26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

25 நவம்பர் 2013

ஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க?


ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக,  கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).

ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?

அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்.  இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.

இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.

ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),

2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),

3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.

நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.

இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.

உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).

ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

அடுத்த பகுதியில்.....




20 நவம்பர் 2013

அரசியல்வாதிகள் அனைவருமே முட்டாள்கள்தானா?

அடக்கமுடைமை

குறள் எண்: 127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 129.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்  ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறளில் அடக்கமுடமை என்ற அதிகாரத்தில் தரப்பட்டுள்ள பத்து குறட்பாக்களில் மேலே குறிப்பிட்ட இரு குறள்கள் நாவடக்கத்தைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு குறட்களின் பொருள் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பார்கள். 

என்னைக் கேட்டால் அதிலுள்ள நாக்கு அதை விட பிரதானம் என்பேன்.

முன்பெல்லாம், ஏன், இப்போதும்தான், அரசியல் பிரமுகர்கள்தான் இந்த அடக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பேசிவிட்டு செல்வார்கள். அதிலும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். சொல்ல தகாததையெல்லாம் சொல்லிவிட்டு ஊடகங்கள் திரித்துவிட்டன என்று கூசாமல் பொய் சொல்வார்கள். 

இப்போது மெத்த படித்தவர்களும் இந்த பட்டியலில் இணைவதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானியும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான திரு. CNR RAOவைப் பற்றித்தான் கூறுகிறேன்.



இவரை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுக்கு தெரிவு செய்த அரசியல்வாதிகளையே 'முட்டாள்கள்' என்று வாய் தவறி - உண்மையில் நாக்குதான் தவறு செய்தது. ஆனால் சொல்வது வாய் தவறி விட்டது என்று!! - கூறிவிட்டு நான் சொல்ல வந்தது அது இல்லை என்கிறார். 'முட்டாள்தனம்' என்பதற்கும் 'முட்டாள்' என்பதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்று விளங்கவில்லை. முட்டாள்தான் முட்டாள்தனத்தை செய்ய முடியும்! அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு போதிய அளவு பண உதவி வழங்காதது முட்டாள்தனம் என்ற பொருள்பட நான் சொன்னதை ஊடகங்கள் திரித்து அரசியல்வாதிகள் அனைவரையும் நான் முட்டாள்கள் என்று கூறியதுபோல் வெளியிட்டுவிட்டன என்கிறார். 

அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

இவர் யார் சீனரா? அல்லது இவர்களுடன் பணியாற்றும் அத்தனை விஞ்ஞானிகளும் சீனாவில் இருந்து வந்தவர்களா? 

இருமுறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள்தானே சீனர்கள்? நம் இந்தியர்கள் அதில் வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லையே?

சீனர்கள் இந்தியர்களைக் காட்டிலும் தேசப் பற்று உள்ளவர்களாம்! இவர் எதை தேசப் பற்று என்கிறார் என்று விளங்கவில்லை. எந்த இந்திய பிரஜை தேசப்பற்று இல்லாமல் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்? அன்னிய நாட்டுக்கு சென்று பணியாற்றுபவர்களையா? சீனாவில் வாழும் சீனர்கள் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பாததற்கு மூல காரணம் இந்தியர்களைப் போன்று ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக இன்றும் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் இருப்பதால்தான் ஐ.டி துறையில் இவர்களால் உலகெங்கும் சென்று பிரகாசிக்க முடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறை இந்தியர்களை வேண்டுமானால் இந்த அளவுக்கு உழைக்காதவர்கள் சொல்லலாம். ஆனால் அதையும் பொதுவாக சொல்லிவிட முடியாது. அன்று தன்னலம் பாராமல், நேரம் பாராமல் உழைத்து தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்ததால்தான் இன்றைய தலைமுறை இந்தியர்கள் படிப்பிலும், விஷய ஞானத்திலும் சிறந்து விளங்க முடிகிறது. ஆனாலும் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பாமரன் பேசினால் பொறுத்துக்கொள்ளலாம். இந்தியாவின் இரத்தினம் என்று கருதப்படுபவர் இப்படி பேசலாமா?

