சொல்லுங்க. காங்கிரஸ் சீனியர் லீடர்ஸ் நிறைய பேர் இந்த தடவை எலக்‌ஷன்ல நிக்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு பாய்தான் ஆரம்பிச்சார். பின்ன இருக்காதான்னு நா கேட்டேன்.

ரஹீம்: யோவ், அது நா சொன்னது இல்ல. பேப்பர்ல போட்ருக்கான்.

கணேஷ்: ஏதோ ஒன்னு. நாமதான் போன வாரமே இதப்பத்தி பேசினமே?

ஜோசப்: ஆமா ப. சிதம்பரமும், ஜெயந்தி நடராஜனும் நிக்கப் போறதில்லேன்னு படிச்சதா ஞாபகம். இப்ப வேற யாரு?

கணேஷ்: அதாங்க பன்சாலுக்கும் கல்மாடிக்கும் சீட்டு குடுக்கக் கூடாதுன்னு போன வாரம் கூட பப்ளிக்கா பேசினாரே மனீஷ் திவாரி!

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆமா. அவரும் நா நிக்கிலேன்னு சொல்றாரா என்ன? ஒருவேளை உமக்கு சீட் கிடையாதுன்னு சொல்லிட்டாங்களோ என்னவோ?

ரஹீம்: சேச்சே அப்படி இருக்காது. அவருக்கு உண்மையிலேயே ஹார்ட்ல ஏதோ ப்ராப்ளம் போலருக்கு. ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆய்ட்டாராமே?

கணேஷ்: (சிரிக்கிறார்) பாய் நீங்க ஒரு குழந்தை மாதிரி ஆளுங்க. அதெல்லாம் சும்மா. முந்தியெல்லாம் அரஸ்ட் பண்ண வராங்கன்னா உடம்பு சரியில்லேன்னு ICUல அட்மிட் ஆயிருவாங்க. இப்ப என்னடான்னா சிட்டிங் காங்கிராஸ் எம்பிங்கல்லாம் எங்க எலக்‌ஷன்ல நிக்க வச்சிருவாங்களோன்னு ஆளாளுக்கு ஆஸ்பிட்டல் தேடிக்கிட்டு ஓடறாங்க போலருக்கு! சரியானை கோழைங்க, தோல்விய சந்திக்க தைரியம் இல்லாதவங்கன்னு சொல்றத தவிர வேற என்னத்த சொல்றது!!

ஜோசப்: இவ்வளவு பேசறீங்களே உங்க கூட்டணி கட்சிதான தேதிமுக? அந்த கட்சி கேன்டிடேட் ஒருத்தரும் நேத்து திடீர்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆய்ட்டு நா நிக்கலென்னுட்டாராமே?

ரஹீம்: அப்படி போடுங்க ஜோசப். இதுக்கு என்னய்யா சொல்லப் போறீரு? அவருக்கும் தேர்தல் தோல்வி பயம் வந்துருச்சி போலருக்கு?

கணேஷ்: அது கூட்டணி கட்சிதான, பிஜேபி இல்லையே? அவருக்கு உண்மையிலயே உடம்பு சரியில்லையோ என்னமோ?

ரஹீம்: அடப் பார்யா! உங்க கட்சி ஆளுங்கன்னா உண்மையிலயே ஒடம்பு சரியில்லேம்பீங்க. அடுத்த கட்சி ஆளுங்கன்னா டூப் அடிக்கிறாங்கம்பீங்க. நல்ல நியாயம்யா!

ஜோசப்: அவங்க பயப்படறதிலேயும் நியாயம் இருக்கு பாய். ஒரு எலக்‌ஷன்ல நிக்கிறதுன்னா சும்மாவா? அதுவும் எம்.பி எலக்‌ஷன்னா குறைஞ்ச பட்சம் ஒரு கோடி செலவாகுமாமே? தோக்கப்போறோம்னு க்ளியரா தெரியறப்போ யாருக்குத்தான் செலவு செய்ய மனசு வரும்?

கணேஷ்: அதுக்காக? இத்தன வருசம் ஜெயிச்சீங்களே? ஜெயிச்ச இடத்துலதானங்க பணத்த விடணும்? சினிமாவுல ஜெயிச்ச பணத்த சினிமாவுலதான் விடணுங்கறா மாதிரி...