நாட்டின் மிக உயர்ந்த விருதுக்கு தகுதி பெற வெறும் படிப்பும், அறிவும் மட்டுமே போதாது. தன்னடக்கமும் மிகவும் அவசியம். தன்னடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாவடக்கமும் இருக்கும். இது இரண்டும் இல்லாதவர்கள் வாழ்வில் எத்தகைய உயர்வை அடைந்தாலும் பிறருடைய பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்: திரு CNR ராவைப் போல.

இந்த விஷயத்தில் இதே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பரவாயில்லை. கடந்த இருபத்தி நான்கு ஆண்டு கால பொது வாழ்வில் (No one can dispute that he is one of the most popular public figures in India) ஒரு முறை கூட தகாத பேச்சுக்காக பழித்துரைக்கப்பட்டதில்லை. வெறும் பள்ளி படிப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒருவர், புகழின் உச்சிக்கே சென்ற ஒருவர், இந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் இருப்பது அபூர்வம்தான். அந்த வரிசையில் வரும் இன்னொரு விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். 

இவ்விருவருடன் ஒப்பிடுகையில் மெத்த படித்த CNR சற்று தரம் இறங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 

கடந்த திங்கள் கிழமை அன்று இரவு CNN-IBN தொலைக்காட்சியில் இதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாவடக்கமின்மை அவரை எந்த அளவுக்கு இறக்கிவிட்டது! 

சந்தனத்தைப் பூச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பியதுபோல் இருந்தது!

***********



18 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது ஏன்?

தமிழக சட்டமன்றத்தை அவசர, அவசரமாக கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாக கலந்துக்கொள்வது என்று எடுத்த முடிவை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு அது மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முன்னரே தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச் சுவரையும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும் ப்ரொக்ளைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அதிர்ச்சியை அளித்தது. 

இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் அனைத்தும் - காங்கிரசைத் தவிர - இது தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றன. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. 

இதற்கு அரசு சொல்லும் காரணம்: இடிக்கப்பட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இவற்றை அகற்ற வேண்டுமென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பியும் அவர்கள் கண்டுக்கொள்ளாததால்தான் இதை இடிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மை காரணம் அதுவல்லவாம். இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியவர்களுக்குப் பின்னால் இருந்த ஒருவர் முதலமைச்சரின் பரம வைரி என்பதுதானாம்! 

ஒரு நாளைக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அடுத்த நாளே இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யபட்ட இலங்கை தமிழர்கள் நினைவாக தஞ்சையில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தின்  சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய தமிழக அரசின் இந்த செய்கையால் ஆட்சியாளரிளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்றும் இதற்கு காரணமாக இருந்த ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்ற மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் வாதம் தமிழக மக்கள் முன் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம்




ஆனால் இப்படியொரு சின்னம் தமிழ்நாட்டில் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்களுடைய கட்சியின் முடிவு என்றார் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன்.

இப்படியொரு நினைவுச் சின்னம் தேவைதானா? முள்ளிவாய்க்காலில் அப்படியென்ன நடந்துவிட்டது?

சுருக்கமாக பார்க்கலாம். 

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ போராளிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துவிட்டு பின்னோக்கி ஓடத்துவங்கியிருந்தனர் போராளிகள். இந்த சூழலில் வன்னி மாவட்டத்தை முற்றுகையிட்டு எப்போது தாக்குதலை துவங்கலாம் என்று காத்திருந்தது இலங்கை ராணுவம். 

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இராணுவம். இவர்களுக்கு இடையில் சுமார் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள். போராளிகளிடமிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்கள். 


முள்ளிவாய்க்கால் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். மலை, மகுடு என எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சமவெளிப் பிரதேசம். போர்க்காலங்களில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பதுங்கி தப்பிக்க முடியாதபடி நிலம் வெட்டவெளியாக இருந்தது. தங்கள் உயிருக்கு பயந்து மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த இடத்தை No Fire Zone ஆக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியது அகில உலக செஞ்சிலுவை சங்கம். 

அதுவரை நடந்த போரில் காயமுற்றிருந்த போராளிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மருத்துவமனையும் அங்குதான் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரில் காயமுற்ற பல அப்பாவி மக்களும் இந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் செஞ்சிலுவை சங்கம் மட்டுமல்லாமல் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரும் இந்த பகுதியை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்தினர். 