ரஹீம்: அதுவும் சரிதான். ஜெயிக்கணும்னு உறுதியா தெரிஞ்சாத்தான் நா தேர்தல்ல நிப்பேன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா..... அதுவும் ஏறக்குறைய அம்பது வருசத்துக்கும் மேல சென்ட்ரல்ல ரூல் பண்ண காங்கிரஸ் கட்சிய சேந்தவங்க இப்போ ஜகா வாங்கறது நல்லாவா இருக்கு? அதுவும் சிதம்பரம் மாதிரி ஆளுங்க செலவ பத்தி கவலப்பட்டா அத யாராலங்க நம்ப முடியும்?

ஜோசப்: அவர் கேஸ்ல பணம் ஒரு விஷயமே இல்லேங்க. போன எலக்‌ஷன்லயே முன்னூறு ஒட்டு வித்தியாசத்துலதான் ஜெயிச்சார்னு அவர் மேல போட்ட கேஸே இன்னும் முடியலையே?

கணேஷ்: (கோபத்துடன் குறுக்கிடுகிறார்) என்னது ஜெயிச்சாரா? நீங்க வேற ஜோசப். அவர் எங்க ஜெயிச்சார்? பணத்த குடுத்து அப்படி சொல்ல வச்சிருப்பார்!

ஜோசப்: ஏங்க, என்னமோ நேர்ல பாத்தா மாதிரி சொல்றீங்க? எத்தன பேருக்குங்க பணம் குடுக்க முடியும்? ஓட்டு எண்ணிக்கையே பப்ளிக்கா நடக்குது! இது போறாதுன்னு லைவா வீடியோ வேற எடுக்கறாங்க. சந்தேகம் வந்தா மறுபடியும், மறுபடியும் எண்ண சொல்லி வேற எதிர்த்து நிக்கிற கட்சி கேக்குது. இது எல்லாத்தையும் மீறி தோத்த ஆள ஜெயிச்சிட்டாருன்னு எப்படிங்க டிக்ளேர் பண்ண முடியும்? லீட் ரொம்ப கம்மியாருந்ததாலதான் எல்லா சந்தேகமும் வருது. 

ரஹீம்: இருக்கட்டுமே. அதுக்கும் இப்ப நிக்க மாட்டேன்னு சொல்றதுக்கும் என்னங்க கனெக்‌ஷன்?

கணேஷ்: பாய். போனதடவ கூட்டணி வச்சே முன்னூறு ஓட்டுதான் டிஃபரன்ஸ். இந்த லட்சணத்துல தனியா நின்னா? அதான் எனக்கு பதிலா என் பையன் நிக்கட்டும்னு சொல்றார் போலருக்கு.

ஜோசப்: இதுல இன்னொரு விஷயம் இருக்கு பாய். 

கணேஷ்: என்ன டெப்பாசிட்டே போயிரும் போலருக்கேன்னு நினைக்கிறார்னுதான?

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் இருக்கும். கவர்ன்மென்ட்ல சீனியர் பொசிஷன்ல இருந்தவர். ப்ரஸ்டீஜ்னு ஒன்னு இருக்குல்லே.

கணேஷ்: ப்ரஸ்டீஜாவது மண்ணாவது! இவர் அவரோட தொகுதிக்குன்னு ஒன்னுமே செய்யலியாங்க! கட்சிய விடுங்க. இவர் எத்தன டேர்ம் சிவகங்கையிலருந்து ஜெயிச்சிருக்கார்? 

ஜோசப்: அப்படி சொல்ல முடியாது. இன்னைக்கி தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவுலயே சிவகங்கையிலதான் பேங்க் பிராஞ்சஸ் ஜாஸ்தியாம் தெரியுமா? அத்தனூண்டு ஊர்ல இருநூறு பிராஞ்சஸ் இருக்குதாம்!

கணேஷ்: (சிரிக்கிறார்) அட நீங்க வேற ஜோசப்: பேங்க் பிராஞ்சுங்கள மூலைக்கி மூலை திறந்து வச்சி என்ன பண்றது? எல்லாமே ஈயடிச்சிக்கிட்டுத்தான் இருக்குதாம். கையில காசு இருக்கறவன்தான பேங்குக்கு போவான்?

ஜோசப்: அதுக்கு மட்டுமா பேங்குங்க இருக்கு? நிறைய கடனும் குடுப்பாங்களே?