ஆனால் இலங்கை அரசு செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக போராளிகள் அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தப்பித்துக்கொள்வார்கள் என்ற அச்சம் இருந்தது. போராளிகளுக்கோ இந்த மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினரிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். 

இருப்பினும் ஐநாவின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்து முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை அமைந்திருந்த பகுதியை No Fire Zoneஆக அறிவித்தது இலங்கை அரசு. இதற்கு தங்களுடைய தொடர் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்று மார்தட்டிக்கொண்டது இந்திய அரசு.

ஆனால் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்பதுபோல் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த அதே இடத்தை கண்மூடித்தனமாக ஆகாயம், தரை, கடல் என அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கியது இலங்கை இராணுவம். எவ்வித பாதுகாப்பும் இன்றி நிர்க்கதியாய் நின்ற அப்பாவி மக்களில் சுமார் எண்பதாயிரம் பலியாயினர். எண்ணற்றோர் இருந்த இடம் தெரியவில்லை....

இதற்கு தங்களுடைய உத்தரவை இராணுவம் மதிக்காததுதான் முக்கிய காரணம் என்று கூறி அப்போதைய இராணுவ தலைவர் பொன்சேகாவை போர்க்குற்றத்திற்கு ஆளாக்கி தப்பித்தது இலங்கை அரசு.

ஆனால் அதிக அளவிலான சிவிலியன் சாவுக்கு  அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்திய போராளிகள்தான் காரணம் என்றது இலங்கை இராணுவம். 

முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த கடற்பகுதியில் இவ்விருதரப்பினரிடமிருந்து தப்பி வரும் மக்களை  காப்பாற்றி அழைத்துச் செல்ல செஞ்சிலுவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க கப்பல் ஒன்று காத்திருந்தது எனவும் ஆனால் அதை நோக்கி சென்ற மக்களை ஒரு புறம் போராளிகளும் மறுபுறம் இராணுவமும் சுட்டதால்தான் இந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாயின என்றன ஊடகங்கள்.

எது உண்மையோ, பொறியில் சிக்கிய எலிகளாய் அப்பாவி மக்கள் இவர்களுடைய ஈவு இருக்கமற்ற தாக்குதல்களுக்கு பலியானதென்னவோ உண்மை.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் இது அனைத்து உலக மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதலுக்குள்ளாகி பலியான அப்பாவி மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இதை எழுப்பியவர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட்டிருந்தால் இன்று அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.  

**********





15 நவம்பர் 2013

காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதானா?

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர்  கலந்துக்கொள்ளாவிடினும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் பங்குகொள்வதென என்ற முடிவு தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாட்டை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தமிழகமெங்கும் நடைபெற்று வந்த போராட்டங்களும் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன்  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி இந்திய அரசின் முடிவை எதிர்த்து சிறப்பு தீர்மானமும் விழலுக்கு இரைத்த நீராகிப் போயின. 

இந்த சூழலில் இந்தியா எடுத்த முடிவு சரியானதுதானா என்ற விவாதத்தில் இறங்கவே பலரும் தயங்குகின்றனர். எல்லா விஷயத்திலும் தயங்காமல் தங்களுடைய கருத்துக்களை எழுதிவந்த பல மூத்த பதிவர்களும் கூட பெரும்பாலோனோருடைய கருத்துக்களைச் சான்றே எழுதி தப்பித்துக்கொள்வதைக் காண முடிகிறது. 

ஆகவே இந்திய அரசின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் என்ன என்று பல நாட்களாகவே எண்ணியிருந்தேன். 

முதலில் காமன்வெல்த் அமைப்பு என்றால் என்ன, அதன் உறுப்பு நாடுகள் யார், யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம். 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 53 நாடுகள் தாமாக முன்வந்து அமைத்துக்கொண்டதே காமன்வெல்த் என்ற அமைப்பு. இதை வேடிக்கையாகவும் சிலர் வர்ணிப்பதுண்டு. 

அதாவது இந்த 53 நாடுகளின் ஒட்டுமொத்த சொத்தையும் (common-wealth) ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்று தங்களுடைய நாட்டை வளம்கொழித்த நாடாக்கியதை அவ்வப்போது - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - நினைவுப்படுத்திக்கொள்ளத்தான் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த 53 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரில் கூடுகின்றனராம்! இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியா கருதப்பட்டுவருகிறது. 