கணேஷ்:  அப்படீன்னா அந்த தொகுதியே இத்தன வருசத்துல சொர்க்க பூமியா மாறியிருக்கணுமேங்க? கரும்பு விவசாயத்த தவிற வேற ஒன்னுமே இல்லையாமே? வாலிபப் பசங்கல்லாம் எந்த தொழிலும் செய்ய முடியாம கல்ஃப் பக்கம் போய்ட்டாங்களாமே.

ரஹீம்: அப்படியா?

கணேஷ்: பின்ன நா என்ன சும்மாவா சொல்றேன்? எலக்‌ஷன் வந்தாத்தானங்க அந்த ஊர் பக்கமே இவர் போறாரு? இல்லன்னா இவர் தொல்லை தாங்க முடியாம ஏதாச்சும் ஒரு பேங்க் பிராஞ்ச் துவங்கறாங்கன்னா அத தொறந்து வைக்கிறேன் பேர்வழின்னு போய் நிப்பாரு.  அங்க எத்தன ஸ்கூல் எத்தன காலேஜ் தொறந்தார்னு கேளுங்க. ஒழுங்கான ஆஸ்பத்திரி வசதி கூட இல்லையாம் தெரியுமா? டெப்பாசிட்டே போயிரும்போலருக்குன்னு ஜோசப் தெரிஞ்சி சொன்னாரோ தெரியாம சொன்னாரோ தெரியல. அவர் மட்டும் இந்த தடவ நிக்கட்டும்.... பத்தாயிரம் ஓட்டு விழுந்தாக் கூட ஜாஸ்திதான். அது தெரிஞ்சிதான் மனுஷன் ரிவர்ஸ் அடிக்கிறார்.

ரஹீம்: (சிரிக்கிறார்) இவருக்கு புடிக்காத ஆளுன்னா எவ்வளவு நெகட்டிவ் டீட்டெய்ல்ஸ்லாம் கலெக்ட் பண்ணிவச்சிருக்கார் பாருங்களேன்.

ஜோசப்: சரிங்க. சிவகங்கைய பத்தி இவ்வளவு டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கா மாதிரிதான் கெஜ்ரிவாலும் குஜராத்ல மோடி சொல்றா மாதிரி ஒன்னும் நடக்கலை குஜராத் இன்னும் பிந்தங்கிய மாநிலம்தான்னு புள்ளிவிவரத்தோட சொல்றார். அத ஏன் நீங்க நம்ப மாட்டேங்கறீங்க?

கணேஷ்: (கோபத்துடன்) ஏங்க, அவரெல்லாம் ஒரு ஆளா? சும்மா இவர் பாட்டுக்கு பேப்பர்ல எதையோ எழுதி வச்சிக்கிட்டு சொல்றார்னா நீங்களும் நம்பறீங்களே? நா ப.சிய பத்தி சொல்றதெல்லாம் நெட்ல தேடிப் புடிச்சி எடுத்ததுங்க. பொய் இல்லை.

ஜோசப்: கெஜ்ரிவாலும் அப்படித்தான் சொல்றார். ஏழை விவசாயிங்கக் கிட்டருந்து அடிமாட்டு விலையில விவசாய நிலத்தல்லாம் புடுங்கி அம்பானி, அடானி மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் குடுத்ததுதான் அவர் செஞ்ச பெரிய சாதனைன்னு சொல்றாரே. அம்பானிய விடுங்க. அவங்க அப்பா காலத்துலருந்தே இன்டஸ்ட்ரில இருந்தாங்க. ஆனா அடானிங்கறவர் இவர் சி.எம்மா ஆன காலத்துல ஒன்னும் இல்லாம இருந்தவராமே. அவருக்கு இன்னைக்கி பத்தாயிரம் கோடிக்கு சொத்து இருக்குன்னு சொல்றாங்க? அதுக்கு பின்னாடி உங்காளுதான இருக்காராம்?

கணேஷ்: அதெல்லாம் சும்மாங்க. அதெல்லாம் உண்மையாருந்தா அந்த ஸ்டேட்ல நாலு தடவ சி.எம்மா வந்துருக்க முடியுங்களா? நாப்பது நாள் சிஎம்மா இருக்க முடியாதவர்லாம் சொல்றத வச்சிக்கிட்டு பேசாதீங்க ஜோசப். 

ரஹீம்: ஏங்க, நாப்பது வருசம் சி.எம்மா இருந்தவர்தான் இவர குத்தம் சொல்லணுமா என்ன? உங்கள மாதிரியே அவரும் நெட்லருந்து இதெல்லாம் எடுத்துருப்பாரு? எலக்‌ஷன்ல ஜெயிச்சிட்டாலே அவர் பெரிசா சாதிச்சிருக்கார்னுல்லாம் சொல்ல முடியாது. அப்படிப்பாத்தா சிதம்பரம் கூடத்தான் அஞ்சி டேர்முக்கு மேல சிவகங்கையிலருந்து ஜெயிச்சிருக்கார். 

ஜோசப்: கரெக்டா பாய்ன்ட புடிச்சிட்டீங்க பாய். எனக்குக் கூட மறந்துப்போச்சி. 

கணேஷ்: அதுவும் இதுவும் ஒன்னாயிருமா? அவர் இதுவரைக்கும் ஜெயிச்சதுக்கு அவர் காரணம் இல்லே. எல்லாம் கூட்டணி கட்சிங்களோட ஓட்டு. இவ்வளவு சொல்றீங்களே? அதே தொகுதியில மறுபடியும் நிக்கிறதுக்கு எதுக்கு பயப்படணும்?

ரஹீம்: அதே கேள்வியத்தான் நானும் கேக்கப் போறேன். குஜராத்ல வாணத்த வில்லா வளைச்சிட்டேன்னு சொல்றவர் எதுக்குங்க வாரனாசி தொகுதியிலதான் நிப்பேன்னு அடம் புடிக்கிறாரு? விட்டுக்குடுக்க மாட்டேன்னு சொல்ற மனோகர் ஜோஷிய எப்படியோ வழிக்கி கொண்டு வந்து..... இதெல்லாம் எதுக்கு? சொந்த ஊர்லயே போயி நிக்க வேண்டியதுதான?

ஜோசப்: அதான? இதுக்கு உங்க பதில் என்னங்க?

கணேஷ்: அதுக்கு காரணம் தோல்வி பயம் இல்லை. ஒரு நாட்டுக்கு பி.எம்மா வர்றவருக்கு சொந்த மாநில சப்போர்ட் மட்டும் இருந்தா போறாது. இந்தியாவுலருக்கற எல்லா மாநிலத்துலயும் இருக்கணும். இத ப்ரூஃப் பண்றதுக்குத்தான் மோடி அங்க போயி நிக்கிறாரு.

ரஹீம்: (சிரிக்கிறார்) சரிய்யா. அப்போ நம்ம ஊர்ல வந்து நிக்க சொல்லுங்க. 

ஜோசப்: அதுவும் சரிதான். என்ன கணேஷ்?

கணேஷ்: (சலிப்புடன்) சும்மா ஆர்க்யூ பண்ணணும்னே சொல்றது ஒங்க ரெண்டு பேருக்கும் வழக்கமா போயிருச்சிங்க. நா இந்த ஆட்டத்துக்கு வரலை. ஆள விடுங்க (எழுந்து நிற்கிறார்).

ஜோசப்: ஏங்க, தர்மசங்கடமா ஏதாச்சும் கேட்டா ஒடனே எழுந்து நின்னுக்கிறதா? அப்படீன்னா பதில் சொல்ல முடியலேன்னுதான அர்த்தம்?

கணேஷ்: (எரிச்சலுடன்) அதெல்லாம் ஒன்னுமில்ல. புரிஞ்சிக்கற மனசு இருக்கறவங்களத்தான் புரிய வைக்க முடியும். வீம்புக்குன்னா ஆர்க்யூ பண்றவங்களையெல்லாம் என்ன சொன்னாலும் புரிய வைக்க முடியாது. அதனாலதான் ஆள விடுங்கன்னு சொல்றேன். நாளைக்கி பாக்கலாம். (ஜோசப் மற்றும் ரஹீம் பாயின் பதிலுக்கு காத்திராமல் சாலையில் இறங்கி நடக்கிறார்)

ரஹீம்: என்னங்க இது நாம இப்ப என்ன சொன்னோம் இப்படி பொசுக்குன்னு எழுந்து போய்ட்டார்? இப்பல்லாம் இவர் கிட்ட பேசவே முடியலையே?