ஆனால் துவக்கத்திலிருந்தே இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி தங்களுடைய பழைய அடிமை வாழ்வை நினைவுபடுத்திக்கொள்வதைத் தவிர பெரிதாக எதையும் சாதித்துள்ளதாக பெருமையடித்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே இந்த அமைப்பிலுள்ள நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவைத் தவிர, பொருளாதாரத்திலோ அல்லது தொழில்துறையிலோ வளர்ந்த நாடுகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளவும் முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும் கூட உலகிலுள்ள மற்ற வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தங்களுடைய முடிவுகளையும் அமைத்துக்கொள்கின்றனவே தவிர இதுவரை உலகில் நடந்த எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும்  தனித்து முடிவெடுத்ததில்லை. 

ஆகவே இந்த அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் சம்பிரதாய மாநாட்டில் - உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு கூட்டம் (Meeting of Heads of Governments) மட்டுமே. மாநாடு என்று கூட அவர்களே கூறுவதில்லை -  கூட்டத்தின் முடிவில் உப்புசப்பில்லாத சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து செல்லும் கூட்டம் என்று கூட கூறலாம். 

இந்த அமைப்பின் கடைசி கூட்டம் 2011ல் ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரத்தில் (Perth) நடந்தது.  ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதை கண்டித்து அந்த கூட்டத்தில் நம்முடைய பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை. அப்போது (இப்போதும்தான்) குடியரசு துணைத்தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் தலைமையில் ஒரு அணி சென்றது. ஆனால் எதற்கு பிரதமர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக கூறாமல் அவருக்கு உள்நாட்டில் நிறைய அலுவல்கள் இருந்தன என்று பூசி மெழுகினார்கள். கூட்டத்தின் இறுதியில் இந்திய பிரதமர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கும் ஆஸ்திரேலியா யுரேனியன் வழங்க மறுத்ததற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது ஆஸ்திரேலியா!!

அந்த கூட்டத்தில் என்ன அப்படி பெரிதாக சாதித்தார்கள் என்றால் ஒன்றும் இல்லையென்றுதான் பதில் வரும். அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் அங்கத்தினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்போதும் ஒருசில நாடுகளால் (கனடா என்று அர்த்தம் கொள்க) கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. அந்த கூட்டத்திலேயே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் 'இந்த அமைப்பு நாளுக்கு நாள் எதற்கும் பலனற்ற அமைப்பாக மாறி வருகிறது. இதற்கு அங்கத்தினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்றாலும் பல அங்கத்தினர்கள் எவ்வித ஈடுபாடும் காட்டாததும் ஒரு காரணம்.' என்று எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மலேசியாவும் உறுப்பு நாடுகளின் அக்கறையின்மையை (indifference) எடுத்துக்காட்டி இந்த கூட்டத்தில் முன்மொழியப்படும்  தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது இந்த அமைப்பின் செயலற்றத்தன்மையையே இது காட்டுகிறது.' என்று குறைகூறியது. 

அந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது கனடா பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேலும் காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் (அதாவது 2013ல்) இலங்கை தலைநகரில் நடத்தப்படுவதாக முடிவானால் அதை கனடா புறக்கணிக்கும் என்று அப்போதே அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய முடிவை கூட்டத்தில் பங்குகொண்ட எந்த உறுப்பு நாடும் கண்டுக்கொள்ளவில்லை, இந்தியாவையும் சேர்த்து.

இந்த அமைப்பின் முக்கியத்துவம் இவ்வளவுதான். 

இலங்கையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கலந்துக்கொள்வதால் அந்த நாட்டின் அதிபருடைய செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுவதுபோலாகிவிடும் என்கிற வாதத்தில் எல்லாம் எவ்வித பொருளும் இல்லை. அதுபோலவே அந்த கூட்டத்தில் பங்குபெறும் நாடுகள் எல்லாம் இலங்கையில் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கின்றன என்பதும் பொருள் இல்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சம்பிரதாய கூட்டம் அவ்வளவுதான். எப்போதும்போலவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சில நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - தீர்மானங்களை முன்மொழியும். அதை பல நாடுகள் கண்டுக்கொள்ளவும் போவதில்லை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கும், இலங்கையை ஜால்ரா அடிக்கும் நாடுகள் - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் - அதை எதிர்க்கும்.... இந்த அமைப்பில் மிக அதிக அளவிலான அங்கத்தினர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்துதான் வருகின்றனர். அவர்களுக்கு மனித உரிமை மீறல் என்பதன் அர்த்தமே புரிய வாய்ப்பில்லை. ஆகவேதான் அவர்கள் கண்டத்தைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற, பாதிரியார் டெஸ்மன்ட் டூட்டு இந்த கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறியதை அவர்களில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

இந்த வருடமும் இந்த கூட்டத்தின் இறுதியில் எந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தமுடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவு பெறும். இதுதான் உண்மையில் நடக்கப் போகிறது. இந்த மனித உரிமை மீறல் தீர்மானம் கடந்த மூன்று கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலே போனது என்பதும்  இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த அமைப்பு நடத்திய முந்தைய சில கூட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளப் போவதில்லை என்பது அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இல்லை என்பதும் உண்மை. 

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கு உண்மையான காரணத்தையும் பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை போலிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதபோது என்ன காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எழுதினாரோ அந்த கடிதத்தை நகல் எடுத்து அனுப்பப்பட்டதுபோல்தான் உள்ளது ராஜபக்‌ஷேவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதமும்!   

இந்த கூட்டத்தில் உள்நாட்டில் உள்ள இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா எதற்காக கலந்துகொள்வது என்று முடிவெடுத்தது என்ற கேள்வி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலின் சாராம்சம் இதுதான்.

1. இலங்கை நம்முடைய அண்டை நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடன் நாம் எவ்வாறு சுமுக உறவு வைத்துக்கொள்ள முயல்கிறோமோ அதே போன்ற உறைவை இலங்கையுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

2.சமீபத்தில் நடந்து முடிந்த போரில் வீடுகளையும் உரிமைகளையும் இழந்து தவிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க இதுவரை இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் உண்மையில் பலனளிக்க வேண்டுமென்றால் அந்த முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு இலங்கையுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

3.நம்முடைய தொடர் முயற்சியால் மட்டுமே இலங்கை வட மாகாண தேர்தலை நடத்த சம்மதித்தது. இத்தகைய முயற்சிகளை இனியும் தொடரவும் இலங்கையுடன் சுமூக உறவு வைத்திருப்பது அவசியமாகிறது.   

4. இலங்கை மீதான போர்க்குற்றங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழலில் அதில் பங்குகொண்டு நம்முடைய கருத்துக்க்ளையும் எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கக் கூடும்.

5.இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதுபோன்ற இரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் இலங்கையுடனான சுமூக உறவு தொடர வேண்டும்.

வெளியுறவு அமைச்சரின் விளக்கங்கள் எந்த வகையில் நியாயமாக தென்படுகிறது என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 

இந்த விஷயத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் கூறியதிலுள்ள நியாயங்களை கண்டுக்கொள்ள முடியும். 

ராஜபக்‌ஷே அரசு இலங்கையில் நடத்தியது அட்டூழியம்தான், போர்க்குற்றங்கள்தான். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே தடுத்து நிறுத்த முடியாமல்போனது. ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காமன்வெல்த் அமைப்பில் இல்லாத நாடுகள் பலவும் இணைந்து தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்துவிட்டன. 

இத்தகைய நாடுகள் பெரும்பாலானவைகளில் இத்தகைய படுகொலைகள், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே இது முழுக்க, முழுக்க இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று பூசிமெழுகிவிட்டனர். 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா எப்படி விரும்பவில்லையோ அதுபோலவே எங்களுடைய நாட்டில் நடைபெறும் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை அரசு பலமுறை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியோ போன்ற நாடுகள் ஓரளவுக்குத்தான் தலையிட்டு சுமூக தீர்வு காண முடியுமே தவிர காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது ஐநா சபையிலிருந்தோ தள்ளிவைத்து இலங்கையை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வது நல்லது.

இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். 

ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.  இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம். 

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.


*************