ஜோசப்: (சிரிக்கிறார்) போகட்டும் விடுங்க. எல்லாம் இந்த எலக்‌ஷன் முடியற வரைக்கும்தான். அப்புறம் நார்மலாயிருவார். 

ரஹீம்: சரிங்க. எனக்கு ஒரு விஷயம் கேக்கணும்னு....

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: இந்த எலக்‌ஷன்ல நம்ம மேடம் பேசற ஸ்டைலே ஒரு மாதிரியா இருக்கே கவனிச்சீங்களா?

ஜோசப்: (சிரிக்கிறார்) என்னது ஸ்டைலே ஒரு மாதிரியா இருக்கா? அப்படீன்னா?

ரஹீம்: இல்லீங்க. முந்தி மாதிரி இல்லாம அவங்க ஒரு நோட் புக் மாதிரி கையில வச்சிக்கிட்டு அதப் பாத்துத்தான் பேசறாங்க. இடையில, இடையில நீங்க செய்வீங்களா, நீங்க செய்வீங்களான்னு ஜனங்கள பாத்து கேள்வி கேக்கறாங்களே கவனிக்கல?

ஜோசப்ள் (உரக்க சிரிக்கிறார்) ஆமா, ஆமா, நானும் கவனிச்சேன். இதுல இன்னொரு காமடி என்னான்னா எதிர்ல நிக்கிறது யாருன்னே கவனிக்காம ஆர்மி, நேவின்னு பேசறது, தமிழ்நாட்டு போலீஸ் மாதிரியே இந்திய ஆர்மியையும் மாடர்னா ஆக்கிருவோம்னு சொல்றது..... ஆளுங்க இந்தம்மா என்ன சொல்றாங்கன்னு புரியாத மாதிரி முழிக்கறதையெல்லாம் பாத்தா நீங்க சொல்றா மாதிரி புதுசாத்தான் இருக்கு.... ஒரு மீட்டிங்னா பரவால்லை. இதே ஸ்டைல்ல எல்லா மீட்டிங்லயும் பேசறது உண்மையிலயே காமடியாத்தான் இருக்கு. 

ரஹீம்: ஆனா ஒன்னுங்க. ஜனங்க இதையெல்லாம் கேட்டுட்டா ஓட்டுப் போடப் போறாங்க? அம்மா பேர சொல்லிக்கிட்டு ஒரு கழுதைய நிக்க வச்சாலும் போறும்னு சொல்றாங்களே. இந்த மாதிரி இவங்க ஊர் ஊரா போயி பேசறதெல்லாம் சுத்த வேஸ்ட். இந்த எலக்‌ஷன்ல ஒவ்வொரு சீட்டுக்கும் நாலஞ்சி பேர் அடிச்சிக்கறப்போ இவங்களுக்கு நாப்பதும் கிடைக்கிதோ இல்லையோ குறைஞ்ச பட்சம் முப்பது நிச்சயமா கிடைக்குமாமே! 

ஜோசப்: அதென்னவோ உண்மைதான். ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் இதுவும்.  சரிங்க நாளைக்கி பாக்கலாம். 

ரஹீம்: சரிங்க. 

***********

9 comments:

G.M Balasubramaniam said...


புது ரத்தம் பாய்ச்சமுதிய அரசியல் வாதிகள் வழி விடுகிறார்களோ. அம்மாவின் பேச்சு ஸ்டைல் மாறுகிறது என்றால் அவர் பிரதம மந்திரியாகக் கனவு காண்கிறாரோ. அதனால்தான் உள்ளூர் போலீசை விட்டு ஆர்மியைப் பற்றிப் பேசுகிறாரோ/?

வே.நடனசபாபதி said...


//பின்ன நா என்ன சும்மாவா சொல்றேன்? எலக்‌ஷன் வந்தாத்தானங்க அந்த ஊர் பக்கமே இவர் போறாரு?//

இல்லீங்க. அவர் ஒவ்வொரு சனியன்றும் தவறாமல் அவரது மாவட்டத்திற்கு ஆஜராவார் ஒரு வங்கியின் கிளையைத் திறக்க.! சனி நீராடு என்பது பழமொழி. ஆனால் இவர் அதை சனியன்று புதிய வங்கிக் கிளை என மாற்றிவிட்டார்!

//குறைஞ்ச பட்சம் முப்பது நிச்சயமா கிடைக்குமாமே! //

ஐந்துமுனைப் போட்டியில் எதையுமே நிச்சய்மாக் சொல்லமுடியாது என்பது எனது கருத்து.

கணேஷ் அவர்களுக்கு ரஹீம் பாய் அவர்களும் ஜோசப் அவர்களும் சரியாகவே கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். திண்ணைப் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

புது ரத்தம் பாய்ச்சமுதிய அரசியல் வாதிகள் வழி விடுகிறார்களோ. அம்மாவின் பேச்சு ஸ்டைல் மாறுகிறது என்றால் அவர் பிரதம மந்திரியாகக் கனவு காண்கிறாரோ. அதனால்தான் உள்ளூர் போலீசை விட்டு ஆர்மியைப் பற்றிப் பேசுகிறாரோ/?

கனவு யார் வேண்டுமானாலும் காணலாம் அல்லவா? அது போலத்தான் இதுவும். இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு, விஜயகாந்த் உட்பட, பிரதமர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். இந்த ஆசைதானே ஒரு காலத்தில் மொரார்ஜியையும் இப்போது அத்வானியையும் அரசியலில் நீடித்து இருக்க வைத்தது!!

டிபிஆர்.ஜோசப் said...


Blogger வே.நடனசபாபதி said...

இல்லீங்க. அவர் ஒவ்வொரு சனியன்றும் தவறாமல் அவரது மாவட்டத்திற்கு ஆஜராவார் ஒரு வங்கியின் கிளையைத் திறக்க.! சனி நீராடு என்பது பழமொழி. ஆனால் இவர் அதை சனியன்று புதிய வங்கிக் கிளை என மாற்றிவிட்டார்! //

ஆனால் அந்த வங்கிகளில் எதுவுமே இவரை மீண்டும் எம்.பியாக்க முடியாதே :))


ஐந்துமுனைப் போட்டியில் எதையுமே நிச்சய்மாக் சொல்லமுடியாது என்பது எனது கருத்து. //

நிச்சயமாக எதையுமே சொல்ல முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஒட்டுக்கள் சிதறும் பட்சத்தில் அதிமுகவுக்கு அது சாதகமாகவே அமையும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஏறத்தாழ எல்லா தொகுதியிலுமே வெற்றிப் பெற்றவர் பெறும் ஓட்டு எண்ணிக்கையை விட அவருக்கு எதிராக விழும் ஓட்டு எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்பதும் உண்மை. ஆனால் தனிப்பெரும் கட்சியாக அதிமுக அல்லது திமுகவாக இருக்கும். மற்ற எந்த கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

Packirisamy N said...

// அதுவும் எம்.பி எலக்‌ஷன்னா குறைஞ்ச பட்சம் ஒரு கோடி செலவாகுமாமே? //

இதெல்லாம் ஒரு பொருட்டா அவர்களுக்கு.அவர்களுடைய ப்ராப்பர்டிகளில் ஒன்றை விற்றால் இதைத்தாண்டி கிடைக்குமே. தொடர்கிறேன். Please delete the previous comment.

Bagawanjee KA said...

#'காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட தயங்குகின்றனர்.'#
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா ..பாடுதாம் நினைவுக்கு வருகிறது !பதவி சுகம் காண மட்டும்தானா கட்சி ?
த ம 2

Vetrivendan said...

தேர்தலை சந்திக்க தைரியம் வேண்டும் .சரி,ஆனால் தோல்வியை சந்திக்க தைரியம் என்பதை எப்படி புரிந்து கொள்வது ?

டிபிஆர்.ஜோசப் said...

PM Delete
Blogger Bagawanjee KA said...
பதவி சுகம் காண மட்டும்தானா கட்சி ?//
அதனாலதான சீட் கிடைக்கலைன்னா உடனே எந்த கட்சியில கிடைக்குமோ அங்க போயிடறாங்க! இந்த விஷயத்துல எல்லா கட்சிக்காரங்களும் ஒன்னுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

58 AM Delete
Blogger Vetrivendan said...
தேர்தலை சந்திக்க தைரியம் வேண்டும் .சரி,ஆனால் தோல்வியை சந்திக்க தைரியம் இல்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது ?//

வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே தோல்வியைக் கண்டால் பயம்தானே! ஆனால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தோல்வியைக் கண்டு போட்டியிலிருந்து விலகுவது வெட்கக்கேடுதான்.